சேலத்தில் ஏப். 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் சனாதன சக்திகளே, தமிழகத்தில் நீங்கள் காலூன்ற முடியாது என்று எச்சரிக்கும் இளைஞர்கள் மாநாட்டுக்கு மக்களிடையே பேராதரவு கிடைத்து வருகிறது. ‘கருப்பு - சிவப்பு - நீலம்’ என்று பெரியார் - அம்பேத்கர் - மார்க்சிஸ்ட் சிந்தனையாளர்கள் இணைந்து சனாதன எதிர்ப்பில் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் மாநாடாக திராவிடர் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்துள்ளது; இது காலத்தின் தேவை!

மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், வைகுண்டர் வழி வந்த பால பிராஜாபதி அடிகள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்கிறார்கள். கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றுவோர் பெரும்பாலும் துடிப்பு மிக்க இளைய தலைமுறை.

dvk meeting apr23பேரறிஞர் அண்ணா எழுதி, அவரே காகப்பட்டர் வேடம் ஏந்தி நடித்த ‘இந்து கண்ட சாம்ராஜ்யம்’ வரலாற்று நாடகத்தை பொம்மலாட்டக் கலை வழியாக மு. கலைவாணன் குழுவினர் நிகழ்த்துகிறார்கள். இதில் நடித்த சிவாஜி கணேசன் நடிப்பைப் பாராட்டி அவருக்கு பெரியார் தந்ததுதான் ‘சிவாஜி’ பட்டம்.

புதுவை விடுதலைக் குரல், மக்கள் கலை இலக்கிய மய்யக் குழு சார்பில் கோவன் புரட்சிகர இசைக் குழு, நாடகம், பாடல் வழியாக கலை நிகழ்ச்சிகளை நடத்தும் விரட்டுக் குழு, கலைக் குழு, மேட்டூர் கழகத் தோழர்களின் டி.கே.ஆர். இசைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் இரண்டு நாள் மாநாடுகளிலும் எழுச்சியூட்டத் தயாராகி வருகிறது.

மாநாட்டில் கருத்தரங்கம், உரை வீச்சு, ஆய்வரங்குகளில் பங்கேற்று இளம் தலைமுறை தனது செறிவான கருத்துகளை முன்வைக்கப் போகிறது. கழகக் குடும்பத்தின் பெரியாரிய விழுதுகள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. இடைவிடாமல் இரண்டு நாள்களும் இடைவின்றி அரங்கத்தை சூடேற்றி சனாதன பார்ப்பன சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்க ஓயாத பணிகளுடன் களமிறங்கி விட்டனர் கழகத் தோழர்கள்.

சென்னை, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, பழனி, மேட்டுப் பாளையம், ஆனைமலை உள்ளிட்ட பல ஊர்களில் தோழர்கள் விடிய விடிய சுவரெழுத்துகளை எழுதி வருகின்றனர். பணிகளைத் தொடங்காத ஏனைய ஊர்களிலும் விரைவில் சுவரெழுத்துகளைத் தொடங்க தோழர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

மக்களிடம் கடைகடையாக வீதி வீதியாகச் சென்று தோழர்கள் மாநாட்டுக்கு நிதி வசூல் செய்கிறார்கள். மலர்ந்த முகத்துடன் மக்கள் வரவேற்கிறார்கள். பேரணி மாநாட்டின் முத்தாய்ப்பாக இருக்கும். பல்லாயிரக்கணக்கில் சீருடையுடன் இளைஞர்கள் - பெண்களும், ஆண்களும் அணிவகுத்து வரும் காட்சிகளை கற்பனையில் நினைத்துப் பார்த்தாலே மெய்சிலிர்க்கிறது.

கொளத்தூர், நங்கவள்ளி, உக்கம்பரத்திக்காடு, ஏற்காடு, காவலாண்டியூர், கண்ணாமூச்சி, தாராமங்கலம் பகுதிகளில் தோழர்கள் தீவிரமாக மாநாட்டு துண்டறிக்கைகளை வழங்கி, மக்களிடம் நிதி திரட்டி வருகின்றனர்.

