“கலை, இலக்கியம் என்பனவற்றின் இன்றியமையாத பண்புகளிலொன்று மனித நேய உணர்வாகும். இவற்றைப் படைக்கும் கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோர் தம்மளவிலும் இவ்வுணர்வை உடையவர்களாகவே திகழ்வர் எனச்சமுதாயம் எதிர்பார்ப்பது இயற்கையே. ஆயினும் பெரும்பான்மையான கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோரிடம் இவ்வுணர்வை நிறைவாக நாம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஓரு சிலரிடம் அதனை நாம் முழுமையாக அவதானிக்க முடிகிறது. அத்தகைய மிகச் சிலருள் ஒருவர் நம் மத்தியில் வாழும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா.” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கலாநிதி சு.வித்தியானந்தன் புகழ்ந்துரைத்துள்ளார்.

டொமினிக் ஜீவா, ஒரு படிக்காத மேதை, உன்னத மனிதாபிமானி முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த பத்திரிக்கையாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, கனல் கக்கும் பேச்சாளர், கடின உழைப்பாளி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன் - எனப் பன்முக ஆளுமை படைத்தவர்.

dominic Jeevaடொமினிக் ஜீவா 27.06.1927 அன்று யாழ்ப்பாணத்தில் அவிராம்பிள்ளை ஜோசப் -மரியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஜோசப் யாழ்ப்பாணத்தில் முடிதிருத்தகம் நடத்தி வந்தார்.

“பிறப்பில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சவரத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவன். ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். அந்தக் காலத்தில் தான் என்னை வெகுவாகப் பாதித்த அந்த நிகழ்ச்சி நடந்தது. என்னுடைய இலக்கியத்துறை பிரவேசத்திற்கே இந்த நிகழ்ச்சிதான் காரணம். நான் அப்போது தொடக்கப்பள்ளி மாணவன். அந்த பிஞ்சுப் பருவத்திலேயே என் இதயத்தில் விழுந்த அடி, அதன் வடு, என் படிப்பை, என்னை வளர்த்த என் தந்தை செய்த தொழிலைச் சுட்டிக் காட்டிய பொழுது, என் இதயத்தில் விழுந்த காயந்தான் என் எழுத்தில் எரிகிறது” எனத் தமது இளமைக்கால கொடுமையான நிகழ்வு குறித்தும், இலக்கிய உலகில் பிரவேசிப்பதற்கான சமூகச் சூழல் பற்றியும், ‘ஈழத்திலிருந்து ஒரு இலக்கியக் குரல்’ என்னும் தமது நூலில் டொமினிக் ஜீவா பதிவு செய்துள்ளார்.

ஈழத்து நவீன இலக்கியத்துறையில் 1946 ஆம் ஆண்டு அடி எடுத்து வைத்தார். தமிழகத்து கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவரான ப. ஜீவானந்தம் தலைமறைவு வாழ்வின் பொருட்டு 1948 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகை புரிந்தார். அப்போது டொமினிக் ஜீவா ப.ஜீவானந்தத்தை சந்தித்து, அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் தமது அரசியல், சமூக இலக்கிய நோக்கினை சரியான திசைவழியில் அமைத்துக் கொண்டார். அது முதல் டொமினிக் என்ற தமது பெயருடன் ‘ ஜீவா ’ என்று இணைத்துக் கொண்டு ‘டொமினிக் ஜீவா ’ என்று அழைக்கப்பட்டார்.

‘சுதந்திரன் ’ இதழ் 1956 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் டொமினிக் ஜீவாவின் ‘ எழுத்தாளன் ’ என்னும் சிறுகதை முதற் பரிசைப் பெற்றது. தினகரன், ஈழகேசரி முதலிய ஈழத்து இதழ்களில் டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் அதிக அளவில் வெளியிடப்பட்டது. மேலும், தமிழகத்து இலக்கிய இதழ்களான சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகளும், படைப்புகளும் வெளியானது.

‘மல்லிகை ’ இதழை 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியிட்டார். ‘மல்லிகை’ இதழின் ஆசிரியராக, பதிப்பாசிரியராக, வெளியீட்டாளராக, வினியோகிப்பாளராக விளங்கினார் டொமினிக் ஜீவா.

 ‘மல்லிகை’ இதழின் மகுட வாக்கியம், “ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார் ” என்ற பாரதியின் வாக்காகும்.

“சிகை அலங்கரிக்கும் நிலையம் ஒன்றினுள் இருந்து வெளிவந்த ஒரே சஞ்சிகை மல்லிகை தான். சலூனில் தொழில் செய்பவரைக் கொண்டு வெளிவந்த சர்வதேசச் சஞ்சிகையும் மல்லிகைதான், இது சவரக்கடையல்ல-எனது சர்வகலாசாலை. எழுத்து எனக்குத் தொழில். பேனா சமூக மாற்றத்திற்கான வலிமைமிக்க ஆயுதம்” என பெருமிதத்துடன் டொமினிக் ஜீவா பதிவு செய்து உள்ளார்.

“எமது மண் வாசனையுடன் யதார்த்த இலக்கியம் தோன்றிய போது அதற்குத் தளம் கொடுக்கச் சஞ்சிகைகள் இருக்கவில்லை. இந்தியச் சஞ்சிகைகளும் எமது இலக்கியத்தை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளாது புறக்கணித்தன. இந்நிலையில் எமக்கென்று ஒரு சஞ்சிகையின் அவசியத்தை உணர்ந்து அதன் வழி மல்லிகையைத் தோற்றுவித்தேன்”. என மல்லிகை இதழின் வரலாற்றுத் தேவையை டொமினிக் ஜீவா தமது நேர்காணலில் கூறியுள்ளார்.

ஈழத்து இலக்கியத்தை இனங்கண்டு வெளியிட்டு தமிழிலக்கியத்திற்கு அளித்தல் வேண்டும். அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் விடிவிற்கான படைப்புகளை முன்னுரிமையுடன் வெளியிடல் வேண்டும். கொள்கை கருத்துக்கள் வேறுபட்ட தரமான படைப்புகளையும், படைப்பாளிகளையும் தமிழுலகு அறிய வைத்தல் வேண்டும். புதியதொரு எழுத்துப் பரம்பரையை தோற்றுவித்தல் வேண்டும் என்பனவற்றை ‘மல்லிகை ’ இதழ் நோக்கமாகக் கொண்டு வெளிவந்தது.

‘மல்லிகை’, இதழ் ஈழத்து எழுத்தாளர்கள் உருவாகி வளர்வதற்கேற்ற தளத்தை உருவாக்கியது. டொமினிக் ஜீவா தமது சுய வளர்ச்சியை தியாகம் செய்து ஏனைய இலக்கியவாதிகளுக்கு தளம் அமைத்துக் கொடுத்தார்.

‘மல்லிகை’ இதழில் சிறுகதைகள், புதுக்கவிதைகள், பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகள், திறனாய்வுகள், உலகச் செய்திகள், துணுக்குகள், வாதப்பிரதிவாதங்கள், நூல் மதிப்புரைகள் என ஏராளமானச் செய்திகள் இடம் பெற்றன. மேலும், ஆசிரியர் தலையங்கம், தூண்டில் பகுதியும் சிறப்பாகக் கூறக்கூடியவைகளாகும்.

மனிதப் பலவீனங்களை பயன்படுத்தி இலக்கியம் என்ற பேரில் சொகுசான வியாபாரம் பண்ணிக் கொண்டிருக்காமல் வாசகர்கள் எதனை விரும்புகிறார்கள் என்பதை விடுத்து, எதனை விரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அவற்றை ‘ மல்லிகை ’ இதழ் நடைமுறைப்படுத்தி தரமான வாசகர் கூட்டத்தைப் பெருக்கியது.

‘மல்லிகை’ இதழ் ஏழை விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தொண்டாற்றி வருகிறது. சராசரி வாசகர்களை இலக்கியத் தரத்திற்கு உயர்த்தும் பணியைச் செய்து வருகிறது. இனவிரோதம், சாதி உணர்வுகளற்ற சமுதாய பணிகளோடு உலகளாவிய உயர்ந்த நோக்கங்களை இளைஞர்களுக்கு உணர்த்தி வருகிறது.

“ இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இயக்க வேகம் குறைந்த நிலையில் முற்போக்கு இலக்கியப் பணியினைத் தொடர்ந்து செய்வதற்கென டொமினிக் ஜீவா மல்லிகை சஞ்சிகையினை ஆரம்பித்தார் ”. என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

‘மல்லிகை’ பல சிறப்பிதழ்களையும், ஆண்டு மலர்களையும் வெளியிட்டுள்ளது. சோவியத் குடியரசின் ‘யுகப்பரட்சி’ சிறப்பிதழ், இலங்கையர்கோன் சிறப்பிதழ், துரையப்பாப்பிள்ளை பாவலரின் நூற்றாண்டு நினைவு இதழ், மலையகச் சிறப்பிதழ், பாரதி நூற்றாண்டுச் சிறப்பிதழ், கைலாசபதி சிறப்பிதழ், முல்லைச் சிறப்பிதழ், கிளி நொச்சி மாவட்ட சிறப்பிதழ், மாத்தளை மாவட்ட சிறப்பிதழ், ஆஸ்திரேலியே சிறப்பிதழ் மற்றும் மல்லிகை வெள்ளி விழா மலர் (1990) முதலியவற்றையும் வெளியிட்டுள்ளது.

‘மல்லிகை’ இதழ்களின் அட்டைகளை அலங்கரித்தவர்கள் நாவலாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள், ஓவியர்கள், இசை மேதைகள், சிற்பக் கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் எனப் பலதிறப்பட்டவர்களாவர். மேலும் அவர்களைப் பற்றிய கட்டுரையும் அந்த இதழில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, கவிஞர் முருகையன், எம். ஏ. நுஃமான், கலாநிதி க. அருணாசலம், தெணியான், பேராசிரியர் நா. சுப்பிரமணியன், டாக்டர் ச. முருகானந்தன், பேராசிரியர் சபா. ஜெயராசா, கே.எஸ்.சிவகுமாரன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், செ.யோகநாதன், புதுவை இரத்தினதுரை, பேராசிரியர் மௌனகுரு உட்பட பல இலக்கிய்த திறனாய்வாளர்களும்,படைப்பாளிகளும், கவிஞர்களும் மல்லிகை இதழ்களில் எழுதியுள்ளனர்.

மல்லிகை இதழ்களில் ஈழத்தின் புகழ் பூத்த கவிஞர்களான, கவிஞர். கல்வயல் வே.குமாரசாமி, அலை அ. யேசுராசா, சண்முகம் சிவலிங்கம், மேமன்கவி, சோலைக்கிளி, கருணாகரன், வாசுதேவன், அன்பு முகைதீன், துறவி, கவிஞர் சோ. பத்மநாதன் உட்பட பல கவிஞர்களின் கவிதைகள் வெளியாகியுள்ளன.

‘மல்லிகை’ இதழில் ஏறத்தாழ 700 சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மேலும், மலையாளம், சிங்களம், ஆங்கிலம் முதலிய பிறமொழிச் சிறுகதைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மல்லிகை இதழில் வரதர், நந்தி, குறமகள், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், செங்கை ஆழியான், செ. கணேசலிங்கன், அ. முத்துலிங்கம், திக்குவல்லை கமால், லெ. முருகபூபதி, தெணியான், சட்டநாதன், ப. ஆப்டீன், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன், மாத்தளை சோமு, யோகேஸ்வரி, கே. எஸ். சிவகுமாரன், கே. சிவராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

‘மல்லிகை’ இதழ் ஈழத்து சமகால இலக்கிய வரலாற்றின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியின் வளர்ச்சிப் போக்கை பிரதிபலித்து வந்துள்ளது.

“ சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் இடதுசாரி சிந்தனைகளுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளின் காரணமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்க முடியாத நிலையிலும் தளராது, அச்சிந்தனையை விட்டுக் கொடுக்காது முற்போக்கு இயக்கத்தின் உயிர்ப்பை எடுத்துக் காட்டும் வகையில் ‘மல்லிகை’யை டொமினிக் ஜீவா நடத்தி வந்துள்ளார். ” என மேமன்கவி பதிவு செய்துள்ளார்.

தமிழ் ஆக்க இலக்கியத்தின் வளர்ச்சிக்கு ‘ மல்லிகை ’ ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பு என்னவெனில் வளரும் இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்குத் தனது இதழில் களம் அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தமைதான். என எழுத்தாளர், விமர்சகர் ஜ. ஆர்.அரியரத்தினம் தமது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

‘மல்லிகை’யினூடாக தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கினை மட்டுமல்ல. இந்த நாட்டுத் தமிழ் பேசும் மக்களின் சமகால வாழ்க்கை நிலை மாற்றங்கள் கூட வருங்காலச் சரித்திர ஆய்வுகளுக்கான ஆதாரப்பூர்வமான தரவுகளாக அமையும். இந்த நாட்டுத் தமிழ் இலக்கிய படைப்பாளிகளிடையே, ஆழ்ந்த சமூகப் பார்வையோடு எழுதவேண்டுமென்ற ஆர்வத்தை வளர்த்ததிலும், தார்மீகப் பொறுப்புணர்வோடு எழுத வேண்டுமென்ற துடிப்பை ஏற்படுத்தியதிலும் மல்லிகைக்கும், ஜீவாவுக்கும் கணிசமான பங்கு உண்டு. ” என ஈழத்து எழுத்தாளர் யோக பாலச்சந்திரன். ‘மல்லிகை ’ இதழின் சிறப்பு குறித்து பதிவு செய்துள்ளார்.

டொமினிக் ஜீவா தமிழுலகிற்கு படைத்து அளித்துள்ள நூல்கள்:

சிறுகதைத் தொகுதிகள் பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள்,    தண்ணீரும் கண்ணீரும் ( இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நூல்), ஈழத்திலிருந்து ஒர் இலக்கியக் குரல் (பேட்டிகள், செய்திகள்), டொமினிக் ஜீவா சிறுகதைகள் ( 50 சிறுகதைகளின் தொகுப்பு), தலைப்பூக்கள் ( மல்லிகைத் தலையங்கங்கள்), முன்னுரைகள் –சில பதிப்புரைகள், அட்டைப்பட ஓவியங்கள் (கட்டுரைத் தொகுப்பு நூல் மூன்று தொகுதிகள்), எங்களது நினைவுகளில் கைலாசபதி ( கட்டுரைத் தொகுப்பு), மல்லிகை முகங்கள் ( கட்டுரைத் தொகுப்பு), பத்தரே பிரசூத்திய (சிறு கதைகள் சிங்கள மொழி பெயர்ப்பு) அனுபவ முத்திரைகள், முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (சுய சரிதம்), Undrawn Portrait For  Unwritten  Poetry (மொழிபெயர்ப்பு கந்தையா குமாரசாமி) முதலிய நூல்களாகும்.

மல்லிகை சிறுகதைகள் ( தொகுதி-ஒன்று இத்தொகுதியில் 30 சிறுகதைகளும்), மல்லிகைச் சிறுகதைகள் ( தொகுதி –இரண்டு இத்தொகுதியில் 41 சிறுகதைகளும்) இடம் பெற்றுள்ளன. இச்சிறுகதைத் தொகுதிகளை தொகுத்து வழங்கியவர் ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியான்.

‘அட்டைப்பட ஓவியங்கள்’ முதல் தொகுதியில் ‘ மல்லிகை ’ இதழின் அட்டைப் படத்தில் வந்த 35 இலக்கிய ஆளுமைகளின் குறிப்புகள் அடங்கியுள்ளன. அடுத்த இரண்டாவது தொகுதியில் 65 இலக்கிய ஆளுமைகளின் குறிப்புகளும், இறுதியாக வந்த தொகுதியில் 44 இலக்கிய ஆளுமைகளின் குறிப்புகளும் அடங்கியுள்ளன.

                டொமினிக் ஜீவாவின் நேர்காணல்கள், படைப்புகள் தமிழகத்திலிருந்து வெளிவரும் சமூக நிழல், கணையாழி, கல்கி, மக்கள் செய்தி, இதயம் பேசுகிறது, சாவி, சகாப்தம், தீபம், ஜனசக்தி, தீக்கதிர் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

                தமிழகத்தில் 1981 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘ சிறுகதையும் சாதியமும் ’ என்னும் தலைப்பில் உரையாற்றினார் டொமினிக் ஜீவா.

                டொமினிக் ஜீவா சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று மாஸ்கோவிற்கும், அய்ரோப்பாவில் இயங்கும் இலக்கியச் சந்திப்பின் அழைப்பை ஏற்று பிரான்ஸ், இங்கிலாந்து முதலான நாட்டுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

                டொமினிக் ஜீவாவின் இலக்கியப் பணியைப் பாராட்டி, ஆறுமுக நாவலர் சபையினர் ‘இலக்கிய மாமணி ’ என்னும் பட்டம் அளித்துச்சிறப்பித்தனர். மேலும் மானுடச் சுடர் எனும் பட்டமும் வழங்கப்பட்டு உள்ளது.

                டொமினிக் ஜீவா ‘ மல்லிகைப் பந்தல் ’ வெளியீட்டகம் மூலம் தமது நூல்களையும், பிற எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு உள்ளார்.

                டொமினிக் ஜீவாவிவின் படைப்புகள், மல்லிகை இதழில் வெளிவந்த பிற படைப்புகள், மல்லிகை இதழில் வெளிவந்த தலையங்கங்கள் ஆகியவைகள் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் ஆய்வுக்காக எடுத்துள்ளது.

                மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான பாடநூலாக டொமினிக் ஜீவாவின் ‘தண்ணீரும் கண்ணீரும் ’ என்னும் சிறுகதைத் தொகுப்பு வைக்கப்பட்டுள்ளது.

டொமினிக் ஜீவாவின் அயராத இலக்கியப் பணியைப் பாராட்டி மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் சிறப்பு விருந்தினராக அழைத்து உறையாற்றச் செய்து சிறப்பித்தது.

டொமினிக் ஜீவா மதுரையில் நடைபெற்ற ஜந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் ஈழத்திலிருந்து பேராளராக கலந்து கொண்டார்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2013 ஆம் ஆண்டுக்குரிய ‘இயல் விருது ’ 17.07.2014 அன்று டொமினிக் ஜீவாவுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வழங்கப்பட்டது.

டொமினிக் ஜீவாவின் மூன்று சிறுகதைகள் டாக்டர் கமில் சுவலபிலால் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘தண்ணீரும் கண்ணீரும் ’ ‘பாதுகை ’ ‘ சாலையின் திருப்பம் ’ முதலிய சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள பல சிறுகதைகள் ருஷ்ய மொழியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

டொமினிக் ஜீவா இலங்கை சாகித்திய மண்டலத் தமிழ் இலக்கிய குழுவிற்கு 1971 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

80- களில் மல்லிகையில் வெளிவந்த விமர்சனங்களை ஆய்வு செய்து ம. தேவகௌரி என்பவர் தமது பட்டப் படிப்புக்காக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த நூல் ‘எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

“ ஈழத்து தமிழருக்கோர்

 இலக்கிய மரபு வேண்டும்.

வாழ்வுக்குப் பொருத்தமான

வாசனை வீசுமாறு

சூழலைத் திருத்த வேண்டும்.

சொற்களை புதுக்க வேண்டும்

ஏழைகள் செழிக்க வேண்டும்

என்பன இலக்காய்க் கொண்டார். ”

-              டொமினிக் ஜீவா குறித்து கவிஞர் முருகையன் படைத்த கவிதை

படைப்புகள் குறித்து டொமினிக் ஜீவாவின் கருத்துக்கள் :

“தான் வாழும் காலத்தின் உணர்ச்சிகளை சமுதாய நிலைமைகளை அரசியல் மாற்றங்களை ஏன் அயோக்கியத்தனங்களைக் கூடக் கவனத்திலெடுத்து, நாட்டு மக்களின் அபிலாஷைகளையும் விருப்பு வெறுப்புகளையும் யதார்த்த ரீதியாக உற்றுப் பார்த்து, அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, அதனுள்ளே புதைந்த போய் கிடக்கும் எதிர்காலச் சுபீட்சத்துக்கான கருவை இனங்கண்டு, அதை வளர்த்து வளப் படுத்தித் தனது தனித்துவப் பார்வையுடன் மெருகூட்டிய படைப்பை தனக்குத் தந்துதவிய மக்களுக்கே திருப்பிப் படைப்பது தான் ஒரு மக்கள் எழுத்தாளனுடைய கடமை. உண்மை எழுத்தாளன் ஒரு தீர்க்கதரிசி. எக்காலத்தின் கருத்துக்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய உள்ளடக்கமும் உணர்வும் கொண்ட சிருஷ்டிகளை உருவாக்கும் கலைஞனே காலக்கிரமத்தில் மறக்கப்படாமல் வாழ்வான்.” ‘ஈழத்திலிருந்து ஒர் இலக்கிக் குரல்’ என்னும் நூலில் டொமினிக் ஜீவா மக்கள் இலக்கியம் படைப்பது குறித்து தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

                “டொமினிக் ஜீவா –சமூகத்தின் கேவலமானதும், நியாயப்படுத்த முடியாததும், ஆனால் தமிழ்ச் சமுதாயத்தில் ஆழமாகப் புரையோடிப்போயுள்ளதுமான சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியதுடன் மாத்திரமின்றி, அதற்காக முன்னின்று போராடிய- சத்திய ஆவேசம் கொண்ட போராளி” என      எழுத்தாளர்எம்.கே. முருகானந்தன் தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

                “ஈழத்து இலக்கியத்தின் முன்னும் - எழுத்தாளர் முன்னும் தோன்றிய சகல பிரச்சனைகளிலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்னின்று பணியாற்றியுள்ளது. மக்களின் கலை, கலாச்சார, மொழி உரிமைக்காகப் பாடுபட்டது. அந்நிய இலக்கிய ஊடுருவலையும், ஏகபோக ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடியது. ஈழத்து சிருஷ்டி இலக்கியத்துக்கு எதிராக எழுந்த மலட்டுப் பாண்டித்தியத்தின் சூன்யக் குரலை எதிர்த்துப் போராடி முறியடித்தது. இவ்வேளையில் சங்கத்தின் முன்னணித் தளபதிகளில் ஒருவராக நின்று டொமினிக் ஜீவா செயலாற்றினார்.

