‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் புகழ்பெற்ற நூலைக் கால்டுவெல் எழுதுவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே, ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்னும் கருத்துருவாக்கத்தை உணர்ந்து தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை 1816-ஆம் ஆண்டிலேயே முதன் முதலில் வெளிப்படுத்தியவர் எல்லீசு.

எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்டவர். சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷ் அரசின் கீழ் 1810 முதல் 1819 ஆண்டுவரை அதிகாரியாக பணியாற்றினார். கிழக்கிந்திய கம்பெனியில் 1796-ஆம் ஆண்டு எழுத்தராகச் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று துணைக் கீழ்நிலைச் செயலராகவும், துணைச் செயலராகவும், வருவாய்த்துறைச் செயலராகவும் பணிபுரிந்தார். மேலும், மசூலிப்பட்டிணத்தில் நீதிபதியாக 1806-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சென்னை மகாணத்தின் நிலச் சுங்க அதிகாரியாகவும், பின்னர் சென்னையின் கலெக்டராகவும் பணியாற்றினார்.

எல்லீசு, சென்னை மாவட்ட கலெக்டராக பணியாற்றியபோது, சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகக் கிணறுகளைப் பல இடங்களில் வெட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். அக்கிணறுகளுக்கு அருகில் தமிழில் கல்வெட்டுக்களையும் அமைத்தார். அக்கல்வெட்டுகளில் தமிழ்ப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இராயப்பேட்டையில் உள்ள அத்தகைய கல்வெட்டுப் பாடலொன்றில் “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு”- என்று ஒரு நாட்டின் முக்கிய உறுப்பான நீரைக் குறிப்பிடும் திருக்குறள் மேற்கோளாக இடம் பெற்றுள்ளது.

இவர் தமிழ் மொழியைக் கற்று, தமிழில் கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்று விளங்கினார். இராமச்சந்திரக் கவிராயரிடம் இவர் முறையாகத் தமிழ்கற்றார்.

சென்னையின் நாணயச் சாலையில் இவர் அதிகாரியாக பொறுப்பு வகித்தபோது, திருவள்ளுவரின் உருவம் பொறித்த இரண்டு நாணயங்களை வெளியிட்டார். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன், இந்த நாணயங்களை 1994-ஆம் ஆண்டு அடையாளம் கண்டு அவை பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

எல்லீசு ‘தமிழ்மொழியைக் கற்று அதனைப் பயன்படுத்தியதோடு, தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்கும் பாடுபட்டார்’ – என அயோத்திதாசப் பண்டிதர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவித் தமக்குக் கிடைத்த சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ‘திருக்குறள்’, ‘நாலடி நானூறு’ போன்ற நூல்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். மேலும், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதற்கான விரிவுரையும் எழுதியுள்ளார். தமிழின் யாப்பியலைப் பற்றி இவர் எழுதி வெளியாகாதிருந்த ஒரு நூலை ‘தாமசு டிரவுட்மன்’ இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடித்துள்ளார்.

எல்லீசு, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளின் வேர்ச்சொற்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து, சமஸ்கிருத மொழியிலிருந்து வேறுபட்டுள்ளதை ஆதாரங்களுடன் நிரூபித்தார். மேலும், இந்தியாவில் உள்ள மொழிகளின் வரலாறுகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றார். ‘சென்னை இலக்கியச் சங்க’த்தில் உறுப்பினராக இணைந்து செயல்பட்டார். தென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பயிற்றுவிக்கும் நோக்கோடு, சென்னை கல்விச் சங்கம் என அழைக்கப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை 1812-ஆம் ஆண்டு இவர் நிறுவினார்.

எல்லிசின் மொழியியல் ஆய்வுகளுக்கு இக்கல்லூரியையே களமாக அமைந்தது. பல நூல்களை இவர் எழுதிய போதும் தமது நாற்பது வயதுக்கு முன்னர் நூல்களை வெளியிடுவதில்லை என்று நினைத்திருந்தாராம், ஆதனால், அவர் தமது நூல்கள் எதையும் வெளியிடவில்லை.

எல்லீசு நிறுவிய கல்லூரி தொடர்பாக, 1814-ஆம் ஆண்டில் சென்னை மாகாண ஆளுநராகப் பதவியேற்ற எலியட்டுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், கல்லூரி மொழியியலில் அதிக அளவு கவனம் செலுத்துவதாகவும், அதிகாரிகள் மொழித்திறன் பெறுவதற்கு உதவவில்லை என்ற கருத்தும் நிலவியது. இதனால் கல்லூரிக்கு அரசாங்கத்தின் ஆதரவு குறைந்தது. கல்லூரியைக் காப்பாற்றுவதற்காக எல்லீசு இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று அங்கு அதிகாரிகளுடன் பேச எண்ணியிருந்தார், ஆனால் பல காரணங்களால் அவரது பயணம் பலமுறை தடைபட்டது. இக்காலத்தில் இவர் வயிற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நலக் குறைவினால் 1818-ஆம் ஆண்டு மூன்று மாதம் பணியிலிருந்து விடுப்பு எடுத்தார். விடுப்பு எடுத்துக்கொண்டு ஆய்வுப் பணிகளுக்காக மதுரைக்கும் பின்னர் அங்கிருந்து இராமநாதபுரத்துக்கும் சென்றார். இராமநாதபுரத்தில், தமது 41-வது வயதில் 10.03.1819-ஆம் நாள் மறைந்தார்.

- பி.தயாளன்

Pin It

மகாத்மா காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாதர்களுக்கு என அழைப்பு விடுத்தார்! ஆம் பெண்களும் அதிக அளவில் கள்ளுக்கடை மறியல் , அன்னியத் துணிக் கடைகள் முன்பு மறியல், நூல் நூற்றல் வேள்வி, முதலியவற்றில் ஈடுபட வேண்டுமென்று, ‘யங் இந்தியா'இதழ் மூலம் அழைப்பு விடுத்தார். இவ்வழைப்பு வெளியாகு முன்னரே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் ‘பெண் போராளி’ ருக்மணி லட்சுமிபதி !

rukmani lakshmipathyசீனிவாசராவ் -சூடாமணி தம்பதியினருக்கு , மகளாக ருக்மணி 06.12.11892 ஆம் நாள் பிறந்தார். அக்காலத்தில் பால்ய விவாகம் எனும் குழந்தைத் திருமணம் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ருக்மணியின் தந்தையும் தமது மகளுக்கு பால்ய விவாகம் செய்திட மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார். அப்போது, வீரேசலிங்கம் பந்தலு, ருக்மணியின் தந்தையிடம் பால்ய விவாகத்தினால் ஏற்படும் சமூகத்தீமைகளை எடுத்துக் கூறியதுடன். ருக்மணியை, தமது மருமகள் ராஜாமணியுடன் பள்ளிக்கு அனுப்பினார். இதனால் இவருடைய உறவினர்கள் இவரது குடும்பத்தை 'ஒதுக்கி' வைத்தனர்!

பின்னாளில் , ருக்மணி லட்சுமிபதி விடுதலைப் போராட்ட வீராங்கனையாக உருவாவதற்கு அடித்தளமிட்டவர் வீரேசலிங்கம் பந்தலு என்பது குறிப்பிடத்தக்கது.

ருக்மணி நோய்வாய்பட்டிருந்த போது, அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் லட்சுமிபதிக்கும், ருக்மணிக்கும் காதல் உருவானது. இவர்களது காதலுக்கு பெற்றோர்களும், உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தங்களது காதலில் உறுதியாக இருந்து 1911 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். டாக்டர் லட்சுமிபதி , தமது மனைவி ருக்மணியின் விருப்பப்படி கல்லூரியில் சேர்த்தார்.

ருக்மணி-லட்சுமிபதி தம்பதியினரின் காதல் திருமணம் ஏற்படுத்திய பரபரப்பின் விளைவாகத் தெலுங்குக் கவிஞர்கள் கவிதைகள் படைத்தனர். கோதாவரியைச் சேர்ந்த சத்தியநாராய கவி என்பவர் ‘ருக்மணி சுயம்வரம்’ என்கிற நவீன நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். பட்டப்படிப்பு முடிந்த பிறகு, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், குழந்தை பிறந்ததால் மருத்துவப் படிப்பு பயில இயலவில்லை.

ருக்மணி இந்திய விடுதலையில் நாட்டம் கொண்டார். தாமும், தமது குழந்தைகளும், கணவரும் கதராடையே அணிந்தனர். இவரது மகள் இந்திரா. மகள் இந்திராவை நரம்பியல் நிபுணர் டார்டர் ராமமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்தார்.

மார்க்ரெட் சமிகாதிரிகள் ராதாபாய் சுப்பராயன், கமலாபாய் சட்டோபாத்தியாயா முதலியவர்களுடன் இணைந்து சமூகத் தொண்டில் ஈடுபட்டார். இவர்கள் இணைந்து அமைத்த 'பாரதி மகளிர் மகா மண்டல்' எனும் அமைப்பின் சென்னைக் கிளையின் செயலாராக ருக்மிணி பணியாற்றினார்.

சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்தவர் ருக்மணி, முற்போக்கு எண்ணங்கள் கொண்டவராகத் திகழ்ந்தார். இஸ்லாமியப் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார். குடிகாரக் கணவன்மார்களால் பெண்களுக்கு விளையும் தொல்லைகள் இவரது மனதை பெரிதும் பாதித்தது. இதனால், மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவான பிரச்சாரங்களில் ருக்மணி ஈடுபட்டார். கடவுளின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளுள் ஒன்றான 'தேவதாசி' முறைக்கு எதிராக பரப்புரைகளில் ஈடுபட்டார். மேலும், பால்யத் திருமணம் ஓழிக்கப்பட வேண்டும். பெண்களின் திருமண வயது உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காகவும் போராடினார். சாதிவேறுபாடுகளை ஓழிப்பதிலும் முன்னின்று செயல்பட்டார்.

பாரீசில் நடைபெற்ற அனைத்துலகப் பெண்களின் வாக்குரிமைச் சங்கத்தின் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார் ருக்மணி !

“நாட்டுப்பணி என்பது நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தருதல் மட்டுமன்று ; நாட்டு மக்களுடைய மேம்பாட்டுக்கும் பாடுபடுவதாகும்" என்பதை மனதில் கொண்டு செயல்பட்டார்.

வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில், 1930 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாக் கிரகத்தின் போது அவர் உப்புக் குவியலின் மீது படுத்துக் கொண்டு இம்மியளவு கூட அசையாமல் செய்த அறப்போர் அனைவரையும் வியப்படையச் செய்தது. உப்புச் சத்தியாக்கிரகப் பேராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சிறைத்தண்டனை பெற்ற முதல் பெண்மணி ருக்மணியே!

மேலும், ருக்மணி அன்னியத்துணி புறக்கணிப்புப் போராட்த்திலும் கலந்து கொண்டு சிறைத்தண்டனையும் பெற்றார். அபராதமும் செலுத்தினார்.

காந்தியடிகள் 1933 ஆம் ஆண்டு சென்னைக்கு வருகை புரிந்தார். அப்போது, ருக்மணி தமது நகைகளை அரிசன சேவா நிதிக்காகக் காந்தியடிகள் ஆச்சரியத்தில் மூழ்கினார்!

ருக்மணி, சென்னை, மகாஐன சபைக்குத் துணைத் தலைவராக 1934 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்துக்கு 1936 ஆம் ஆண்டு தலைவராக விளங்கினார். சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக 1937 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி, ருக்மணி ‘முதல்பெண்மணி’ என்று போற்றத்தக்க பல பதவிகள் வகித்து சிறப்பாகப் பணியாற்றினார்.

