‘இந்தியாவின் அடையாளம் இந்தி’ என்ற அமித்ஷா கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் தென்னகம் முழுவதும் எழுந்துள்ளது.

இந்தித் திணிப்பை எதிர்த்தும் அதைத் திணிப்பதன் நோக்கத்தை விளக்கியும் 1929ஆம் ஆண்டிலேயே 90 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் எழுதிய கட்டுரை.

சமீபத்தில் சென்னை மாகாணத்திற்கு சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களை ஹிந்திப் பிரசாரம் என்னும் பேரால் பார்ப்பனப் பிரசாரம் செய்ய அழைத்து வரப் போகின்றதாகத் தெரிய வருகின்றது. இந்த வழியில் பார்ப்பனப் பிரசாரம் செய்வதோடு மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாத மூடர்களிடமிருந்து சுமார் ஒரு லக்ஷம் ரூபாயாவது கொள்ளை அடிக்கக் கருதியிருக்கின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது.

கதரின் பேரால் அடித்த கொள்ளையாகிய ஐந்து லக்ஷம் ரூபாய் இன்னும் ஜீரணம் ஆகாமல் அப்படியே கல்லுப் போல் பார்ப்பார்கள் வயிற்றில் கிடக்க, சென்ற வருட காங்கிரசின் பேரால் கொள்ளை அடித்த சுமார் 20, 30 ஆயிரம் ரூபாயும் அப்படியே கிடக்க இப்போது இன்னும் ஒரு லக்ஷம் ரூபாய்க்கு திட்டம் போட்டு சில பார்ப்பனர் வெளிக் கிளம்பியிருப்பது பார்ப்பனர்களின் சாமர்த்தியமா அல்லது பார்ப்பனரல்லாதார்களின் முட்டாள்தனமா என்பது நமக்கு பூரணமாய் விளங்கவில்லையானாலும் ஒருவாறு இது பார்ப்பனரல்லாதார்களின் முட்டாள்தனமான இளிச்சவாய்த் தன்மை என்றே சொல்ல வேண்டும்.

பார்ப்பனர்கள் வந்து எதற்காகப் பணம் வேண்டுமென்று கேட்டாலும் நம்மவர்கள் கொடுக்கத் தயாராயிருக்கின்றார்கள். வருணாசிரம மகாநாடு நடத்த பார்ப்பனர்களுக்கு பணம் கொடுக்கும் பார்ப்பனரல்லாதவர்கள் இந்திக்கு பணம் கொடுப்பது ஓர் அதிசயமல்ல.

எனவே, பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இந்தியினுடையவும் இந்தி பிரசாரத்தினுடையவும் புரட்டையாவது பொது ஜனங்கள் அறியட்டுமென்றே இதை எழுகின்றோம். முதலாவது இந்தி பாஷை என்றால் என்ன? அதற்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் என்ன சம்மந்தம்? அதை படித்ததினால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? என்பது போன்றவைகளை முதலில் கவனிப்போம். பிறகு இந்தி பாஷை என்பதை அகில இந்திய பாஷையாகக் கருத வேண்டும் என்பது பற்றிப் பின்னால் யோசிப்போம்.

இந்தி பாஷை படித்த தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படும் பயன் என்ன? இதுவரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் பணத்திலிருந்தும் மற்றும் பொது மக்களிடமிருந்தும் இந்திக்காக செலவு செய்யப்பட்ட பணத்தில் எவ்வளவு பார்ப்பனரல்லாதார்கள் படித்தார்கள்? அதை எதற்கு உபயோகப்படுத்துகின்றார்கள்? என்பவைகளும் கவனிக்கத் தக்கக்கவையாகும்.

