திருச்சியில் கூடிய செயலவை தீர்மானங்கள் திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 26.10.2014 அன்று திருச்சி தாசூஸ் அரங்கத்தில் பகல் 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. திருச்சி மாநகர அமைப்பாளர் தமிழ்முத்து, கடவுள், ஆத்மா மறுப்புகளைக் கூற, மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி வரவேற்றுப் பேசினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கோவை செயலவைக்குப் பிறகு நடந்த கழக நிகழ்வுகளையும், கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் பரப்புரைத் திட்டங்களையும் விளக்கி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து தீர்மானங்களை கழகத் தலைவர் முன் வைத்தார். தீர்மானங்கள் மீது செயலவை உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்த தோடு, புதிய தீர்மானங்களையும் ஆலோ சனைகளாக முன் வைத்தனர். அதனடிப்படையில் புதிய தீர்மானங்கள் சேர்க்கப்பட்டன.

காலை நிகழ்வுகள் 2.30 மணி வரை தொடர்ந்தன. மதிய உணவுக்குப் பிறகு 3.30 மணியளவில் செயலவை கூட்டம் தொடர்ந்தது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து மாவட்ட வாரியாக தோழர்கள் எண்ணிக்கை இலக்குகளைத் தெரிவித்தனர்.

அமைப்புகள் குறித்தும் தோழர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்கள் எழுப்பிய பல்வேறு பிரச்சினைகள் அணுகுமுறைகள் செயல் திட்டங்கள் குறித்து விரிவாக பதிலளித்துப் பேசினார். ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கான உறுப்பினர் சேர்ப்பு படிவங்கள் மாவட்ட வாரியாக வழங்கப்பட்டன.

மாவட்ட அமைப்பாளர் குணாராஜ் நன்றி கூற 7 மணியளவில் செயலவை நிறைவடைந்தது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: • திராவிடர் விடுதலைக் கழகத்தின் களப் பணி களையும், திட்டங்களையும், பெரியாரிய சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வாகனமாக வாரந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு, புதிய உறுப்பினர்களை சேர்க்கும் இயக்கத்தை நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 முடிய தோழர்கள் தீவிரமாக மேற்கொண்டு, கழக வார ஏட்டினை விரிவாக நாடெங்கும் பரப்ப வேண்டுமென இச்செயலவை தீர்மானிக்கிறது.

• தமிழ்நாட்டில், தீண்டாமை பல்வேறு வடிவங் களில் தொழிற்பட்டு வருவதை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதும், திராவிடர் விடுதலைக் கழகம் எனும் இப்புதிய பெயரில் இயங்கி வருகிறபோதும் கழகம் போராடி வருகிறது. தீண்டாமையைப் பின்பற்றும் உணவுக் கடைகள், தேனீர்க் கடைகள், கிராமங்கள், சுடுகாடுகள் முதலியவற்றின் பட்டியலை தயாரித்து, அதற்கு எதிராகப் போராட்டங் களையும் வழக்குகளையும் முன்னெடுத்தோம்.

‘ஆறுமுகம் சேர்வை’ வழக்கில் உச்சநீதிமன்றமே தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு, அதைத் தடுக்கத் தவறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மீது இடைநீக்கம், வழக்குப் பதிவு, துறைசார் நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என வற் புறுத்தியது. உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையை தமிழக அரசு நிர்வாகம் பின்பற்றுவதாகத் தெரிய வில்லை. அண்மையில், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் இரட்டைக் குவளை தீண்டாமைக்கொடுமைகளை நடைமுறைப்படுத்திய தேனீர் கடைக்காரர்கள் சிலர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்த செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் ஏற்கெனவே ‘தீண்டாமையைப் பின்பற்றிய கிராமங்கள், தேனீர்க் கடைகள், முடிதிருத்தகங்கள், கோயில்கள் முதலியவற்றில் தீண்டாமை முடிவுக்கு வந்துவிட்டதா? தொடர்கிறதா? என்பதைக் கண்டறிய நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரை கிராமம்தோறும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மீண்டும் கணக்கெடுத்து, பட்டியல்களைத் தயாரிப்பது என இச்செயலவை தீர்மானிக்கிறது.

• ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விழைவோர், சமூக, குடும்ப அச்சுறுத்தல் காணமாக பொது நல அமைப்புகள், வழக்குரைஞர்கள் வழியாக பாது காப்புடன் பதிவுத் திருமணம் செய்து கொள் கிறார்கள். இந்த முறைக்கு எதிராக, அண்மையில் (17.10.2014) உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கவலைதருவதாகும். அத்துடன் சப்தபதி என்ற ஆரியச் சடங்கைத் தவிர்ப்பது மட்டுமே சுய மரியாதைத் திருமண முறை என்று உயர்நீதி மன்றம் கூறியிருப் பது, அத்திருமண முறையை சிறுமைப்படுத்து வதே ஆகும். சடங்குகள் மறுப்பு என்பதையும் கடந்து, ஆடம்பர விழா கொண் டாட்டங்கள் இல்லாத - சிக்கனம், எளிமை ஆகியவற்றையும் உள்ளடக்கியதே சுயமரியாதைத் திருமணம் என்பதை இத்திருமண முறையை அறிமுகப்படுத்திய பெரியார், தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். கொண்டாட்டமாக வும், விழாவாகவும் நடத்தப்படுவதுதான் திருமணம் என்று உயர்நீதிமன்றம் உரையறை செய்வது ஒரு பண்பாட்டுத் திணிப்பே ஆகும் என்பதோடு, எளிமையாகவும், சிக்கன மாகவும், பதிவு மட்டுமே செய்துகொண்டு, இல் வாழ்க்கையைத் தொடங்க விரும்புவோரின் உரிமைகளைக்கூட பறிப்பதாகும். திருமணங் களைக் கொண்டாட்டம், விழாக்கள் சடங்கு களாக உறுதிப்படுத்தும் உயர் நீதிமன்றத்தின் இந்த பழமைவாதக் கருத்தையும் சுயமரியாதைத் திருமணத்தின் நோக்கத்தைக் குறைத்து மதிப்பிடும் கண்ணோட்டத்தையும் இந்த செயலவை அழுத்தமாக மறுக்கிறது.

• மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி பதவி யேற்றப் பிறகு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டே வருகிறது. அரசு ஊடகமான ‘தூர்தர்ஷனில்’ ஆர்.எஸ்.எஸ். தலைவர் உரையை நேரடி ஒளிபரப்பு செய்த மோடி ஆட்சி, இப்போது ‘அகில இந்திய வானொலி’யில், ஒவ்வொரு நாளும் 7 மணி நேரம் வரை இந்தி மொழியிலான நிகழ்ச்சி, செய்திகளை ஒலி பரப்ப மேற்கொள்ளும் முயற்சிகள் வன்மையான கண்டனத்துக்கு உரியவையாகும்.

இந்தி மொழி பேசாத ‘சி’ பிரிவு மாநிலங்களில், மாநில மொழியுடன் ஆங்கிலம் மட்டுமே நீடிக்கும் என்ற சட்டத்துக்கு எதிரான இந்த முயற்சியை பா.ஜ.க. ஆட்சி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; இல்லையேல் தமிழகம் கொந்தளிக்கும் என்பதை இந்த செயலவை எச்சரிக்கிறது.

தனியார் மயமாக்கல் ஆபத்து

• தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற கொள்கை அமுலுக்கு வந்த பிறகு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறார்கள்.

பெரும் முதலீட்டில் செயல்படும் ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களில் உரிய எண்ணிக்கையில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி - இயக்கங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தோம். மன்மோகன் சிங் ஆட்சியானாலும் மோடி ஆட்சியானாலும் இந்த முக்கிய பிரச் சினையை அலட்சியம் செய்வதோடு, பொதுத் துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் ‘நோக்கியா’ நிறுவனம் தனது கைபேசி தயாரிப்பு தொழிற்சாலையை மூடி, ஏறத்தாழ 18,000 தொழிலாளர்களைத் தவிக்க விட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களின் நிலை இதுவென்றால், தமிழகத்தில் வருமான வரித்துறை, சுங்கத் துறை, கலால் துறை, தொடர் வண்டித் துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு களில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, பெருமளவில் வடநாட்டுக்காரர்கள் குவிக்கப் பட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நிறுவனங் களிலும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதும் இல்லை.

கருநாடக மாநில அரசு தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் தனியார் நிறுவனங்கள், ‘டி’ பிரிவு வேலைகளில் 100 விழுக்காடும், ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு வேலைகளில் குறைந்தது 70 விழுக்காடுமான வேலை வாய்ப்புகளை உள்ளூர் மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ள தொழில் கொள்கையை தமிழ்நாடு அரசும் பின்பற்ற வேண்டும் என்று இச்செயலவை வலியுறுத்துகிறது.

