மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (சென்ற இதழ் தொடர்ச்சி)

பெரியாரையும் அம்பேத்கரையும் சமகால இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நிறுத்துகிறோம். அவர்கள் நாத்திகர்கள், அவைதீகர்கள் என்பதாலா? அவ்வாறு நிறுத்துவது நம் சமகாலத் தேவைப் பாடுகளை நிறைவு செய்ய முடியுமா?

பெரியாரையும் அம்பேத்கரையும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நாம் நிறுத்தவில்லை. ஹைதராபாத்தில் ரோஹித் வெமுலாவை, ஜேஎன்யூ மாணவர்களை நாமா இந்துத்துவத்திற்கு எதிராக நிறுத்தினோம். இல்லை, மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானாவில் தலித்துகள் தாக்கப்பட்டது, தாக்கப்படுவது, அதனால் தலித்துகள் இந்துத்துவத் திற்கு எதிராகப் போராடி வருவது ஆகியவற்றைப் பார்த்தால் நாமாக தலித்துகளை இந்துத்துவத்திற்கு எதிராக நிறுத்தவில்லை. இந்துத்துவமே அவர்களை எதிரிகளாகக் கருதுகின்றது; எதிரிகளாக ஆக்கி வைத்துள்ளது. இதை இந்துத்துவ வாதிகள் சில சமயங்களில் வெளிப்படையாகப் பேசுகின்றார்கள்; சில சமயங்களில் மறைமுகமாகப் பேசுகின்றார்கள். ஆனால் மிகுந்த வக்கிரத்தோடு செயல்படுகின்றார்கள். அதனால் பெரியாரையும் அம்பேத்கரையும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நாம் நிறுத்து கிறோம் என்பது கிடையாது.

ரொம்ப முக்கியமானது, இங்குச் சமூகப் பிரச்சினைகளுக்கு ஒரு சமயப் புனிதம் கொடுத்து வைத்துள்ளார்கள். இப்போது மேற்கத்திய ஆய்வுகளில் பௌத்தம், சீன, ஜப்பானிய மரபுகள் உள்ளிட்டு கீழைநாடுகளின் சமயங்களைக் குறிக்க, னாயசஅiஉ சநடபைiடிளே என்ற சொல்லைப் பயன்படுத்து கிறார்கள். கிறித்துவத்தையும் இசுலாமையும் குறிக்க யசெயாயஅiஉ சநடபைiடிளே என்ற சொல்லைப் பயன்படுத்து கின்றார்கள். ஆனால் வருணாசிரமத் தர்மம் வருணத் தர்மம், சாதித் தர்மம், சனாதன தர்மம், சுதர்மம், மனுதர்மம் போன்ற கருத்தாக்கங்களை, சொல்லாடல்களை எல்லாம் ஏராளமாகப் பரப்பி, பயன்படுத்தி நிற்கின்ற இந்துத்துவ அரசியல், இந்த தர்மம் என்ற சொல்லையே ரொம்ப கேவலப்படுத்தி வைத்திருக்கிறது.

சமூகப் படி நிலைகளுக்குச் சமயரீதியான புனிதம் கற்பித்தத்தை இந்துத்துவவாதிகள் சுயவிமர்சனம் செய்து கொண்டதே கிடையாது. இந்தப் புனிதம், கற்பித்தல் குறித்து, எந்தவொரு மடாதிபதியோ, எந்தவொரு சங்கராச்சாரியாரோ, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்தவொரு சைவ மடத் தலைவரோ அதிகாரப்பூர்வமாக சுயவிமர்சனம் செய்து கொண்டதே கிடையாது. மத அந்தஸ்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு மடாதிபதியோ, யோகியோ யாராவது ஒரு இந்துமதத் தலைவர், வருணாசிரமம், சாதி வேறுபாடுகள் இந்து மதத்தில் ஏதோ ஒரு காலத்தில் நுழைந்துவிட்டன. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று வெளிப்படையாக, பிசிறுகள் இல்லாமல் சொன்னது கிடையாது. ஏதாவது அக்கன்னா, இக்கன்னா போட்டுத்தான்அவர்கள் சொல்கிறார்களே தவிர, வெளிப்படையாகப் பேசுவது கிடையாது.

ஆகவே அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் தேவை, கால இயல்பு, முக்கியத்துவம் எதில் உள்ள தென்றால், தாங்கள் தேர்ந்துகொண்ட விமர்சனக் கருவி, அதை எந்தளவு கூர்மைப்படுத்தியுள்ளார்கள் என்பது போன்ற மற்ற விசயங்களெல்லாம் ஒருபுற மிருக்க, அவர்கள் தேர்ந்துக் கொண்டு பேசிய பிரச்சினையின் தளத்தில் உள்ளது. அதுவே, அவர்களை இந்துத்துவம் நிராகரிக்கும்படி ஆக்கி விடுகின்றது. அதனால் அவர்களைப் பற்றி நாம் மீண்டும் மீண்டும் பேச வேண்டியதாகவும் உள்ளது.

