4-6-2017 ஞாயிறு அன்று சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற ‘தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு’ மாநாட்டில் நிறை வுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநாட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தார்.  தீர்மானங்கள் விவரம்:

1) 1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டுப் பள்ளி களில் இராஜகோபாலாச்சாரி கட்டாயமாக இந்தி மொழிப் பாடத்தைத் திணித்தபோது, ‘பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும் இணைந்துப் போராடி, இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது தமிழ்நாடு ஆகும். 1965 ஆம் ஆண்டிலிருந்து அலுவல் மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறிய நிலையிலும் தமிழ் நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1968இல் இருமொழித் திட்டத்தை அறிவித்த நாடு தமிழ்நாடு. 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் இந்தியை அலுவல் மொழி என்று அறிவித்த நிலையிலும் அந்த சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று 1976ஆம் ஆண்டு நடுவண் அரசின் அலுவல் மொழி விதிகளே ஏற்றுக் கொண்டது என்பது வரலாறு. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திக்கு இடமே இல்லாத நிலையில் நடுவண் பா.ஜ.க. ஆட்சி இப்போது இந்தித் திணிப்பு வழியாக சமஸ்கிருத பார்ப்பனப் பண்பாட்டைத் திணிக்க முயல்கிறது.

நாடாளுமன்றத்தில் இந்தி பேசும் மாநில அமைச்சர்கள் இந்தியிலேயே பேசுவார்கள் என்றும், தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பாடத் திட்டத்தின்கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் - விமான நிலைய அறிவிப்புகளில் -மைல் கற்களில் இந்தித் திணிக்கப்படுவதோடு, ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட் டுள்ளது. பலமொழி, இன, பண்பாடுகளைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தை, இந்தி - சமஸ்கிருத - இந்து - இந்தியா என்ற ஒற்றைத் தேசமாகக் கட்டமைக்க முயல்கிறது. இந்த ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று நடுவண் அரசிற்கு இம்மாநாடு எச்சரிக்க விரும்புகிறது.

தமிழர்களின் தனித்துவமான சுயமரியாதை - சமூக நீதிப் பண்பாட்டை சீர்குலைக்கும் இந்தப் பார்ப்பனியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்திட தமிழர்கள் கட்சி, இயக்க வேறுபாடுகளைக் கடந்து அணி திரளவேண்டும் என்று இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

தடுப்புக் காவல் சட்டங்கள்

2) குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க ஏற்கனவே இந்தியத் தண்டனைச் சட்டம் இருக்கும்போது கூடுதலாக, அரசுகள் தடுப்புக் காவல் சட்டங்களை இயற்றிக் கொள்கின்றன. பிணையில் வெளியே வருவதைத் தடுப்பதும், குறைந்தது ஓராண்டுகாலமாவது சிறையில் முடக்கி வைப்பதுமே இதன் நோக்கம். இந்த சட்டங்கள் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கு வதற்கும், சமூக, அரசியல் செயற்பாட் டாளர்களை ஒடுக்குவதற்குமே பயன்படுத்தப் படுகின்றன. பிரிட்டிஷ் ஆட்சியில் ரவுலட் சட்டத்தை எதிர்த்தவர்கள் “சுதந்திர” இந்தியாவில் அதைவிடக் கொடூரமான ஒடுக்குமுறை சட்டங்களைக் கொண்டு வந்து மக்களை ஒடுக்குவது ஜனநாயகத்திற்கே தலைகுனிவாகும்.

