ஜெயலலிதாவின் தீவிர எதிர்ப்பாள ராகவும், கலைஞர் கருணாநிதியின் தீவிர ஆதரவாளராகவும் வீரமணியும், விடுதலையும் பேசியும் எழுதியும் வரும் நிலையில் கடந்த காலங்களில் - கி.வீரமணி, செயலலிதா, கலைஞர் கருணா நிதி பற்றி பேசிய கருத்துகளை இங்கே தொகுத்து தந்துள்ளோம்.

கலைஞரின் பார்ப்பனத்தனம்!

பல ஊர்களில், திராவிடர் கழகம் பிரச் சாரம் செய்யும் போது, ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரக் கும்பலான இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் அதைத் தடுப்பதற்காக, ‘தி.க. புண்படுத்துகிறது’ என்று ஒரு புகார் கொடுப்பதை வாடிக்கை யாக, வழமையாக வைத்துள்ளனர்.

நாம் நடத்தும் மதவாதக் கண்டன மாநாடுகள் நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய விழிப்புணர்வைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருவதாலும், தமது கூட்டணியாகிய பி.ஜே.பி., தி.மு.க. அணிக்கு மக்கள் ஆதரவு - குறிப்பாக சிறு பான்மைச் சமூகத்தின் ஆதரவு - அறவே இல்லை என்ற ஏமாற்றம், எரிச்சல் காரண மாகவும், நமது தி.மு.க. தலைவர், கேவலமான அளவுக்கு இப்படி ஒரு ‘பார்ப்பனத் தனத்திற்கு’ மற்றவர்களை உசுப்பிவிடும் தரக்குறைவான, காதொடிந்த ஊசியளவுக்கூட பயன்பட முடியாத ஒரு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். அவர் நிலை கண்டு நான் மிகவும் இரக்கப்படுகின்றேன்.

- ‘விடுதலை’ (26.6.99)யில் கி.வீரமணி

கலைஞரின் சிண்டு முடியும் வேலை

இப்பொழுது இதோ ஒரு செய்தி! பெரியார் மாவட்டம் கோபி வட்டம் தாசப்பக் கவுண்டனூரில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் சுவர்களில் பட்டவர்த்தனமாக எழுதியுள்ளனர்.

இதோ அந்த வாசகம்:

“ஜூன் 27 மாலை 3 மணிக்கு பெரியார் படத்துக்கு செருப்படி ஊர்வலம் நடைபெறும். அனைவரும் வாரீர்.”

இது பற்றி காவல்துறைக்குப் புகார் கொடுத் தும், முதல் அமைச்சருக்குத் தகவல் தெரி வித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இவ்வளவுக்கும் சுவர் எழுத்து என்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மீறி தந்தை பெரியார் அவமானப் படுத்தப் படுகிறார் என்றால், அதற்குக் காரணம் எதைப் பலி கொடுத்தாவது இந்துத்துவா வாதிகளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தான்.

தி.மு.க.வின் பொதுக் குழுத் தீர்மானத் திலேயே தந்தை பெரியாரை விஷமப் பிரச்சாரம் செய்தவர் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், ஆர்எஸ்.எஸ்.காரர்கள் அந்த சைகையைப் புரிந்து கொள்ள மாட்டார்களா? கலைஞர் அவர்களின் திரிபு வேலை, சிண்டு முடியும் வேலை எல்லாம் செல்லரித்துப் போன பழைய ராஜதந்திரம் - இனி அது செல்லாது!

தி.மு.க. என்பது வெறும் அரசியல் கட்சி யல்ல; சமூகப் புரட்சி கொள்கை யுடையது என்று ஒரு பக்கத்தில் பேசுவது - இன்னொரு பக்க்ததில் திராவிடர் கழக பகுத்தறிவுப் பிரச்சாரத்தைப் பற்றி சிண்டு முடியும் பாணியில் திசை திருப்பி பேசுவது - இந்த இரட்டை நாக்கை, எல்லாக் கட்சிகளிலும் உள்ள பகுத்தறிவுவாதிகள் புரிந்துகொள்வார்கள். எந்த நோக்கத்துக்காக முதலமைச்சர் இந்தப் பிரச்சினையை இப்பொழுது கையில் எடுத்துக் கொண்டுள்ளார் என்பதை சிறுபான்மையினரும் உணர்வார்கள்.

