மனிதன் அச்சத்தினால் கடவுளைப் படைத்தான். ஆனால் கடவுள் தத்துவம் சுரண்டல்வாதிகளுக்கு வசதியாய் இருப்பதைக் கண்டு சுரண்டல்வாதிகள் அதை நிலைப்படுத்திக்கொண்டார்கள். ஆனால், மனிதன் அறிவியலில் சிறுதுசிறிதாக முன்னேறும்போது கடவுள் தத்துவங்கள் சிறிதுசிறிதாகச் சிதைய ஆரம்பித்தன. ஆனால் சுரண்டல்வாதிகளும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் மதவாதிகளும் அறிவியலுக்கு மதச் சாயம் பூசியும், அறிவியலை உள்வாங்கிக்கொண்டு செரித்தும் சுரண்டலையும் மதத்தையும் நிலைப்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுடைய அசைக்கமுடியாத வாதமாக இதுவரை இருந்து வந்தது என்னவென்றால். “மனிதன் அறிவியலில் எவ்வளவுதான் முன்னேறினாலும் உயிர்களைப் படைக்க முடியாது. அது கடவுளின் முற்றுரிமை” என்பதுதான்.

ஆனால், இவ் வாதத்தை கிரெயிக் வெண்டெர் என்ற அறிவியலாளரும் அவரது குழுவினரும் (அவரது குழுவில் உள்ள 20 அறிவியலாளர்களில் 3 பேர் இந்திய வம்சாவழியினர்) 20.5.2010 அன்று தகர்த்துவிட்டார்கள். இப்பொழுது மனிதனால் உயிரற்ற செயற்கைப் பொருள்களை வைத்துக்கொண்டு உயிர்களைப் படைக்க முடியும் என்ற அளவிற்கு அறிவியல் வளர்ந்துவிட்டது.

வழக்கம்போலவே அறிவியல் உலகம் இக் கண்டுபிடிப்பை வரவேற்றுள்ளது. மதவாதிகள் கடுமையாக எதிர்த்து உள்ளார்கள். இதுபோன்று கடவுள் விளையாட்டை விளையாடுவதற்கு மனிதனுக்கு உரிமையில்லை என்றும், அரசாங்கம் இதை ஊக்குவிக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சரி! இக்கண்டுபிடிப்பினால் விளையப்போகும் விளைவுகள் என்ன? புவி வெப்ப மயமாதலின்மீது இது ஒரு தீர்மானகரமான ஆதிக்கத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.

பெட்ரோல் போன்றே இயற்கை எரிபொருள்களின் உபயோகத்தினால் வெளிவரும் கரியமில வாயு வளிமண்டலத்தில் பரவி நின்று வெப்பத்தை வெளியேறவிடாமல் தடுத்து, புவி வெப்பத்தை உயர்த்திக்கொடிருக்கிறது. மேலும் புவியில் கிடைக்கும் இயற்கை எரிபொருள்கள் நிரந்தரமாகக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. இன்னும் 200 ஆண்டுகளில் தீர்ந்துபோகலாம். எரிபொருள் இல்லாமல் மனித சமுதாயம் இருக்க முடியுமா?

இந்த எரிபொருள் தீர்ந்துபோனால் என்ன செய்வது என்ற கவலையில் மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் உயிரியல் எரிபொருள். உயிரியல் எரிபொருள் என்றால் உணவு தானியங்களிலிலிருந்து எரிபொருளைத் தயாரிப்பது; மேலும் எரிபொருளுக்கென்றே ஜெட்ரோபா போன்றவற்றை விளைவித்து அதிலிருந்து எரிபொருளைத் தயாரிப்பது. இம் முயற்சி 30 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றி பெற்றுவிட்டது.

ஆனால் இயற்கை எரிபொருள்கள் கரியமில வாயுவை உமிழ்வதுபோலவே, உயிரியல் எரிபொருள்கள் பசுமை இல்ல வாயுக்களை (ழுசநநn ழடிரளந பயளநள). மிக அதிகமாக வெளியிடுகின்றன. இப்பசுமை இல்ல வாயுக்கள் கரியமில வாயுவைவிட அதிகமாகச் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தவும் புவி வெப்பத்தை உயர்த்தவும் செய்கின்றன. அதனால் உயிரியல் எரிபொருளை உபயோகத்தில் கொண்டுவர முடியவில்லை.

கிரெயிக் வென்டெரின் உயிர்களைப் படைக்கும் (அதாவது இதுவரையிலும் கடவுளால் மட்டுமே முடியும் என்று நம்பப்பட்டுவந்த ஆற்றலை) கண்டுபிடிப்பு இதன்மேல் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. 20.5.2010 அன்று இவ்வரிய கண்டுபிடிப்பை வெளியிட்டபொழுது அதன் பயன்பாட்டைப் பற்றியும் அவர் விளக்கினார். படைக்கும் ஆற்றல்பெற்ற மனிதன், தான் விரும்பும் பண்புகொண்ட உயிரினங்களைப் படைக்கமுடியும். வளி மண்டலத்தில் இருக்கும் கரியமில வாயுவை உறிஞ்சும் தன்மையுள்ள உயிரினங்களைப் படைக்க முடியும் பசுமையில்ல வாயுக்களைப் பிரித்தெடுக்கும் உயிரினங்களைப் படைக்க முடியும் என்றும் கூறினார். (இதனால் புவி வெப்பம் உயர்வதைத் தடுக்க முடியும். மேலும் புவிவெப்ப உயர்வு நிகழ்வைத் தேவையான அளவு திருப்பிவிட முடியும்.)

