புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “பட்டியல் இனப் பிரிவு” ஒன்றே தேவை இல்லை; அதை நீக்கிவிட வேண்டும் என்றும், இதுவரை பட்டியல் இனப் பிரிவால் இந்தப் பிரிவில் அடங்கியுள்ள மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்க வில்லை என்றும், ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ‘தேவேந்திர குல வேளாளர்களை’ பட்டியலினப் பிரிவி லிருந்து நீக்கி அவர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் தனி ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளதோடு ஒவ்வொரு ஜாதிக்கும் தனித் தனி வரலாறு கலாச்சாரம் உண்டு” என்று கூறியுள்ளார். ‘தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனப் பிரிவில் யார் சேர்த்தார்கள் என்றே தெரியவில்லை’ என்று கூறியுள்ள அவர், “இந்தியாவில் ஒரே பட்டியலின் கீழ் அனைத்துப் பிரிவு மக்களையும் இணைத்ததே அம்பேத்கர் செய்த தவறு” என்றும் கூறியிருக்கிறார். தனித் தொகுதி முறையை காந்தியாருக்காக அம்பேத்கர் விட்டுக் கொடுத்ததை ஏற்க முடியாது என்றும்,  தேர்தலில் தனித் தொகுதி முறையும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தலித் மக்கள் மீதான அடக்குமுறை அதிகம் என்றும், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிகள் தமிழகத்தை கடைசி நிலையில் வைத்து விட்டன என்றும், ‘நியூஸ் 7’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

‘நீட்’ தேர்வு தேவை என்று வலி யுறுத்திய அவர், கணிதம், விஞ்ஞானத் தில் 100 சதவீத மதிப்பெண்களை எடுக்கக் கூடிய மாணவர்கள் நீட் தேர்வை சந்திக்க முடியாதா என்று கேட்டார். ‘இமயம்’ தொலைக் காட்சிக்கு அளித்த நேர்காணலில் இந்தியை எதிர்ப்பது என்பது அரசியல் வெற்று முழக்கம். தமிழக பள்ளிகளில் இந்தியைப் படிக்க வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், இந்தியை ஆதரித்து, தமிழகம் முழுதும் தங்கள் கட்சி சார்பில் பரப்புரை இயக்கம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

‘ஹைடிரோ கார்பன்’, ‘மீத்தேன்’ போன்ற திட்டங்களை எதிர்ப்பது தவறு என்று கூறிய அவர், இத் திட்டங்களை எதிர்த்தால் பிறகு தமிழ் நாட்டுக்கு தேவையான எரிபொருள் எப்படி கிடைக்கும் என்று வினா எழுப்பினார். எந்த ஒரு நிலத்திலும் கனிமவளத்தை தோண்டி எடுக்க அரசுக்கு உரிமையுள்ளது என்று கூறிய அவர், நிலத்தின் முழுமையான உரிமை அரசுக்கே உரியது என்றும் கூறினார்.

விவசாயிகள் கோரிக்கையில் உள்ள நியாயத்தைத் தான் ஆதரித்தாலும், டெல்லியில் அய்யாக்கண்ணு நடத்தும் போராட்ட வடிவங்கள் ‘அவமானகரமாக’ என்று கூறிய டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ்நாட்டின் அடிப்படையான பிரச்சினை விவசாயிகள் பிரச்சினைகள், விவசாயத்துக்கு அடிப்படையான சமூகம் - தேவேந்திர குல வேளாளர் சமூகம்; எனவே தேவேந்திர குல வேளாளர் சமூக வளர்ச்சி தான் - விவசாய வளர்ச்சி என்றார். தனித் தொகுதி முறை மட்டும் இருந்திருக்கா விட்டால், தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கே வந்திருப்போம். இடஒதுக்கீடு இந்தப் பட்டியல் தான் தடைபடுத்தி விட்டது என்றும் அவர் கூறினார்.

தமிழ் தேசியம், தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கைகள் எல்லாம் முடிவு பெற்றுவிட்டன. இப்போது நாம் இருப்பது இந்திய தேசியத்தில்தான். எனவே இந்திய தேசப் பற்று, நமக்கு வேண்டும் என்று ‘இமயம்’ தொலைக் காட்சி நேர்காணலில் அவர் கூறிய தோடு, தங்களது ‘தேவேந்திர குல வேளாளர்’ அடையாள மீட்பு கோரிக்கைக்கு பா.ஜ.க. ஆதரவு காட்டும்போது, அவர்களோடு கரம் கோர்க்க தயாராக இருப்பதாகக் கூறினார்.