                நமது யுகத்தின் சிந்தனைகளை, நமது நாட்டின் சூழ்நிலையுடனும், பண்பாடுடனும் இணைத்துப் பிணைத்து, நமது இலக்கியம் தேசியப் பிரச்சனைகளோடு ஐக்கியமாக வேண்டுமென தேசிய இலக்கியம் என்னும் முழக்கம் எழுப்பப்பட்ட போது அதனைச் செயலுருவாக தமது இலக்கிப் படைப்புக்கள் வாயிலாகச் செய்து காட்டியவர்களில் டொமினிக் ஜீவா முன்னணியில் நின்றார்.

                இலக்கியம் பொய்மையின் வெளிப்பாடாக இல்லாமல், உண்மையின் நிலைக்களனாக உயர்வதற்காக யதார்த்த இலக்கி முழக்கத்தை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்வைத்த போதும், டொமினிக் ஜீவாவின் பேனா அதனைச் செய்து காட்டியது” என எழுத்தாளர் என்.சோமகாந்தன் தமது கருத்தை பதிவுசெய்துள்ளார்.

“இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி. வரலாற்றின் பிரதிபலிப்பு, ஆத்மாவின் வெளிப்பாடு, மனசாட்சியின் குரல் என்ற வரையறுப்புகளின் ஒட்டு மொத்தமான உருவமாக ஜீவாவின் இலக்கியப் படைப்புகளும், தனிமனிதனான ஜீவாவின் ஒரு இலக்கிய நிறுவனமான ஜீவாவின் இலக்கியப் பணிகளும் ஒளிர்விடுகின்றன என்று துணிந்தும் நிதானித்தும் கூறலாம்.

                சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட ஒரு பகுதியின் விழுப்புண்களை ஏந்திய மைந்தனாகப் பிறந்த ஜீவா, அடக்கப்பட்ட எந்தவொரு மக்களுக்கும் இருக்கும். இருக்க வேண்டிய தர்மாவேசத்தை, அக்கிரமித்தை எதிர்த்து எரிசரமாக சாடும் ஆத்மாவின் கொதிப்பை, தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும், எதிரான அனைத்துக் கொடுமைகளையும் எரித்துப் பொசுக்கத் துடிக்கும் உள்ளக் குமுறலை புதிய புரட்சிகர வீறு முழுமையாகவும் தன்னுள் மூர்த்திகரித்து நிற்பது தற்செயலானதல்ல.     

                டொமினிக் ஜீவாவின்மூச்சின் ஒவ்வொரு துளி சுவாசத்திலும், அவரது படைப்பின் ஒவ்வொரு எழுத்திலும் இந்த அனல், அக்கினி சுவாலை மூண்டெரிவதை எவராலும் உணர முடியும், காண முடியும். அதே தர்மாக்கினியால் வசப்படுத்தப்பட்டு அதில் சங்கமமாக முடியும்.

                டொமினிக் ஜீவா தன்னை அறிந்த நாள் முதல், தனது மக்களையும் சமூகத்தையும் அறிந்த நாள் முதல், தன்னை மக்களுள் ஒருவனாக பிணைத்துக் கொண்டு, அந்த மக்களின் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், அவலங்கள் அனைத்தையும் தனதாக்கியதோடு இந்தப் பீடைகளிலிருந்து மக்களின் மெய் விடுதலையைக் காண்பதற்கான தேடலில் ஈடுபட்டார்.

                இந்தத் தேடல் தான் அவரை தன்னைச் சேர்ந்த மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவராக மாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களினது மட்டுமல்ல, சரண்டப்படும், நசுக்கப்படும், அடிமைப்படுத்தப்படும் மானுடம் முழுவதினதும் மெய்யான விமோசனத்திற்கு வழிகாட்டிய ஒரு சத்தியத்தின் பக்கம், சமூக தர்மத்தின்பக்கம், சமுதாய விஞ்ஞானத்தின் பக்கம் அவரை அணிவகுத்து நிற்கச் செய்தது.

                முற்போக்கு இலக்கியக்காரர்களினதும், ஏனைய எல்லா எழுத்தாளர்களிதும் பொது அரங்கமாக அவர் ‘மல்லிகை ’ யை பொதுமைப் படுத்தியப் பக்குவம் இலக்கிய முதிர்ச்சியின் ஆத்ம நிறையின் சத்திய வெளிப்பாடாகும். வர்க்கப் பகைவர்களைத் தவிர ஏனைய அனைத்து எழுத்தாளர்களையும் இலக்கியக்காரர்களையும் அவர்களின் கருத்து நிலை வேறுபாடுகளைப் பொருட்படுத்தாது ஐக்கியப்படுத்தும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உன்னத மரபுக்கும், இலக்கிய தர்மத்துக்கும் ‘மல்லிகை’ மூலம் ஜீவா வலிமையூட்டியுள்ளார். இலக்கியத்தை சமூக தர்மத்திற்கான போராட்டத்தின் ஒரு போர்க்கருவியாக கருதிச் செயற்பட்டார் ஜீவா” என இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் டொமினிக் ஜீவாவின் இலக்கியப் பணி மற்றும் இதழ் பணி குறித்து புகழ்ந்துரைத்துள்ளார்.

                “ஈழத்தில் வாழும் அடக்கி ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்களின் வாழ்வின் சரித்திரங்களைக் கூர்மையான வர்க்கப் பார்வையுடன் கூடிய படைப்புகள் டொமினிக் ஜீவாவின் பேனாவிலிருந்து பிறந்தன. மனித நேயம் மிக்க ஈழத்து மண்வாசைன கமழும் சிருஷ்டிகளாக மிளிர்ந்தன. குழப்பம் ஏதுமற்ற தெளிவான அரசியற் கொள்கைப் பற்றுறுதியுடன் விளங்கின” என ஈழத்து எழுத்தாளர், நாவலாசிரியர் தெணியான் கருத்துரைத்துள்ளார்.

தமிழும் இலக்கிய வரலாறும் உள்ளவரை டொமினிக் ஜீவாவின் பெயரும், அவரது ‘மல்லிகை’ யின் பணிகளும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்!. தமது தொண்ணூற்று இரண்டாவது வயதிலும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் டொமினிக் ஜீவா.

Pin It

கே.டானியல் மார்க்சியக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட மகத்தான மனிதன்; கம்யூனிச இயக்கத்தின் நீண்டகால தொண்டன்; தாழ்த்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லாத் தலைவன்; அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சஞ்சலங்களையும், வெஞ்சமரையும் சித்தரித்த சிறப்பானதோர் இலக்கியவாதி! களம் பல கண்ட புரட்சிப் போராளி; அவரது வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கை; பாட்டாளி வர்க்க இலட்சியத்தின் வெற்றிக்குத் தன்னை அர்ப்பணித்த வாழ்க்கை; மக்களின் நல்வாழ்வுக்காக அவர் தன்னையே எரித்துக் கொண்டு அரசியல், சமூக, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார்.

கே.டானியல் தாழ்த்தப்பட்ட மக்களின் சுகதுக்கங்கள், போராட்டங்களின் வெற்றி, தோல்விகள் ஆகியவற்றையே தமது இலக்கியப் படைப்புக்களின் கருப்பொருளாகக் கொண்டார். மக்கள் பல்கலைக்கழகத்தில் கற்றுப் பயிற்சி பெற்ற எழுத்தாளர். ‘மக்களிடமிருந்து மக்களுக்கு மக்கள் மொழியில் ’ என்பதைத் தாரகமாகக் கொண்டவர்.

              k danial  மக்களுக்கு வழிகாட்டும் போராட்ட இலக்கியங்களைப் படைக்க வேண்டும்; இலக்கியம் பாட்டாளி வர்க்க அரசியலுக்கு சேவை செய்ய வேண்டும். இந்த வழியில் நெறி பிறழாது நின்று பல சிறுகதைகளையும், குறுநாவல்களையும், நாடகங்ளையும், நாவல்களையும் எழுதியுள்ளார் என ‘மக்கள் எழுத்தாளர்’ கே.டானியலை விமர்சகர் வட்டுக்கோட்டை வீ. சின்னத்தம்பி புகழ்ந்துரைத்துள்ளார்.

“சமூக முற்போக்கு இயக்கத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றான தீண்டாமை எதிர்ப்பியக்கத்தில் டானியலின் ஈடுபாடு பூரணமானது, யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் பிரதான முரண்பாடாகச் சாதிக் கொடூரத்தையே டானியல் கருத்திற் கொண்டு வந்துள்ளார். டானியலின் எழுத்துக்கள் சமூக வரலாற்றுக்கான சான்றாக அமைந்துள்ளன. சமூகக் கொடூரங்களுக்கெதிராகக் குரலெழுப்பும் ஆவேச மனிதாயவாதக் குரல் டானியலுடையது.”

 ஈழத்தின் தமிழ்ப்புனைகதை வரலாற்றில் சமூக மெய்மையை அதன் இரத்தமும், சதையும் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்திய படைப்பாளிகளுள் முதன்மைக் கணிப்பிற்குரியவர் தான் டானியல் ”.

                “ டானியலுடைய மொத்த நாவல்களையும் ஒரு தொடர் வாசிப்பிற்கு உள்ளாக்கும் பொழுது யாழ்ப்பாணத்தினுடைய சமூகத்தின் ஒரு மொத்த வரலாறு கிடைக்கின்றது.”

                “சமூகத்தின் அடிநிலையில் இருந்து மேல் நோக்கிப் பார்த்தார். அதனால் மேலே இருந்தவர்களிடம் மற்றவர்கள் காணாதவற்றையும், கண்டும் தமது படைப்புக்களில் காட்ட விரும்பாததை அவர் தமது இலக்கியங்களில் ஒளிவு மறைவின்றிச் சொல்லியிருப்பது தான் கடுமையான விமர்சனங்களை இவர் எதிர் நோக்கக் காரணம். யாழ்ப்பாணத்தின் சமூக ஏற்றத்தாழ்வுகளை, சாதிவழி வரும் தீண்டாமையை, அது ஏற்படுத்தும் மனிதாயச் சிதைவுகளை, அவற்றால் பாதிக்கப்பட்டவராய், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அந்நியப்படாதவராய் எழுதியவர் டானியல்.”

                “நீண்டகாலப் போராட்ட அனுபவம், மனித உறவுகள் பற்றிய எண்ணத்தெளிவு, வரலாற்றின் போக்குப் பற்றிய எண்ணத்தெளிவு, வரலாற்றின் போக்குப் பற்றிய மார்க்சிச விளக்கம் முதலியவற்றை உள்ளத்தில் கொண்டவர் டானியல். டானியலின் அண்மைக்கால நாவல்கள், ஈழத்தின் தலை சிறந்த நாவல்களாக விளங்குகின்றன.”

                “ டானியலுக்குத் தெரிந்த யாழ்ப்பாண வாழ்க்கை, யாழ்ப்பாணத்தவர் மறைக்க விரும்பும், மறுக்கு விரும்பும் யாழ்ப்பாண வாழ்க்கை, சைவத் தமிழ்ப் பாரம்பரியம், மிக்க கவனத்துடன் கட்டியெழுப்பிய சமூகப் பாரம்பரியத்தின் இருண்ட பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் .”

                “டானியல், ஒரு நல்ல நண்பர். அற்புதனமான படைப்பாளி, படைப்பாளிகள் மறைவதில்லை. ஏனெனில் அவர்கள் தாங்கள் விரும்பும் உலகத்தை தங்கள் எழுத்துக்களில் வென்றெடுத்துவிடுவார்கள். நீ அழிக்க விரும்பிய உலகம் உன் எழுத்துக்களில் உள்ளது. அது விரைவில் அழிந்துவிடும். உன் புகழ் எழும் !” என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பி டானியலின் இலக்கியப் படைப்புகள் குறித்து தமது ஆய்வில் பதிவுசெய்துள்ளார்.

                கே.டானியல் 15.04.1927 ஆம் நாள் யாழ்ப்பாணத்தின் அருகில் உள்ள ஆணைக்கோட்டை என்னும் கிராமத்தில், கிறகொரி- மரியாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்புக்கு மேல் தொடர முடியவில்லை.

தமது பதினேழாவது வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்களில் முக்கியமானவரான ப. ஜீவானந்தம் தலைமறைவாக இலங்கையிலிருந்த போது அவரை சந்திக்கவும், அவரது உரைகளை கேட்கவும் டானியலுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அதன்மூலம் கம்யூனிசத் தத்துவத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார்.

                கே.டானியல் தமக்கு விவரம் தெரிந்த காலம் முதல் பொதுவுடைமை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, சளையாத தொண்டனாகச் செயற்பட்டவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், புரட்சிகர எழுத்தாளர் அமைப்பு, சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம், மக்கள் கலை இலக்கியப் பெருமன்றம் முதலிய அமைப்புகளில் இணைந்து முக்கிய பங்காற்றினார்.

                கே. டானியல் சிறுவனாக இருந்த காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்த கொண்டார். 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் தன்னையும் ஒரு அங்கத்தவனாக இணைத்துக் கொண்டு அவ்வியக்கத்தின் போராட்டங்களில் ஆர்வத்தோடு பங்காற்றினார்.

                எனது குடும்பத் தொழில் சீலை வெளுப்பு . இதைச் சற்று நேராகச் சொன்னால் சாதியில் நான் வண்ணான், அதைவிடவும் தமிழர்களுடைய அழகு தமிழில் குறிப்பிடுவதனால் ‘ கட்டாடி ’ என்று சுருக்கி விடலாம். இதை ஏன் குறிப்பாக நான் கூற வேண்டும் ? சமூக அடக்கு முறைக்குள் மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் இந்தக் கட்டாடிகள் எவ்வளவு தூரத்திற்குச் சாதியின் கொடுமையை அனுபவித்திருக்க முடியும் என்பதனை எனது வாசகர்களை அறிய வைப்பதற்காகவும், இந்நாள் நெடுகச் சாதியை எழுதுது, ஏன் இப்படிச் செய்யுது ? என்று என் மீது கேலிக்கீதம் பாடுபவர்களுக்கு நான் ஏன் இப்படி எழுதுகிறேன் என்பதை இவர்கள் சற்றுத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்பதற்காகவுமேயாகும்.” என கீழ்நிலை வாழ்க்கையின் நிலைமையை கே.டானியல் ‘ என் கதை’ என்னும் நூலில் விவரித்துள்ளார்.

                கே. டானியல் சலவைத் தொழிலாளி, கள்ளுக் கொட்டில், கடல் தொழில், கூலித் தொழில், கால்நடை வளர்ப்பு, தீந்தை பூசுதல், குளிர்பான வியாபாரம், பழைய இரும்பு வியாபாரம், வெல்டிங் கடைசல், இயந்திரங்கள் பழுது பார்த்தல் முதலிய பல்வேறு தொழில்கள் செய்து தமது வாழ்க்கையை நடத்தியுள்ளார்.

                யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தில் குடிமக்கள் என்ற பிரிவினுள் கோவியர், நளவர், பள்ளர், பறையர், சாண்டார், சிவியார், அம்பட்டர், துரும்பர் முதலியோர் அடங்குவர். இக்குடிமக்கள் வெள்ளாளரின் விவசாய வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் அவர்களுக்கு ஊழியம் செய்யும் அடிநிலை மக்களாகவே நடத்தப்பட்டு வந்தனர். இக்குடிமக்களில் ஒரு பிரிவினரான கோவியரின் சமூக நிலை சற்று வித்தியாசமானதாகும். இவர்கள் உயர் சாதியினரின் வீட்டினுள் சென்று அவர்களைத் தொட்டுச் சேவகம் புரியும் சிறைக் குடிகளாவர். இவர்களைவிட எஞ்சியோருள் நளவர், பள்ளர், பறையர், அம்பட்டர், துரும்பர் என்னும் ஐந்து சாதியினரும் பஞ்சமர் என்னும் பெயரில் வீட்டுக்குப் புறம்பாக வைக்கப்படுகின்றனர். பஞ்சமர்களுக்கு சமூகத்தில் ஏனையவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளில் பல மறுக்கப்பட்டிருந்தன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை இப்பட்டியல் காட்டுகின்றது.

1. ஆண்கள் மேலங்கி அணியக் கூடாது.

2. ஆண்கள் கணுக்கால் வரைக்கும் வேட்டி கட்டக் கூடாது.

3. ஆண்கள் தோளில் துண்டு போடக்கூடாது .

4. பெண்கள் மேற்சட்டை போடக்கூடாது.

5. பெண்கள் தாவணி போடக் கூடாது.

6. சாலைகளிலும் பொது இடங்களிலும் கண்டபடி நடமாடக் கூடாது. அனுமதிக்கப்பட்ட பாதைகளில் நடமாடும் போது தமது வருகையை உணர்த்தும் வகையில் காவோலையை இழுத்துச் செல்லுதல் வேண்டும்.

7. பெண்கள் நகை அணியக் கூடாது.

8. திருமணத்தில் தாலி கட்டக் கூடாது.

9. உயர் சடங்குகளின் போது வெள்ளை கட்டக் கூடாது.

10. விசேட சடங்குகளின் போது வெள்ளை கட்டக் கூடாது.

11. பிரேதங்களை தகனம் செய்யாது புதைக்க வேண்டும்.

12. தாழ்த்தப்பட்ட மக்கள் கடல்மீன் சாப்பிடக் கூடாது. குளத்து மீன் தான் சாப்பிட வேண்டும்.

13. நன்மை தீமைகளின் போது வாத்தியங்கள் பயன்படுத்தக் கூடாது.

14. உயர் சாதியினரின் குளங்களைப் பயன்படுத்தக் கூடாது.

15. குடை பிடிக்கக் கூடாது.

16. பாதணிகள் அணியக் கூடாது.

17. கல்வி கற்க கூடாது.

18. உயர் சாதியினரின் தெய்வங்களைத் தமது கோயில்களில் பிரதிஷ்டை செய்யக் கூடாது.

19. உயர் சாதியினரின் கோவிலுக்குள் செல்லக் கூடாது.

20. தேனீர் சாலைகளுக்குள் போகக் கூடாது .

21. பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளக் கூடாது.

22. சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் பிரயாணம் செய்யக் கூடாது. அவற்றைச் செலுத்தவும் கூடாது.

23. பஸ், வண்டிகளின் ஆசனங்களில் உட்காரக் கூடாது.

24. பிற்காலத்தில் பாடசாலை அனுமதி கிடைத்த போதும், ஆசனங்களில் உட்காரக் கூடாது.

 ‘ஈழத்துத் தமிழ் நாவல்கள்’ என்னும் நூலில் யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் நிலவிய சாதிய அடக்குமுறைகளை டாக்டர்.ம. குருநாதன் பதிவு செய்துள்ளார்.

‘சுதந்திரன் ’ இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் கே. டானியலின் ‘அமரகாவியம் ’என்னும் சிறுகதை முதல் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமானார். ஈழநாடு, வீரகேசரி, சரஸ்வதி, தாமரை, மரகதம், மக்கள் இலக்கியம் ஆகிய இதழ்களில் கே.டானியல் சிறுகதைகள் எழுதியுள்ளார்.

‘டானியல் சிறுகதைகள்’, ‘உலகங்கள் வெல்லப்படுகின்றன’ முதலிய சிறுகதைத் தொகுப்புகளை படைத்து அளித்துள்ளார்.

கே.டானியலின் ‘திருநாள் ’ என்னும் சிறுகதை ஆண்டிற்கு ஓருமுறை வருகின்ற திருநாளைப் பணக்காரர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடிக் களிப்பதையும்- ஏழைகள் அதைப் பார்த்து ஏங்குவதையும் சித்தரிக்கிறது.

மேலும், ‘ தாளுண்டநீர் ’ என்னும் சிறுகதை தேர்தல் காலத்தில் நடைபெறும் முறை கேடுகளையும், பணக்கார வர்க்கம் தமது பணபலத்தால் ஏழைகளின் வாக்குகளை விலைக்கு வாங்குவதையும், அதற்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்றுபட்டு வருவதையும் எடுத்துக் காட்டுவதாகவுள்ளது.

