இளைஞர்கள், கல்வி வேலை வாய்ப்புகளை தனியார் மய கொள்கைகளால் பறித்து வரும் ஆட்சியாளர்கள், நாட்டின் கனிம வளத்தையும், விவசாய நிலங்களையும் சூறையாடிக் கொண்டு மதத்தையும், ஜாதி வெறியையும் திணிக்கிறார்கள். ஜாதி, மத வெறி சக்திகள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சமூகத்தின் ஒற்றுமையையும் தமிழின ஓர்மையையும் சிதைக்கின்றன.

இந்த நிலையில் இளைஞர்கள், சுயமரியாதைக்கு தடையாக நிற்கும் ஜாதி வெறியையும் வாழ்வியலுக்கு தடையாக உள்ள அரசின் சுரண்டல் கொள்ளை களையும் எதிர்த்து நிற்க தயாராகி வருகிறார்கள். இந்த ஆபத்துகளை எடுத்துரைத்து, தமிழகம் முழுதும் பரப்புரை இயக்கங்களை நடத்த திராவிடர் விடுதலைக் கழகம் முடிவெடுத்துள்ளது.

28-02-2015 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம், சென்னை, மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை நிலையத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடை பெற்றது.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப் பட்டன.

1.            “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்“ என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாட்டின் ஆறு பகுதிகளில் - மார்ச்சு 20, 21, 22 ஆகிய நாள்களில் சென்னை, ஈரோடு, திருப்பூர், சேலம், நெல்லை, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு எட்டு நாள்கள் முதல் பத்து நாள்கள் வரையிலான பரப்புரை பயணங்கள் மேற் கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

•             பறிபோகிறது எங்கள் நிலம்! கொள்ளை போகிறது கனிம வளம்!

•             ஒழிந்து போகிறது வேலை வாய்ப்பு! ஓங்கி வருகிறது ஜாதிவெறி!

•             எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்!

- என்ற முழக்கத்தை முன் வைத்து மக்களிடையே பரப்புரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

2.            கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மாவட்டத் தோழர்களுக்கு அடிப்படைப் பயிற்சி, அறிமுகப் பயிற்சி, பொறுப்பாளர் நிலை 1 ஆகிய வகுப்புகள் கடந்த 2013லேயே நடத்தப்பட்டுவிட்டது.

சேலம், மேற்கு, தர்மபுரி, கிருட்டிணகிரி, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, நாமக்கல் மாவட்டத் தோழர்களுக்கு பொறுப்பாளர் நிலை 1 நடத்தப்பட்டு விட்டது.

இவற்றின் தொடர்ச்சியாக பொறுப்பாளர் நிலை 2 வகுப்புகளை மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மாவட்டத் தோழர்களுக்கு 2015, மே மாதம் 1, 2, 3 ஆகிய நாள்களிலும்

திருப்பூர், பொள்ளாச்சி, கோவை ஆகிய மாவட்டத் தோழர்களுக்கு 2015, மே, 4, 5, 6 ஆகிய நாள்களிலும் இரண்டு பயிற்சிகளும் கொடைக்கானலில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

3.            தலைமைக்குழு உறுப்பினர்கள் ஈரோடு இரத்தின சாமி, திருப்பூர் துரைசாமி, தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் பெரியார் முழக்க உறுப்பினர் சேர்க்கையை நிறைவு செய்து, மார்ச்சு 15-க்குள் நேரில் சென்று கணக்குகளை முடித்துப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டது.

4.            கழகத்தின் வெளியீடுகளை newshunt இணையக் குழுவினர் வழியாக கைபேசியில் படிக்கும் வகையில் வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் பொறுப்பை தோழர் விசயகுமார் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.