தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.

விடுதலை இராசேந்திரன் உரையில் குறிப்பிட்டதாவது: (சென்ற இதழ் தொடர்ச்சி)

‘முன்னேறிய ஜாதியினருக்கு இடஒதுக்கீடுகள் வேண்டாமா?’ என்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கேட்ட போது, கலைஞர் இப்படி பதில் கூறினார். ‘அழுக்குத் துணிகளைத்தான் சலவைக்குப் போட வேண்டும். ஏற்கனவே சலவை செய்து அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிகளை சலவைக்குப் போட வேண்டிய தேவையில்லை” என்றார்.

1971இல் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், பெரியார் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ‘சூத்திரர்கள்’ நுழைவதற்கு இருந்த தடையை எதிர்த்து, கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். போராட்ட வீரர்களின் பட்டியல் ‘விடுதலை’ ஏட்டில் வெளியிடப்பட்டு வந்தன. பெரியாரை சந்திக்க வந்த கலைஞர், ‘என்னுடைய ஆட்சி நடக்கும்போது, நீங்கள் போராடலாமா?’ என்று கேட்டார். “நான் எனது கடமையைச் செய்கிறேன்; நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; எங்களை தாராளமாக கைது செய்யுங்கள்” என்றார் பெரியார். கலைஞர் கலங்கி அழுதார். ‘என்னுடைய ஆட்சியில் உங்களைக் கைது செய்வதா?’ என்று கேட்டார். அதற்குப் பிறகுதான், “அனைவரும் கர்ப்பக்கிரகத்தில் நுழையும் போராட்டம் என்றால், பிரச்சினையைக் கிளப்புவார்கள்; அனைத்து ஜாதியினருக்கும் உரிய அர்ச்சகர் பயிற்சிஅளித்து அவர்களை அர்ச்சக ராக்கும் வகையில் இந்து அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தம் கெண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றலாம்” என்ற யோசனையை கலைஞர் கூறினார். ‘எப்படியோ எனக்கு சூத்திர இழிவு ஒழிய வேண்டும்’ என்றார் பெரியார்.

சட்டமன்றத்தில் கலைஞரிடம் காங்கிரஸ் கட்சியினர் “கர்ப்பகிரகத்துக்குப் பாதுகாப்பு வேண்டாம் என்று இந்த ஆட்சி முடிவுக்கு வந்து விட்டதா?” என்று கேட்டார்கள். கலைஞர் அதற்கு இவ்வாறு பதில் அளித்தார். “கர்ப்பகிரகத்துக்கு பாதுகாப்பு வேண்டும்தான். ஆனால் அது வர்ணாஸ்ரமப் பாதுகாப்பாக இருக்கக் கூடாது” என்று பதிலளித்தார். ‘கோயிலையே வேண்டாம் என்று கூறுகிற பெரியார், கோயில் அர்ச்சகர் பற்றி ஏன் கவலைப்படுகிறார்’ என்று கேட்டபோது, பெரியார் அவருக்கே உரிய மொழியில் பதில் கூறினார். “நான் பக்தனாக இருக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பக்கிரக நுழைவு உரிமையைக் கேட்கவில்லை; சூத்திரனாக இருக்கக் கூடாது என்பதற்காகக் கேட்கிறேன்” என்றார் பெரியார்.

‘பராசக்தி’ படத்திலேயே கலைஞர் மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷாக்களை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துப்பட வசனம் எழுதினார். ஆட்சிக்கு வந்தவுடன் மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாக்களை ஒழித்தார். இடதுசாரி ஆட்சி நடத்திய மேற்கு வங்கத்திலேகூட மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்ஷாக்கள் ஒழிக்கப்படாதபோது கலைஞர் இந்த புரட்சியை செய்தார். இது ஒரு மனிதனின் சுயமரியாதையைக் காப்பாற்றும் திட்டம். பிச்சைக்காரர்களை ஒழித்து, அவர்களுக்கு மறு வாழ்வு இல்லங்களை அமைத்தார். இதுவும் சுயமரியாதைத் திட்டம்தான்.

