"நாகரிகம் தோன்றிய காலம் தொட்டு யுகம் யுகமாக மனித குலம் சுதந்திரம் வேண்டிப் போராடி வருகிறது. அடிமைத் தளையிலிருந்து அடக்கு முறையிலிருந்து விடுதலை பெற விழைந்து வருகிறது. காலங்காலமாக இந்த பூமியில் நிகழ்ந்த போராட்டங்கள், புரட்சிகள் யுத்தங்கள் எல்லாம் மனித விடுதலை எழுச்சியின் வெளிப்பாடன்றி வேறல்ல'' - என்பது தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை. தமிழீழ மண்ணில் தாயகத்தின் விடுதலைக்காகத் தன் இன்னுயிரை ஈத்தவர்கள் பல்லாயிரவர். எனினும் அவர்களில் மறக்க முடியாத மாவீரர் கர்னல் கிட்டு. சதாசிவ கிருட்டிண குமார் என்னும் இயற்பெயரைக் கொண்ட அவர், சதாசிவம் - இராசலக்குமி இணையரின் இரண்டாம் மகனாக 1960 சனவரி 2ஆம் நாள் பருத்தித் துறையில் பிறந்தார்.

kittu_313அவர் தாய் இராசலக்குமி, ஈழத்தந்தை செல்வா நடத்திய 1961 - சத்தியாகிரகப் போராட்டத்தில் கைக்குழந்தை கிட்டுவுடன் பங்கேற்ற போர்க்குணம் மிக்கவராவார். அவ்வீரத்தாயின் மகனான கிருட்டிணகுமார் 1978இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த போது தோழர்களால் "கிட்டு' என்று அன்போடு அழைக்கப்பட்டார். பின்னர் கிட்டண்ணா என்பதே அவரின் பெயராயிற்று.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு - "போக்கற்ற சில இளைஞர்களின் பொறுப்பற்ற கூட்டம்'' என்று சிலர் வசைபாடிய போது, தங்கள் போர்க்குணத்தையும், திறனையும் நாடறியச் செய்ய வேண்டுமென்ற வேட்கை அவரிடம் இருந்தது. யாழ்குடாப் பகுதியின் தளபதி பொறுப்பை ஏற்றபின், இயக்கத்தில் ஒழுக்கத் தையும், கட்டுப்பாட்டையும் பெரிதும் போற்றி வலியுறுத்தினார். தவறு செய்தவர்கள் கடுமை யாகத் தண்டிக்கப்பட்டனர். இதன் காரணமாக, புலிகள் இயக்கம் ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிகுந்த போற்றுதலுக்குரிய விடுதலைப் போராட்ட இயக்கம் என்ற பெயரீட்டியது.

1987 மார்ச் 13ஆம் நாள் அவர் யாழ்ப்பாண நகரில் தன் லான்சர் ஊர்தியில் சென்றபோது, போட்டிக் குழுவினரின் தாக்குதலுக்கு ஆளானார். அதில் அவரது மெய்க்காவலர்கள் இருவர் உயிரிழந்தனர். கிட்டு தன் வலது காலை இழந்தார். அதன்பின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல், சென்னைக்கு வந்து இயக்கப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டார். கிட்டு முழுக்க முழுக்க இராணுவப் பயிற்சி பெற்றவர்தான்,

அரசியல் பயிற்சி பெறாதவர்தான் என்றாலும், அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்கிச் சிறந்த முறையில் தன்னை தகவமைத்துக் கொண்டார். சமாதான நடவடிக்கைகள் முறிந்தபோது, இந்திய அரசு தமிழ்நாட்டில் இயங்கிவந்த புலிகளின் அலுவலகங்களை மூடியதுடன், கிட்டு உள்ளிட்ட சுமார் 150 விடுதலைப்புலிகளை கைது செய்தது. எனினும் அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியாமல் காவல்துறை திணறியது. காரணமின்றித் தங்களைக் கைது செய்ததைக் கண்டித்துக் கிட்டண்ணா காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். வேறுவழியின்றி அவர்களை விடுதலை செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். அதன்பின் பலாலி விமான நிலையத்திற்குக் கொண்டு சென்றர்.

அங்கே கிட்டுவுடன் இருந்த மற்றவர்களை எல்லாம் இராணுவக் கட்டுப்பாட்டு முகாமில் வைத்துக்கொண்டு, கிட்டுவை மட்டும் நடுவழியில் தனித்து விட்டுவிட்டுச் சென்றனர் இந்தியப் படையினர். எனினும் கிட்டண்ணா தன்னுடைய சாதுர்யத்தாலும், மக்கள் துணையோடும் - புலிகளின் தலைமையிடத்துக்குச் சென்று சேர்ந்தார். தேசியத் தலைவர், கிட்டண்ணாவை வெளிநாட்டுக்கு அனுப்பிச் செயற்கைக் கால் பொறுத்த வேண்டும் என்று விரும்பினார்.

தான் மீண்டும் முன்போல் செயல்படச் செயற்கைக் கால் பொறுத்த வேண்டும் என்று கிட்டண்ணா விரும்பினாலும், தான் பெரிதும் நேசிக்கும் புலிப்படைத் தோழர்களை விட்டுப் பிரிய நேரிடுமே என்று தயங்கினார். ஒருவழியாக அவர் சிகிச்சைக்காக இலண்டன் செல்வது என முடிவானது. கடுமைமிகுந்த களப்போராளியாக அவர் இருந்தாலும், அந்தக் கல்லுக்குள்ளும் ஈரமாக - அவர் மனத்திலும் ஒரு காதல் இருந்தது.

சிந்தியா என்னும் மருத்துவக் கல்லூரி மாணவியை அவர் காதலித்து வந்தார். இலண்டன் செல்லும்முன் அவர்களின் திருமணம் எளிமையாக நடைபெற்றது. இலண்டனில் சிகிச்சை பெற்றபின், பாரீசு, சுவிட்சர்லாந்து, சுவீடன், ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கும், இடங்களுக்கும் சென்று தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். மேற்குலக நாடுகள், "தமிழீழப் பகுதியின் எல்லை எது'வெனக் கேட்டபோது, "எங்கெல்லாம் சிங்கள இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்துள்ளனவோ அவைதான் தமிழீழப் பகுதி'' என்று மிக எளிதாக ஒரு பெரிய வினாவுக்கு விடையளித்தார். மேற்குலக நாடுகளில் சில, சமாதானத் தீர்வுத்திட்டங்களை முன்வைத்தன.

அத்தீர்வுத் திட்டங்களுடன் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்திக்க 1993ஆம் ஆண்டு சனவரி 13ஆம் நாள், எம் வி அகத் என்ற கப்பலில் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் கிட்டு. சர்வதேசக் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த அவரது கப்பலை, சனவரி 15அன்று இந்தியக் கப்பற்படை மறித்தது. மேற்குலக நாடுகளின் தீர்வுத்திட்டத்தைச் சிதைக்கும் நோக்கத்துடன் அக்கப்பலைச் சென்னை துறைமுகம் கொண்டு செல்ல முயன்றனர். சரணடையும் படியும், மறுத்தால் கப்பல் வெடிவைத்துத் தகர்க்கப்படும் என்றும் மிரட்டினர். தான் சரணடைந்தால் தன்மீது பொய் வழக்குகள் புனைந்து இயக்கத்தைக் களங்கப்படுத்தி விடுவார்கள் என்றுணர்ந்த கிட்டு, கப்பல் பணியாளர்களைக் கப்பலைவிட்டு இறக்கிய பின்னர், கப்பலுக்கு வெடிவைத்துத் தன் தோழர்களுடன் வீரச்சாவைத் தழுவினார். அன்றைய நாள் சனவரி 17. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெருந்துணையாயிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள். மக்கள் திலகம் மறைந்த போது, வீட்டுக்காவலில் இருந்த கிட்டு நேரில் சென்று இயக்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தினார் என்பது நினைவு கூரத்தக்கது.

தந்தை பெரியார் சொல்வார், "ஒருவன் தன் இலட்சியத்தை நேசிக்கிறான் என்பதற்கு அடையாளம், அதற்காக அவன் சாகச் சித்தமாயிருக்கிறான் என்பதுதான்''. அவரின் வைர வைரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவரான கர்னல் கிட்டு என்றென்றும் நினைவு கூரத்தக்கவர். இம்மாமனிதர்களின் செயல் பண்பில் எள்ளளவாவது எமக்கும் இருக்கிறது என்று கூறிக்கொள்ள நம்மை தகுதிப்படுத்திக் கொள்வோம்.

(கருஞ்சட்டைத் தமிழர் ஜனவரி16_2012 இதழில் வெளியானது)

Pin It

அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த படுகொலைகள். இந்தியப்படையின் துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தியொரு பணியாளர்களும், நோயாளார் விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தியேழு நோயாளர்களுமாக, மொத்தம் அறுபத்தியெட்டு பேர் கொல்லப்பட்டார்கள். 1987 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் நாள் நடாத்தப்பட்ட அந்தக் கோரப் படுகொலையின் இருபத்து நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று.

இன்றுவரை மறக்க முடியவில்லை. அந்தச் சம்பவத்தில்தான், வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டிச் சாரதியான எனது அப்பாவும் சுட்டுக்கொல்லப்பட்டார். தந்தையை இழந்து, மனிதவேட்டை நடந்த பகுதிக்குள் இருந்து உயிர் தப்பிய சம்பவம் இருபத்திநான்கு வருடங்கள் கழிந்தும் மனதை விட்டு அகலாமல் ரணமாகப் பதிந்துள்ளது. தற்போதும் கனவாக வந்து தூக்கத்தை கலைத்துக் கொண்டிருக்கின்றது. இரத்தமும் கண்ணீரும் மரண ஓலமுமாகக் கழிந்த நிமிடங்கள். இப்போது நினைத்தாலும் மனதை உலுக்கும் சம்பவம் அது.

யாழ் மருத்துவமனை

அப்போது எனக்குப் பதினைந்து வயது. பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு மூன்று தம்பிமார். யாழ்நகரத்தில் இருந்து ஆறு கிலோமீற்றர் தூரத்தில்தான் எங்களது வீடு இருந்தது. எங்கள் ஊரிலிருந்து ஏறத்தாழ ஏழு கிலோமீற்றர் தூரத்தில், இலங்கை இராணுவத்தின் முதன்மை இராணுவ முகாம்களில் ஒன்றான பலாலி தளம் இருந்தது. அங்கு அடிக்கடி பாரிய சண்டைகள் நடக்கும். அவ்வாறான நேரங்களில், இராணுவத்தின் எறிகணை எங்கள் ஊர் மனையிலும் வீழ்ந்து வெடிக்கும். இதனால் எங்களது பல பகல், இரவுகள் பதுங்குகுழிக்குள்ளேயே கழிந்தன.

அந்த நேரத்தில்தான், இந்தியா ஈழத்தமிழர்களுக்கு தீர்வு பெற்றுத்தர வரப்போகின்றது, அதற்காக இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனப் பரவலாகப் பேசப்பட்டது. சில நாட்களில் தமிழர் தாயகப்பகுதிக்கு வந்த இந்திய இராணுவம், இலங்கை இராணுவம் நிலைகொண்டிருந்த இராணுவ முகாம்களில் நிலைகொண்டது. இனிப்பிரச்சனையில்லை, அச்சப்படத் தேவையில்லை, இந்தியா எங்களைப் பாதுகாக்கும் என சந்தோசமடைந்தோம். ஆனால் அந்த சந்தோசம் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்த வந்த இராணுவம் அதைச் செய்யவில்லை. இதனால் ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி பல அகிம்சைப் போராட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப்பட்டன. இதன் உச்சகட்டமாக, நீராகாரம் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த தியாகி திலீபன் அவர்களும் தியாக மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து சில நாட்களில்  சண்டை தொடங்கியது. மீண்டும் எறிகணைச் சத்தங்கள், விமானக்குண்டு வீச்சுக்கள் என்ற பழைய அவல வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டோம். விமானங்களின் பயங்கர இரைச்சல்கள் முன்னரைவிட அதிக அச்சத்தைத் தந்தன.

(ஓப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்த வந்த காந்தி தேசத்து அமைதிப்படை, காந்திய வழியில் நியாயம் கேட்டு ஓர் உயிர் ஆகுதியாக்கப்பட்ட பின்னும் தனது சமாதான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை. மாறாக ஆயுதவழியில், ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கும் செயற்பாடுகளை துரிதப்படுத்தியது. இதன் முதற்கட்டமாக சமகால அரசியல் நிலைமை தொடர்பான கருத்துக்கள் மக்களைச் சென்றடையாத வண்ணம், யாழ்ப்பாணத்தில் இயங்கிய பத்திரிக்கை அலுவலகங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. சுயாதீன வானொலிகள், தொலைக்காட்சி சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. தொடர்ந்து, விடுதலைப்புலிகளின் தலைமையை அழிக்கும் நோக்கில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்தில் இந்திய சிறப்பு பரா துருப்பு ஒக்ரோபர் 10ம் நாள் உலங்குவானூர்தி மூலம் தரையிறங்கி தாக்குதலை ஆரம்பித்தது. அதேவேளை பலாலி, கோட்டை, நாவற்குழியில் அமைந்திருந்த முகாம்களில் தரித்திருந்த இந்தியப்படையினர் கனரகப்பீரங்கிகள், விமானப்படையினரின் பக்க உதவியுடன் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். பலாலியில் இருந்தும் நாவற்குழியில் இருந்தும் நகர்ந்த இராணுவம் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலை எதிர்கொண்டு ஒவ்வொரு இடமாகக் கைப்பற்றிக் கொண்டு வந்தது. ஆனால் யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவம் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதலால் முகாமிற்குள் முடக்கப்பட்டிருந்தது. யாழ்மாவட்டத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே இராணுவ நடவடிக்கைகளின் பிரதான நோக்கமாக இருந்தது)

இராணுவம், முகாம்களில் இருந்து அகோரமான எறிகணை மற்றும் விமானத்தாக்குதல்களை நடாத்திக் கொண்டு முன்னேறியது. ஆட்லறி, எறிகணைகள் மக்கள் வாழ்விடங்களுக்குள் வீழ்ந்து வெடித்துச் சிதறின. விமானப்படை மக்கள் குடியிருப்புக்களை, மக்கள் அதிகம் கூடுமிடங்களை இலக்குவைத்துத் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன்  காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்திய இராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் திகிலடைந்த மக்கள் எங்கு பாதுகாப்புத் தேடுவது என தெரியாமல் தவித்தனர். பலர் பதுங்குகுழிகளை வெட்டி தற்காப்பு தேடினார்கள். சிலர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியிடங்களுக்கு அகதிகளாக வெளியேறினர். பலர் பாதுகாப்பானது எனக் கருதி கோயில்களிலும் தேவாலயங்களிலும் அடைக்கலம் தேடினர்.

