பிறப்பால் பார்ப்பனரான வைணவ மதப் பிரிவைச் சார்ந்த இராமானுஜரின் ஆயிரமா வது ஆண்டு விழா இப்போது கொண் டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவாரங்கள் - வைணவப் பார்ப்பனர்கள் - இராமானுஜருக்கு விழா எடுக்கிறார்கள். ஆனால் இராமானுஜர் முன் வைத்த கருத்து களை இவர்கள் பின்பற்று கிறார்களா?

இராமானுஜர், பாரதியைப் போல் ஒடுக்கப்பட்ட ஜாதியினரும் ‘பூணூல்’ அணிந்து, ‘பிரம்மத்தை’ அடையலாம்; ‘பிராமணர் என்பது பிறப்பால் வருவது அல்ல’ என்று கூறிய ஒரு சீர்திருத்தவாதி. 3 சதவீத பார்ப்பனர்கள், தங்கள் பிறவி மேலாண்மையின் அடையாளமாக அணியும் பூணூலை மற்றவர்களுக்கு அணியச் சொல்வதைவிட பிறவி அகங்காரத்தை வெளிப்படுத்தும் பூணூலை பார்ப்பனர்களே ஏன் கழற்றி வீசக் கூடாது என்பதுதான் பெரியார் இயக்கம் முன் வைத்த கேள்வி. அரிசியில் கல் கலந்துவிட்ட நிலையில் கல்லைப் பொறுக்கி, அரிசியைத் தூய்மைப்படுத்த வேண்டுமே தவிர, அதைச் செய்யாது, அரிசிகளை பொறுக்கிக் கொண்டிருப்பது அறிவுடைமையாகுமா என்று பெரியார் கேட்டார்.

இத்தகைய சிந்தனைகளுக்கு ஆணி வேராக இருப்பது எது? வர்ணாஸ்ரமத்தை நியாயப்படுத்திக் கொண்டே ஜாதிய வேறுபாடுகளை மட்டும் எதிர்க்க வேண்டும் என்ற மனப்போக்குத்தான். இராமானுஜரும் காந்தியும் பாரதியும் இதே சிந்தனை கொண் டவர்களே. உண்மையில் வர்ணாஸ்ரம தர்மத்தில்கூட அந்த சிந்தனை உருக்கொண்ட வேத காலத்தில் நெகிழ்ச்சிப் போக்கு

அதில் அடங்கியிருந்தது உண்மைதான். பிராமணனாகவும், சத்திரியனாகவும், வைசியனாகவும், சூத்திரனாகவும் ஒருவரை அடையாளப்படுத்தும் உரிமை அவனுக்கு வேதம் கற்பித்த ‘குரு’வுக்கு இருந்தது. ‘குரு’வுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த இந்த உரிமை, பிறகு மிகவும் சூழ்ச்சிகரமாக குடும்பத்தின் தலைவனான தந்தைக்கு மாற்றப்பட்டபோது தான், ‘பிராமணனுக்கு’ உரிய ஆச்சார பழக்க வழக்கங்களை மீறியிருந்தாலும், அதற்கான ‘கல்வி’த் தேர்ச்சி பெறாமல் போனாலும் பார்ப்பனத் தந்தைக்கு மகனாகப் பிறந்துவிட்ட அனைவருமே ‘பிராமணன்’ என்ற நிலை உறுதியாக்கப்பட்டுவிட்டது என்று அம்பேத்கர் கூறுகிறார். அந்த ‘பிறவி’ உரிமையை பார்ப்பனர்கள் இப்போதும் விட்டுத்தர தயாராக இல்லை. அதே பார்ப்பன மேலாதிக்கத்தை விட்டு விடாமலேயே இராமானுஜருக்கும் விழா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இராமானுஜர் பார்ப்பனர் என்றாலும் அவரது சமூக சீர்திருத்தத்தை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,

“முக்தியோ சிலர் சொத்தென இருக்கையில்

இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனால்

இராமானுசரை ஈன்றதன்றோ!’

- என்று தனது கவிதையால் போற்றினார்.