பொறுப்பு வாய்ந்த ஒரு பெரிய பதவியில் உள்ளவர்க்கு ஏனிந்த “கோணல் வேலை” என்று வாக்காளர்களும் உணர்ந்து நல்ல பாடம் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

- ‘விடுதலை’ (26.6.99)யில் கி.வீரமணி

ஜெயலலிதா வேட்பு மனு தள்ளுபடி கருணாநிதியின் சூழ்ச்சி

2001 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் கி.வீரமணி. தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுகள் வந்த வுடன் 21.5.2001 அன்று நாகை மாவட்டம் செம்பனார் கோயிலில் ஒரு கூட்டத்தில் கி.வீரமணி பேசினார். அவரது உரையை ‘ஜாதிமத வெறியும் தமிழக தேர்தலும்’ என்ற தலைப்பில் பகுத்தறிவாளர் கழக நூலாக 2001 இல் வெளியிட்டது. அதிலிருந்து சில பகுதிகள். இப்பொழுது மூத்த தலைவராக இருக்கக் கூடியவர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய கலைஞர் கருணாநிதி அவர்கள். இன்றைக்கு அவருடைய நிலை என்ன ஆயிற்று? கலைஞர் கருணாநிதி அவர்கள் இவ்வளவு பெரிய தோல்வியை தேர்தலில் சந்தித்தார் என்பது தி.மு.கழகத் தோழர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கலாமே தவிர, எங்களைப் பொறுத்த வரையிலே அது அதிர்ச்சியே அல்ல.

200 இடங்களில் வெற்றி - முன்பே சொன்னேனே...

நான் கடைசியாக மயிலாடுதுறையில் பேசும்பொழுது என்ன சொன்னேனோ அது நடந்தது. நான் பெரிய ஆரூடக்காரன் என்பதற்காகச் சொல்லவில்லை. ஊர் ஊராக மக்களை சந்திக்கின்றோம். மக்களின் நிலவரத்தை நன்றாகத் தெரிந்து கொள்கின்றோம்.

தேர்தலில் 200 இடங்களுக்குக் குறையாமல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலே இருக்கக் கூடிய செல்வி ஜெயலலிதா, தலைமையிலே இருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணி தான்வெற்றி பெறும் என்பதைத் தெளிவாகச் சொன்னோம்.

ஜெயலலிதா அவர்கள் தான் முதல்வர்

அது மட்டுமல்ல; செல்வி ஜெயலலிதா அவர்கள்தான் அடுத்த முதலமைச்சர் என்றும் சொன்னேன். தி.மு.க. அரசு எத்துணை சூழ்ச்சி செய்தாலும், நீங்கள் ஆட்கள் மூலமாக வேட்பு மனுவை நிராகரித்தாலும் அடுத்தபடியாக செல்வி ஜெயலலிதா அவர்கள்தான் முதல்வர் என்று சொன்னோம். நல்ல வாய்ப்பாக தேர்தல் முடிந்து அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கின்றது. அ.தி.மு.க. கூட்டணியும் தேர்தலில் போட்டி யிட்டார்கள். தி.மு.க. கூட்டணியும் தேர்தலில் போட்டியிட்டார்கள். மொத்த இடங்கள் 234. புவனகிரியில் வேட்பு மனுவை ஏதோ காரணம் காட்டி ஒரு தொகுதியை தள்ளினார்கள். உடனே ஜெயலலிதா அவர்கள் விடவில்லை.

சுயேச்சையாக நின்ற ஒருவருக்கு வாழைப் பழச் சின்னம் என்று சொன்னார்கள். புவன கிரி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெய லலிதா அவர்கள் வாழைப்பழச் சின்னத்தைக் காட்டி விட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். புவனகிரி தொகுதி வேட்பாளர் - வாழைப் பழச் சின்னத்தில் நின்ற வேட்பாளரும் வெற்றி பெற்றுவிட்டார். ஆக 234 தொகுதிகளில் 196 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கின்றது.

196 தொகுதிகளில் வெற்றி பெற்று - மதச் சார்பற்ற கூட்டணி இந்தியாவிலேயே தமிழகத் தில்தான் வெற்றி பெற்றுள்ளது. (பலத்த கைதட்டல்)

- 21.5.91 செம்பனார் கோயிலில் கி.வீரமணிபேச்சு

....இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத தனித்தன்மையோடு மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி உருவாயிற்று.

