நியூட்ரினோ ஆய்வு கூடம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதோடு, ‘இந்தத் திட்டத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தினமும்

3 இலட்சத்து 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றும் அனுமதி அளித்துள்ளது. இது முல்லைப் பெரியாறு அணையை நம்பி உள்ள விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதுபோல் உள்ளது.

இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் என்பவரால் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. தமிழக-கேரள இடையேயான உறவில் விரிசல் ஏற்படுத்துவதற்கான காரணமாகவும் இந்த அணைப் பிரச்சினை மாறி உள்ளது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் கடந்த 1979ஆம் ஆண்டு 136 அடியாக குறைக்கப்பட்டது.  அணை பலவீனமாக இருப்பதாகவும், அணையை பலப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி நீர்மட்டம் குறைக்கப்பட்டது.

பலப்படுத்தும் பணி முடிந்த பின்னர், கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் முட்டுக்கட்டைப் போட்டது. நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப் பட்டதால் விவசாயம் கடும் பாதிப்பைச் சந்தித்தது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் மூன்று போகம் விளைந்த சுமார் 14 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருபோக சாகுபடியாக மாறியது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் பஞ்சத்தையும், வறட்சியையும் சந்தித்தது.

இந்த நீண்டகால பிரச்சினைக்கு 2014ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புதான் தீர்வைக் கொடுத்தது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

ஆனால், தீர்ப்பு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்தும் பணியும் இன்னும் மேற் கொள்ளப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலை யில், சில ஆண்டுகளாக சீரற்ற மழைப் பொழிவு, வறட்சி போன்றவற்றால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு போக சாகுபடியே நடக்கவில்லை. நடப்பு ஆண்டில் இரண்டாம் போக சாகுபடியும் நடக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில், மதுரை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக முல்லைப் பெரியாறு அணையில் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு ரூ.1295 கோடி மதிப்பில் சிறப்பு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே, விவசாயத்துக்கும், குடிநீருக்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் தேனி மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரைக்கு குடிநீர் கொடுக்கும் திட்டத்துக்கே எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தாமல், அணையில் இருந்து ஒரு நாளைக்கு 3 இலட்சத்து 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரை நியூட்ரினோ திட்டத்துக்குப் பயன்படுத்துவது என்பது இருக்கும் நீரையும் பறித்துக் கொடுக்கும் முயற்சி என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், மாவட்டத்தில் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.