தூக்குத் தண்டனைக்குள்ளாகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு முழு ஆயுள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையானவர் தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரங்கன். பெரியார் இலட்சியங்களில் ஊன்றி நின்று, திராவிடர் விவசாய சங்கத்தை அப்பகுதியில் வழி நடத்தி, பிறகு மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, தன் மீது திணிக்கப்பட்ட ‘முக்கொலை’ பொய் வழக்கில் அரசு அதிகாரத்தால் தண்டிக்கப்பட்டு விடுதலையாகி மீண்டும் திராவிடர்கழகத்தில் இணைந்து விவசாய சங்கத்தை வழி நடத்தி, இறுதியில் தமிழர் தன்மானப் பேரவையைத் தொடங்கி, 84ஆம் அகவையில் முடிவெய்தினார், தோழர் ஏ.ஜி.கே.! தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர்கள் இத்தகைய களப்போராளிகள். ஏ.ஜி.கே.வை சமூகப் போராளி யாக்கிய இளம்பருவ அனுபவங்களை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

பசு. கவுதமன், சாக்கோட்டை இளங்கோவன் முயற்சி - உழைப்பால் வெளி வந்திருக்கும் ‘ஏ.ஜி. கஸ்தூரிரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ நூலிலிருந்து சில பகுதிகள்:

நாகையை அடுத்த அந்தணப்பேட்டை வயல்களால் சூழப்பட்ட இருண்ட கிராமம். சேறு, சகதியாகிக் காயக்கூடிய மண்பாதை. சில ஒற்றையடிப் பாதைகள். இருட்டு ஆரம்பித்தால் ஊரே அரவமின்றி அடங்கிவிடும். ஊர் மக்கள் அனைவரும் ஏழை எளியவர்கள்; உழைப்பாளிகள். ஊருக்கு மேற்கே சேரி; நாலாபுறமும் வயல்களால் சூழப்பட்ட குறுந் திடல். காய்ந்தால் கட்டியும் முட்டியும் - நனைந்தால் வழுக்கலும், சறுக்கலுமான வரப்பு வழிப் பாதை.

சாதாரண வீடுகளில் அகல் விளக்கு, பலரிடம் சிம்னி விளக்கு, கொஞ்சம் வசதியானவர்களிடம் குத்து விளக்கு, கூடுதல் வசதியுடையவர்களிடம் அரிக்கன் விளக்கு, பண்ணை வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்கு, சேரி வீடுகளில் இருட்டு வாசம்தான். உண்ணாமுலை சமேத அண்ணாமலை நாதர் ஆலயம்; அவதியிலா வாழ்வு பெற்ற அக்கிரகாரம்; கர்ப்பகிரக உள்வெளிப் பிரகாரங்களுக்கு அப்பால் நான்கு வீதிகள்; அதன் கிளைகளாய்த் தெருக்கள்; பெரிய கோவில் குளம்; பல சிறிய குட்டைகள்; எல்லாமே குடிசைகள்; ஒரு சில ஓட்டு வீடுகள்; பண்ணையார் வீடு என்றால் பல கட்டு வீடும், பரந்த கொல்லையுமாக இருக்கும். இன்றைய நிலையோடு கொஞ்சமும் ஒத்திட்டுப் பார்க்க முடியாது; அன்றைய அந்தணப்பேட்டை. இதுதான் ஏறத்தாழ நாகை தாலுக்கா (வட்டம்) முழுவதுமான கிராமங்களின் நிலைமை; இதில் கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம்.