சென்னை மாநகராட்சி உறுப்பினராக இவர் செயலாற்றிய போது நகர சுத்தித் தொழிலாளர்கள் அடிக்கடி காலதாமதமாக வருவதைக் கவனித்தார். ஒரு நாள் நீண்ட தென்னந்துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தாமே துப்புரவு பணியில் இறங்கிவிட்டார். இதையறிந்த நகரசுத்தித் தொழிலாளர்கள் . ருக்மணி அம்மையாரிடம் மன்னிப்புக் கோரியதுடன், அன்றிலிருந்தே நேரந்தவறாமல் பணிக்கு வந்தனர்.

ஐப்பானுக்கு , 1938 ஆம் ஆண்டு சென்ற அமைதிக் குழுவில் ருக்மணியும் இடம் பெற்றிருந்தார். தனிநபர் சத்தியாக்கிரகப் போரில் 1940 ஆம் ஆண்டு கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டங்குமூரி பிரகாசம் தலைமையில் 1946 ஆம் ஆண்டு அமைந்த சென்னை ராஜதானியின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்து சிறப்பாகப் பணியாற்றினார். இந்தப் பதவியையும் முதல் முதலாக வகித்த பெண்மணி ருக்மணியே ஆவார்!

அரசின் உயர் பதிவிகளில் வெள்ளையர்களையே அமர்த்துவது என்பது கர்ஸன் பிரபு காலத்திலிருந்தே நிலவி வந்தது. ருக்மணி, அமைச்சராக பதவியேற்றதும் இந்திய அரசுப்பணிகளில் , இந்தியர்கள் தான் பணி அமர்த்தப்படவேண்டுமென்பதைக் காங்கிரசின் கொள்கையாக மாற்றினார். மேலும், சர்ஜன் ஜெனரலாக இருந்த வெள்ளையரை நீக்கிவிட்டு, அவரது இடத்தில் இந்தியர் ஒருவரை நியமித்தார். இப்பிரச்கனையில், இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தத சென்னையே!

சென்னை ராஜதானி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ‘ராகுகாலம்’ பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது, ருக்மணி, "ராகுகாலமாவது . கேதுகாலமாவது? எது வந்தால் என்ன? அது தான் நம் நாட்டையே சனியனே பிடித்திருக்கிறதே! அப்புறமென்ன?" என்று கூறி அனைவரையும் நகைக்க வைத்தார் ருக்மணி!

'முதல் பெண்மணி' என்கிற பட்டத்துக்குரிய பதவிகளை நாடு விடுதலை அடைவதற்கு முன்னரே பெற்ற பெருமைக்குரியவர் ருக்மணி! விடுதலைப் போரின் போது இந்தியாவின் பல்வேறு சமூக இயக்கங்களும், மறுமலர்ச்சி இயக்கங்களும் தோன்றி வளர்ந்தன. இவ்வியக்கங்களுடனும் ருக்மணி தம்மை இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.

ஐவஹர்லால் நேரு வேண்டு கோளுக்கிணங்க ருக்மணி லட்சுமிபதி தமிழகத்தில் 'வானரப்படை' என்றழைக்கப்பட்ட சிறுவர்களுக்கான தேசபக்த அமைப்பை 1931 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கினார்.

பெண்விடுதலைப் போராளியாக விளங்கி, இந்திய நாட்டுப் பெண் விடுதலைக்காகவும், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் தமது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்ட ருக்மணி லட்சுமிபதி 07-08-1951 அம் நாள் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது தொண்டும், தியாகமும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் !

- பி.தயாளன்

Pin It

இங்கிலாந்தில் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்று, பல ஜீரிக்களை அமர்த்திக்கொண்டு மதுரையில் புகழ்பெற்ற வக்கீலாக இருந்து வந்தார். 1907-ஆம் ஆண்டு திலகரின் சுயாட்சி இயக்கத்தால் கவரப்பட்டார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்திற்குச் செவி சாய்த்து வக்கீல் தொழிலைக் கைவிட்டார். மேல்நாட்டு முறையில் அணிந்திருந்த தமது ஆடைகளைத் தூக்கி எறிந்தார். கதர்வேட்டியும், கதர் ஜிப்பாவும், காந்திக்குல்லாவும் அணியத் தொடங்கினார்.

                மதுரை புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் 1918-ஆம் ஆண்டு திலகர், டாக்டர் பி.வரதராஜீலு நாயுடு முதலிய தலைவர்கள் இந்திய விடுதலைப்போர் குறித்து கனல்தெறிக்க உரையாற்றிக் கொண்டிருந்தனர். டாக்டர் பி. வரதராஜீலு நாயுடு மீது ஆங்கிலேய அரசு ராஜதுவேச குற்றம் சுமத்தி சிறையிலடைத்தது. டாக்டர் பி.வரதராஜீலு நாயுடுவிற்காக நீதிமன்றத்தில் இராஜாஜி வாதாடினார். இராஜாஜிக்கு சட்ட உதவியாளராக ஜார்ஜ் ஜோசப் இருந்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் மன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பை அறிய மாவட்ட ஆட்சியர் மன்றத்திற்கு வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளம்போல் திரண்டனர். கூட்டத்தைக் கலைக்கக் காவலர்கள் முன்னறிவிப்பின்றி தடியடிப்பிரயோகம் செய்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தினர். பலர் காயமுற்றனர். நீலமேகம் சுப்பையா என்ற இளைஞன் சுருண்டு விழுந்து துடித்தான், துப்பாக்கிச் சத்தம் கேட்டு இராஜாஜியும், ஜார்ஜ் ஜோசப்பும் வெளியில் வந்தனர், ஜார்ஜ் ஜோசப் நீலமேகம் சுப்பையாவை மடியில் ஏந்தினார். அந்த இளைஞன் உயிர் பிரிந்தது. ஜார்ஜ் ஜோசப் முதலானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

                ரௌலட் சட்டத்தைப் பற்றி விவாதிக்க 1919-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் நாள் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். ஜார்ஜ் ஜோசப், இராஜாஜி, கஸ்தூரிரெங்க அய்யங்கார், டி.எஸ்.எஸ்.ராஜன் முதலியவர்களுடன் விவாதித்து ரௌலட் சட்ட எதிர்ப்பியக்கத்தை அறிவித்தார். மதுரையில் ஜார்ஜ் ஜோசப்பின் தலைமையில் ரௌலட் சட்ட எதிர்ப்பியக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது. மதுரையில் இருந்த பஞ்சாலைகளும், கடைகளும் அடைக்கப்பட்டு மதுரை நகரமே அமைதியில் ஆழ்ந்தது.

                ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தொழிலாளர்களுக்கு என்று முதன் முதலில் தொழிற்சங்கம் அமைத்தார். தொழிலாளர்களுக்கு போனஸ், மருத்துவ வசதி, தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி முதலிய கோரிக்கைகளை முன்வைத்தார். மதுரையில் இருந்த அனைத்துத் தொழிலாளர்களும் விழிப்புற்று ஒன்றுபட்டனர்.

                மதுரையில் இருந்த ஹார்வி என்னும் அய்ரோப்பிய பஞ்சாலை நிர்வாகதத்திற்கு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி அறிக்கை அனுப்பினார். ஹார்வி மில் நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்தது. அதனால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்ஜ் ஜோசப் வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். நிர்வாகம் கதவடைப்புச் செய்து தொழிலாளர்களை வெளியேற்றியது.

                 மூன்று மாத காலம் போராட்டம் நீடித்தது. தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க ஜார்ஜ் ஜோசப்பின் மனைவியும், சிதம்பர பாரதி முதலான தொண்டர்களும் தெருத்தெருவாகச் சென்று, மக்களிடம் அரிசியும், பணமும் சேகரித்துத் தொழிலாளர்களுக்குத் தந்து உதவினர். தொழிலாளர்கள் மில் நிர்வாகத்திற்கு அடிபணியாமல் தொடர்ந்து போராடினர்.

                இறுதியில் மில் நிர்வாகம் இறங்கி வந்தது. தொழிலாளர்களின் பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட்டது. ஆனால், வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்ததும் மில் நிர்வாகம் தொழிலாளர்களைப் பழி வாங்கியது. எண்ணற்றத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். ஜார்ஜ் ஜோசப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காகப் பொதுமக்களிடம் நிதி உதவியும், பங்கு ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் பங்குகளும் சேகரித்தார். மதுரை மீனாட்சி மில் திறக்கப்பட்டது. ஹார்வி மில்லில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மதுரை மீனாட்சி மில்லில் வேலை வழங்கப்பட்டது.

                ஜார்ஜ் ஜோசப் 1921-ஆம் ஆண்டு அலகாபாத்திற்குச் சென்றார். மோதிலால் நேருவின் ‘இண்டிபென்டண்ட்’ (ஐனேநயீநனேநவே) இதழின் ஆசிரியரானார். இச்சூழலில் காந்தியடிகள் ஒத்துழையாமைப் போராட்டத்தை அறிவித்தார். அலகாபாத்தில் நடைபெற்ற ஒத்துழையாமைப் போராட்டத்திற்கு ஜார்ஜ் ஜோசப் தலைமையேற்றார். கிரிமினல் சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு நைனிடால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் ஜவகர்லால் நேருவுடன் நாட்டு விடுதலைக்குப்பின் அடை ய வேண்டிய வளர்ச்சிகள் குறித்து விவாதித்தார்.

                ஜார்ஜ் ஜோசப் விடுதலையடைந்ததும் மதுரைக்கு வந்தார். மதுரை மீனாட்சி மில்லில் பங்குதாரர்கள் பலரும் விலகியதால், மில் தனியார் வசம் சென்றது கண்டு மனம் வருந்தினர்.

                கேரளாவில் வைக்கம் போராட்டம் 1925-ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் தொடங்கியது. இப்போராட்டத்தின் அமைப்பாளராக ஜார்ஜ் ஜோசப் விளங்கினார். தந்தை பெரியார் உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

                இந்திய நாடெங்கும் 1928-ஆம் ஆண்டு சைமன் குழு எதிர்ப்பியக்கம் நடைபெற்றது. மதுரையில் சைமன் குழு எதிர்ப்பியக்கப் பரப்புரையில் ஈடுபட்டார். சைமன் குழு செல்லும் இடமெல்லாம் மக்கள் தெருவில் திரண்டு நின்று கறுப்புக் கொடியேந்தி தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்தனர். மதுரை திருமலை நாயக்கர் மகாலில் அப்போது நீதிமன்றங்களும், நகராட்சி அலுவலகமும் செயல்பட்டு வந்தன. அந்த அலுவலகங்கள் முன்பு ஜார்ஜ் ஜோசப் தலைமையில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். காவலர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர். ஜார்ஜ் ஜோசப்பின் தலையிலும், உடலிலும் இரத்தக் காயம் ஏற்பட்டது. தடைச்சட்டம் 144 பிரிவின் கீழ் ஜார்ஜ் ஜோசப் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

                பிரமலைக் கள்ளர் சமுதாயத்தினரின் மீது பிரிட்டிஷ் அரசு ‘குற்றப்பரம்பரை’ என்று விதித்திருந்த ‘ரேகைச் சட்டத்தை’ எதிர்த்து ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ போராட்டம் தொடங்கினார். ஜார்ஜ் ஜோசப் திருமங்கலத்தில் இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மறியல், கடையடைப்பு எனப் போராட்டம் தீவிரமடைந்தது. காவல்துறையினர் போராட்டம் நடத்திய தொண்டர்கள் மீது தடியடிப் பிரயோகமும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். நூற்றுக்கணக்கானவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். கர்ப்பிணிப் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இறுதியில் போராட்டம் வெற்றியடைந்தது. ‘ரேகைச் சட்டம்’ அகன்றது. இதனால், திருமங்கலம் வட்டாரப் பிரமலைக்கள்ளர் சமுதாய மக்கள் இவரை அன்புடன் ‘ரோசாப்பூ ராசா’ என்று அழைத்தனர். இந்தியச் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு 1937-ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். தொழிலாளர் நலன், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் நலன் முதலியவற்றுக்காக சட்டமன்றத்தில் வாதாடினார்.

