கோயில்கள் குறித்தும், அதன் சொத்துக்கள் குறித்தும் யாருக்குச் சொந்தம் என்பது குறித்தும் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் மிகப்பெரிய அளவில் விவாதம் நடந்து வருகிறது. பத்மநாத சுவாமி கோயிலின் அபரிதமான சொத்துக்கள் அனைத்தும் மக்களுக்கே சொந்தம் என்று அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான காங்கிரசும் சொல்லாது, எதிர் கட்சியாக இருக்கின்ற இடதுசாரிகளும் சொல்லமாட்டார்கள். பாரதீய ஜனதா போன்ற அடிப்படைவாதக் கட்சிகளின் கருத்தை நாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அக்கோயிலின் தங்கப் புதையல் மக்களுக்குச் சேர வேண்டுமா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, அதற்கான முடிவைத் தமிழ்நாட்டு சி.பி.எம். எடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இந்தியா என்கிற கட்டமைப்பையும், அதன் இந்துத்துவ அடித்தளத்தையும் பேணிக் காத்து வருவதில் தேசியக் கட்சிகளின் பா.ஜ.க., காங்கிரசு, சி.பி.எம்.,) பங்கு முக்கியமானது. கோயில் சொத்துக்கள் குறித்து விவாதிக்கும் முன்னர், கோயில்களின் தல வரலாற்றையும், பார்ப்பனர்கள் கோயில்களைக் கைப்பற்றிய காலகட்டத்தை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உலகெங்கிலும், மதம் நிறுவனமயமாக்கப்பட்டதற்குப் பிறகு, அரசாணைவிட அதிக அதிகாரம் செலுத்துமிடமாக கோயிலும், அரசை வழிநடத்துபவர்களாக, மதப்பூசாரிகமார்களும் இருந்து வந்திருக்கின்றனர். மண்ணின் அதிபதிகளைவிட, மடாதிபதிகளுக்கே அதிகாரம் இருந்தற்கு எல்லா பழமையான மதங்களிலும் சான்று இருக்கிறது.
யூதர்களும், மதபூசாரித்தனமும் :
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதருக்கு மன்னன் பிலாத்து சிலுவைத் தண்டனை கொடுக்கவில்லை. யூத குருமார்களின் கட்டளையின்படிதான் இயேசுநாதருக்குச் சிலுவைத் தண்டனை கொடுக்கப்பட்டது. யூதக் கோத்திரத்தில் பிறந்த இயேசுவுக்கு, மேசியாவாக (மீட்பர்) மாறுவதற்குத் தகுதியில்லை என்று கூறி யூத குருமார்கள் அவருக்கு மரணதண்டனை விதித்தனர்.
தமிழர் உரிமையும், கோயில் உடைமையும்:
கோயில்கள் முழுவதும் தமிழர்களின் வழிபாட்டுமுறைகளின் படியும், நெறிகளின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டது. நெருப்பை வணங்கிய பார்ப்பனர்கள், சிலை வணக்க படிக்கம் உடைய தமிழர்களை இழிவுபடுத்தினர். இம்முறைக்கு எதிரான முறையில் “ஆகம விதிகளை'' அமைத்து உருவாக்கப்பட்டதுதான் கோயில்கள். “ஆகம விதிகள்'' என்பது தமிழர்களால் உருவாக்கப்பட்ட இறைவணக்க நெறிகள் “ஸ்மிருதி விதி'' என்பது பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட சனாதன நெறி. கோயில்கள் ஆகம விதிகளால் உருவாக்கப்பட்டவை. இன்னும் சொல்லப்போனால் சூத்திரர்களாலும், பஞ்சமர்களாலும் தோற்றுவிக்கப்பட்ட நெறிகள்.
“பேர்கொண்ட பார்ப்பன பிரான்தனை அர்ச்சித்தத்தால் போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லாவியாதியாம் பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாமென்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே''
என்று திருமுலர் தனது திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார். இப்பாடலின் பொருள் என்ன? பார்ப்பனர்கள் கர்ப்பகிரகத்துக்குள் நுழைவதாலும், அர்ச்சனை செய்வதாலும் அரசனுக்கும்பொது மக்களுக்கும் கேடுவிளையுமென ஆகமங்கள் வெளிப்படையாகப் பிராமணர்களைத் தடுத்திருக்கின்றன என்பதே இப்பாடலின் பொருள் கோயில்கள் நிறுவனமயமாக்கப்பட்ட பிறகு, பார்ப்பனர்கள் தமிழர்களின் கோயிலையும், அதன் சொத்துக்களையும் அபகரிக்கத் தொடங்கினர். கி.பி.8 ஆம் நூற்றாண்டு வரை கோயில்கள் பார்ப்பனர்கள் உள்ளே நுழைய முடியா வண்ணம் ஆகம நெறிகளுடனே இருந்து வந்தன.