சிறிலங்கா இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலில் இருந்து பாதுகாக்க வீட்டில் நானும் தம்பிகளுமாகச் சேர்ந்து வெட்டியிருந்த பதுங்குகுழியை மீளத் துப்பரவாக்கினோம். இந்திய இராணுவத்தின் எறிகணைத்தாக்குதல்கள் அகோரமாகவும் தொடர்ச்சியாகவும் இருந்த காரணத்தினால் சில இரவுகளும் பல பகல்களும் பதுங்குழிக்குள்ளேயே கழிந்தன. இருந்தாலும், இராணுவம் எங்கள் ஊரை நெருங்கி வர வர எறிகணைத்தாக்குதல்களும் அதிகமாகின. மக்கள் வாழ்விடங்களுக்குள் குண்டுகள் சரமாரியாக விழுந்து வெடித்துக் கொண்டிருந்தன.

பணி நிமித்தம் அப்பா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்தார். அன்றைய அசாதாரண சூழ்நிலையில் தொடர்ச்சியாக பணியாற்றிக் கொண்டிருந்த அவர், கிடைத்த சிறிய இடைவேளையில் எங்களைப் பார்க்க வந்தார். கலவரத்துடன் இருந்த எங்களது முகங்களைப் பார்த்த அவரது முகத்தில் மிகுந்த கவலை தென்பட்டது. ஏனெனில் எங்களை தனியே விட்டுச் செல்ல முடியாது. கடைசித்தம்பி அப்பாவைக் கட்டிப்பிடித்து அழுதான். சிறிது நேரம் யோசித்த அவர், ”எல்லாரும் என்னோட வந்து விடுதியில் தங்குங்கோ, வைத்தியசாலைதானே பாதுகாப்பாயும் இருக்கும்” எனச் சொன்னார். நாங்களும் அப்பாவுடன் போவதற்குத் தயாரானோம். அப்போது என்னுடைய நண்பனிடம் நாங்கள் வைத்தியசாலைக்குச் செல்லும் விடயத்தை கூறினேன். அவன் தானும் எங்களுடன் வருவதாகக் கூறி, அவனுடைய பெற்றோரிடம் சொல்லிவிட்டு வந்தான். அத்துடன் உறவினர் ஒருவரின் மகளான பிரியாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எங்களுடன் வந்தாள். மூன்று தம்பிகள், நான், அம்மா, மற்ற இருவரும் சேர்த்து மொத்தமாக ஏழு பேர் வைத்தியசாலையில் சென்று அப்பாவுடன் விடுதியில் தங்கினோம்.

(யாழ் நகரத்தில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலை யாழ் குடாநாட்டில் வாழ்கின்ற எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மட்டுமன்றி அயல் மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்றவற்றுக்கும் பிரதான வைத்தியசாலையாக உள்ளது. தினசரி ஆயிரம்பேர் வரையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதோடு, சத்திரசிகிச்சைப்  பிரிவு,  அவசர சிகிச்சைப் பிரிவு எனப் பல பிரிவுகளையும் தன்னகத்தே கொண்ட வடமாகணத்தின் பிரதான வைத்தியசாலை மட்டுமல்ல அது ஒரு போதனா வைத்தியசாலை)

இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த முகாம்களில் ஒன்றான கோட்டை முகாம் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது. அங்கிருந்த இராணுவம் முன்னேறுவதற்கு தனது கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அதனால் நகரம் மற்றும் நகரத்தை அண்டிய பகுதிகள் எங்கும் எறிகணைகள் சரமாரியாக வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. வைத்தியசாலை பாதுகாப்பானது எனக் கருதியிருந்தாலும், அங்கு கேட்டுக்கொண்டிருந்த கடுமையான எறிகணைச்; சத்தங்களும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் விமானப்படை தாழப்பறந்து நடாத்திய குண்டு வீச்சுத் தாக்குதல்களும் அச்சத்தையே தந்து கொண்டிருந்தன. ஆயினும் இராணுவம் வைத்தியசாலைக்குள் தாக்குதல் நடத்தாது என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருந்தாலும் எறிகணைத் தாக்குதல்கள் செறிவாக நடைபெறும்போது, அப்பாவின் விடுதிக்கு அருகில் இருந்த கதிரியக்கப் பகுதி மற்றும் பிரதான அலுவலகத்தை உள்ளடக்கிய மேல்மாடிக்கட்டிடத்திற்குள் போய் பாதுகாப்புத் தேடுவோம். இரவு வேளையில் பணியாளர்கள், நோயாளர்கள், விடுதியில் தங்கியிருந்தவர்கள் என எல்லோரும் அக்கட்டிடத்தின் நடைபாதையில் தான் படுப்போம்.

இராணுவத்தாக்குதலில் காயமடைந்து பல பகுதிகளில் இருந்தும் கொண்டுவரப்பட்ட பொதுமக்களால் வைத்தியசாலை நிரம்பியிருந்தது. நோயாளர் விடுதிக்குச் சென்று காயமடைந்து வரும் பொதுமக்களைப் பார்க்கும்போது மிகவும் அச்சமாக இருந்தது. (அந்த அழிவின் கோரம் நெஞ்சை உறையவைக்கும்). பலர் கால் இழந்து கையிழந்து கொண்டுவரப்பட்டார்கள், சதைத்துண்டங்களாக வந்தவர்களைப் பார்க்கும்போது அச்சமாக இருந்தது. அப்பாவுக்கு நிற்க நேரமில்லை. நோயாளர் காவுவண்டியில் காயக்காரரை ஏற்றுவதும் இறக்குவதுமாக ஓடிக்கொண்டிருந்தார். வெளியே சென்ற அப்பா திரும்பிவரும் வரை வாசலில் நின்று வந்திட்டாரா! என பல தடவைகள் காத்திருந்திருக்கிறோம். எதிர்பார்த்திருந்த கணங்கள் ஏராளம். அப்பா திரும்பி வந்துவிட வேணும் என பல கடவுள்களை வேண்டிக் கொண்டு இருந்திருக்கின்றோம்.

தீபாவளித் தினமான அன்று கடுமையான எறிகணைத்தாக்குதல்களையும் விமானத்தாக்குதல்களையும் நடாத்திக் கொண்டு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டது இந்திய இராணுவம். எல்லோரும் வழமைபோல் கட்டிடப்பகுதிக்குள் சென்று பாதுகாப்புத் தேடினோம். எறிகணைத்தாக்குதல் குறைவாக இருக்கும் சமயங்களில் அம்மா ஓடிச்சென்று சமைத்தார். 11.30 மணியளவில் வெளி நோயாளர் பிரிவு இயங்கும் பகுதியில் செல்விழுந்து வெடித்தது. மத்தியானம் ஒரு ஓய்வு நேரம் பார்த்து அப்பா எங்களுக்கு சாப்பாட்டைக் குழைத்து உருண்டைகளாக்கித் தர, அக்கட்டிடத்தின் ஓரத்தில் நின்று சாப்பிட்டோம் (அவருடைய கையால் நாங்கள் சாப்பிடும் கடைசிச் சாப்பாடு என்பதை அறியாமால்). எங்களுக்கு குழைத்துத் தந்து விட்டு, அப்பா தானும் சாப்பிட்டார். மீண்டும் எறிகணைத் தாக்குதல் அதிகமாக, உணவை முடித்த உடனேயே நாங்கள் கட்டிடங்களுக்குள் சென்றுவிட்டோம்.

சிறிது நேரத்தின் பின் ஒரு எறிகணை எட்டாம் இலக்க நோயாளர் விடுதியின் மீது வீழ்ந்து சிதறியதால் அங்கிருந்த நோயாளிகள் ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இதனால், அலுவலகக்கட்டிடப் பகுதிக்கு அருகிலிருந்த நோயாளர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களையும் அக்கட்டிடத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தார்கள். எழுந்து நடக்க முடியாதவர்களை தள்ளுவண்டிகளிலும் தோள்களிலும் சுமந்து கொண்டுவந்து மெத்தைகளை நிலத்தில் போட்டு படுக்க வைத்தனர். அதில் சிலர் சேலைன் மருந்து ஏற்றியபடியே கொண்டுவந்து விடப்பட்டனர். இதனால் அவ்விடம் நோயாளர்கள், வைத்தியர்கள், பணியாளர்களினால் நிரம்பியிருந்தது.

பிரதான அலுவலகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் வெளிவாசலுக்கு நேரே நின்று பார்த்தால் யாழ் மணிக்கூட்டுக் கோபுரப்பகுதி தெரியும். அந்த வாசல் வழியாகத்தான் நோயாளர்களை வைத்தியசாலைக்குள் கொண்டு வருவார்கள். இடையிடையே வாசலுக்குச் சென்று வெளியில் என்ன நடக்கின்றது என பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை மூன்று மணியளவில், அலுவலகத்திற்கு நேரே இருக்கும் பிரதான வாசலில், வெள்ளைக் கொடியுடன் வந்த வாகனம் ஒன்று பிரதான வீதியிலிருந்து வைத்தியசாலைக்குள் வருவதற்கு திரும்பியபோது, மணிக்கூட்டு கோபுரத்தடிக்கு முன்னேறி வந்திருந்த அமைதிப்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதிலிருந்து சாரதி மட்டும் வைத்தியசாலைக்குள் ஓடிவந்தார். காயக்காரர்களுடன் சேர்த்து வாகனம் தீப்பிடித்து எரிந்தது.  தப்பி வந்த சாரதி ”நான் குருநகரில் இருந்து காயக்காரரை ஏத்திக் கொண்டு வந்தனான். உள்ளுக்குள்ள கொண்டு வரமுன்னம் இப்பிடி நடந்து போச்சுதே” என்று கதறிக் கொண்டிருந்தார். 

"அங்க சனமெல்லாம்  வீதியிலையும் வீடுகளிலையும் காயப்பட்டும் செத்தும் போய் கிடக்குதுகள்  அவங்களை ஏத்திக் கொண்டுவர ஒண்டுமில்லை, ஆக்களுமில்லை. இவங்களாவது பிழைக்கட்டும் எண்டு ஏத்திக் கொண்டு வந்தன். கடைசியில வாசல்ல வைச்சே அவங்களையும் கொன்றுபோட்டாங்களே..... அங்க தெருவெல்லாம் பிணமாத்தான் கிடக்குது” என்றார். இதைக் கேட்டபோது உடல் ஒருகணம் நடுங்கியது.

கோட்டையிலிருந்த இராணுவம் நகருக்குள் முன்னேறி வந்துவிட்டதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். நான் அப்பா இருந்த அலுவலக அறைக்குச் சென்றேன். அங்கு அப்பாவுடன் எனக்கு அடுத்த தம்பியும் கடைசித்தம்பியும் இருந்தனர். அப்பா என்னை அம்மாவுடன் நிற்குமாறு கூறினார். நான் அம்மாவிடம் வந்து விட்டேன். அம்மாவும் நானும் மூன்றாவது தம்பியும் நண்பனும் பிரியாவும் கதிரியக்க கட்டிடப்பகுதிக்குள் நின்று கொண்டிருந்தோம். அம்மா மூன்றாவது தம்பியுடன் மாடிப்படியில் இருந்தார். நான் நண்பனுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்த எல்லோரும் பயத்துடன் என்ன நடக்குமோ என பேசிக் கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட நான்கு மணியளவில் திடீரென துப்பாக்கி வேட்டுக்களின் சத்தம் மிக அண்மையில் கேட்கத் தொடங்கியது. வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்த இராணுவம் நாம் இருந்த பகுதியை நோக்கிச் சுட்டுக்கொண்டு வந்தது. எல்லோரும் சத்தமிட்டவாறே ஆளுக்காள் தள்ளுப்பட்டுக் கொண்டு ஓடினார்கள், நோயாளர்கள் செய்வதறியாது கத்தினார்கள். தம்பிக்கு பக்கமாக இருந்த சுவரில் துப்பாக்கிவேட்டு ஒன்று பட்டுத் தெறித்தது. இராணுவம் வைத்தியசாலைக்குள் வந்தால் அவர்களுடன் பேசலாம் என நம்பிக்கையுடன், வைத்தியசாலைச் சீருடையணிந்து முன்னுக்கு நின்ற பணியாளர்கள் பிணங்களாகச் சரிந்து கொண்டிருந்தார்கள்.