‘தெய்வ பரம்பரை’ என்னும் சிறுகதை கோயிலின் பெயரால் ஏழைகளின் உழைப்பு சுரண்டப்படுவதைச் சித்தரிக்கிறது.

‘மானம் ’ என்னும் சிறுகதையில் யாழ்ப்பாணப் பட்டிணத்திலிருந்து தென்மேற்கே கடற்கரை எல்லைக் கோட்டைத் தொட்டபடி உள்ள சேரிப்புறமான திட்டியில் வாழும் ஏழைக் குடும்பங்களின் வாழ்வின் சோகங்களை எடுத்துக் காட்டுகிறது.

‘பூமரங்கள்’, ‘முருங்கையிலைக் கஞ்சி’, ‘மையக்குறி’, ‘சொக்கட்டான்’, ‘இருளின் கதிர்கள்’, ‘ சாநிழல்’ முதலிய குறுநாவல்களை கே. டானியல் படைத்து அளித்துள்ளார்.

கே. டானியலின், ‘ இருளின் கதிர் ’என்னும் குறுநாவல், சந்தர்ப்பவசத்தால் பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணின் கதையைச் சித்தரிக்கிறது. சாக்கடை போலான அவள் வாழ்வு. தன் வயிற்றுக்காக சுயம் கொன்று பிழைக்க வேண்டிய யதார்த்தநிலை அவள் வாழ்வு என்பதை பதிவு செய்துள்ளார்.

மகன் சிங்களப் பெண்ணை மணம் புரியத் துணிந்ததை ஏற்றுக் கொண்ட உயர்சாதித் தந்தை, அவன் தாழ்த்தப்பட்ட இனம் என்று கருதப்படும், ஒரு சமூகத்தின் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. சாதி வெறி அவ்வளவுக்கு மனித உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை ‘முருங்கையிலைக் கஞ்சி ’ என்னும் குறுநாவல் உணர்த்துகிறது.

வீட்டின் வெளிமுற்றத்தில் கல்வைத்து, அடுப்பு மூட்டி, கஞ்சி கொதிக்கிறபோது முருங்கை இலைகளை அதில் உருவிப் போட்டு உரிமைக் கஞ்சி காய்ச்சி, அதை குடிப்பது என்பது அன்றிலிருந்து அந்த மகன் அந்த வீட்டின் சாவுக்கும் இல்லாமல் வாழ்வுக்கும் இல்லாமல் போய்விடுவதை உணர்த்தும் செயலாகும், மேலும் தனது மகன் இறந்து விட்டான் என்று இறுதிக் கடன் கழிக்கும் நடவடிக்கையாகும் என்பதை மேற்கண்ட குறுநாவலில் கே. டானியல் பதிவு செய்துள்ளார்.

‘பஞ்சமர்’, ‘கோவிந்தன்’, ‘அடிமைகள்’, ‘போராளிகள் காத்திருக்கிறார்கள்’, ‘தண்ணீர்’, ‘நெடுந்தூரம்’, ‘கானல்’, ‘பஞ்சகோணங்கள்’ முதலிய நாவல்களை கே.டானியல் எழுதி அளித்துள்ளார்.

“புதிதாக கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அதன் உருவாக்கத்திற்குப் புதிதாக மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களும் மிகவும் உற்சாகமாக பொருள் பண சரீர உதவிகள் செய்கிறார்கள். ஆனால், அந்த சர்ச் கட்டப் பெற்று நடக்கிற உற்சவத்தின் போது, அந்த சர்ச்சிலேயே உயர்சாதியாருக்கு ஓரிடம், தாழ்த்தப்பட்டவருக்கு தனிப்பட்ட ஓரிடம் என்று இட ஒதுக்கீடு ஞானமுத்தரின் நல்லாசியுடன் நடக்கிறது. இப்படி பாரபட்சங்கள் அங்கு கூடத் தொடர்கிறது. இதே வேளை, தாழ்த்தப்பட்ட சாதியினர், தங்கள் வீட்டுப் பெண்களை இனி வேளாள வீடுகளுக்கு குடிமை வேலைக்காரிகளாக அனுப்புவதில்லை என்று முடிவெடுக்கின்றனர். இதனை அடுத்து, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உயர் சாதி வேளாளர்களின் நிலத்தில் வேலை தரப்படாது மறுக்கப்படுகின்றது.”

பரம்பரை பரம்பரையாக சைவ மதத்தையே தழுவி வந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர், இடைக்காலத்தில் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றியதன் மூலம் தங்கள் அவல வாழ்வை விடுவிக்க எத்தனித்தனர். இந்த எத்தனிப்பினால் ஏற்பட்ட பலாபலன்களைச் சித்தரிப்பது தான் இந்த ‘கானல்’ நாவல் என கே. டேனியல் குறிப்பிட்டுள்ளார்.

டானியலின் ‘ கானல் ’ என்னும் நாவலில் உயர்சாதியினரின் கொடுமைகளிலிருந்து விடுபடுவதற்காக கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய மக்கள் தேவாலயத்தில் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கப்பட்ட போது மதமாற்றம் என்பது வெறும் கானல் நீர் தான் என்பதை புலப்படுத்துகிறது.

பட்டினியால் வாழும் தாழ்த்தப்பட்ட புதிய கிறிஸ்தவர்கள் உயர்சாதி கிறிஸ்தவர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். மத மாற்றத்தின் ஊடாக அவர்கள் எதிர்பார்த்த உயரிய, உன்னத வாழ்வு வெறும் கானல் நீராக மாறிப் போகிறது.” என ‘கானல்’ நாவல் குறித்து வே மு. பொதியவெற்பன் அந்நாவலின் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

 ‘பஞ்சமர் ’ பிரக்ஞைபூர்வமாக சனநாயக உணர்வுகளுடன் பஞ்சம சாதியைச் சேர்ந்தவர்கள் இயக்க அடிப்படையில் ஒரு திட்டத்துடன் திரண்டெழுந்து சாதி இழிவுகளுக்கெதிராகப் போராடத் தொடங்கிய வரலாற்றைச் சித்தரிக்கும் நவீனமாகும்.” என விமர்சகர், பேராசிரியர் அ.மார்க்ஸ் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்

‘பஞ்சமர்’ நாவலில் “ யாழ்ப்பாணக் கிராமங்களில் சமூக அமைப்பு முறை இரண்டு தலைமுறை காலத்துக்கு முன்னர் எவ்வளவு குரூரமாக இருந்ததென்பதை டானியல் நிர்வாணமாகக் காட்டுகிறார். உயர்சாதி மக்களின் மேலாதிக்க மனோநிலையை சின்னச்சின்ன வார்த்தைகளிலும் நடத்தைகளிலும் பளீரென்று சித்திரமாக உணர்த்துகிறார்.” என பேராசிரியர் எஸ். சுந்திரமூர்த்தி கருத்துரைத்துள்ளார்.

இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில், நிலமில்லாத சொத்தில்லாத, உரிமைகள் இல்லாத, பெரும் படிப்பறிவில்லாத, இழப்பதற்கெதுவும் இல்லாதவர்களாகக் கணக்கெடுப்பின், அது பெரும்பாலும் இந்த மக்கள் கூட்டத்தினரையே சுட்டும். அதனால், நான் இவர்களுக்காக எழுதுவதென்பது வர்க்கத்துக்காகத்தான் எழுதுவதாகிறது. நான் வர்க்க சார்பற்ற இலக்கியக்காரன் என்று சொல்லப்படுவதெல்லாவற்றையும் நான் மறுக்கிறேன்.” என ‘பஞ்சகோணங்கள்’ நாவலின் முன்னுரையில் கே. டானியல் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சமர் நாவல்கள் 1950-1970 கால கட்ட சமுதாய வரலாற்றுப் போக்கைச் சித்தரிப்பதுடன், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முற்பட்ட காலப்பகுதி தொட்டு அமையும் சமுதாய வரலாற்றுப் போக்கையும் எடுத்துக் காட்டும் வகையில் பார்வை வீச்சுக் கொண்டு திகழ்வனவாகும். குறிப்பாக ‘ அடிமைகள் ’ நாவல் 1890-1956 காலகட்ட வரலாறாக அமைந்தது, ‘ கானல் ’, ‘தண்ணீர்’ ஆகிய நாவல்களின் கதை நிகழ்ச்சிகள் சென்ற நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலிருந்து தொடர்கின்றன. மூன்று நான்கு தலைமுறைகளின் வரலாறு இவற்றில் விரிகின்றன.

பஞ்சமர் வரிசை நாவல்கள் அனைத்திலும் பொதுவான கதையம்சத்தை இரு கூறுகளில் அடக்கிவிடலாம்.

(அ ) உயர்சாதியினர் எனப்படுவோர் தாழ்த்தப்பட்டோர் மீது நிகழ்த்தி வந்துள்ள பல்வேறு நிலைக்கொடுமைகளின் விவரணம்.

(ஆ) அவற்றுக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டோரும் மனித நேயம் கொண்டோரும் இணைந்து மேற்கொள்ளும் எழுச்சி சார்ந்த நடவடிக்கைகளின் விவரணம்.

யாழ்ப்பாணத்து வாழ்க்கை முறை, பேச்சு வழக்கு, சம்பிரதாயங்கள், உடை, நடை, பாவனை, வீடு வாசல் அமைப்பு, விவசாய வாழ்க்கை வளர்ச்சி, அரசியல் நடைமுறைகள், அவலங்கள், வீழ்ச்சிகள், எழுச்சிகள் ஆகியவற்றினை ‘பஞ்சமர் ’ நாவலில் டானியல் உள்ளடக்கியுள்ளார்.

‘அடிமைகள் ’ நாவல் உயர்சாதி வேளாளக் குடும்பம் ஒன்றின் வீழ்ச்சியை பேசுகிறது. நிலம், புலம், சொத்து, அதிகாரம், அடிமை, குடிமை என்பனவற்றுடன் ராச வாழ்வு நடத்திய அக்குடும்பம் கேளிக்கைகள், ஆடம்பரங்கள், சண்டித்தனங்கள் முதலியவற்றால் சீரழிந்து செல்வதை நான்கு தலைமுறை வரலாற்றினூடாக காட்டியமைகின்றது.

கொட்டாங்கச்சியில் காப்பி, சட்டியில் சோறு, ஆலய நுழைவு மறுப்பு போன்ற தீண்டாமை ஒதுக்கல்களுக்கு எதிராக சுன்னாகம் பகுதி தாழ்த்தப்பட்ட பஞ்சம மக்கள் போராடுகிற வரலாற்றை ‘பஞ்சகோணங்கள் ’ நாவல் சித்திரிக்கிறது என விமர்சகர் பேராசிரியர் அ. மார்க்ஸ். தமது ஆய்வில் பதிவுசெய்துள்ளார்.

முற்று முழுதாக கடல்புற மக்களின் வாழ்க்கையை அவர்களின் பேச்சு வழக்கிலே எழுதப்பட்ட நாவல். ‘ போராளிகள் காத்திருக்கின்றனர். ’

யாழ்ப்பாணக் குடாநாட்டில் குடிதண்ணீர்ப் பிரச்சனை மிக நீண்டகாலப் பிரச்சனை ஆகும். அதிலும் வடமாராட்சிப் பகுதிக்கு இது மிக மிக மோசமான பிரச்சனையாகும். ஒரு குடம் நீருக்காக மூன்று மைல்களுக்குப்பால் நடந்து சென்று தங்கள் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் மிக அதிகம். பல தலைமுறைகளாக இந்தத் துர்பாக்கிய நிலை இருந்து வருகிறது. இன்றுங்கூட அப்படியேதான் இருக்கிறது. உயர் சாதியினர் வாழும் பகுதியில் உள்ள கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீர் எடுத்ததற்காக, அக்கிணற்றில் நஞ்சைக் கலந்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்தை அறிந்து அந்த இடத்திற்கு நேராகப் போயிருந்த போது அந்த மக்கள் பட்ட அவதியையும், ஆத்திரத்தையும், வேதனையையும் கண்ட போது எனக்கு கண்ணீர் வந்தது. இப்படியான வாழ்வும் ஒரு வாழ்வா ? என்று நினைத்து ‘ தண்ணீரை ’ எழுத ஆரம்பித்தேன்.”

“ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்திலிருந்து பஞ்சம மக்கள் தண்ணீருக்காக பட்டகஷ்டங்கள், வேதனைகள், மனக்கொதிப்புகள், போராட்டங்கள், ஏனைய நடவடிக்கைகள் ஆகியவற்றினை ‘ தண்ணீரு’க்குள் கொண்டு வந்துள்ளேன்.” என ‘தண்ணீர் ’ நாவலின் முன்னுரையில் கே. டானியல் நாவல் பிறந்த அடிப்படையை பதிவு செய்துள்ளார்.

‘தண்ணீர்’ நாவலின் மதிப்புரையில் ஜப்பான் மானிடவியல் பேராசிரியர் யசுமச செக்கினை “ மானிடவியல் ரீதியிலே டானியலுடைய நாவல்கள் யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தினை விவரணஞ் செய்யும் ஒழுங்கான இனச்சரிதைகள் (டிசவாடிபசயயீhநைள) எனக் கூறுவதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை. யாழ்ப்பாணத்து மரபுவழிப் பண்பாட்டின் அடிச்சுவடுகளைக் கண்டு கொள்வதற்கான பல முக்கியமான தகவல்கள் அவருடைய நாவல்களிலே காணப்படுகின்றன. உதாரணமாக திருமணம், இறப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் கிரியைகள், நடைமுறைகள் ஆகியவற்றைச் சரியாக இவர் அவதானித்துக் கூறியவை பலவற்றால் நான் பெரும் பயன் அடைந்துள்ளேன். இவற்றின் மூலமாக உறவு முறை பற்றியும், சாதிகளுக்கிடையேயுள்ள உறவுகள் பற்றியும் நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. அத்துடன் கிராமவாசிகளின் நாளாந்தர வாழ்க்கையின் நடத்தை, பேச்சு ஆகியவற்றின் அவருடைய விவரணம் எம்முடைய ஆய்வுக்குப் பெரிதும் உதவுகின்றது.” என்று பதிவு செய்துள்ளார்.

“அடிமைத்தனங்களை நிலைத்திருக்க வைத்துள்ள நிலமில்லாக் கொடுமையை நீக்க, எமது மக்களுக்கு நிலங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும். நிலமற்ற விவசாயிகளுக்கு நலன் பயக்கும் விதத்தில் நெற்காணிச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். குடியிருப்பு நிலங்களிலிருந்து எமது மக்களை வெளியேற்ற தடைவிதிக்க சட்டமியற்ற வேண்டும். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இயந்திர ரீதியான தொழிற்சாலைகள் ஏற்படுத்திட சோசலிச நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட வேண்டும். இளம் குழந்தைகளின் மனதில் சாதி, மத, இன பாகுபடுகளைக் கொண்ட பாட புத்தகங்களை நீக்கிட வேண்டும். மேலும், பட்டிணங்கள் உட்பட, பட்டிதொட்டிகள் தோறும் சாதி ஒழிப்புச் சட்டம் அமுலாக்கப்பட வேண்டும். சாதி ஒழிப்புச் சட்டத்திற்கு பணியாத ஸ்தல ஸ்தாபனங்களுக்கு எமது மக்கள் வரி செலுத்துவதை நிறுத்திட வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தி போராட வேண்டுமென 1962 ஆம் ஆண்டிலேயே ‘அடிமை விலங்கறுப்போம் ’ என்னும் நூலில் பஞ்சம மக்களுக்கும், இலங்கை அரசுக்கும் வேண்டுகோள் விடுத்தார் கே . டானியல்.

‘கே. டானியலின் கடிதங்கள்’ என்னும் தொகுப்பு நூலை பேராசிரியர். அ. மார்க்ஸ் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்நூலில் 1982-1986 கால கட்டத்தில் பேராசிரியர் அ. மார்க்சுக்கும், அவரது தோழர்களுக்கும் டானியல் எழுதிய கடிதங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், ‘ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் பயணத்தடங்கள்’ என இந்நூல் மதிப்பிடப்படுகிறது.

‘சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை ’ அமுல்படுத்தக்கோரி 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்வலத்தை தலைமையேற்று நடத்தினார். அந்த ஊர்வலத்தினர் மீது காவல்துறையினர் நடத்திய குண்டாந்தடிகளின் தாக்குதலை எதிர் கொண்டு வெற்றிகரமாக ஊர்வலத்தை நடத்தினார். மாவிட்டபுரம் ஆலயம் பிரவேசப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பஞ்சமருக்காக குரலெழுப்பியதற்காக தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இலங்கையில் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனதா விமுக்தி பெரமுனா (துஏஞ) கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமி கோவில் நுழைவுப் போராட்டம் 14.04.1968 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போராட்டத்தில் டானியல் கலந்து கொண்டார். டானியல் தமது வாழ்நாளில் 11 மாதங்கள் சிறையில் கழித்தார்.

டானியல் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் அமைப்பாளராக 1966 ஆம் ஆண்டு செயற்பட்டார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆலயப்பிரவேசப் போராட்டம், தேனீர்க் கடைப் போராட்டம் முதலியவற்றில் முன்னின்று செயற்பட்டார். யாழ்ப்பாணத்தில் 1979 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் மாநாட்டடை மிகவும் எழுச்சியுடன் நடத்தினார்.

டானியல் எழுதிய ‘பஞ்சமர்’ நாவல் 1973 ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. மேலும், ‘உலகங்கள் வெல்லப்படுகின்றன ’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்டது.

டானியலின் ‘தண்ணீர் ’ நாவலுக்கு 1986 ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. ஆனால், அப்பரிசை பெறுவதற்கு அவர் உயிரோடு இருக்கவில்லை.

டானியலின் படைப்புகள் சிங்களம், ஜப்பான் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.‘சொல் அகராதிக்கு’ டானியல் படைப்புகளிலிருந்து சொல் சேகரிக்கப்படுகிறது.

டானியலின் படைப்புகள் உயர்கல்விக்கான பாடநூலாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் இடம் பெற்றுள்ளது. டானியலின் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு ஜப்பான் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்கு வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் 1982 ஆம் ஆண்டு ‘பஞ்சமர் ’ நாவல் வெளியீட்டு விழாவில் டானியல் கலந்து கொண்டார். நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்கு 1981 ஆம் ஆண்டு சென்று, 44 விவசாயக் கூலி, ஒடுக்கப்பட்ட பெண்கள் என உயிரோடு எரிக்கப்பட்டவர்களுக்கு எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்தில் வீர அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள மக்களிடம் உரையாடல் நிகழ்த்தினார். சென்னை, பாண்டிச்சேரி, கும்பகோணம் முதலிய நகரங்களில் 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்த கொண்டு உரையாற்றினார்.

டானியல் 23.03.1986 அன்று உடல் நலக்குறைவால் தஞ்சையில் காமானார். அவரது உடல் செங்கோடி போர்த்தப்பட்டு முற்போக்கு, புரட்சிகர இடதுசாரி இயக்கத் தோழர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

அவரது உடல் மதநம்பிக்கையற்றவர்களைப் புதைக்கும் மயானத்தில், பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் சமாதிக்கு முன்பாக தஞ்சையில் புதைக்கப்பட்டது. அவர் புதைக்கப்பட்ட இடத்தில் கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.

“இளமைக்காலம் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேசக் கிளையின் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்புச் செய்தவர் டானியல். அறுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட வெகுசன இயக்க எழுச்சிக்குத் தலைமை கொடுத்தவர்களில் ஒருவர். அவரது இழப்பு இந்த நாட்டின் இலக்கியத் துறைக்குப் பேரிழப்பு. அவர் துணிவு மிக்கப் போராளி. நேர்மைமிக்க தோழர். நான் நல்ல தோழனை, அன்பு நண்பனை இழந்து விட்டேன்.” என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோ) பொதுச் செயலாளர் நா. சண்முகநாதன் தமது இரங்கல் செய்தியில் பதிவு செய்துள்ளார்.

“எழுத்தாளர் கே. டானியல் துடிக்கும் இளமைப் பருவமான 16 வயதிலேயே பொது வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்டார். யாழ்ப்பாண மண்ணுடன் இரண்டறக் கலந்திருந்த சாதிவெறித் தாக்குதலுக்கு இலக்காகி சாதி, அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும்பி, அந்தப் போராட்டங்களில் எல்லாம் முன்னணிப் போராளியாக முகங்கொடுத்துள்ளார்.” என மலையக இலக்கியப் படைப்பாளி அந்தனி ஜீவா புகழ்ந்துரைத்துள்ளார்.

“டானியல் வர்க்க சிந்தனையுடன் தமது இலக்கியப் பணியினை இறுதிக் காலம்வரை மிகச் சிறப்பாகச் செய்த வந்த ஒருவர். தமிழர் சமுதாயத்தில் வர்க்க அடிப்படையில் அடிநிலை மக்களாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் அடிமை விலங்குகளை அறுத்தெறியும் நோக்குடன் இலக்கியங்களைப் படைத்துக் கொண்டிருந்த ஒரு படைப்பாளி. டானியல் மற்ற எழுத்தாளர்கள் மறைத்த பல விடயங்களைத் தமது படைப்புக்கள் மூலம் வெளிக்கொண்டு வந்த ஒருவர். பொய்மையின்றி வாழ்வின் பல கோணங்களை இலக்கியங்களில் சித்தரித்து காட்டியவர்.”என ஈழத்து எழுத்தாளர் தெணியான் பதிவு செய்துள்ளார்.                         