                ஜார்ஜ் ஜோசப்பின் குடும்பம் இந்திய விடுதலை வேள்வியில் தியாகம் செய்த குடும்பம் ஆகும். ஜார்ஜ் ஜோசப்பின் இரண்டாவது மகள் 1943-ஆம் ஆண்டு காந்தியடிகள் ஆகாகான் மாளிகையில் உண்ணாவிரதம் இருந்தபோத சென்னையில் மறியலில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றார். இவரது மகனும், மூத்த மகளும் காந்தியவழிப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

                இந்திய விடுதலைக்காகத் தமது இறுதி மூச்சுள்ளவரை பாடுபட்ட ஜார்ஜ் ஜோசப் 1938-ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்தாலும், அவரது தொண்டும், தியாகமும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன்

Pin It

இந்திய தேசத்தாலும், இந்திய முஸ்லிம்களாலும் மறக்கப்பட்ட மாபெரும் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள். இந்திய தேசத்திற்கும், முஸ்லிம்களுக்கும் வரப்பிரசாதமாக கிடைத்தவர். சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர். கல்லூரியில் படிக்கும் போது மகாத்மா காந்தி அவர்களின் ஒத்துழையாமை இயக்கத்தின் அழைப்பை ஏற்று தனது படிப்பை பாதியில் கைவிட்டு சுதந்திர போராட்டத்தை கைக்கொண்டார். 

kayithe milladஅது முதல் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு 1920 முதல் பல்வேறு சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டார். இவரின் வீரியமான செயல்பாடுகளை பார்த்து 1936 ல் ஜின்னா அவர்கள் முஸ்லிம் லீக்கில் சேர்ந்து தேச விடுதலைக்கு பாடுபடுமாறு பணிந்தார். அதை உடனே ஏற்றுகொண்டார் காயிதே மில்லத். அதுமுதல் இந்திய தேசமும், முஸ்லிம்களின் நலன்களும் தனது இரு கண்களாக எண்ணி செயலாற்றினார்.

தனது உழைப்பால் சென்னை மாகாண முஸ்லிம் லீக் தலைவராக உயர்ந்து தீவிரமாக பணியாற்றினார். 1946 ல் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக்கிற்கு 29 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், எதிர்கட்சியாக தேர்வு பெற்றது. அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்று 1946 முதல் 1952 வரை சிறப்பாக பணியாற்றினார். தேசப்பிரிவினையின் போது முஸ்லிம் சமூகம் எண்ணிலடங்கா துன்பங்களை எதிர்கொண்டது. பேரறிஞர். அண்ணா ஒருமுறை கூறினாரே "தமிழக அரசிற்கு அரண் காயிதே மில்லத்" என்று அதுபோல முஸ்லிம் சமூகத்தை காக்கும் அரணாக, அவர்கள் மீது எறியப்படும் கற்களை தடுக்கும் கேடயமாக விளங்கினார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

காயிதே மில்லத் அவர்கள் சமுதாய ஐக்கியத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்து உழைத்தார்கள். "ஒற்றுமை என்னும்போது இங்கும் அங்கும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும். விட்டுக்கொடுத்தல் இல்லாவிட்டால் ஐக்கியமில்லை. ஐக்கியம் இல்லாவிட்டால் சமுதாயத்தில் ஒன்றுமே சாதிக்க முடியாது" என்று பல இடங்களில் வலியுறுத்தி பேசினார். இந்திய முஸ்லிம்களையும், அவர்களின் தேசப்பற்றையும் சிலர் பலித்து பேசும் போதெல்லாம் உறுதியான பதில் தருவதில் முனைப்பு காட்டினார். "இந்தியா எங்கள் தாய்நாடு நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியாவுக்கு யார், யார் விரோதிகளோ அவர்கள் இந்திய முஸ்லிம்களுக்கும் விரோதிகள்" என்பதை உரக்க கூறினார்.  இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானின் கைக்கூலிகள்; அவர்கள் பாகிஸ்தானிற்கு போக வேண்டும் என்று இப்போது மட்டுமல்ல அப்போதும் சில தீய சக்திகள் கொக்கரித்தன. அவர்களுக்கு காயிதே மில்லத்தின் பதில் இதுதான். "இந்த நாட்டில் பிறந்த கொசுவைக்கூட, 'அந்நிய நாட்டுக்கு போ' எனக்கூறும் உரிமை இந்த நாட்டில் எவருக்கும் இல்லை" இதன் மூலம் முஸ்லிம்களை வேறு நாட்டிற்கு  போக சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்கூறினார்.

பாகிஸ்தானில் கடைசியாக கூடிய ஒன்றுபட்ட முஸ்லிம் லீக்கின் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை அனைவரையும் ஆச்சர்யம் கொள்ள வைத்தது. இந்திய முஸ்லிம்களின் என்ன ஓட்டத்தை தெளிவாக படம் பிடித்து காட்டியது.  "நேற்றுவரை நாம் அனைவரும் ஒரே நாட்டின் சகோதரர்கள். இன்றுமுதல் நாம் வேறு, வேறு நாட்டினர். மதத்தால் நாம் இஸ்லாமியர்கள். ஆனால், நான் இந்தியன்! நீங்கள் பாகிஸ்தானியர்கள். இதை இருவரும் மறக்கலாகாதாது. எந்த சூழ்நிலையிலும் இந்திய முஸ்லிம்கள் பிரச்சனையில் தலையிட உங்களுக்கோ, உங்கள் நாட்டிற்கோ உரிமை இல்லை" என்று அவர்கூறியதை பலரும் வியப்பாக பார்த்தனர்.

முஸ்லிம் லீக் மீதும், முஸ்லிம்கள் மீதும் பல்வேறு அவதூறான குற்றச்சாட்டுகள் வீசப்பட்டபோது; பொறுமையாக, நிதானமாக பதில் அளித்தார். தனது உன்னத நோக்கத்தை மக்களிடம் நேரிடையாக கொண்டு சென்றார். "இந்தியாவில் எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சமமாகவும், கண்ணியமாகவும் வாழ வேண்டும், நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் லட்சியம், குறிக்கோள். நாட்டின் கண்ணியத்தை காப்பாற்றவும், பாதுகாப்பை பேணவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் உழைப்பதே எங்கள் குறிக்கோள். சிறுபான்மை மக்களின் நியாயமான உரிமைகளையும், நலன்களையும், பாதுகாப்பதே எங்கள் லட்சியம். அனைத்து சமூக மக்களிடையேயும் ஐக்கியத்தையும், நல்லென்னத்தையும் வளரச் செய்வது எங்கள் லட்சியம்" என்று மக்கள் மன்றங்களில் முழங்கினார்.

"தமிழ்தான், இந்த நாட்டின் அரசாங்க மொழியாக இருக்க தகுதி வாய்ந்த மொழி" என்று இந்திய அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்தார். தமிழ்மொழிக்காக மிகவும் வாதாடினார். இந்தி ஆதிக்கதிற்கெதிராக தனது போராட்டத்தை நாடாளமன்றதிலும், மக்கள் மன்றத்திலும் தனது உரைவீச்சால் செலுத்தினார். இந்தி வெறியர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்தினார். "மொழி வெறியர்கள், 'இந்தி' என்ற பெயரில் முதலில் எழுத்தை கொண்டு வந்து, முடிவில் அனைத்தையும் அழித்து விடுவார்கள்".  அதேநேரத்தில் அவர் எந்த மொழியின் மீதும் காழ்ப்புணர்வுடன் செயல்படவில்லை. எதையும் கண்மூடித்தனமாகவும் எதிர்த்ததும் இல்லை.  "நான் எந்த மொழியையும் வெறுப்பவனல்ல. இந்தி மொழி உட்பட எல்லா மொழிகளையும் நேசிக்கிறேன். சிறுபான்மை மொழிகள் மீது இந்தி கட்டாயமாகத் திணிக்கப்படும் போதுதான் எதிர்க்கிறேன்" என்று விளக்கினார்.  தமிழுக்காக எப்படி பலர் போராடுவதற்கு முன்பே அரசியல் நிர்ணய சபையில் வாதாடுனீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்; அவர் தமிழை எந்த அளவிற்கு சுவாசித்திருக்கிறார் என்பதை காட்டுகின்றன. "தமிழின் அழகு, இயற்கை, இன்பம், வாய்மை, தரம் என இத்தனை சிறப்புகளும் தமிழுக்கேயன்றி வேறு மொழி எதற்கும் இல்லை என்பதால்தான், அதனால்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்று அப்போது கூறினேன்".

காயிதே மில்லத் அவர்கள் முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டிருந்தார். கல்வி முன்னேற்றம் குறித்து தீவிரமாக அவர் சிந்தித்ததின் விளைவால் ஏற்படுத்தப்பட்டதுதான் "தென்னிந்திய முஸ்லிம் கல்வி சங்கம்". இந்த சங்கத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு புதிய கல்லூரிகள் கட்டும் முடிவை எடுத்தார். அதன் மூலம் உருவானதே சென்னை புதுக்கல்லூரி, திருச்சி ஜமால் முஹமது கல்லூரி போன்றவைகள். கேரளா, அதிராமபட்டினம் போன்ற இன்னும் பல இடங்களில் இதற்கான வேலைகளை துவக்கினார்.

இந்திய தேசத்தில் யாரும் தொடமுடியாத எல்லைகளை தொட்டவர் காயிதே மில்லத் அவர்கள். சுதந்திர போராட்ட வீரர், 1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், 1962 முதல் 1972 வரை நாடாளமன்ற உறுப்பினர். கேரளா மஞ்சேரி தொகுதியில் நாடாளமன்றதிற்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் ஒருமுறை கூட அவர் அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்ததில்லை என்பது தனிச்சிறப்பு. மிக எளிமையாகவே தனது வாழ்கையை அமைத்துக்கொண்டார். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வர கார் வாங்கி தருகிறேன் என்று பலர் கூறியபோதும் தனக்கு அது தேவையில்லை என்று மறுத்து கடைசி வரை பேருந்து, ஆட்டோ, ரயிலிலே பயணம் சென்று வந்தார்.

மற்றவர் தன்னை எவ்வளவு விமர்சித்தாலும், எவ்வளவு கடுமைகள் காட்டினாலும் அதற்கு மிக கண்ணியமாகவே பதிலளிப்பார். அதனால்தான் அரசியலை கடந்து பல தலைவர்களும் அவரை போற்றினார்கள்.  "காயிதே மில்லத் பொறுமையின் பூஷணம், அடக்கத்தின் மொத்த உருவம், நாகரிகத்தின் நற்பண்பின் சிகரம். இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக தோன்றி இருக்கிறார். தொகுதிக்கு சென்று தனக்காக பிரச்சாரம் செய்யாமலேயே பெரு வெற்றி பெறுவதில் காயிதே மில்லத்திற்கு இணையான ஒரு பெருந்தலைவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள வேறு எந்த நாட்டிலும் காண முடியாது". என்று அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கூறினார்கள்.

"பல இக்கட்டான சூழ்நிலையிலும் நாட்டிற்கு தோல் கொடுத்தவர் காயிதே மில்லத் அவர்கள்" என்று முன்னாள் பிரதமர்  இந்திரா காந்தி அவர்கள் கூறினார்கள். 

"இந்தியாவில் ராஜாஜிக்கு அடுத்து இடத்தில வைத்து பார்க்கப்பட வேண்டிய தலைவர்" என்று ம.பொ.சி. அவர்கள் கூறினார்கள். 

"அண்ணாவின் மறைவுக்கு பிறகு இவரே எங்களுக்கு தமையனுக்குத் தமையனாய் விளங்கி வந்தார்" என்று காயிதே மில்லத் குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார் எம்ஜிஆர்.