தம்பியை இழுத்துக் கொண்டு வந்த அம்மா என்னை கதிரியக்கப் பகுதிக்கு எதிர்ப்பக்கம் தள்ளிவிட்டார். நானும் நண்பனும் ஒரு அறைக்குள் செல்ல, பின்னுக்கு வந்த அம்மாவும் தம்பியும் அறைக்குள் நுழைய முயற்சித்தனர். அது முடியாமல் போக எதிர்ப்பக்கமாக இருந்த அறைக்குள் செல்ல எத்தனித்தார், அதுவும் முடியவில்லை. உடனே அந்தக் கொறிடோரில் விழுந்து படுத்து விட்டனர். அதேசமயம் அந்த இடத்தில் வீழ்ந்து வெடித்த கைக்குண்டில்  பிரியா காயமடைந்து விழுந்தாள். தொடர்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் வைத்தியசாலை வளாகத்தை அதிர வைத்துக் கொண்டிருந்தன. ஐயோ! ஐயோ! என்ற கூக்குரல்கள் முருகா! முருகா! நல்லூரானே! அம்மாளாச்சி காப்பாற்று காப்பாற்று என எல்லா குலதெய்வங்களையும் கதறி அழைத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் 'வி ஆர் சிவிலியன்ஸ், வி ஆர் சிவிலியன்ஸ்’ என்ற சத்தங்களும் பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. மக்களின் கதறல்கள் எதையும் செவிமடுக்காத 'அமைதிப்படையின்' கொலை வெறியாட்டம் ஒரு மணித்தியாலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

யாழ் மருத்துவமனை

ஒரு மணித்தியாலத்தின் பின் மக்களின் அழுகுரல் சத்தங்கள் சற்று அடங்கிக்கொண்டு போக, துப்பாக்கிச் சத்தமும் அடங்கிக் கொண்டு போனது. அந்தி சாய்ந்து, இருள் கவிழ்ந்தது. கீழ்த்தளப்பகுதியில் உள்ளவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக எண்ணியிருந்தனரோ என்னவோ! அங்கு படையினர் நடமாட்டம் குறைந்து, மேல்மாடியில் வைத்தியர்கள் தங்கும் பகுதியில் படையினரின் நடமாட்டம் கூடுதலாக இருந்தது. அத்துடன் அங்கிருந்து வெளிப்பகுதியை நோக்கி சுட்டுக்கொண்டிருந்தனர். இந்தியப்படையின் கிந்தி உரையாடல்கள் இராணுவ சப்பாத்துச் சத்தங்களைத் தவிர, வளாகத்தில் மயான அமைதி நிலவியது. எங்களுக்கு வெளியே என்ன நடந்தது என்று தெரியவில்லை, என்ன செய்வதென்றும் புரியவில்லை. கொறிடோர்ப் பகுதியில் இருந்த அம்மாவுக்கும் தம்பிக்கும் என்ன நடந்தது! காயமடைந்த பிரியா எப்படியிருக்கின்றார்! அப்பாவுக்கு என்ன நடந்தது! அப்பாவுடன் இருந்த தம்பிகளுக்கு என்ன நடந்தது! எந்தக் கேள்விகளுக்கும் விடை தெரியாமல் பயத்தில் உறைந்து போய் இருந்தோம்.

அங்கிருந்து வெளியேறிச் செல்ல முடியாது. இடையிடையே கேட்ட துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் காதைப் பிளந்தன. அறை வாசலில் இருந்து மெதுவாக தலையை நீட்டி கோறிடோரில் இருந்த அம்மாவும் தம்பியும் எப்படியிருக்கிறார்கள் என்று பார்த்தேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. அந்த இடத்தில் பலர் படுத்திருந்தார்கள். எல்லோருமே பிணங்களுடன் பிணங்களாகப் படுத்திருந்தனர். சத்தமாகவும் பேசமுடியாது. மெதுவாக இது அம்மாவா? தம்பியா? என தவழ்ந்து சென்று விசாரித்தேன். பக்கத்திலிருந்தவர்கள் 'சத்தம் போடாமல் படுத்திரு, அசைவு தெரிந்தால் சுடுவாங்கள்' என்று சொன்னதால் எனது தேடலைத் தொடர முடியவில்லை. அப்படியே படுத்தேன், மனது வலித்தது. ஒவ்வொரு நிமிடமும் கனமாக இருந்தது.

கிருஷ்ண பகவான், கொடூர குணம் கொண்ட நரகாசுரனை வதம் செய்து மக்களைக் காப்பாற்றிய நாளை, இந்தியதேசம் தீபாவளித் திருநாளாகக் கொண்டாடும் தினத்தில் நிகழ்ந்தது இந்தக் கொடூரம். அங்கு மக்களைக் காப்பாற்ற கிருஷ்ணன் வரவில்லை. இந்திய அமைதிப்படை உருவத்தில் வந்த நரகாசுரனிடமிருந்து தங்களைக் காப்பாற்ற முருகா! முருகா! என மக்கள் கத்தியழைத்த போதும் முருகன் வரவில்லை. அன்று நரகாசுரனாக வந்த இந்திய அமைதிப்படை தனது கொலைவெறியை நிறைவேற்றி எங்கள் கண்ணீரில் அந்தத் தீபாவளியைப் பதிவு செய்தது.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. மக்களிடையே மயான அமைதி. இராணுவத்தின் குரல்கள் மட்டும் இடையிடையே பலமாக கேட்டுக் கொண்டிருந்தன. அந்த மயான அமைதிக்குள் 'ஜயோ என்னைக் காப்பாற்றுங்கோ! என்னைக் காப்பாற்றுங்கோ!’ என்ற ஒரு பெண்ணின் அவலக்குரல் போராடி ஓங்கி ஒலித்து பின்னர் தளர்ந்து அடங்கிக்கொண்டிருந்தது. அந்த அவலக்குரலைத் தாண்டிக் கேட்ட இராணுவச் சிப்பாய்களின் வெறிக்கூச்சல்கள் கட்டிடத்தை அதிரவைத்தன. எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்களா? என்பதை அடிக்கடி சுற்றி வந்து உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இடையிடையே கேட்ட புட்ஸ் சத்தங்கள் மூலம் உணர முடிந்தது. அதனால்தான் அதிலிருந்தவர்கள், சத்தம் போட வேண்டாம் கதையாதைங்கோ! என மற்றவர்களை கட்டுப்படுத்தினார்கள். அந்த இரவின் நிசப்தத்தில், பெற்றோர்கள் எங்கே? தம்பிகள் எங்கே?  என்ன நடந்திருக்கும்? என்ற கேள்விகள் மனதை மேலும் மேலும் குடைய நண்பனுடன் மட்டும் பகிர்ந்து கொண்டு படுத்திருந்தேன்.

நாங்கள் கொறிடோரின் முடிவுப்பகுதிக்கு சற்றுமுன்னால் இருந்த அறை வாசலில் இருந்தோம். அக்கொறிரோடில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அவர்களின் முனகல் சத்தங்களை வைத்துப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. நடு இரவில் ஒருவர் ’வீ ஆர் சிவிலியன்ஸ் பிளீஸ் டோன்ற் கில் அஸ்’ என சத்தமாகக் கூறினார். சிறிது நேரத்தில் மேல்மாடியிலிருந்து இராணுவம் நடந்துவரும் சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து குரல் வந்த பகுதியை அதிரவைத்த குண்டு சத்தமும் தொடர்ந்து கேட்ட துப்பாக்கி வேட்டுச் சத்தமும் அமைதியைக் குலைத்தன. அதன் பின்னர் அந்த மனிதரின் சத்தம் கேட்கவேயில்லை. பலர் காயப்பட்டு சிகிச்கையின்றி இறந்தனர். சிலர் இரத்தம் போக தண்ணீர் கேட்டு முனகிக் கொண்டிருந்தார்கள். காயப்பட்டு மரணத்தின் விளிம்புக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றலாம் என்ற ஆதங்கத்திலே அல்லது சுயநினைவின்றியோ காப்பாற்றுமாறு எழுப்பிய அபயக்குரல் அவர்களின் ஆத்மாவிற்கு விடைகொடுத்துக் கொண்டிருந்தது. இடையிடையே துப்பாக்கிச்சத்தங்கள் பல தடவைகளாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு உயிர் பறிக்கப்படுகின்றது என்பதை மட்டும் உணரக்கூடியதாக இருந்தது. யார் இறந்து விட்டார்கள், யார் யார் இறந்து கொண்டிருக்கின்றார்கள், தப்புவோமா! என்பது எதுவும் தெரியாமல் கழிந்தது அந்த இரவு.

மறுநாள், மரணத்தின் கணங்களுடன் விடிந்தது காலைப்பொழுது. மோசமான இரத்த வாடையும் வெடிமருந்தின் மணமும் காற்றில் பரவி நின்றன. அம்மாவும் தம்பியும் எங்காவது கண்ணில் தென்படுகின்றார்களா? என எட்டிப்பார்த்தபோது கொறிடோரின் முடிவில் அம்மாவும் தம்பியும் வேறு சிலரும் படுத்திருந்தது தெரிந்தது. காயப்பட்ட பிரியா அம்மாவிற்கு முன் படுத்திருந்தார். அவர்களுக்கு முன்னுள்ளவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். சிலர் காயத்துடன் கிடந்தனர். எல்லோரும் பிணங்களுடன் பிணங்களாகவே கிடந்தனர். அடுத்தது என்ன நடக்குமோ! கொல்லப்பட்டுவிடுவோமா! என்ற அச்சம் ஒன்றுசேர, ஒருவரையொருவர் நிசப்தமற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம். நான் தலையை சற்று உயர்த்தி அம்மாவின் கண்களைப் உற்றுப்பார்த்தேன். அம்மா தம்பியை கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு வாங்கிற்கு கீழே அசைவற்றுப் படுத்திருந்தார். என்னைப்பார்த்ததும் சிறு நிம்மதி அவரின் முகத்தில் தெரிந்ததுடன் உதட்டசைவில் கவனம் என சொன்னார். அதையும் தாண்டி, ஏக்கம், பயம் கலந்த பரிதவிப்பு அவரின் முகத்தில் தெரிந்தது. கொரிடோரில் கொல்லப்பட்டிருந்த பிணங்களைக் கடந்து இராணுவம் வரவில்லை. அதனால் பின்னால் இருந்தவர்கள் உயிர்தப்பியிருந்தனர்.

மேல் தளத்தில் இந்தியப்படையினர் கதைக்கும் சத்தங்களும் சிரிப்பொலிகளும் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தன. பத்து மணியளவில் இந்திய இராணுவத்திற்கும் சிலருக்குமிடையில் சம்பாசணை நடைபெறுவதை கேட்க முடிந்தது. இங்கு  நோயாளர்களும் ஊழியர்களும் மட்டுமே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பொதுமக்கள் என ஆங்கிலத்தில் தெளிவுபடுத்தப்படுகின்றது. மனதுக்குள் ஒரு சிறுதுளி நம்பிக்கைக் கீற்று. நாங்கள் காப்பாற்றப்படலாம். யாரோ எங்களுக்காக கதைக்கின்றனர் என்ற நினைப்பு சிறு தெம்பைத் தர, சற்று தலையைத் தூக்கிப்பார்த்துக் கொண்டிருந்தபோது வைத்தியசாலைச் சீருடையுடன் நால்வர், இந்திய இராணுவச் சிப்பாய்களிடம் யாராவது உயிருடன் எஞ்சியிருந்தால் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் கதைத்துக் கொண்டிருப்பதாக புரிந்து கொண்டேன். அப்போது இராணுவத்தினர் ஆயுதங்களின்றியே (ஏறக்குறைய எல்லோரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற நினைந்திருந்தனர் போலும்) கதைத்துக் கொண்டிருந்தனர்.

திடீரென ஒரு சீக்கிய இராணுவத்தினன் மேல்மாடிக்குச் ஓடிச்சென்றான். திரும்பி வந்தவன் கையில் துப்பாக்கி. வந்த வேகத்தில் அவர்களை நோக்கிச் சுடத்தொடங்கினான். முதலில் தாதி இரண்டாவதாக வைத்தியர்; பின்னர் மற்றைய தாதி தொடர்ந்து மற்றைய ஊழியர் என வரிசையாகச் சுட்டான். வைத்தியர் சூடுபட்டு விழும் போது முருகா என்ற சத்ததுடன் விழுந்து இறந்தார். அந்தச் சம்பவம் எமக்கு ஏற்பட்ட சிறு நம்பிக்கையை மட்டுமல்ல அவர்களின் உயிரையும் சேர்த்துப்பறித்தது. மக்களுக்காக கெஞ்சிக் கொண்டிருந்த அவர்களது உடல்கள் 'தொப்’ என்று விழுந்து இரத்தத்தில் குளித்தன. அங்கு அசைவின்றிப் படுத்திருந்த மக்களின் வற்றிய கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் வடிந்தன. அதில் சூடுபட்ட ஒருவர் பஞ்சபுராணமும் சிவபுராணமும் பாடியபடியே கிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலங்களின் பின் இறந்துபோனார்.