இரவு நேரத்தில் நடமாட்டம் இருக்காது. தப்பித் தவறிப் பெண்கள் இருட்டு நேரத்தில் வீட்டுக்கு வெளியே தலை நீட்டினால் தாலி பறிபோகும். ஊருக்கு வெளியே போய் உழைத்து விட்டுத் திரும்புவோரும், இரவு நேரத்தில் குளம், குட்டைக்குச் சென்று வருகின்ற முதியவராக இருந்தாலும் இளையோராயினும் அவர்கள் ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்வார்கள். அது என்னவென்றால் தொம்ப வாய்க்கால் முனி வழி மறைத்தது; ஆத்தோர அய்யனார் அடித்துவிட்டது; பனைமரத்து முனி பயமுறுத்தி விட்டது; அசகண்ட வீரன் அரட்டி விட்டது; முதலியார் கட்டை மோகினி சலங்கை கட்டி ஆட்டம் போட்டது; சுடுகாட்டில் இருந்து கொள்ளிவாய்ப் பிசாசு கூச்சலிட்டது என்பதுதான் அது. விளைவு ஜூரம், வயிற்றுப் போக்கு, நெஞ்சு வலி, ஆவேசம் வந்து ஆடுதல் இப்படியாகப் பல. இதற்குப் பரிகாரம் மீசை முனியாண்டி குறி; கண்ணு பூசாரி உடுக்கையடி; அங்காளம்மன் அர்ச்சனை; அறுப்பு அப்பா கருப்பு விரட்ட, கழிப்பு கழித்தல் இதுதான் நாகை தாலுக்காவிலுள் அனைத்துப் பெரிய, சிறிய கிராமம் நிலைமை. இதில் இடங்களுக் கேற்ப பெயர் முறை மாற்றங்கள் வேண்டுமானால் இருக்கலாம்.

இத்தகைய அந்தணப்பேட்டையில் நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளைக் கொண்ட ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்த அவிபக்த குடும்பத்தில் நான்காவது சகோதரர் கோபாலசாமி; அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் என்ற உறவில் நடுகனாய் 1932 நவம்பர் 5இல் பிறந்தேன். கிருஷ்ண குலக்கிரகம் எனப் பெயர் பெற்ற பட்டை நாமப் பரம்பரையில், அவிபக்த குடும்பத்தின் தலைவர், முருகையன் எனப் பெயர் சூட்ட, என் தகப்பனார் என்னைக் கஸ்தூரிரெங்கன் எனப் பதிவு செய்தார்.

................ நான் பிறந்து; அய்ந்து வயதில் சுவடி தூக்கி ஆரம்பப் பள்ளி வாழ்க்கை; அது ஒரு குருகுலப் பள்ளி; அதற்கு உரிமையாளர் பெருமைக்குரிய பொன்னுசாமிப் பிள்ளை.

எனக்கு நான்கு வயதாயிருக்கும்போதே என்னைச் சுற்றி நடந்தவைகள், நடப்பவைகளைப் பின் தொடர்ந்து அறிந்து கொள்ள ஓர் அலாதி ஆர்வம்; படிப்பு மட்டும் ஏறவில்லை;

எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் பின்புற வீட்டை பாய் வீடு அல்லது பங்களா எனச் சொல்வார்கள். அங்கேதான் ஏவலர் - காவலர்கள் - காரியஸ்தர் - கங்காணிகள்; வண்டிக்காரர் - வாயில் காப்போர்; புரோகிதர்கள் - பூசாரிகள்; நண்பர்கள் - தூதுவர்கள் எனப் பல தரப்பினரும் கூடிப் பேசிக் கலகலப்பாக்கிக் கொண்டிருப்பார்கள். நான் பொழுது விடிந்து பொழுது போனால் அங்கே ஆஜராகியிருப்பேன். அவர்கள் பேசுவதைக் கேட்பேன். உற்றுக் கவனிப்பேன்; அதில் எனக்கோர் ஈர்ப்பு. ஒன்றும் புரியாது; ஆனாலும், சில புரிவது போலத் தெரியும், சில பதியும்.

