1

இந்தியத் துணைக்கண்டம் என்ற பரப்பு, புவிசார் வாணிப வலைப்பின்னல்கள் மற்றும் சந்தைகளில் பலவகையில் பங்கேற்று வருவதைப் பல நூற்றாண்டுகளாகக் காணலாம். குறிப்பாக, இந்த வகையில் இங்கே தொடங்கிய காலனித்துவம் பிரித்தானியக் காலனித்துவமாக மாறிய பிறகு, இந்தப்பரப்பின் சமுதாயம், பொருளாதாரம், அரசியல் என யாவும் முற்றிலும் புது வடிவங்களை எய்தின. இருந்தபோதும், தற்போது இந்தியா என்ற அரசியல்-பரப்பில் நடக்கும் மாற்ற நிலைகள், பிரத்தியேக மானவை எனக் கூறலாம்.

இங்கே நான் முன்வைத்திருப்பவை, சுமார் இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதின குறிப்புக்கள். இங்கே நடப்பதன் உள்-கட்டமைப்பையும் உள்-தர்க்கத்தையும் புதிதாகப் புரிந்து கொள்ளும் நிலையில் எழுதியவை. இப்போதுள்ள நிலையில் ஒருசில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். இவற்றையெல்லாம் வாசிக்கும்போது இதைப் பொருளியல் சார்ந்த மரபான கட்டுரை யாகக் கொள்ள முடியாது. அரசியல் அல்லது பொருளியல் என்ற துறைகள் சார்ந்தோ, கோட்பாடு சார்ந்தோ நடப்புநிகழ்வுகளை அலசுவதாக எடுத்துக்கொள்ளவும் முடியாது. மாறாக, பிரத்தியேகமான ஒரு களக் கண்ணோட்டத்தின் (Unique Spatial Vigion) அடிப்படையில் இவற்றை நான் வைத்திருப்பதாக நோக்குவதே சரி.

புவிமயமாதல் என்ற சொல்லை-கருத்தாக்கத்தைக் காட்டிலும் ஃப்ரெஞ்சு விவசாயிகள் சிலர் கூறும் ஒரு சொல்லை, இங்கே காணலாம். அதாவது, புவிமயமாதல் என்கிற அனுபவம் யார் யாருக்கு நடக்கிறது, யார் யாருக்கு நடக்கவில்லை, ஏன், அதன் அனுகூலங்கள், தாக்கங்கள், பாதிப்புக்கள் யாவை என்றெல்லாம் பார்ப்பது ஒருவித ஆய்வு. எனினும் அதைச் செய்வதற்கு மாற்றாக, அதற்கான காரணமும் விளைவும் கலந்துகட்டும் ஒரு சூழலே இங்கே விரிந்துகொண்டுசெல்கிறது என்பதை அறியும் நிலைக்கேற்ப ஒரு சொல்லை இங்கே காணலாம். அது, delocolisation. . தமிழில் பொருளின், அறிவின் தன்-புலமாற்றம் அல்லது தன்-தலமாற்றம்.

இது என்ன எனப் புரிந்துகொள்வதற்கு முன்பாக, காலனித்துவ சூழல் பற்றிய நினைவுறுத்தல் அவசியம், ஆனால் சற்றே புதுவழியில். அரசியல்-பொருளாதார விழைவுகள் ஒருபுறமென, அவற்றுக்குப் பின்புலமாக இருப்பவை, காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் மற்றும் அதற்கும் பிறகான ஆதிக்க நிலை ஆகியவை. இவை அதிகார -விழைவுகளே. அதாவது, காலனியப் பகுதிகள் மற்றும் புதுக்காலனியப் பகுதிகளில் வளங்கள் மீதான, இவற்றின் கலாச்சார இயங்கு போக்குகள் மீதான, நேரடியானது மட்டுமன்றி மறைமுகக் கட்டுப்பாட்டுக்கும் செல்வாக்குக்குமான விழைவுகள்; இன்றும் தொடருபவை இவை. குறிப்பாக, மேற்காசியப் பரப்பில் ஒரு புதுக்காலனியப் போர் வரை சென்றி ருக்கும் இவற்றின் வழியில் காணத்தக்கவை. அந்தப்பரப்பின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை நிரந்தரமாக அடையும் வழியைக் கைக்கொள்ளும் முஸ்தீபு ஒருபுறமும் மறுபுறம் ஃஸியோனிஸ அரசுக்கு எதிராக உருவாகவல்ல படைப்புலத்தை அழித்தொழிக்கும் மறுபுறமும் தாம்.

சொல்லப்போனால், அங்கு அண்மையில் நடந்திருக்கும் போர், அழிவும் அதே வேளை ஒரு புதிய தொழில்நுட்பத்தின் இறக்கமும் தான். ஆக, ஒருபுறம் போராக இருப்பது மறுபுறம் இந்தப் போரை ஊடகத்தில் வைத்து நடத்திக் காட்டுவதாக இருக்கிறது; மூன்றாம் புறம், இந்தப்போரின் வெற்றி மேற்கண்ட வளங்களை அடைவதை உறுதிசெய்து இந்த இறக்கத்தின் நியாயப்பாடாகவும் மாறியிருக்கிறது. அதாவது, அங்கே செயல்படும் சட்டகம் என்பதில், போர்க்கருவிகளும் உத்திகளும் ஒருபுறம், ஊடகங்களுக்கான போர்க்காட்சித் தொழில்நுட்பம் இரண்டாம் புறம், எண்ணெய் வருகைக்கான நவீன தொழில் நுட்பம் மூன்றாம் புறம் ஆகிய மூன்றும் கலக்கும். பிரிந்திருப்ப தாகவும் இனியும் பிரியப்போவது போலவும் தெரியும் இந்த மூன்றும் மேற்குலக அதிகார விழைவின் பிரியாப்புறங்கள் எனலாம். இந்த மூன்றிலும் அரபுலகம் தோல்வியைச் சந்தித்தது. எடுத்துக்காட்டாக, அதன் போர் ஆயுதங்கள் பேரழிவுக்கான கருவிகளாக மறைந்து நீடிக்கின்றனவா என்ற நிச்சயமின் மையைத் தாண்டிப் பேரழிவுக்கருவிகளாகவே நிலைக்க, நாம் காணக்காண மேற்குலகின் நேரடியான போர் -ஆயுதங்களும் மறைமுகமான பேரழிவு- ஆயுதங்களும் புவிக்காப்பாக மாறின. இந்த விநோதம் நியமமான காலம் ஆண்டுகளாக நம்மைக் கடக்கக்கண்டோம். இப்படி மேற்குலகம்-அரபுலகம் இரண்டுக் குமான வேறுபாடு நியமமானதே என்று கேட்கப்போக, அதற்கு, மேற்குலகு பொறுப்பானது, தேர்தல் ஜனநாயகம் கொண்டது என்ற ஒரு காரணமே போதும் என்ற பதில் கேட்டு மௌனமானோம்.