தப்பியிருந்த மக்களின் முகங்களில் ஏற்பட்ட சிறு நம்பிக்கையும் தகர்ந்தது. நாம் ஏன் கொல்லப்படுகின்றோம் என்று புரியவில்லை. கொல்லப்பட்டவர்கள் நோயாளிகளும் வைத்தியசாலை ஊழியர்களும் என்பதை உறுதிப்படுத்துவதில் யாருக்கும் சிரமம் இருக்காது. தொடர்ந்து இன்று வைத்தியசாலையின் இன்னுமொரு பக்கத்திலிருந்து வந்த வைத்தியர் மற்றும் தாதியர்கள் படுகொலை நடந்த இடத்திற்கு வந்து காப்பாற்ற முற்பட்டபோதும் ஏன் சுடப்பட்டார்கள் என்பது புரியவில்லை. தொடர்ந்து என்ன நடக்கப்போகுதோ! என் நண்பனின் பார்வையில் இருந்து புரியமுடிந்தது. தாய் தந்தையரை விட்டு அவனையும் கூட்டிவந்தது தவறோ? என மனம் எண்ணியது. காயப்பட்டவர்கள் தங்களின் வேதனைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாகக் கிடந்தனர். அடுத்தகணம் என்ன நடக்கப்போகின்றது எனத் தெரியாமல் அப்படியே அசைவற்று பேச்சற்றுப் பிணங்களைப்போல படுத்திருந்தோம். மதியத்தைத் தாண்டியும் அங்கு எந்த மாற்றமும் இல்லை. அப்படியே இருந்தோம்.

மாலைவேளையில் ஒரு பெண்ணின் அழுகுரல் சத்தம் கேட்டது. இங்கு நோயாளர்களும் வைத்தியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும்தான் இருக்கிறார்கள் எனக்கூறி கதறி அழுதது அந்தப் பெண்குரல். தொடர்ந்து இராணுவத்தினர் கதைக்கும் சத்தமும் கேட்டது. நம்பிக்கையின்றி, எங்களுக்காக இருன்னுமொரு உயிரா! என எண்ணிக்கொண்டிருந்த வேளை, அப்பெண், அவர் ஒரு வைத்தியர், அழுகையுடன் ”தப்பியிருப்பவர்கள் கையை உயர்த்திக்கொண்டு வெளியில் வாங்கோ” எனச் சொன்னார். என்ன செய்வதென்று புரியவில்லை. மருத்துவர் பொன்னம்பலம் அவர்கள் உட்பட பல வைத்தியர்களும் அந்த அறையில் இருந்தனர். அடுத்து என்ன நடக்கப் போகின்றது எனத் தெரியாமல் எழும்பி நடக்கத் தொடங்கினார்கள்.

நானும் கைகளை உயர்த்திக் கொண்டு பார்க்க, அந்தக் கொறிடோரில் இறந்த உடல்கள் இங்குமிங்குமாகக் கிடந்தன. ஒருவருக்கு மேல் ஒருவர் வீழ்ந்து கிடந்தனர். கால்வைத்து நடக்க இடமில்லை, இரத்தம் உறைந்து சேறு போல இருந்தது. இறந்தவர்களின் உடல்கள் வீங்கியிருந்தன. அம்மாவும் தம்பியும் எழுந்து கையை உயர்த்திக் கொண்டு நின்றனர். முன்பக்கம், மேல்மாடிப் படிகளுக்கு அருகில் கிடந்த பிணங்களுக்கிடையில் வைக்கப்பட்டிருந்த பரலின்மேல் கொக்கோக்கோலாக் கேஸ் ஒன்று இருந்தது. அதற்கு அருகில் சீக்கியச் சிப்பாய் துப்பாக்கியை உயர்த்தியபடி நின்றான். சோடா குடிச்சுக்குடிச்சுத்தான் எல்லோரையும் இரவிரவா சுட்டிருக்கிறானா! என நினைத்தேன்.

இரத்த வெள்ளத்தில் படுத்திருந்திருந்த பிரியா பலவீனமான குரலில் கூப்பிட்டார். அவரை நோக்கி அடி எடுத்து வைக்க முன்னர், துப்பாக்கியை நேரே பிடித்தபடி நின்ற இந்திய சீக்கியப்படையினன் நட என அதட்ட, கண்களினால் ஆற்றாமையையும் பயத்தையும் வெளிப்படுத்தி எந்த நம்பிக்கையுமற்று எல்லோருடனும் கையை உயர்த்திக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். அங்கு கிடந்த உடல்களுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் காலை வைத்தபோது உறைந்த இரத்தம் கணுக்கால் வரை தொட்டு நின்றது. அடிப்பாதத்தில் உடைந்த எலும்புகளும் தசைகளும் மிதிபட்டது போன்ற உணர்வு. மிக மோசமான இரத்தவாடை. அப்படியே பார்த்துப்பார்த்து நடந்து சென்றோம்.

கொறிடோரின் வாசலில் வைத்திய நிபுணர் சிவபாதசுந்தரம், அருகில் கிடந்த தாதிகளின் உடலைப் பார்த்தபோது, காலையில் எங்களைக் காப்பாற்ற வந்து இறந்தவர்கள் இவர்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். மேலும் பல உடல்களும் அந்தப்பகுதியை நிறைத்திருந்தன. நோயாளார் வண்டியில் படுத்திருந்த நோயாளர்கள் அந்த வண்டிகளிலேயே கொல்லப்பட்டுக் கிடந்தனர். விழுந்து சாமி கும்பிடுவதைப்போல பலர் கும்பிட்டபடியே இறந்திருந்தனர். நோயாளர் வண்டி ஒன்றில் தனது குழந்தையைக் கிடத்தியிருந்த தாய் அந்தக் குழந்தையை கட்டிப்பிடித்தபடியே இறந்து போய் கிடந்தார். மகளைத் தனது உடலுக்கு அடியில் மறைத்துக் கட்டிப்பிடித்தபடி இறந்திருந்த தகப்பன் என ஆங்காங்கு சுடப்பட்டு இறந்திருந்த உடல்கள், திகிலடைய வைக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு, அம்மாவும் நானும் மூன்றாவது தம்பியும் நண்பனுமாக இருபத்தி ஆறாவது வாட்டிற்குள் வந்து சேர்ந்தோம். அம்மா, அப்பாவையும் மற்றைய இரு தம்பிகளின் பெயரையும் கூறிக் கதறி அழுது கொண்டே வந்தார். சிறிது நேரத்தில் பிரியாவையும் நோயாளர் விடுதிக்கு கொண்டு வந்து சிகிச்சை கொடுத்தார்கள். அப்பகுதியில் உயிருடன் இருந்த அனைவரும் வந்து விட்டனர், ஏனையோர் இறந்துவிட்டார்கள் என சொன்னார்கள். அப்பாவும் இரண்டு தம்பிகளும் வரவில்லை.

அப்போது அலுவலக அறையில் இருந்து காயப்பட்டு வந்த ஊழியர் ஒருவரிடம் அப்பா எங்கே என்று கேட்டபோது, ’கடைசித்தம்பிக்கு காயம். அவருக்கு நிறைய இரத்தம் போய் தண்ணி கேட்டுக்கொண்டிருந்தான். அப்பா கொஞ்சம் பொறுத்துக் கொள்ளப்பு எண்டு சொன்னார். ஆனால் அவனால் அதைத் தாங்க முடியேல்லை சின்னப்பிள்ளைதானே, இரத்தம் அதிகமா வெளியேறிக் கொண்டிருந்ததால் தாகத்தை அடக்க முடியாமல் மீண்டும் தம்பி தண்ணியை கேக்க, அப்பா மேசையில் இருந்த தண்ணியை எடுத்துக் குடுக்க மெதுவாக எழும்பினவர். அப்ப யன்னல் பக்கமாக இருந்து சுடப்பட்டதில் அப்பிடியே விழுந்தவர்தான். அவற்றை சத்தம் அதுக்குப் பிறகு கேக்கவே இல்லை, அப்பதான் எனக்கும் சூடுபட்டது, வரக்கிலதான் பாத்தன் அப்பா இறந்திருந்தார். நான் மற்றத் தம்பியைக் காணவில்லை, காயப்பட்ட தம்பி மயங்கிக் கிடந்தான், என்னால தூக்கவர ஏலாமல் போயிட்டுது” என்றார். இரவு வேளை இடையிடையே கேட்ட வெடிச்சத்தத்தில் ஒன்று என் அப்பாவையும் பலிகொண்ட வேட்டொலி என்பது புரிந்தது. மரண வீட்டு ஓலங்கள் அந்த நோயாளர் விடுதியில் பரவியிருந்தது.  அப்பா இறந்துவிட்டார். காயமடைந்தவர்களைக் கொண்டு வந்த ஊழியர்களும் அங்கு இனியாரும் உயிருடன் இல்லை என்றனர். மேலும் அந்த கட்டிடப்பகுதிக்கும் அப்பாலும் பலரது உடல்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள்.

தம்பிகள் இருவருக்கும் என்ன நடந்தது என்பது புரியவில்லை. அலுவலக அறையிலிருந்து ஒவ்வொருவரிடமும் விசாரித்தேன். எங்கும் சரியான பதிலில்லை. இரவு வந்துவிட்டது. அப்போதுதான், இறந்தவர்களின் உறவினர்கள் இருந்தால் அங்கு சென்று சடலங்களை இனங்காணுமாறு இந்திய இராணுவத்தினர் சொன்னார்கள். பதைபதைப்புடன் அங்கு சென்றோம்.

கும்மிருட்டு, ஆங்காங்கு சடலங்கள், அப்பா இருந்த அலுவலகத்திற்குச் சென்று, டோச் வெளிச்சத்தில் தேடிப் பார்த்தபோது அப்பாவின் உடல் குப்புற கிடந்தது. அப்பா படுத்திருக்கிற மாதிரியே கிடக்கிறார் என அம்மா கத்தியழுதார். மெதுவாகத் தொட்டுத் திருப்பினேன். நெத்தியில் குண்டுபட்டு முகம் வீங்கியிருந்தது. நாக்கை பற்களால் கடித்தபடி இருந்தார். இறந்து போயிருந்த அவரின் சடலத்தின் மேல் தலையை அடித்து அம்மா அழுதார். அழுது கொண்டே தம்பிகள் எங்கேயென்று கேட்டுக் கதறினார். கடைசித்தம்பி காயப்பட்டிருந்ததாகச் சொன்ன இடத்தைப் பார்த்தேன். அதில் அவனைக் காணவில்லை, அவ்விடத்தில் உடலை இழுத்தால் வரும் அடையாளம் போல நிலத்தில் உறைந்திருந்த இரத்தத்தில் அடையாளம் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை, அம்மா தம்பிகளையும் நினைச்சு கத்தியழுதார். நான் என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்த ஏனைய சடலங்களையும் ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்கினேன். அப்பாவை இழந்த வலி ஒருபுறம், இது தம்பிகளின் உடல்களாக இருக்கக்கூடாது என்ற பதைபதைப்பு ஒருபுறம், ஒவ்வொரு சடலமாகப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய அங்கிருந்த அனைத்து சடலங்களையும் பார்த்தேன. அவர்களின் உடல்கள் அதில் இல்லை. எங்கே போனார்கள்? எனன நடந்தது? என்ற கேள்வி மனதை அழுத்தியது.

மறுநாள் விடிந்ததும் அங்கிருந்த சடலங்களை வைத்தியசாலையின் பிணவறைக்குப் பக்கத்தில் இருக்கும் பின்பக்க பாதைக்கருகில் போட்டு எரிப்பதற்கு இந்திய அமைதிப்படை தீர்மானித்தது. கட்டைகளை அடுக்கி சடலங்களை அதற்கு மேலே கொண்டு வந்து வைக்கச் சொன்னார்கள். நான் முதற்பிள்ளை என்பதால் அப்பாவுக்கு கொள்ளி வைக்க அனுமதி வாங்கித்தருமாறு கேட்டேன். வைத்தியர்கள் இருவர் இராணுவத்துடன் கதைத்து அதற்கான அனுமதியைப் பெற்றுத் தந்தார்கள்.

அப்பாவின் சடலத்தை நோயாளர் தள்ளுவண்டியில் வைத்து வைத்தியசாலை ஊழியர்களுடன் நானும் தம்பியும் சேர்ந்து தள்ளிக்கொண்டுபோய் பிணவறைக்கு அருகில் நின்றோம். ஓவ்வொரு உடலையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டுவந்தனர் அதில் பலரும் தெரிந்தவர்கள். இறுதியாக ஏற்கனவே இறந்து பிணஅறையில் இருந்தவர்கள் உட்பட எண்பதிற்கும் மேற்பட்ட சடலங்களும் ஒன்றாக, குவியலாக  அடுக்கப்பட்டன. அதில் ஒரு ஓரத்தில் அப்பாவின் உடலை தனியாகக் கிடத்தி நெஞ்சாங்கட்டையை நானும் தம்பியும் வைத்தோம். இந்தியச் சிப்பாய் ஒருவன் பேப்பரில் நெருப்பைக் கொளுத்தி அப்பாவிற்கு கொள்ளி வைக்கத் தந்தான். நான் அப்பாவிற்கு கொள்ளி வைத்து விட்டு திருப்பி அதைக் கொடுக்க, அப்பிணக்குவியலைச் சுற்றி நெருப்பு வைக்குமாறு கூறினான். நானும் அவ்வாறே அப்பாவுடன் சேர்த்து அனைத்து சடலங்களுக்கும் நெருப்பை வைத்துவிட்டு தம்பியையும் கூட்டிக்கொண்டு வந்தேன்.

