தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதற்கு அண்மையில் தமிழ்நாடு தேர்வாணை யம் நடத்திய ‘குரூப்-4’ தேர்வே சரியான சாட்சி. 5,451 காலி இடங்களுக்கு தேர்வு எழுதியவர்கள் 15 இலட்சத்து 64 ஆயிரத்து, 471 பேர். 12ஆம் வகுப்புதான் கல்வித் தகுதி என்றாலும், பொறியியல் பட்டதாரிகள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர். 11 மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு 2014இல் நடத்திய தேர்வில் 3000 பேர் தேர்வு எழுதினர். 2015இல் முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) நடந்து முடிந்து 15 மாதங்கள் ஓடிய பிறகும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

துணை ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி போன்ற குரூப்-1 தேர்வுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சிப் பெறக் கூடியவர்கள் குறைந்தது மூன்று முறை தேர்வு எழுதியவர் களாகவே இருக்கிறார்கள். பட்டப் படிப்பு முடித்தது முதல் இந்தத் தேர்வுக்காகவே தயாராகி வரும் மாணவர்களுக்கு இறுதி கட்டத்தில் வயதுத் தடை வந்து விடுகிறது. இதற்கான வயது வரம்பு 35 என்று நிர்ணயிக்கப்பட் டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஏறி வரும் ஏணிப் படியை எட்டி உதைப்பதாகி விடுகிறது இந்த வயது வரம்பு. எனவே வயது வரம்பை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். அனைவருக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்யாத அரசு, வயது வரம்பை திணிப்பது சமூக அநீதியேயாகும்.

தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனங்கள் வடமாநிலத்தவர்களாலேயே நிரப்பப்படுவது மிகப் பெரும் கொடுமையாகும். தொடர் வண்டித் துறை, வருமான வரித் துறை, சுங்கத் துறை, கலால் துறை உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி பேசுவோரே நிரம்பி வழிகிறார்கள். தமிழ் மொழி தெரிந்த தமிழ்நாட்டு மக்கள் இந்த நிறுவனங்களோடு தொடர்பு கொள்ளவே முடியாத நிலை உருவாகி விட்டது.

தமிழகத்தில் நடக்கும் வங்கிப் போட்டித் தேர்வுகளில் மலையாளம், இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்தவர்கள் பங்கேற்று தேர்வு பெற்று விடுகிறார்கள். தமிழக மாணவர்கள் போட்டியிட்டு தேர்ச்சிப் பெறக்கூடிய வகையில் மாநில பாடத் திட்டம் இல்லை என்று கல்வியாளர்கள் கூறுவதையும் அலட்சியப்படுத்திட முடியாது. இந்த நிலையில் மற்றொரு கருத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

‘பாரத ஸ்டேட் வங்கி’ என்று கூறப்படும் ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ நிறுவனத்தில் 1420 பதவிகளுக்கான தேர்வுக்கு முதலில் தரப்பட்ட விளம்பரத்தில் தேர்வுகளை அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மாநில மொழியிலேயே எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி தமிழ்நாட்டில் தேர்வு எழுதுகிறவர்கள் தமிழில் எழுதவேண்டும். பிறகு இரண்டாவதாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழ் நாட்டில் தமிழ் மொழியோடு ஆங்கிலத்திலும் எழுதலாம் என்று அறிவித்தார்கள். ஏன் இந்த மாற்றம்? தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே தேர்வு பெறும் வாய்ப்புகளை முடக்குவதற்கான சதியா? என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழகத்தில் பல இலட்சம் மாணவர்கள் படித்து வேலை வாய்ப்பின்றித் தவிக்கும் அவலமான நிலை குறித்து ஆட்சியிலிருப்பவர்கள் கவலைப்படுவதாகவோ, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதாகவோ தெரியவில்லை.

இலவச அறிவிப்புகளும், பால் காவடி, பன்னீர் காவடி, பஜனைகளும் தமிழ்நாட்டு இளைஞர் களின் அடிப்படைப் பிரச்சினை களுக்கு தீர்வாக முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

தொடர்ச்சியாக தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து வரும் இத்தகைய போக்குகளைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். இதற்கான போரட்டங்களை முன்னெடுக்கும்போது தமிழக இளைய சமுதாயமும் பொது மக்களும் பெருமளவில் அணி திரள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் குறித்த பிரச்சினை இது! 

Pin It