1971ஆம் ஆண்டு நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு புதிய குடியிருப்புகளை அமைக்கும் ‘தமிழ்நாடு குடிசைப் பகுதிகள்’ (முன்னேற்றம் மற்றும் அகற்றும்) சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தை குடிசைக்குப் பதிலாக நல்ல குடியிருப்புகள் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் கூடாது. குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலா னோர் பட்டியல் இன ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள், கிராமங்களில் இப்போதும் இவர்கள் தனிக் குடியிருப்புகளில் ‘சேரி’களில்தான் வாழ்கிறார்கள். ஆனால் இந்த குடிசை மாற்று வாரியத் திட்டம், ஒடுக்கப்பட்ட மக்களை நகர்ப்புறங்களில் மேல்தட்டு மேல் ஜாதி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் கொண்டு வந்ததோடு அவர்களை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ வைத்தது என்ற சமூகப் பார்வையோடு இத்திட்டத்தைப் பார்த்தால் இதில் அடங்கியுள்ள சமூகப் புரட்சியை உணர முடியும்.

தென் மாவட்டங்களில் சாதி வெறியர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஜாதி வெறித் தாக்கு தலையும் கலவரங்களையும் நடத்திய காலத்தில்தான் கலைஞர் சமத்துவபுரங்களை உருவாக்கி, அதற்குப் பெரியார் பெயர் சூட்டி அந்த சமத்துவபுரத்தில் தலித் பிரிவினர் உள்ளிட்ட அனைத்து ஜாதியினரையும் குடியமர்த்தி அவர்களுக்கான பொது வாழ்க்கையை உருவாக்கினார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கற்பனையில்கூட இன்றைக்கும் இத்திட்டங்களை நினைத்துப் பார்க்க முடியாது.

கலைஞரின் நிழலாக இறுதி வரை இருந்த அவரது உதவியாளர் சண்முகநாதன் அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் : “சமத்துவபுரம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம், உள்ளாட்சிப் பணிகளிலும் அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, (இடஒதுக்கீட்டில்) உள் ஒதுக்கீடு இதையெல்லாம் கொண்டு வந்த தருணங்களில் அவ்வளவு பெருமிதமாக இருந்தார். அந்த சந்தோஷத்தை நம்மளையும் தொத்திக்க வைப்பார்” என்று குறிப்பிடுகிறார்.

காங்கிரசிலிருந்து விலகி வி.பி.சிங் ‘ஜன்மோர்ச்சா’ என்ற அமைப்பைத் தொடங்கியபோது, இட ஒதுக்கீடு குறித்த அவரது பார்வை, அது பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. அதுவே ஜன்மோர்ச்சாவின் கொள்கைத் திட்டமாகவும் இருந்தது. பிறகு அந்தப் பார்வையில் வி.பி.சிங்கிடம் தலை கீழ் மாற்றம் உருவானது. கலைஞரோடு வி.பி.சிங்கிற்கு அரசியல் உறவு உருவான பிறகுதான் அவரது பார்வையில் மாற்றம் வந்தது. 1989இல் ‘தேசிய முன்னணி’ ஆட்சியின் பிரதமராக வந்து வி.பி.சிங் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலுக்கு கலைஞர் பின்னாலிருந்து செயல்பட்டத்தைக் குறிப்பிட வேண்டும். பார்ப்பன மதவாத சக்திகள், வி.பி.சிங் ஆட்சியை வீழ்த்தியவுடன், அன்றைக்கு தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர், வி.பி.சிங்கை தமிழகத்திற்கு அழைத்து வந்து தமிழகம் முழுதும் வி.பி.சிங்குக்கு ஆதரவாக இருந்த மக்கள் எழுச்சியைக் காட்டியபோது, வி.பி.சிங் மனம் குளிர்ந்தார். “இநதியாவின் தலைநகரம் டெல்லியாக இருக்கலாம்; ஆனால் சமூக நீதியின் தலைநகரம் சென்னை; இது பெரியாரின் நாடு” என்று தான் ஒவ்வொரு கூட்டத்திலும் வி.பி.சிங் தனது உரையைத் தொடங்குவார்.

