பீகார் தலித் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, மதுபானி மாவட்டத்திலுள்ள கோயிலுக்கு கடந்த மாதம் சென்றபோது கோயில் தீட்டுப்பட்டுவிட்டது என்று பார்ப்பன அர்ச்சகர்கள் ‘தீட்டு கழித்த’ செய்தியை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கடந்த வாரம் வெளியிட்டது. இது குறித்து அரசு விசாரணைக்கு மாநில அரசு செப்டம்பர் 29ஆம் தேதி உத்தரவிட் டுள்ளது.

“பீகாரில் தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது ஆகஸ்டு 18 ஆம் தேதி ஊர் மக்கள் அழைத்ததினால் பகவதி பரமேசுவரி கோயிலுக்குச் சென்றேன். நான் சென்று வந்த பிறகு கோயிலுக்குள் ‘தீட்டுக் கழிப்பு’ சடங்குகள் நடத்தி, கோயில் கழுவப்பட்ட செய்தியை மாநில கனிம வளத்துறை அமைச்சர் இலக்கன் ராம் ராமன் என்னிடம், ஒருமுறை அல்ல, இரண்டு முறை கூறினார். தேர்தல் நேரத்தில் இப்பிரச்சினையை அரசியலாக்கிடக் கூடாது என்ற நோக்கத்தில், இதை வெளிப்படுத்தாமல் தவிர்த்தேன்.

ஆனால், அதே அமைச்சர், அப்படி எதுவும் நடக்கவில்லை என்று இப்போது மறுப்பதற்கான காரணம் எனக்கு தெரிய வில்லை. நான் பொய் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரசாத் யாதவுக்கும் இது தெரியும். அவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதைக் குறிப்பிட்டு, அது குறித்து விசாரணை நடத்துமாறு என்னிடம் கேட்டார்.

200க்கும் மேற்பட்ட பொது மக்கள் தன்னிடம் இதைத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்” என்று பீகார் முதல்வர் கூறியுள்ளார். “கோயிலுக்குள் இப்படி தன்னை அவமதிக்கும் உயர்ஜாதியினர் (பார்ப்பனர்) தங்களுக்கு ஏதாவது சலுகை வேண்டும் என்றால் அலுவலகத்துக்கு வந்து என் காலில் விழத் தயங்குவதில்லை. இந்த உண்மையை தலித் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் பீகார் முதல்வர் கூறினார்.

பீகார் முன்னாள் முதல்வரான தலித் சமூகத்தைச் சார்ந்த போலோ பஸ்வான் சாஸ்திரி நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது. இதில் பீகார் முதல்வர் தனக்கு நேர்ந்த அவமானத்தை வெளியிட்ட போது, மேடையில் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் இராம் இலக்கன் ராம் ராமன், “முதல்வர் கூறுவது உண்மையல்ல” என்று மேடையிலேயே மறுத்த போது, பீகார் முதல்வர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். ‘லோக் ஜன்தள்’ கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான், “பீகார் முதல்வரை அவமதித்த பார்ப்பன அர்ச்சகர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்று கருத்து கூறியுள்ளார்.

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு செய்திகளை விரிவாக பதிவு செய்துள்ளது. ஆனால், ‘இந்து’ நாளேடு, பீகார் முதல்வர் பொய் சொல்வதுபோல் செய்தி வெளியிட்டுள்ளதோடு, கோயில் அர்ச்சகர், முதல்வரின் கட்சிக்காரர்கள் முதல்வர் கூறுவது உண்மையல்ல என்று கூறுவதாக செய்தி வெளியிட்டுள்ளது. “பீகாரில் அடுத்த முதல்வராகவும் ஒரு தலித் வருவார்” என்று பீகார் முதல்வர் பேசியதாகவும் இந்தக் கருத்தை அவரது கட்சிக்காரர்களே விரும்பாமல் ஒதுங்கி நிற்பதாகவும் ‘இந்து’ ஏடு, செய்தி வெளியிட்டுள்ளது.

கோயிலை ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் தூய்மைப்படுத்துவது வழக்கம் என்று கோயில் பார்ப்பன அர்ச்சகர் அசோக் குமார் ஜா சுறியதாக ‘இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. பீகார் முதல்வர் நிகழ்வை உறுதிப்படுத்தியதையோ அரசு விசாரணைக்கு உத்தரவிட்டதையோ வெளியிடாமல் ‘இந்து’ ஏடு மறைத்துவிட்டது.

Pin It