நான் பிறந்த நேரம் என் தாய்க்குப் பால் சுரக்கவில்லை; புட்டிப்பால் கொடுக்க என் தந்தைக்கு விருப்பமில்லை. எங்கள் பண்ணையாட்களிலே ஒருவர் பேரிஞ்சி. அவரது மனைவி கண்ணம்மாள். அந்த நேரம் அவருக்கும் பிள்ளை பிறந்திருந்தது. அவரை மூன்று வேளையும் குளித்து மூழ்கி எனக்குப் பாலூட்ட ஏற்பாடு செய்தார். பால் குறையாமலிருக்க அவருக்குப் போஷாக்குப் பராமரிப்புகள். தன் மகனுக்குப் பாலூட்டிற்றோ என்னவோ அய்ந்தாண்டுகள் வரை அவரிடம் நான் பால் குடித்தது மனதில் பசுமையாக உள்ளது.

பால் கொடுத்த தாய் அது என்றாலும், கவனித்துக் கொண்ட வளர்ப்புத் தாய் செண்பகவள்ளி. செல்லமாக எனது பாப்பம்மாள். இது என் அத்தை மகள். தன் தாய் மாமனை மணந்து கொண்டதால் பெரியம்மாள். சிறு வயதிலேயே விதவை. இறுதி வரை எங்கள் குடும்பத்தோடு ஒன்றி வாழ்ந்த ஜீவன்.

எனது தொடக்கப் பள்ளி வாழ்க்கையிலேயே வயதுக்கு மிஞ்சிய உள்ளக் கிளர்ச்சிகளும் மனப் போராட்டங்களும் தொடங்கிவிட்டது. பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் தரையில் உட்கார வைப்பார்கள். எங்களையெல்லாம் பெஞ்சில் உட்கார வைப்பார்கள். நாங்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் தொடக் கூடாது. அவர்களோடு நெருங்கிப் பேச, பழகக் கூடாது. மீறினால் பிரம்படி. ஆனால், ஒரே பிரம்புதான் எல்லா மாணவர் களையும் தொடும். அப்போதே விரும்பியதைச் செய்வதில் அழுத்தம் தொடங்கிவிட்டது.

அவர்களோடு நெருங்கி உறவாடுவதை நிறுத்தவில்லை. ஆசிரியர் கெடுபிடி; பிரம்படி; தோப்புக்கரணம். ஆனாலும், பள்ளி முடிந்த பின் சேரிப் பையன்களோடு கைகோர்த்துக் கொண்டு வாத்தியார் பார்க்கும்படி ஊர்க் கோடி வரை செல்வோம். இதை எனது வீட்டில் வந்து அவர் சொல்ல, அதன் பிறகு பள்ளியிலிருந்து திரும்பியதும் வீட்டுத் திண்ணையில் உடுப்புகளைக் கழட்டி வைத்து அதன் மீது கட்டையைத் தூக்கி வைத்துவிட்டு, என் வளர்ப்புத் தாய் தலையிலே ஊற்றும் சொம்பு நீரில் நனைத்துக் கொண்டு வீட்டிற்குள் போக வேண்டும். ஆனால், நான் கொண்டு வரும் புத்தக மூட்டையை மட்டும் நீர் விட்டு நனைக்க மாட்டார்கள்.

நான் அப்பள்ளியின் மானிட்டர் ஆனேன். பள்ளியில் பலரும் சேர்ந்து ஒரே குழுவாக அமைந்தோம். யார் யார்? நான், காளியப்ப தேவர் மகன் சிங்காரவேலு, வி.பி.ஜி. மகன் சம்பந்தம், என் தகப்பனார் தரப்பினரின் பிள்ளைகள் சிங்கு, பால குஞ்சிதம், காளியப்ப தேவர் தரப்பினரின் பிள்ளைகள் நாராயணன், இராமலிங்கம், பக்கிரிசாமி, வி.பி.ஜி. தரப்பினரின் பிள்ளைகள் காளியப்பன், சோமு, சிங்காரவேலு, சேரியைச் சேர்ந்தவர்கள் முருகையன், சின்னத்தம்பி, கிருஷ்ணன் ஆக 12 பேர்.