ஆக, இங்கே இந்த மூன்று புறங்களையும் இன்ன பிற புறங்களையும் தனித்தனியாகப் பிரித்துக்காண்பதை விடவும் இணைத்துக் காண்பதே மேற்கூறிய களக் கண்ணோட்டத்தின் அடிப்படை. தவிர, இங்கே மேற்குலகம் சார்ந்து மாத்திரமே இந்தக் களக் கண்ணோட்டத்தை உருவாக்கவும் முடியாது. காலனித்துவத்துக்குப் பிறகான நாடுகளின் அரசுகள் பலவும் மேற்குலக அரசுகளின் லீணீக்ஷீபீஷ்ணீக்ஷீமீ என்றாகிய வன்பொருள் யாவற்றையும் தமக்கெனவே, தமக்கிடையே உருவாக்கிவரும் நிலையைக் கவனித்துத்தான் இதை உருவாக்கவும் பரிசோதிக்க வும் முடியும். ஆக, இந்தக் களக் கண்ணோட்டம் என்பதைக் கருதுகோள் (hypothesis) அல்லது முற்கோள் (lemma) எனலாமா!

2

காலனியத்துக்குப் பிறகான எனக் கருதும் இன்றைய சூழலில் வளமும் அழிவும் நோக்கிச் செயல்படுவது எவையெல்லாம்? நிஜத்தில் இன்று நீடிப்பது புதுக்காலனியத்துவமா, ஏகாதிபத் தியமா, இவற்றுக்கும் பிறகான ஒன்றா? ஒருவிதத்தில் (மார்க்ஸ் வரையறுத்ததைப் போல) காலனித்துவம் இல்லாமல் முதலீட்டி யம் பெருகவில்லை என்பதில் வளமும் அழிவும் அன்று இணைநிகழ்வாயின. (லெனின் வரையறுத்ததைப் போல) அடுத்த கட்டமான ஏகாதிபத்தியம் அன்றி முதலீட்டியம் பெருகவில்லை என்பதிலும் அதே இணைநிகழ்வுகள் இயங்கின. அதற்கும் அடுத்த கட்டமாக வளமும் அழிவும் இணைநிகழ்வுகள் என்பது ஒருபுறமும் அதைக் காட்டிலும் இரண்டும் கலந்து குழம்பிய நிலை இன்று பரவக் காணலாம். ஆக, காலனித்துவம், ஏகாதி பத்தியம் இரண்டும் இணைந்து தொடர்வதும் இவற்றுக்குப் பிறகானதும் இன்றைய குழப்ப நிலை. இது நீடிக்க, புவிப்பரப்பின் வெவ்வேறு திணைகளிலிருந்து வளங்களை உரித்தெடுப்பதும் அப்படி உரித்தெடுப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வதுமான வன்-கட்டமைப்பும் (hardware) மென்கட்டமைப்பும் (software) தேவை. இதைச் சற்றே பழைய, பழகிய மொழியில் சொன்னால் அழிவுக்கும் வளத்துக்குமான அடிக்கட்டுமானமும் மேற்கட்டு மானமும் தேவை. இதற்கென, புவிப்பரப்பின் சில இடங்களில் வன்பொருளாகவும் பிற இடங்களில் மென்பொருளாகவும் இயங்கி அமையும் புவிசார்-அரசியலும் தேவை. இதற்கு விலக்கா வதல்ல இன்றைய இந்தியப்பரப்பு, மாறாகப் பொருந்துவது.

ஏகாதிபத்தியம் என இங்கே சுட்டுவது, வரலாற்றில் குறிப்பிட்ட ஓர் அரசியல்-பொருளியல் அமைப்பைத்தான் என்பது வரலாறு. எத்தகைய வரலாறு? தம் La Comedie Humaine பெரும்படைப்பில் பாரீஸின் சமூக இனங்களை வரையறுத்து, தம்மைக் கடந்துகொண்டிருந்த ஆண்டுகளைப் பால்ஸாக் பதிந்த அதே 1847-ஆம் ஆண்டில், அதையட்டி ஏகபோக நகர முதலீட்டியத்தின் வருகையைத் தம்முடைய The poverty of philosophy நூலில் மார்க்ஸ் கணித்துவிட்டார். பிறகே, இந்தியாவில், அயர்லாந்தில் பிரித்தானியக் காலனிய ஆட்சியை அலசுகிறார். அதேபோல சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தம்முடைய The development of capitalism in Russia நூலில் ஆராயும் லெனின் ஏகபோக முதலீட்டியம் என்பது ஏகாதிபத்தியமாகிறது, அது புவிப்பரப்பின் பகுதிகள் பலதிலும் புதுச்சந்தைகளையும் வளங்களையும் தேடும் தர்க்கத்தின் இயங்குபோக்கில் சிக்குகிறது என்று விளக்குகிறார். இப்படி முதலீட்டியம் நாட்டெல்லைகள் தாண்டிச் சந்தைகளையும் வளங்களையும் நாட வேண்டும் என அன்று பெற்ற அறிவுக்கும் பதற்றத்துக்கும் மாறாக அதை இன்று பலரும் ஏற்பது ஒரு இயல்பான நியமமாக.  