யாழ்ப்பாணத்துத் தமிழர்களுடைய உள் நோக்குகள், சமூக உணர்வு, நடைமுறைகள், நம்பிக்கைகள், மரபுகள் ஆகியனவற்றுடன் நன்கு அவதானித்துத் தன்னுடைய நாவல்களிலே பேணியுள்ளமை அவரை ஒரு ‘பண்பாட்டு நாவலாசிரியன் ’என்று கூறுவதற்கு ஆதாரமாகின்றது.” என பேராசிரியர் . அ. சண்முகதாஸ், 1986 ஆம் ஆண்டு ஈழமுரசு வாரமலர் இதழில் பதிவிட்டுள்ளார்.

டானியலின் நாவல் தனித்துவம் வாய்ந்தவை. மக்களின் மொழியும் உள்ளடக்கமும் யாழ்ப்பாணத்துத் தமிழ் நடையும் அந்த மூடத்தனங்களை முறித்தெறிந்த தெளிவும் அவரது வெற்றிகளாய் உயர்ந்தன. நீண்ட தமிழ் மரபில் கலப்பற்ற நிஜத்தை உண்மைகளை அப்படியே மண் மணம் மாறாது, படைப்புகளாக்கியவர் டானியல். யாழ்ப்பாணப் பிரதேசம், அதன் தமிழ் பேசும் மக்கள், அங்குள்ள சாதி வெறி, அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், அவர்களின் பிரச்சனைகள், அவர்கள் பேசும் தமிழ், அதன் சங்கீத ஜாலம், அது மக்களின் வாழ்வோடு புரளும் தன்மை, அவர்களின் நம்பிக்கை, அவர்களின் அரசியல், அவர்களின் காலம் இப்படி எல்லாவற்றையும் அபூர்வமாகச் சித்திரிக்கின்ற நாவல் ‘பஞ்சமர் ’. இலக்கியத்தின் மிக உயர்ந்த அம்சம் அது எத்தனை தூரம் சத்தியத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதில் தான் அடங்கியிருக்கிறது என எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.

கே.டானியலின் சிறுகதைகளோ, நாவல்களோ, வெறும் கற்பனை நிகழ்வுகளையோ, கற்பனைப் பாத்திரங்களையோ, அமானுஷ்யப் பாத்திரங்களையோ கொண்டு எழுதப்பட்டவையல்ல. தாய் மண்ணில் வாழ்ந்த, வாழும் மண்ணின் மைந்தர்களின் இன்பம், துன்பம், அடக்குமுறை போன்ற வாழ்க்கைப் போராட்டங்களைச் சித்தரிப்பதாகவே அமைந்துள்ளன. இதனால் இவரது படைப்புக்கள் உயிர்த்துடிப்புள்ள மக்கள் இலக்கியமாக மட்டுமின்றி ஈழத்தமிழ் மக்களின் ஒரு காலகட்டத்தின் சமூக வரலாற்று ஆவணமாகவும் திகழும்.” என விமர்சகர் எஸ். சந்திரபோஸ் குறிப்பிட்டுள்ளார்.

“ஈழத்தமிழர் மத்தியில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பிறந்து வறுமையோடு தவழ்ந்து சமூகக் கொடுமைகளுக்கு முகங்கொடுத்து கடுமையாகப் போராடி ஒடுக்கப்பட்ட மக்களின் தளைகளை அறுத்தெறிந்து அவர்களைச் சக மனிதர்களுடன் சமானமாக நிலை நிறுத்துவதற்குத் தன் உடல் பொருள் ஆவி என அத்தனையும் அர்ப்பணித்துப் பணியாற்றி மறைந்தவர் டானியல்.” எனப் புகழ்ந்துரைத்துள்ளார் ஈழத்து எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன்.

“வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை அடைவதற்கான மனித இனத்தின் யுத்தத்தில் எடுத்தாளப்படும் ஆயுதங்களில் ஒன்றாக கலை இலக்கியங்களும் இருக்க வேண்டும்.” எனது கடைசி மூச்சுப் போகும்வரை எனது பேனாவுக்கு வலுவிருக்கும் வரை, நான் காண எண்ணும் சமூகநீதி அதிகாரப் பூர்வமாக பஞ்சப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வரை நான் இதைச் செய்து கொண்டே இருப்பேன். நலங்காத-உடல் வாடாத- நாட்டுப் புற மண்ணை மிதித்தும் அறியாத எந்த விமர்சனப் புலிக்குட்டிகளாலும் என்னைத் தடுத்து நிறுத்திவிட முடியாது.”

“இலக்கியக்காரர்கள், கலை இலக்கியங்களுக்கப்பால், சமூகத்தால் தோற்றுவிக்கப்படும் சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடாது அவைகளை இனங்கண்டு வேண்டியவைகளுக்கு வேண்டிய விதத்தில் உதவி ஒத்தாசை தந்து உற்சாகம் அளிப்பது தான். இதைச் செய்யத் தவறும் எந்த இலக்கியக்காரனும் தொடக்கத்திலிருந்து தனதுவாழ் நாள் கடைசிவரை கூறவும் திராணியற்ற ஒருவித முதுகெலும்பற்ற விமர்சனப் பூச்சியாகவே இருக்க முடியும். அவனால் மனித சமூகம் அடையப் போகும் பயன் எதுவுமே இருக்கப் போவதில்லை.” என இலக்கிய படைப்பாளர்களுக்கு கே. டானியல் அறைகூவல் விடுத்துள்ளார்.

பேச்சு, எழுத்து, செயல் இம்மூன்றையுமே சமூக நீதி, சமூக சமத்துவம், சுரண்டலற்ற ஆட்சிமுறை தம் தாயகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற அர்ப்பணிப்புடன் பயன்படுத்தியவர் கே. டானியல். தலித் இலக்கியம் உள்ளவரை கே.டானியல் பெயரும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

Pin It

                மலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும், இலக்கியக் கர்த்தாக்களையும் இலக்கிய உலகிற்கு அறிமுகப் படுத்தியவர். எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர், பதிப்பாளர், சிறுகதை ஆசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர் எனப்பன்முக ஆளுமைப் படைத்தவர் அந்தனி ஜீவா.

                இவர், கலையையும், இலக்கியத்தையும் வெறும் பொழுதுபோக்குக்காக அல்லாது, சமூக விழிப்புணர்வுக்கான ஊடகமாகக் கருதித் தமது பணியை மேற்கொண்டு வருபவர்.

                “கலை இலக்கியச் செயற்பாடுகள் எனக்களிப்பது ஊதியமல்ல, உயிர்” என்ற உயர்ந்த லட்சியத்தை மனதில் ஏற்றுச் செயல்படுபவர்.

                Antony Jeevaஅந்தனி ஜீவா கொழும்பு நகரில் 26.05.1944 அன்று செபஸ்டியான்-லட்சுமி அம்மாள் வாழ்விiணையருக்கு மகனாகப் பிறந்தார்.

                கொழும்பு சுவர்ண வீதியிலுள்ள தமிழ்ப் பாடசாலையிலும், பம்பலப்பெட்டி புனித மரியாள் கல்லூரியிலும் கல்வி பயின்றார். கொழும்பு நாவல திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் இதழியலில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.

                அந்தனி ஜீவா 1960 ஆம் ஆண்டு முதல் எழுத்துலகில் பிரவேசித்தார். சுதந்திரன், மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு, ஈழநாடு, சிந்தாமணி, சிரித்திரன், அமுதம், தேசபக்தன், நவமணி, தினகரன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். மேலும், கொழுந்து, குன்றின் குரல், ஜனசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

                'அன்னை இந்திரா' என்ற இவரது நூல், அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 31.10.1984 அன்று சுட்டுகொல்லப்பட்டதன் எதிரொலியாக தினகரன் இதழின் வாரமஞ்சரியில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

                இலங்கையில் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மலையக மக்கள் பட்ட அவலங்களிலிருந்து அவர்களை விடுவிக்கப் போர்க்குரல் எழுப்பிய முதல் தொழிற்சங்கத் தலைவர்  கோ. நடேசய்யர் அவர்களின் வாழ்வும் பணியும் குறித்து ‘காந்தி நடேசய்யர்' என்னும் நூலை 1990 ஆம் ஆண்டு மலையக வெளீயீட்டகம் மூலம் வெளியிட்டார்.

                இந்தியாவின் தென்கோடியிலிருந்து தமிழர்கள் தேயிலைத் தோட்ட வேலைக்காக இலங்கைக்குச் சென்ற பொழுது தங்களுடன் பாரம்பரியக் கலை வடிவங்ளையும், வாழ்மொழி இலக்கியங்களையும் கொண்டு சென்றனர். காலமாற்றத்தில் அந்த இலக்கிய வடிவங்களும் மாறி மலையக இலக்கியமாகப் பரிணமித்தது. மலையக இலக்கியத்தின் வரலாற்றை ‘மலையகமும் இலக்கியமும்' என்னும் தலைப்பில் நூலாக 1995 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலுக்கு 1996 ஆம் ஆண்டு தமிழ்த் தின விழாவில் அரச இலக்கிய விருது கிடைத்தது.

                ‘மலையகமும் இலக்கியமும்' என்னும் நூலில் மலையக இலக்கியத்தின் வரலாற்றுப் பின்னணி, வாய் மொழி இலக்கியம், மலையகமும் கவிதையும், மலையகமும் சிறுகதையும், மலையகமும் நாவல்களும், மலையகமும் கலைகளும் முதலிய தலைப்புகளில் மலையக இலக்கிய வரலாற்றை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

தேயிலைத் தோட்டத்தில் –உடல்

 தேய்ந்து தேய்ந்து துரும்பாகி மெலிந்திட

ஓய்வின்றி நாமுழைத்தோம் - மச்சான்

 நோய்கண்டு தானிளைத்தோம் -உடல்

 ஊறிச் சுரந்திடும் வேர்வைப்புனல் பாய்ச்சி

 ஓங்கும் பயிர் வளர்த்தோம் -வளம்

தாங்கும் உயிர் கொடுத்தோம் -வரும்

 சாவிலும் நாமிந்தத் தேயிலைக்கே- உரம்

 ஆகப் புதைந்திடுவோம் -பெரும்

தியாகம் புரிந்திடுவோம். ”  -கவிமணி எம். ஸி. எம். சுபைரின்.

                மேற்கண்ட பாடல் அந்தனி ஜீவா எழுதிய 'மலையகமும் இலக்கியமும்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. மலையக மக்களின் வாழ்க்கையை, துன்பதுயரங்களை, சோகங்களை, உழைப்புச் சுரண்டலை, அடக்குமுறைக் கொடுமைகளை, தியாகத்தை இப்பாடல் வரிகள் உலகிற்கு உணர்த்துகிறது.

                இலங்கை மலையக மக்களின் அவல வாழ்வினை உலகிற்கு எடுத்துக் காட்டியவரும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடியவருமான 'மலையக மக்கள் கவிமணி' என்று போற்றப்பட்டவருமான சி.வி.வேலுப்பிள்ளையின் வாழ்வும் பணியும் குறித்து, 'சி.வி. சில நினைவுகள்' என்னும் நூலை எழுதி 2002 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

                அறிஞர் ஏம்.எம்.ஏ.அசீஸ், அறிஞர் சித்திலெப்பை, அருள்வாக்கி அப்துல் காதிர், கோட்டாறு செய்குபாபா, கி. மு. நல்ல தம்பிப் பாவலர், பண்ணாமத்துக் கவிராயர், அப்துல் லத்தீப், கவிஞர் அல் அசுமத் போன்றோர் மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளை ஆய்வு செய்து, ‘மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு' என்னும் நூலை எழுதி 2002 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

                மலையகக் கவிதைகளின் வளர்ச்சி பற்றி கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக தாம் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'மலையகம் வளர்த்த கவிதை' என்னும் நூலை கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் வாயிலாக 2002 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

                கண்டி மாவட்டத் தமிழர்களின் அரசியல், பொருளாதாரம், சமூகம், சமயம், கலை, பண்பாடு முதலான பல்துறை அம்சங்களை வரலாற்று ரீதியில் ஆய்வு செய்து, 'கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்' என்னும் தொகுப்பு நூலை 2002 ஆம் ஆண்டு மத்திய மாகாண சாகித்திய அமைப்பு மூலம் வெளியிட்டார். அந்நூலில், கண்டி மாவட்டத் தமிழர்கள் சில வரலாற்றுப் பதிவுகள், கண்டிராசன் கதை, கண்டி மாவட்டத் தமிழர்களின் வாழ்வும் வரலாறும் வழிபாடும், கண்டித் தமிழர்களின் சமூக அசைவியக்கமும் பொருளாதாரப் பின்புலமும், கல்வி வாய்ப்புக்களும் கண்டி மாவட்டத் தமிழரும், கண்டி மாவட்டத்தில் இந்து மதம்: வரலாறும் வளர்ச்சியும், கண்டி மாவட்டத் தமிழர்களது அரசியல், நாட்டாரியலில் கண்டி, இந்திய வம்சாவளித் தமிழரின் வர்க்க அடுக்கமைவு மாற்றம், கண்டியில் தமிழ் இலக்கியம் -ஒரு கண்ணோட்டம் ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

                மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்து வரும் 12 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ‘குறிஞ்சி மலர்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

                மலையகத்தின் தேர்ந்த 21 பெண் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து ‘குறிஞ்சிக் குயில்கள்' என்னும் நூலினை 2002 ஆம் ஆண்டு உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு கொண்டு வந்தார்.

                'அம்மா' என்ற தலைப்பில் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து, சென்னை கலைஞன் பதிப்பகத்தின் மூலம் கொண்டு வந்தார்.

                மலையகத்தில் தமிழ் வளர்த்தோரும், கலை வளர்த்தோரும், மலையக மக்களிடம் உரத்த சிந்தனைகளை விதைத்தோரும், மலையக மக்களின் விடுதலைக்கு உழைத்தோரும் எனப் பன்னிருவர் பற்றிய தகவல்கள் அடங்கிய 'மலையக மாணிக்கங்கள்’ என்னும் நூலை 1998 ஆம் ஆண்டு கொழும்பு துரைவி வெளியீடாக கொண்டு வந்தார்.

                அந்நூலில், மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த முன்னோடிகளான கோ. நடேசய்யர், மீனாட்சி அம்மையார், பெரி. சுந்தரம், இராமானுஜம், ஜெ.எஸ். பெரோ, ஜார்ஜ் ஆர். மேத்தா, மலையக காந்தி ராஜலிங்கம், வி.கே. வெள்ளையன்,      சி.வி. வேலுப்பிள்ளை, ஏ. அஸீஸ், சோமசுந்தரம், அசோகா பி.டி. ராஜன் ஆகியோர் பற்றிய பதிவுகள் சிறப்பாக இடம் பெற்றுள்ளன.

                ’புதிய வார்ப்புகள்' என்ற வரிசையில் இளைய தலைமுறை எழுத்தாளர்களையும், ‘பெண் பிரம்மாக்கள்' என்ற தலைப்பில் பெண் படைப்பாளர்களையும் இதழ்களில் அறிமுகப்படுத்தியவர் அந்தனி ஜீவா.

                'முகமும் முகவரியும்' என்னும் தொகுப்பு நூலின் மூலம் 68 மலையக எழுத்தாளர்களின் விபரங்களை தொகுத்து வெளியிட்டார்.

                ‘திருந்திய அசோகன்' என்ற சிறுவர் நூல் 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

                அந்தனி ஜீவா 2003 ஆம் ஆண்டு, லண்டன், பாரீஸ் ஆகிய அய்ரோப்பிய நகரங்களுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டார். இவரது பயணக்கட்டுரை தினகரன் இதழில் தொடராக வெளியிடப்பட்டது. பின்னர் சென்னை மணிமேகலை பிரசுரத்தினால் ‘நெஞ்சில் பதிந்த அய்ரோப்பிய பயணம்' என்னும் நூலாக வெளியிடப்பட்டது.

                அந்தனி ஜீவா 2005 ஆம் ஆண்டு 'மலையகத் தொழிற் சங்க வரலாறு' என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலில் கோ. நடேசய்யர், டாக்டர் மணிலால், மீனாட்சி அம்மாள், ஏ. ஈ. குணசிங்க, கலாநிதி என்.எம். பெரேரா, என். செல்லையா, என்.பி. தர்மலிங்கம், வி.எஸ். ராஜா, என்.சிவசாமி, எஸ்.இராமநாதன், கலாநிதி விஜயகுமார்,   பி. எஸ்.வேலுசாமி, வி. ஆர். எம். வி. ஏ.லெட்சுமண செட்டியார், ஏ. அஸீஸ், எச்.எம். தேசாய், மலை நாட்டு காந்தி கே. இராஜலிங்கம், ஜி. ஆர், மேத்தா, எஸ். சோமசுந்தரம், சி.வி.வேலுப்பிள்ளை, வி.கே. வெள்ளையன், எஸ்.எம். சுப்பையா, கே.ஜி.எஸ். நாயர், ரொஸாரியோ பெர்னாண்டோ, எஸ். நடேசன், எஸ்.தொண்டமான், கலாநிதி கொல்வின், ஆர்,டி, சில்வா, ஓ.ஏ. ராமையா முதலியார், டியூடர் கீர்த்தி மெண்டிஸ், ஜே. ஆர். ஜெயவர்த்தனா, ரணில் விக்கிரமசிங்க, காமினி திசாநாயக்கா, ராஜாசெனிவிரத்தின, மொஹீதீன், எஸ். பெருமாள், சண்முகதாசன் ஆகிய மலையகத் தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் செயல்பாடுகள், பணிகள் குறித்து சுருக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

                மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன், தொழிலாளர் தேசிய சங்கம், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தோட்டத் தொழிலாளர் செங்கொடிச் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், பொதுச் சேவையாளர் சங்கம், ஐக்கிய இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், லங்கா சுதந்திர சேவையாளர் சங்கம், புதிய செங்கொடி சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, இலங்கை விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் முதலிய தொழிற்சங்கங்களின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள், போராட்டங்கள் முதலியவைகள் குறித்து சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

                'ஈழத்தில் தமிழ் நாடகம்' என்னும் நூலில் உலக நாடக மேடை, தமிழ் நாடக மேடை, நாட்டுக் கூத்து முதலிய தலைப்புகளில் நாடகங்களின் வளர்ச்சி மற்றும் நாட்டுக் கூத்தின் செழுமை, வளமை குறித்து பதிவு செய்துள்ளார். மேலும் ஈழத்தில் தமிழ் நாடக வளர்ச்சிக்கு பாடுபட்ட சி. வை.தாமோதரம் பிள்ளளையவர்களின் புதல்வரான வண.பிரான்சிஸ் கிங்ஸ்பரி, விபுலாந்த அடிகள், பேராசிரியர் க. கணபதிபிள்ளை, பேராசிரியர் சரத் சந்திரா, அ. ந, கந்தசாமி, பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி வைரமுத்து, நடிகவேல் லடீஸ் வீரமணி முதலியவர்களின் நாடகப் பணிகளையும், நாடகத்திற்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகளையும் பதிவு செய்துள்ளார்.

இவர்கள் வித்தியாசமானவர்கள் என்னும் நூலில், தனிநாயகம் அடிகளார், சி.வி. வேலுப்பிள்ளை, கலையரசு சொர்ணலிங்கம், பேராசிரியர் உவைஸ், அறிஞர் அ. ந. கந்தசாமி, மார்ட்டின் விக்ரமசிங்க, கே. டேனியல், பெரியார். பி.டி.ராஜன், சரத் முத்தெட்டுவேகம, வி. கே. நவஜோதி, கவிஞர் ஈழவாணன், வி.கே.வெள்ளையன், நாடக மேதை டி.கே. எஸ், கே.எஸ். சிவகுமாரன், பேராசிரியர்.மு. வ., எழுத்தார் வல்லிக்கண்ணன், டொமினிக் ஜீவா, எஸ். அகஸ்தியர் என 30 அறிஞர்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.

                அந்தனி ஜீவா எழுதிய நூல்கள் மற்றும் தொகுத்து பதிப்பித்த நூல்கள்:

                ஈழத்தில் தமிழ் நாடகம், காந்தி நடேசய்யர், குறிஞ்சிக் குயில்கள் ( கவிதைகள்)   ( தொகுப்பு நூல் ), குறும் பூக்கள் ( தொகப்பு நூல்), சுவாமி விபுலானந்தர், திருந்திய அசோகன் ( சிறுவர் நாவல்), நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம், பார்வையின் பதிவுகள், அன்னை இந்திரா, மலையகமும் இலக்கியமும், அமைதி கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது.

