திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் தலைவாசல் அருகே உள்ள இலுப்ப நத்தம் எனும் கிராமத்தில் 22.2.2015 அன்று சிறப்புடன் நடந்தது. கழகப் பொறுப்பாளர்கள் மகேந்திரன், காளிதாசு ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து ஒரு வார காலம் கிராமம் கிராமமாகச் சென்று, இளைஞர்களை சந்தித்து, பயிற்சி முகாம் குறித்து எடுத்துக் கூறி முகாமுக்கு வரச் செய்தனர். 11.30 மணியளவில் இலுப்பநத்தம் சிவன் கோயில் வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் பயிற்சி முகாம் தொடங்கியது. 70 மாணவர் மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மகேந்திரன் தொடக்க உரையைத் தொடர்ந்து, மூத்த பெரியார் தொண்டர் சதாசிவம் 30 நிமிடம் மாணவர்களிடம் பேசினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘கடவுள்’ என்ற தலைப்பில் எளிமையாக கருத்துகளை எடுத்துரைத்தார். மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 3 மணியளவில் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரியார் வலியுறுத்திய ‘ஜாதி ஒழிப்பு’க் குறித்தும், ‘இளைஞர்கள் சமுதாயத்துக்கு தொண்டு செய்ய முன்வரவேண்டும்’ என்று வலியுறுத்தியும் பேசினார். மாணவர்களும், மாணவிகளும் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டனர். அனைத்துக்கும் விளக்க மளிக்கப்பட்டது. இலுப்பநத்தம் கிராமத்துக்கு இதுவரை எந்தக் கட்சி, இயக்கங்களைச் சார்ந்த தலைவர்கள் வந்தது இல்லை என்றும், இப்போது, கழகத் தலைவர், பொதுச் செயலாளர் வந்திருப்பது, தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சித் தருகிறது என்றும் பொது மக்கள், தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

பொதுக் கூட்டம்

மாலை 6 மணியளவில் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை எதிரிலுள்ள பொது வெளியில் தோழர்கள் அமைத்திருந்த மேடையில் பொதுக் கூட்டம் நடந்தது. மகேந்திரன் வரவேற்புரை யாற்றினார். உள்ளூர் கழகத் தோழர் பெ.காளிதாசு, கோ. பெரியசாமி ஆகியோர் உரையினைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார்.

பெரியார்-அம்பேத்கர் என்ற தலைவர்களுக்கிடையே ஜாதி ஒழிப்பில் ஒருமித்த கருத்து இருந்ததையும் அவர்களுக்கிடையே நடந்த சந்திப்புகளையும் குறிப்பிட்டு, ஜாதியமைப்பு இப்போது பல்வேறு வடிவங்களில் தலைதூக்கி நிற்பதை சுட்டிக்காட்டி, இளைஞர்கள் இதை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

periyar camp 600

இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில், அம்பேத்கர் - ஜாதி ஒழிப்பு - பார்ப்பன எதிர்ப்பு சிந்தனைகளை விளக்கி, அரசியல் சட்டத்தை அம்பேத்கர் எழுதியபோது, அவர் சந்தித்த நெருக்கடிகளை குறிப்பிட்டு, ஒரு கூட்டத்தில், ‘இந்த சட்டத்தை எரிக்கும் முதல் ஆள் நானாகவே இருப்பேன்’ என்று அறிவித்ததையும் சுட்டிக் காட்டி உரையாற்றினார்.

நாற்காலிகள் முழுதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஊர் மக்கள் அனைவருமே குடும்பத்துடன் ஆண்களும் பெண்களுமாக திரண்டு வந்து உரைகளை இறுதிவரை ஆர்வத்துடன் கேட்டது குறிப்பிடத்தக்கதாகும். ம.தி.மு.க., தி.மு.க., அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் என்று பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் கூட்டத்தில் பங்கேற்று, கழகத் தலைவருக்கு ஆடைகளை அணிவித்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திராவிடர் கழகத் தோழர்கள் மேடையில் பேசி நன்றி கூறினார்.

ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் மக்கள் கட்சிகளை இயக்கங்களை முன்னிறுத்தாமல் ஓரணியில் திரளுவார்கள் என்பதையும், திரட்ட முடியும் என்பதையும் வெளிப்படுத்திய கூட்டமாக இலுப்ப நத்தம் கூட்டம் அமைந்தது.

 

Pin It