காஷ்மீரிலும், பல வடகிழக்கு மாநிலங்களிலும் இராணுவச் சட்டங்களே கோலோச்சி வருகின்றன. இத்தகைய தடுப்பு காவல் சட்டங்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மரண தண்டனை வழங்குவதற்கும், பிணையில் வெளிவராமல் சிறைக் காவலில் தடுத்து வைப்பதற்கும் பயன்படுத்துவது சட்ட விரோத மானது என்பதுடன் தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதாகும் என்று அண்மையில் கூட உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் குண்டர் சட்டம் கண்மூடித்தனமாக சமூக செயல்பாட்டாளர்கள் மீதும் ஏவி விடப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர் களுக்காக அஞ்சலி தெரிவிக்க சென்னை மெரீனா கடற்கரையில் கூட முயன்ற திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய தோழர்கள் மீது குண்டர் சட்டத்தை தமிழக அரசு ஏவி விட்டிருப்பது சட்டம் மிக மோசமாக முறையற்றுப் பயன்படுத்தப்படு கிறது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

மறைந்த முதலமைச்சர்ஜெயலலிதா ஈழத்தில் இறுதிப் போரில் நடந்தது இனப்படுகொலையே என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த அதே குரலை - அதே உணர்வை வெளிப்படுத்த முயன்றவர்கள் மீது “அம்மாவின்” ஆட்சி என்று கூறிக்கொள்கின்றவர்கள் குண்டர் சட்டத்தை ஏவி விட்டிருப்பது- அவர்களின் தலைவர் அறிவித்த கொள்கைகளுக்கு இழைக்கும் துரோகம் என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டுவ தோடு, கைது செய்யப்பட்டவர்கள் மீது பிறப்பிக் கப்பட்ட குண்டர் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பா.ஜ.க. கொல்லைப்புற முயற்சி

3) தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் வலிமையற்ற தலைமையையும், ஆளும் கட்சியில் உருவாகியுள்ள பிளவையும் பயன்படுத்தி- கொல்லைப்புற வழியாக தமிழகத்தில் காலூன்ற - பா.ஜ.க துடிக்கிறது. நடுவண் ஆட்சியின் அதிகாரப் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் ஆட்சி யாளர்கள் பா.ஜ.க வின் அதிகார மிரட்டல் களுக்கு பணிந்து பச்சைக்கொடி காட்டுவதாகவே தெரிகிறது. அதன்காரணமாகத்தான்  பா.ஜ.க வின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்க்கும் போராளிகளை மோசமாக ஒடுக்குகிறார்கள்.

அண்மையில் மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வரும் பேராசிரியர் ஜெய ராமன் உள்ளிட்ட 11 தோழர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொருபுறம் ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்புகளுக்குத் தடையின்றி அனுமதி வழங்கப்படுகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்தப் போக்கை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

‘திராவிட நாடு’ எழுச்சி

4) பசு, எருது, எருமை, கன்றுக்குட்டி , ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கக்கூடாது என்று பா.ஜ.க பிறப்பித்துள்ள உத்தரவு மக்களின் உணவுக் கலாச்சார உரிமை களையும், மாநில உரிமைகளையும் பறிப்பதாகும். உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தையும், விவசாயிகளின் வாழ்வுரிமையையும் கடுமையாக பாதிக்கும் இந்த ஆணையை நடுவண் அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். உழைக்கும் மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் மாட்டிறைச்சியை மதத்தைக் காட்டி தடுக்கவும், அதன் விற்பனைகளுக்கு நெருக்கடிகளை கொண்டு வரவும் முயற்சிப்பது இந்தியாவைப் பார்ப்பன தேசமாக்கும் சூழ்ச்சியே ஆகும்.

அரசின் இந்த கலாச்சார உரிமைப் பறிப்பு களுக்கு எதிராக தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்கள் வீறு கொண்டு எழுந்து நிற்கின்றன. இந்த நிலை தொடருமானால் வட நாட்டிலிருந்து தென்னாட்டை பிரித்து விடுங்கள் என்ற போராட்ட முழக்கங்கள் ஒலிக்க தொடங்கியிருப்பது, தென்னகத்தின் கொதி நிலையை உணர்த்துகின்றன என்பதோடு வட நாட்டுப் பார்ப்பன பண்பாட்டுக்கு எதிராக உருவாகி வரும் இந்த எழுச்சியை வளர்த்தெடுப் போம் என்று இந்த மாநாடு உறுதியேற்கிறது.       

Pin It