• அரசுத் துறைகள் படிப்படியாக ஒழிக்கப்படு வதையும், தனியார் துறைகளில் சமூகநீதி மறுக்கப்பட்டு, பார்ப்பன-பனியா ஆதிக்கத்தில் இருப்பதை எதிர்த்தும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உரிமை இயக்கத்தை தீவிரமாக முன்னெடுக்கவும், கிராமம் மற்றும் நகரங்களில் இளைஞர்களை அணி திரட்டி பல்வேறு வடிவங்களில் இயக்கங்களை நடத்திடவும் இச்செயலவை தீர்மானிக்கிறது.

• அய்ரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், அண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கியுள்ளதோடு, அதற்கான முறையான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை என்பதை யும் விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்து இந்தியா விலிருந்து தரப்பட்ட தகவல்கள் உண்மைக்கு மாறாக இருந்தன என்பதையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் தொடரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை - இரண்டாம் தாயகமாக கருதி தமிழ கத்துக்கு பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழர்களுக்கும் அச்சுறுத்தலாகவும், அப்பாவி ஈழத் தமிழ் இளைஞர்களை சிறப்பு முகாம்களில் முடக்கவும், தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கங் களை ஒடுக்கவும் முறைகேடாக பயன்படுத்தப் பட்டு வருவதால் இந்திய அரசும் விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும் என இச்செயலவை வலியுறுத்துகிறது.

• பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ள ஆலோசனையை திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. இந்த வயது வரம்பு உயர்வு திருமண பதிவுக்கு மட்டுமில்லாது, குடும்பத்தினர் நடத்தும் ஏற்பாட்டுத் திருமணங் களிலும் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

ஜாதி மறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் ஜாதிய சக்திகள், அந்தத் திருமணங்களைத் தள்ளிப் போடுவதற்கு ஒரு வாய்ப்பாக பெண்களுக்கான வயது வரம்பை உயர்த்த எண்ணுகிறார்கள். இந்த நிலையில் 21 வயதுக்குட்பட்டு பெண்கள் திருமணத்தை நடத்திடும் குடும்பத்தார் மற்றும் அதற்குத் துணை நின்றவர்களையும் குற்றவாளி களாக வழக்குப் பதிவு செய்து, தண்டிக்கும் வகையில் இந்த வயது வரம்பு உயர்வுக்கான சட்டம் இயற்ற வேண்டும் என்று செயலவை வலியுறுத்துகிறது.

• தமிழ்நாட்டில் ஜாதி மறுப்புத் திருமணங்களை ஏற்க மறுத்து, ‘கவுரவக் கொலைகள்’ என்ற பெயரில் ஜாதி வெறிக் கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த 20 மாதங்களில் நாம் அறிய இவ்வாறான 32 கொலைகள் ஜாதி வெறியர்களால் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக உசிலம்பட்டியில் தலித் இளைஞரைத் திருமணம் செய்த விமலாதேவி என்ற பெண் காவல்துறையின் மறைமுக உதவி யுடன் எரித்துக் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியூட்டுகிறது.

இந்தச் சூழலில் குற்றவாளிகள் மீதும், குற்றத்தை மறைக்க உடந்தையாக செயல்பட்ட, செயல்படும் காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஜாதி மறுப்பு இணையர் களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சட்ட ஆணையம் 2012இல் வடிவமைத்துக் கொடுத்திருக்கிற ‘திருமண விவகாரத் தலையீட்டுத் தடைச் சட்டத்தை ‘ உடனடியாக நிறைவேற்றக் கோரியும், தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் உள்ள அந்தந்தப் பகுதிகளின் ஆதிக்க ஜாதிகளைச் சேர்ந்த அதிகாரிகளைப் பிற பகுதிகளுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி 11.11.2014 செவ்வாய் அன்று ஒத்த கருத்துள்ள அமைப்புகளை திரட்டி கண்டனப் போராட்டத்தை மதுரையில் நடத்துவது என இச்செயலவைத் தீர்மானிக்கிறது.

• கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துறைகளில் ஒன்றான ‘வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம்’ 2014 ஆம் ஆண்டுக்கான மழை முன்னறிவிப்புகள் பற்றி விவசாயிகளுக்கு கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக அறிவியலுக்கு புறம்பான 13 பஞ்சாங்கங்களின் தகவல்களையும் எடுத்துக்காட்டி மழை முன்னறிவிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பஞ்சாங்கங்களுக்குள்ளேயே இதில் முரண்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளன. போலி அறிவியலான பஞ்சாங்கக் கருத்துகளை அறிவியலை கற்பிக்கும் பல்கலைக் கழகம் அங்கீகரித்து விவசாயிகளைக் குழப்புவதோடு சமூகத்தையும் பின்னோக்கி இழுத்துச்செல்லும் இந்தப் போக்கைக் கண்டித் தும், பஞ்சாங்கக் குறிப்புகளை நீக்கி அறிவிப்ப தோடு, எதிர்காலத்தில் இத்தகைய அறிவியலுக்கு எதிரான பரப்பல்களில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தியும், நவம்பர் 17, திங்கட்கிழமையன்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இச் செயலவை தீர்மானிக்கிறது.