ஒவ்வொரு ஊரிலும் விடிய விடிய வி.பி.சிங், கலைஞர் வருகைக்காக மக்கள் பல்லாயிரக்கணக்கில் காத்திருந்து, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத் தினார்கள். அப்போது அந்தப் பயணம் முழுதும் ‘விடுதலை’யின் சார்பில் நான் உடன் சென்று வி.பி.சிங் உரையை ‘விடுதலை’யில் முழுமையாக பதிவு செய்தேன். ‘காவிரி நடுவர் மன்றம்’ அப்போதுதான் அமைக்கப்பட்டது. அதுவும் வி.பி.சிங்கின் ஜனதா தளம் கட்சியின் ஆட்சி கருநாடக மாநிலத்தில் நடந்தபோது சொந்தக் கட்சி ஆட்சியின் எதிர்ப்பையும் மீறி கலைஞர் வேண்டுகோளை ஏற்று நடுவர் மன்றத்தை அமைத்தார் வி.பி.சிங். பிரதமரிலேயே கலைஞருக்கு நெருக்கமாக இருந்தது யார் என்ற கேள்வியை சண்முகநாதனிடம் கேட்ட தற்கு, “கலைஞர் இதயத்துக்கு நெருக்கமாக இருந்தவர் வி.பி.சிங். ஒரு இராஜ பரம்பரையில் பிறந்திருந்தும், சாதி ஒழிப்பிலேயும், சமூக நீதியிலேயும் அவர் காட்டின அக்கறைதான் இதுக்கான முக்கியக் காரணம். இரண்டு பேரும் அவ்வளவு நெருக்கமாக இருந்தாங்க” என்று கூறுகிறார்.

கலைஞரின் செயலாளராக இருந்த இராஜமாணிக்கம் அளித்த பேட்டியில், “பிற எல்லா பிரதமர்களையும் தாண்டி (கலைஞரிடம்) உணர்வு ரீதியான உறவில் இருந்தவர் வி.பி.சிங். அவர் ஒரு இராஜ பரம்பரையைச் சார்ந்தவராக இருந்தாலும் சமூகநீதிக் கொள்கையில், இடஒதுக்கீடு விவகாரத்தில் அவர் காட்டிய பிடிமானம், இருவர் மத்தியிலும் உணர்வுபூர்வமாக ஒரு நட்பை வளர்த்திருக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 110 ஆண்டுகால வரலாற்றில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர்கூட நீதிபதியாக வரவில்லை என்று பெரியார் ஒரு கூட்டத்தில் குரல் எழுப்பினார். கலைஞர்தான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த திரு. வரதராஜன் அவர்களை முதல் நீதிபதியாக்கினார். பிறகு அவர் உச்சநீதிமன்றம் வரைப் போகும் வாய்ப்பு கிடைத்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தமிழ் இந்து’ வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற கலைஞர் மலரில் இந்த வரலாற்றுச் சாதனையை நினைவுக் கூர்ந்ததோடு 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு தேர்வாணையம் ‘குரூப் 1 சர்வீஸ்’ தேர்வில் அதுவரை அந்தப் பதவிக்கு வந்திடாத சலவைத் தொழிலாளர், சவரத் தொழிலாளர், குறவர், கல்லுடைக்கும் சமூகத்திலிருந்து தேடித் தேடி அப்பதவிகள் வழங்கப்பட்ட சமூக நீதிப் புரட்சியையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். ‘விடுதலை’ நாளேட்டில் அப்போது இது தலைப்பு செய்தியானது.

அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் நிகழ்த்திய முப்பெரும் சாதனைகளில் ஒன்று - சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட வடிவம் தந்தது என்றால் அதன் நீட்சியாகக் கலைஞர் கொண்டு வந்த சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை சட்டம். இரண்டு சட்டங்களையும் மேலோட்டமான கண்ணோட் டத்தில் பார்க்காமல் ஆழ்ந்து நோக்கினால் அதில் அடங்கியுள்ள சமூகப் புரட்சி புரியும். 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டப்படி, ஒரு திருமணம் சட்டப்படி செல்லத் தக்ககது என்றால், அந்தத் திருமணத்தில் இந்து மதச் சடங்குகள் கட்டாயம் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். மணமகன், மணமகளுக்கு தாலி கட்ட வேண்டும் என்பதும் அதில் ஒன்று. சடங்குகள் முறையாகப் பின்பற்றவில்லை. மண மக்களின் ‘அக்னி வலம்’ குறிப்பிட்ட எண்ணிக்கையில் நடத்தவில்லை என்ற காரணங்களால் பல வழக்குகளில் திருமணத்தை செல்லாது என்று அறிவித்ததும் உண்டு. 1968இல் அண்ணா கொண்டு வந்த சுயமரியாதை திருமணச் சட்டம், 1955 இந்து திருமணச் சட்டங்களிலே கொண்டு வந்த திருத்தம், சமயச் சடங்குகளிலிருந்து முழுமையாக திருமணத்தை விடுவித்தது என்பதாகும். தாலி கட்டாவிட்டாலும் திருமணம் செல்லத் தக்கது என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா சட்டமாகும் முன்பு பெரியார் பார்வைக்கு அண்ணா மசோதாவை அனுப்பி வைத்தார். அதில் பெரியார் சுட்டிக்காட்டிய கருத்து, தாலியைக் கட்டாயமாக்க வேண்டாம் என்பதாகும். அதன்படியே சட்டம் திருத்தப்பட்டது. இன்று வரை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இந்து சடங்குகளிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட ஒரு சட்டம் கிடையாது. இந்தியாவின் சட்ட அமைச்சராக அம்பேத்கர் இருந்தபோது அவர் கொண்டு வந்த ‘இந்து சீர்திருத்த மசோதாவை’ ஆர்.எஸ்.எஸ். கும்பலும், வைதீகப் பார்ப்பனர்களும் இராஜேந்திர பிரசாத் போன்ற பழமையில் ஊறிய குடியரசுத் தலைவர்களும் எதிர்த்து சட்டத்தை நிறைவேற்றாமல் தடுத்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் உருவ பொம்மையையும் டெல்லி முழுதும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எரித்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் வேத வைதிகச் சடங்கு முறைகளை நீக்கி வைக்கும் திருமணத்துக்கு எதிர்ப்பே இல்லாமல் சட்ட வடிவம் தரப்பட்டது.

அதேபோல கலைஞர் 1989இல் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட சட்டம், 1956 இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம். இந்தச் சட்டம் பெற்றோரின் சுயசம்பாத்தியத்தில் பெண்களுக்கான சொத்துரிமையில் சமபங்கு அளிக்கப்பட்டிருந்தாலும், கூட்டுக் குடும்பச் சொத்துப் பிரச்சினைகளில் பெண்களுக்கான வாரிசு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. 1989இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது கூட்டுக் குடும்ப வழியாக வரும் சொத்திலும் பெண்களுக்கு பங்கு உண்டு என்று இந்து வாரிசு உரிமைச் சட்டத்தைத் திருத்தினார். தமிழ்நாட்டில் கலைஞர் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு, 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நடுவண் அரசு 2005இல் நடுவண் அரசே இந்து வாரிசு உரிமைச் சட்டத்தைத் திருத்தி இந்த பாகுபாட்டை நீக்க முன் வந்தது.                                 

(தொடரும்)