ஊரில் எதிரும் புதிருமான பெரும் புள்ளிகள். அவரவர்களுக்கு ஒரே கோஷ்டி அடியாள் கும்பல்கள். இந்த நிலையில் எல்லா தரப்பும் இணைந்து  நெருக்கம் கொண்ட ஓர் இசைவான குழு. இதை யார்தான் தாங்கிக் கொள்வார்கள்? ஊர், தெரு, சேரி வித்தியாசமின்றி தோளில் கை போட்டுச் சுற்றுவோம். மற்ற மாணவர்களும் வியப்போடு பார்த்தனர். எங்களோடு இணைந்தனர். இதைத் திட்டமிட்டு, புரிந்துதான் செய்தோமா? தெரியாது. ஊருக்குத் தெரிந்தது; வீடுகளுக்குத் தெரிந்தது; அந்தந்த வீடுகளிலும் அடி உதை.

விடிந்த பின் ரோட்டிலே எங்கள் குழுவின் பவனி. அடி வாங்கினாலும் எங்களால் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. அது என்ன உறவு? எவ்வளவு பகையாயிருப்பினும் எங்களது விடாப்பிடியான ‘சேர்மானத்தை’ மனமார ஆதரித்தது காளியப்பத் தேவர் மட்டுமே. ஒரு கட்டத்தில் அடித்துப் புண்ணாக்கிவிட்டுத் ‘தொலையட்டும்’ என்று விட்டார்கள்.

பாப்பம்மாள் எனது வளர்ப்புத் தாய் மட்டுமல்ல; எனக்கு ஆரம்ப ஆசிரியையும்கூட. நான் தொடக்கப் பள்ளியில் சேர்வதற்கு முன்பே தொடங்கி, தொடக்கப் பள்ளி முடித்து உயர்நிலைப் பள்ளி காலத்திலும் நான் விடாது படித்தது, விடுமுறையின்றி ஆஜரானது எனது அத்தை வீட்டுத் திண்ணைப் பள்ளியில்தான். இரவு ஏழு மணியாகிவிட்டால் ஏழெட்டுப் பெண்கள் அத்தை வீட்டுத் திண்ணையிலே கூடி விடுவார்கள். நானும் ஆஜராகி விடுவேன்.

அது பள்ளியா - கல்லூரியா - பல்கலைக்கழகமா - மாநாடா - விவாத மேடையா - பட்டிமன்றமா தெரியாது. ஆனால், வீட்டுக் கதை, ஊர் கதை, பக்தி கதை, உலகக் கதை என நேரில் காண்பதுபோல் காட்சிகள் சித்தரிக்கப்படும். நிறைய செய்திகள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு. அவையெல்லாம் என் மனதில் எனக்கே புரியாத ஒரு வகை கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டதை உணர்ந்தேன். அந்த வயதில் நான் கண்ட காட்சிகளில் சில என் உள்ளத்தில் ஊன்றி விட்டன. ஆழப் பதிந்து ஆணியாக இறுகி விட்டன.

ஒரு நாள் பகல் 12.00 மணி. மாட்டுக் கொட்டிலில் கட்டிக் கிடந்த காளை மாடு கட்டறுத்துக் கொண்டு காட்டாற்றுப் பாய்ச்சலில் புறப்பட்டது. தறிகெட்டு வெறிக் கொண்டு தெருக்களில் ஓட, ஊரே நடுங்கிற்று. தங்கள் பிள்ளை குட்டிகளை வீட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கதவுகளைத் தாழிட்டனர். யாருக்கும் அடங்காது; பிடியும் படாது; எதிர்பட்டவர்களை எத்தித் தள்ளும்; சிக்கிக்  கொண்டால் குத்திக் கிழிக்கும். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நடக்கும். ஆனாலும், ஆப்பக்குச்சி அஞ்சானுக்கு மட்டுமே அந்தக் காளை அடங்கும்; தடித்த உருவங்களை எல்லாம் விரட்டியடிக்கும் அந்தக் காளை அந்தக் குச்சி உடம்பனின் குரலுக்கு மட்டும் கட்டுக்கடங்கி நிற்கும். அவர்தான் காளையின் காவலர். அவரும் ஒரு பண்ணையாள்தான். அவருக்கு ஆள் போயிற்று; வந்தார்; ஒரு கோடியில் நின்று ஓங்கிக் குரல் கொடுத்தார். ஓடிக் கொண்டிருந்த காளை அடங்கி ஒடுங்கி நின்றது. அதைப் பிடித்து இழுத்து வந்து கட்டிப் போட்டார்.