அந்தக் கூட்டணியிலிருந்து உடனே பா.ம.க. வந்தது. தமிழ்நாட்டில் பாரம்பரியம் மிக்க அரசியல் கட்சிகள், தெளிவான இலட்சியமுள்ள அரசியல் கட்சிகள் இவைகள் எல்லாம் அ.தி.மு.க. தலைமைக்கு வந்தன. அதேபோல த.மா.கா. இரு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய தேசிய காங்கிரஸ், ஃபார்வர்டு பிளாக் போன்ற எல்லா அரசியல் கட்சிகளும் வந்துவிட்டன. தி.மு.க. கூட்டணி கூடாரம் காலியாகிக் கொண்டே போகிறது.

அதுமட்டுமல்ல; கொஞ்சம் - நஞ்சம் இருப்பவர்களையும் அவர்களுடைய குடும்ப அரசியல் விட்டு வைக்கவில்லை. தி.மு.க. கூட்டணியிலிருந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருமே ஒப்பாரி வைக்கக்கூடிய அளவிற்கு ஆளானார்கள். அவர்கள் வெளியேறினார்களா? அல்லது வெளியேற்றப் பட்டார்களா? என்று பொது மக்களிடையே ஒரு பெரிய பட்டிமன்றம் நடக்கின்றது. தி.மு.க.வினர் கூட்டணிக் கட்சியில் இருந்த வர்களை வெளியேற்றினோம் என்று சொன் னார்கள். அதன் பிறகு அவர்களாக வெளி யேறிவிட்டார்கள். நாங்கள் வெளியேற்ற வில்லை என்று சொன்னார்கள். இப்படி எல்லாம் பேசப்பட்டது.

...... சிலர் கேட்கலாம் - அ.தி.மு.க. தானே பி.ஜே.பி.யைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தது என்று கேட்கலாம். அப்பொழுது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்க லாம். கோவைக்கு தேர்தல் பிரச்சாரத்திற் காக அத்வானி வந்திருந்தார். அப்பொழுது அ.தி.மு.க., பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத் திருந்தது. அத்வானி என்ன பேசினார்? முதலில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி. சார்பில் நாங்கள் ஒரு கணக்குத் திறக்க வேண்டும் என்று பேசினார்.

ஆனால், அ.தி.மு.க. கூட்டு சேர்வதற்கு முன்னால் தி.மு.க. தலைவர் என்ன பேசினார்? மாறன் என்ன பேசினார்? பி.ஜே.பி. என்பது ஒரு தீண்டத்தகாத கட்சி அல்ல என்று பேசினார். பி.ஜே.பி.யோடு யாரும் சேரலாம் என்று சொன்னார்.

ஒரு மணி நேரம்கூட பதவியை விட முடியாது

தி.மு.க. தலைவர் ஒரு கோடி கையெழுத்து மதச்சார்பின்மைக்காக வாங்கினார். கம்யூனிஸ்டு, த.மா.கா. போன்ற எல்லா இயக்கங்களும் சேர்ந்து கையெழுத்துக்கள் வாங்கின. இந்த ஒரு கோடி கையெழுத்தில் முதல் கையெழுத்து யார் போட்டதென்றால் மதிப்பிற்குரிய தி.மு.க. தலைவர்தான் முதல் கையெழுத்து போட்டார். இன்றைக்கு அவர் எந்த கோடியில் இருக்கின்றார் என்றே தெரியவில்லை.

பி.ஜே.பி. என்ற அக்டோபசிடம் மாட்டக் கூடாது. இந்த மலைப்பாம்புடன் மாட்டக் கூடாது என்று இடையறாமல் சொல்லிக் கொண்டு வந்தோம். அந்த அம்மையாரைப் பொறுத்த வரையில் பாராட்ட வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அ.தி.மு.க., பி.ஜே.பி.யிடம் சண்டை போட்டது. காவிரி பிரச்சினைக்கு ஒன்றும் செய்யவில்லை. 69 சதவிகிதத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்று சண்டை போட்டுக் கொண்டு பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியே வந்தது.

அப்பொழுதே நாங்கள் சொன்னோம் - பார்த்தீர்களா? இந்த கொள்கை உங்களுக்குச் சரியாக ஒத்து வராது என்று சொன்னோம். 1999 ஆம் ஆண்டு சென்னை, கடற்கரையில் நடைபெற்ற பிரமாண்டமான மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சொன்னார்.

“என்னுடைய வாழ்நாளில் அரசியலில் மிகப் பெரிய தவறு செய்து விட்டேன். பி.ஜே.பி.யோடு அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்ததுதான் அந்தத் தவறு என்று சொன்னார்கள்.

