புதிய கல்விக் கொள்கை - இடஒதுக்கீடு குறித்தோ ஜாதி பிரச்சினைப் பற்றியோ பேசாமல் மூடுவதற்கான பரிந்துரைகளையே வலியுறுத்துகிறது என்றார் கல்வியாளர் கஜேந்திர பாபு. (சென்ற இதழ் தொடர்ச்சி)

70 ஆண்டுகாலம் கழித்து வரக்கூடிய தேசிய கல்விக் கொள்கையில் ஜாதியக் கொடுமையைப் பற்றி இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பேனா? மாட்டேனா? வாழ வேண்டிய வயதில், படித்த இளைஞர்களை ஜாதியின் பெயரால் கொலை செய்கிறார்களே அதைப் பற்றி எதாவது இந்த அறிக்கையில் இருக்கிறதா? அப்படி இருந்தால் வரவேற்கலாம்.

Multi Discipline என்று சொல்கிறார்களே! அப்படி என்றால் என்ன? Tradition, Ethics-யை கற்றுக் கொடுக்க சொல்கிறார்களே! எந்த Tradition-யை கற்றுக் கொடுப்பது? அச்சம், நாணம், மடமை இவையெல்லாம் யாருக்கு இருக்கும் குணம்? நாய்க்கு இருக்கும் குணமென்று பாரதியார் சொல்கிறார். பெண்ணைப் பார்த்து அச்சம் கொள்ளாதே என்று சொன்னார். அது தான் Tradition, புத்தகத்தில் வருமா அது?

national education policyமூன்று வருடம் BSC Chemistry, BSC Maths போன்ற மூன்று வருட பட்டப் படிப்பு படிக்கிறார்கள். மூன்று வருடம் BSC Chemistry பயின்ற ஒருவருக்கு Chemistry பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதை எங்கேயாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மூன்று வருடம் பயில்கின்ற மாணவன் Physics, Chemistry-யைப் பயில்கிறான். இதில் என்ன குறை உள்ளதென்று, நான்கு வருட படிப்பை கொண்டு வருகிறீர்கள்? மூன்று வருட படிப்பை நான்கு வருடமாக எந்த காரணத்திற்காக மாற்றுகிறீர்கள்? அதற்குப் பெயர் Liberal Bachelors Degree and Bachelor's of Liberal Arts. Multiple Exit and Multiple Entry, வெளியே போகலாம், உள்ளே வரலாம். எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம். அப்படியென்றால் ஒரு மாணவன் எப்போது BSC Physics முடிப்பது?

தற்போது இருக்கும் நடைமுறையை நிறுத்துவதற்கான அவசியம் என்ன? இந்த வரைவில், அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் வேலை செய்பவர்கள் கூட நான்கு வருடம் பயில வேண்டுமாம். இதை, பல்கலையில் உள்ள Education Department இல் படிக்க வேண்டுமாம். அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் வேலை செய்பவர்கள், ஒரு வருடமோ, இரண்டு வருடமோ அதற்குண்டான தகுதியுடன் இருக்கும் போது நான்கு வருட படிப்பு என்பது சரியாகுமா?

அது மட்டும் இல்லை நண்பர்களே மூன்று வகையான கல்லூரிகள் தான் இருக்க வேண்டுமாம். அதாவது உயர்கல்வி கல்லூரிகள் இல்லை உயர்கல்வி நிறுவனங்கள், Type 1,Type 2, Type 3. Type 1 – Research Institute என்பது 5000 முதல் 25000 பேர் வரை படிக்கக் கூடிய பெரிய வளாகம். Type 2- Teacher Research Institute, ஆசிரியர்களுக்கான ஆய்வுப் பல்கலைக் கழகம். Type 3 இதில் பல்கலைக் கழகம் பட்டம் அளிக்காது, ஒரு பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி தானே பட்டத்தை அளிக்குமாம். கல்லூரியாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கல்லூரியை பல்கலைக் கழகமாக தகுதியை வளர்த்துக் கொள் என்றால், அதற்கான நிதி வேண்டுமல்லவா? ஒரு தனியார் கல்லூரி பல வழிகளில் நிதி திரட்டி பல்கலைக் கழகமாக வளரலாம். ஆனால் அரசுக் கல்லூரிக்கு அது சாத்தியமாகுமா? அதுவும் பத்தாண்டுகளுக்குள் மாற வேண்டும் என்று காலக் கெடுவும் விதித்திருக்கிறார்கள். 2032க்குள் இந்த வகையான கல்லூரிகள் பட்டம் அளிக்கும் கல்லூரிகளாக மாற வேண்டும். ஒரு வேளை மாறவில்லை என்றால் எந்த பல்கலைக் கழகம் ஏற்பு கொடுத்ததோ அதனுடன் இணைந்து கொள்ள வேண்டும்.