• தலித் சமுதாயத்தைச் சார்ந்த பீகார் முதல்வர் ஜித்தன் ராம்மஞ்சி கோயிலுக்குள் சென்றதால் கோயில் தீட்டாகிவிட்டது என்று பார்ப்பன அர்ச்சகர்கள் கோயிலைக் கழுவி தீட்டுக் கழித்த ‘தீண்டாமை’யையும் பார்ப்பனிய வெறியையும் இச்செயலவை வன்மையாகக் கண்டிப்பதோடு, அச்செயலுக்குக் காரணமான புரோகிதர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் என வற்புறுத்துகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இத்தகைய அவமதிப்புகள் நடப்பது நாட்டுக்கே அவமானம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

• முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலை கோரி நடத்தப்பட்ட - நடந்து வரும் போராட்ட வடிவங்கள் (மொட்டை அடித்தல், பால்குடம் எடுத்தல், அங்கப்பிரதட்சணம், மண்சோறு சாப்பிடுதல், யாகம்) இந்துமத அடையாளங்களாக இருப்பது மதச்சார்பற்ற அரசியலில் மதத்தைக் கலந்து ‘இந்துத்துவா’ மதவெறிக் கொள்கைக்கு துணை போவதே ஆகும். மதத்தை அரசியலில் கலந்து, மதச் சார்ப்பின்மை கொள்கைக்கு ஊறு விளைவிக்கும் அண்ணாவின் கொள்கைக்கு எதிரான அகில இந்திய அண்ணா தி.மு.க.வின் இந்தப் போக்கு ஆபத்தானது, கண்டனத்துக்கும் உரியதாகும்.

• இராமநாதபுரத்தில் காவல் நிலையத்துக்குள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு இஸ்லாமிய இளைஞர் - காவல்துறை ஆய்வாள ரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு செயலவை வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

உண்மையில் இது படுகொலையே தவிர ‘வீர-தீரச்’ செயல்கள் அல்ல. இத்தகைய ‘மோதல்கொலை’கள் நடத்தப்படும்போது உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகள் பின்பற்றப்படுவதும் இல்லை. நீதிமன்ற விசாரணைகள் இல்லா மலே காவல்துறையே காவல் நிலையங்களில் வழங்கி வரும் இந்த ‘மரண தண்டனை’களுக்கு காவல்துறை சார்பில் உண்மைக்கு மாறான காரணங்கள் கூறப்பட்டு குற்றமிழைத்த காவல் துறையினர், எந்த நடவடிக்கையும் இல்லாது தப்பிவிடுகின்றனர். எனவே, காவல்நிலைய விசாரணைகளில் நடக்கும் உண்மைகளைக் கண்டறியவும் எதிர்காலத்திலாவது கண்காணிப்புக் காமிராக்களை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசை இச்செயலவை கேட்டுக் கொள்கிறது.

• ம.பி. மாநிலம் இராஞ்சியில் நடந்த மதவிழா ஒன்றில் பேசிய பூரி சங்கராச்சாரி நிச்சலானந்தா, தாழ்த்தப்பட்டவர்களும் சூத்திரர்களும் கோயிலுக்குள் நுழைவதை அனுமதிக்கக் கூடாது என்று பேசியதற்காக அவரை கைது செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட் டுள்ளதை செயலவை வரவேற்று பாராட்டுகிறது. அதே நேரத்தில் பகவத் கீதையின் 16ஆவது அத்தியாயம் கூறும் ‘வர்ணாஸ்ரமம்’ கூறும் நான்கு வர்ண தர்மங்களின் அடிப்படையிலேயே இந்தக் கருத்தைத் தாம் கூறுவதாக சங்கராச்சாரி வெளிப்படையாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில், சங்கராச்சாரி எடுத்துக் காட்டிய கீதையின் வர்ணாஸ்ரமப் பகுதிகளையும் தடைசெய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் என்று இந்த செயலவை வலியுறுத்துகிறது.

Pin It