சமணம் தமிழகத்தில் முற்றாக அழிந்த காலகட்டமும், பார்ப்பனர்கள் நிலத்தையும், கோயிலையும் கைப்பற்றிய காலகட்டமும் ஒன்றே. தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்கள் அம்பாள் கோயிலாக மாற்றப்பட்டன. சூத்திர, பஞ்சம பூசாரிகள் விரட்டியடிக்கப்பட்டு, பார்ப்பன பூசாரிகள் உள்ளே வருகின்றனர். கோயில் ஆகமவிதிகளை உருவாக்கியவர்களும், கோயில் பூசை செய்வதற்குத் தீட்சை கொடுக்கும் தகுதிய உடையவர்களும் சூத்திர, பஞ்சம சாதிகளை சேர்ந்தவர்களே ஆவர். ஆனால் பிற்காலத்தில் சூத்திர பஞ்ச சாதியினர் கோயில் கர்ப்பகிரகத்திற்குள் செல்வதற்கே அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர், இந்துக் கோயில்கள் அனைத்தும் அரசுமையாக்கப்பட்டு சில காலங்கள் இருந்தன.
பின்னர் 1863 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்'' “இந்து'' கோயில்கள் அனைத்தையும் நிர்வகிக்கும் உரிமையை இந்துக்களுக்கே வழங்கியது. அவ்வாறு வழங்கியதில் பார்ப்பனர்களும், சாதி இந்துக்களும் (சற்சூத்திர சாதிகளும், நிலஉடைமையாளர்களும்) கோயில் பூசாரி உரிமையையும், அத்ன சொத்துக்களையும் அனுபவிக்கும் உரிமையையும் கள்ளத்தனமாக பெற்றுக் கொண்டனர். பழனி, திருப்பதி, பத்மநாபா சுவாமி கோயில் முதலிய வழிபாட்டுத் தலங்கள் பார்ப்பனிய நடைமுறையுடனும், நிறுவனமயமாக்கப்பட்டு, பணம் பண்ணும் நோக்கத்துடனும் அமைந்திருப்பதை நாம் காண முடியும். ஆனால், பார்ப்பனியமயமாக்கலும், சந்தைபடுத்தும் தன்மையும் இல்லாத முனி, அய்யனார், இசக்கி போன்ற சிறுதெய்வக் கோயில்கள் அத்தமிழ்ச் சமூகத்தின் இறைவணக்கத்தை நமக்கு காட்டுகின்றன. சூத்திரர்களும், பஞ்சம சமூகங்களும் பூசாரிகளாக உள்ள இத்தகைய கோயில்களில் உண்டியலும் கிடையாது. புதையலும் கிடையாது. ஏனென்றால் மக்களிடம் கடவுளின் பெயரை சொல்ல பணம் பறிக்கும் தனியுடைமைச் சிந்தனை அங்கு கிடையாது. அக்கோயில் பூசாரிகளுக்குப் பணம் கொடுப்பதற்குப் பதிலாக, பீடி, சுருட்டு, சாராயம், ஆடு, மாடு எனக் கடவுளுக்கும், மனிதனுக்கும் பிடித்த உணவினைப் படைத்து அதே இடத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிடுவர். இதன் மூலம் கோயில் நிறுவனமயமாக்கப்படுவதில் இருந்தும், வணிக மயமாக்கப்படுவதிலிருந்தும் தவிர்க்கப்படுகிறது.
நிலவுடைமைச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் விதமாகவும், நிலைநாட்டும் வடிவமாகவும்தான் இன்றைய பார்ப்பனப் பூசாரிகளைக் கொண்ட கோயில்கள் உள்ளன. நிலவுடைமைச் சமூகத்தை எதிர்த்துப் போராடும் இடதுசாரித் தோழர்கள் கோயில் சொத்துரிமை குறித்தும் அதன் பார்ப்பனியப் பூசாரித்தனம் குறித்தும் எதிர்வினையாற்றாமல் மவுனம் சாதிப்பது அவர்கள் கொண்ட கொள்கைக்கு முரண் அரசியலாகும்.