காயிதே மில்லத் அவர்களின் மரணத்தை அறிந்து அவரை பார்க்கவேண்டும் என்று தள்ளாத வயதிலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள். "அவருக்கு பதில் என் உயிர் போயிருக்கக்கூடாதா" என்று அவர் கதறிய காட்சி அங்கிருந்தவர்களை வியக்க வைத்தது. பெரியார், காயிதே மில்லத் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

இந்திய தேசத்திற்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் பல இக்கட்டான காலகட்டத்தில் கிடைத்த ஒரு சிறந்த தலைவர் காயிதே மில்லத். அவரை இந்திய ஆட்சியாளர்கள் மறந்திருந்தாலும், நாம் மறக்கலாகுமா? இந்திய முஸ்லிம்கள் அவரை போற்ற வேண்டியது மட்டுமல்ல; பின்பற்றவும் வேண்டும். இன்று இந்திய முஸ்லிம் சமூகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைக்கும் அவரிடம் தீர்வு இருக்கிறது. அவரை இன்னும் நாம் நெருங்க வேண்டும். அவர் எப்படி அனைத்தையும் எதிர்கொண்டார் என்பதை நாம் அறிந்துகொள்வது இக்காலகட்டத்தின் அவசியம். இந்தியனாக, தமிழனாக, முஸ்லிமாக, அரசியல்வாதியாக எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு உணர்த்திவிட்டு சென்றவர் அவர். காயிதே மில்லத் அவர்களை நினைவுகூர்ந்து போற்றுவோம், பின்பற்றுவோம்!! அது நமது கடமை.

- வி.களத்தூர் சனா பாரூக்

Pin It

purandara dasaவெங்கட்சாமிநாதன் அவர்கள் ‘பதிவுகள்’ இணையதளக் கட்டுரையில் எழுதிய தமிழ் இசை மரபு குறித்தச் சில கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இசையில் ஒரு தனித்துவமான தமிழ் மரபைப்பற்றிப் பேசுவது கடினம் எனவும், இசையில் தமிழ் மரபு சார்ந்தது என எதுவும் இல்லை எனவும் தனது ‘பதிவுகள்’ இணையதளக் கட்டுரையை அவர் தொடங்குகிறார். பின் அவர் கர்நாடக மரபின் தொடக்கம் புரந்தரதாசரிடம் இருந்து தொடங்குகிறது எனவும் கர்நாடக சங்கீதத்தின் தந்தை அவர் எனவும், கர்நாடக சங்கீதம் முழுமையாக அவருக்கு கடன்பட்டிருக்கிறது எனவும் கூறுகிறார். இவை அனைத்தும் உண்மையல்ல என்பதை அவரது கட்டுரைத் தரவுகளே நிறுவுகின்றன. நாமும் பின்னர் தெளிவுபடுத்த உள்ளோம். புரந்தரதாசர் கி.பி. 1484இல் பிறந்தார் என்கிறார். அவரது இறந்த காலமான கி.பி.1564ஐக் குறிப்பிடவில்லை. அந்த புரந்தரதாசர் சங்ககாலப் பரணர், பொருநர் மரபில்(கி.பி. 100- 200) இருந்து வருவதாகவும் அந்த பரணர் பொருநரின் மரபு தமிழ்நாட்டின் தனித்த விளைபொருள் எனவும் கூறுகிறார். பின் கர்நாடக இசையின் மும்மூர்த்திகளின் சிறப்பைக் கூறிவிட்டு தியாகராசர் தெலுங்கிலும், முத்துசுவாமி தீட்சிதர் சமற்கிருதத்திலும் பாடியிருந்தாலும் அவர்களது கீர்த்தனங்கள் சங்க காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தமிழ் மண்ணின் மேதைமையைத் தாங்கிய அடையாள முத்திரையுடன் கூடிய தெளிவான ஒரு தமிழ்க் கலாச்சாரத்தின் படைப்புகள்தான் என்கிறார்.

சங்ககால இசை:

கர்நாடக இசையின் மரபைத் தேடினால் நாம் சங்ககாலத்துக்குதான் (கி.பி. 100-200) இட்டுச் செல்லப் படுகிறோம். இம்மரபு சங்ககாலத்துக்கும் முந்தையது, தொல்காப்பிய காலத்தது(கி.மு. 2ஆம் நூற்றாண்டு), அதற்கும் முந்தையது. அவர்களின் இசையைப் பற்றிய தரவுகள் இல்லை, ஆனால் அன்று இருந்த பல இசைக்கருவிகள் அதன் சிறப்புகள் குறித்தத் தரவுகள் உள்ளன என்கிறார். இடையே தமிழகத்தில் பக்திகாலகட்டத்தில் கவிதையும் இசையும் இணைந்து உருவான பிரம்மாண்ட எழுச்சி இந்தியா முழுவதும் பரவியது எனவும் இந்த பக்தியும் கவிதையும் சங்க காலத்தின் இருவகை இலக்கியங்களின் இணைவாகும் எனவும் ஒன்று இசையும் கவிதையும் கலந்த வகை, இன்னொன்று அகப்பொருள் என்ற கருப்பொருளின் அடிப்படையிலான வகை எனவும் அன்று பக்திகாலகட்டத்தில் நடைமுறையிலிருந்த இசைபற்றி நமக்கு அதிக அளவில் தரவுகள் தெரியவில்லை எனவும் கூறுகிறார்.

சிலப்பதிகாரம்:

பின் சிலப்பதிகாரம் குறித்துப் பேசுகிறார். இதனை தமிழ் இசையின் முழுமையான ஆதார நூல் எனவும் அதன் காலம் கிபி. 5ஆம் நூற்றாண்டு எனவும் கூறுகிறார். “சிலப்பதிகாரத்தில் தான் அக்காலத்து இசையின் முறை, இலக்கணம் பற்றிய விரிவான விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இசை மட்டுமன்றி நாட்டியம், நாடக நடைமுறைகள் பற்றியும் கூட பல இடங்களில் விரிவான விவரங்கள் கிடைக்கின்றன. .பல்வேறுபட்ட பண்கள் (ராகங்கள்), இசைக்கருவிகளின் வகைகள், அவற்றின் குணங்கள், கிரகபேதங்கள் (ஒரு இராகத்திலிருந்து, இன்னொரு இராகத்திற்கு ஒரே இசையில் மாறுவது), ஒரு லட்சிய நடனக்கலைஞர் அல்லது பாடகரின் இலட்சணங்கள், நல்ல நடன/ இசைக் குருவின் குணங்கள், அன்று பண் என்ற பெயரில் உபயோகத்திலிருந்த இராகங்களின் பெயர்கள் போன்ற பல விபரங்கள் கிடைக்கின்றன” என்கிறார். சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கி.மு. 500 வாக்கில் உருவான பரதரின் நாட்டிய சாத்திரத்துக்கு நிறையக் கடன்பட்டிருக்கிறார் எனவும் அதுபோன்றே 13ஆம் நூற்றாண்டில் சாரங்கதேவர் எழுதிய சங்கீத ரத்னாகரம் சிலப்பதிகாரத்துக்குப் கடன்பட்டுள்ளதை நாம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

பின் இராமானுஜ ஐய்யங்கார் அவர்கள், இளங்கோவின் மகாகாவியம் அதன் முதன்மைச் சிறப்பை 18 நூற்றாண்டுகளுக்குத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது எனவும் சாரங்கதேவர் தன் சங்கீத ரத்னாகராவில் ’ரூபக ஆலத்தி’ என்ற பெயரில் விளக்குவது இளங்கோவின் ‘பண்ணாலத்தி’ என்பதே எனவும் சாகித்ய நிரவல் என்பதிலிருந்துதான் தென்னிந்திய லயத்தின் மகுடமணியான பல்லவி, அனுலோபம், பிரதிலோபம் ஆகியன வளர்ந்தன எனவும் கூறியுள்ளதைக் குறிப்பிடுகிறார். பரதருக்கு 1800 ஆண்டுகளுக்குப்பின் சாரங்கதேவரின் (கி.பி. 13ஆம் நூற்றாண்டு) சங்கீத ரத்னாகராவில் தான் இசை பற்றிய ஆய்வு முழுமையாய் கையாளப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம் எனவும் மாதங்கரின் பிருகதேசி இதற்கு முன்பே வெளிவந்திருந்த போதிலும், சாரங்கதேவருடைய நூலளவு அது முழுமையாக இல்லை எனவும் இசை உலகில் ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்திருந்த சிலப்பதிகாரம் மாதங்கர், சாரங்கதேவர் ஆகிய இருவருக்கும் கிடைத்திருந்தது எனவும் கூறுகிறார்.

நீண்டகால தமிழிசை மரபு:

வல்லபாச்சாரியார் தெற்கேயிருந்து வடக்கே வந்த பின் தான் பக்தி இயக்கம் வட இந்தியாவில் பரவியது எனவும், சாரங்கதேவருக்குத் தெரிந்த பலவும் இளங்கோவுக்கும் தெரிந்திருந்தது எனவும், சாரங்கதேவர் வரையில் இந்திய இசையில் வேறுபாடு இல்லை(இந்துசுத்தானி, கர்நாடக இசை) எனவும் அதன்பின்னர்தான் பிரபந்தங்கள் மறைந்து கீர்த்தனங்கள் தோன்றலாயின எனவும் கூறுகிறார். கர்நாடக இசையில் பிரயோகமாகும் 15 வகை கமகங்கள் (சுவரங்களோடு அனுசுவரங்களைத் தொடுத்து அவற்றை அலங்கரிக்கும் முறை) குறித்து சாரங்கதேவர் சொல்லியுள்ளதானது கர்நாடக இசை தனித்து உருவாவதை குறிக்கிறது என்கிறார். இவ்விதமாக தொல்காப்பியர் காலத்திலிருந்து பக்திகாலம் முடியும் வரையான(கி.மு.3 முதல் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரையான) 1500 வருடகாலம் அறுபடாமல் நீடித்த மரபுத்தொடர்ச்சி, தமிழ் மண்ணுக்கே உரிய அதிசய நிகழ்வு என்கிறார்.

பக்திகாலகட்ட இசை:

   கி.மு. 5ஆம் நூற்றாண்டின் பரதநாட்டிய சாத்திரத்திற்குப்பின் கிபி. 10ஆம் நூற்றாண்டு வரை வடநாட்டு இசை என்று பேச ஒன்றும் இல்லை என்கிறார். அதன்பின் வந்த உரையாசிரியர்கள் காலத்தில் பக்திக்காலப் பாடல்கள் திரட்டப்பட்டு அன்றைய இசைப்பாணியில் மெட்டமைக்கப்பட்டன. 40-களில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டபோது சைவக் கோவில்களில் தேவாரம் பாடுபவர்களிடமிருந்துதான் (ஓதுவார்கள்) நாயன்மார்கள் காலத்தில் எத்தகைய இசை நடப்பிலிருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது எனவும் ஓதுவார்களின் பாடல் முறைகள், சிலப்பதிகாரத்தில் கிடைக்கும் தரவுகள் இவற்றோடு அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை ஆகியவைகளிலிருந்துதான் சிலப்பதிகாரத்தில் காணப்படும் இராகங்களின் இன்றைய இணை இராகங்களை அறிய முடிந்துள்ளது எனவும் தேவதாசிகளின் ‘சதிரி’ யிலிருந்துதான் 1930-களில் இன்றைய பரதநாட்டியம் வடிவமைக்கப்பட்டு, அதற்குப் புதுப்பெயரும் சூட்டப்பட்டது எனவும் கூறுகிறார்.