இந்தத் தவறை இனிமேல் செய்ய மாட் டேன் என்பது மட்டுமல்ல; அந்த மதவெறிக்கு தமிழ் மண்ணில் இடமில்லை. அந்த மதவெறியை ஒழிப்பதுதான் எங்களுடைய பணி. அதில் அ.தி.மு.க. தெளிவாக இருக் கிறது என்று அன்றைக்கு சொன்னார்கள்.

பி.ஜே.பி.க்கு இனி தமிழ்நாட்டில் இட மில்லை என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செய லாளர் செல்வி ஜெயலலிதா பிரகடனப்படுத் தினார். (பலத்த கைதட்டல்) அப்பொழுது தான் மதச்சார்பற்ற கூட்டணியே உரு வானது. 1998 இல் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அக்டோபஸ் என்று சொன்னது தி.மு.க. இரண்டு திராவிட இயக்கங்களில் ஒன்று எதிர்க்கட்சி, மற்றொன்று ஆளுங் கட்சி.

நாம் எப்பொழுதும் கறுப்பு, சிவப்போடு இருக்க வேண்டும். இதிலே போய் காவி கலர் கலந்தால் சாயம் போய் விடும். அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக சந்தித்திருக்க வேண்டும் தி.மு.க. தலைவர்.

ஆனால், தி.மு.க. தலைவர் என்ன செய்தார்? தனது மருமகனுக்குத் துணைப் பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பி.ஜே.பி.யை எதிர்த்து இதற்கு முன்பு எதை சொன்னாரோ அதை மறந்து தன்னுடைய கட்சி முடிவைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. உடனே பி.ஜே.பி.யுடன் தி.மு.க. கைகோர்த்துவிட்டது. மாறன் அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.

தி.மு.க. தன்னுடன் இருந்த தமிழ் மாநில காங்கிரiக் கைவிட்டுவிட்டது. இன்னும் கேட்டால் ஜெயின் கமிஷன் தி.மு.க. மீது குற்றம் சுமத்தியது. இதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் அமைச்சர்கள் உட்பட எல்லோரும் ராஜினாமா செய்துவிட்டு வந்தார்கள். கொஞ்ச நாள் அமைச்சரவையிலிருந்து விலகியிருங்கள் என்று தி.மு.க.விடம் அன்றைய பிரதமர் அய்.கே.குஜ்ரால் கேட் கின்றார். ஜெயின் கமிஷன் முதல் அறிக்கை தான் இது. இறுதி அறிக்கை வரட்டும். நீங்கள் கொஞ்ச நாள் பதவியிலிருந்து விலகியிருங்கள் என்று கேட்டார். நமது அமைச்சரவைக்கு ஒன்றும் ஆபத்து வராது என்று குஜ்ரால் கேட்டார். அப்பொழுது தேசிய முன்னணி என்ற அமைப்பின் கீழ்தான் எல்லோரும் இருந்தார்கள்.

அப்பொழுது தி.மு.க. தலைவர் சொன்னார், ஒரு மணி நேரம் கூட மத்திய அமைச்சரவையிலிருந்து விலக மாட்டோம் என்று அறிவித்தார். அதனால்தான் அய்.கே. குஜ்ரால் அரசு கவிழ்ந்தது. பிறகு வாஜ்பேயி அரசு வர முடிந்தது. இவர்கள் விலகியிருந் தால் ஒரு தேர்தலே வந்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. இது அரசியல் தெரிந்தவர்களுக்கு வரலாறு தெரிந்தவர் களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.

வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் மாற்றுவார்

சென்ற ஆண்டு தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி என்ன சொன்னார்? ஆர்.எஸ்.எஸ்.சும், திராவிடர் கழகமும் ஒன்று என்று சொன்னார். எவ்வளவு குழப்பம் அவருக்கு? எங்கேயாவது புதிதாக கட்சியில் சேர்ந்தவர் சொல்லியிருந்தால் சரி.

ஆனால், நான் தான் திராவிடர் கழகக் கொடியை உருவாக்க என்னுடைய உடம்பில் உள்ள இரத்தத்தைக் குத்தி எடுத்து வடிவமைத்தேன் என்று சொன்னார். பாவம், நேற்றுதான் தவமணிராசன் அவர்கள் இறந்து போனார். ஈரோடு சண்முக வேலாயுதம் அவர்கள்தான் திராவிடர் கழகக் கொடியை முதன்முதலில் உருவாக்கினார். மறைந்த தவமணிராசன் அவர்கள்கூட இதைப் பற்றி சொல்லியிருக்கின்றார்.