                கூhந ழடைட ஊடிரவேசல ஐn ளுசடையமேய கூயஅடை டுவைநசயவரசந, மலையக மாணிக்கங்கள், இவர்கள் வித்தியாசமானவர்கள், மலையக தொழிற்சங்க வரலாறு, மலையக கவிதை வளர்ச்சி, மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்கு, சி.வி.சில நினைவுகள், சிறகு விரிந்த காலம், அ.ந.க. ஒரு சகாப்தம் முதலிய நூல்களாகும்.

 ‘பார்வையின் பதிவுகள்’என்னும் நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள், பிரேமின் என்ற மேதை, அ.ந.க.அறிவுலக மேதை, காலத்தை வென்றவர் கலாநிதி கைலாசபதி, மலை நாட்டுக் காந்தி, கே.டேனியல் நினைவாக, பிரேம்ஜி என்ற ஞானதிரியன், தமிழன்பர் எஸ். எம். ஹனிபா, திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன், இலங்கையின் இலக்கிய இதழ்கள், அயலகத் தமிழறிஞர்கள், புலம் பெயர் இலக்கியம் உட்பட 40 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

                “ தொழிலாளர்கள் சாதரணமானவர்கள் அல்லர் ; அவர்கள் அக்கினியில் பூத்த பூக்கள்; நெருப்பின் மக்கள் ; நெருப்புச் சுவாலையை எதிர்த்து அக்கினிப் பிரவேசம் நடத்துபவர்கள். அவர்களின் உழைக்கும் கரங்களின் உறுதியையும் உரிமைப் போராட்டத்தினையும் முதலாளி வர்க்கம் உணரத்தான் போகிறது .. துடிக்கும் இரத்தம் பேசட்டும், துணிந்த நெஞ்சம் நிமிரட்டும் . உழைக்கும் வர்க்கம் சேரட்டும். ” –அந்தனி ஜீவா எழுதி இயக்கிய 'அக்கினிப் பூக்கள்' நாடகத்தில் பேசப்படும் வசனம்.

                இவர் ஈழத்து நாடக மேடையில் புதிய வீச்சுக்களையும், புதிய தரிசனங்களையும் கொண்ட நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.

                மலையகத்தில் 1980 களில் வீதி நாடகங்களை முதன் முதலில் ஆரம்பித்தவர் என்ற பெருமை அந்தனி ஜீவா அவர்களையேச் சேரும்.

                இவர் 1980 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்குச் சென்று வீதி நாடக முன்னோடியான பாதல் சர்கார் சென்னையில் நடத்திய பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்றார்.

                மக்களுடன் நேரடியானதும், நெருக்கமானதுமான தொடர்பினை ஏற்படுத்தும் சிறந்த கலை ஊடகமான தெரு நாடகங்கள் அந்தனி ஜீவாவின் முயற்சியால் மலையகத்தில் புத்துயில் பெற்றது.

                 இவரின் 'வீணை அழுகிறது' என்ற சமூக நாடகம் பெரிய இடத்து அரசியல் வாதிகளின் தோலை உரித்துக் காட்ட முனைந்ததால், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது.

                'அலைகள்' நாடகம் இலங்கை கலாச்சாரப் பேரவை 1978ஆம் ஆண்டு நடத்திய தேசிய நாடக விழாவில் இரு விருதுகளைப் பெற்றது.

                கொழும்பிலும், மலையகத்திலும் பல வீதி நாடகங்களை நடத்தியுள்ளார். இலங்கை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 1994 ஆம் ஆண்டு நடத்திய தமிழ் நாடக விழாவில் இவரது 'ஆராரோ ஆரிவரோ' என்ற நாடகம் விருது பெற்றது. மகாகவி பாரதி, ஆராரோ ஆரிவரோ, கவிதா, பறவைகள், வெளிச்சம், சாத்தான் வேதம் ஓதுகின்றது, ஒன்று எங்கள் ஜாதியே, அக்கினிப் பூக்கள், தீர்ப்பு, வீணை அழுகின்றது, முள்ளிள் ரோஜா, அலைகள், பறக்காத கழுகுகள் முதலிய நாடகங்கள் உட்பட 14 நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.

                'முள்ளில் ரோஜா' என்ற பெயரில் அந்தனி ஜீவா எழுதி இயக்கிய நாடகம் 1970 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்ட முதல் நாடகமாகும். இந்நாடகம் அந்தனி ஜீவாவை ஈழத்து தமிழ் நாடக உலகில் இனம் காட்டியது.

                ‘அக்கினிப் பூக்கள்' நாடக நூல் 1999 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலுக்குரிய இலங்கை அரசின் சாகித்திய விருதினைப் பெற்றது.

                மீனவர் பிரச்சனைகளைக் கருவாகக் கொண்ட 'அலைகள்' என்ற நாடகம் இலங்கை கலாச்சாரப் பேரவையின் 1978 ஆம் ஆண்டுக்குரிய தேசிய நாடக விழாவில் இரண்டாவது பரிசினைப் பெற்றது.

                அந்தனி ஜீவா, மலடு ( ஈழநாடு ), விதி ( சிந்தாமணி), புரூட் சலட் ( சிரித்திரன்), தவறுகள் (அமுதம்), நினைவுகள் ( தேசபக்தன்) ஆகிய சிறுகதைகளை எழுதியுள்ளார்.

                கண்டியில் 1980 களில் 'மலையக கலை இலக்கியப் பேரவை' என்ற அமைப்பை நிறுவினார்.

கண்டியில் 1980 களில் 'மலையக கலை இலக்கியப் பேரவை' என்ற அமைப்பை நிறுவினார். அந்தனி ஜீவா அந்த அமைப்பின் செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். இவர் 'மலையக வெளியீட்டகம்' என்ற நூல் வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

மலையக கலை இலக்கியப் பேரவையின் சார்பாக, சி.வி.வேலுப்பிள்ளையின் இலக்கிய, தொழிற்சங்க பணிகளைப் பாராட்டி பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி அவர்களால் 'மக்கள் கவிமணி' என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

மலையக இலக்கியப் பேரவையின் மூலம் இலக்கிய கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், நூல் வெளியீடுகள் முதலிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டது.

                தமிழ் நாட்டில் திருப்பூர் நகரில் 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் அந்தனி ஜீவா கலந்து கொண்டார். அம்மாநாட்டில்   'ஈழத்தில் தமிழ் நாடகம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையில், உலக நாடகப் பின்னணியில் தமிழ் நாடகத்தின் படிமுறை வளர்ச்சி குறித்தும், நாடக வளர்ச்சியிலும், கூத்து ஆராய்ச்சியிலும் ஈழத்தவர்களின் பங்கு குறித்தும் விரிவாகப் பதிவு செய்தார். அவரது உரை நூலாக சிவகங்கை அகரம் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது.

அந்தனி ஜீவா கண்டி, கொட்டகலை, நுவரெலியா முதலிய இடங்களில் வீதி நாடக பயிற்சி பட்டறைகள் நடத்தினார். மேலும், ‘வெளிச்சம்' என்ற வீதி நாடகக் குழுவொன்றை உருவாக்கி அதன் பொறுப்பாளராகவும் செயற்பட்டார்.

                தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வருகை புரிந்த வீதி நாடகக் கலைஞரான பிரளயன், மட்டக்களப்பு பல்கலைக் கழகத்திற்கு தமிழகத்திலிருந்து வருகை தரு பேராசிரியராகப் பணி புரிந்த பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் ஆகியோர் ‘வெளிச்சம்' வீதி நாடகக் குழுவினருக்கு பயிற்சி அளித்தனர். பேராசிரியர் கே.ஏ. குணசேகரன், ‘மக்கள் கவிஞர்’ இன்குலாப்பின் ‘நாங்க மனுசங்கடா' பாடலை மலையக மக்கள் பத்தியில் பாடி உணர்வைத் தட்டி எழுப்பினார்.

                இலங்கை அரசின் கலாச்சார அமைச்கத்தின் கீழ் இயங்கிய கலைக்கழக நாடகக்குழுவில் அங்கம் வகித்து நாடக வளர்ச்சிக்காக பாடுபட்டார். மேலும், மலையகத்தின் பாரம்பரிய கலைகளை மேம்படுத்தும் குழுவிலும் இடம் பெற்று செயற்பட்டார். அந்தக் குழு மூலம் மலையகத்தின் பாரம்பரிய கலைகளை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஈடுபட்டார். தோட்டங்களில் முடங்கிப்போன மரபுக்கலைஞர்களை தேடிப்பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.                                      

                1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ‘கொழுந்து'இலக்கிய இதழ் வெளிவந்தது. அதன் ஆசிரியராக அந்தனி ஜீவா செயற்பட்டார். 'குன்றின் குரல்' என்ற இதழின் ஆசிரியராகவும் அந்தனி ஜீவா செயற்பட்டார்.

                சென்னைப் பல்கலைக் கழகத்தில் 2005 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய சமூகவியாளர்களின் மானிடவியல் பிரிவு நடத்திய கருத்தரங்கில் மலையகம் குறித்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து அந்தனி ஜீவா உரை நிகழ்த்தினார். மேலும், திருச்சி, மதுரை நகரங்களில் மலையக இலக்கியம் குறித்து கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியுள்ளார்.

                “மலையகத்தின் விழிப்புணர்வு, அரசியல் மாற்றம், கலாச்சாரச் செழுமை என்பனவற்றை வெளிப்படுத்திய பெருமக்களை உரியமுறையில் எல்லோரும் அறிய வேண்டுமென்பதில் அந்தனி ஜீவா மிகுந்த ஆர்வம் கொண்டு இயங்குபவர். அவர் எழுதியிருக்கும் நூல்கள், நடத்திவரும் சஞ்சிகைகள் என்பன இந்தக் குரலையே அடிநாதமாகக் கொண்டவை. மேலும் அந்தனி ஜீவா ஒரு கலகக்கார கலைஞன்” என ஈழத்து நாவலாசிரியர் செ. யோகநாதன் புதழ்ந்துரைத்துள்ளார்.

                “படைப்பின் இலட்சியம் சமுதாயத்தின் தேவையாக இருக்க வேண்டும். அதில் மண்ணின் மணம் இருக்க வேண்டும். கலைஞன் மானுடம் படைக்கும் ஆத்மாவின் ராகமாகத் திகழ வேண்டும்” என்ற தமது கூற்றின் வழி இன்றும் இலக்கியம் படைத்து வரும் அந்தனி ஜீவாவின் புகழ் ஈழத்து மலையக இலக்கிய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

Pin It

  "முற்போக்கு இலக்கியம் வாழ்வின் அடிநிலையிலிருக்கிற ஓடுக்கப்பட்ட மக்களையும், அவர்களைவிட சற்றுமேலே,  ஆனால் அடிமைத் தனங்களில் உழல்கிற மானிடர்களையும் சித்தரிப்பதும், அவர்களை கைப்பிடித்து முன்னே கூட்டிச் செல்வதுமாகவும் உள்ளதை இலக்காகக் கொண்டவை. அடிப்படையில் இந்த எழுத்தின் வேர்கள் சேற்றிலும், சகதியிலும், வியர்வையிலும், இரத்தத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான சொல்லிலும், செயலிலும் ஆழப்பதிந்திருக்கின்றன. வீரார்ந்த மூச்சோடு எதிர்க்குரல் கொடுக்கின்றன. இவை இந்த மக்களின் உயிர்த்துடிப்புள்ள மொழிiயை அப்படியே சொல்கின்றன. இந்த மக்களின் மொழி நீண்ட நெடுங்காலமாக இந்த மக்களால் பேசப்பட்டு, வளமைப்படுத்தப்பட்டு, செம்மையுற்று செழுமைப்படுத்தப்பட்டது. "என 'சுபமங்களா' இதழில் வெளிவந்த நேர்காணலில் முற்போக்கு இலக்கியம் குறித்து செ.யோகநாதன் தெளிவுபடுத்தியுள்ளார்.

 "எனது கதைகளில் நான் சில பிரச்சாரங்களை முன்வைப்பதாக ஒரு விமர்சனம் கூறப்படுகிறது. இதை சிறியதொரு திருத்தத்தோடு நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். எனது கதைகளை நான் பிரச்சாரத்துக்காகவே எழுதுகிறேன் என்பது தான் அது. எந்த எழுத்தும் ஏதோ ஒன்றைப் பிரச்சாரம் செய்கிறது என்பதுதான் உண்மை. காலங்காலமாய் பின்பற்றப்பட்டுவரும் கருத்துக்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் என்பன ஒரு சாரரின் நலன் கருதியே அமைந்திருக்கின்றன. இன்னொரு சாரரின் மேல் ஏறி உட்கார்ந்து அதை நியாயப்படுத்தியே வாழ்கின்றவர்கள் தங்களுக்கெதிரான கருத்துக்கள் அரும்புகிற போது-அந்தக் கருத்தினை சுமந்து வடிவங்கள் யாவற்றிற்கும் 'பிரச்சாரம்' என்ற முத்திரை குத்தி, அதை மழுங்கடிக்க முயல்கிறார்கள். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரிய வரலாறல்ல ; உலக வரலாற்றின் உட்கூறும் இதுதான். குறிப்பாக இலக்கியத்துறை வரலாற்றின் பொதுப்பண்புதான் இது. "

 SeYoganathan"அரசியலென்ற கட்டுமானத்தின் மேலேதான் யாவும் அமைகின்றன. நாறிப் போய், இற்று விழுந்து கொண்டிருக்கின்ற சமூகத்தில் வலிமை வாய்ந்த சிற்றுளியாக இந்தக் கலை இலக்கியமென்ற மறைமுக அரசியல் இயங்க முடியும். அத்தகைய சிற்றுளிகளாக இன்றைய இலக்கியப் படைப்பாளி விளங்குவான். அவன் நாளைய நிர்மாணத்தை செதுக்குவதோடு இன்றைய நிர்வாண கலாச்சாரத்தை அடித்து துவைத்து அழிந்து போக வைப்பான். அத்தகைய படைப்பாளி 'தனித்திருந்து வாழும் தவமணியாக இராது' மக்கள் கூட்டத்தோடு நின்று அவர்களின் குரலில் கலந்து ஒலிப்பான்."

 "நான் சகலவித ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து மானுட மேன்மையை நிலை நிறுத்த விரும்புகிறேன். இதை என் எழுத்தாக்குகிறேன். எழுத்து என் அரசியல். என் ஆயுதம், என் சுவாசம்." என 'காற்றின் குழந்தைகள்' என்ற சிறுவர்க்கான நூலில் தமது இலக்கியக் கொள்கையை,  படைப்பாளியின் பணியை எடுத்துரைத்துள்ளார்.

 செ.யோகநாதன் யாழ்ப்பாணத்தின் அருகில் உள்ள சின்னஞ்சிறிய கடலோரக் கிராமமான கொழும்புத்துறையில் 01.10.1941 அன்று பிறந்தார். இவரது தந்தையின் பெயர் செல்லையா. இவரது தந்தை ஒரு நாடகப்பிரியர். இவரது பதினொன்றாவது வயதில் தாய் காலமாகிவிட்டார்.

 செ. யோகநாதன் சிறுவனாக இருந்த காலத்தில் 'ஈழகேசரி' இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். இதற்கான பரிசாக இவருக்கு வெ. சாமிநாதசர்மா எழுதிய 'காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாறு' என்னும் நூல் வழங்கப்பட்டது. காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றை கற்றுக் கொண்ட யோகநாதன், இளமையிலேயே மார்க்சியத்தின்பால் நாட்டம் கொண்டார்.

 பள்ளி மாணவனாக இருந்த போதே இவரது 'மணக்கோலம்' என்னும் முதல் சிறுகதை 'கலைச்செல்வி' இதழில் 1962 ஆம் ஆண்டு வெளியானது.

 தமது பள்ளிக் கல்வி முடிந்தவுடன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்றார். அங்கு மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளரான பேராசிரியர் கலாநிதி. க. கைலாசபதி தொடர்பு ஏற்பட்டது.

 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயிலும் போதே 'யோகநாதன் கதைகள்' என்னும் சிறுகதைத் தொகுப்பு 1964 ஆம் ஆண்டு வெளியானது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயிலும் போது பல்கலைக் கழக வெளியீடாக வந்த கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள், யுகம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளில் செ. யோகநாதனின் சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன.

 இளமையில் தமிழரசுக் கட்சியின் இளைஞரணியான 'இளந்தமிழர் இயக்க’த்தில் சேர்ந்தார். 'செய் அல்லது செத்துமடி' என்பது அந்த இயக்கத்தின் இலட்சியம். இன உணர்வு, மொழி உணர்வு மிக்கவராகத் தமிழரசுக் கட்சியில் செயற்பட்டார்.

 இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பினால் மார்க்சிய சிந்தனையும்,  முற்போக்கு எழுத்தாளர்கள் அறிமுகமும் ஏற்பட்டது. அதன் வாயிலாக கம்யூனிச கோட்பாடுகளையும், முற்போக்கு எண்ணங்களையும் நெஞ்சத்தில் ஏற்று செயல்படத் தொடங்கினார்.

 தீண்டாமை ஒழிப்புக்கான போராட்டத்தில் 1966 ஆம் ஆண்டு கலந்து கொண்டார். ஆலயங்களில் அனைத்து மக்களுக்கும் வழிபடும் உரிமை, பொது குளத்தில் யாவரும் குளிக்கும் உரிமை முதலியவற்றை இலங்கை புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தியது. 'தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்' ஈழத்தமிழர்கள் மத்தியில் சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகளில், போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தது.

 பல்கலைக் கழக படிப்பு முடிந்தவுடன், கண்டியில் ஆசிரியராகவும், பின்னர் இலங்கை அரசு நடத்திய அரசு நிர்வாக அதிகாரிகளுக்கான தேர்வில் (Sri Lanka Administrative Service) தேர்ச்சி பெற்று அரசு உயர் நிர்வாக அதிகாரியாக முல்லைத் தீவு, பூநகரி முதலிய ஊர்களில் பணியாற்றினார். விவசாயிகள் நிறைந்த பிரதேசங்களில் பணியாற்றிய காலங்களில் விவசாயிகளின் வாழ்க்கைத் துயரங்களை நேரடியாகக் காணுகின்ற வாய்ப்பு கிட்டியது.

 யோகநாதன் கதைகள், கண்ணீர் விட்டோ வளர்த்தோம், தேடுதல், இத்தனையும் ஒரு கனவாக இருந்தால், அண்மையில் ஒரு நட்சத்திரம், அந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும், அவளுக்கு நிலவென்று பேர், கனவு மெய்ப்படும், ஒரு சொல், மாசறு பொன்னே, வீழ்வேனென்று நினைத்தாயோ?,  விநோதினி, இன்னும் இரண்டு நாட்கள், அன்னை வீடு, கண்ணில் தெரிகின்ற வானம், அசோகவனம், மூன்றாவது பெண்,  காற்றினில் ஏறி விண்ணையும் சாடலாம் என 18 சிறுகதைத் தொகுதிகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

 "இச்சிறுகதைத் தொகுப்பு,  ஈழத்தில் நடைபெறும் விடுதலைப் போரை மட்டுமின்றி, உலகம் முழுவதிலும், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் நடந்த,  நடைபெறும் - நடைபெறவிருக்கும் ஒடுக்கு முறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் எதிரான, தேசிய விடுதலைப் போராட்டங்களின் அவசியத்தையும்,  அனுகூலத்தையும் நமக்கு எடுத்து விளக்குவதாக அமைந்துள்ளது." என 'வீழ்வேனென்று நினைத்தாயோ?' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பதிவு செய்துள்ளார்.

 தமிழீழப் போராட்டச் சூழலில் இந்திய அமைதிப்படையினரின் நடவடிக்கைகளையும்,  இலங்கை இராணுவத்தினரின் அட்டூழியங்களையும், அரச பயங்கரவாதப் போக்குகளையும், தமிழ் மக்களது அகதி வாழ்வின் அவலங்களையும், போராளிகளின் தியாகங்களையும், இனவொடுக்கல் நடவடிக்கைகளையும், சாதிப்பிரச்சனைகளையும், பெண்கள் மீதான கொடுமைகள் மற்றும் சுரண்டலையும், குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது உழைப்புச் சுரண்டல்களையும் செ. யோகநாதன் தமது சிறுகதைகளின் உள்ளடக்கமாகக் கொண்டு படைத்துள்ளார்.

 'சின்ன மீன் பெரிய மீன்' என்னும் சிறுகதையில், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளின் அதிகார மமதையையும், ஊழியர் விரோத போக்கையும், ஊழியர்களை மரியாதைக் குறைவாக நடத்துவதையும், பழிவாங்குவதையும் மிகவும் அழகாகச் சித்தரித்து உள்ளார்.

 'ஆறுகள் முன்னோக்கி ஓடுகின்றன' என்னும் சிறுகதையில் ஏழ்மை, வறுமை நிலையில் வாடும் உயர்சாதி குடும்பத்திற்கு ஆதரவாகச் செயல்படும் கீழ்சாதி மக்கள் குறித்தும், பணம், சொத்து இல்லையென்றால் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், அந்த சாதி மக்கள் உதவுவது இல்லை. கீழ்சாதியில் பிறந்த ஏழைகள் தான் உதவி செய்வதுடன், ஆதரவாகவும் செயல்படுவார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறார். மேலும் வர்க்க ரீதியான ஒற்றுமை சமூகத்தில் நிலவுவதைச் சுட்டிகாட்டுகிறார்.