அருணகிரிநாதர்:

“சங்கநூல்கள் முப்பதுக்கும் மேற்பட்ட தாள வாத்தியங்களைக் குறிப்பிடுகின்றன. அவற்றின் ஒலியின் தன்மை, ஒவ்வொரு வாத்தியமும் அவை மற்ற வாத்தியங்களின் கூட்டணியில் ஒத்திசையும் (Orchestral teaming up) தன்மை இவற்றின் அடிப்படையில் அவை தரப்படுத்தப்பட்டிருந்தன. கர்நாடக இசையில் இசைக்கு இணையாய் லயத்துக்குள்ள மதிப்பையும், தமிழ்நாட்டில் தாள வாத்தியங்களின் எண்ணிக்கைக்கான காரணத்தையும் இது விளக்கும். காலம் காலமாய் கவிதையும் இன்னிசையும் இணைந்த ஓர் இலக்கியமரபில், லயத்துக்கும் இலக்கிய வெளிப்பாடு வேண்டியிருந்தது. அது 16ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழில் கிடைத்தது. தத்துவார்த்த விளக்கம், மனதை மயக்கும் கவித்துவம் மற்றும் சந்த ஒலிகள் ஆகிய இவை எல்லாம் இணைந்ததோர் அற்புதக் கலவை அது” எனப் பாராட்டுகிறார். அருணகிரிநாதர் வாழ்ந்த காலம் 14ஆம் 15ஆம் நூற்றாண்டு(1350-1450) ஆகும்.

வேங்கடமகி:

சாரங்கதேவரின் சங்கீதரத்னாகராவுக்குப்பின் வேங்கடமகியின் சதுர்தண்டி பிரகாசிகை (1660) உருவானது. வேங்கடமகியின் தந்தை கோவிந்த தீட்சிதர் ஒரு நிர்வாகி, இசைக்கலைஞர், இசை ஆராய்ச்சியாளர். அவர் சங்கீதசுதா என்ற நூலை இயற்றினார். அது சங்கீதரத்னாகராவை நெருக்கமாய் பின்பற்றிய நூல். ஆனால் அவருடைய மகன் வேங்கடமகியின் ஆய்வு நூல்தான் ஒரு மைல்கல். முறைப் படுத்தப்பட்ட விஞ்ஞான முறையில் இசையைத் தெளிவாக விவரித்ததுடன், கர்நாடக இசையைப் பற்றிய விவரங்களை விரிவாகக் கையாண்டு, அதற்குப் பின் பலநூற்றாண்டுகளுக்கு, இன்று வரை அதன் வளர்ச்சிப் பாதையை வழிநடத்தி வந்துள்ளது. கர்நாடக இசையைப் பொருத்த மட்டில், இசை ஆய்வாளர்களுக்கு அது ஒரு வேதாகமம் போன்றது என்கிறார் ஆசிரியர்.

பரத நாட்டிய சாத்திரம்:

இதுவரை ஆசிரியர் வெங்கட்சாமிநாதன் அவர்கள் கூறியதை எனது இசை பற்றிய கட்டுரைகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்வோம். கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரையான இந்திய தமிழக இசை குறித்த வரலாறு இங்கு சொல்லப்பட்டுள்ளது. பரதநாட்டிய சாத்திரம் தான் வடநாட்டுக்கான பழைய இசை நூலாக சொல்லப்படுகிறது. ஆனால் அது பரதம் என்ற தமிழ் நாட்டியம் குறித்தத் தமிழ் நூலின் மொழிபெயர்ப்பு நூலாகும் என்பதை எனது கட்டுரைகள் உறுதி செய்கின்றன. வெங்கட்சாமிநாதன் அவர்களும் பரதநாட்டிய சாத்திரம் தவிர கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை வட இந்திய இசை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்கிறார். பரத நாட்டிய சாத்திரம் என்ற நூலும் தமிழ் வழிநூல் எனும்பொழுது ஆரம்பம் முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை வட இந்திய இசை எனச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்பது உண்மையாகிறது. ஆகவே நமது கருத்தான இந்திய இசை என்பது தமிழிசைதான் என்பது உறுதியாகிறது.

தனித்த தமிழ் இசை மரபு:

     ஆசிரியர் தனது கட்டுரையை, தனித்த தமிழ் இசை மரபு என ஒன்று இல்லை எனத் தொடங்குகிறார். ஆனால் கட்டுரை முழுவதும் தனித்த தமிழ் இசை மரபு குறித்துத்தான் பேசுகிறார். தொல்காப்பியர் காலம் தொடங்கி கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை வட இந்திய இசை என ஒன்று இல்லை எனவும் 1500 வருடகாலம் அறுபடாமல் நீடித்த மரபுத்தொடர்ச்சி, தமிழ் மண்ணுக்கே உரிய அதிசய நிகழ்வு எனவும் சங்ககாலப் பரணர் பொருநரின் மரபு தமிழ்நாட்டின் தனித்த விளைபொருள் எனவும் ஏழு சுவரங்களும் அவற்றின் தமிழ்ப் பெயர்களால் அறியப்பட்டன எனவும், குரல் (ச), துத்தம்(ரி), கைக்கிளை(க), உழை(ம), இளி (ப) ,விளரி(த) ,தாரம்(நி) - இத்தகைய சுவர வகுப்பு எல்லா இசைகளுக்கும் பொதுவானது எனவும், இந்தத் தமிழ்ப் பெயர்கள் (சமற்கிருத மூலத்திலிருந்து பெற்று, தமிழ்ப் படுத்தப்பட்டவை அல்ல) தமிழர்கள் தாமே அவற்றைக் கண்டறிந்து வகைப்படுத்தினர் என்பதற்குச் சான்றாகும் எனவும் கூறி தமிழிசையின் தனித்தன்மையை விளக்கும் ஆசிரியர் தொடக்கத்தில் அதற்கு முரண்பாடாகத் தனித்தத் தமிழ் இசை மரபு என ஒன்று இல்லை என்கிறார்.

சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்குநல்லார் எழுதியுள்ள உரை அக்காலத்தில் தமிழ்ப்பதங்கள் உபயோகத்திலிருந்ததற்கு சான்றளிக்கிறது எனவும், எப்பொழுது சுரங்களின் இந்தத் தமிழ்ப்பெயர்கள் சமற்கிருதப் பெயர்களுக்கு இடம் கொடுத்தன என்பது நமக்குத் தெரியவில்லை எனவும் கூறுகிறார். தமிழிசை பற்றிய ஆய்வு அதன் தனித்தன்மையை அவருக்கு உணர்த்திய போதிலும் அதனை முழுதாக ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை எனத்தோன்றுகிறது. கட்டுரை முழுவதும் இந்தக் குழப்பம் அவரிடையே இருக்கிறது. நாம் தொல்காப்பியர் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு எனவும் சிலப்பதிகார காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனவும் கணித்துள்ளோம். பரதநாட்டிய சாத்திரம் வடமொழியில் உருவானதற்கான சமூகப்பின்புலமோ அதன் மரபுத் தொடர்ச்சியோ வடபுலத்தில் இல்லை. ஆகவே பரதநாட்டிய சாத்திரம் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ் மொழியில் இருந்து வடமொழியில் ஆக்கப்பட்டது. அது ஒரு வழிநூல். அதன் மூலம் தமிழும் தமிழகமும் ஆகும்.

இசை இலக்கியம், இசை இலக்கணம்:

      இயலில் இலக்கியம் வேறு இலக்கணம் வேறு என்பதுபோல்தான் இசையிலும் இலக்கியம் வேறு, இலக்கணம் வேறு. ஆனால் அது குறித்து ஆசிரியர் எதுவும் பேசவில்லை. பரதநாட்டிய சாத்திரம் என்பது இசை, நாட்டியம் குறித்த இலக்கண நூல். இலக்கணம் படைக்க அதற்குமுன் இசை இலக்கியம் என்கிற சாகித்தியங்கள் உருவாகியிருக்க வேண்டும். இசைக்கான சாகித்தியங்கள் இல்லாமல் இசைக்கான இலக்கண நூல் உருவாக முடியாது. ஒரு சமூகத்திற்கு இலக்கியம் தான் அடிப்படை. இலக்கியத்தை செம்மைப்படுத்தவே இலக்கணம் உருவாகிறது. ஆகவே பரதநாட்டிய சாத்திரத்துக்கு சங்ககாலத்தமிழ் இசை நூல்களே சாகித்தியங்களாக இருந்துள்ளன. அவைகள் அழிந்து போயின. சிற்றிசை பேரிசை எனப்பல இலக்கிய இசை நூல்கள் இருந்துள்ளன. இன்று பிந்தைய பரிபாடல் மட்டுமே கிடைக்கிறது. தமிழில் உருவான பல இசை இலக்கண நூல்களும் அழிந்து போயின. கி.பி. 9ஆம் நூற்றாண்டு ‘பஞ்சமரபு’ மட்டும் கிடைத்துள்ளது.

இசை இலக்கண நூல்கள்:

கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப்பின்னர் சமற்கிருதத்தில் எழுதுவதுதான் சிறப்பு என்ற நிலை உருவானதால் தமிழில் இசை இலக்கண நூல்கள் அதிக அளவில் உருவாகவில்லை. இருந்த நூல்களும் கவனிப்பாரற்று அழிந்து போயின. இந்த நிலையில் வட மொழியில் உருவான இசை இலக்கண நூல்கள்தான் ஆசிரியர் குறிப்பிடும் மதங்கரின் பிருகதேசி(கி.பி. 10ஆம் நூற்றாண்டு), சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரா(கி.பி. 13ஆம் நூற்றாண்டு), வேங்கடமகியின் சதுர்தண்டிப் பிரகாசிகை (கி.பி. 1660), வேங்கடமகியின் தந்தை கோவிந்த தீட்சிதர் அவர்களின் சங்கீதசுதா ஆகிய நூல்களாகும். இவை அனைத்தும் இசை இலக்கண நூல்களாகும். இவைகளுக்கான சாகித்தியங்கள் எனப்படும் இசை இலக்கியங்கள் வடமொழியில் அன்று இல்லை. ஆகவே இவை அனைத்தும் தமிழ் சாகித்தியங்களையே தங்களது இலக்கணத்துக்கான இசை இலக்கியங்களாகக் கொண்டிருந்தன. ஆனால் அவை குறித்து வெங்கட்சாமிநாதன் போன்றவர்கள் எதுவுமே பேசுவதில்லை.

பரத நாட்டிய சாத்திரத்துக்குப்பின் வந்த குறிப்பிடத்தக்க நூலான பிருகதேசி குறித்து பழந்தமிழ் மதுவை புதிய வடமொழி கிண்ணத்தில் வார்த்துத் தரும் பணியைத்தான் இந்நூல் செய்துள்ளது என ஒரு ஆய்வாளர் குறிப்பிடுகிறார். அதாவது தமிழில் இருந்த சாகித்தியங்களைக்கொண்டு இவ்வடமொழி இசை இலக்கண நூல் செய்யப்பட்டது என்பதே அதன் பொருள் ஆகும். சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரா ஒரு ஒப்பற்ற இசை இலக்கண நூல் ஆகும். இவரது முன்னோர்கள் காசுமீரத்திலிருந்து தக்காணம் வந்து தங்கியவர்கள். இவர் வடமொழியில் பண்டிதராக இருந்ததோடு சிலப்பதிகாரம், தேவாரம் போன்ற தமிழ் நூல்களைக்கற்றே இந்த இசை இலக்கண நூலைச்செய்தார். அவரது நூலை நன்கு ஊன்றிப்படித்தால் தேவாரப் பண்கள்தான் அவரது நூலுக்கு உறுதியாக வழிகாட்டியவை என்பது தெளிவுபடும். இவரதுகாலம் 13ஆம் நூற்றாண்டு. அன்றும் வடமொழியில் சாகித்தியங்களே இல்லை.