கலைஞர் அவர்கள் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் எழுதுவார். ஆனால், எப்படி இருந்தாலும், வாதத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு பெரிய கொள்கை தெரிந்தவர். இவர் போய் ஆர்.எஸ்.எஸ்.சும் திராவிடர் கழகமும் ஒன்று என்று சொல்லலாமா?

கலைஞர் இப்படி சொன்னவுடனே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மூப்பனார் அவர்கள் இதைக் கண்டித்தார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இதைக் கண்டித்தார். இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகளும் தி.மு.க. தலைவருடைய பேச்சைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டன.

திராவிடர் கழகம் எப்படிப்பட்ட இயக்கம்? அந்த இயக்கத்தோடு ஒப்பிடலாமா? என்று கேள்வி கேட்டவுடனே கடைசியாக தி.மு.க. தலைவர் ஒரு பல்டி அடித்தார். பத்திரிகைக்காரர்கள் தவறாகப் போட்டு விட்டார்கள். சரியாகப் போடவில்லை என்று பதில் சொன்னார்.

சாதியை அரவணைத்தவர்

2001 சட்டமன்றத் தேடர்தலில் சாதிக் கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்ததை எதிர்த்து கி.வீரமணி பேசியது:

மழைக் காலத்து காளான்கள் மாதிரி. இந்த ஜாதிக் கட்சிகள் மீது தி.மு.க. தலைவர் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்தது. தி.மு.க. தலைவர்சட்டமன்றத்திலேயே சொன்னார் - எதிர்க்கட்சிகளைப் பார்த்தே சொன்னார்.

“தயவுசெய்து நீங்கள் யாரை வேண்டு மானாலும் ஆதரியுங்கள். இந்த சாதிக் கட்சிகளை மட்டும் ஊக்கப் படுத்தாதீர்கள். உற்சாகப்படுத்தாதீர்கள். ஆதரவு கொடுக் காதீர்கள் என்றெல்லாம் சொன்னார். செய்தியாளர்கள் தி.மு.க. தலைவரிடம் கேள்வி கேட்கின்றார்கள்: நீங்கள் சாதிக் கட்சிகளோடு கூட்டு சேருகின்றீர்களே என்று கேள்வி கேட்டதற்கு அவர் பதில் சொன்னார் - நான் ஜாதிக் கட்சிகளோடு கூட்டு சேரவில்லை. “சாதிக் கட்சிகளை ஊக்கப்படுத்தவில்லை. அதை அரவணைக் கின்றேன்” என்று சொன்னார். இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்? நீங்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்.

நாம் எல்லாம் தமிழர்கள்தான். தமிழ்மொழி நம்முடைய தாய்மொழி தான். ஊக்கப்படுத்துவது என்றால் என்ன? அரவணைப்பது என்றால் என்ன? ஊக்கப்படுத்துவது என்றால் தூரத்திலிருந்து செய்வது. அரவணைப்பதைப் பற்றி சிந்தித்தால் கொஞ்சம் அசிங்கமான அர்த்தம் அதில் வரும் (பலத்த கைதட்டல்). நான் அந்த அளவுக்கெல்லாம் போக விரும்பவில்லை. வார்த்தை விளையாட்டில் ரொம்ப கெட்டிக் காரர் அவர்.

பத்திரிகையாளர் அவரிடம் கேள்வி கேட்கின்றார்கள். இது ‘சாதிக் கூட்டணி’ என்று சொல்லுகின்றார்களே என்று கேள்வி கேட்கின்றார்கள். இது சாதிக்கும் கூட்டணி என்று கலைஞர் பதில் சொன்னார். சாதிக்கும் கூட்டணிக்குத்தான் 37 இடங்கள் கிடைத்திருக்கின்றன. (சிரிப்பு, கைதட்டல்)

என்னிடம் பத்திரிகையாளர் கேள்வி கேட்டார்கள். நாங்கள் எல்லாம் ஒரே பள்ளிக்கூடத்தில், ஒரே குருகுலத்தில் படித்தவர்கள். அவர் வார்த்தை விளையாட்டு விளையாடுவார். நாங்களும் வார்த்தை யிலேயா பதில் சொல்ல முடியும்?

முன்பு மதத்துடன் கூட்டணி - இப்பொழுது சாதியுடன் கூட்டணி

ஏற்கனவே அவர் வைத்திருந்தது மதத்திற்கும் கூட்டணி - இப்பொழுது கூட்டு சேர்ந்திருப்பது சாதிக்கும் கூட்டணி. அவ்வளவுதான் என்று பதில் சொன்னோம்.