அனைத்து சடலங்களும் ஒன்றாக எரியூட்டப்பட்டன. பின்னர், பிற்பகல் வேளை, அப்பாவுடன் வேலை செய்த ஒருவரின் துணையுடன் அஸ்தி எடுக்கச் சென்றேன். அங்கு சென்று பார்த்தபோது உடல்கள் முழுமையாக எரியவில்லை. அரைகுறையாக எரிந்த நிலையில் கருகியிருந்தன. மரங்களைக் கீழே மட்டும் போட்டு எரித்ததினால் கீழிருந்த உடல்களே எரிந்திருந்தன். மேலேயிருந்த உடல்கள் எரியாமல் இருந்ததுடன் நெஞ்சாங்கட்டை வைத்து எரிக்காததால் சில உடல்கள் நிமிர்ந்தும் இருந்தன. அப்பாவின் உடலின் அரைவாசி எரியாது இருந்தது. உடலின் மேற்பக்கத்தில் எரிந்த இடத்தில் மூன்று இடங்களில் இருந்தும் எரிந்திருந்த எலும்பை உடைத்தும் சாம்பலாக்கி எடுத்தேன். நேற்று சோறு ஊட்டிய என் அப்பாவை சாம்பலாக எடுத்து பத்திரப்படுத்தி அம்மாவிடம் கொடுத்தேன்.

கடமையின்போது உயிர் நீத்த வைத்தியசாலை ஊழியர்கள்

அதன்பின் வைத்தியசாலையில் ஒளிந்திருக்கக்கூடிய பல இடங்களுக்கும் சென்று தம்பிகளைத் தேடினேன். கிட்டத்தட்டப் பதினைந்து நாட்களுக்கு மேல் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்தோம். ஊரடங்குச் சட்டம் இருந்ததால் யாரும் வெளியில் நடமாட முடியவில்லை. பதினைந்து நாட்களாக இருந்த இந்தியப்படையின் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட அனுமதிக்கப்பட்டனர். அப்போதுதான்  இரண்டு தம்பிகளும் நல்லூர் கோயிலில் இருக்கின்றார்கள் என அங்கிருந்து வந்த வைத்தியர் ஒருவர் கூறினார். எங்களை வைத்தியசாலையிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, அம்மா நல்லூர் கோயிலுக்குப் போய் அவர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வந்தார். நீண்ட நாட்களுக்குப்பிறகு தம்பிகளைச் சந்தித்தது சந்தோசத்தைக் கொடுத்தது.

கடைசித்தம்பி படுகொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வர பயமாயிருக்கு எனக் கூறி வரமறுத்துவிட்டான். இரண்டாவது தம்பியிடம் "ஏன் ஓடினீங்கள்?” எனக் கேட்டேன். ”உங்களை ஆமி கையை உயர்த்திக் கூட்டிக்கொண்டு போனபோது அம்மா எங்கட பெயரைக் கூப்பிட்டு அழுதுகொண்டு போனது கேட்டது. அதனால உங்களையும் ஆமி சுடப்போறாங்களோ! எண்ட பயத்தில எழும்பேல்லை. பிறகு அப்பகுதியில் ஆமியைக் காணல்லை. வைத்தியசாலை ஊழியர் ஒராளும் காயப்பட்டு எழும்பாமல் எங்களோடயிருந்தார். அவர் நாங்கள் இங்கயிருந்து தப்பி ஓடுவம் என்றார். நானும், தம்பியையும் தூக்கிக் கொண்டு மதில் ஏறிப் பாய்ந்து நல்லூர் கோயிலுக்கு ஓடினான். அதோட அப்பாவின் சட்டைப் பையில் இருந்த அம்புலன்ஸ் சாவியையும் நல்லூரில் கோயிலில் நின்ற வைத்திய பொறுப்பதிகாரி நச்சினாக்கினியரிடம் கொண்டுபோய் கொடுத்து நடந்ததைக் கூறினேன்" என்றான்.

தம்பியும் பிணத்தோடு பிணமாகத்தான் அந்த சம்பவத்தில் உயிர் தப்பியிருந்தான். "ஆமி சுட்டுக்கொண்டு வந்தபோது நான் வாசல்தான் நிண்டனான். அவன் சுட்டதில் எனக்கு முன் நின்றவர்கள் இரண்டு பேரும் வெடிபட்டு எனக்குமேல் விழுந்து விட்டினம். நான் அப்பிடியே அசைவில்லாமல் அவர்களின் உடலுக்கு கீழ கிடந்தன். ஆமி பிறகு சுட்டது எனக்குப்படேல. கொஞ்ச நேரத்தில் என்ர காலும் விறைச்சுப் போட்டுது. ஆமி வந்து என்ர காலை தனது சூக்காலால் தட்டிப்பார்த்தான். எனக்கு ஒன்டும் தெரியவில்லை, நானும் சத்தம்போடாமல் இருந்திட்டன். அதால நான் இறந்திட்டதா நினைச்சு விட்டுட்டுப் போயிட்டான். எனக்கு மேல இறந்து விழுந்தவர்கள் பயங்கர பாரம் ஒன்டும் செய்ய முடியாததால அப்படியே இருந்தன்” எனக்கூறினான்.

அன்றைக்கு வைத்தியசாலை மட்டுமல்ல யாழ்நகரை அண்டிய பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அன்றிலிருந்து தீபாவளி தினம் வலிகள் நிறைந்த ஒரு நாளாகவே இன்றும் தொடர்கின்றது. இன்றுவரை ஆறாத ரணமாக இருக்கும் சம்பவங்கள் எத்தனை. என் அப்பாவோடு மகிழ்ந்திருந்த காலங்கள், அப்பாவை இழந்து அனுபவித்த வேதனைகள் பல. எங்கள் எல்லோரையும் இச்சம்பவம் கடுமையாகப் பாதித்தது. குடும்பத்தில் இருவர் விடுதலைப்போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதில் இரண்டாவது தம்பி 1991ம் ஆண்டு கப்டன் வாணனாக வீரச்சாவடைந்தான்.

எனது அப்பாவுடன் கொல்லப்பட்ட வைத்தியர்கள், பணியாளர்கள் மற்றும் அன்றைய தினம் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவிப் பொதுமக்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

- அபிஷேகா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

 

குர்து மொழி பேசும் இசுலாமிய ம‌க்க‌ள் குர்திய‌ர்களாவர். பெரும்பான்மை குர்தியர்கள் சன்னி முசுலிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். சிறுபான்மை சியா பிரிவு முசுலிம்களும், கிருத்துவர்களும், யூதர்களுமாவர். இவ‌ர்க‌ள் வாழ்ந்த‌ நில‌ப்ப‌குதியே குர்திசுதான் என்று அழைக்கப்பட்டது. தங்களுக்கென்று தனி மொழி, பண்பாடு, கலாச்சாரம் கொண்ட ஒரு தனி இனமாக இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். குர்து மொழி சுமேரிய கல்வெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இவர்கள் ஒரு தொன்மையான பழங்குடி இனம் என்பது புலனாகின்றது.

kurdistan_400முதல், இர‌ண்டாம் உல‌கபோர்கள் இவர்கள் வாழ்ந்த குர்திசுதானை நான்கு துண்டுகளாக்கி, நான்கு நாடுக‌ளின் எல்லைகளுக்குள் சிக்கிவைத்தது. ஆம், துருக்கி, ஈராக், ஈரான், சிரியா என்பவையே அந்த நான்கு நாடுகள். குர்தியர்கள் தாங்கள் வாழுகின்ற எல்லா நாடுகளிளும் தங்களது தேசிய விடுதலைக்காகவும், சுதந்திர குர்திசுதான் அமைக்கவும் போராடி வந்துள்ளனர். குர்தியர்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 20லிருந்து 25 கோடி வரை இருக்கக்கூடும். இதில் ஈராக்கில் 4 கோடி குர்து மக்கள் வாழ்கின்றார்கள். ஈராக்கில் வாழ்ந்த‌ குர்து ம‌க்களின் விடுதலைப் போராட்டத்தினால் கோபமடைந்த ஈராக் அரசு அவர்களின் மேல் மேற்கொண்ட‌ இன‌ப்ப‌டுகொலையை ப‌ற்றியதே இக்க‌ட்டுரை. இந்த படுகொலை இனவெறியினாலோ, பாசிசவெறியினாலோ நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை அல்ல. அரசை எதிர்த்து தனி நாடு(குர்திசுதான்) கேட்டு போராடிய‌ புரட்சிக்காரர்களையும், மக்களையும் ஒடுக்க அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்டதே இந்த இனப்படுகொலை.

குர்திசுதான் ஈராக்கில் வாழ்ந்த‌ குர்து இன‌ம‌க்க‌ளிடையே இர‌ண்டு பெரிய‌ இய‌க்க‌ங்க‌ள் இருந்த‌ன‌. ஒன்று முசுத‌பா ப‌ர்சானி என்ப‌வ‌ரால் 1959ல் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ குர்திசுதான் ச‌ன‌நாய‌க‌ க‌ட்சி (Kurdistan Democratic Party - KDP), சலால் தலபானி என்பவரால் 1975ல் தொடங்கப்பட்ட குர்திசுதான் நாட்டுப்ப‌ற்றுள்ளோர் கூட்டணிக் க‌ட்சி (Patriotic Union of Kurdistan-PUK). இந்த‌ இரு இய‌க்க‌ங்க‌ளும் த‌ங்க‌ளுக்கென்று த‌னியாக‌ இராணுவ‌த்தைக் கொண்டிருந்தார்க‌ள். இந்த‌ இரு இய‌க்க‌ங்க‌ளும் குர்திசுதானின் விடுத‌லைக்காக‌ போராடினார்க‌ள். ஈரானுக்கும், ஈராக்கும் இடையிலான‌ போரில் இவ‌ர்க‌ள் ஈரானின் ப‌க்க‌ம் சாய்ந்து ஈராக்கிற்கு எதிராக‌ போராடினார்க‌ள் (1987ஆம் ஆண்டு). இத‌னால் ஆத்திர‌ம் கொண்ட‌ ஈராக்கின் ஆட்சியிலிருந்த‌ ச‌தாம் உசைன் குர்திய‌ர்க‌ளுக்கு எதிரான‌ "Anfal" என்ற இனப்படுகொலை operation-ஐ தொட‌ங்கினார். 1987ஆம் ஆண்டு இறுதியில் தொட‌ங்கிய‌ இந்த‌ இன‌ப்ப‌டுகொலை திட்ட‌ம் 1988 இறுதியில் தான் முடிவ‌டைந்த‌து. மொத்தம் நான்கு கட்டங்களாக இந்த இனப்படுகொலையை அரசு நடத்தியது.

இந்த இனப்படுகொலையில் 50,000லிருந்து 2,00,000 வரையிலான பொதுமக்கள் இறந்திருக்கக் கூடும் என்றும், ஒட்டுமொத்தமாக 1,000 கிராமங்கள் அழிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அறியப்படுகின்றது. இந்த‌ இன‌ப்ப‌டுகொலையை முன்னின்று ந‌ட‌த்திய‌வ‌ர் பாத் க‌ட்சியின்(ச‌தாம் உசைன் க‌ட்சி) வ‌ட‌க்கு ப‌குதி பொறுப்பாள‌ரான‌ அலி ஆச‌ன் அல்-ம‌சீது. இந்த இனப்படுகொலை அரசால் திட்டமிட்டு, மிகவும் இரகசியமாக முடிக்கப்பட்டது.  இந்த‌ இன‌ப்ப‌டுகொலை தாக்குத‌லின் போது த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ வேதிய‌ல் குண்டுக‌ள் ம‌க்க‌ள் மீது வீச‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இது போன்ற‌ ஒரு வேதிய‌ல் தாக்குத‌லை நேரில் பார்த்த‌ ஒருவ‌ரான‌ அப்துல்லா அப்தெல் காதிர் கூறுகையில்....

  "ஈராக் அர‌சு எங்க‌ள் மீது வேதிய‌ல் குண்டுக‌ளை வீசி தாக்கும் என்ற‌ செய்தி எங்க‌ளுக்கு கிடைத்திருப்பினும், எப்போது அந்த‌ தாக்குத‌ல் ந‌ட‌க்கும் என்ப‌து எங்க‌ளுக்கு தெரிய‌வில்லை. 1988 மே 3 அன்று எங்க‌ள் ஊரில் ஏதோ ஒன்று ந‌ட‌ப்ப‌த‌ற்கான‌ அறிகுறிக‌ள் தென்ப‌ட்ட‌ன‌. இராணுவ‌ம் மிக‌வும் அமைதியாக‌ இருந்தது. அன்று நானும் என‌து உற‌வின‌ரும் (இருவ‌ரும் ஆசிரிய‌ர்க‌ள்) எங்க‌ள் கிராம‌த்தில் உள்ள‌ மிக‌ உய‌ர்ந்த‌ இட‌மான‌ எங்க‌ள் ப‌ண்ணைக்கு சென்றோம். முத‌லில் இர‌ண்டு சோத‌னை விமான‌ங்க‌ள் ப‌ற‌ந்த‌ன‌. அந்த‌ விமான‌ங்க‌ள் காற்று எந்த‌ திசையில் வீசுகின்ற‌து என்ப‌தை அறிந்து கொள்வ‌த‌ற்காக‌ இந்த‌ ப‌குதிக்கு வ‌ந்துள்ள‌து தெரிந்த‌து. இந்த‌ இர‌ண்டு விமான‌ங்க‌ளும் சென்ற‌ பிற‌கு 18 விமான‌ங்க‌ள் (தோராய‌மாக‌) நாங்க‌ள் இருந்த‌ ப‌குதிக்கு வ‌ந்து குண்டுக‌ளை வீச‌த்துவ‌ங்கின‌.

halabja_200இந்த‌ குண்டுவீச்சில் எப்பொழுதும் வெளிப்ப‌டும் ச‌த்த‌ம் வ‌ர‌வில்லை என்ப‌தால் அவ‌ர்க‌ள் வீசிய‌ குண்டுக‌ள் வேதிய‌ல் குண்டுக‌ள் என்று எண்ணினேன். நான் எண்ணிய‌து போல‌வே ஒரு ப‌ழுப்பு நிற‌த்துகள்கள் அந்த‌ ப‌குதியில் ஒரு போர்வையைப் போல‌ சூழ‌த்துவ‌ங்கின‌. இது ஒரு இர‌சாய‌ன‌த் தாக்குத‌ல் என்ப‌து என‌க்கு உறுதியாயிற்று. நான் மேலிருந்த‌ப‌டியே கிராம‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளைப் பார்த்து, அவ‌ர்க‌ள் இரசாய‌ன‌த்தாக்குத‌ல் ந‌ட‌த்துகின்றார்க‌ள் எல்லோரும் மேலே வாருங்க‌ள் என்று அழைத்தேன். மேலே வ‌ந்த‌வ‌ர்க‌ள் பிழைத்தார்க‌ள். ஆனால் பெரும்பாலான‌ ம‌க்க‌ள் இர‌சாய‌ன‌த்தாக்குத‌ல் ந‌ட‌ந்த‌ கிராம‌ப்ப‌குதியிலேயே இருந்தார்க‌ள். எங்க‌ளுக்கு அடுத்த‌ என்ன‌ செய்வ‌தென்று தெரிய‌வில்லை.   தாக்குத‌ல் ந‌ட‌ந்து ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் க‌ழிந்த‌ பின்ன‌ர் நாங்க‌ள் கீழேவ‌ந்தோம். ஒருவ‌ர் என்னைப் பார்த்து உங்க‌ள் வீட்டுப் ப‌குதிக‌ளில் அவ‌ர்க‌ள் குண்டுக‌ளை வீசுகின்றார்க‌ள். இன்னேர‌ம் உங்க‌ள் வீட்டார் அனைவ‌ரும் இற‌ந்திருப்பார்க‌ள்" என்ற‌ அதிர்ச்சியான‌ செய்தியை என்னிட‌ம் சொன்னார்.