ஆக, அன்று மாத்திரமல்ல, இன்றுவரையான இரண்டு நூற்றாண்டு காலத்துக்கும் மேலான போர்கள், போராட்டங்கள், எதிர்ப்புகள், கலகங்கள், புரட்சிகள், எதிர்ப்புரட்சிகள், இவற்றின் வெற்றிதோல்விகள் மற்றும் கொடூரங்கள் என யாவற்றையும் கத்தரித்து வருவதே இன்றைய இயல்பான நியமம்! ஆக, இந்த வரலாற்று அறிவுக்கண்டமும் அதையட்டிய கோட்பாடு களும் ஒருபுறம் உருவாக, மறுபுறம் அந்த அறிவையே கத்தரித்துத் தன்னை நிறுவ முயலும் நியமமும் கிளர்ந்திருக்கிறது! இந்தக் கிறுகிறுப்பான இரண்டு புறங்களில் சிக்கியிருப்பவை, இந்த அறிவை முன்வைக்கும் பதற்றமும் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் திட்ட முனைவும். இந்தக் கிறுகிறுப்பில் புவிப்பரப்பின் திணைகளின் அழிவும் காப்பும் ஆக்கமும் கலந்துகட்ட, மாறாகத் தன்னை ஆக்கமாக மாத்திரம் நியமப்படுத்திக்கொள்வது, வளர்ச்சியெனும் திட்டம்.

இன்னொரு விஷயம்-இன்றைய நிலையில் ஆய்வென்பது, நாடுகளுக்கிடையில் மாத்திரம் நடப்பதல்ல; நாடு என்ற புவிசார்-அமைப்பின் அகத்தில் நடக்க வேண்டியதும்தான். ஒரு நாடு இன்னொன்றைச் சுரண்டுவது, ஒரு வர்க்கம் இன்னொன்றைச் சுரண்டுவது, ஒரு திணைப்புலத்தொகுதி இன்னொன்றைச் சுரண்டி அழிப்பது என்ற யாவும் இங்கே ஆய்வுக்கானவையே.

இவை இயங்குவது எப்படி எனக் காணலாம்: புவிப்பரப்பி லும் புவிப்பரப்பின் முன்-நிழலாக ஒட்டி உருவாகும் அதி-குறியியல் பரப்பிலுமாக. இந்த இயக்கத்தின் ஒரு பரிமாணம், புவிப்பரப்பெங்கும் அலைந்தும் பாய்ந்தும் பின்வாங்கியும் செயல்படும் முதலீட்டமைப்புக்கள்; மறு பரிமாணம், தேவைகள் வர வர அவற்றை மேன்மேலும் பெருக்கித் திகட்ட வைக்கும் பண்டங்கள் மற்றும் சேவைகள்; மூன்றாம் பரிமாணம், இவற்றின் உற்பத்தி-வாணிபம்-விநியோகம்-நுகர்வு-கழிவு என்பனவற்றின் நாள்தோறுமான உயிர்த்துடிப்பையும் சாவையும் தொலைகாண இருபத்துநான்கு மணி நேரம் இடைவிடாமல் உருவாக்கிப் பதியும் பதிந்து உருவாக்கும் ஊடகங்கள். ஆக, புவிப்பரப்பின் பண்டம் என்பது இந்த அதி-குறியியல் பரப்பில் அதி-பண்ட மாகவும் புவிப்பரப்பின் சேவை என்பது இந்த அதி-குறியியல் பரப்பில் அதி-சேவையாகவும் புவிப்பரப்பின் அரசியல்-சமுதாய-சூழலியல் எதார்த்தம் என்பது இந்த அதி-குறியியல் பரப்பில் அதி-எதார்த்தமாகவும் சுரண்டல் என்பது அதி-சுரண்டலாகவும் இயங்குன்றன. இப்படித்தான் அதி-நுகர்வையும் கழிவையும் உயிர்-வடிவங்களின் அழிவையும் இன்று ஆக்கமாகவும் காப்பாகவும் திட்டமிட முடியும்; இவற்றுக்கென புவிசார் மோஸ்தர்களைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் முடியும்;

ஆக, காலனியத்துக்குப் பிறகான நாடுகளின் சில, பல பகுதிகளில் ஒடுக்குமுறையும் போர்களும் நோய்களும் நிலவும் நேரத்தில், அதை எதிர்ப்பதான கோட்பாடுகள் தாம் தங்கியிருக் கும் திணைப்புலத்தை அழித்துக்கொள்ளும் தற்கொலை என யாவும் இனி சாத்தியம். இதைத் திறம்படச் சாதித்துத் தன்னைப் பெருக்கும் நோக்கத்தில் முதலீட்டியம் புவிப்பரப்பில் தனக்கான பகுதிகளைத் தேடும். இந்தத் தேடலில் முதலீட்டியத்துக்குத் தேர்வு என்பது சிலவேளை இருக்கும், சில வேளை இல்லாமலும் போகும். இப்படித் தேடி அது அடையும் புலங்கள் புறப்படுகின்றன, புறத்தின் -பாற்படுகின்றன, அதுவே புல-மாற்றம் எனலாம்.