 'தாயாகி வந்தாள்' என்னும் சிறுகதையில்,  "என் தெருவில் ஒருவனைப் பிடித்துச் சென்றார்கள் பேசாதிருந்தேன். என் தெருவில் மூன்றாவது வீட்டில் ஒருவனைப் பிடித்துச் சென்றார்கள் பேசாதிருந்தேன். என் தெருவில் ஐந்தாவது வீட்டில், ஏழவாது வீட்டில் பிடித்துச் சென்றார்கள் பேசாதிருந்தேன். கடைசியில் என் வீட்டுக் கதவைத் தட்டி என்னை இழுத்துச் சென்றார்கள் ... " என செ. யோகநாதன் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் சமூகத்தில் நடக்கும் அடக்கு முறைகளையும்,  ஒடுக்குமுறைகளையும், சுரண்டலையும், உரிமை பறிப்புகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டும். சமூகத்திற்காக நாம், நமக்காக சமூகம் என்ற உயர்ந்த சிந்தனையை வலியுறுத்துகிறார்.

 'இன்னும் இரண்டு நாட்கள்' இச்சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் செ. யோகநாதன். "கலாசாரமும்,  வாழ்வும் சிரழிந்து மானுட மேன்மைகள் சிதைவுறுகிற காலம் இது. கட்டுமானமே, இவ்விதம் ஆன சமுதாய அமைப்பில் – அதன் சீரழிவோடு கை கோர்த்து செல்வமும் செல்வாக்கும் சேர்க்கின்ற கூச்சநாச்சமற்ற சீரழிவு இலக்கியவாதிகள், மானுட மேன்மை கருதுகிற எந்தக் கலாச்சார அணியையும் மூர்க்கமாக எதிர்த்து, விமர்சித்து நிற்பார்கள் என்பதில் அதிசயமென்ன ? கொச்சையாயும்,  பச்சையாயும் எழுதுகின்ற இவர்களுக்கு உண்மை சுடும். உயர்ந்த சொற்கள் கரிப்பாகும். நெறிகள் தீயாய் வருத்தி வதைக்கும். "

 "அதனாலேயே எம்மை இவர்கள் கலகக்காரராகக் காண்கிறார்கள். விமர்சிக்கிறார்கள். திட்டுகிறார்கள். கலகம் செய்தால் தவறென்று அகிம்சா பிரகடனம் செய்கிறார்கள். ஆனால்,  கலகம் செய்வது நியாயமானது; தேவையானது என்று நாம் அடித்துச் சொல்கிறோம். ஏனெனில் கலகம் அழகை விதைக்கும். நியாயத்தை நிலைநிறுத்தும். உண்மையைத் தலை நிமிர்த்தும். உலகிற்கு நிம்மதி தரும். இதனால் தான் நமது ஆசான் காரல் மார்க்ஸ் 'கலகம் செய்' என்று கூறினார்.

 'சோளகம்’ என்னும் கதை கொழும்புத்துறைக் கிராமத்திலுள்ள ஏழை மீனவக் குடும்பமொன்றின் வாழ்வின் சோகங்களை எடுத்துக் கூறுகின்றது.

 'தோழமை என்றொரு சொல்' என்ற கதை மீனவ சமுதாயத்தின் வறுமையையும், கடல் வளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பணக்காரர்களின் ஆதிக்கத்தையும், சுரண்டலையும், கொடுமையையும் தோலுரித்துக் காட்டுகிறது.

 காற்றும் சுழி மாறும், மலர்ந்த நெடு நிலா, ஒளி நமக்கு வேண்டும், அகதியின் முகம், காவியத்தின் மறுபக்கம், கனவுகள் ஆயிரம், காணி நிலம் வேண்டும், தலைவர்கள், கேட்டிருப்பாய் காற்றே, அரசு, சுந்தரியின் முகங்கள், ஆகாயத் தாமரை, சோளகம், மேலோர் வட்டம், இனிவரும் வசந்தங்கள்,  இன்னொரு திரைப்படம், கட்டுமரங்கள், சின்னஞ்சிறுமலர் மழையினில் நனைந்து,  சிறு பொறி பெருந் தீ,  இரவல் தாய்நாடு என 20 குறுநாவல்களை படைத்தளித்துள்ளார்.

இலங்கை அகதிகளின் துயர் நிறைந்த வாழ்வினை மனதை நெகிழ்த்தும் விதத்தில்- ஆனால் உணர்ச்சி வசப்படாது உண்மையாகச் சொல்லுகிறது 'அகதியின் முகம்' என்னும் குறுநாவல்.

"உலகத்தில் – ஒவ்வொரு நிமிடத்திலும் நோயாலும், வறுமையாலும் முப்பது குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உலகம் ஒவ்வொரு நிமிடமும் தன் இராணுவ நடவடிக்கைகளுக்காக பதின்மூன்று லட்சம் டாலரை செலவு செய்து கொண்டிருக்கிறது. "

"இந்திய அரசியலமைப்புச் சட்டம் 11 வயதுவரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயமாகக் கல்வி வழங்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது. குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவதை தண்டனைக்குரிய குற்றமாகக் குறிப்பிடுகிறது. ஆனால் நடைமுறை என்ன? தன் பாட்டியிடம் கதைகள் கேட்டு, பள்ளியில் படித்து,  தன் சகாக்களுடன் கனவுகளில் மிதக்க வேண்டிய குழந்தை – இருண்ட அறைகளிலும், இரசாயண நெடி வீசும் தொழிற்சாலைகளிலும், பொறுக்கிகளின் வழி நடத்தலிலும், வறுமையின் சீரழிவிலும் பொசுங்கிப் போவதை சாதாரண விஷயமாக நாம் எடுத்துக் கொள்ள முடியுமா ? "

"குழந்தைகளை இவர்கள் வேலைக்கு வலிந்து அழைப்பதற்கு அடிப்படையான காரணம் ஒன்று இருக்கிறது. குழந்தைகளின் விரல்கள் இயல்பிலேயே வெகு சுறுசுறுப்பானவை. நுட்பமாய் இயங்குபவை. களைப்பறியாதவை. நிறைய உழைக்கும் ஆற்றல் கொண்டவை. இளமையும், புத்துணர்வும் மிக்க இந்த விரல்களிடமிருந்து,  எவ்வளவு ஆற்றலை இந்தத் தொழிற்சாலைகள் உறிஞ்ச முடியுமோ அவ்வளவுக்கு உறிஞ்சிக் கொள்ளுகின்றன. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இவர்கள் ஒன்றுக்கும் பயனில்லாத வெறும் மனிதச் சக்கைகள் தான் .. "என 'இன்னொரு திரைப்படம்' என்ற குறுநாவலில் குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சனையை தோலுரித்துக் காட்டுறார்.

'மேலோர் வட்டம்' என்னும் குறுநாவலின் என்னுரையில்,  "உண்மையில் சொன்னால் இந்த ஆளும் வர்க்கம் - இந்த மேலோர்வட்டந்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ஆனால், வெளியிலோ எல்லாமே மக்களால் தீர்மானிக்கப்படுகிறார் போல தோற்றம். அது மாயத் தோற்றம். "என்பதைச் சுட்டிகாட்டியுள்ளார். இன்றைய அரசியல் நடைமுறையை தோலுரித்துக் காட்டியதுடன், மக்களாட்சி என்ற பெயரில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதை அம்பலப்படுத்தியுள்ளார்.

'காணி நிலம் வேண்டும்' என்னும் குறுநாவலில், "மலைநாட்டின் லயங்களிலே வாழ்ந்த ஒரு பகுதித் தொழிலாளர்கள் நிம்மதி தேடி, சுதந்திரமெனும் நிழல்நாடி தமிழ்ப்பிரதேசங்களுக்கு 'காணி நிலம் வேண்டி' இடம் பெயர்ந்தனர். தமிழ்ப் பிரதேசத்திற்கு வந்தும் காணி நிலம் வேண்டி தொடர்ந்து போராட வேண்டியவர்களாகின்றனர் மலை நாட்டு மக்கள். இலங்கையின் பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசங்களிலே தமது நிலப்பசி தீர்வதற்காக ஓயாது முனைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விரிவாகக் கூறியுள்ளார். மலைநாட்டு மக்களின் பிரச்சனையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. 'காணிநிலம் வேண்டும்' என்னும் குறு நாவல்.

மேலும், "இருக்கின்ற சமுதாயத்தினை மாற்றி புதிய சமுதாயம் ஒன்று உருவாவதன் மூலம் நான் என்னைச் சூழவுள்ள சூழலின் கொடுமைகளையெல்லாம் வேரோடும் வேரடி மண்ணோடும் நிர்மூலமாகும் என உணர்ந்திருப்பதாலேயே என் கதைகளின் அடித்தளங்களும் அத்தகையவனவாய் விசாலித்துள்ளன. "

 "நான் என்றுமே கதை எழுதுவதற்காகக் கதை எழுதுபவனல்ல. என்னைச் சுற்றி நிலவுகிற கொடுமைகளையெல்லாம் என்னைப் பாதிக்கின்றன. எங்கே மனிதன் நிம்மதியோடிருக்கின்றான்? அடித்தட்டு மக்கள் எல்லாவிதத்திலும் ஓடுக்கப்படுகிறார்கள். நமது சகோதரிகளின் மேலே சகல நிர்ப்பந்தங்களும் நுகத்தடிபூட்டி அவர்களின் குரலைக் கூட வெளியே வராதவாறு நசுக்கிக் கொண்டிருக்கின்றன. இளைஞர்களும், மாணவர்களும் நாறிப் போன அமைப்புகளால் தவறாக திசைதிருப்பப்பட்டு விரக்தியின் எல்லைக்கு இழுத்து விடப்பட்டிருக்கின்றனர். தேசிய இனங்களின் விடுதலை உணர்வை ஆயுதப்பலத்தாலும், அச்சுறுத்தல்களாலும் ஒடுக்கி அடக்கி விடலாமென நினைக்கின்றார்கள் பேரினவாதிகள். நான் இத்தகைய சூழலைக் கொண்டவனாயிருப்பதால்,  இவற்றிற்கு எதிராகப் போராடும் கடமைப்பாடுடையவனாகின்றேன். என்னுடைய எதிர்ப்பின் ஓர் ஆயுதமான இந்த எழுத்தினைக் கையாளுகின்றேன். "எனத் தமக்கு எழுத்து என்பது சமூக விடுதலைக்கான ஆயுதம் என்பதை 'காணி நிலம் வேண்டும்' என்னும் குறுநாவலின் முன்னுரையில் பிரகடனம் செய்துள்ளார்.

"தேசங்களும் தேசங்களும்,  சண்டையிட்டதன் பயனாக உருவாகிய அகதிகள், இன்றைக்கு ஒவ்வொரு தேசங்களின் உள்ளேயும் - அந்தத் தேசங்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளால் உருவாகி இன்னும் பல தேசங்களுக்குள் தலைவலி தரும் பிரச்சினையாய் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். கதியற்றவர்களான இந்த மக்கள் பூமிப்பந்தில் நுழையக் கூடிய இடத்திலெல்லாம் இன்று தமது வாழ்விடத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எப்படியிருந்த போதிலும் இது தாங்கவொண்ணாக் கொடுமை செறிந்த வாழ்க்கை. மானிடத்தை,  தன் அடையாளத்தை இழந்து தவிப்படையச் செய்ய வைக்கிற ஈவிரக்கமற்ற கொடூரம். அகதிகளாய் இன்னொரு தேசத்தில் துன்பக் கேணியில் வாழ்கிற மக்கள் தமது சமூக கலாச்சார வேர்களையெல்லாம் மெல்ல மெல்ல இழந்து போய்விடுகிறார்களென்பது வரலாறு துல்லியமாகவே பதிவு செய்து வைத்திருக்கின்ற கசப்பான செய்தி. ஒரு தலைமுறை காலமாக ஈழமக்கள் இவ்விதம் அகதிகளாய்ப் பூமிப்பந்தெங்கும் சிதறிப் பரவுகின்ற கொடுமை மனதை சுட்டெரிக்கிற தொடர்கதையாகிவிட்டது. "

என 'தஞ்சம் புகுந்தவர்கள்’ என்னும் நாவலின் முன்னுரையில் அகதிகளாக உலகம் முழுவதும் அவதிப்படும் ஈழத்தமிழர்களின் அவலமான நிலையை படம் பிடித்துக் காட்டுகிறார்.

கிட்டி, மீண்டு வந்த சோளகம்,  அசுரவித்து, நியாயப்படுத்தப்பட்ட கொலைகள், வனமலர், மிஸ் கமலா, தஞ்சம் புகுந்தவர்கள், தனியாக ஒருத்தி, ஜானகி, தனிமை கண்டதுண்டு, இரவினில் வரும் பகல், நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே, துன்பக் கேணியில் முதலிய நாவல்களை எழுதியுள்ளார்.

குழந்தைகள் கதைக் களஞ்சியம், சூரியனைத் தேடியவன், காற்றின் குழந்தைகள், சின்னஞ் சிறுகிளியே, தங்கத்தாமரை, நான்கு நண்பர்கள், எல்லோரும் நண்பர்கள், மந்திரமா ? தந்திரமா ?,  அற்புதக் கதைகள், அதிசியக் கதைகள், நான்கு கதைகள், அன்புமலர், வெண்புறா முதலிய சிறுவர்க்கான கதைத் தொகுதிகளை எழுதி வழங்கியுள்ளார்.

 ' இன்னும் கேட்கும் குரல்- விபுலானந்தர்’ என்னும் வாழ்க்கை வரலாற்று நூலையும், பெண்களும் சினிமாவும், சார்லிசாப்ளின் கலையும் வாழ்வும் ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

'மீண்டும் வந்த சோளகம்' நாவல் ஈழத்தில் பிற்படுத்தப்பட்ட பகுதியொன்றில் வாழும் மீனவ சமூகம் பற்றியது. அச்சமூகத்தில் நிலவும் பழமைப் பிடிப்பையும்,  அதற்கெதிரானப் புதிதாக முளைவிடும் முற்போக்கு சக்தியையும் இந்நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.

பரவைக் கடல் என அழைக்கப்படும் வளைகுடாக்கடல் பகுதியில் மீன் பிடித்து வாழும் மக்களின் வாழ்க்கையில் ஆண்டு தோறும் வரும் சோளகம் என்னும் கத்தரி வெயில் காலம் நிகழ்த்தும் கொடுமைகளை நாவல் விவரிக்கிறது. சோளகம் வரும்போது காலைப்போதில் கடலே வற்றி விடுகிறது. வழமையான மீன் பிடிநின்று விடுகிறது. காலங்காலமாக அம்மக்கள் பயன்படுத்தும் வள்ளங்களே ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிக்கத் தகுதியற்றவை. வள்ளங்களோ முதலாளிக்குச் சொந்தமானவை. கடலும் முதலாளிக்கே காணியானது. மீனவர்கள் உழைத்து உருவாக்கும் மீன் உற்பத்தியில் பெரும்பங்கு முதலாளிக்கும், கோவிலுக்கும் சென்றுவிடுவதால் நல்ல மீன்பிடி உள்ள மாதங்களிலேயே வயிற்றைக் கழுவக் கஷ்டப்படும் அம்மக்கள் சோளகத்தை 'இன்னும் வருவது கொலோ' என்று எதிர்நோக்கி நொந்து வாழ்கிறார்கள். காலங்காலமாக இருளில் தவிக்கும் இம்மக்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்காக கதாப்பாத்திரங்கள் விளங்குகிறது.

'தனியாக ஒருத்தி' என்னும் சமூக நாவலின் முன்னுரையில், “இளம் பெண்கள் கடைகளில் விற்பனைப் பெண்களாய் (Sales Girls), வெளிநாட்டுக்கு ஆடை, தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்கின்ற நிறுவனங்களில் தையல்காரர்களாய், பீடி சுற்றுபவர்களாய், அச்சுக் கோர்ப்பவர்களாய் இருப்பவர், தாங்கள் செய்கின்ற பணிகளுக்கு குறைந்த அளவு சம்பளம் பெறுபவர்கள். இந்தத் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என்பன இவர்களை சுரண்டுவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. உடல் ஆரோக்கியத்தையும் அரித்துத் தின்று அவர்களை சக்கைகளாய் வெளியே வீசி எறிகின்றன. சர்வதேச சந்தைகளில் நிறையப் பணத்தைப் பெற்றுக் கொடுக்கின்றன. இவர்கள் உருவாக்கும் ஆடைகள், அந்த ஆடைகளின் ஆயுட்காலத்தைவிட இவர்களின் ஆரோக்கிய ஆயுட்காலம் குறைவாக இருக்கின்றது."என்று கூறுகிறார். நமது சமூகத்தில் இளம் பெண்களின் உழைப்பு குறைந்த கூலிக்கு பன்னாட்டு கம்பெனிகளால், கார்ப்பரேட் நிறுவனங்களால் சுரண்டப்படுவதையும், அவர்களின் உடல்நலப் பாதிப்புகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

"உலக வரலாற்றில் இலக்கியம் பெருத்த மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. 'தாய்’, 'வீரம் விளைந்தது’ போன்ற மகோன்னதமான நூல்கள் பூமிப்பந்தின் பல்வேறு பகுதிகளிலும் இளந்தலைமுறையிடேயே உன்னதமான கருத்துக்களை விதைத்து, செயல் திறனுள்ளவர்களாக மாற்றியிருக்கிறது. இலக்கியத்திற்கு மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி எப்போதும் இருந்து வந்திருக்கிறது,  இருக்கும். அத்தோடு உலகில் முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகள் தோன்றவும், வளரவும் மாற்றத்திற்கான எதிர்க்குரல் கொடுக்கவும் நமக்கு முந்திய இலக்கியங்களே அடியெடுத்துக் கொடுத்திருக்கின்றன. இந்த வரலாற்று நிகழ்வே இலக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கருத்தை உறுதி செய்கிறதல்லவா ? "என நூல்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை பதிவு செய்துள்ளார்.

'வெள்ளிப் பாதரசம்' ஈழத்துச் சிறுகதைகள் முதல் தொகுதி. இத்தொகுதியில் இலங்கையர் கோன், சி. வைத்தியலிங்கம், கனகசெந்திநாதன், அழகு சுப்பிரமணியன், வரதர், வ.அ. இராசரத்தினம், அ. ந.கந்தசாமி, த ரபேல்,,  டொமினிக் ஜீவா, தாளையடி சபாரத்தினம், சிற்பி, எஸ்.பொன்னுத்துரை, யாழ்வாணன், ப. ஆப்டின், தெளிவத்தை ஜோசப், நீர்வை பொன்னையன், பத்மா சோமகாந்தன், செங்கை ஆழியான், சி. பன்னீர் செல்வம், க.சட்டநாதன்,  யோகா பாலச்சந்திரன், அ.யேசுராசா, லெ.முருகபூபதி, சந்திரா தியாகராசா, சாந்தன், அல் அசூமத், தாமரைச் செல்வி என 27 படைப்பாளிகளின் 37 சிறுகதைகள் இடம் பெற்று உள்ளன.

'ஒரு கூடைக் கொழுந்து' ஈழத்துச் சிறுகதைகள் இரண்டாவது தொகுதி, இத்தொகுதியில் சம்பந்தன், அ.செ. முருகானந்தன், பித்தன், செ. கணேசலிங்கன், நவம், சு.வே. இ. நாகராஜன், அருள் செல்வநாயகம், என்.எஸ். எம். ராமையா, அ.முத்துலிங்கம், நா சோமகாந்தன், நந்தி, என்.கே. ரகுநாதன், கே.வி. நடராஜன், பவானி ஆழ்வாப்பிள்ளை, பொ. தம்பிராசன், பாலுமகேந்திரா, அ.ஸ.அப்துல் ஸமது, அன்னலட்சுமி ராஜதுரை, மருதூர்க்கொத்தன், சாரல்நாடன், நெல்லை க. பேரன், ஜோர்ஜ் சந்திரசேகரன், நயீமா சித்தீக், மலரன்பன், திக்குவல்லை கமால், நீர் கொழும்பூர் முத்துலிங்கம், மு. சிவலிங்கம், குந்தவை, மொழிவரதன், மாத்தனை பெ. வடிவேலன், கோகிலா மகேந்திரன், கவிதா, மொயின் சமீம், கே. கோவிந்தராஜ், ரஞ்சகுமார், பௌஸியா யாஸீன், பாலரஞ்சனி சர்மா என 38 படைப்பாளிகளின் 53 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

மேலும், ஈழத்திலே மறந்துவிட்ட எழுத்துலகச் சிற்பிகளை அத்தொகுதிகளில் அறிமுகப்படுத்தி சிறப்பித்துள்ளார். உலகத் தமிழர்களுக்கு ஈழத்து இலக்கிய வளத்தினை முழுமையாக அறிவதற்கும், ஈழத்துச் சிறுகதைப் போக்கினையும், செழுமையையும் அறிந்து கொள்வதற்கும் இத்தொகுதிகள் உதவி செய்யும்.

 இச்சிறுகதை தொகுப்பாசிரியர்கள் : செ. யோகநாதன், அவரது மனைவி யோ.சுந்தரலட்சுமி ஆவர்.