திருக்கச்சி நம்பி என்ற ‘வைசியரை’ (செட்டியார் ஜாதி) குருவாக ஏற்றார் இராமானுஜர். தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்த திருக்கச்சி நம்பியை இராமானுஜரின் துணைவியார் அவமதித்ததை எதிர்த்து சீற்றம் கொண்டார் என்று அவரது வரலாறு கூறுகிறது. “ஜாதி வேறுபாடு சனாதன தர்மத்தின் சாபக்கேடு. “பிறப்பினால் உயர்வு தாழ்வு என்பது பூர்வஜென்ம கர்மபலன்களினால் ஏற்படு கிறது என்பது மிகப் பெரும் கொடுமை” என்ற இராமானுஜரின் கருத்தை அவருக்கு விழா எடுக்கும் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்று கேட்க விரும்பு கிறோம். ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து’ உச்சநீதிமன்றம் போனதே, இந்த வைணவப் பார்ப்பனர்கள் தானே!

சமூக வாழ்வில் வைணவ ஜாதிய அடை யாளங்களைப் பேணி, வாழ்ந்து கொண்டு, இராமானுஜருக்கும் விழா எடுக்கிறார்கள். இதுதான் பார்ப்பனர்கள் காலங்காலமாக பின்பற்றும் வரலாற்றுச் சூழ்ச்சி.

‘நமோ நாராயணா’ மந்திரத்தை புரிந்து அறிவதற்காக திருப்பெரும்புதூரிலிருந்து திருக்கோட்டியூரில் இந்த பெரிய நம்பி இருக்குமிடத்தை நோக்கி 18 முறை நடந்தே சென்றார்; 30 நாட்கள் பட்டினி கிடந்தார் என்று இராமானுஜர் வரலாறு கூறுகிறது. அவ்வளவு அலைக்கழிப்புக்குப் பிறகு, நம்பியிடமிருந்து தான் கற்ற மந்திரத்தை திருக்கச்சியூரில் ஒரு திருவிழாவின்போது அந்த ஊர்க்கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு, “நான் அறிந்த மந்திரத்தை அனைத்து ஜாதியினருக்கும் கூறுகிறேன்; இதை அறிந்து எந்த ஜாதியினரும் சொர்க்கம் போகலாம்” என்று கூவியிருக்கிறார்.

“நமது குலத்துக்கு மட்டுமே காப்பாற்றப் படவேண்டிய மந்திர இரகசியத்தை - குருவுக்கு தந்த உறுதியை மீறி, அனைவரிடமும் கூறி விட்டாயே, நீ நரகத்துக்குத்தான் போவாய்” என்ற திருக்கோட்டியூர் நம்பி சாபமிட்டபோது, “நரகம் சென்றாலும் பரவாயில்லை”

என்று கூறினாராம் இராமானுஜர். இராமானுஜருக்கு விழா எடுக்கும் சங்பரிவாரங்கள், இராமானுஜரின் இந்த ஜாதி எதிர்ப்பைப் பேசுகிறார்களா? ஏன் பேசவில்லை? என்று கேட்கிறோம்.

‘தீண்டப்படாதவர்களாக’ ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை ‘திருக்குலத்தார்’ என்று இராமானுஜர் பெயர் சூட்டி பெருமைப்படுத்த முயன்றார், எந்த பார்ப்பனராவது ‘திருக்குலத்தார்’ என்று அங்கீகரித்து வைணவக் கோயிலுக்குள் ‘ஆகம பூஜை’ செய்ய இன்று அனுமதிக் கிறார்களா? ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற தமிழ் இலக்கியத்தை காஞ்சிபுரம் மணவாள மாமுனிகள் என்ற வைணவ கோயில் சன்னதியில் பாடுவதற்கு இப்போதும் வைணவப் பார்ப்பனர்கள் தடைப்படுத்தியே வருகிறார்கள்.

இராமானுஜர் ஆயிரம் ஆண்டு விழா நடத்தி, அந்த விழாவையும்கூட வேத பார்ப்பனிய மதத்தின் பிரச்சாரமாகவே நடத்துவோரைக் கேட்கிறோம்.

வைணவக் கோயில்களில் இராமானுஜர் காட்டிய வழியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக கர்ப்பகிரகத்தை திறந்துவிட முன் வருவார்களா? தமிழ் வழிபாட்டை அனுமதிப்பார்களா? விழா எடுக்கும் சங்பரிவாரங்களாவது இதற்கு குரல் கொடுக்க முன் வருமா? 

Pin It