என‌க்கு இப்பொழுதும் என்ன‌ செய்வ‌தென்று தெரிய‌வில்லை. சில‌ நொடிக‌ளுக்குப் பின்ன‌ர் வீட்டை நோக்கி செல்வ‌தென்று முடிவெடுத்தேன். சூரிய‌ன் ம‌றைவ‌த‌ற்கு அரை ம‌ணிநேர‌ம் முன்பாக‌ நான் வீட்டை அடைந்திருப்பேன் என‌ நினைக்கின்றேன். வீட்டைச்  சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்த‌து. முத‌லில் ந‌ச்சு இரசாய‌னப் பொருட்க‌ளிட‌மிருந்து  என்னைப் பாதுகாத்துக் கொள்வ‌த‌ற்கான‌ முக‌மூடியை அணிந்து கொண்டு நான் உருவாக்கியிருந்த‌ பதுங்குகுழிக்கு சென்று பார்த்தேன். அங்கு யாரும் இல்லை. எனக்கு அச்ச‌ம் அதிக‌ரித்த‌து. பின்ன‌ர் என் வீட்டுக்கு அருகிலுள்ள‌ குகைக்கு சென்று பார்த்தேன். அங்கேயும் ஒருவ‌ர் கூட‌ இல்லை. பின்ன‌ர் அந்த‌ ப‌குதியில் உள்ள‌ ஒரு சிறிய‌ நீரோடைக்கு சென்று பார்த்தேன். இர‌சாய‌ன‌த்தாக்குத‌ல் ந‌ட‌ந்தால் இந்த‌ நீர் அதிலிருந்து ந‌ம்மை பாதுகாக்கும் என்று என் ம‌னைவியிட‌ம் ஒருமுறை கூறியிருந்தேன். முத‌லில் அந்த‌ நீரோடையை ஒட்டி என் அம்மாவைப் பார்த்தேன். அவ‌ர் இற‌ந்திருந்தார். நான் அவ‌ரை இறுதியாக‌ ஒருமுறை முத்தமிட‌லாம் என‌ எண்ணினேன். ஆனால் அவ்வாறு செய்தால் அவ‌ரைத்தாக்கிய‌ ந‌ச்சுப் பொருள் என்னுள்ளேயும் சென்று விடும் என‌ எண்ணி த‌விர்த்துவிட்டேன். ஆனால் பின்னாட்க‌ளில் இதை நினைத்து ப‌ல‌முறை நான் அழுதுள்ளேன். அந்த‌ நீரோடையை ஒட்டி ப‌ல‌பேர் இற‌ந்து கிட‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் நீரோடைக்கு அருகில் வ‌ரும் முன்ன‌ரே ம‌ய‌க்க‌ம் ஏற்ப‌ட்டு அப்ப‌டியே இற‌ந்திருக்க‌க்கூடும், மேலும் ப‌ல‌ர் அந்த‌ நீரோடையில் மூழ்கி இற‌ந்திருந்தார்க‌ள்.

அந்த நீரோடை வ‌ழியே நான் ந‌ட‌ந்துகொண்டிருந்தன். என் 9 வ‌ய‌து பிள்ளையைப் பார்த்தேன். அவ‌ள் என் உற‌வின‌ர் பைய‌னின் கையை இறுக‌ப்பிடித்த‌ப்ப‌டியே இற‌ந்துகிட‌ந்தா‌ள். மேலும் அந்த‌ வழியே ந‌ட‌க்க‌ என் த‌ந்தை, என் ம‌னைவி ம‌ற்றும் இர‌ண்டு குழ‌ந்தைக‌ளும், என் தம்பி, அவரது மனைவி என எல்லோரும் அங்கு இற‌ந்து கிட‌ந்தார்க‌ள். சுமார் 200லிருந்து 300 மீட்டர் இடைவெளிக்குள்ளே பல மக்கள் இற‌ந்து கிடப்பதை பார்த்தேன். என் மனைவியின் அருகே ஒரு பெண் இற‌‌ந்து கிட‌ந்தாள். அந்த‌ பெண்ணை ச‌ற்றே திருப்ப‌ முய‌ன்றேன். அவ‌ரை இறுக‌ அணைத்த‌ப்ப‌டி அவ‌ர‌து குழ‌ந்தை இருந்த‌து. குழ‌ந்தை இற‌க்க‌வில்லை. உட‌ன‌டியாக‌ அந்த‌ குழ‌ந்தையை வீட்டுக்கு சும‌ந்து சென்று அந்த‌ குழ‌ந்தையின் உடைக‌ளை மாற்றினேன். என் கூட்டுக்குடும்ப‌த்தில் 40 பேர் வாழ்ந்து வ‌ந்தோம். ஆனால் இந்த‌ இர‌சாய‌ன‌ தாக்குத‌லுக்குப் பின்ன‌ர் மிஞ்சிய‌து 15 பேர் ம‌ட்டுமே.

  அர‌சு இந்த‌ தாக்குத‌லுக்கு ஒரே ஒரு ந‌ச்சு இர‌சாய‌ன‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை. நான்கு இர‌சாய‌ன‌ப்பொருட்க‌ளை க‌ல‌ந்து அவ‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தி இருக்கின்றார்க‌ள். அத‌னால் தான் இந்த‌ தாக்குத‌லுக்கு உள்ளான‌வ‌ர்க‌ளின் த‌சைக‌ளை முத‌லில் செய‌ல்ப‌ட‌முடியாம‌ல் உறுதியான‌ ஒன்றாக‌ மாற்றிய‌தால் அவ‌ர்க‌ளால் ந‌க‌ர‌முடிய‌வில்லை. மேலும் இந்த‌ ந‌ச்சு அவ‌ர்க‌ளை இர‌ண்டு நிமிட‌ங்க‌ளுக்குள் கொன்றிருக்கும் என்ப‌து என் க‌ணிப்பு..."

  இது போன்ற‌ இர‌சாய‌ன‌த்தாக்குத‌ல்க‌ள் முடிந்த‌ பின்ன‌ர் ஈராக் இராணுவ‌த்தின் த‌ரைப்ப‌டை ஊர்க‌ளுக்குள் வ‌ந்து மீதியிருக்கும் 15 வ‌ய‌திலிருந்து 45 வ‌ய‌து வ‌ரையிலான‌ ஆண்க‌ளை கைது செய்தும், சில‌ குறிப்பிட்ட‌ ப‌குதிக‌ளில் ம‌ட்டும் பெண்க‌ளையும் கைது செய்து ஈராக்கின் சில‌ ப‌குதிக‌ளுக்கு கொண்டு சென்றார்க‌ள். இது போன்ற‌‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை Genercide என்று ஆய்வாள‌ர்க‌ள் குறிப்பிடுகின்றார்க‌ள். ஆம் இய‌க்க‌ங்க‌ளின் ப‌டைய‌ணிக‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும் த‌னிமைப்ப‌டுத்துவ‌து. இத‌னால் தான் எல்லா ப‌குதிக‌ளில் உள்ள‌ ஆண்க‌ளும், சில‌ ப‌குதிக‌ளில் ம‌ட்டும் பெண்க‌ளும் கைது செய்து த‌னியே அழைத்துச் செல்ல‌ப்ப‌ட்டார்க‌ள். இதுபோன்று கைது செய்து அழைத்துச் சென்ற‌வ‌ர்க‌ளை சுட்டு புதைப்ப‌த‌ற்காக‌ ஆழ‌க்குழி தோண்டும் க‌ன‌ர‌க‌ இய‌ந்திர‌ங்க‌ளைக் கொண்டு 100 பேர் வ‌ரை ஒட்டுமொத்த‌மாக‌ போட்டு புதைக்க‌க்கூடிய‌ மிக‌ப்பெரிய‌ ச‌வ‌க்குழிக‌ள் பெரும் எண்ணிக்கையில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ன‌. இந்த‌ ச‌வ‌க்குழிக்கு சென்று ம‌ர‌ண‌த்தை அருகில் கண்டு பின்னர் த‌ப்பித்த‌ "அப்துல்லா" என்ப‌வ‌ரின் சாட்சிய‌ம் ......

கேள்வி: கிர்குக்கில் உள்ள‌ தோப்சாவா சிறையை நீங்க‌ள் அடைந்த‌ உட‌ன் என்ன‌ ந‌ட‌ந்த‌து?

ப‌தில்: நாங்க‌ள் அங்கு சென்று சேர்ந்த‌ உட‌னே அவ‌ர்க‌ள் பெண்க‌ளையும், குழ‌ந்தைக‌ளையும் பிரித்து, ஆண்க‌ளை த‌னியே ஒரு அறைக்கு கொண்டு சென்றார்க‌ள்.

கேள்வி: உங்க‌ளை அவ‌ர்க‌ள் எந்த‌ குழுவில் வைத்திருந்தார்க‌ள்?

ப‌தில்: நான் என் அம்மா உட‌னும், த‌ங்கைக‌ளுட‌னும் இருந்தேன் (15லிருந்து 18 வயதிற்கு இடைப்பட்ட சிறுவன்).

கேள்வி: நீ அத‌ற்குப்பிற‌கு உன் அப்பாவை எப்போதாவ‌து பார்த்தாயா?

ப‌தில்: அவ‌ரை மீண்டும் ஒருமுறை தோப்சாவா சிறையில் பார்த்தேன். அத‌ன்பிற‌கு அவ‌ரை நான் பார்க்க‌வே இல்லை.

கேள்வி: அவ‌ரை நீ இறுதியாக‌ பார்த்த‌ பொழுது உன் அப்பாவை அவ‌ர்க‌ள் என்ன‌ செய்துகொண்டிருந்தார்க‌ள்?

mass_gravesப‌தில்: அவ‌ர‌து உள்ளாடையை ம‌ட்டும் விட்டு விட்டு மீத‌முள்ள‌ ஆடைக‌ளை க‌ளைந்து, எல்லோரையும் பெரிய‌ ஊர்திக‌ளில் ஏற்றிக்கொண்டிருந்தார்க‌ள்.

கேள்வி: அத‌ற்குப்பிற‌கு நீ உன் அப்பாவைப் பார்க்க‌வே இல்லையா?

ப‌தில்: இல்லை

கேள்வி: அத‌ற்கு பிற‌கு என்ன‌ ந‌ட‌ந்த‌து?

ப‌தில்: எங்க‌ளை சுடுவ‌த‌ற்கு முன்பாக‌ நாங்க‌ள் வ‌ந்த‌ ஊர்திக‌ளில் இருந்து எங்க‌ளை இற‌க்கி, எங்க‌ள் க‌ண்க‌ளை க‌ட்டி, குடிக்க‌ சிறித‌ள‌வு நீர் கொடுத்தார்க‌ள். நான் க‌ட்டியிருந்த‌ துணியை ச‌ற்று ந‌க‌ர்த்துவ‌த‌ற்கு என்னால் முடிந்த‌து. அந்த‌ மிக‌ப்பெரிய‌ ச‌வ‌க்குழி இராணுவ‌ வீர‌ர்க‌ளால் சூழ‌ப்ப‌ட்டிருப்ப‌தைப் பார்த்தேன்.

கேள்வி: உங்க‌ள் கைக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌தா?

ப‌தில்: இல்லை.

கேள்வி: அவ‌ர்க‌ள் உங்க‌ளை ஊர்திக‌ளிலிருந்து கீழே இற‌க்கிய‌ போது நீ முத‌லில் என்ன‌ பார்த்தாய்?

ப‌தில்: நான் எங்க‌ளுக்காக‌ த‌யாராக‌ இருந்த‌ அந்த‌ ச‌வ‌க்குழிக‌ளை பார்த்தேன்.

கேள்வி: எத்த‌னை ச‌வ‌க்குழிக‌ளை நீ பார்த்தாய்?