கல்லூரி இணைப்பு என்பது கட்டிடங்களை இணைப்பதா? இல்லை கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களை பல்கலைக் கழகங்களுக்கு மாற்றப் போகிறார்கள். அதான் தான் 25000 பேர் வரை பயிலும் வளாகம். Type 1 University. அப்போது அந்த கல்லூரி வளாகம் வேறு பயன்பாட்டிற்கு விடப்படும். ஒரு கல்வி கொள்கை என்பது கல்லூரியை திறக்க வேண்டுமா? அல்லது மூட வேண்டுமா?

நம் காமராசர், பெரியார் எதை சிந்தித்தாரோ அதைச் செய்தார். கோவையில் உள்ள ஒரு தொழிலதிபர், 20% பணத்தை நான் தருகிறேன் மீதியை அரசின் சார்பில் தாருங்கள் மருத்துவக் கல்லூரியை நான் திறக்கிறேன் என்று ஒரு கோரிக்கை வைத்தார். அடுத்த நாளே அரசின் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். பள்ளிக்கூடம் திறக்க பணமில்லாத காலத்தில் காமராசரால் அரசு மருத்துவக் கல்லூரியை திறக்க முடிகிறது. அதற்குப் பெயர் தான் அரசு, அதன் பெயர் தான் மக்களாட்சி, ஜனநாயகம். இது போன்று, ஒரு கல்விக் கொள்கையில் எதிர்பார்ப்பேனா மாட்டேனா? திறப்பதற்கு பதில் மூடுவதற்கான அனைத்தையும் இந்த வரைவில் கூறியிருக்கிறார்கள்.

National Research Foundation என்று ஒன்றை கூறியிருக்கிறார்கள். இந்த அமைப்பு தான் இனி ஆய்வுகளுக்கான உதவித் தொகையை வழங்குமாம். இந்த கொள்கை என்ன கூறுகிறதென்றால் இதற்கு பல்வேறு அமைப்புகளை உருவாக்குவார்கள். இந்த அமைப்புகளை நியமிக்கிறது யார் என்றால். இராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் மற்றும் தேசியக் கல்வி ஆணையம் இதற்கு தலைவர் பிரதமர் ஆவார். இந்த குழுக்கள்தான் நாம் அனுப்பக்கூடிய ஆய்வுகளை நாட்டிற்கு அல்லது மாநிலத்திற்கு பயனுள்ளதா, இல்லையா என்பதை ஆராய்ந்து, பயனுள்ளது என்றால் உதவித் தொகையை கொடுப்பார்களாம். அது மட்டுமில்லாமல் நம் சக மாணவர்களிடத்திலும் ஆய்வு பற்றி கருத்து கேட்பார்களாம்.

சமூக மேம்பாட்டிற்கான ஆய்வு என்பது ஒரு மாணவன் விரும்பக்கூடியது தானே, ஆனால் இந்த வரைவில் மாணவர் விரும்பக் கூடியதை பார்க்காமல் பயனுள்ளதா இல்லையா என்பதை பார்ப்பது என்பது கல்வியியல் சுதந்திரத்திற்கு ஏற்புடையதா? இந்த வரைவில் இட ஒதுக்கீட்டைப் பற்றி எங்கேயும் கூறவில்லை. ‘தகுதி’ மட்டுமே உள்ளது.

பலவீனமாக இருக்கக் கூடிய அரசுப் பள்ளிகளை ஒன்றாக இணைத்து விடுவார்களாம். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பள்ளிக்கூடங்களை இணைத்துவிட வேண்டும் அல்லது பள்ளி வளாகத்தில் இணைக்க வேண்டுமாம். பள்ளி வளாகங்களில் அங்கன்வாடி, தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என அனைத்தும் இருக்குமாம். இந்த வளாகத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும் இந்த வசதிகள் 10 அல்லது 15 பள்ளிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி இந்த வரைவு மிகவும் கவலைப்படுகிறது. அதாவது பெண் குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கூடம் சென்று வர ஊதியம் கொடுத்து பாதுகாவலர்களை நியமிப்பதாக இந்த வரைவு கூறுகிறது. உள்ளூர் சமூகத்தில் வேலை இல்லாதவர்களை வர வைத்து சைக்கிள் ரிக்ஷாவில் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு வர வைத்து அவர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் இந்த வரைவில் உள்ளது.

அடுத்தது வீட்டில் உள்ள வயதானவர்கள் பெண் குழந்தைகளுடன் பள்ளிக்கூடம் வரை நடந்து வர வேண்டுமாம். இது ஒரு அரசின் கல்விக் கொள்கையாம். வீட்டிற்கு அருகில் பள்ளிக்கூடம் இருப்பது பாதுகாப்பா? இல்லை தொலைவில் பள்ளிக்கூடத்தை வைத்துவிட்டு பணம் கொடுத்து பாதுகாவலர்களை கூட அனுப்புவேன் என்பது பாதுகாப்பா? பொதுப் பள்ளிகளைப் பற்றி பேசாமல், தனியார் பள்ளிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், எண்ணிக்கை குறைவாக இருந்தால் அரசுப் பள்ளிகளை இணைத்து விட வேண்டும் என்பது எப்படி சரியான கொள்கை யாகும்?

