புதுடில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சில அதிரடி அறிவிப்புகளை டெல்லி விஜயபவன் அரங்கில் வெளியிட்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தனது ‘வேத நூலாக’ மதித்துப் பின்பற்றி வரும் குருகோல்வாக்கரின் பஞ்ச் ஆப் தாட்ஸ் (Bunch of Thoughts) கருத்துகளை இப்போது அப்படியே நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; அது ஒரு காலத்தில் கோல்வாக்கர் வெளியிட்ட கருத்து; அவரது உரைகளின் தொகுப்பே அந்த நூல் என்று கூறியிருக்கிறார்.

சட்டப்படி வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு உரிமைகளை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் பசுவைப் பாதுகாப்பது எங்கள் கொள்கை என்றாலும் அதற்காக நடத்தப்படும் தாக்குதல்களை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். ‘இராமர் கோயிலை’க் கட்ட விரும்புவதாகவும், அது சட்டத்தின் அனுமதியோடுதான் செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கருதவில்லை என்றும் பேசியிருக்கிறார்.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.வை அதிகாரத்தில் அமர்த்துவதற்காகவே இந்த ‘வேடங்களை’ ஆர்.எஸ்.எஸ். போடத் தொடங்கியிருக்கிறது.

மோகன் பகவத்தின் இந்த கருத்துகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு மட்டும் தானா அல்லது அதன் ‘கலவர’ அமைப்புகளாக வன்முறைகளைக் கையில் எடுத்து நிற்கும் ‘இராமசேனை’, ‘இந்து சேனை’, ‘இந்து சபா’ போன்ற அமைப்புகளுக்கும் பொருந்துமா என்பதை மோகன் பகவத் விளக்கவில்லை.

‘ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னோடி அமைப்பான ‘இந்து மகா சபா’ தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டையே தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும், வன்கொமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் செய்துள்ள திருத்தங்களை மாற்றக் கூடாது’ என்றும் கடந்த வாரம் வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.

‘இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று ஓராண்டுக்கு முன் ‘திருவாய் மலர்ந்தது’ - இதே மோகன் பகவத் தான் என்பதையும் மறந்து விட முடியாது. ம.பி. மாநிலத்தில் பா.ஜ.க.வின் பார்ப்பன உயர்ஜாதியினர் இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூக பா.ஜ.க.வினர் ஆதரிக்கிறார்கள். தேர்தலை சந்திக்கவிருக்கும் அம்மாநிலம் இப்போது இந்தப் பிரச்சினையில் மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது.

பகவத்தின் இந்த பேச்சுக் குறித்து, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில் (23, செப்.2018) சகாரிக்கா கோஷ் என்ற பெண் பத்திரிகையாளர் எழுதியுள்ள கட்டுரையில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். சோவியத் இரஷ்யாவில் ‘கோர்பச்சேவ்’ கொண்டு வந்த சீர்திருத்தத்தோடு பகவத் பேச்சை ஒப்பிட்டு, பகவத்தின் இந்த ‘கோர்பச்சேவ் பிரகடனம்’ நேர்மையாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது அக்கட்டுரை.

“பகவத்தின் இந்த அறிவிப்புகள், தேர்தலில் ஓட்டுகளைப் பெறுவதற்காகவும் விளம்பரத்துக் காகவும் வடிவமைக்கப்பட்டவை. இதில் உண்மை இருக்கும் என்று நம்ப முடியாது” என்கிறார் அந்தக் கட்டுரையாளர். இந்து தீவிரவாதிகள், நாடு முழுதும் கட்டவிழ்த்துவிட்டு வரும் வன்முறைகளோடு தங்களுக்கு தொடர்பில்லை என்று காட்டுவதற்கான ஒரு நாடகம். உண்மையாக இந்துராஷ்டிரம் என்ற கொள்கையை ஆர்.எஸ்.எஸ். கை கழுவி, இந்திய அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மை கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டது என்று நம்ப முடியாது என்றும் அக்கட்டுரை கூறுகிறது.

குஜராத், உ.பி. மாநில தேர்தல்களில் பா.ஜ.க., ஒரு முஸ்லிமைக்கூட வேட்பாளராக நிறுத்தவில்லை. இப்போது வரப்போகும் தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வை வலியுறுத்துமா?

ஆர்.எஸ்.எஸ். ‘ஞான குரு’ சவர்க்கார், இந்த நாடு ‘புண்ணிய பூமி’, ‘பித்ருபூமி’, இதில் இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்றார். அந்தக் கொள்கையை கை கழுவி விட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ்.  அறிவிக்குமா?

ஆர்.எஸ்.எஸ்.சின் துணைப் பிரிவுகள், ‘தாய் மதம்’ திரும்புதல் என்ற பெயரில் பிற மதத்தினரை இந்துவாக மாற்றுவதற்கு நடத்தும் இயக்கங்களையும் இந்துக்கள் பிற மதத்தினரை திருமணம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என்ற ‘லவ்ஜிகாத்’ வெறுப்பு இயக்கத்தையும் கைவிடுவார்களா?

இராமன் கோயில் கட்டுவது நம்பிக்கை சார்ந்தது. இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்ற கருத்தை இப்போது மாற்றிக் கொண்டு விட்டார்களா?

கடந்த காலங்களில் இந்துத்துவ அமைப்புகள் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளை நியாயப்படுத்த முடியாத நெருக்கடியில் தவிக்கிறது பா.ஜ.க.

தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவாளர்களை மதவெறி எதிர்ப்பு சிந்தனையாளர்களை இந்து பயங்கரவாத அமைப்பு துப்பாக்கியால் சுட்டுக் கொண்டபோது, ஒரு கண்டனம்கூட தெரிவிக்க முன் வராத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இந்த பயங்கரவாதத்தையும் வன்முறையும் விரும்பாத இந்து உணர்வு கொண்ட மிதவாதிகளின் ஓட்டுக்களைக் குறி வைத்தே பகவத் இப்படி நாடகமாடுவதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் கட்டுரையாளர் கூறுகிறார்.

‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்று ஒரு பழமொழி உண்டு.சங்பரிவார் இப்போது புதிய முகமூடி தரித்துக் கொண்டு பேசக் கிளம்பி யிருக்கிறது. இந்த கபட வேடதாரிகளின் நாடகத்தில் மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்.