இது வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடு; திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் இரண்டு நாள் மாநாடு.

நட்பு சக்திகளுடன் இணைந்து சனாதன பார்ப்பனியத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் மாநாடு. தோழர்களே, மாநாட்டுப் பணிகளைத் தொடங்குவீர்!

திராவிடர் இலட்சியம் வெல்லும்; திராவிட மாடல் அதை சொல்லும்!

சுவரெழுத்துப் பணியில் உற்சாக மூட்டிய நிகழ்வு

15.3.2023 மதியம் சூலூர் வழி பல்லடம் சாலையில் ஒரு சுவரில் சுவரெழுத்து விளம்பரம் எழுதிக் கொண்டிருக்கும் போது அதன் வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டே இருந்தன. அப்படிச் சென்ற ஒரு இருசக்கர வாகனம் சுவரெழுத்து விளம்பரத்தைக் கடந்து சென்றது. மீண்டும் திரும்பி வந்தது. நீங்கள் திக வா என்றார்; திவிக என்றோம்.

“ஓகே ஓகே நீங்கள் எங்கள் அனைத்து ஜாதி அர்ச்சகர் உரிமைக்காக தொடர்ந்து போராடறீங்க; துணை நிற்கறீங்க; கொஞ்ச நாளுக்கு முன்னால் கூட உங்க சென்னை தோழர்கள் எங்கள் பொறுப்பாளர் அரங்கநாதனை மேடையில் ஏற்றி பாராட்டுனாங்க. ஆர்ப்பாட்டத்திற்கு கூப்பிட்டு பேச வைத்தீர்கள்; தொடர்ந்து எங்களுக்காக போராட்டங்களை நடத்துறீங்க. உங்கள் இதழில் எங்கள் உரிமைகளைப் பற்றி எழுதறீங்க; எனக்கும் இதழ் அனுப்புங்க; சந்தா தருகின்றேன்” பெருமிதத்துடன் கூறினார்.

“நான் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பயிற்சி முடித்தவன். இப்போ 2 அர்ச்சகரை நீக்கம் பண்ணியிருக்காங்க, கொடுமை. ஆனா அந்த வழக்கில் நாங்க தான் ஜெயிப்போம். முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்” என்று பேசி விட்டுச் சென்றவர் மீண்டும் திரும்பி வந்தார்.

சுவரெழுத்தாளர் அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம், சூலூர் தமிழ்ச்செல்வி, உக்கடம் கிருஷ்ணன், நிர்மல் குமாரை உரிமையுடன் அழைத்துச் சென்று இளநீர் குடிங்க என்று வாங்கிக் கொடுத்து விட்டுச் சென்றார்.

இரண்டு நாட்களாக கடும் வெயிலில் சுவரெழுத்துப் பணி நடந்து வருகிறது; வெயில் சுட்டது; சோர்வும் அவ்வப்போது வந்தது. ஆனால் தோழர் வாங்கிக் கொடுத்த இளநீர் குளிர்ச்சியைக் கொடுத்தது; புத்துணர்ச்சியைக் கொடுத்தது.

தகவல் : நிர்மல்

குக்கிராமங்களிலும் பேராதரவு

சின்னஞ்சிறு கிராமங்களிலும் மாநாட்டுக்கு மக்களிடம் பேராதரவு காணப்படுகிறது. கொளத்தூர் அருகே உள்ள உக்கம் பருத்திக்காடு எனும் கிராமத்தில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திய வசூலில் மக்கள் அளித்த தொகை 1 இலட்சத்து 500 ரூபாய்.

தாரமங்கலத்தில் 21ஆம் தேதி மக்கள் அளித்த நன்கொடை ரூ.52,100/-