ஈழத் தமிழர்கள் உரிமைக்காக உருவாக்கப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்பு, கடந்த 24.05.09 அன்று திருச்சிராப்பள்ளியில் கூடி தற்போது உருவாகியுள்ள சூழல் குறித்து விவாதித்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெ. மணியரசன் (பொதுச் செயலாளர், தமிழ் தேசப் பொதுவுடைமை இயக்கம்), தியாகு (பொதுச் செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்) ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈழத்தமிழர்கள் உயிரையும், உரிமையையும் காக்க உடனடியாகச் செய்ய வேண்டிய பணிகள் பற்றி விவாதித்துப் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் முதல்கட்டமாக 9.6.2009 சென்னையிலும், 10.6.2009 சேலத்திலும், 11.6.2009 ஈரோட்டிலும், ‘ஈழம் - நாம் என்ன செய்ய வேண்டும்?’ என்ற தலைப்பில் பெருந்திரள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இப்பெருந்திரள் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். ஒத்த கருத்துள்ள பிற அமைப்புகளையும் தமிழின உணர்வாளர்களையும் இணைத்துக் கொண்டு இப்பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.

தீர்மானங்கள்

• சிங்கள இனவெறி அரசு நடத்தும் மிகக் கொடிய தமிழின அழிப்புப் போரில் கடந்த ஓராண்டில் இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உரிய முறையில் உடனடி மருத்துவம் கிடைக்காததால் படுகாயமுற்ற பல்லாயிரம் பேர் இறந்துவிட்டனர். எஞ்சியிருக்கும் பல்லாயிரம் பேரையாவது பாதுகாக்கும் உடனடிப் பொறுப்பு ஐ.நா. மன்றத்துக்கும் உலக நாடுகளுக்கும் உள்ளது.

படுகாயமடைந்தோர் மட்டுமின்றி, இந்தப் போரினால் உற்றார் உறவினரையும், தங்கள் விடுதலைக்குப் போராடிய போராளிகளையும் பறிகொடுத்து மன அதிர்ச்சிக்கு ஆளாகி ஏராளமானோர் உள்ளனர். இவர்களுக்கும் உடனடி மருத்துவம் தேவைப்படுகிறது. எனவே ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும்.

• போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நடைபெறும் அனைத்து வகை துயர்துடைப்புப் பணிகளும் ஐ.நா. மன்றம் அல்லது பன்னாட்டுக் குழுவினரின் நேரடி மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

இத்துயர் துடைப்புப் பணி, இனவெறிப் போரை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் மூலம் நடந்தால் உதவிகள் பாதிப்புற்ற மக்களுக்குப் போய்ச் சேர மாட்டா. சிங்கள இனவெறி அரசு இவற்றையும் தன் இனவெறி நலன்களுக்கே பயன்படுத்திக் கொள்ளும் என அஞ்சுகிறோம்.

• இடைத்தங்கல் முகாம் என்றும் நல்வாழ்வுக் கிராமம் என்றும் பெயர் சூட்டி இராஜபக்சே அரசு தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் முகாம்கள் அனைத்தும் இட்லரின் வதை முகாம்களை ஒத்தவை என்பதை உலகு அறியும். இம்முகாம்களில் பல்லாண்டுகளாகத் தமிழர்களை அடைத்து வைக்க இராஜபக்சே திட்டமிட்டிருக்கிறார். இவ்வாறு தமிழர்களை இடம்பெயர்த்து அடைத்து வைத்துவிட்டு, அவர்களின் சொந்த ஊர்களில் சிங்களர்களைக் குடியேற்றுவது இராஜபக்சேயின் திட்டம். வரலாற்று வழியில் நிலைத்துள்ள தமிழர் தாயகப் பகுதிகளை ஒழித்துக் கட்டி அவற்றைச் சிங்களப் பகுதி ஆக்குவதே அவரது நோக்கம்.

எனவே ஐ.நா. மன்றமும் உலக நாடுகளும் தலையிட்டு தமிழ் மக்களை முகாம்களிலிருந்து விடுவித்து, அவர்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆவன செய்ய வேண்டும். மீள் குடியமர்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.

• இப்போது ஏற்பட்டுள்ள பேரழிவைப் பயன்படுத்தித் தமிழர் தாயகப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடைபெறவிடாமல் ஐ.நா. மன்றமும் உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.

• இராஜபக்சே அரசு தமிழீழ மக்களுக்கு எதிராக நடத்தி வருவது இன அழிப்புப் போராகும். இந்தப் போரில் சிங்கள இராணுவம் கொத்துக் குண்டுகளையும், வேதிக் குண்டுகளையும் வீசியும் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்திலிருந்த பொதுமக்களை பீரங்கிகள், எறிகணைகள், வான்வழி குண்டுவீச்சு இவற்றால் தாக்கியும் கொலை செய்தும், வெள்ளைக் கொடியோடு பேச்சு நடத்த வந்தவர்களைப் படுகொலை செய்தும் பன்னாட்டுச் சட்டங்களையும் போர்நெறி முறைகளையும் மீறியுள்ளது.

ஆகவே, இலங்கையின் அதிபர் இராஜபக்சே, பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய இராஜபக்சே, படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைப் போர்க் குற்றங்களுக்காகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும், இனப் படுகொலைக் குற்றங்களுக்காகவும் தளைப்படுத்தி பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்புக் குழுவைக் கேட்டுக் கொள்கிறோம்.

• தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் உலக அளவில் ஏற்புடைய நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்தி உயிரிழப்புகள், உடைமையிழப்புகள் தொடர்பான கணக்குப் பொறுப்பைத் தீர்வு செய்வதற்கு ஐ.நா. மன்றம் ஆவன செய்ய வேண்டும்.

• தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அத்தடையை நீக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.