உத்தரபிரதேசத்தில் காவி சாமியார் ஆதித்ய நாத் என்பவரை முதல்வராகக் கொண்ட ஆட்சி நடக்கிறது. அங்கிருந்து வரும் செய்திகள், காட்டுமிராண்டி காலத்தில் வாழ்கிறோமா என்ற சிந்தனைக்கே அழைத்துச் செல்கிறது.

சட்டத்தைக் குப்பைக் கூடையில் வீசிவிட்டு, ஜாதகத்தை சட்டமாகக் கொண்டு அங்கே ஆட்சி நடத்துகிறார்கள். “ஜாதகப்படி நீ சிறை செல்ல வேண்டியிருக்கும். அதிலிருந்து தப்ப வேண்டுமானால் குற்றம் செய்யாத போதே ஒரு நாள் சிறைக் காவலில் இருந்து விட்டால் குற்றம் செய்து விட்டு சிறைக்கு செல்வதிலிருந்து தப்பிக்க முடியும். இதுதான் பரிகாரம்” என்று சோதிடர்கள் தன்னை நாடி வரும் தொழிலதிபர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் கூறுகிறார்களாம்.

அதை நம்பி தங்களை ஒரு நாள் சிறைக் காவலில் வைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பலரும் மனுப் போடுகிறார்களாம். மாவட்ட ஆட்சித் தலைவரும் அவர்கள் ‘ஜாதகத்தை’ சோதிடர்களைக் கொண்டு பரிசீலித்து ஜாதகப்படி சரியாக இருந்தால் ஒரு நாள் ‘லாக்-அப்’ பில் இருக்க அனுமதிக்கிறார்களாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கவுஷல் ராஜ் சர்மா என்பவர் கூறும்போது, “இது போல் ஆண்டுதோறும் 24க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகின்றன. அவர்களுடைய ஜாதகத்தை நன்கு பரிசீலித்த பிறகு அனுமதி வழங்குகிறோம்” என்று கூறியுள்ளார்.

“எந்தக் குற்றமும் செய்யாத ஒருவரை சிறைக் காவலில் (லாக்-அப்பில்) அடைக்க சட்டத்தில் இடமில்லை. என்றாலும் முழுக்க முழுக்க மத அடிப்படையில் இதை செயல்படுத்துகிறோம்” என்று மாவட்ட அதிகாரிகள் கூறுகிறார்கள்.

எதிர்காலத்தில் குற்றங்கள் செய்து நீதிமன்றம் தண்டனை விதித்தால் ஏற்கனவே ‘லாக்-அப்’பில் இருந்து பரிகாரம் தேடி விட்டதால் அவர்களைக் கைது செய்யத் தேவை இல்லை என்று ‘ஜாதகப்படி’ உ.பி. அரசு நீதி மன்றத்தில் அறிவிக்குமா? இன்னொரு செய்தியும் இருக்கிறது.

உ.பி.யில் “இராமபக்த அனுமான்களின்’ (குரங்குகள்) சேட்டைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக பொது மக்கள் குரங்குகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி வருகிறார்கள். இது குறித்து தன்னிடம் மனு அளிக்க வந்தவர்களிடம் முதலமைச்சர் ஒரு ஆலோசனை வழங்கியுள்ளார்.

“ஹனுமானை நாள் தவறாமல் வணங்கி, அவர் மீதான ‘பஜ்ரங்பலி’ மந்திரத்தை ஓதினால், என்றுமே குரங்குகள் தொல்லை தராது; போய் வாருங்கள்” என்று அறிவுரை கூறினாராம்.

மதுரா, பிருந்தாவன் பகுதி களில் குரங்குகள் பக்தர்களையும், மக்களையும் மிரட்டி உணவுகளைப் பிடுங்குகின்றன. குறிப்பாக மூக்குக் கண்ணாடிகளைப் பிடுங்கி வைத்துக் கொண்டு உணவு கேட்பது வழக்கமாம். உ.பி. முதல்வரோ ‘மந்திரம்’ ஓதச் சொல்கிறார்; குரங்குகள் அதைக் கேட்குமா?