தஞ்சையில் பிறந்து வாழ்ந்த கோவிந்த தீட்சிதர் சங்கீத சுதா என்கிற அடுத்த சிறந்த வடமொழி நூலைச்செய்தார். அமைச்சரும் அறிஞருமான இவரது காலம் கி.பி. 1530-1619 ஆகும். தீட்சிதருக்கு வழிகாட்டியதும் தேவாரப் பாசுரங்களே ஆகும். அதுபோக அருணகிரிநாதரின் திருப்புகழ் ஓரளவு துணை புரிந்திருக்கலாம். இவரது மகன்தான் சதுர்தண்டிப் பிரகாசிகை என்ற மிகச்சிறந்த இசை இலக்கண நூலை எழுதிய வேங்கடமகி ஆவார். இவரது காலம் கி.பி. 1660. மேளகர்த்தா 32 என்பதை 72 என ஆக்கியதுதான் வேங்கடமகியின் சாதனை எனக் கருதப்படுகிறது. ஆனால் நாகசுர வித்துவான் பொன்னுசாமிப்பிள்ளை அவர்கள் மேளகர்த்தா என்பது 32தான் என நன்கு நிறுவியுள்ளார். ஆகவே 32 மேளகர்த்தாக்களே முறை உடையவை ஆகும். “வேங்கடமகியின் ஆய்வு நூல்தான் ஒரு மைல்கல். முறைப்படுத்தப்பட்ட விஞ்ஞான முறையில் இசையைத் தெளிவாக விவரித்ததுடன், கர்நாடக இசையைப் பற்றிய விவரங்களை விரிவாகக் கையாண்டு, அதற்குப் பின் பலநூற்றாண்டுகளுக்கு, இன்று வரை அதன் வளர்ச்சிப் பாதையை வழிநடத்தி வந்துள்ளது. கர்நாடக இசையைப் பொருத்த மட்டில், இசை ஆய்வாளர்களுக்கு அது ஒரு வேதாகமம் போன்றது” என்கிறார் வெங்கட்சாமிநாதன் அவர்கள்.

மேலும் அவர் வேங்கடமகி இசை இலக்கணம் செய்ய, “சாரங்கதேவர், மதங்கர் ஆகியவர்களின் எழுத்துக்கள் மட்டுமன்றி புரந்தரதாசரின் ஆயிரக்கணக்கான பாடல்களும் கிடைத்தன. அண்ணமாச் சார்யாவும், இன்னும் பலரும் இருந்தனர்” என்கிறார். ஆனால் கோவிந்த தீட்சிதர், வேங்கடமகி காலத்தில் புரந்தரதாசர், அன்னமாச்சாரியார், சேத்ரக்ஞர் போன்றவர்களின் பாடல்கள் தமிழகத்தில் புழக்கத்தில் இல்லை. தமிழ் சாகித்தியங்களின் துணைகொண்டுதான் இவர்கள் தங்களது இசை இலக்கண நூல்களை எழுதினர் என்ற உண்மையை மறைப்பதற்காகவே மேற்கண்ட மூவரின் பாடல்களைக் குறிப்பிடுவது சிலரின் வழக்கமாக இருக்கிறது. வெங்கட்சாமிநாதன் அவர்களும் அதே தவறைத்தான் செய்கிறார். அதனால்தான் ஆரம்பத்தில் கர்நாடக இசையின் பிதாகமர் என புரந்தரதாசரை அவர் குறிப்பிடுகிறார். உண்மையைத்திரித்துத் தவறான வரலாற்றைக் கூறுவது ஒரு பெருங்குற்றமாகும். அதனைத்தான் வெங்கடசாமிநாதன் போன்றவர்கள் செய்கிறார்கள். ஆனால் கர்நாடக இசையின் உண்மையான பிதாகமர் மேளக்காரர் பரம்பரையைச்சேர்ந்த முத்துத்தாண்டவரே ஆவார்.

கர்நாடக இசையின் பிதாகமர்-முத்துத்தாண்டவர்:

கோவிந்த தீட்சிதரும், வேங்கடமகியும் தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர்கள். புரந்தரதாசர் பூனாவுக்கு அருகில் பிறந்தவர். இவர் கீர்த்தனைகள் பாடவில்லை. அவர் தனது நாமகீர்த்தனங்கள் அனைத்தையும் மராத்தி நாட்டில் உள்ள பீமா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டரிபுரத் திருமாலான விட்டலருக்கே அர்ப்பணம் செய்தவர். இவரது பாடல்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற செவ்விய அமைப்புடைய கீர்த்தனைகள் அல்ல. இவரது இசையில் கருநாடக இசையோடு, மராத்திய இசையும், இந்துசுத்தானி இசையும் கலந்துள்ளது என்பர். தமிழகத்தில் தமிழ்ப் பண்ணைத்தவிர வேறு எந்த இசையும் கலந்ததாக வரலாறு இல்லை. இவரது பாடல்கள் கன்னடமொழிக்கும், இசைக்கும் மிகப்பெரிய சேவை செய்துள்ளது எனலாம். ஆனால் இவரது பாடல்கள் தியாகரய்யருக்குப்பின்தான் தமிழகத்தில் பரவின, புகழ்பெற்றன. தமிழ் சாகித்தியங்களைக் கொண்டுதான் தியாகரய்யர் காலத்துக்கு முன்வரை (கி.பி. 1800 வரை) உருவான அனைத்து வடமொழி இசை இலக்கணங்களும் உருவாகின. அதனை மறைக்கவே புரந்தரதாசர் போன்றவர்களின் பெயர்களைச் சிலர் கொண்டு வருகின்றனர். அதனைத்தான் வெங்கட்சாமிநாதனும் செய்துள்ளார்.

            கோவிந்த தீட்சிதரும், அவரது மகன் வேங்கடமகியும் தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர்கள். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். கோவிந்த தீட்சிதர் அமைச்சராக இருந்து திருவையாறு தொடங்கி மாயுரம்வரை காவிரிக்கரைத் தலங்கள்தோறும் சந்தியாவந்தன மண்டபமும், படித்துறையும் கட்டி வைத்தவர். இதுபோன்று சோழநாடு முழுவதும் பொதுப்பணிகள் பலசெய்தவர். அதே தஞ்சை சீர்காழியில் கர்நாடக இசையின் மூலவரான முத்துத்தாண்டவர் இவர்களுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்து சிதம்பர நடராசப் பெருமாளுக்குத் தனது கீர்த்தனைகளை அர்ப்பணம் செய்தவர். இவர் மேளக்காரப் பரம்பரை என்பதால் பரதநாட்டியமும், நட்டுவத்தொழிலும், இசையும் நன்கு அறிந்தவர். மேளக்காரர் பரம்பரை குறித்து எனது கட்டுரைகள் முன்பே விளக்கியுள்ளன. இசையும், நடனமும் பரம்பொருளுக்கே உரியன என்ற ஒரு பெரும் கொள்கையை முத்துத்தாண்டவரைப் போல் எடுத்துக்காட்டியவர் வேறு எவரும் இல்லை. திருமணம் செய்யாமல் இறைவன் புகழ்பாடியே வாழ்ந்தவர் இவர்.

கீர்த்தனை காலத்தில் முத்துத்தாண்டவர்(கி.பி. 1525-1605) தோன்றி முதன்முதலாகத் தமிழில் புது உருவங்களை அமைக்கிறார். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அமைப்பில் கீர்த்தனமாகவும், பதமாகவும் அமைக்கிறார். இவை தமிழுக்கு மட்டுமல்ல இசைக்கே புதியனவாகும். இக்காலப்பகுதி இசைத்தமிழுக்கு ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவிக்கிறது. ஆகவே இவர் ஒரு சிறந்த சாகித்திய கர்த்தா என்பதோடு கருநாடக இசையின் மூல மும்மூர்த்திகளில் இவரே முதல் மூர்த்தியாவார். ஆதலால் இவரே கர்நாடக இசையின் பிதாகமரும் ஆவார். இவரையும் இவரது கீர்த்தனைப் பாடல்களையும் கோவிந்த தீட்சிதரும், அவரது மகன் வேங்கடமகியும் நன்கு அறிந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.

இவருக்குப்பின் 100 ஆண்டுகள் கழித்துத்தான் வேங்கடமகி வருகிறார். அவரும் அதே தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு முந்தைய வடமொழி இசை இலக்கண நூல்கள் அனைத்தும் தமிழ் சாகித்தியங்களைக் கொண்டுதான் செய்யப்பட்டிருந்தன. அப்படியிருக்கும் பொழுது தஞ்சையில் இருந்த மூல மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான முத்துத்தாண்டவரின் செவ்விய தமிழ் கீர்த்தனைகளைக்கொண்டு இசை இலக்கணம் செய்யாது மராட்டிய மாநிலத்தின் கோயிலில் பாடிய நாமகீர்த்தனைகளைக் கொண்டுதான் வேங்கடமகி இலக்கணம் செய்தார் என்பது எவ்விதத்திலும் பொருந்தாது. கி.பி. 1800 வரை தமிழ் சாகித்தியங்கள்தான் அனைத்து இசை இலக்கண நூல்களுக்கும் அடிப்படையாக இருந்தன என்பதை மறைக்கவே இதுபோன்று வரலாற்றைத் திரிக்கும் பணியைச் சிலர் திட்டமிட்டு செய்து வருகின்றனர். மேளக்காரர்களிடம்தான் இசை பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. மேளக்காரர்களிடமிருந்துதான் தியாகரய்யர் முதலான அனைத்து பிராமணர்களும் இசையைக் கற்றுக்கொண்டார்கள். ஆனால் அந்த மேளக்காரர் பரம்பரையைச்சேர்ந்த முத்துத்தாண்டவர் குறித்து இவர்கள் குறிப்பிடுவதே இல்லை. ஆசிரியர் வெங்கட்சாமிநாதன் அவர்களும் அவரைக் குறிப்பிட வில்லை. ஆனால் புரந்தரதாசரைக் குறிப்பிடுகிறார். சம்பந்தமே இல்லாது கர்நாடக இசையின் பிதாகமர் புரந்தரதாசர் என்கிறார்.

தமிழகத்தில் உருவான பக்தி இயக்கத்தின் வழியில் இந்தியா முழுவதும் பலர் உருவாகினர். அதில் ஒருவர்தான் புரந்தரதாசர். கர்நாடக இசைக்கும் அதன் மூல இசை மரபிற்கும் தாயகம் தமிழகம்தான் என்ற உண்மை வரலாற்றைத் திரிக்கவேண்டும் என்பதற்காகவே, புரந்தராசர் போன்றவர்களின் பெயரை இவர்கள் இங்கு கொண்டு வருகின்றனர். பிறகு புரந்தரதாசர், சங்ககாலப் பாணர்-பொருநர் மரபில் இருந்து வந்தவர் என்று வேறு கூறுகின்றனர். சங்ககாலப் பாணர்-பொருநர் மரபிற்குப்பின் சங்கம் மருவியகாலச் சிலப்பதிகாரம் தொடங்கி, அருணகிரிநாதர்வரை மிக நீண்ட நெடிய இசைமரபு தமிழகத்திற்கு இருக்கிறது. அருணகிரிநாதருக்குப்பின் முத்துத்தாண்டவர் போன்ற மேளக்காரர்கள் இருக்கிறார்கள். சங்ககாலப் பாணர்-பொருநர் மரபில் இருந்து வந்த அந்த மேளக்காரர்கள்தான் பக்திகாலகட்ட இசையைப் பல நூற்றாண்டுகள் பாதுகாத்து வந்தவர்கள் ஆவர். ஆனால் அவர்களைப்பற்றி இவர்கள் குறிப்பிடுவதே இல்லை.