பத்மநாபா சுவாமியும், இந்திய முதலாளிகளும் :
“பத்மநாபசுவாமி கோயில் சொத்துக்கள் மக்களுக்குச் சொந்தமில்லை. மன்னர் பரம்பரைக்கே சொந்தம் என்று பார்ப்பன பத்திரிகை தினமலரும், கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியாரும் கருத்துச் சொல்லி வருகின்றனர். ஆனால், உண்மைநிலை என்னவென்றால், இந்த சங்கராச்சாரியாரின் “லோக குரு'' வான சங்கராச்சாரியாருக்கு கூட பத்மநாபசுவாமி கோயிலில் நுழைவதற்கும், பூசை செய்வதற்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு என திருவாதங்கூர் அரசாங்கச் சரித்திரக் குறிப்பு சொல்கிறது. தமிழர்களின் ஆகமவிதிகளைப் பின்பற்றும் கோயில்களில் பூசை செய்வதற்கும் நுழைவதற்கும் தீட்சை பெறாத பார்ப்பானுக்கு அனுமதி கிடையாது என்கிற உண்மையை மேற்கூறிய குறிப்பு விளக்குகிறது.
“இந்தியா'' என்கிற கற்பிதத்தை உருவாக்கியதன் பின்னணியில் பத்மநாப கோயிலுக்கும் ஒரு பங்கு உண்டு. சர்தார் வல்லபாய்பட்டேல் அனைத்து சமஸ்தான மன்னர்களுக்கும் பெரிய தொகையைக் கையூட்டாகக் கொடுத்து “இந்தியா''வை உருவாக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்த வேளையில் திருவதாங்கூர் சமஸ்தானத்து மன்னனுக்குப் பணத்திற்குப் பதில் பத்மநாதசுவாமி கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பைப் கொடுத்துள்ளார்.
பல லட்சம் மக்களின் பொதுச் சொத்தான கோயிலைத் தனிப்பட்ட ஒரு மன்னருக்கு அளித்தன் மூலம் “இந்தியா'' என்கிற வரைபடம் வரையப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் உரிமைகளை மதிக்காமல், மன்னர்களையும், நிலப்பிரப்புக்களையும் குளிர்வித்ததன் மூலம் "இந்தியா' உருவாக்கப்பட்டது. இன்று பார்ப்பனர்கள் பிடியில் இருக்கும் அல்லது மன்னர்கள் பிடியில் இருக்கும் கோயில்கள் அனைத்தும் சமண, பவுத்த மடங்களாகவே இருந்தன (பத்மநாதபுர சுவாமி கோயில் உட்பட) மேலும் இக்கோயில்கள் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உடைமைகள். பத்மநாபசுவாமி கோயில்களில் மட்டுமில்லாமல், இந்தியா முழுவதுமுள்ள நிறுவனமயமாக்கப்பட்டு, தனியுடைமைச் சிந்தனையை மெருகூட்டிக் கொண்டு இருக்கும் அனைத்துக் கோயில்களின் சொத்துக்கள் அனைத்தும் "சேரி' மக்களுக்கானவை. சனாதன "ஸ்மிருதி' கருத்துக்களால் ஒதுக்கப்பட்ட தீண்டப்படாத மக்களால் உருவாக்கப்பட்ட கோயில் ஆகம நெறிகள். அவர்களின் உடைமைகளையும், உரிமைகளையும் பறித்து இன்று செல்வம் கொழிக்கும் இடங்களாக இக்கோயில்கள் மாறியுள்ளன.
குறிப்பாக, பத்மநாபா சுவாமி கோயில் சொத்துக்கள் அனைத்தும் கேரளாவில் இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாது, குமரிமாவட்டத்தில் தீண்டாமையை அனுபவித்த நாடார்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உரிமையானது. பத்மநாபா கோயில் சொத்துக்கள் அனைத்தும் "சேரி' மக்களின் வாழ்க்கையை மறுநிர்மாணம் செய்வதற்குப் பயன்படவேண்டும். இல்லையென்றால், பவுத்த, சமண மடாலயங்களையும் அவர்களின் கருத்தியலையும் நிர்மானம் செய்து பார்ப்பனர்கள் எப்படித் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்களோ? அதேபோல் பூர்வகுடிகள் அதிகாரமும், இழந்த உடைமைகளையும் பெறுவதற்கு வரலாறு திரும்பும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.