அருந்ததியினருக்காக தனியாக 3 சதவீத இடஒதுக்கீடு அளித்த பிறகு, அதையும் தாண்டி, பட்டியல் இனப் பிரிவில் உள்ள பிற பிரிவினருக்கான இடங்களையும் அருந்ததியினர் ஆக்கிரமித்துக் கொள்வதை ஏற்க முடியாது என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. அணிக்குள் இப்போது நடக்கும் குழப்பங்களுக்கு பா.ஜ.க. தான் காரணம் என்பதை தன்னால் ஏற்க முடியாது என்றும், இதை கூறு வதற்காக தன்னை பா.ஜ.க. ஆதரவாளர் என்று கூற முடியாது என்றும், ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறினார். பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து களுக்கு பதிலளித்து இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் வெளியிட்ட அறிக்கையை ‘தமிழ் இந்து’ நாளேடு வெளியிட்டுள்ளது. மே 8ஆம் தேதி வெளி வந்துள்ள  செ.கு. தமிழரசன் அவர்களின் மறுப்பு அறிக்கை:

டாக்டர் கிருஷ்ணசாமியின் பேட்டியை ‘5 கேள்விகள் - பதில்கள்’ பகுதியில் படித்தேன். இடஒதுக்கீடு பற்றிய அவரது கருத்துகளில் நான் முரண்படுகிறேன். ஒருவர் ஒரு கருத்தைச் சரியென்று கூறி, அதில் உறுதியாக இருக்கும்போது, அதைப் பற்றி விமர்சனம் செய்வதே சரியான விமர்சனமாக இருக்க முடியும். அம்பேத்கருக்கு புனே ஒப்பந்தத்தில் உடன்பாடு கிடையாது. அவர் கையெழுத்திடுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டார். அப்படி இருக்கும்போது, தற்போதைய தேர்தல் இடஒதுக்கீட்டு முறையை ஏற்றுக்கொண்டார் என்று அம்பேத்கரைக் குற்றம்சாட்டுவது தவறு.

கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் என்று மூன்று வகைகளில் தற்போது இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடுகள் அரசியல் சாசனத் தால் உறுதிப்படுத்தப்பட்டவை. அரசியல் இடஒதுக்கீடு யாரும் எந்தக் கோரிக்கையும் வைக்காமலே நாடாளுமன்றத்தால் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வாய்பைப் பயன்படுத்தித் தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, தற்போது அதைக் குறைசொல்வதில் எந்த தார்மிக நியாயமும் இல்லை.

எங்களைப் பட்டியல் சாதிகளின் பிரிவில் சேர்த்தது தவறு என்கிறார் கிருஷ்ணசாமி. அவர் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. பட்டியல் சாதிகள் என்ற பிரிவை உருவாக்கியது சைமன். 1928-ல் இந்தியாவுக்கு சைமன் கமிஷன் வந்தபோது, ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய உரிமைகளை வழங்கிய பிறகுதான் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து உருவாக்கப் பட்ட பட்டியல் அது. ஏறக்குறைய இரண்டாண்டு காலம், 700-க்கும் மேற்பட்ட சாதிகள் பரிசீலிக்கப்பட்டு, இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டது. எங்களைப் பட்டியல் சாதியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சைமன் கமிஷனில் யார் மனு கொடுத்தார்கள்?

அவர்களின் முப்பாட்டன்கள் யாரோ சைமனிடம் மனு கொடுத்த தால்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட் டிருக்கிறது.ஒரு தலித் தலைவருக்கு இந்த வரலாறு எப்படித் தெரியாமல் போனது? மிக முக்கியமாக, கிருஷ்ண சாமி ஒட்டுமொத்த சமூகத் தன்மையைப் புரிந்துகொள்ளவில்லை. எந்தப் பெயர் வைத்துக்கொண்டாலும் சமூகம் ஒடுக்கப்பட்டவனாகத்தான் பார்க்கிறது என்பதுதான் உண்மை. அடித்தட்டு மக்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை வலியுறுத்திய அம்பேத்கரை அரசியல் லாபங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். வட்டமேஜை மாநாட்டில் காந்தி யிடம் அம்பேத்கர் கேட்ட அந்தக் கேள்விதான் நினைவுக்கு வருகிறது, ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் என்ன ஒற்றைப் பிரதிநிதியா?’

- செ.கு.தமிழரசன், மாநிலத் தலைவர், இந்தியக் குடியரசுக் கட்சி.