ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருப்பது காங்கிரசுக்கு முன்கூட்டியே தெரியும் 

பேரறிவாளன் விடுதலையை ஏற்கவே முடியாது என்று காங்கிரசாரும், மனுவாதிகளும் பொங்குகிறார்கள். இவர்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறதா?

இந்த குற்றத்தில் நேரடியாக தொடர்புடைய 12 பேர் ஏற்கெனவே தேடுதல் வேட்டை என்ற பெயரால் காவல் துறையினால், சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். அதாவது நீதிமன்றம் போகாமலேயே மரண தண்டனையை விதித்து விட்டார்கள். பிறகு 26 பேருக்கு, குற்றவாளிகளுக்கு உதவினார்கள், சதியில் ஈடுபட்டார்கள் என்று கூறி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ‘தடா’ சட்டத்தின் கீழ் வழக்கு நடந்தது. வழக்கு இரகசியமாக நடந்தது. காந்தி கொலையில் கூட வழக்கு பகிரங்கமாகவே நடந்தது. 26 பேருக்கும் தூக்கு தண்டனையை விதித்தது சிறப்பு நீதிமன்றம். இவர்கள் தடா சட்டத்தின் படி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது. நேரடியாக உச்சநீதிமன்றம் தான் போக வேண்டும். உச்சநீதி மன்றம் குற்றவாளி என்று கூறப்பட்ட 26 பேரில் 19 பேரை விடுதலை செய்து விட்டது. இதிலிருந்தே வழக்கு எப்படி சி.பி.அய்.யால் புனையப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று கூறிய உச்சநீதிமன்றம், அதே நேரத்தில் விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர் தரும் ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்ற கொடூரமான பிரிவை மட்டும் அப்படியே பயன்படுத்திக் கொண்டது. இந்த முரண்பாட்டை எவரும் கேள்வி கேட்கத் துணிய வில்லை. அப்படி பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தைக்கூட நேர்மையாகப் பதிவு செய்யவில்லை. குறிப்பாக, “பேரறிவாளன் கூறியபடி, நான் எழுத வில்லை அவர் தண்டிக்கப்படுவதற்காக மாற்றி எழுதினேன்” என்று வாக்குமூலத்தை பதிவு செய்த அய்.பி.எஸ். அதிகாரி தியாகராஜன், பிறகு ஒப்புக் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார். தூக்குத் தண்டனைக்குள்ளான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூன்று பேர் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்கள். 11 ஆண்டுகள் அது குடியரசுத் தலைவர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நால்வருக்கு தூக்குத் தண்டனை விதித்த மூத்த நீதிபதி கே.டி.தாமஸ், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட வில்லை. அவர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறுத்துங்கள் என்று சோனியாவுக்கு கடிதமே எழுதினார்.

கருணை மனு போடப்பட்டு 5 ஆண்டுகள் முடிந்துவிட்டாலே அவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைத்துவிடலாம் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்குக்கு நாள் குறித்தது அன்றைய ஒன்றிய காங்கிரஸ் ஆட்சி. குறிப்பாக உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்களின் துறை தான் தூக்கு தண்டனைக்கு நாளும் குறித்தது. செங்கொடி தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி தன்னைத் தானே எரித்துக் கொண்டு உயிர்த்தியாகம் செய்தார். தமிழகம் கொந்தளித்தது. சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனைக்கு தடை விதித்தது. அதே நாளில் முதல்வர் ஜெயலலிதா இதே கோரிக்கைக்காக தீர்மானத்தை சட்டமன்றத்திலும் நிறைவேற்றினார். இது இந்த வழக்கின் பின்னணி.

ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகள் சிறை வாழ்க்கை அனுபவித்த பிறகு அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. சிறை என்பது குற்றவாளிகளை சீர்திருத்த வேண்டிய இடமே தவிர, அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைக்கும் இடமல்ல. சிறையில் அவர்கள் எப்படி நன்னடத்தை யுடன் நடந்து கொண்டார்கள் என்பது தான் சிறை வாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான அடிப்படை. அவர்கள் எந்த குற்றத்தை செய்தார்கள் என்பது விடுவிப்பதற்கான அடிப்படை அல்ல.

இப்போது சிறைவாசிகளை விடுவிக்கும் உரிமை மாநில அரசுக்கு மட்டுமே உண்டு, ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை தடை படுத்த முடியாது. குடியரசுத் தலைவருக்கும் இதில் எந்தப் பங்கும் இல்லை என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியதோடு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. இதில் மனுவாதிகளும், காங்கிரசாரும் பொங்குவதில் என்ன நியாயம் இருக்கிறது ?

காந்தி கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேவை 15 ஆண்டுகளில் விடுதலை செய்தது இதே காங்கிரஸ் கட்சி ஆட்சி தான். குஜராத்தில் இரண்டாயிரம் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்தபோது அங்கே முதலமைச்சராக இருந்தவர் பிரதமராக இருக்கும் மோடி, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் தான். இந்த வரலாற்று உண்மைகளையெல்லாம் மறந்துவிட்டு பொங்கி எழ வேண்டாம்.

இராஜிவ் பங்கேற்ற ஸ்ரீபெரும்பந்தூர் கூட்டம் அவரது முதல் நிகழ்ச்சி நிரலில் இல்லை. கடைசியாகத்தான் சேர்க்கப்பட்டது. சேர்த்தது யார் என்பது இதுவரை விடை தெரியாத கேள்வி? இராஜிவ் காந்திக்கு ஸ்ரீபெரும்பந்தூரில் ஏதோ ஒரு ஆபத்து நேர இருக்கிறது என்று முன்கூட்டியே காங்கிரசாருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனாலும், கூட்டத்தை நிறுத்த அவர்கள் தயாராக இல்லை. கூட்டம் நடைபெறும் மே 21, 1991 அன்று காலை காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி தமிழ்நாடு ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கை சந்தித்து “ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை அனுமதிக்கக்கூடாது அந்த கூட்டம் ஆபத்தானது; ஆளுநர் தலையிட்டு தடுக்க வேண்டும்” என்று மனு கொடுத்தார். ஏடுகளில் பதிவான வரலாற்றுச் செய்தி இது. இராஜிவ் படுகொலையான பின்பு அவர் அருகே ஒரு காங்கிரஸ் தலைவர்கள் கூட இல்லாமல் போனது இன்னும் கூடுதல் வியப்பு. தலைவரைக் காப்பாற்ற அன்று அவரைச் சூழ்ந்து நிற்காமல், ஓடிப் பதுங்கியவர்கள் காங்கிரசார்! இன்று வாய்க் கட்டிப் போராட்டம் நடத்தும் தமிழ்நாடு காங்கிரசார் இதற்கெல்லாம் என்ன பதிலைக் கூறப்போகிறார்கள்?