நாமறிந்த வரை, முதலீட்டியம் என்பது உற்பத்தி வழிமுறைகளையும் உற்பத்தி உறவுகளையும் மாற்றுருவமாக்கும் ஒன்று. இந்தச் சுரண்டல் நிலையைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டி, ஆள்கிற -ஆளப்பெறுகிற - வர்க்கங்களைத் தக்க வைத்துக் கையாண்டது. அதேபோல முன்பு பாட்டாளி வர்க்கத்தினரைப் பெருக்கியது. ஆனால் அந்தப்பெருக்கம் நிச்சயமில்லை இனியும். அதேநேரம் வளங்களுக்காக நாடுகளும் நாடுகளுக்குள்ளாக வர்க்கங்களும் மோதித் திணைப்புலங்களைச் சுரண்டி அரசியல்-நெருக்கடிகளைத் தூண்டுகின்றன. இப்படித் தூண்டும்போதே இந்த மோதல்களின் கெட்டி தட்டிய வடிவமாக நவீன அரசு எந்திரம், ஒடுக்குமுறை உள்ளிட்ட தன் பல்வேறு செயல் பரிமாணங்களுடன் தன்னைத் தக்க வைக்கிறது. உடனாக, உற்பத்தி வழிமுறைகளையும் நகல் செய்யும் வழிமுறைகளையும் தொடர்ந்து மாற்றிவரும் சக்தியான தொழில் நுட்பத்தையும் அதன் ஊடான உறவுகளையும் தூண்ட வேண்டுமென்கிறது. இந்த வகையில் நவீன அரசு எந்திரங்களும் முதலீட்டிய மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தத் தூண்டலைத் தம்முள் வரைந்துகொண்டு இயங்குவன. -இவை அறிவை ஒரு தொழில் நுட்பமாக வைத்துத் தம் பணியில் ஈடுபடுகின்றன என்பது முக்கியம். குறிப்பாக, இங்கே தொழில்நுட்பக் கண்டறிதல்களை நனவாக்கி, நிறுவனமாக்கிச் செயல்படும் நிலை முக்கியம். இதற்காக காலத்தையும் வெளியையும் மறுவரையறை செய்கின்றன, அவற்றில் பலவழிகளில் முதலீடு செய்கின்றன.

இரண்டாம் உலகப்போர்க்காலத்துக்கு முன்பாகவே இத்தகைய மறுவரையறை பாரிய அளவில் இயங்கத் தொடங்கிவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கறாரான தொழிற்சாலை என்ற வடிவம் மாறி, ஹென்றி ஃபோர்ட்டின் நவீன assembly line தொழிற்சாலை என்று உருவானது. அடுத்த சில ஆண்டுகளிலேயே-அதாவது 1929-ஆம் ஆண்டில் புவிப்பரப்பு முழுதும் சந்தித்த பொருளியல் பின்னடைவில் இந்தப் மாற்றுருவை அதன் சிக்கலுடன் Modern times திரைப்படத்தில் காண முடிந்தது. அடுத்த முக்கிய வடிவமென்பது, போர்க்கால அமெரிக்காவின் அரசே பங்கேற்று உருவாக்கிய லாஸ் அலோமோஸ் (Los Alamos) ரகசியக்களம் தான். இந்த ரகசியக்களத்தில் நவீன இயல்பியலுக்கான ஆராய்ச்சித்தொழில் நுட்பமும் ராணுவமும் கைகோர்த்தன. புவிப்பரப்பின் முதல் அணுகுண்டை பாலையெனும் திணைப்புலத்தில் வடிவமைத்து அடுத்து ஓரிடத்தில் வெடித்துப் பரிசோதித்தார்கள். இந்த ரகசியக்களத்தை ஜெர்மன் நாஃஸி அரசு வடிவமைப்பதற்கு முன்பாகச் செய்தாக வேண்டுமே என்று பெயர்பெற்ற இயல்பியல் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்க அதிபர் ஃப்ராங்ளின் ரூஸ்வெல்டிடம் கவலை தெரிவித்திருந்தார்களே. ஆக, புவிப்பரப் பின் அரசுகள் யாவற்றின் பிறகான கனவாக அமைந்தது, அமெரிக்காவில் நனவான இந்த ரகசியக்களம். போர் முடிந்த அமெரிக்காவில் அடுத்த முயற்சியாக, உருவாகி வந்த வெளிகளை அரசு எந்திரமும் முதலீட்டிய-தொழிற்துறை நிறுவனங்களும் தொழிற்துறையும் அறிவியல் ஆராய்ச்சியும் இணைந்து முறைப்படுத்தியதைக் காண முடிந்தது. இங்கே ரகசியத்தன்மை என்பது தேவையற்றுவிட்டது. அதாவது அரசு எந்திரம், முதலீட்டியம், தொழிற்துறை, அறிவியல் ஆராய்ச்சி என நான்கும் இணைவதான வடிவப் பரிசோதனைகளெனப் பலப்பல. இவற்றைக் கொத்தணிக்களங்கள் (Cluster spaces) என அழைத்தால் இவற்றின் முக்கியத்துவம் புரியும்.

இந்தக் கொத்தணிகள், ஒத்த தன்மை கொண்ட தொழில கங்களை அருகருகே அமைத்து இயங்கின. அவ்வகையில் வெளி என்பது மறுவரையறைக்கு ஆளானது. அதாவது, அறிவுக்கரு ஒன்றை யோசித்து, ஆராய்ச்சிவழி அதைப் பரிசோதித்து, வடிவமைத்து, தயாரித்து, நகலியங்க வைத்து, சந்தையில் சுழற்சிக்கு விட்டு, வாணிபத்தில் விற்று, வெற்றிகரமாக விநியோகித்து, அதைக் கண்காணிக்கிற, பழுதுபார்க்கிற சேவையையும் உறுதிசெய்வது இது. ஒரு நிறுவனத்தால் மாத்திரம் இது சாத்தியமில்லை. அதனால்தான் கொத்தணி. அமெரிக்காவில் வாகன ஆலைகளுக்கென டெட்ராய்ட்டும் க்வார்ட்ஸ் நகரமென ஸிலிக்கான் பள்ளத்தாக்கும் கனிம வேதியல் பரப்பென ஜெர்மனி-ஸ்விட்ஸர்லாந்தின் மருந்துக் கம்பெனிகளும் சரியான எடுத்துக்காட்டுக்கள். ஆனால் இன்று இது எப்படித் தொடர்கிறது என்பது முக்கியக்கேள்வி.