பின் மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகரய்யர் அவர்களின் சிறப்பு குறித்து விரிவாகச்சொல்லுகிறார் ஆசிரியர். அவரது சிறப்பும், மேதமையும் அங்கீகரிக்கப்படவேண்டியவை. தியாகரய்யரின் தாய்மொழி தெலுங்கு என்பதால் அவர் தெலுங்கில் பாடினார். முத்துசாமி தீட்சிதர் அவர்களின் தாய்மொழி தமிழ். ஆனால் அவர் அனைத்தையும் சமற்கிருதத்தில்தான் பாடினார். சியாம சாத்திரியின் தாய்மொழியும் தமிழ். ஆனால் அவர் அனைத்தையும் தெலுங்கில் பாடினார். தியாகரய்யர் தனது தாய்மொழியில் பாடியது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் தீட்சிதர் அவர்களும் சாத்திரி அவர்களும் தமிழைத்தாய்மொழியாகக் கொண்டிருந்தும் பிறமொழிகளில் பாடியது என்பது தமிழுக்குச்செய்த துரோகமாக ஆகியது.

வெங்கட்சாமிநாதன் அவர்கள், “மூம்மூர்த்திகள் வரும்வரை, தமிழில் ஏராளமான கிருதிகள் மேலோங்கி இருந்து வந்துள்ளன. ஆனால் தியாகரய்யரின் இமாலய ஆகிருதி தமிழை இசைக் களனிலிருந்து வெளியேற்றி விட்டதுபோலத் தோன்றுகிறது; படிப்படியாய் ஆரம்பித்து, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துக்குள் ஏறக்குறைய முழுமையாய்த் தமிழ் வெளியேற்றப்பட்டு விட்டது. இதில் முரணான விடயம் என்னவென்றால், கர்நாடக இசையின் பாரம்பரியத்தில் தமிழர்களின் பங்குதான் முக்கியமானது; இசையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அதற்கான தொட்டிலாக இருந்ததும் தமிழ்தான்; எனினும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்துக்குள், தமிழ் கர்நாடக இசை உலகிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்” என்கிறார்.

கர்நாடக இசை உலகிலிருந்து, 3000 ஆண்டுகளாக இசையை வளர்த்து வந்த தமிழ், துரத்தியடிக்கப்பட்டுவிட்டது என்கிறார். உண்மைதான். ஆனால் தமிழைத் துரத்துவது என்பது எளிதானதல்ல. பீனிக்சு பறவை போல் அது மீண்டும் வலிமையோடு எழுந்து வரும். மேலும் தியாகரய்யரின் இமாலய ஆகிருதி தமிழை இசைக் களனிலிருந்து வெளியேற்றி விட்டதுபோலத் தோன்றுகிறது என்கிறார் ஆசிரியர். சங்ககாலத்திற்கு முன்பும், சங்ககாலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் இருந்தவர்கள், பக்தி காலகட்டத்தில் இருந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், அதன்பின் வந்த அருணகிரிநாதர், முத்துத்தாண்டவர் போன்றவர்கள் தியாகரய்யரைப் போன்ற பெரிய ஆளுமைகள்தான். அதில் பலர் தியாகரய்யரைவிட ஆளுமை மிக்கவர்கள். ஆகவே தியாகரய்யரைப் போன்று நூற்றுக்கணக்கான ஆளுமைகளைத் தமிழிசை பெற்று மிக உன்னத நிலையில் இருந்து வந்தது. அந்த ஆளுமைகள் தமிழின் புகழையும் தமிழிசையையும் வளர்த்து வந்தார்கள்.

ஆனால் தமிழ் இசை மரபிலிருந்து உருவான தியாகரய்யரின் ஆளுமை, தமிழை வெளியேற்றிவிட்டது என்பது தமிழுக்குச் செய்கிற துரோகம் அல்லவா? தியாகரய்யரின் பக்தர்கள் சிலர் செய்த துரோகம் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் என்பதை மறந்துவிட முடியாது. தமிழ் இசை மரபிலிருந்து உருவான அவர்கள், தமிழுக்கும் இசைக்கும் தொடர்பே இல்லை எனப் பேசிவருவதும், இசையைப் பாடுவதற்குத் தமிழ் ஏற்றமொழி இல்லை எனக் கூறிவருவதும் பச்சைத்துரோகம் அல்லவா? உலக அளவில் உள்ள புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்கள் தமிழை ஒரு பக்தி மொழியாகக்(Divine Language) கருதி ஆய்வுகள் செய்து வருகின்றன. இந்திய இசை வரலாறு என்று எடுத்துக்கொண்டால் கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை தமிழில்தான் இசை இருந்து வந்தது. இந்தியா முழுவதிலும் இருந்த இசைகளுக்கான அடிப்படையைத் தமிழே வழங்கியது. அன்றே தியாகரய்யரைவிட ஆளுமை மிக்கப் பலர் தமிழில் இருந்தனர். பக்திகாலகட்ட ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரிநாதரும் மாபெரும் ஆளுமைகள் அல்லவா? வரலாறு இப்படி இருக்கும்பொழுது தமிழ் இசை பாடுவதற்கு ஏற்ற மொழி அல்ல எனக் கூறும் துணிவு எப்படி வந்தது? 700 வருட கால நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் போன்ற அந்நிய ஆட்சிகளின் விளைவா? அவைகளைப் பயன்படுத்திக்கொண்ட துரோகிகளின் துரோகமா?

 தீட்சிதர் அவர்களும் சாத்திரி அவர்களும் தமது தாய்மொழியாம் தமிழில் பாடாத காரணத்தால் அதன்பின் வந்த தியாகரய்யர் பக்தர்கள் அனைவரும் தெலுங்கிலும் சமற்கிருதத்திலும் பாடினார்கள். தியாகரய்யர் அவர்களின் தெலுங்கு கீர்த்தனைகள் கொச்சை வடிவமாக இருப்பதால் தெலுங்கர்கள் அவரை அங்கீகரிக்க மறுக்கின்றனர் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் இசைக்குத் தமிழ் ஏற்ற மொழியல்ல என்று கருத்து உருவாக்கப்பட்டது. தமிழில் பாடுவது கேவலமாகவும் கருதப்பட்டது. இதனைத் திட்டமிட்டுச் செய்தவர்கள் பிராமணர்களே ஆவர். அது போன்றே இசை வரலாறும் அவர்களால் திரிக்கப்பட்டு மாற்றப்பட்டு வந்தது. அதனால் புரந்தரதாசர் போன்றவர்கள் தமிழகத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டு புகழ் பெற்றார்கள். இசைக்கும் தமிழுக்கும் தொடர்பே இல்லை என்ற பொய்யான கருத்து உருவாக்கப்பட்டது.

மும்மூர்த்திகளுக்குப் பின், கர்நாடக இசையில் இருந்து, தமிழ் மட்டும்போகவில்லை. பல தவறான விடயங்களும் நடந்தன. பல நூற்றாண்டுகளாக இசையைக் காப்பாற்றி வரக் காரணமாக இருந்த மேளக்காரர்களிடம் இருந்து வந்த இசையை இரு நூற்றாண்டுகளுக்குள் பிராமணர்கள் பறித்துக்கொண்டார்கள்; பண்ணிசை மறைந்து போனது; இசை தமிழகத்தில் தோன்றியது அல்ல என்ற பொய்யான கருத்து பரப்பப்பட்டது; இசைக்கு பக்தி வேண்டியதில்லை எனவும் காசுக்கு விற்கும் சரக்குதான் இசை எனவும் ஆகியது; பொதுமக்களுக்கும் இசைக்கும் இருந்த தொடர்பு இல்லாது போனது; வித்துவான்கள் சாதகமே செய்யாமல் கருவியை நம்பி மக்களை ஏமாற்றும் நிலை வந்தது; இசை என்பது வெறும் சுரக்கோவையாகி பாவமும் ஈடுபாடும் தேவையில்லை என்ற நிலை தோன்றியது; இசையைப் பறித்துக்கொள்ளவே பிராமணர்களில் சிலர் திட்டமிட்டு தமிழை இசையிலிருந்து ஒழிக்க முயற்சித்தார்கள். கர்நாடக இசையில் தமிழ் இல்லாது போன நிலை ஏற்பட்டதால் மேலே கண்ட விபத்துகளும் நடந்தன. ஆனால் கர்நாடக இசை என்பது தமிழிசை தானே ஒழிய வேறல்ல. அதன் அனைத்து அடிப்படைகளும் தமிழிசையால் ஆனவை. மேளக்காரர் பரம்பரையால், முத்துத்தாண்டவர் போன்ற ஆளுமைகளால் உருவாக்கப் பட்டவை.

தியாகரய்யர் அவர்களின் காலம் கி.பி. 1767-1847 ஆகும். அவர் தமிழ் மண்ணில் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வளர்ந்தவர். அவர்காலம்வரை இசை என்பது தமிழகத்தில் தமிழால் ஆனதாகவே இருந்தது. அனைத்துச் சாகித்தியங்களும் தமிழில்தான் இருந்தன. இசை இலக்கணங்கள் வடமொழியில் ஆக்கப்பட்டிருந்தாலும் அவை தமிழ் சாகித்தியங்களைக் கொண்டுதான் எழுதப்பட்டிருந்தன. தியாகரய்யர் மேளக்காரரின் தமிழிசை கேட்டு வளர்ந்தவர். அவர் தாய்மொழி தெலுங்கு. ஆனால் அவர் தமிழ்ச் சமூகச் சூழலில்தான் வாழ்ந்தார், வளர்ந்தார். அவருக்கு 200 வருடங்களுக்கு முன்பே கர்நாடக இசையின் பிதாகமர் முத்துத்தாண்டவர் தோன்றி செவ்வியில் மிக்கக் கீர்த்தனைகள் பலவற்றைப் பாடிவிட்டார். அவரது பரம்பரைகளான பாபநாச முதலியார், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப்பிள்ளை போன்றவர்கள் தோன்றி கீர்த்தனைகள் பல பாடியிருந்தனர். இவை அனைத்தையும் கேட்டும் கற்றும் அவர் வளர்ந்தார். 16, 17, 18 ஆகிய மூன்று நூற்றாண்டுகளைக் கீர்த்தனக்காலம் எனத்தான் தமிழிசை வரலாறு கூறுகிறது. அதன்பின் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 19ஆம் நூற்றாண்டில்தான் தியாகரய்யர் வருகிறார். வேங்கடமகி கி.பி. 1660இலேயே தனது புகழ்பெற்ற இசை இலக்கண நூலை எழுதி விடுகிறார்.

 ஆகவே தியாகரய்யருக்கு முன்பே கர்நாடக இசைக்கான அனைத்து அடித்தளங்களும் அமைக்கப்பட்டுவிட்டன. அவை அனைத்தும் தமிழ் சாகித்தியங்களைக் கொண்டுதான் அமைக்கப்பட்டிருந்தன. அதாவது கர்நாடக இசை என்ற மணி மண்டபம் முன்பே கட்டப்பட்டுவிட்டது. அந்த மணி மண்டபத்துக்கு வர்ணம் பூசி அழகு படுத்தி அதற்குப் பலவண்ண ஒளி தந்தவர்தான் தியாகரய்யர் எனலாம். எனவே கர்நாடக இசை என்பது தமிழிசைதான் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. 3000 ஆண்டுகால தமிழிசை வளர்ச்சியில் கர்நாடக இசை என்பது இன்னொரு உச்சம். அதற்குக் கீர்த்தியும் புகழும் தந்தவர் தியாகரய்யர். ஆனால் அவர் பக்தர்களில் சிலர் தங்கள் சுயநலத்துக்காக அந்த மணிமண்டபத்தை இருளில் மூழ்கடித்துவிட்டு, வெளியே வந்து இல்லாத ஒரு மண்டபத்துக்கு தியாகரய்யர் ஒளி கொடுத்தார் எனச் சொல்கிறார்கள். மரபற்ற, வேரற்ற தொடர்ச்சியற்ற ஒரு நிலையை கர்நாடக இசைக்கு உருவாக்க முயல்கிறார்கள். இது போன்ற வரலாற்றுத் திரிபுகள் கர்நாடக இசையை வீழ்ச்சிக்குத்தான் இட்டுச்செல்லும்.