 குங்குமம், தினமணிகதிர், தமிழரசு, அரும்பு, கண்ணன், செம்மலர், தாமரை, கணையாழி, ரத்னபாலா, அமுதசுரபி, புதிய பார்வை, ஆனந்தவிகடன், குமுதம், இதயம் பேசுகிறது, இந்தியா டுடே, அரங்கேற்றம், அலைகள், குங்குமச்சிமிழ், தளம், தாய், தாயகம், மனஓசை, விடுதலைக் குயில்கள், இனி, மங்கை, இளையமித்திரன் முதலிய தமிழக இதழ்களிலும்,  ஈழநாடு, குமரன், மல்லிகை, கலைச்செல்வி, ஈழகேசரி முதலிய ஈழத்திலிருந்து வெளிவந்த இதழ்களிலும் செ. யோகநாதன் சிறுகதைகள், குறுநாவல்கள், சிறுவர்க் கதைகள் எழுதியுள்ளார்.

 'சஞ்சயன்' என்ற பெயரில் பல மொழிபெயர்ப்புகள் செய்து உள்ளார். இதே பெயரில் 'முப்பது கோடி முகங்கள்' என்ற தொலைக்காட்சித் தொடருக்கு உரையாடல் எழுதியுள்ளார். மேலும், 'கண்ணாடி வீட்டினுள் இருந்து ஓருவன்' என்ற இவரது கதை மலையாள மொழியில் திரைப்படமாகியுள்ளது. பாலுமகேந்திரா, லெனின் ஆகிய திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து திரைத்துறையில் பணியாற்றி உள்ளார்.

 செ.யோகநாதனின் சில படைப்புகள் ஆங்கிலம், ருஷ்யன், ஜெர்மனி, சிங்களம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 பெங்களூரில் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி, தெலுங்கு,  மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய எட்டு மொழிகளின் குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் தமிழக அரசின் பிரதிநிதயாக கலந்து கொண்டு கட்டுரை அளித்தார்.

 செ. யோகநாதன் எழுதிய 'தேடுதல்' குறுநாவல் தமிழக அரசு இலங்கைக்கு கொண்டு செல்ல தடை விதித்தது.

 நாவல், குறுநாவல் சிறுகதை, குழந்தை இலக்கியம், நவசினிமா, வாழ்க்கை வரலாறு, கட்டுரை, மொழிபெயர்ப்பு முதலிய துறைகளில் பல நூல்களை எழுதி அளித்துள்ளார்.

 செ. யோகநாதன் 1980 ஆம் ஆண்டு தமிழகம் சென்று பதினாறு ஆண்டுகள் வாழ்ந்தார். தமிழகத்திலிருந்து பல முன்ணனி வார, மாத இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள், சிறுவர்க்கான கதைகள் எழுதினார். பல நூல்கள் எழுதி வெளியிட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பினார்.

 அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் 1962 ஆம் ஆண்டு நடத்திய போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் நடத்திய குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களும், பரிசுகளும் பெற்றுள்ளார்.

 இவரது 'இரவல் தாய்நாடு' என்னும் குறுநாவல் கணையாழி இதழின் பரிசைப் பெற்றது.

 'சுந்தரியின் முகங்கள்' (1985), 'அவளுக்கு நிலவு என்று பேர் ' (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் சிறந்த படைப்பிலக்கியத்திற்கான தமிழக அரசின் முதற்பரிசுகளைப் பெற்றுள்ளது.

 'காவியத்தின் மறுபக்கம்'- 'சிரித்திரன்' இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் முதற்பரிசுப் பெற்றது.

 கோவை லல்லி தேவசிகாமணி அறக்கட்டளையிடமிருந்து சிறந்த நாவலாசிரியருக்கான முதற்பரிசை பெற்றுள்ளார்.

 'ஒளி நமக்கு வேண்டும்' என்னும் இவரது குறுநாவலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு 1974 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மேலும் இந்நூல் யுனெஸ்கோ அமைப்பு மூலம் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 'அகதியின் முகம்' அக்னி – கணையாழி நடத்திய தி. ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டியில் முதற்பரிசு பெற்றது.

 'நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே' நாவல் 1993 ஆம் ஆண்டு சிறந்த நாவலாக 'இலக்கியச் சிந்தனை அமைப்பு' தேர்வு செய்து ரூ5000/- பரிசு வழங்கிச் சிறப்பித்தது.

 செ.யோகநாதன் எழுதியுள்ள 'தோழமை என்றொரு சொல்' கதையை யுனெஸ்கோ நிறுவனம் தேர்வு செய்து 13 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருதுகளை இரண்டு முறையும், பாரத ஸ்டேட் வங்கி விருது ஒரு முறையும், இலக்கிய சிந்தனை அமைப்பு விருதுகளை நான்கு முறையும், திருப்பூர் தமிழ்ச்சங்க விருது ஒரு முறையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய விருதையும் செ. யோகநாதன் பெற்றுள்ளார்.

 "எனக்கு அறிமுகமான நாட்களிலிருந்தே யோகநாதன் இலக்கியத்தின் சமுதாயத் தோற்றத்திலும் பணியிலும் அசைக்கவியலாத நம்பிக்கை உடையவராய் இருந்து வந்திருக்கிறார். முற்போக்கு அணியைச் சார்ந்து நின்றிருக்கிறார். அதன் தூசிப் படை வீரர்களில் ஒருவராகவும், சில வேளைகளில் சமர் புரிந்திருக்கிறார். கடந்த பத்தாண்டுக் காலத்தில் முற்போக்கு இலக்கியத்திற்கு யோகநாதனின் பங்களிப்பு விதந்துரைக்கத்தக்கது. சோசலிச தத்துவத்தைப் பொதுவாகவும், கலை இலக்கியத்திற்கு அதன் தொடர்பு, பொருத்தப்பாடு ஆகியவற்றைச் சிறப்பாகவும், கற்றுச் சிந்தித்து தெளிந்து அவற்றைத் தனதாக்கிக் கொண்டுள்ள விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். தத்துவத் தெளிவும் சிருஷ்டித் திறனும் கலையுணர்வும் ஒருங்கிணைந்து வைரம் பாய்ந்த எழுத்தாளர் அவர் . கவின்பெறு கருத்தே கலைக்கு உயிர் என்ற அறிவுத் தெளிவுடையவர் யோகநாதன். பொருளின் பொலிவிற்கு சொல்லாட்சியும்,  வடிவக்கட்டுறுதியும் வேண்டப்படுவன என்பதை விளங்கிக் கொண்டவர். யதார்த்த இலக்கிய நெறி குறிப்பிடத்தக்க அளவிற்கு யோகநாதனை வழி நடத்துவதினாலேயே இவரது ஆக்கங்கள் தனிச் சிறப்புடையனவாய் மிளர்கின்றன. யோகநாதன் நமக்குக் கிடைத்தயோகம். "என 'ஒளி நமக்கு வேண்டும்' குறுநாவல் தொகுப்பின் முன்னுரையில் மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர், பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி புகழ்ந்துரைத்துள்ளார்.

 "தமிழ்த்தேசிய உணர்வுக் காலகட்டத்தில் ஈழத்துச் சிறுகதை உலகிற்கு காத்திரமான பங்களிப்பாக அமைவன யோகநாதனின் கதைகளாகும்"என ஈழத்து இலக்கியப் படைப்பாளி செங்கை ஆழியான் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

 "சமுதாய விமர்சனமாகவும்,  சமுதாயத்தினை மாற்றியமைக்கும் ஆற்றல் பெற்ற ஆயுதமாகவும் படைப்பிலக்கியத்தை கருதுகிறவர் எழுத்தாளர் செ. யோகநாதன் "என்று திருமகள் நிலைய பதிப்பாளர் அ. இராமநாதன் புகழ்ந்துரைத்துள்ளார்.

 "இலங்கையின் சமுதாய வளர்ச்சியில் தமிழர்களின் சமுதாயப் பிரிவில் ஏற்படும் மாறுதல்களை யோகநாதன் கூர்மையாகக் காண்கிறார். இலக்கியத்தைச் சமுதாய ஆய்வான கலைப்படைப்பாகச் செய்து வழங்குகிற யோகநாதன் சிறுகதைகளுக்கு,  நிகழ் காலத்தை மாற்றுகிற ஆற்றலும், வருங்காலத்தை உருவாக்குகிற சக்தியும் உண்டு. " எனப் பேரா. நா. வானமாமலை பாரட்டியுள்ளார்.

 "சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, கலைவிமர்சனம், குழந்தை இலக்கியம் முதலிய பல இலக்கியப் பிரிவுகளிலும் தனது எழுத்தாற்றலையும், ஆழ்ந்த அனுபவ ஞானத்தையும் வெளிப்படுத்தி வருபவர் நண்பர் செ. யோகநாதன் ". என 'எழுத்து விவசாயி' வல்லிக் கண்ணன் கருத்துரைத்துள்ளார்.

செ.யோகநாதன் 28.01.2008 அன்று யாழ்ப்பாணத்தில் தமது 66 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

 "நான் வாழ்க்கையிலிருந்தே இலக்கியத்தை உருவாக்குகின்றேன். இன்னும் சொன்னால் சாதாரண மனிதரே எனது எழுத்தின் அடிநாதமாக இருக்கிறார்கள். இவர்களுக்கெதிரான ஒடுக்குமுறை, அநியாயங்கள் என்பனவற்றை என் எழுத்தின் மூலம் நான் எதிர்க்கிறேன். இவர்களிடமிருந்து கற்றதை இவர்களுக்கு நான் செழுமைப்படுத்தி படிக்கக் கொடுக்கிறேன். இவர்களின் விடிவுக்கான உந்து சக்திகளில் என் எழுத்தும் ஒன்றாக இருக்க வேண்டுமென்பது என் படைப்பு ஆர்வத்தின் விருப்பம். இதையே முற்போக்கு இலக்கியக் கோட்பாடு அழுத்தமாக வலியுறுத்துகின்றது. "என செ. யோகநாதன் 'ஒளி நமக்கு வேண்டும்' நூலின் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

 “எந்த ஒடுக்குமுறையும், அது சமூக ஒடுக்குமுறையாக இருந்தாலென்ன, தேசிய இன ஒடுக்குமுறையாக இருந்தாலென்ன, அது எதிர்த்துப் புறந்தள்ளத்தக்க ஒன்றுதான். இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியது ஒரு எழுத்தாளனின் இன்றியமையாக் கடமை என்றே எண்ணுகிறேன். தம்மைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வை அவதானித்துப் பயின்று அவர்களின் சிந்தனையைத் தூண்டிச் செயற்படுத்தும் விதத்திலே எழுத்து அமைய வேண்டும். அதுவும் மக்களின் மொழியிலே எழுதப்பட வேண்டும். மக்களுக்கு எதிரான சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எழுத வேண்டும். இலக்கியமென்பது வெறுமனே தனக்கு எதிரிலே நடந்தவற்றைப் பதிவு செய்கிற ஒன்று என்பதை நான் என்றுமே ஒப்புக் கொண்டதில்லை. அதற்கும் மேலாகப் போய் வாசகன் மனதில் ஒரு செய்தியை அல்லது செயலக்கான ஊக்கத்தை அது பதிவு செய்தாக வேண்டும். படைப்பாளி தனது மக்களின் வாழ்வையும், உணர்வுகளையும், காலத்தையும் பதிவு செய்கின்றவன். இப்படிப் பதிவு செய்தே தனது எழுத்தை அவர்களின் போராட்டத்துக்குரிய ஆயுதமாக மாற்றிவிடுகிறான். "என 'கிட்டி’ நாவலின் முன்னுரையில் செ. யோகநாதன் எழுத்தாளனின் கடமையை வலியுறுத்தியுள்ளார்.

- பி.தயாளன்

Pin It

“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர் மீதான கொடுமை, பெண்கள் மீதான கொடுமை, ஆதிக்கம், தேசிய இனப் பிரச்சினையால் தமிழ் மக்கள் குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் தோன்றியுள்ள அவலங்கள். தொழில்மயமாக்கலும், நகரமயமாக்கலும், நவீனமயமாக்கலும் தோற்றுவித்துள்ள மாறுதல்களும், பிரச்சினைகளும், மனித பலவீனங்களை வளர்த்துச் சுரண்டும் சந்தைப் பொருளாதார வியாபாரங்கள். நுகர்வுப் பண்பாட்டின் மனித விரோதப் போக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம், நவீன ஏகாதிபத்தியச் சுரண்டலின் பன்முகப் பரிமாணங்கள், உலகமயமாதல் என்ற பெயரில் நடைபெறும் அராஜகம். இப்படியான பல்வேறு விடயங்கள் பற்றிய விளக்கங்களாகவும், விமர்சனங்களாகவும் செ.கணேசலிங்கன் எழுத்துக்கள் அமைந்துள்ளன ” எனப் பேராசிரியர் சி.தில்லைநாதன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

se ganaesalingan                “மனிதனைப் பிணைத்திருக்கின்ற அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிவதற்கான எழுச்சி நசுக்கப்பட்டு, மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு, அவர்களது விடுதலைக்கான போராட்ட உணர்வைத் தட்டி எழுப்பி உத்வேகப்படுத்தும் பண்பு மானிட நேயப்படைப்பாளிகளிடமுண்டு. சமூக, பொருளாதார அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை ஒரு பெரும் சக்தியாக திரட்டுவதற்கு மக்களுக்கு உத்வேகத்தைக் கொடுப்பவனே மானிடநேயப் படைப்பாளி. தோல்வியிலும், அடிமை மனப்பான்மையிலும் நீண்டகாலமாகப் பீடிக்கப்பட்டு, விரக்கியடைந்த நிலையிலுள்ள மக்களின் ஆத்மாவைத் தட்டி எழுப்பி விழிப்படையச் செய்து போராட்டப் பாதையில் அவர்களை இட்டுச் செல்லும் வல்லமை படைத்தவனே மனிதநேயப் படைப்பாளி. ”

                மேலும், “ மனித குலத்திற்கு விசுவாசமாக நடப்பது, மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவது, கசப்பான உண்மையானாலும் அதனைத் துணிவுடன் கூறுவது, மனிதர்களின் உள்ளத்திலே எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஊட்டி அதனை உறுதிப்படுத்துவது, அதைக் கட்டுவதிலே அவர்களுக்குள்ள ஆத்மசக்தியைப் பலப்படுத்துவது, உலக சமாதானத்துக்கும், சாந்திக்குமாகப் போராடுவது, எங்கெல்லாம் சமாதானத்துக்கான குரல் ஒலிக்குமோ அங்கெல்லாம் சமாதான வீரர்களை அந்தரங்க சுத்தியுடன் ஆதரிப்பது. முன்னேற்றத்திற்கான உண்மையான நேர்மையான முயற்சியில் மக்களை ஒன்று திரட்டுவது இதுதான் மானிடநேயனின் கடமை. ” என்று ‘ டான் நதி அமைதியாகப் பாய்கின்றது’ என்ற உலகப் புகழ்பெற்ற நாவலைப்படைத்த மிகையில் ஷொலகோ கூறியதை உள்ளத்தில் ஏற்று இலக்கியம் படைத்தவர் செ.கணேசலிங்கன்.

                செ.கணேசலிங்கன் இலங்கையில் யாழ்ப்பாணம் அருகில் உள்ள உரும்பிராய் என்னும் கிராமத்தில் 09.03.1928 ஆம் தேதியன்று, க. செல்லையா-இராசம்மா தம்பதியரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

                தமது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் கிராமத்து கிறிஸ்துவப் பள்ளியில் கற்றார்.  சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாவது வகுப்பு பயின்றார். பின்னர், யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரியில் சேர்ந்து எச். எஸ்.சி. பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். மேலும், இவர் லண்டன் மெட்ரிகுலேசன் தேர்விலும் தேர்ச்சியடைந்தார். நாள்தோறும் காலையில் வயலில் விவசாய வேலைகளை செய்த பின்னர், கல்லூரிக்கு நடந்தே சென்று படித்தார்.  இவர் கல்வியில் மிகத் திறமை பெற்ற மாணவராக விளங்கியதால் சிறப்பு வகுப்பேற்றம் ( னுடிரடெந யீசடிஅடிவiடிn) செய்யப்பட்டார்.

                எச்.எஸ்.சி. எனும் தேர்வில் தேர்ச்சியடைந்த பின் 1950 ஆம் ஆண்டு இலங்கை அரசின் பாதுகாப்புத்துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்து கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில்  1981 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார்.

                மகாத்மா காந்தி 30.01.1948 அன்று படுகொலை செய்யப்பட்டதையொட்டி தமது உரும்பிராய் கிராமத்தில்  நண்பர்களுடன் இணைந்து நினவேந்தல் கூட்டம் நடத்தினார். அந்த நினைவேந்தல் கூட்டத்தில், “ மகாத்மா காந்தியின் உடல் யமுனா நதிக்கரையில் இப்போது எரியூட்டப்பட்டிருக்கும், அவர் மறைந்தாலும் அவரது கொள்கைகளை நாம் கடைபிடிப்பதனால் இங்கே நிலவும் சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும். இங்குள்ள கோவில்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும். மக்களுக்குத் திறந்துவிடப்பட வேண்டும். ” என்று தீவிரமாக உரையாற்றினார்.

 மேலும் ‘மகாத்மா காங்கிரஸ் ’ என்னும் சங்கத்தை அமைத்து அதன்  செயலாளராகப் பணியாற்றினார். அச்சங்கத்தின் மூலம் தீண்டாமை ஒழிப்புக்காகவும், கோவில்களில் அனைத்து சாதி மக்களும் வழிபட உரிமை வேண்டும் என்பதற்காகவும் பரப்புரையில் ஈடுபட்டார்.

                                இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1949 ஆம் ஆண்டு இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் முக்கியமாணவராக விளங்கிய ப.ஜீவானந்தம் தோணி மூலம் கோடியக்கரை வழியாக யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். செ.கணேசலிங்கனும், குலவீர சிங்கமும்              ப. ஜீவானந்தத்தை அழைத்துக் கொண்டு உரும்பிராய் கிராமத்திற்குச் சென்றனர். அக்கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்து தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் ப. ஜீவானந்தம் உரையாற்றினார்.

                இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கார்த்திகேயனின் தொடர்பு செ.கணேசலிங்கனை மார்க்சிஸ்ட் சிந்தனையுடையவராக்கியது. மார்க்சிய பொருள்முதல்வாத சிந்தனையால் பெரிதும் கவர்ந்து ஈர்க்கப்பட்டார். மார்க்சிய தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு கற்றறிந்தார்.

                கொழும்பில் 1956 ஆம் ஆண்டு உலக சமாதான மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு உலகப் புகழ்பெற்ற சிலி நாட்டுக்கவிஞர் பாப்லே நெருடா வருகைபுரிந்தார். அவரை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் பிரதான வீதியில் உள்ள மண்டபத்தில் சொற்பொழிவு ஆற்றிட ஏற்பாடு செய்தது.  அக்கூட்டத்திற்கு செ.கணேசலிங்கன்  தலைமை தாங்கினார் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

                ‘தினகரன் ’ இதழில் 1950 ஆம் ஆண்டு ‘ மன்னிப்பு ’ எனும் சிறுகதை எழுதியதன் மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார்.

                நல்லவன், சங்கமம், ஊமைகள், காதல் உறவல்ல - பகைமை உறவு, ஒரே இனம், கொடுமைகள் தாமே அழிவதில்லை. செ.கணேசலிங்கன் சிறுகதைகள் முதலிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

                செ.கணேசலிங்கனின் சிறுகதைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வர்க்கப் பிரச்சனைகள் குறித்தும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் போலித் தனங்கள். ஊழல்கள், கொடுமைகள், அடக்குமுறைகள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. அடக்கு முறைக்கும், சுரண்டலுக்கும், அநியாயங்களுக்கும் எதிராக மக்கள் போராட வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், பெண்களின் பிரச்சனைகளை முன் வைத்தும் சிறுகதைகள் படைத்துள்ளார்.  பெண்கள் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்படும் நிலையை, பொருளாதார ரீதியாக மட்டுமின்றிப் பாலியல் ரீதியாகவும் பல்வேறு சுரண்டல்களுக்கு உட்படுகிற நிலையை, உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமையான அவல நிலையில் துன்புற்று அல்லற்படும் துர்ப்பாக்கியத்தை இவரது சிறுகதைகள் சித்தரித்துக் காட்டுகின்றன.

                “ இலக்கியம் வாழ்க்கையை அதன் வரலாற்றோடும், வளர்ச்சியோடும் ஒட்டிச் சித்தரிக்க வேண்டும். தனி மனித வாழ்வு சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்து இருப்பதையும் சமுதாயத்தின் வளரும் தேயும் சக்திகளைப் புலப்படுத்துவதையும் சித்தரிப்பதே உயர்ந்த இலக்கியமாகும். இத்தகைய இலக்கியம் படைப்பதற்கு எழுத்தாளன் முதலில் மனித இனத்தை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றிய தெளிவும் நம்பிக்கையும், திராணியும், பொறுப்புணர்ச்சியும் இருத்தல் வேண்டும் - ” என ‘ ஒரே இனம் ’ எனும் சிறுகதைத் தொகுப்பில் செ.கணேசலிங்கன் இலக்கியவாதியின் சமூகக் கடமையை தெளிவுபடுத்தியுள்ளார்.