(மூன்று ஆண்டு தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அப்படி தள்ளுபடி செய்யப்பட்டதையும் வீரமணி கண்டித்து இவ்வாறு பேசினார்.)

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுடைய வேட்பு மனுக்களைத் தள்ளிவிட்டார்களே என்று கேட்டார்கள். நான் பதில் சொன்னேன் - வேட்பு மனு தள்ளாமல் இருந்தால் இரண்டு இடத்தில் போட்டி போடுவார்கள். இப்பொழுது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ததால் 234 தொகுதியிலும் அந்த அம்மையார்தான் வேட்பாளர். அதில் ஒன்றும் சந்தேகமில்லை.

..... ஜெயலலிதா மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குக்காக கருணாநிதியைக் கண்டித்து கி.வீரமணி இவ்வாறு பேசினார்:

இப்பொழுது அ.தி.மு.க. ஆட்சி பதவி ஏற்றிருக்கின்றது. இந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. 69 சதவிகித இடஒதுக்கீடுக்கு சட்டப் பாதுகாப்பு உண்டு. இதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை இன்னும் ஒரு சில மாதங்களிலே நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் அய்ந்து வருடம் ஆண்டாரே என்ன செய்தார்.? உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. இந்த 69 சதவிகித இடஒதுக்கீட்டைப் பற்றி கலைஞர் கண்டு கொள்ளவில்லை. அ.தி.மு.க. ஜெயலலிதா அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை விரைவுபடுத் தினார்.தனி நீதிமன்றத்தை இதற்காக நியமித்தாரே தவிர மற்றவைகளைப் பற்றி இவர் கவலைப்படவில்லை.

நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவனும் செத்துப் போய் விட்டான். வாதாடியவனும் செத்துப் போய்விட்டான். வழக்கை விசாரித்த நீதிபதியும் இறந்து போய்விட்டார். நீதிமன்றங்களில் வெள்ளி விழா கண்ட வழக்குகள் எல்லாம் இருக்கின்றது. அதே மாதிரி பொன் விழா வழக்குகள் எல்லாம் இருக்கின்றது.

ஆனால் இந்த அம்மையார் மீது மட்டும் வழக்குகள் தீவிரப்படுத்தப் பட்டன. தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்த பொழுது சொத்து சேர்க்கப் பட்டது என்று முதல் நாள் வழக்குப் போடுகின்றார்கள். அடுத்த நாள் பார்த்தீர்களேயானால், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று தீர்ப்பு வருகிறது.

அதே மாதிரி மறுபடியும் விசாரிப்பார்கள். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை (பலத்த கைதட்டல்). நான் பொது நியதி அடிப்படை யில் இருந்து சொல்லுகின்றேன். நான் ஒன்றும் பழி வாங்க வேண்டும் என்ற அடிப் படையில் சொல்லவில்லை. பொது நியதியை வைத்து சொல்லுகின்றோம்.

திறந்த சிலைச்சாலைகளை மூடியதாக வரலாறே இல்லை. திறந்த போலீஸ் ஸ்டேசன்களை மூடியதாக வரலாறு இல்லை. திறந்த தனி நீதிமன்றங்களை மூடுவதாகவும் வரலாறு இருக்காது. (பலத்த கைதட்ல்)

என்ன ஒரு மாறுதல்? சென்ற ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கள் - இந்த முறை போவார்கள் (பலத்த கைதட்டல்). மாறி மாறி வரு வார்கள். கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வரவில்லையா, அந்த அடிப் படையில்தான் நான் சொல்லுகின்றேன். வேறு யார் மீதும் ஒரு குரோத உணர்ச்சியில் நான் இப்படிச் சொல்லவில்லை. (சிரிப்பு - கைதட்டல்) ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது ரொம்பத் தெளிவாக எடுத்து வைத்துச் சொல்ல வேண்டும். எனவே, அந்த அடிப்படையில் தான் மக்கள் இன்றைக்குத் தெளிவான தீர்ப்பைக் கொடுத்திருக் கின்றார்கள்.

தேர்தலில் தி.மு.க. கூட்டணி போட்டியிட்ட இடங்கள் 234. தி.மு.க. கூட்டணி வென்ற இடங்கள் 37. அதே மாதிரி அ.தி.மு.க. கட்சி மட்டும் போட்டியிட்ட இடங்கள் 140. இதில் 133 இடங்களில் தனித்தே வென்றார்கள். (பலத்த கைதட்டல்) இதுதான் மிக முக்கியம்.

- கி.வீரமணி உரையிலிருந்து