இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் உயர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இப்போதும் பார்ப்பனர்களும் ,மேல் சாதியினருமே, இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றன. அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி. இந்திய வங்கிகளின் உயர்நிலைப் பதவிகளில் இருப்போர் சமூக ரீதியாக எந்தெந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை கேட்டு பெற்று இருக்கிறார். அந்த தகவல்களின்படி தலைமை பொது மேலாளர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் இருப்பவர்களில் 88% முதல் 92% வரை பார்ப்பன, உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். அதாவது பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள்.

பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்றாலே அதில் பார்ப்பனர்களும், உயர் சாதிக்காரர்களும்தான் இருப்பார்கள். தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்காகக் கூற முடியும். இந்தப் பிரிவில் ஓரளவு பிற்படுத்தப்பட் டோரும், தாழ்த்தப்பட்டோரும் வருகிறார்கள். ஏனைய மாநிலங்கள் அனைத்திலும் பொது போட்டி என்று சொல்லப்படுகிற பொதுப்பிரிவு உயர் சாதியினருக்காகவே தாரை வார்க்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 147 தலைமை பொது மேலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 135 பேர் அதாவது 92% பார்ப்பன உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். அடுத்து பொது மேலாளர் அந்த பதவிகளில் 667 பேர் இருக்கிறார்கள். அதில் 88 சதவீதம், அதாவது 588 பேர் பார்ப்பன, உயர்சாதியைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். துணைப் பொது மேலாளர் பதவிகளில் 81 சதவீதம் பேரும், இதே பிரிவினராகத்தான் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் வெறும் 8 சதவீதம் தான். உதவி பொது மேலாளர் பதவிகளில் 72 சதவீதம் பொதுப் பிரிவினரும் 14 சதவீதம் மட்டுமே பிற்படுத்தப்பட்டோரும் இருக்கிறார்கள்.

தலைமை மேலாளர் பதவிகளில் 61 சதவீதம் பொதுப் பிரிவினரும், பிற்படுத்தப்பட்டோர் 19 சதவீதமும் மட்டுமே இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் நிலை இது என்று சொன்னால் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்ட உரிமை பெற்ற எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரின் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் அது மிக மோசமான நிலையில் இருக்கிறது. தலைமைப் பொது மேலாளர் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்களை பொறுத்தவரை 6% பேர் மட்டுமே இருக்கிறார்கள். பொது மேலாளர் பதவிகளில் 8% பேர் மட்டுமே இருக்கிறார்கள். “தலைமை பொது மேலாளர் பதவிகளில் பழங்குடியினர் ஒருவர்கூட கிடையாது”. பொது மேலாளர் பதவிகளில் பழங்குடியினர் 2% பேர் மட்டுமே இருக்கிறார்கள். இதில் கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்தக்கூடிய அதிகாரம் படைத்த ளஉயடந கடிரச என்ற மிக அதிகாரம் படைத்த பதவிகள் எல்லாம் எப்படி நிரப்பப்படுகிறது என்று சொன்னால் பெரும்பாலும் நேர்காணல் மூலமாக நிரப்பப்படுகிறது. அதில் செல்வாக்கு பெற்றவர்கள் ஏற்கனவே அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்ற, பார்ப்பன ஆதிக்க சாதி கூட்டத்தை சேர்ந்தவர்கள்தான் நேர்காணலை முறை கேடாகப் பயன்படுத்தி, அந்தப் பதவிகளை தங்களுக்கானதாக மாற்றிக் கொள்கிறார்கள்.

குறிப்பாக, பேங்க் ஆஃப் பரோடா அதானியின் நிறுவனத்திற்கு கடன் தர தயார் என்று கூறுகிறது. அப்படி எதனால் கூறப்படுகிறது என்று சொன்னால் இந்த உயர் பதவிகளில் இருக்கின்றவர்கள், பார்ப்பனர் களாகவும், உயர்சாதிக்காரர்களாகவும், இருப்பதுதான். அவர்கள் பன்னாட்டு பனியா நிறுவனங்களோடு கூட்டு வைத்துக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். பெண்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் அதுவும் மிக மிக மோசமாக இருந்து கொண்டு இருக்கிறது. இட ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பவர்கள் அதிகபட்சம். மிக மிக அதிகபட்சமாக உதவி மேலாளர் என்ற பதவிக்கு வருகிறார்கள். அதற்கு மேல் எந்த பதவியையும் அவர்களால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. எனவே, அனைத்து மட்டங்களிலும், இட ஒதுக்கீடு முறை, பின்பற்றியாக வேண்டும் என்ற ஒரு கொள்கை உருவாக்கப்பட்டால்தான் சமூக ஜனநாயகம் சமூக நீதி உள்ள ஒரு நாடாக இந்த நாடு அமைய முடியும்.

“குடியரசுத் தலைவராக பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒருவர் இருக்கிறார். ஆனால் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த எத்தனை பேர் இந்த உயர் பதவிகளில் இருக்கிறார்கள் என்று கேட்டால், வெட்கக்கேடாக இருக்கிறது”. “பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் மோடி என்கிறார்கள். ஆனால் அந்த மோடி ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை பேர் உயர் பதவிகளில், இருக்கிறார்கள் என்று சொன்னால், நிலைமை மிக மிக மோசமாக இருக்கிறது.” மோடியின் பிரதமர் அலுவலகத்தில் இருக்கிற அதிகாரிகளிலேயே ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ இல்லை என்ற தகவல்கள் ஏற்கனவே வெளிவந்து கொண்டு இருக்கின்றன. நாட்டினுடைய அதிகாரப் பிடி என்பது இன்னமும் பார்ப்பன, மேல்சாதி ஆதிக்கத்தில்தான் இருந்து கொண்டு இருக்கிறது. பார்ப்பனர்களுக்கு பதவி போய்விட்டது. பார்ப்பனர்கள் பாதித்து விட்டார்கள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் எல்லா இடங்களையும் பிடித்து விட்டார்கள் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறவர்கள், அவை எல்லாம் மாயமான கருத்து என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். இத்தகவல்களை வெளிக்கொண்டு வந்து உண்மையை நாட்டுக்கு அம்பலப்படுத்திய பிற்படுத்தப்பட்டோர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான கோ. கருணாநிதி அவர்களை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்