சொல்லப்போனால், இத்தகைய நடவடிக்கைகளின் சில கட்டங்கள் அருகருகே இனியும் நடக்கத் தேவையில்லை என்ற துணிபை இனிக் காண்கிறோம். ஆக, பண்டங்களின் உற்பத்தியும் சேவைகள் வந்துசேரும் வழிகளும் அருகருகே இருக்கத் தேவையில்லை; உற்பத்திக்கு முன்பும் பின்புமான செயல்பாடுகள் கூட அருகருகே இருக்கத் தேவையில்லை; இவற்றை அருகருகே வைத்திருப்பது, ஏன், லாப-நஷ்டப் பொருளியல் நோக்கில் தவறாகக்கூட இனி அமையும்; போட்டியில் தோற்பதில் போய் முடியும் என்ற துணிபை இனிக் காண்கிறோம். இனி நெருக்கடியென்பதெல்லாம், இந்தச் செயல்பாடுகள் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குள்ளாக நடந்தாக வேண்டும் என்று வலியுறுத்தும் அரசுகளுக்குத்தான்!

ஆக, முதலீட்டியம் என்பது அதை எதிர்ப்போர் எண்ணு வதைக் காட்டிலும் வேகத்தில் புவிதழுவிப் பரவுவதாக மாறியிருக்கிறது. அதன் அவ்வப்போதைய நெருக்கடிகளும் தோல்விகளும் தான் முடியப்போவதான சமிக்ஞையைத் தன்னை எதிர்ப்போருக்கான ஆசுவாசம் அளித்துவருவதாக மாறியிருக் கின்றன. ஆக, கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணையின் நகலாக இன்று இயங்குவது, முதலீட்டிய நிதியும் தொழில்நுட்பக் கூறுகளும் தொழிற்செயல்பாடுகளும் உற்பத்திப் பண்டங்களும் சேவை வழிகளும் இவற்றை உறுதிசெய்யும் திறன் கொண்ட வல்லுநர் மனிதரும் என்று சொல்லும்போது மார்க்ஸ் தாம் கண்டறிந்த விவரிப்பின்வழி இந்த வாக்கியத்தை மிக எளிதாக எழுதியிருப்பார் என்பதையும் சேர்த்துக்கூறியாக வேண்டும்.

தொழிற்செயல்பாட்டின் கட்டங்கள் பல புலம் மாறித் தம் மென்பொருள் நிலையில், இணையமெனவும் இணையவழி இரவு-பகல் நேரமாற்றெனவும் கண்டப்பெயர்வுக்கு வழிவகுத்ததும் இப்படித்தான். பெங்களூர்களும் குர்காவ்களும் நாமறிந்து வளர்ந்த ஆண்டுகள் கடந்ததும் இப்படித்தான். வன்பொருள் நிலையில் மேற்குலகச் சந்தைகளுக்கான பண்டங்களின் உற்பத்திச்செயல்பாடுகள் நாம் காணப்பெரும்பாலும் சீனத்துக்கும் தூரக்கிழக்கு நாடுகளுக்கும் சென்றடைந்ததும் இப்படித்தான். ஆக ஆய்வு, வடிவமைப்பு, உற்பத்தி, நகலியக்கம், விநியோகம் எனப் பலதும் கொத்தணி என்ற வரலாற்று-வடிவத்தைத் தாண்டி, நாட்டு -எல்லைகள் தாண்டி, கண்டங்கள் தாண்டி, சாத்தியமாயின. இந்த நிலையில் இவையனைத்தும் தம் ஓட்டத்தின் எல்லையையும் தாண்டி நமக்குச் சொல்லும் செய்தியென்ன என்பதே இங்கு எழும்பும் கேள்வி. இதற்கு ஒரே பதில் - துறைசார்-அறிவு பிரசன்னமாகி இருக்கிறதா, இல்லையா என்பது இந்தப் புலமாற்று நடக்குமா, நடக்காதா என்பதை முடிவுசெய்யும் முக்கிய விஷயம். துறைசார்-அறிவும் அதன் தொடர்ந்த மறு-உற்பத்தித் திறனும் புலமாற்றம் என்ற சாத்தியத்தைத் திறக்கும் சாவிகள். ஆக, அரசு எந்திரத்தின், முதலீட்டியத்தின் விழைவு, இந்தப் தன்-புலமாற்றத்துக்கு வேண்டிய துறை-சார்-அறிவைக் கல்வி நிறுவனங்கள் மூலம் உறுதிசெய்வது. இது சாத்தியமென்றால் மற்ற விஷயங்களைப் பயிற்சியின் மூலம், பயணத்தின் மூலம் சாதித்துவிடலாம் என்பது அடுத்த விழைவு.

3

இதில் உற்பத்தி-விநியோகம்-நுகர்வு-பழுதுபார்த்தல் என்ற கண்ணி, திணைப்புலம் பலதிலும் இயங்குவதை உறுதிசெய்து அதற்கான உறவுகளை நிலைநிறுத்தி வைக்கும் துணிபும் பொறுப்பும் நவீன அரசு எந்திரத்துடையது. இந்த வகையில் ஆள்கிற-ஆளப்பெறுகிற வர்க்கங்களிடை தோன்றும் மோதல் களின் கெட்டி தட்டிய வடிவமாக இயங்குவது நவீன அரசு எந்திரம். ஆக, ஒருபுறம் வர்க்க மோதல்களின் எச்சமாகவும் மறுபுறம் ஆளும் வர்க்கத்தின் மேலாண்மையை நிறுவி வர்க்க மோதல்களைக் கையாண்டு ஒடுக்கும் எந்திரமாகவும் செயல் படுவது நவீன அரசு எந்திரம். இந்த வகையில், இந்தியப்பரப்பில் ஏற்கனவே நிலவும் மோதல்களுடன் இப்போது, புதியதொரு மோதலுக்கான மட்டமொன்று அலையாய் எழும்பிவந்தி ருக்கிறது; தன்-புலமாற்றத்தின் சாத்தியங்களை ஒட்டிக் கிளம்பியிருக்கிறது.

கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இந்தியப்பரப்பில் அரசு எந்திரம் செயல்படுத்திவரும் அரசியல்-பொருளியல் கொள்கை களும் செயல்பாடுகளும் ஆள்கிற-உயர்மட்ட வர்க்கத்தினருக்குக் கொழுத்த லாபத்தைக் கொடுத்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை. இவற்றுடன் இயற்கைத் திணைப்புலங்கள் ஒத்திசைவாகும் சாத்தியமில்லை என்ற பட்சத்தில் ஏறத்தாழ ஒரு அரசியல்-சமுதாய ஒத்திசைவை நிறுவ முயன்றிருக்கிறார்கள். ஒத்திசைவு என்றால் இங்கே அரசியல் கட்சிகளைத் தாண்டி அபிவிருத்தி, வளர்ச்சி என்பதாக அரசு எந்திரம் மற்றும் நிதி முதலீட்டியம், தொழிற்துறை, அறிவியல் ஆராய்ச்சி ஆகிய நான்கு தரப்பும் ஏற்றிருக்கும் ஒத்திசைவு தான். அதே வேளை, மேற்கண்டபடி இந்த அபிவிருத்தி, வளர்ச்சி என்பனவற்றைப் பல தரப்பும் பல்வேறு செய்திகளாக, சமிக்ஞைகளாகக் காண்கின்றன. ஒரு தீவிர எடுத்துக்காட்டாக, தற்கொலையின் விளிம்பில் தள்ளப்படக்கூடும் நிலையில் உள்ள நாக்பூர் மாவட்ட விவசாயி ஒருவருக்கு அபிவிருத்தி என்பது பயிர்ப் பாதுகாப்பை உறுதிசெய்வதாக, பட்ட கடனைத் தள்ளுபடி செய்வதாக அமையும். இன்னொரு கட்டத்தில் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதாகக் கூட அமையும். இன்னொரு தீவிர எடுத்துக்காட்டு, இந்தியாவில் வைத்துத் தொடங்கியதும் முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர் ஒருவரைத் தன் இயக்குநர்களில் ஒருவராகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம் வேதாந்தா. இந்த நிறுவனத்துக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆதிவாசிப்பகுதியில் பாக்ஸைட் என்ற அலுமினியத் தாதுவை அவர்களை வைத்தே நாசகாரமாய் வெட்டியெடுக்கிற செயலும் அபிவிருத்தி, வளர்ச்சிதான். இந்த அபிவிருத்தி, வளர்ச்சியில் யாவரையும் சேர்க்க வேண்டும் (inclusive growth) என்பதே அரசு எந்திரம் அறிவித்து முழங்கிவிட்ட ஒன்று. அபிவிருத்தி என்பதற்கான சமிக்ஞைச் செய்தியான எந்தச் செய்தி முன்னால் வரும் யாருமறியா மர்மம். இது தேர்தல் என்ற சடங்காக்கத்தின் அண்மை-தூரத்தைப் பொறுத்து அமையலாம் என்பதைத் தவிர வேறொன்றும் கூற முடியாததே இன்றைய நிலை.

இந்த நிலையில்தான் மேலே குறிப்பிட்ட பிரத்தியேகக் களக் கண்ணோட்டம் அவசியமாகிறது. இதற்கு வேண்டி, வழக்கமான அரசியல் ஆய்வுகள், அபிவிருத்தி அல்லது வளர்ச்சி மீதான மோகம், பொருளியல் வளர்ச்சி அல்லது வளர்ச்சி விகிதம் உச்சத்தில் தாழ்வில் என்பன குறித்த புள்ளிவிபரங்கள் போன்றவற்றை சற்றே இடைநிறுத்திவைத்து இதைப் பேசலாம்.

கள ரீதியாக, ஒரு சைக்கிள் சக்கரத்தில் சுழலும் மையம், அதிலிருந்து பிரிந்துசெல்லும் ஆரங்கள் (rotor hubs) என்பன போன்ற ஒரு வடிவத்தை வைத்து நோக்கலாம். இதே வடிவத்தில் மூன்று அமைப்புகள் பரவி வருகின்றன-அரசு எந்திரத்தின் முழு ஒத்துழைப்புடன்-ஆதரவுடன் எனலாம்.

1. உற்பத்தி மற்றும் கனிம உறிஞ்சு மையமும் ஆரமும் (rotor hub for manufacturing and mineral extraction)

2. சேவை வழங்கு மையமும் ஆரமும் (rotor hub for information technology and related other services)

3. ராணுவத்துறை மையமும் ஆரமும் (rotor hub for defense, space, nuclear activities)

இந்த மைய-ஆர வடிவம் என்பது ஒரு பிரதேசமல்ல. மாறாக, இது குறிப்பிட்ட பிரதேசங்களில் நிபந்தனைகள் சில கொண்ட சூழலில் செயல்படுகிற வடிவம். அதாவது, ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட துறை-அறிவுப் பெருக்கத்துக்கும் முதலீட்டியப் பாய்ச்சலுக்கும் அடித்தளம் அமைந்திருப்பது அவசியம்; தன்-புல மாற்றத்தின் இணைநிகழ்வாக நிதி முதலீடு பாயவேண்டும். அப்போது மையம் சுழலும். அது சுழலும்போது ஆரங்களும் வேறுவழியின்றி அத்துடன் சுழலும். அப்போது இயல்பியல் விளக்குவது போல, ஆரங்கள் வழி மையத்தை நோக்கிய இயக்கமும் அதற்கு எதிராக ஆரத்தின் எல்லை நோக்கிய இயக்கமும் உடன் வரும். இந்த மைய-ஆர வடிவத்தில் இயங்கும் பொருளியல்-நகர்வு இதுவே. இத்தோடு அரசியல்-சமுதாய நகர்வும் சாத்தியம்.