காளையைக் கட்டிவிட்டு வந்த அவரை, ஒரு காரியக்காரன் பிடித்து மரத்தில் கட்டிப் போட்டான். மற்றொருவன் ஒரு இரும்புக் கம்பியை கொடுத்தான். ஆண்டையோ அதைக் கையில் வாங்கி விளாசினார். கம்பி வளைந்தது; அஞ்சான் கதறினான்.

காளையைக் கட்டிப் போடுவதில் கவன மில்லையாம்; தெருவாசிகளின் எரிச்சலைத் திசை மாற்ற அவருக்குத் தண்டனையாம்; இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை, மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு, கூட்டம் சுற்றி நின்று வேடிக்கைதான் பார்த்தது. நானும் ஒண்டிப் பதுங்கி நின்று வேடிக்கைதான் பார்த்தேன். என் இதயத்தில் இடி விழுந்த உணர்வு. இந்த இடி அந்த ஆண்டையின் தலையில் விழக் கூடாதா? என்ற தவிப்பு. வேறென்ன செய்ய முடியும் என்னால் இந்த ஆண்டைக்கு நான் மகனா? இதுதான் நான் கண்ட முதல் காட்சி என்றாலும் இப்படிப் பல நிகழ்ச்சிகளை பின்னாளில் நிறைய கண்டேன்.

...............என் தகப்பனார் நீதிக் கட்சியை நேசித்தவர். பெரியார் மீது பற்றுக் கொண்டவர். அவரது பேச்சுகள், எழுத்துகள் மீது ஈர்ப்பு கொண்டவர். திராவிடர் கழகக் கூட்டங்களை நடத்துவதற்குப் பின்னிருந்து உதவிகள் பல செய்தவர்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த போதே அன்றாடம் தவறாமல் தனக்கு ஓய்ந்த நேரத்தில் என்னை அழைத்துக் குடி அரசு, விடுதலை பத்திரிகையைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பார் என் தந்தையார். அதைப் படித்துச் சொல்வதில் எனக்கும் ஓர் ஆர்வம். ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள் எழுதும் பலசரக்கு மூட்டை - புரியாத பாடங்களையும் எனக்குப் புரிய வைத்தது. எனது சிந்தனையைப் பற்ற வைத்து, என்னைத் தூண்டிவிட்டுக் கொளுத்தியதில் குத்தூசிக்கு ஒரு பங்கு உண்டு. அந்தத் தீ தான் என் கல்லூரி வாழ்க்கையில் காட்டு ஜூவாலை ஆகிவிட்டது.

அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரானார் சர். சி.பி. ராமசாமி அய்யர். பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை நிர்வாகத்தின் எல்லா மட்டங்களிலும் தலை விரித்தாடக் காரணமானார். அதில் மாணவர்களும் இழுக்கப்பட்டனர். அப்போது நடந்த, எப்போதும் மறக்க முடியாத, ஒரு நிகழ்ச்சிதான் என்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டிற்கனுப்பக் காரணமாயிருந்தது. நான் மட்டுமல்ல, என்னோடு பதினான்கு பேர்கள்.