பெரியாருக்கு தத்துவப் பார்வை உண்டா? அல்லது நடைமுறை ரீதியாக பார்ப்பனியத்தை, சாதியத்தை, இந்து மதத்தை எதிர்த்த, பார்ப்பனரல்லாத இடைநிலைச் சாதிகளின் நலன்கள் முன்னிறுத்திய சொல்லாடல்கள்தாம் பெரியார் சிந்தனையா?

இந்தக் கேள்வியில், பெரியாருக்குத் தத்துவப் பார்வை உண்டா, இடைநிலைச் சாதிகளின் நலன்கள் முன்னிறுத்திய சொல்லாடல்கள்தாம் பெரியார் சிந்தனையா என்ற இந்த இரண்டு சொற்றொடர்களும் மிகக் கடுமையானவையாகப் படுகின்றன.

அந்தோனியா கிராம்சி எல்லோருக்கும் தத்துவப் பார்வைஇருக்கின்றது என்று சொல்வார். தத்துவம் என்பது என்னமோ தலையில் கொண்டை முளைத்தவருக்கு மட்டும்தான். பல்கலைக்கழகப் படிப்பாளிகளுக்கு மட்டும்தான். பெரிய மேதாவிகளுக்கு மட்டும் தான் என்பதைக் கிராம்சி ஏற்றுக் கொள்ள மாட்டார். அவரைப் பொறுத்த வரையில், அவரது நாட்டுச் சூழலில் கிறிஸ்தவப் பங்குத்  தந்தை, பள்ளிக்கூட ஆசிரியர், அந்த வட்டார மக்களை ஒருங்கிணைத்துப் போராடும் செயல்பாட்டாளர்கள் ஆகிய எல்லோருக்குமே தத்துவப் பார்வை உண்டு. ஆகவே தத்துவப் பார்வை ஒரு அபூர்வமான சங்கதி அல்ல. அசாதரணமான ஆற்றல் ஒன்றுமில்லை. ஒரு வகையில் அது சாதாரணப் பார்வைதான். ஆகவே பெரியாருக்கு மிக வலுவான, வளமான தத்துவப் பார்வை உண்டு என்பதை மேலே உரையாடிய வற்றால் அறியலாம்.

இடைநிலைச் சாதிகளின் நலன்களை முன்னிறுத்திய சொல்லாடல்கள்தாம் பெரியாரின் சிந்தனைகள் என்ற குற்றச்சாட்டு திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகின்றது. ஒரு கட்டத்தில் இதைத் தோழர் ரவிக்குமார் ஆரம்பித்து வைத்தார். அது தொடர்ந்து பேசப்பட்டது. இந்த இடத்திலும் நீண்ட நெடிய கால வரலாறு கொண்ட பார்ப்பன எதிர்ப்பை உற்றுப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

தமிழ்நாட்டின் சமகால வரலாற்றில்  இடைநிலைச் சாதிகளின் நலன்களை முன்னெடுத்ததில் பெரியாரையும் தேர்தல் அரசியல் கட்சிகளையும் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

பார்ப்பன எதிர்ப்பு புத்தர் காலத்தில் தொடங்கி, சாருவாகம் - உலகாயதம், தாந்திரிகம், தாந்திரிக அடிப்படை  கொண்ட சித்தர் மரபு, பக்தி மரபு, இந்தோ - இசுலாமிய மரபு, சந்தர் மரபு, கபீர் மரபு, குருநானக்கினுடைய சீக்கியம் ஆகிய பல இடங்களில் உள்ளன. பல காலங்களில், பல மரபுகளில் பார்ப்பன எதிர்ப்பில் சத்திரியர்கள், வைசியர்கள், கறாராகக் கலைச் சொற்களைக் கொண்டு குறிப்பிட்டால் கைவினைஞர்கள் போன்ற இடைநிலைச் சாதிகள் தாம் முன்னிலை எடுத்து நின்றிருக்கின்றார்கள். கைவினைஞர்களுக்குச் சித்தர் மரபோடு ஒரு நெருங்கிய தொடர்புண்டு.   சித்தர் மரபில் தனிப்பட்ட திறன்களை மையப்படுத்துவதால், அதனைக் கைவினைஞர் சிந்தனை என்று சொல்வார்கள். ஆகவே பார்ப்பன எதிர்ப்பு என்பது பார்ப்பனரல்லாத எல்லாச் சாதிகளிடமும் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்து வந்திருக்கின்றது. அது நீண்ட கால வரலாறு கொண்டது.

ஆகவே, இந்தக் குற்றச்சாட்டு என்பது ஒரு கொடூரமான குற்றச்சாட்டு என்றும் கொள்ள வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. சாதிகளின் மோதல் தளத்தில், இடைநிலைச் சாதிகளும் பார்ப்பன எதிர்ப்பு வேலைகளைச் செய்துள்ளார்கள்.