3 வயது முதல் 8 வயது வரை வாழ்வாதாரத்திற்கான வாழ்க்கைத் திறன்களை வளர்க்கும் கல்வியை தருவார்களாம். தோட்டக் கலை, மண் பொம்மைகள் செய்வது, தச்சு வேலை, மின்சார வேலை போன்றவைகளை கூறிவிட்டு அதற்கு அறிக்கைக் கொடுக்கும் விளக்கம்; மூன்று வயதிலேயே திருஞான சம்பந்தர் ‘தேவாரம்’ பாடியிருக்கிறார், நான்கு வயதில் 1330 குறளை ஒப்பிக்கக் கூடிய குழந்தை இருக்கிறது, எனவே உங்கள் குழந்தைகளின். திறனை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று கூறியிருக்கிறது வரைவு. 3 முதல் 14 வயதிற்குள் தொழிற் கல்வியை கற்றுக் கொடுக்க சொல்கிறது இந்த வரைவு.

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒன்றாக இணைக்க வேண்டுமாம். ஏனென்றால் தற்போது மாணவர்கள் மன இறுக்கத்தில் படிக்கிறார்களாம். அதனால் 8 ‘செமஸ்டர்’ தேர்வு நடத்துவார்களாம். எப்போது மாணவர் விரும்புகிறாரோ அப்போது எழுதலாமாம். 8 ‘செமஸ்டரி’ல் ஒரு ‘செமஸ்டர்’க்கு 3 பாடங்கள் அப்போ 8 ‘செமஸ்டர்’ க்கு 24 அது மட்டுமில்லாமல் 14 பாடங்கள். மொத்தம் 40 இல் 24 இல் மட்டும் தேர்வானால் போதும். மேலும், இணையம் வழியாக தேர்வு நடத்தப்படும் போது மாதம் மாதம் கூட எழுதலாமாம். அதனால் எப்போது ஒரு மாணவர் தயாராகிறாரோ அப்போது எழுதிக் கொள்ளலாம். அப்போ நமது சமூக அமைப்பின்படி 12 ம் வகுப்பை நமது மாணவர்கள் இந்த முறையினால் தாண்ட முடியுமா? அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற முடியுமா? அப்போ 12 ம் வகுப்பு முடித்தால் தானே கல்லூரி இல்லையென்றால் தொழிற்கல்வி. இப்போது புரிகிறதா தொழிற் கல்வி எதற்கென்று?

தாய் மொழி உயிர் காக்கும் மருந்தைப்போல கட்டாயமாக படிக்க வேண்டும். ஆங்கிலமென்பது தேவைக்காக படிக்க வேண்டும். மூன்றாவது மொழி எனக்கு எப்போது தேவையோ அப்போது படித்துக் கொள்கிறேன் இப்போது அதற்கு அவசியம் என்ன? மூன்றாவது மொழி படிக்கும் நேரத்தில் நான் கணிதம் படிக்கக் கூடாதா? அறிவியல் படிக்கக் கூடாதா? விளையாடக் கூடாதா? என் நேரத்தை திருடுவதற்கு நீங்கள் யார்? எந்த மொழி மூன்றாவது மொழி என்று கூறவில்லையென்றாலும் மும்மொழி என்பது கட்டாயம் தானே! சமமான கற்றல் வாய்ப்பைக் கேட்டால் மும்மொழியை ஏன் திணிக்கிறீர்கள்?

அதன் பின் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும் National Testing Agency Aptitude Test நடத்துவார்கள். அதாவது 12ஆம் வகுப்பில் நீங்கள் தேர்ச்சியே பெற்றிருந்தாலும் உயர்கல்விக்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை Aptitude Test வைத்து தீர்மானிப்பார்கள். அதிலும் இந்த தேர்விற்கு எப்போது வேண்டுமானாலும் படித்து எழுதிக் கொள்ளலாம். 12 ஆம் வகுப்பு முடிக்கும் போதே மாணவர்களுக்கு வயது 18. இந்தத் தேர்விற்கு படித்து எழுதி தேர்வாகி உயர்கல்வியில் சேரும் போது என்ன வயதாகி இருக்கும்? குறிப்பாக பெண்களுக்கு. அவர்களால் அதற்கு மேல் கல்வியை தொடர முடியுமா? அப்போ இந்த வரைவு எதற்கான தடைகளை கொண்டுள்ளது? உயர் கல்விக்கான தடைகளை வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தனை தடைகளையும் தாண்டி வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். அதனால் தான் கல்லூரிகளையும் இணைக்கச் சொல்லி இந்த வரைவு பரிந்துரைக்கிறது. அது மட்டுமில்லாமல், பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் தானே..!? அதனால் தான் International Students-க்கும் அனுமதி உண்டாம். அவர்களுக்கு உதவித் தொகையும் உண்டாம்.

(தொடரும்)

- பிரின்ஸ் கஜேந்திர பாபு