ஆபிரகாம் பண்டிதர்:

            குறிஞ்சி என்ற அமைப்பின் மூலம் 2003இல் வெளியிடப்பட்ட "பண்டிதரின் தமிழிசைத்தொண்டு' என்ற நூலில் உள்ள கட்டுரைகள் தமிழிசை குறித்தும் ஆபிரகாம் பண்டிதர் குறித்தும் கூறியுள்ள சில கருத்துக்களைப் பார்ப்போம். பண்டிதர் 1859இல் பிறந்தார். அவர் காலத்தில் இசைப் பாடல்கள் வளர்ந்த நிலையில் இருந்தன. ஆனால் இசை இலக்கண நூல்கள் குழப்பம் நிறைந்தும் பிழைகள் மலிந்தும் இருந்தன. இசை இலக்கணங்கள் இசை இலக்கியங்களுக்குப் பொருத்தமற்றுக் காணப்பட்டன. இசை இலக்கணத்தை எழுதியவர்கள் வடமொழியாளர்கள். தமிழ் சாகித்தியங்களே அவர்களது இலக்கணத்துக்கு அடிப்படை. சிலப்பதிகாரம் போன்ற பண்டைய இசை இலக்கண நூல்களையும், தமிழ் சாகித்தியங்களையும் அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. அதனால்தான் இசை இலக்கணத்தில் குழப்பங்களும், பிழைகளும் உருவாகின.

இவைகளை உணர்ந்து கொண்ட பண்டிதர் பல ஆண்டுகள் ஆய்ந்து 1917இல் 'கருணாமிர்த சாகரம்' என்ற இசை ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாகத்தான் விபுலானந்தரின் யாழ்நூல்(1947), சிலப்பதிகார இசை நுணுக்கம்(1956) போன்ற நூல்கள் வெளிவந்தன. பண்டிதரின் மகன் வரகுணபாண்டியன் 'பாணர் கைவழி' என்ற இசை ஆய்வு நூலை எழுதினார். பண்டிதர் ஒரு சிறந்த சித்த மருத்தவராகவும் இருந்தார். அவர் தமிழ் இசைக்காக 7 மாநாடுகளை நடத்தினார். அதில் வேங்கடமகியின் 72 மேளகர்த்தாக்கள் தவறு எனவும், 32 மேளகர்த்தாக்களே முறை உடையவை எனவும் சுருதிகள் 22 அல்ல 24 எனவும் நிறுவினார். கெரால்டு பவர்ஸ் என்ற அமெரிக்கப் பேராசிரியர் வேங்கடமகியின் 72 மேளகர்த்தாமுறை குறித்து இம்முறை மேளங்களைப் பற்றியும் அந்நியச்சுரங்கள், சிறப்புப்பிரயோகங்கள் பற்றியும் பேசினாலும் அதில் நிறையக் குறைபாடுகள் இருக்கின்றன என்கிறார்(பக்:17). கால், அரைக்கால் முதலிய நூண் சுரங்களை வேங்கிடமகி புறந்தள்ளியவர் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் வேங்கடமகியின் நூலை வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் “இசை ஆய்வாளர்களுக்கு அது ஒரு வேதாகமம்” என்பதன் மூலம் தமிழிசையாகிய கர்நாடக இசையை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள்.

தமிழிசையின் முதல் இராகம் எதுவென்ற குழப்பம் இருந்து வருகிறது. இதற்கு வேங்கடமகி போன்றவர்களின் வடமொழி இசை இலக்கண நூல்களில் தீர்வு இல்லை. ஆகவே தமிழிசையை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமானால் 13ஆம் நூற்றாண்டிலிருந்து உருவான வடமொழி இசை இலக்கண நூல்களை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தில் அல்லது அதற்கு முன்பிருந்து தொடங்கவேண்டும். சிலப்பதிகாரம் ஒரு மிகப்பெரிய இசைக்கடல். அதுவே தமிழிசைக்கான மூலமும் அடிப்படையும் ஆகும். தேவாரம், திருவாசகம், சிலப்பதிகாரம், நாலயிரத்திவ்விய பிரபந்தம் ஆகிய நூல்களில் மட்டும் 13000 பண்டையத் தமிழிசைப் பாடல்கள் உள்ளன. பண்டிதர்காலத்தில் இருந்த இசை நூல்கள் கூறிய இசையைவிட, இதுவரை பாடப்பட்ட கர்நாடக இசையைவிட பழந்தமிழிசை ஆழமும் அகலமும் கொண்டது. ஒரு பண்ணை 20 இரவுகள் விருத்தி(ஆலாபனை) செய்து பாடிய பழந்தமிழ்முறை மறைந்து போனது. தியாகரய்யர் காந்தாரப்பண்ணை(தேவ காந்தாரி) 8 நாட்கள் பாடியதையும், திருவாடுதுறை இராசரத்தினம் பிள்ளை விளரிப்பண்ணை (தோடி) 8 நாட்கள் பாடியதையும் அறிகிறோம்(பக்: 56). ஆதலால் பண்டிதர் தனது நூலில் பண் விருத்தி என்ற இராக ஆலாபனை செய்யும் முறையை ஆய்வு செய்து இராக உருவாக்க முறையை வெளிப்படுத்தியுள்ளார். பண்டிதர் 12 அரைச்சுரங்கள் போக கால் சுரங்கள், அரைக்கால் சுரங்கள், வீசம் சுரங்கள் ஆகியன குறித்து பேசியுள்ளார்.. இன்று SONO GRAM, OSCILLO SCOPE போன்ற கருவிகளால் அவை உண்மையாகியுள்ளன இசையின் அடிப்படையும், மூலமும் தமிழ்தான் எனினும் தமிழக அரசின் இசைக்கல்லூரியில் இசை சார்ந்த கலைச்சொற்கள் அனைத்தும் சமற்கிருதத்தில்தான் உள்ளன. வடமொழி இசை இலக்கண நூல்களே அங்கு பாடமாக உள்ளன. இந்நிலை மாற வேண்டும்.

 தமிழிசையின் சிறப்பு என்பது நிலங்களை ஐவகையாகப் பிரித்து பருவத்திற்கும், பொழுதிற்கும் ஏற்ற பண்களை வகுத்ததாகும். அதாவது ஒவ்வொரு பண்ணுக்கும் நிலம், பருவம், பொழுது ஆகிய மூன்றும் இருக்கும். சான்றாக செவ்வழிப்பண் என்பது முல்லை நிலத்திற்கும், கார் காலத்திற்கும், மாலை நேரத்திற்கும் உரியது. ஐந்து நிலங்களுக்கும் உரிய சூழ்நிலை, பருவநிலை, காலம், நேரம், தட்பவெட்பநிலைகளுக்கு ஏற்றவாறு கருவிகள், பண்கள், கூத்துவகைகள் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. பண்டைய தமிழிசைதான் வட இந்திய இசைக்கும் அடிப்படை. ஆதலால் வடநாட்டினர் பருவத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற பண்களைப்பாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். பண்டைய தமிழிசையின் மரபு இது. இன்றும் இதனை தமிழ் நாகசுர இசைக் கலைஞர்ளும், இந்துசுதானி இசைக் கலைஞர்களும் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் கர்நாடக இசைப் பாடகர்கள் இதனைப் பின் பற்றுவதில்லை. இந்திய இசைக்கும் ஐரோப்பிய இசைக்கும் அடிப்படை 12 அரைச்சுரங்கள்தான் ஆகும். இந்த 12 அரைச்சுரங்களைக் கொண்டுதான் நமது இராகங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் இந்தப் பொதுவான இலக்கணபூர்வமான இசையை விடுத்து 13ஆம் நூற்றாண்டுக்குப்பின் வந்த வடமொழி இசை இலக்கண நூல்கள் பண்டைய தமிழ் மரபு வழிவந்த இசை இலக்கணங்களில் சில தவறான கொள்கைகளை உருவாக்கி அவைகளைச் சீர்குழைத்துள்ளன. இந்நிலை ஐரோப்பிய அறிஞர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

இயற்பியல் கணிதவியல்படி இதுவரை நாம் அறிந்துள்ள சுரத்தானங்களைவிட நுட்பமானச் சுருதிகளைக் கொண்ட சுரத்தானங்களும் நமது தமிழிசையில் பழக்கத்தில் உள்ளன. நம் முன்னோர் கண்ட ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை எல்லாம் கணித வடிவங்களே ஆகும். நமது இசையின் இயல் பகுதியை கணிதப்படுத்த வேண்டும். இனியஒலிதான் இசை என்பதால் அதை இயற்பியல் மூலம் ஆய்வு செய்யவேண்டும். அப்பொழுதுதான் சுருதி குறித்த முழு அறிவையும் நாம் பெற முடியும். பண்டையத் தமிழ்ப் புலவர்கள் மொழி இலக்கணம் மட்டுமல்ல, இசை இலக்கணமும் கற்றவர்கள். ஆனால் 20ஆம் நூற்றாண்டு 'புலவர்' படிப்பு படித்தவர்கள் இசை இலக்கணம் கற்கவில்லை எனினும் தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு ஆழ்ந்து கற்றவர்களாகவும் தமிழ்ப்பற்று மிக்கவர்களாகவும் இருந்தனர். ஆனால் இன்றுள்ள இளநிலை, முதுகலைத் தமிழ்ப் பட்டதாரிகளின் நிலை கேள்விக்குரியதாகவுள்ளது. அதனால்தான் தமிழ் பலவிதங்களிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழறிஞர்கள் தமிழ் இலக்கிய இலக்கணங்களுடன் இசை இலக்கணத்தையும் கற்கவேண்டும். தமிழை, தமிழிசையை வளர்க்க வேண்டும்.

வெங்கட்சாமிநாதன் அவர்கள் தனது கட்டுரைகளில் பல உண்மைகளைச் சொல்லியுள்ளார். அதற்காகப் பாராட்டப்படவேண்டியவர் தான். ஆனாலும் அவரும் ஆங்காங்கு வரலாற்றை மறைத்தும் திரித்தும்தான் எழுதியுள்ளார். முத்துத் தாண்டவர் குறித்து எதுவும் பேசாத அவர் புரந்தரதாசர் குறித்துப் பேசுகிறார். தமிழ் துரத்தப்பட்டதற்கும் இன்னபிற குறைபாடுகளுக்கும் காரணமானவர்கள் குறித்து எதுவும் அவர் பேசவில்லை. அதனால்தான் அவரது கட்டுரை குழப்பங்களும் முரண்பாடுகளும் கொண்டதாக உள்ளது. தமிழனாகத்தான் இருப்பதால் தமிழுக்கு ஆதரவு காட்டியதாகக் கருத முடியாது எனவும் தான் வரலாற்றுக்கு உண்மையாக இருந்துள்ளேன் எனவும் அவர் கூறுகிறார். அதில் ஓரளவே உண்மை இருக்கிறது, முழு உண்மை இல்லை. தியாகரய்யருக்குப்பின் 19ஆம் நூற்றாண்டிலிருந்துதான் தமிழ் தவிர்க்கப்பட்டு, சமற்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் கர்நாடக இசைக்கான பாடல்கள் உருவாகின. ஆனால் அவைகளில் பெரும்பாலானாவை தமிழகத்தில்தான் உருவாகின. இன்றுவரை தமிழகமே கர்நாடக இசைக்கான அடித்தளமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் தமிழ் தவிர்க்கப்பட்டதால் கர்நாடக இசை பலவற்றை இழந்தது, இழந்து வருகிறது. ஆகவே கர்நாடக இசையில் தமிழ் முதன்மை பெறட்டும். தமிழிசையாகிய கர்நாடக இசை முழு வளர்ச்சி பெறட்டும்.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It