தவிர, மேற்கண்ட மூன்று அமைப்புக்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவை ஒரே பிரதேசத்தில் அமைந்து இயங்குவதும் சாத்தியம்தான். அவற்றின் பொருத்தப்பாடு என்பது புவிசார்- மற்றும் வரலாற்றுக் காரணங்களில் தங்கும். எடுத்துக்காட்டாக, காலனித்துவம் மற்றும் பிரித்தானியக் காலனித்துவத்தின் விளைவாக இந்தியத் துணைக்கண்டப் பரப்பில் தோன்றி வளர்ந்த புதிய துறைமுக-நகரங்களைக் கூறலாம். கச்சாப் பொருள் ஏற்றுமதி, அவற்றை வைத்து மேற்குலகு தயாரித்த பொருட்களின் இறக்குமதி என்ற அடிப்படையில் பெரும் சுரண்டலைச் சாத்தியமாக்கியவை இந்த நகரங்கள். இந்த துறைமுக-நகரத்தை ஒரு காலனித்துவ வடிவம் என்று கொண்டால், இதற்கு மேல் வந்து இறங்கியிருக்கும் மைய-ஆர வடிவம் இதைப்போன்ற, அடுத்த வடிவம் எனலாம்.

இந்த மைய-ஆரவடிவத்தில் இந்தியாவின் முக்கியப் பிரதேசங்கள் மாற்றுருவம் பெற்றுவருகின்றான. டில்லி மற்றும் டில்லியை அடுத்த குரிகாவ், நோய்டா பகுதி ஒருபுறம், மும்பை-புனே-குஜராத் என ஒரு பெரும் பகுதி மறுபுறம், சென்னை,-பெங்களூர், ஹைதராபாத், கேரளம் எனத் தென்னாட்டில் சில பகுதிகள், ஜார்க்கண்ட்-ஒரிஸ்ஸா-சத்தீஸ்கர்-வடக்கு ஆந்திரம் என ஒரு பெரும் பகுதி இப்படியான தோற்றத்தைக் காணலாம். இவற்றில் எந்தப்பிரதேசத்தில் மேற்கண்ட மூன்று அமைப்புக் களில் எவைஎவை செயல்படுகின்றன என்பதையும் எளிதில் அடையாளங்காண முடியும்.

ஆக, இந்தியப்பரப்பில் அரசு எந்திரம் என்பது, இவற்றைத் திட்டமிட்டு உருவாக்குவதில் தன் சக்தியைப் பிரயோகித்து வருகிறது. இந்த மூன்று மைய-ஆர வடிவ அமைப்புக்களும் பரஸ்பரம் மதித்து இவற்றின் சமநிலையை உறுதிசெய்வதும் அரசு எந்திரத்தின் கடமைதான். எடுத்துக்காட்டாக, சேவைத் துறை கொண்ட மைய-ஆர வடிவம் பெரிதாக இயங்கும்போது, அதை மற்ற இரண்டு அமைப்புக்களுடன் சமநிலைக்குக் கொணரும் பணியை அரசு எந்திரம் ஏற்கிறது. அதேபோல, ராணுவத்துறை மையமும் ஆரமும் மற்ற இரண்டு அமைப்பு களுக்கும் சளைக்காமல் வளர வேண்டும் என்பதை முன்வைத்து வருபவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்பதைக் கவனிக்காமல் இருக்க முடியாது. தவிர, அண்மையில் நிறைவேறிய இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையை முன்வைத்து யோசிக்கும்போது, மைய-ஆர வடிவத்தின் வீச்சு எத்தகையது என்று விளங்கிக்கொள்ளலாம்.

இன்னுமொரு விஷயம்: இயற்கை மற்றும் சமுதாயப்பரப்பில் தன்னைச் செலுத்தும் எவ்விதக் களக்கண்ணோட்டமும் வன்முறை கொண்டே இயங்க முடியும். அதாவது, ஒரே நேரத்தில் வன்முறையைத் தூண்டவும் உறையவும் செய்வதே இதன் நோக்கம். மேற்கண்ட மைய-ஆர வடிவமும் இதற்கு விதிவிலக்கல்ல. வன்முறையைத் தூண்டவும் உறையவும் வைக்கும் இதன் சக்தியை ஏற்கனவே மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட பல இடங்களில் பார்த்தாயிற்று. இதன் பரவல் என்பது வன்முறையும் வேதனையும் கொண்டதாக, அங்குள்ள மக்கள் பலரின் கையிலிருப்பதைப் பறிப்பதாக, அவர்களின் போராட் டத்தைத் தூண்டி, அவர்களின் ஒற்றுமையைப் பிளந்து அடக்குவதாக அமைந்திருக்கிறது. அதே நேரம், இந்தப்பரவல் என்பது இந்தியப்பரப்பில் சில இடங்களுக்கு மதிப்புண்டு என அவற்றைத் தேர்ந்துகொள்கிறது; மற்ற இடங்களுக்கு மதிப்பு குறைவு எனச்சொல்லி அவற்றைப் புறந்தள்ளுகிறது. இப்படி மதிப்புக்குறைவாகிப்போன இடங்களில் உள்ள மக்களுக்கென, அரசு எந்திரம் என்பது நிவாரண உதவி தாண்டிச் செயல்படுவ தில்லை, மற்றபடி அவர்கள் இனி தத்தம் வழியே போய்க் கொள்ள வேண்டியதுதான்.

4

ஒரு பிரதேசத்தில் மைய-ஆர வடிவ அமைப்பு இயங்க வேண்டுமென்றால் அதற்கேற்ப மேற்கண்ட வசதிகள் தேவை; தவிர நிலம் தேவை; அதிலும் கனிமத்தொழில் என்பது நிலமின்றி, பிரத்தியேக மின் வழங்கலின்றி, போக்குவரத்து வசதிகளின்றி, சாத்தியமில்லை. நிலம், நீர், காடுகளைப் பறிப்பது இந்த மைய-ஆர அமைப்பின் அத்தியாவசிய உரிமைகளாக மாறுகின்றன. அந்தந்தப் பகுதி மக்களின் விருப்பத்தைப் பற்றிக் கவலையற்று, காலனியக்காலச் சட்டங்களின்படி நடக்கிற நிலப்பறிப்பு, சிறு விவசாயிகள் மற்றும் ஆதிவாசிகளை நேரடியாக ஏய்த்து இன்னொரு தரப்புக்கான மூதலீட்டு வரவுக்கு வழிவகுக்கிறது. நிச்சயமற்ற இந்தச்செயலை உறுதிசெய்யும் நிலை, அரசு எந்திரத்துக்கு! ஆக, நிலப்பறிப்பும் அதற்கு எதிர்ப்பும் இப்படிப்பரவுகின்றன. நிலத்தைப் பறிப்பதை ஏற்றுப் பணம் வாங்கினால், அதற்காகப் பேரம் செய்தால், எதிர்காலத்தில் வாழ்வுரிமையே போய்விடும் நிலை ஏற்படலாம் என விவசாயிகளும் ஆதிவாசிகளும் அஞ்சி எதிர்க்கின்றனர். எதிர்த்தால் என்னவெல்லாம் சாத்தியம் என்பதை ஒரிஸ்ஸாவில் கலிங்காநகர், மேற்குவங்கத்தில் நந்திகிராம், சிங்கூர் பகுதிகளில் காண முடிந்தது. இங்கெல்லாம் எதிர்ப்பின் காரணம் ஒன்றில் நிலப்பறிப்பு நின்றுபோனது, அல்லது தொடர முடியவில்லை.