ஊர் வந்த சில மாதங்களில் என் தகப்பனார் நோயுற்று படுக்கையிலானார். அவருக்குப் பணிவிடை முற்று முழுதும் நானேயானேன். அதே வேளை அவருக்குத் தெரியாமல், என் காரியத்தைத் தொடங்கினேன். என்னையொத்த இளைஞர்களைக் கூட்டிக் குழுவாகி செயலிறங்கினோம். ஊர்ப் பகுதியிலிருந்த ஆதிக்கக்காரர்களையும், கோவில் பெருச்சாளிகளையும் குறிப்பிட்டுச் சொல்லி அம்பலப்படுத்த ‘தியாக உள்ளம்’ என்ற ஒரு நாடகம் உருவாயிற்று. அதிலிருந்து தொடங்கினோம். கதை-வசனம்-டைரக்ஷன்-நடிப்பு எல்லாம் நாங்களே; - நோட்டீசைப் பார்த்தவர்கள், ‘பெரும் புள்ளிகளை எதிர்த்தா?’ என்றனர்.

நாடகம் முடிந்தது; சிலர் மேடை ஏறிப் பாராட்டினர். பலருக்கு வெளியே சொல்ல முடியாவிட்டாலும் உள்ளத்தில் பூரிப்பு. ஊக்கம் தந்தனர். ஆனாலும் ஓர் அச்சம். தொடர்ந்து ‘தீர்ப்பும் திருமணமும்’ - ‘ஏழையின் கண்ணீர்’ - ‘அய்யய்யோ! அய்யய்யோ’ ஆகிய நாடகங்கள் மேடையேற்றப் பட்டன. பெரும்புள்ளிகளின் விரோதம் வேகம் பெற்றது. பகை பச்சையாகத் தெரிந்தது. ஊரின் உற்சாகமும், பயமும், கவலையும் கூட வெளிப்பட்டது. எங்கள் குடும்பத்தினரோ எங்களைப் பாராட்டவும் இல்லை, எங்களைத் தடுக்கவுமில்லை. நான் உருப்படுவேனா என எண்ணிய என் தகப்பனார் நான் உருப்பட்டேனா என்று சொல்லாமலேயே உயிர் நீத்தார். அவரது மறைவுக்குப் பின் எனது மூத்த சகோதரர் குடும்பப் பொறுப்பேற்றார். அவரது வழிகாட்டலில், குடும்ப மற்றும் விவசாயப் பொறுப்புகளை நான் ஏற்றேன்.

எனது மூத்த சகோதரர் திரு. ஏ.ஜி. வெங்கிட கிருஷ்ணன் இரயில்வேயில் பணியாற்றிய தி.மு.க.காரர்; சிறந்த தொழிற்சங்கவாதி. மலைக் கண்ணன் என்ற புனை பெயரில் மேடைப் பேச்சாளர். அவரது தலைமையில் அந்தணப் பேட்டை கிராம நலச் சங்கம் உருவாக்கப்பட்டு அதில் எனக்கு ஒரு பொறுப்பும் வழங்கப்பட்டது. கிராம நலச் சங்கம் ஊரார் மதிப்பைப் பெற்று சுற்றுப் பகுதியிலிருந்த ஊர்களுக்கெல்லாம் அது ஒரு ‘மாதிரி’ ஆயிற்று.

எந்தவொரு அமைப்பிலும் அங்கம் கொண்டு செயலாற்றும் பாத்திரம் வகிப்போருக்குத் தனித் தன்மை உண்டு. அது அவ்வமைப்பின் பொதுத் தன்மையோடு பிரிக்க முடியாத பகுதி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், புரியாதோர் அல்லது புரிந்தும் புரியாததுபோல இருப்பவர்கள் அப்பாத்திரத்தின் தனித் தன்மையைத் தனிப்பட்ட பகையாகக் கொள்ள முனைவார்கள். அத்தகைய பலர் அமைப்பின் அகமும், புறமும் இருப்பார்கள். அகப் பிரச்சினைக்கு விமர்சனம் - சுய விமர்சனத்தை ஆயுதமாகக் கொண்டே அமைப்பில் தீர்வு காணப்படும். அவ்வாயுதத்தை ஏந்தாத அமைப்பு கோஷ்டிகளின் கூடாரமாய் இருக்கும்.

(ஏ.ஜி.கே. நினைவுகளின் ஒரு பகுதி)