இது மட்டுமன்று ; இயற்கை எரிபொருள்கள் தீர்ந்து போவதற்கு முன்னால் மாற்று எரிபொருள்களைக் கண்டுபிடித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமல்லவா? இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் உயிரியல் எரிபொருள்கள் பசுமை இல்ல வாயுக்களை வெளியிட்டுச் சுற்றுச்சூழலைக் கெடுத்துப் புவி வெப்பத்தை உயர்த்தும் தன்மையை இக்கண்டுபிடிப்பு மாற்றிவிடும். உயிரியல் எரிபொருள்களிலிருந்து பசுமை இல்ல வாயுக்களைத் தனியே பிரித்தெடுக்கும் உயிரினங்களைப் படைக்கும் ஆற்றலை இக் கண்டுபிடிப்பு வழங்கும். கூடிய விரைவில் மாசு ஏற்படுத்தா உயிரியல் எரிபொருள்களை உற்பத்தி செய்து பயன்பாட்டிற்குக்கொண்டு வர முடியும். இனி இயற்கை எரிபொருள்கள் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்படத் தேவையில்லை. உயிரியல் எரிபொருள்களைத் தேவையான அளவிற்குஉற்பத்தி செய்து கொள்ளலாம். இன்றே இது முடியாது என்றாலும், ஒரு நூற்றாண்டுக்குள் இப்பொழுது மிகத் தீவிரமாகப் பேசப்படும் எரிபொருள்கள் பற்றாக்குறை, மாசுபடுதல், புவி வெப்பம் உயர்தல் ஆகிய பிரச்சினைகள் களையப்பட்டுவிடும்.

என்ன? மகிழ்ச்சியாக இருக்கிறதா? அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்புகிறீர்களா? என்னது, மதவாதிகள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் நீங்கள் தவறு செய்கிறீர்கள். இப்பொழுது இதை எதிர்க்கும் மவாதிகள் சிறிதுகாலத்திற்குப்பின் கடவுள்தான் மனிதனுக்கு இத்தகைய ஆற்றல் கொடுக்க வேண்டுமென்று விருப்பங்கொண்டார் என்று கூறிவிடுவார்கள்.

உலகம் பாய்போல் தட்டையாகத்தான் இருந்தது. இரணியன் அதைச் சுருட்டிக் கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டான் என்று மதவாதிகள் கூறினார்கள். உலகம் உருண்டை என்று தீர்மானகரமாகப் புரிந்து கொண்டபின், மதவாதிகளும் மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலுக்குள் இருந்து தன் மூக்கின்மேல் சுமந்துவரும் உலகத்தைக் கடலுடன் கூடிய உருண்டையாகக் காண்பித்தார்கள். திரைப்படங்களிலும் அச்சுப் படங்களிலும் இப்படித்தான் இப்பொழுது காண்பிக்கிறார்கள். கடலுக்குள்ளிருந்து கடலுடன்கூடிய உலக உருண்டையை எப்படி மீட்டு வரமுடியுமென்றோ, பாய்போலிருந்த உலகம் உருண்டையாக எப்படி மாறியது என்றோ விடையளிக்க வேண்டுமே என்று மதவாதிகள் கவலைப்படவேயில்லை; கூச்சப்படவும் இல்லை.

சூரியன், பூமியைச் சுற்றவில்லை; பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதற்காக 500 ஆண்டுகளுக்குமுன் திருச்சபையினரால் தண்டிக்கப்பட்ட நிக்கோலஸ் கோப்பர்நிகஸ், எலும்புகள் 22.5.2010 அன்று தோண்டியெடுக்கப்பட்டு முழு மரியாதைகளுடன் மீண்டும் புதைக்கப்பட்டன. ஆனால், பைபிளில் தவறான கருத்து உள்ளதென்று ஒப்புக்கொள்கிறர்களா என்பதைப்பற்றி அவர்கள் மூச்சுவிடவில்லை.

ஆகவே, எந்தப் புதிய கண்டுபிடிப்பையும் முதலில் எதிர்ப்பதும், சில காலத்திற்குப்பின் இரு மாறுபட்ட கருத்துகளை ஒருங்கே ஏற்றுக்கொண்டு வெட்கப்படாமல் இருப்பதும் மதவாதிகளுக்குக் கைவந்த கலை. ஆகவே, இக்கண்டுபிடிப்பினால் மதவாதிகள் துவண்டு விடுவார்கள் என்று நினைக்கத் தேவையில்லை. அப்படியானால் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று முடிவு செய்து விடலாமா?