ப‌தில்: அது இர‌வு நேர‌ம், ஆனால் எங்க‌ளைச் சுற்றி நிறை ச‌வ‌க்குழிக‌ள் இருந்த‌ன‌.

கேள்வி: நான்கு அல்ல‌து ஐந்து இருக்குமா?

ப‌தில்: இல்லை, அத‌ற்கு மேலாக‌வே இருக்கும். மிக‌ப்பெரிய‌ ச‌வ‌க்குழிக‌ளில் இருந்த‌ எடுக்க‌ப்ப‌ட்ட‌ உட‌ல‌ங்க‌ள் ஒன்றாக‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன.

கேள்வி: உன்னை கொண்டு சென்ற‌ ச‌வ‌க்குழியைப் ப‌ற்றி கூறு?

ப‌தில்: அந்த‌ குழி ஒரு நீர்த்தொட்டிக்காக‌ தோண்ட‌ப்ப‌ட்ட‌ குழியைப் போன்று இருந்த‌து. இந்த‌க் குழிக‌ளில் தான் அவ‌ர்க‌ள் எங்க‌ளை சுட்டுப் போட்டார்க‌ள்.

கேள்வி: ஊர்தியிலிருந்து கீழே இற‌‌ங்கிய‌  உட‌னே அவ‌ர்க‌ள் உன்னை அந்த‌க் குழியில் த‌ள்ளினார்க‌ளா?

ப‌தில்: ஆம்.

கேள்வி: எவ்வ‌ள‌வு உய‌ர‌ம் இருக்கும்? ஒரு மீட்ட‌ர்? இர‌ண்டு மீட்ட‌ர்?

ப‌தில்: மிக‌ உய‌ர‌மாக‌ இருந்த‌து

கேள்வி: எவ்வ‌ள‌வு இருக்கும்?

ப‌தில்: ஒரு ஆள் முழுவ‌துமாக‌ உள்ளே நிற்க‌ வைக்கும் உய‌ர‌ம் இருக்கும்.

கேள்வி: எத்த‌னை பேர்க‌ளை ஒரு குழியினுள் போட்டார்க‌ள்?

ப‌தில்: ஒரு ஊர்தியிலிருந்து வ‌ந்த‌ அனைவ‌ரையும் ஒரு குழிக்குள் போட்டார்க‌ள்.

கேள்வி: ஒரு ஊர்தியில் எவ்வ‌ள‌வு பேர் இருந்தார்க‌ள்?

ப‌தில்: நூறு பேர் இருந்திருப்பார்க‌ள்.

கேள்வி: அவ்வ‌ள‌வு பெரிய‌ குழியா அது?

ப‌தில்: செவ்வ‌க‌வ‌டிவில் இருந்த‌து.

கேள்வி: அந்தக் குழி இயந்திரத்தைக் கொண்டு சரியாக வெட்டப்பட்டது போல் இருந்ததா?

ப‌தில்: ஆம், நீர்தேக்க‌த்தொட்டிக்கான‌ குழிக‌ளை உருவாக்கும் க‌ன‌ர‌க‌ இய‌ந்திர‌ம்(Bulldozers) கொண்டு வெட்ட‌ப்ப‌ட்ட‌து போல‌ இருந்த‌து.

கேள்வி: நீ யாராவ‌து இராணுவ‌ வீர‌னின் முக‌த்தைப் பார்த்தாயா?

ப‌தில்: ஆம்.

கேள்வி: அந்த‌ இராணுவ‌வீர‌னின் க‌ண்க‌ளைப் பார்த்தாயா?

ப‌தில்: ஆம்

கேள்வி: அவ‌ன் க‌ண்க‌ள் உன‌க்கு என்ன‌ கூறின‌? அவ‌ன‌து முக‌ உண‌ர்ச்சிக‌ள் எப்ப‌டி இருந்த‌ன‌?

ப‌தில்: அவ‌ன் அழுதுவிடும் நிலைக்கு அருகில் இருந்தான். ஆனால் அருகில் இருந்த‌வ‌ன் இவ‌னை நோக்கி க‌த்தி என்னை அந்த‌க் குழிக்குள் த‌ள்ளிவிடும் ப‌டி கூறினான். அந்த‌க் க‌ட்ட‌ளையை ஏற்று அவ‌ன் என்னை குழியில் த‌ள்ளினான்.

கேள்வி: அவ‌ன் அழுதானா?

ப‌தில்: இல்லை, அழும் நிலைக்கு வ‌ந்திருந்தான்.

கேள்வி: அவ‌னுக்கு க‌ட்ட‌ளையிட்ட‌ அந்த‌ அதிகாரி எவ்வ‌ள‌வு தூர‌த்தில் இருந்தான்?

ப‌தில்: மிக‌ அருகிலேயே இருந்தான்.

கேள்வி: உன்னைக் குழிக்குள் த‌ள்ளிய‌ அந்த‌ இராணுவ‌ வீர‌ன் தான் உன்னை இர‌ண்டாவ‌து முறையாக‌ சுட்ட‌வ‌னா?
ப‌தில்: ஆம், க‌ட்ட‌ளை வ‌ந்த‌வுட‌ன் அவ‌ன் என்னை மீண்டும் ஒரு முறை சுட்டான். அவ‌ன் என்னை இர‌ண்டாவ‌து முறையாக‌ சுட்ட‌ பொழுது என‌க்கு இங்கு காய‌மான‌து(காய‌மான‌ இட‌த்தைக் காட்டுகிறார்)..........."

kurdistan_refugee_360வ‌தைமுகாம்க‌ளில் இருந்த‌ குர்திய‌ர்க‌ள். இதுபோன்ற‌ திட்ட‌மிட்ட‌ முறையில் எல்லோரையும் கொன்றுவிட்டு, மீத‌மிருந்த‌வ‌ர்க‌ளை அருகிலிருந்த‌ பாலைவ‌ன‌ வ‌தை முகாம்க‌ளில் குடியேற்றிய‌து இராணுவ‌ம். இளைஞ‌ர்க‌ள் அனைவ‌ரும் கொல்ல‌ப்ப‌ட்ட‌தால் பெரும்பாலும் பெண்க‌ளும் குழ‌ந்தைக‌ளுமாக‌வே இந்த‌ வதை முகாம் காட்சிய‌ளித்த‌து. இந்த‌ வ‌தைமுகாம் பின்னர்(1991) போராளி இய‌க்க‌ங்க‌ளால் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர் இங்கிருந்த‌ ம‌க்க‌ள் விடுத‌லை செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ பால் பாகுபாடு கொண்ட‌ இன‌ப்ப‌டுகொலை (genercide genocide) தாக்குத‌லில் அண்ண‌ள‌வாக‌(Approximately)  ஒரு இல‌ட்ச‌த்திற்கும் அதிக‌மான‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்றாக‌ள்.

இதை இந்த‌ ப‌டுகொலையை முன்னின்று ந‌ட‌த்திய‌ அல் அல்-ம‌சீதே  கூறியிருக்கின்றான் "அது என்ன‌ க‌ண‌க்கு 2,00,000... ஒரு இல‌ட்ச‌த்திற்கும் ச‌ற்று அதிக‌மான‌ ம‌க்க‌ளே இறந்துள்ளார்க‌ள்". மேலும் ஈரானுக்கு (அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரானை பிடிக்காது) எதிரான‌ போரில் ஈராக் செய்த‌ இந்த‌ ப‌டுகொலையைப் ப‌ற்றி யாரும் பேச‌வே இல்லை. ஈராக்கில் அந்த‌ கால‌த்தில் ப‌ணிபுரிந்த‌ அமெரிக்க‌ ஐக்கிய‌ நாடுக‌ள் இராணுவ‌த்தின் உள‌வுப்பிரிவு அதிகாரியான‌ ரிக் ஃபெர‌ன்கோனா கூறுகையில் "எங்க‌ள் அர‌சுக்கு இவ்வாறான‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ இர‌சாய‌ன‌ ந‌ச்சுக‌ளைக் கொண்டு ஈராக் இராணுவ‌த்தின‌ர் த‌ம் நாட்டு ம‌க்க‌ளின் மீதே போர் புரிந்து வ‌ருகின்றார்க‌ள் என்ப‌து தெரியும், ஆனால் ஈரானுட‌னான‌ போரின் வெற்றிக்காக‌ எங்க‌ள் அர‌சு க‌ண்டு கொள்ள்வில்லை".

  1990 க‌ளின் ஆர‌ம‌ப‌ கால‌க‌ட்ட‌த்தில் இந்த‌ Anfal Genocide Operation-ஐ ப‌ற்றிய‌ அர‌சு குறிப்புக‌ள் குர்து போராட்ட‌ இய‌க்க‌ங்க‌ளின் மூல‌மாக‌ கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்டு உல‌கின் க‌வ‌ன‌த்திற்கு கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌து. ஆனால் நான் முன்ன‌ர் கூறியுள்ள‌ கார‌ண‌த்தினால் உல‌க‌ம் இந்த‌ இன‌ப்ப‌டுகொலையை முடிந்த‌ அளவிற்கு ம‌றைக்க‌ முடிந்த‌து. இந்த இனப்படுகொலைக்காக இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. ஈரானுக்கு எதிராக போர் புரிந்ததால் உலகநாடுகள் எல்லாம் ஈராக்கின் இனப்படுகொலையை எவ்வாறு கண்டுகொள்ளாமல் விட்டதுவோ அதுபோல இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் கருதி உலக நாடுகள் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றன. குர்தியர்கள் மேல் எப்படி தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகள் எல்லாம் வீசப்பட்டதோ அதே போலவே ஈழத்திலும் தமிழ்மக்களின் மேல் தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகள், கொத்தணி குண்டுகள் என எல்லாமே வீசப்பட்டன. குர்திய இனப்படுகொலையைப் போலவே, ஈழ இனப்படுகொலையிலும் உலகம் வாய்மூடி கள்ள மௌனம் காத்தது. உலக நாடுகள் எல்லோருக்கும் இங்கு அவரவர் நலனே முக்கியம். அந்த நலன்களைப் பொறுத்தே மனித உரிமை என்ற வார்த்தைக் கூட இங்கே பிரயோகிக்கப்படுகின்றது என்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்......

பின்குறிப்பு: அமெரிக்க ஐக்கிய நாடுகளுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும், அரபு நாடுகள் இருந்ததால் இந்த இனப்படுகொலை ஐக்கிய நாடுகள் சபையில் ஆதரவற்று கிடந்தது. ஆனால் 1991ல் ஐக்கிய நாடுகள் சபையில் ஈராக்கிற்கு எதிராக பிரான்சு, ஈரான், துருக்கி நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 688 குர்தியர்களுக்கு சில பலன்களை அளித்தது. இந்த காலத்தில் குர்திய படைகள் ஈராக் படையினரிடம் இருந்து தங்கள் நிலங்களை மீட்டன. மேலும் குர்திசுதான் பிராந்திய அரசு என்ற அரசையும் குர்திசு போராட்ட இயக்கங்கள் உருவாக்கின. இதனால் ஈராக் அந்த பகுதியின் மேல் பொருளாதார தடைகளை விதித்தது. 2003ல் வட அமெரிக்க ஈராக் மீது நடத்திய‌ போரின் பின்னர் 2005 மாற்றப்பட்ட ஈராக்கின் அரசியலமைப்பு இந்த குர்திசுதான் பிராந்திய அரசை அங்கீகரித்து, இதன் மூலம் குர்திசுதான்(ஈராக்) ஈராக் அரசுடன் இணைந்த ஒரு கூட்டு அரசாக உருவானது. 2003 போருக்குப் பின்னர் உருவான‌ ஈராக்கின் ஆட்சிய‌மைப்பிலும் குர்தியர்கள் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்றார்கள்......

1980களில் தன்மீது நடந்த தாக்குதலுக்கு பதிலாக சதாம் 148 shiite இன ஆண்களையும், சிறுவர்களையும் கொன்ற வழக்கில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார், குர்து இனப்படுகொலை வழக்கிற்காக அல்ல‌. ஆனால் குர்து இனப்படுகொலையை முன்னின்று நடத்திய அல்-அம்சீது அலி ஈராக் நீதிமன்றத்தால் தூக்குதண்டனை வழங்கப்பட்டது(2009) குறிப்பிடத்தக்கது. அலியுடன் சேர்த்து மேலும் இரண்டு ஈராக் அதிகாரிகளுக்கும் குர்து இனப்படுகொலையில் பங்குகொண்டதற்காக தூக்குதண்டனை வழங்கப்பட்டுள்ளது. (ஈராக்கில் உள்ள‌து போல‌வே ஒரு கூட்டு அர‌சை உருவாக்குவ‌த‌ற்காக‌ துருக்கி, ஈரானில் உள்ள‌ குர்திய‌ர்க‌ள் தொட‌ர்ந்து போராடி வ‌ருகின்றார்க‌ள்).ஆனால் தற்பொழுது உருவாகி இருக்கும் குர்திசுதான் அரசும் வட அமெரிக்காவின் கைப்பாவையாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல் இருப்பதால் குர்திசுதான் மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது மிக அண்மைய செய்தியாகும். அரசு இந்தப் போராட்டத்தை மிகக் கடுமையாக அடக்கிவருகின்றது. மக்கள் அதிகாரமே இறுதி தீர்வு என்பதையும், அதை அடைய அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்பதும் நமக்கு குர்தியர்களின் இன்றைய போராட்டங்கள் கற்பிக்கின்றன.

மூல‌ம்:

1) The Century of Genocide - Page no 375 to 394.
2) http://www.gendercide.org/genocideinkurdistan
3) Wikipedia & other sources......