இந்தி பாஷை என்பது தமிழ் மக்களுக்கு விரோதமான ஆரிய பாஷையாகும். அதிலுள்ள வாசகங்கள் முழுவதும் ஆரியப் புராணங்களும் மூடப்பழக்க வழக்கங்களும் கொண்டதும் பார்ப்பனர்களின் உயர்வுக்கு ஏற்படுத்தப்பட்டதுமாகும். இந்த நாட்டில் இப்போது சமஸ்கிருதம் இருப்பது போலவும் அது உபயோகப்படுவது போலவும் இந்தி ஒரு சிறிதும் தேவையில்லாததாகும். அப்படி இருந்தாலும் அது ஏதாவது வடநாட்டுக்குப் போய் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்காவது உதவுமா? என்று பார்ப்போமானால் அப்படியும் சொல்லுவதற்கில்லாமல் இதுவரை இந்தி படித்தவர்களில் 100க்கு 95 பேர் பார்ப்பனர்களே படித்து அந்த படிப்பைக் கொண்டு வடநாட்டுக்கு உத்தியோகத்திற்கோ பிச்சைக்கோ சென்று அதன் மூலம் பார்ப்பனரல்லாதார்களுக்கு துரோகம் செய்யவே உதவப்பட்டு வருகின்றது. அதற்காக சம்பாதித்த பணங்கள் முழுவதும் பார்ப்பன ஆதிக்கத்திலேயே இருந்து வருகின்றது.

ஒரு சமயம் பார்ப்பனரல்லாதார்களும் இந்தி படித்திருப்பதாக வைத்துக் கொண்டாலும் இந்த நாட்டில் அவர்களுக்கு அது என்ன பயனைக் கொடுக்கக் கூடும். இது வரை ஹிந்தி படித்த பார்ப்பனரல்லாதாரில் எவராவது அதனால் இன்ன பிரயோஜனம் அடைந்தார்கள் என்று ஏதாவது ஒரு சின்ன உதாரணமாவது காட்ட முடியுமா?

இந்தியாவுக்கு ஒரு பொதுப் பாஷை வேண்டுமானாலும் அல்லது வியாபாரத்திற்கு ஒரு பொதுப் பாஷை வேண்டுமானாலும் ஆங்கில பாஷையை தெரிந்து எடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயல்லாமல் வேறு பாஷையைப் பற்றி யோசிப்பது முட்டாள்தனமோ அல்லது சூழ்ச்சியோதான் ஆகும். இங்கிலீஷ் உலக பாஷை, உலக வியாபாரப் பாஷை, இந்திய அரசாங்க பாஷை. அது மாத்திரமல்லாமல் மூடப்பழக்க வழக்கமும் பார்ப்பனீயமும் இல்லாமல் அவ்வளவும் அடிப்படையான கலைகளை வசமாக்கிய பாஷையாகும்.

இவைகள் மாத்திரமல்லாமல் இந்தி, உருது முதலிய பாஷைகளை தாய்ப் பாஷையாகக் கொண்ட துருக்கி பாஷைகூட இங்கிலீஷ் பாஷைக்கும் இங்கிலீஷ் எழுத்துக்குமே மதிப்பு கொடுத்து தனது தாய்ப் பாஷையை மாற்றிவிட்டது. அன்றியும் நமது இங்கிலீஷ் அரசாங்கம் உள்ளவரை - மேல் நாடுகளின் வியாபார சம்மந்தமோ கலை சம்மந்தமோ கல்வி சம்மந்தமோ உள்ள வரை - இங்கிலீஷ் இல்லாமல் முடியவே முடியாது. இப்படியெல்லாம் இருக்க, இதை சற்றும் கவனியாமல் இப்போது தமிழ்நாட்டில் இந்தி பாஷை பரப்ப வந்திருப்பதென்பது தற்காலம் தமிழ்நாட்டில் உள்ள உணர்ச்சியை ஒழிக்கச் செய்யும் சூழ்ச்சியேயாகும். ஆதலால் இதற்கு எந்த பார்ப்பனரல்லாதாராவது பணம் கொடுத்தால் அது பெரிய சமூகத் துரோகமேயாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 20.01.1929)