ஆக, தனக்கான கள-ரீதியான எதிர்ப்பைத் தூண்டுவது நிலப்பறிப்பு. அந்த எதிர்ப்புக்களங்களில் பரந்துபட்ட போராட் டங்களிலிருந்து ஆயுத மோதல்கள் வரை நடப்பதைக் காண முடிகிறது. இந்தியப்பரப்பில் சில மாநிலங்களிலாவது இப்படி யான நிலை பல்வேறு கட்டங்களில் உண்டு. இதே போல நகரங்கள் பலதிலும் பொதுவெளி என்பது மாற்றுருவம் பெற்றது, பெறுகின்றது. பொதுச்சேவைகள் பல படிப்படியாகக் குறைக்கப்பெற்று, தனியார் பொறுப்பேற்கும் நிலை. பூட்டிய குடியிருப்புக்கள், புதிய சாலைகள், பாலங்கள், பேரங்காடிகள், விமான நிலையங்கள், தனியார்ப்பூங்காக்கள் என இவற்றின் மூலம் பயன்பெறும் வர்க்கத்தினர் யார் என வரையறையில் இந்த நகர வெளி மாற்றுருவம் பெறுகிறது; வளர்ச்சி என்பதாகத் தன் நியாயப்பாட்டை முன்வைக்கிறது.

ஆக, மைய-ஆர வடிவ அமைப்பின் இயக்கத்திலேயே வன்முறையைத் தூண்டும் சாத்தியம் உறைந்திருக்கிறது. பெருவாரி குறுவிவசாயிகள் மற்றும் ஆதிவாசிகள் எதிர்நோக்குவது, ஒன்றில் இந்த மைய-ஆர அமைப்புடன் எப்படியாவது இணைய வேண்டும் அல்லது அதை எதிர்க்க வேண்டும் என்ற கசப்பான தேர்வைத்தான். ஆக, அவர்கள்தம் போராட்டங்களை அழிக்கவும் மழுங்கடிக்கவுமென பல்வேறு உத்திகளை வகுக்கும் திறன் அரசு எந்திரத்துக்கு உண்டு எனக் கொள்ளலாம். இவற்றில் அந்தந்தப்பகுதி மக்கள் தமக்குள் மோதிக்கொள்வது என்ற உத்திவரை அடங்கும். அதே நேரம் எதிர்ப்புகளும் கலகங்களும் உருவாகுமிடமெல்லாம் அரசு எந்திர இருப்பின் நியாயப்பாட்டுக்கு நெருக்கடி ஏற்படும். ஒருபுறம், இத்தகைய மக்களுக்கு அரசியல்-சட்ட ரீதியாக ஒருசில உரிமைகளை வழங்கினாலும் செயல்பாட்டில் அவற்றைக் கழற்றிவிடும் சூழல். மறுபுறம், மைய-ஆர வடிவ அமைப்பு சுழல வேண்டுமென, புதுப்புது சட்ட இயற்றல்கள், திருத்தங்கள். இந்த மக்களுக்கும் தொழில்துறை நிறுவனங்களுக்கும் நேரடி பேரம் நடப்பதை ஊக்குவிக்கும் உத்தியும் இவற்றில் அடங்கும். ஆக, இப்படி அரசு எந்திரம் என்பது இத்தகைய பகுதிகளில் இதுநாள் வரையிலான தன் குறைந்தபட்சப் பணிகள், கடமைகள், ஏன் ஒடுக்குமுறையிலிருந்துகூட தேவை ஏற்படும் வரை விலகி நிற்கலாம் என்ற நிலை.

மைய-ஆர அமைப்பு இயங்காத பகுதிகளில் அரசு எந்திரம் இனி முன்போலச் செயல்படுவதில் பொருளுண்டா என்று கேட்குமளவு இந்த நிலை சென்றிருக்கிறது. சொல்லப்போனால் தேர்தல், விவசாயிகளின் தற்கொலைகள் போன்ற அரசியல்-சமுதாய நெருக்கடிகள் மற்றும் இயற்கைச்சீற்றங்கள் நடக்கும் காலகட்டங்களைத் தவிர, இங்கு அரசு-எந்திரத்தின் செயல்பாடு என்பதை சற்றேனும் விலகியிருக்கும் ஒன்றாகவே காண வேண்டும். இந்த அவசரக் காலகட்டங்களில் மட்டுமே இந்தப்பகுதிகளில் தன் நியாயப்பாட்டை நிறுவ முடியும் என்று அரசு எந்திரத்துக்குத் தெரியும். இந்த நிலையில், வளர்ச்சி, அபிவிருத்தி என்பதாக இந்தப்பகுதி மக்களின் எதிர்பார்ப்புக் களும் விழைவுகளும் நிறைவேறாது நீடிக்கின்றான.

ஆக, இது அதிவளர்ச்சிச் சுழலும் அதன் அழிவும் அவலமும் நீடிக்கும் நிலை எனலாம். 

- நாகார்ஜுனன்

Pin It