Pin It

காது கேட்காதவன், மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று பள்ளியில் இருந்தே துரத்தப்பட்ட தாமஸ் அல்வா எடிசன் தான் இன்றளவும் விஞ்ஞானத்தை கற்பவர்களுக்கு முன்னோடி. அப்படி எடிசன் என்ன தான் செய்து விட்டார் என்று பார்க்கறீர்களா? ஆம் மக்களே ஒலிபெருக்கி, தந்திக்கருவி, மின்சார விளக்கு, மின்சார இயந்திரம், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி, கிராம‌போன், திரைப்பட ஒளிப்பதிவுக் கருவி(காமிரா) என மலைக்க வைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை படைத்தவர் கடவுளல்ல; சிறுவயதில் 'மக்கு' என்று பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட எடிசன் தான் இவற்றின் படைப்பாளி.

எடிசன் ஒரு சாதாரண தச்சுத் தொழிலாளிக்கும், ஓர் ஆசிரியைக்கும் பிறந்த ஏழு குழந்தைகளில் கடைக்குட்டியாக பிப்ரவரி மாதம் 11 ம் தேதி 1847ல் அமெரிக்காவிலுள்ள 'மிலன்' எனும் ஊரில் பிறந்தவர். 'எதற்கும் உதவாதவன்' என்று பள்ளியிலிருந்து துரத்தப்பட்ட எடிசன் தன தாயாரிடமே அடிப்படைக் கல்வியை கற்றார். தன பதிமூன்றாவது அகவையில் கிராண்ட் டிரங்க் தொடர்வண்டி சாலையில் செய்தித்தாள் போடும் பையனாக சேர்ந்தவர், அங்குள்ள சரக்கு ஏற்றும் பெட்டியை வேதியியல் சோதனைச்சாலையாக மாற்றியும், அங்கேயே ஒரு அச்சகத்தை தன தந்தையின் உதவியால் நிறுவி 'கிரான்ட் டிரங்க் ஹெரல்ட்' என்ற பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். சோதனைச் சாலையில் பற்றிய 'தீ' அவர் செயற்கூடத்தை நாசமாக்கவே அமெரிக்காவில் எங்கெல்லாம் 'தந்தி செயலி' வேலை கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஓடோடி வேலை செய்தும் தன் சோதனை முயற்சிகளையும் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். பின்னர் போஸ்டனிலுள்ள 'வெஸ்டர்ன் பணமாற்று' அலுவலக பணியையும் மறுத்துவிட்டு முழு நேர‌ ஆராய்ச்சியில் ஈடுபட்டார் எடிசன்.

தன் முதல் கண்டுப்பிடிப்பான 'மின்சார வாக்குப்பதிவு' இயந்திரத்திக்கு 1869ம் ஆண்டு காப்புரிமை கிடைத்தும் அரசியல்வாதிகள் அதை செயற்படுத்த விருபவில்லை. இதை எண்ணிப் பார்த்த எடிசன் 'மக்களுக்கு வேண்டாத பொருட்களை கண்டுப்பிடிப்பதில் நேரத்தை வீணாக்கக்கூடாது' என மக்கள் எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய சாதனங்களைக் கண்டறிந்தார். தன் கண்டுப்பிடிப்புகளுக்கு காப்புரிமை, வழக்குகள் என அனைத்தையும் எதிர்நின்று சாதித்தார் எடிசன்.

இதன் இடைவெளிகளில் அவர் மண‌முடிக்கவே அவருக்குப் பிறந்த இரு குழந்தைகளுக்கும் 'டாட்,டாஷ்' என தந்தி சங்கேத மொழியிலேயே செல்லப் பெயரிட்டார்.

சினிமா, புகைப்படக் கலை வளர்ச்சிக்கு எடிசன் தான் முழுமுதற் உழைப்பாளி என்றால் அது மிகையாகாது. ஆம் ஒளிப்பதிவுக் கருவியையும், பேச்சு வரும் கைநெட்டோபோன் கருவியையும் எடிசனே கண்டறிந்தார்.

எடிசன் கண்டுப்பிடிப்புகளின் நினைவாக அவரது நெருங்கிய நண்பர் 'ஹென்றி போர்ட்' அவரது 'சோதனைச் சாலையை'அருங்கட்சியகமாகவே மாற்றி அமைத்தார். வாழ்வின் இறுதி நாட்களில் சுயநினைவற்ற கோமா நிலையில் இருக்கும்போதே எடிசனின் உயிர் 1931ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி நியூ ஜெர்சியிலுள்ள 'க்லேன்மொன்ட்' எனப்படும் அவர் இல்லத்தில் பிரிந்தது.

அண்டம் கட‌வுளால் தான் உருவாகிறது என்பதை பொய்ப்பித்துக்காட்டி விஞ்ஞானத்திலே இவ்வுலகம் சுழல்கிறது என்று நிரூபித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

'முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு சான்றாக வெற்றிக்கான ஆன்ம‌ பலத்தோடு வாழ்ந்து சாதித்தவர் எடிசன்!

Pin It

 

எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley) அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாகாணத்தின் டுபேலோ (Tupelo, Mississippi)  என்ற ஊரில், 1935 ல் ஒரு வெள்ளை ஏழைக் குடும்பத்தின் ஒரே மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோருடன் டென்னிசியிலுள்ள மெம்பிஸ் (Memphis, Tennessee) என்ற ஊருக்கு குடி பெயர்ந்தார்.

அங்கே ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தினர் வசிக்கும் பகுதியில், கூச்ச சுபாவமுள்ள, கிடார் வாசிக்கும் சிறுவனாக 'Blues' இசைத்தட்டுக் கம்பெனியைச் சார்ந்து வளர்ந்தார். அப்பொழுது அங்கு கனரக வாகனம் ஓட்டிப் பழக பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். இருந்தாலும், அவர் கிடார் வாசித்துப் பாடுவதில் மிகுந்த ஆர்வமாயிருந்தார்.

அதிர்ஷ்டவசமாக 1954 ல் ஒரு நல்ல நேரமும் வாய்ப்பும் அமைந்தது. அங்கே ஒருநாள் 'Blues' இசைத்தட்டுக் கம்பெனியின் வழக்கமான ஒலிப்பதிவின் இடைவேளையில், அந்தக் கம்பெனியின் பிரபலமான "That's All Right' என்ற பாடலை எல்விஸ் பாடுவதை, இசைத்தட்டுக் கம்பெனியின் உரிமையாளர் Sam Phillips கேட்க நேர்ந்தது.

அப்பொழுதுதான், ஒரு அழகிய தோற்றமுள்ள வெள்ளைச் சிறுவனிடம் 'Blues' ன் உணர்வைத் தூண்டும் பாடல்களைப் பாடக்கூடிய திறமை பளிச்சிடுவதை இசைத்தட்டுக் கம்பெனியின் உரிமையாளர் உணர்ந்தார். அதுவரை அத்தகைய சங்கீதம் கறுப்பினத்திற்கான பாணியாக அமைந்திருந்தாலும், எல்விஸ் பாடிய பாங்கு மக்கள் கேட்டதும், ஒரே இரவில் மிகவும் பிரபலமான நட்சத்திரப் பாடகரானார்.

இசைத்தட்டில் ஒளிப்பதிவு செய்ய அவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 1956 ல் அவர் பாடிய இசைத்தட்டு வெளிவந்தபோது, அவர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகப் பிரபலமான பாடகரானார்.  அந்த இசைத்தட்டில் அவர் பாடிய 'Heartbreak Hotel', 'Hound Dog', 'Love Me Tender'  என்ற பாடல்கள் மிகப் பிரசித்தம்.

அமெரிக்காவின் தலைசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிப் பாடும் அவரது ஒயிலான குரல், மிரட்டலான பார்வை, உந்துதலான சுழற்சியான ஆட்டம் ஆகியன இளைஞர்களை அவருடைய பாடல்கள் மீது பைத்தியமாக்கியது.

ஆனால், மூத்த ராக் பாடகரான பிராங்க் சி்நெட்ரா, அமெரிக்க     பழமைவாதிகள் சார்பில், எல்விஸ் பாடும் பாணியை ஏளனம் செய்து கோபம் கொண்டு, அவர் பாடும் இசைத் தன்மை வருந்தத்தக்க துர்நாற்றமுள்ளது என்றும், இளைஞர்களிடம் அழிவுக்கான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறினார். ஆனால், இளைஞர்களிடம் எல்விஸின் தனிப்பட்ட செல்வாக்கும், தங்கு தடையில்லா இசையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது தவிர்க்க முடியாததாகியது.

எல்விஸ் இசையில் கறுப்பர்களின் நாகரிக அடையாளம் இருந்தது என்றும், இணக்கமற்ற நிற வேறுபாட்டைத் தணித்து ஆசுவாசப்படுத்த உதவியது என்றும், வெவ்வேறு சமுதாயங்களுக்குப் பொதுவான நாகரீகத்தையும் உருவாக்கியது என்றும் கலிபோர்னியா யுனிவர்சிட்டியின் வரலாற்றாளர் Cheri Paris தெரிவிக்கிறார்.

1957 ல் எல்விஸ் ராக் சங்கீத நட்சத்திரமாக திகழ்ந்தபோது, Memphis ல் Graceland Mansion என்ற பெரிய மாளிகையை வாங்கினார். சினிமா நடிகராகி நான்கு வெற்றிப் படங்களையும் கொடுத்த முதல் ராக் பாடகரும் இவர்தான். 1958 ல் ராணுவ சேவையிலும் சேர்ந்து இரண்டாண்டுகள் ஜெர்மனி சென்றார்.

இவர் 1960 ல் ராணுவப் பணி முடிந்து திரும்பியபோது, ரயில் நிலையத்தில் இவரது ராக் இசை ரசிகர்களின் பெரும் கூட்டம் காத்திருந்தது. மீண்டும் இசைத்தட்டுகளில் பதியப்பட்ட 'It's Now or Never', 'Are You Lonesome Tonight' என்ற பாடல்கள் பி்ரபலமாயின. Graceland Mansion க்கு திரும்பியபொழுது அவருக்கு துணையாயிருந்த இளவயது Priscilla Beaulieu சில காலங்களில் அவருக்கு மனைவியாகவும் ஆனார். அப்படியே ரசிகர்களிடமிருந்தும் விலகி தனிமையை விரும்பி ஒதுங்கிவாழ்ந்தார். ராக் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதையும் தவிர்த்தார். அவருடைய தொழில் நடவடிக்கைகளை Calonel Tom Parker என்ற நிர்வாகி கவனித்துக் கொண்டார்.

1960 லிருந்து 1969 வரை 27 படங்களில் நடித்தார். 1968 ல் எல்விஸ் பாடும் தொழிலில் விருப்பமின்றி, அவரால் உருவாக்கி வளர்க்கப்பட்ட  ஹிப்பி நாகரிகத்தையும் வெறுத்தார். ஏழு வருட இடைவெளிக்குப் பின் சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியாக ரசிகர்கள் முன் தோன்றினார். 

பெருகி வரும் ஹிப்பி நாகரிகத்திற்கும், போதை மருந்து உபயோகத்திற்கும் எதிராக, தனது புகழுடன் கூடிய மக்களிடம் உள்ள ஈர்ப்பைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் எடுத்துச்சொல்ல விருப்பம் தெரிவித்து, தனது நாட்டுப்பற்று உணர்வை அன்றைய அமெரிக்க ஜனாதிபதி Richard Nixon க்கு கடிதம் மூலம் 1970 ல் வெளிப்படுத்தினார்.

எல்விஸின் Prisclla வுடனான திருமண வாழ்க்கையில் விரிசல் விழுந்தது. அவர் உடலும் அளவுக்கதிகமாக பெருத்தது. அவர் தன்னம்பிக்கையை இழந்து, அதீதமான தூக்க மாத்திரைகளில் சரணடைந்து, 1973 லிருந்து சிறுகச் சிறுகத் தன்னை இழந்து கொண்டிருந்தார்.

இவர் 1953  - 1977 கால கட்டத்தில் சுமார் 800 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். 1963  - 1964 ல் நான் பார்த்த, 'Girls Girls Girls' படத்தில் வரும் 'Look Like An Angel' பாடல் எங்கள் மாணவ நண்பர்களிடம் மிகப் பிரபலம். 

1977 ல் அவர் ஒரு விபரீதமான கேலிச்சித்திரம் போல இருந்ததாக அவரின் வாழ்க்கை வரலாறு எழுதிய Tony Scherman கூறுகிறார். அதே ஆண்டின் ஆகஸ்டு, 16 ஆம் தேதி, காலை 6 மணிக்கு Racquetball விளையாடிச் சென்ற Rock 'n Roll இசை மன்னன் எங்கும் காணாமல், மதியம் 2.30  மணியளவில் (42 வயதில்) அவரது மாளிகையின் குளியலறைத் தளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இவர் இறப்பிற்கு, இவர் நீண்ட காலமாக மருத்துவரின் ஆலோசனைப்படி, மிக அதிகமான - 10000 தடவைக்கு மேல் எடுத்துக் கொண்ட மயக்க மருந்துகள் (Narcotics-Morphine), மன அமைதிப்படுத்தும் மருந்துகள் (Tranquilliser), தூக்க மாத்திரைகள் (Ethinamate), Antihistamine மாத்திரைகள் (Chlorpheniramine) ஆகியவைகளின் கூட்டு விளைவே எனப்படுகிறது.    

எல்விஸ் இன்றும் தன பாட்டுக்களினாலும், அவர்தம் அழகிய  தோற்றத்தினாலும் ராக் இசைப் பிரியர்களின் மனம் கவர்ந்தவர்.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It