‘இராமராஜ்யம் அமைப்போம்’ என்ற முழக்கத்தோடு உலாவரும் ‘இராமராஜ்ய யாத்திரை’யை மத ஊர்வலம் என்றும், அதை அரசியலாக்குவதை அனுமதிக்க முடியாது என்றும் தமிழக பா.ஜ.க. பினாமி முதல்வர் சட்டமன்றத்தில் உளறியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகள்:

• இராம பக்தி - இராம வழிபாட்டு பஜனை ஊர்வலம் என்று வந்தால், அது மத ஊர்வலம். ஆனால் இந்தியாவில் நடைபெறும் ஜனநாயகப் பாராளுமன்ற ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு, ‘இராமராஜ்யத்தை’ அதாவது இராமன் நடத்திய ‘அரசை’ அமைக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு வருவது மத ஊர்வலமா? அரசியல் ஊர்வலமா?

• கடந்த 2017 டிசம்பர் 6ஆம் தேதி மசூதி இடிக்கப்பட்ட நாளில் உ.பி. மாநில அரசு அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வெற்றி விழாவை நடத்தியதோடு அதில் மாநில முதல்வர் மாநில ஆளுநர் பங்கேற்று இராமர் கோயிலைக் கட்டுவோம் என்று சபதம் எடுத்தது தமிழக பா.ஜ.க. பினாமி முதல்வருக்கு தெரியுமா? அதே அயோத்தியிலிருந்து இப்போது இராமர் கோயிலைக் கட்டுவோம் என்ற முழக்கத்துக்கு ஒரு இரத யாத்திரை உ.பி. முதல்வர் ஆசியோடு புறப்பட்டு வருகிறது. (இதை உ.பி. முதல்வர் தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு கடைசியில் மாற்றப்பட்டது) அது தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது என்றால் அது மத ஊர்வலமா? அரசியல் ஊர்வலமா?

• அரசியல் சட்டத்தின் 15ஆவது பிரிவு மதம், ஜாதி, பாலின அடிப்படையில் பாகுபாடுகளை அரசு காட்டக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. “The state shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them” என்று கூறுகிறது.

                அரசு மதம், இனம், ஜாதி, பால், பிறந்த இடம் என்ற அடிப்படையில் - எந்தக் குடிமகனுக்கும் எதிராக பாகுபாடுகாட்டக் கூடாது என்ற அரசியல் சட்டப் பிரிவின் கீழ் செயல்பட வேண்டிய ஒரு அரசு. ‘இராமராஜ்யம்’ என்ற பிற மதத்தினருக்கு எதிரான மதவாத அரசை அமைக்கும் நோக்கத்தோடு, நடக்கும் இரதயாத்திரையை அனுமதிக்கலாமா?

• ஏனைய மாநிலங்களில் எதிர்ப்பு இல்லாதபோது தமிழ்நாட்டில் ஏன் எதிர்க்கிறார்கள் என்கிறார், பா.ஜ.க. பினாமி முதல்வர். எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இதற்கு சரியாக பதிலடி கொடுத்துள்ளார். “இங்கே தான் பெரியார் பிறந்திருக்கிறார்; இது பெரியார் மண். அதனால்தான் எதிர்ப்பு” என்பதே அவர் தந்துள்ள பதிலடி.

                ஏனைய மாநிலங்கள் கேரளா உள்பட நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறவில்லை; தமிழகம் மட்டும்தான் ஏற்கவில்லை. தமிழ்நாடு மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்? என்ற அபத்தமான கேள்வியை எடப்பாடி கேட்பார் போல!

                கேரள அரசு மாட்டுக்கறி சாப்பிடுவதை உறுதி செய்து சட்டம் கொண்டு வந்ததுபோல எடப்பாடி ஏன் இங்கே கொண்டு வரவில்லை? என்று ஒரு கேள்வியை கேட்டால், அதற்கு எடப்பாடி என்ன பதிலைக் கூறுவார்? பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பேசி சமாளிக்கத் தொடங்கினால், இப்படிப்பட்ட கேள்விகளும் அடுத்தடுத்து எழவே செய்யும்.

                காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கருநாடக மாநிலம் கூறும்போது தமிழ்நாடும் அதே கோரிக்கையை பின்பற்றலாமே என்று எடப்பாடி கூறுவாரா? (மோடியிடமிருந்து உத்தரவு வந்தால் அப்படியும் கூறுவார் போல)

• 144 தடை உத்தரவை நெல்லை மாவட்டம் முழுதும் பிறப்பித்திருக்கிறது எடப்பாடி ஆட்சி. 5 பேருக்கு மேல் கூடக் கூடாது. ஆனால் இராமராஜ்ய யாத்திரையில் மட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் வலம் வரலாமாம். 144 தடை - இராமராஜ்ய இரதயாத்திரைக்கு மட்டும் பொருந்தாது! எதிர்த்துப் போராடுகிறவர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று ஒரு ஆட்சி முடிவெடுக்கிறது என்றால் தமிழ்நாட்டிலே அரசியல் வர்ணாஸ்ரமத்தை வெளிப்படுத்தும் ‘இராமராஜ்யத்தை’ பா.ஜ.க. பினாமி ஆட்சி தொடங்கி விட்டதா?

• இஸ்லாமிய இராஜ்யம், கிறிஸ்தவ இராஜ்யம் என்று பிற மதத்தவர்கள் யாத்திரையை நடத்தினால் ‘மத ஊர்வலம்’ என்று கூறி தமிழக அரசு அனுமதிக்குமா?

• நெல்லை மாவட்டத்துக்குள் பிற மாவட்டத்தினர் நுழையத் தடையாம். ஆனால் பிற மாநிலத்துக்காரர்கள் காவிக் கொடியோடு வலம் வரலாமாம். இது என்ன ‘வர்ணாஸ்ரம’ 144! இது, ‘இராமராஜ்ய’ 144 இப்படித்தான் இருக்குமோ?

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?