அவசரப்படாதீர்கள்; மனித சமுதாயத்தின் உழைக்கும் மக்கள் பிரிவின் நலனை முன்னெடுத்து நிற்கும் மனித நேயர்கள் இக்கண்டுபிடிப்பினால் மட்டுமன்று; எக்கண்டுபிடிப்பினாலும் முழுமகிழ்ச்சியை அடைய முடியாத நிலையிலேயே உள்ளனர்.

மலைகளைக் குடைவதற்காக ஆல்ஃபிரட்நோபல் கண்டுபிடித்த டைனமைட், போர் விரும்பிகளிடம் வெடிகுண்டாக மாறியது. வானில் பயணம் செய்ய ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் போர் விரும்பிகளிடம் போர் விமானமாக மாறியது.

உயிரைப் படைக்கும் ஆற்றலுக்கான கண்டுபிடிப்பு மனித உறவில் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் யாவை? இனி, இயற்கை எரிபொருள்களைத் தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் இருந்த தடைகள் நீங்கிவிடும் என்பதால், பெருமளவு உணவு தானியங்கள் எரிபொருள் உற்பத்திக்காகத் திருப்பிவிடப்படும். பெருமளவு விளைநிலங்களில் உணவுக்குப் பயன்படாத- எரிபொருள் மட்டுமே தயாரிக்கக் கூடிய ஜெட்ரோபா போன்றவை பயிரிடப்படும். உணவு தானியங்கள் சாகுபடி செய்வதற்கான விளைநிலங்களின் பரப்பளவு குறையும்.

ஏற்கெனவே, உலகில் வளரும் நாடுகளில் பசியும் பட்டினியும் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலேயே பசி பட்டினி காரணமாகத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை மனச்சாட்சி உள்ள மனிதர்களின் உள்ளத்தைப் பிசைந்து கொண்டிருக் கின்றது. இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் நிலைமை இன்னும் மோசம்.

கடவுள் தத்துவத்தை வென்ற இப்போதைய உயிர் படைக்கும் கண்டுபிடிப்பு, வளரும் நாட்டு மக்களை எப்படியெல்லாம் வாட்டப்போகிறதோ, நினைக்கவே அச்சமாக உள்ளது.

1989 வரையில், பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத மொழிவழி நாடுகளின் ஒன்றியமாக சோவியத் நாடு இருந்தது. அங்கு சோசலிச அமைப்பு சிதைந்துபோன பின் பசி,பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. அடேக்கியாளும் முதலாளிகள் இல்லாத காலம்போய், முதலாளிகளைக் கண்டு அஞ்சி நடக்க வேண்டிய கட்டாயத்தில் உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முதலாளித்துவ உற்பத்திமுறையின் இன்னொரு தவிர்க்க முடியாத அம்சமான விலைவாசி உயர்வு அவர்களைப் படாத பாடு படுத்தி வருகிறது. புதியதாக உருவாகியுள்ள முதலாளி வர்க்கம், உழைக்கும் மக்களை அடக்கியாளும் அதிகார போதையைக் கண்டு இவ்வமைப்பு தொடர வேண்டுமென்று அரசு அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்துகிறது. கிட்டத்தட்ட இதே நிலைதான் சீனாவிலும் உள்ளது.

இவற்றிற்குக் காரணமென்ன? முதலாளித்துவ சமுதாயத்தில் மிகச்சிலராக உள்ள முதலாளிகளும் அவர்களுடைய அடிவருடிகளும்தான் சுகமாக இருக்க முடியும். மிகப் பலராக உள்ள உழைக்கும் மக்கள் சுதந்தரமின்றி அடிமை வாழ்க்கையையே வாழ நேரிடும். மேலும் பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை முதலாளித்துவத்தின் பிரிக்க முடியாத கூறுகளாகும்.

சோசலிசத்திற்கு வெளியில், மனித வர்க்கத்திற்கு, யுத்தத்திலிருந்தும் பசிப்பிணியிலிருந்தும் கோடானுகோடி மக்களை வாட்டிவதைக்கும் இல்லாமையிலிருந்தும் விடுதலையில்லை.

ஆகவே, இப்போதைய கண்டுபிடிப்பும், முதலாளிகள் தங்கள் இலாப வேட்டையை நோக்கிச் செல்லும் பயணத்திற்கு உதவப்போகிறதேயொழிய, பசி,பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் வாடும் மக்களுக்கு எந்த வகையிலும் உதவும் என்று சொல்வதற்கில்லை.

இப்போதைய உயிர் படைக்கும் கண்டுபிடிப்பு கடவுள் தத்துவத்தை வென்றதாகத் தோன்றலாம். ஆனால், சுரண்டல் தத்துவத்தை வெல்லுமா? சுரண்டல் தத்துவத்தை வெல்ல எந்தத் தனி மனிதனாலும் முடியாது. உழைக்கும் மக்களுக்குச் சுதந்தரம் வேண்டும் என்ற உணர்வு வரவேண்டும். அவர்கள் ஒன்று சேர வேண்டும். போராடி வெற்றிபெற வேண்டும்.  

- இராமியா

Pin It