தமிழ்நாட்டிலும் இதே மாதிரி நடந்து வந்திருக்கலாம். தமிழ்நாட்டில் சித்தர் மரபுக்கு உள்ள சமூக அடித்தளங்கள் இன்னும் கறாராகக் கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டில் பக்தி வடிவத்தின் சிக்கல்களும் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. வைணவத்தில் உள்ள சில தீவிரமான நிலைகள் எல்லாம் எவ்வாறு உருவெடுத்தன. தமிழில் இன்னும் ஆழ்ந்து ஆய்வு செய்ய வேண்டிய வட்டாரங்களெல்லாம் அதிகம் இருக்கின்றன. இது ஒரு பக்கம்.

தமிழ்நாட்டின் சமகால வரலாற்றில் இடைநிலைச் சாதிகளின் நலன்களை முன்னெடுத்ததில் பெரியாரையும் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற தேர்தல் அரசியல் கட்சிகளையும் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்துப் பார்க்காததால், சில சமயங்களில் எல்லாப் பழிகளையும் பெரியார் மீதே சுமத்தி விடுகின்றோம். பெரியாரின் தனிப்பட்ட பண்பு நலன்களே சற்று வித்தியாசமானது. அவை அராஜகப் பண்பு கொண்டவை. இந்த விசயம் பற்றி, எஸ்.வி.ஆரை (எஸ்.வி.ராஜதுரை - பெரியாரிய ஆய்வாளர்) விட, பின்னை நவீனத்துவங்கள் வந்த காலத்தில் தெரிதா, பூக்கோ ஆகியோரை எல்லாம் முன்வைத்து அ.மார்க்ஸ் அதிகம் சிந்தித்துள்ளார். பாரதியிடம் எப்படி ரொமாண்டிக்கான (கற்பனை பெருமிதம்) கருத்துகள் இருந்தனவோ, அப்படி பெரியாரிடம் ஒரு அராஜக வெடிப்புகள் (மூடி மறைத்தல் இல்லாத சுடும் சொற்கள்), தீப்பொறிகள் போல கருத்துகள் வந்து விழும். அவர் தன்னை ஒரு மேட்டுக்குடியாக, அறிவாளியாகக் காட்டிக் கொள்ளவில்லை. பட்டறிவுத் தளத்திலிருந்து பேசிய தெறிப்புகள் அவரிடம் உண்டு.

ஆகவே அவர் திட்டமிட்டு இடைநிலைச் சாதிகளின் நலன்களைப் பற்றிய உணர்வோடு செயல்பட்டார், அவற்றை முன்னிறுத்திப் பேசினார் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அவர் முன் வைத்த விவாதத் தளங்கள் நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்லும் பண்பு கொண்டவை. அந்த விவாதத் தளங்களின் அடிப்படை விரிவுநிலைப் பண்புகள் மிகப் பரந்தவை. அவற்றால்தாம் நம்மிடையே அவர் தொடர்ந்து நிற்கின்றார்.

பெரியாரிடம் தேர்தல் அரசியல் இல்லை. தேர்தல் அரசியல் நலன்களுக்காக, அந்த ஊரில் உள்ள பெரும்பான்மை சாதி எது, அதிலிருந்து ஓர் ஆளை எடுப்பது, அந்தச் சாதி பற்றி பெருமைப்படுத்திப் பேசுவது எல்லாம் பெரியாரிடம் இல்லை. ஆனால் இவையெல்லாம், இடைநிலைச் சாதிகளின் நலன்களை முன்வைத்துத் தேர்தல் அரசியலைக் கையிலெடுத்த திராவிட இயக்க அரசியல் கட்சிகளிடம் உண்டு. இந்தக் கட்சிகள் இடைநிலைச் சாதிகளை முன்னிறுத்தி, ஆட்களைத் தேர்ந்தெடுத் துள்ளார்கள். ஓட்டு வங்கிகளாக அவர்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். சில சமயங்களில், சில மோதல்களில் இடைநிலைச் சாதிகளை ஆயுதப் பாணிகள் ஆக்கியுள்ளனர். ஆகவே, பெரியாரையும் தேர்தல் அரசியல் திராவிடக் கட்சிகளையும் பிரித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு பிரித்துப் பார்த்தால் தான் பெரியாரைப் புரிந்து கொள்ள முடியும்; இடைநிலைச் சாதிகளின் நலன்களை முன்னிறுத்திய சொல்லாடல்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாது என்று நினைக்கிறேன்.

சாதி, வருணம், பார்ப்பனியம், இந்து மதம் ஆகியவற்றுக்கு எதிராக, வலுவாகப் பெரியார் நின்றிருக்கின்றார். அகில இந்திய அளவில், தமிழ் நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக் கிறார் என்று இன்று உணர முடிகிறது. மதம் சார்ந்தவர்களாக இருந்த போதிலும், கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு பெரியாரை நோக்கி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.  ஏனென்றால் பெரியார்தான் இந்துப் பெரும்பான்மை வாதத் தேசியத்திற்கு எதிராக வலுவான தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அவரைச் சின்ன சின்ன குற்றச்சாட்டுகளை முன் வைத்துப் புறக்கணிப்பதில் பயனில்லை என்றுதான் நான் எண்ணுகிறேன். இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இழப்புகளை யும் தோல்வி களையும் சந்திக்க வேண்டி வரும் என்று நினைக்கிறேன்.

(தொடரும்)