                செ. கணேசலிங்கன் சுதந்திரன், தினகரன், புதுமை இலக்கியம், சாந்தி, சரஸ்வதி, தாமரை முதலான இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது, ‘ சாயம் ’ என்ற சிறுகதை இலங்கைச் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்று, அத்தொகுப்பு ருஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது.

                ‘சாயம் ’ என்னும் சிறுகதையில், “ தேயிலையின் நிறம் ... தொழிலாளர்களின் தோலின் நிறம் . அதனுள்ளே ஒடுவது இரத்தம். தேயிலைச் சாயத்தின் நிறம் இரத்தம். வெளிநாடுகளில் தேயிலையை விற்றுப் பணம் திரட்டுகின்றீர்கள் என்று எண்ணுங்கள். தேயிலைச் சுவைப்பவர்களெல்லாம் எமது இரத்தத்தைச் சுவைக்கிறார்களென்னு கருதுங்கள். தேயிலைக்காகத் தமது இரத்தத்தைத் தானம் செய்து இரத்தம் சுண்டிப்போய் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் எம் வர்க்கத்தினரை வெளியே பாருங்கள் ” என சுரண்டப்பட்ட ஏழைத் தொழிலாளர்களின் உதிரத்தால் விளைந்ததே நாம் சுவைக்கும் தேயிலை என்பதை சித்தரிக்கிறார்.

                ‘ சீக்கரமாய் வந்துவிடு ’ என்னும் சிறுகதையில் வரும் ஒரு உரையாடலில், “ஆசியாவிலேயே எங்கள் நாட்டிலேயே ஜனநாயகம் நிலவுவதை மேல் நாடுகளெல்லாம் ஒப்புக் கொள்கின்றன. ”

அதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் ? எனக் கேட்கிறார் ஒருவர்,           

அதற்கு “ஏழைகள் அப்படியே இருக்கிறார்கள். தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாகத் தெரியிவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடைவ அவரவர் விரும்பிய ஒரு பெட்டிக்குள் ஓட்டுப் போடச் செய்துவிட்டு ஜனநாயக ஆட்சி நடப்பதாகச் சொல்லுவதால் என்ன பயன் ? உங்கள் நாட்டிலுள்ள சாதாரண மனிதன் ஒருவனைப் பிடித்து உனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடைவ ஒட்டுப் போடும் சுதந்திரம் வேண்டுமா அல்லது நிரந்தரமான தொழிலும் வசதியான வீடும் வேண்டுமா என்று கேட்டுப் பாருங்கள்” என இன்றைய சமூக அரசியல் நிலைமையை படம் பிடித்து காட்டுகிறார்.

                செ.கணேசலிங்கன் மலையாகத் தோட்டத் தொழிலாளர்களது பிரச்சனைகளை மையமாகக் கொண்டு சில சிறுகதைகளை எழுதியுள்ளார். மலையகத் தோட்டத் துரைமார்களும் பிற அதிகாரிகளும் பெண் தொழிலாளர்களைத் தமது பாலியல் இச்சைக்கு ஆளாக்கும் கொடுமைகள், தமது பாலியல் இச்சைக்கு இணங்காத பெண்களைப் பழிவாங்குதல், தொழிலாளர்களின் வறுமைக் கொடுமைகள், மலையாகத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பு பல வழிகளில் அதிகாரிகளாலும், துரைமார்களாலும் சுரண்டப்படுதல் முதலியவற்றை தமது சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளர்.  அதே வேளையில் இக்கொடுமைகளுக்கு எதிராக சாதி, மத, இன பேதங்களை மறந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு போராட வேண்டியதையும் வலியுறுத்துகிறார்.

                ‘ கொடுமைகள் தாமே அழிவதில்லை ’ எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்து சிங்கள வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இவரது பல சிறுகதைகள் சிங்களம், ருஷ்யன், மலையாளம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

                                வர்க்க முரண்பாடுகள் கூர்மையடையத் தொடங்கிய ஒரு காலகட்டத்தில், நிலப்பிரபுத்துவத்தின் சுரண்டல்களுக்கு உட்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்ட தலித் மக்களின் அவலமான நிலையைச் சித்தரித்து, அந்த மக்களை எழுச்சியுறச் செய்யும் விதமாக ‘ நீண்ட பயணம் ’ நாவல் விளங்குகிறது. இது செ.கணேசலிங்கனின் முதல் நாவலாகும்.  இந்நாவலுக்கு இலங்தை அரசு ‘ நீண்ட பயணம் ’ நாவல், யாழ்ப்பாணக் கிராமங்களில் நிகழும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்த செய்திகளைக் காட்சிப்படுத்துவதுனூடாக கதையம்சம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சாதி மக்களை கோயில்களில் கயிறு கட்டி எல்லைப் படுத்துதல். பொதுக்கிணற்றில் குடிநீர் எடுக்க விடாமல் தடுத்தல். சட்டை முதலிய மேலாடைகள் அணியவிடாமல் தடுத்தல். பெயர் பதிவின்போது கந்தசாமியைக் கந்தன் என்றும், வேலுப் பிள்ளையை வேலன் என்றும் பதிவு செய்தல். இப்படியாக உயர் சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீது நிகழ்த்திய அடக்குமறை கொடுமைகள் பற்றிய விவரணங்களுடன் இந்நாவல் விரிகின்றது.

                “ நீண்ட பயணம் நாவல் தமிழ் நாவல் உலகில் புதிய வடிவமாக அமைகிறது. நிலவுடைமைக் கொடுமையின் சாதியம் மற்றும் உழைப்புச் சுரண்டல் ஆகிய தன்மை, இயல்பாக குறிப்பிட்ட மக்களின் பண்பாட்டு மொழியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஆக்க இலக்கியமாக ‘ நீண்ட பயணம் ’ நாவலை உருவாக்கியுள்ளார் என்று கருத முடியும்.” என சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை பேராசிரியர் வீ.அரசு தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

‘நீண்ட பயணம் ’ நாவலுக்கு இலங்கை அரசு 1966 ஆம் ஆண்டுக்குரிய சாகித்திய மண்டலப் பரிசு வழங்கியது.

                ‘செவ்வானம்’ இந்நாவல் தமிழகத்தில் புரட்சிர இலக்கியத்தை அறிமுகப்படுத்தியது. அரசியல், பொருளாதாரம், சமூகப் பின்னணியிலேயே நாவல் விரிகிறது.

                “ சமகால அரசியலின் நேரடி விமர்சனம் என்ற வகையிலும், உழைக்கும் வர்க்கத்தின் அரசியலை முன்னெடுத்த முக்கிய ஆக்கம் என்ற வகையிலும் ‘செவ்வானம்’ நாவலுக்கு ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் மட்டுமின்றிப் பொதுவான அனைத்துத் தமிழ் கூறும் நல்லுலகின் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவம் உள்ளது” என செ. கணேசலிங்கனின் ‘ செவ்வானம் ’ நாவல் குறித்து பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் பாராட்டி புகழ்ந்துரைத்துள்ளார்.                               ‘சடங்கு ’ நாவல் தனிமனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், போலித்தனமான சடங்கு சம்பிரதாயங்களைக் கட்டிக் கொண்டு உழலும் நிலப்பிரபுத்துவத்தின் பிரதிநிதிகளின் அறிவீனத்துக்கு சாட்டையடி கொடுக்கிறது.

                ‘சடங்கு ’ நாவலில் பல விஷயங்களை செ. கணேசலிங்கன் எள்ளி நகையாடுகிறார். மணமக்களை ஒன்று சேர்த்து வைப்பதற்கு முன்னர் பழமைவாதிகள் திருமணத்தில் படாடோபத்தையும், ஆடம்பரத்தையும், மரபுகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும் கவனிக்கின்றனர்.  மணமக்களின் மன இசைவு, கருத்தொற்றுமை ஆகியவற்றைக் கவனிப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

                “சடங்கு (சுவைரயட) என்பது உண்மையில் ஒரு சமூக நடைமுறையே . அதற்கு ஒரு பண்பாட்டு வலுவுண்டு; சடங்குகள் மூலமே மக்கள் தங்கள் சமூக இருப்பை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். சடங்கில் ஒருவரே ஆற்றுபவராகவும், பார்வையாளராகவும் இருக்கும் சுவராசிய நிலையுண்டு. இந்த நிலைதான் சடங்குக்கும் சமூக இருப்புக்குமான தொடர்பை இறுகப்பிணைத்து விடுகிறது. ” என பேராசிரியர் கலாநிதி கா.சிவத்தம்பி கருத்துரைத்துள்ளார்.

                “ திருமணம் என்பது இருவரது மனமொத்த வாழ்வின் பிணைப்பாகக் கருதப்படாது இரு குடும்பங்களின் இணைப்பாக எண்ணப்படுகிறது. இது இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பொதுவானது, வாழப்போகும் இருவரது அக உணர்வுகள் அங்கு புறக்கணிக்கப்பட்டு, புறச்சடங்குகள் மட்டுமே உயர்வாக நடத்தப்படுகின்றன.  இப்போக்கினை திருமணச் சடங்கின் போது மட்டுமல்ல மரணச் சடங்கின் போது பார்க்கலாம். ”

                “ ஒருவரின் அகால மரணத்தின் அடிப்படைக் காணங்களைக் கூட எவரும் ஆராய்வதில்லை. மரணச் சடங்குகளை முறைப்படியும் சிறப்பாகவும் செய்வதிலேயே ஆர்வம் காட்டுவர்.  மரணத்தின் காரணங்களை ஆராய்ந்து அந்நிலை மீண்டும் நிகழாது காக்க முன்னிற்பவனே மனிதன்; மனிதாபிமானமுள்ள வீரன் அவனே புதிய உலகின் சிருஷ்டி கர்த்தா ” என ‘ சடங்கு ’ நாவலின் முன்னுரையில் செ. கணேசலிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

                “ கணேசலிங்கனது நாவல்கள் கடந்த பத்தாண்டுக் கால ஈழத்து வரலாற்றைச் சித்தரிக்கின்றன; அதே நேரத்தில் அவ்வரலாற்றின் விளைபொருளாகவும் அமைந்து காணப்படுகின்றன. திட்டத் தெளிவான வரலாற்று வளர்ச்சிக் கிரமத்தைக் காட்டாதுவிடினும், நீண்ட பயணம், சடங்கு, செவ்வானம் ஆகிய மூன்று நாவல்களும் நிலமானிய அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்பிற்கு மாறும் சமுதாயத்தைச் சித்தரிக்கின்றன. கிராமப்புற உழைப்பாளிகளிலே துவங்கி, நகர்ப்புற கைத்தொழிலாளரின் விழிப்புடன் முடிவடைகின்றன. அந்த வகையில் இவற்றை மூன்று நாவல்களின் தொகுதி (கூசiடிடடிபல)  எனலாம். ” என ‘செவ்வானம் ’ நாவலின் முன்னுரையில் பேராசிரியர் கலாநிதி. க.கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.

                ‘போர்க்கோலம் ’, ‘மண்ணும் மக்களும் ’ ஆகிய நாவல்கள் தமிழக அரசு நூலகங்களில் வைக்கப்படாமலும், தமிழகத்தில் விற்பனை செய்யப்படாமலும் தடை செய்யப்பட்டமை, இவரது எழுத்துக்களின் செல்வாக்கு, தாக்கம், ஈழத்தை மட்டுமின்றித் தமிழகத்தையும் அச்சுறுத்தியதை நமக்கு உணர்த்துகிறது.  அதே வேளை இந்நாவல்கள் தமிழக இடதுசாரி இலக்கிய இயக்கத்திற்கு பெரும் உந்து சக்தியாகப் பயன்பட்டன. ‘போர்க்கோலம் ’ நாவல் சாதியக் கொடுமைகளையும், நிலப்பிரபுத்துவ ஆகிக்கத்தையும் தோலுரித்து காட்டுகிறது.

                “ நாங்கள்  உங்களிடம் பிச்சை கேட்கிறோம் என்று நினைக்க வேண்டாம். எமது உரிமைகளையெல்லாம் நாங்கள் உங்களிடமிருந்து தயவோடு எதிர்பார்க்கவில்லை. கோவில், தேத்தண்ணிக்கடைகள் ( தேநீர் கடைகள்) போன்றவையெல்லாம் பொது இடங்கள். மனித இனமான எங்களுக்கும் அங்கே நுழைய உரிமை இருக்கு. நாமாகவே நுழைவோம். இப்போது எமக்குப் பயந்து பூட்டி வைக்கிறீர்கள். உந்தப் (உங்கள்) பூட்டையெல்லாம் உடைத்து  நாங்கள் நுழையிற காலம் தூரத்திலில்லை. ” (போர்க்கோலம் நாவல் பக்கம் 49).

                முதலாளித்துவம் தன் சுயநல இலாபத்திற்காக இன்றைய உலகமக்களின் நலனையும், எதிர்கால மக்களின் நல் வாழ்வையும் கருத்திற் கொள்ளாது பூமியின் இயற்கை வளங்களை அத்துமீறி சூரையாடி வருகிறது. மேலும், உலகின் 25 சதவீத மக்களுக்காக இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் அழிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், மாசுபடுதல், சுகாதாரக் கேடுகள் முதலியவற்றை உருவாக்கிறது. இப்பொருள் குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்தும் நாவல் ‘நரகமும் சொர்க்கமும் ’ ஆகும்.

                “ சுரண்டலின் மூலம் தனிச்சொத்துடைமையைக் காப்பாற்றி, உற்பத்திச் சாதனங்களைத் தன்னுடையதாக்கி, வளர்ந்து வரும் முதலாளிகள் ஒருபுறம், அவர்களின் சுரண்டலைத் தாங்க முடியாது நசிந்து கொண்டிருக்கும் தொழிலாளர்கள் மறுபுறம், இவர்கள் இருவரிடையேயும் அகப்பட்டு, தரையை மறந்து தாரகைகளைப் பிடித்து மாலையாக்க விரும்பும் மத்தியதர வர்க்கத்தினரின் வளர்ச்சியையும், வாழ்வையும் யதார்த்தமாகக் காட்டக்கூடிய  நாவல் ஒன்று எழுது முற்பட்டேன் ” அந்த நாவல் தான் ‘தரையும் தாரகையும் ’ என அந்நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டு உள்ளார்

                உலக அளவில் ஏகாதிபத்தியம் தனது பண்ட விற்பனைக்கு எவ்வாறு சந்தையை உருவாக்குகிறது. கிராமப்புறத்தில் மக்கள் தங்கள் சொந்த உழைப்பில் தயாரித்து பயன்படுத்திய சீயக்காய்த் துளைக்கூட ஏகாதிபத்திய உலகம் எவ்வாறு ஒரு சந்தைப் பண்டமாக மாற்றுகிறது. பண்ட உற்பத்தியில், விற்பனையில் பெண் எப்படி சுரண்டப்படுகிறாள் என்பதை ‘உலகச் சந்தையில் ஒரு பெண்’ என்ற நாவல் மிக அழகாகச் சித்தரிக்கிறது.

                ‘இரண்டாவது சாதி ’ நாவல், பெண்களை முதலாளித்துவம் கவர்ச்சிப் பண்டமாக்கி சந்தைப்படுத்தலையும், பாலியல் பேதத்தை முன்வைத்து பெண்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டுவதையும், பெண்களின் உரிமைகளை மறுப்பதையும் விவரிக்கிறது. மேலும் ஆண் சாதியிலும் பார்க்க மனித உயிரினத்தின் படைப்பாற்றல் கொண்டவளாக பெண்கள் இருந்த போதும் உலகம் முழுவதும் இரண்டாவது சாதியாகவே கருதப்படுகிறாள் என்பதை விவரிக்கிறது .

                ‘ கோடையும் பனியும் ’ இந்நாவல் மொழி, மதம், பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம், அரசியல் முதலியவைகளின் அடிப்படைகள், சமூகத்தில் நிலவும் செல்வாக்கு, அவைகளின் போலித் தன்மைகள் குறித்து பேசுகிறது.

                ‘ இலட்சியக் கனவுகள் ’ இந்நாவல் இலங்கையில் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பலம் மற்றும் பலகீனம் பற்றி விவரிக்கிறது.  மேலும், சிங்கள இராணுவம் தமிழீழத்திற்காகப் போராடியவர்களையும், தமிழ் மொழி பேசும் குடிமக்களையும், தமிழ்ப் பெண்களையும் கொடுமை செய்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்றழித்ததை விரிவாகப் பதிவு செய்துள்ளது.

‘கூட்டுக்கு வெளியே ’ இன்நாவலில் தனிச் சொத்துடைமையின் பல்வேறு அம்சங்கள் வெவ்வேறு வடிவங்களில் இடம் பெறுவதை விளக்குகிறது. அதாவது, மனிதன் தனது பாதுகாப்பு, தனது குடும்பத்தின் பாதுகாப்பு எனத் தனிச் சொத்தைச் சேர்க்கிறான். அதற்கு எல்லையற்று, போட்டா போட்டிச் சமூகத்தில் தனிச் சொத்து சேர்ப்பதே தனது வாழ்க்கை முழுவதும் குறிக்கோளாகக் கொள்கிறான். மேலும், எப்படியும் பணம் சேர்க்கலாம் என்ற சுயநலப் போக்கும் வலுப்பெற்றது. லஞ்சம், ஊழல், திருட்டு, கொலை, கொள்ளை மூலம் பணம் சேர்த்து, சமூக அந்தஸ்து பெறுவோர் கூட்டம் பெருகிவருகிறது. இதனால் நேர்மை, வாய்மை, நாணயம், ஒழுக்கம், பண்பாடு மனிதாபிமானம் மறைகிறது. அதனால் தனது சுதந்திரச் சிந்தனையை, தனது ஆத்மாவை இழப்பதை மனிதன் உணர்வதில்லை. சுயநலம் அவனது குடும்பத்தோடு ஒன்றிவிடுகிறது. தனிச் சொத்து சேர சேர சமூக விழிப்புணர்வு குன்றிவிடுகிறது என்பதை எடுத்துரைத்துள்ளார்.

                ‘ஒரு பெண்ணின் கதை ’ இந்நாவல் உயிரியல், உளவியல், சமூக வாழ்வியல் அடிப்படையில் ஆணுலகும், பெண்ணுலகும் வேறுபடுவதையும் விவரித்துக் கூறுகிறது. இது ஒரு பெண்ணின் கதை அல்ல.  பெண்ணினத்தின் பயங்கரமான கதை.  பெண்கள் பற்றிய பல பொய்மைகளை இந்நாவல் உடைத்தெறிகிறது.

                “பொருளாதார நிலையில் வீட்டிலே பெண்ணின் உழைப்பு மதிக்கப்படுவதில்லை. கூலி தரப்படுவதில்லை.  வெளியே உழைப்பினும் கணவன் குடும்பத்தினரது கட்டுப்பாட்டில் அவளது கூலி அபகரிக்கப்படுகிறது.  அரசியலில் வாக்குரிமை இன்று வழங்கப்பட்ட போதும் ஆண் பிரதிநிதிகளுக்கே பெண்ணும் வாக்களிக்க நேரிடுகிறது. அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ அடிமைகளின் பிரதிநிதிகளாக  இருக்க வேண்டிய நிலையுள்ளது. பெண்களுக்கு கற்பிக்கப்படும் கருத்தியல்கள், வேலைப்பணிகள் வேறாக உள்ளன.  ஆண்கள் படைத்த கடவுள், மதப் போதனைகளே அவர்களுக்கு ஊட்டப்படுகின்றன. ஆணாதிக்கம், வன்முறையுடன் அவளை அடிமைப்படுத்துகிறது. குடும்பம் என்ற தனித்தனிச் சிறைகளில் பெண்கள் அடைக்கப்பட்டிருப்பதால், பாட்டாளிகளைப் போல் ஒன்று திரண்டு, பொருளாதார அரசியல் மாற்றத்திற்காகப் போராட முடியாதுள்ளது.  கர்ப்பம், மகப்பேற்றுத் துன்பம், வேலைப் பிரிவினைகள் வேறு பெண்களை விரட்டுகின்றன” என நாவலின் முன்பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

                மேலும் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து சமூக உற்பத்தியில் ஈடுபட்டு பொருளாதார விடுதலையைத் தேட வேண்டும். பாட்டாளிகளுடன் இணைந்து விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு புதிய சமத்துவ சமுதாயத்தைப் படைக்க முன் வரவேண்டும். இன்றைய நிலையில் ஆண்கள், பெண்களை நெருங்கிய நண்பராக, தோழராக ஏற்க வேண்டும்.  ஆண்கள் இதனால் இழக்கப்போவது ஏதுமில்லை. உலகின் பாதிப்பங்கினரான பெண்கள் சில ஆயிரக்கணக்கான  ஆண்டுகளாக ஓடுக்கப்பட்டதால் மனித சமூகம் இழந்தவை எண்ணிலடங்காதவை என்பதை இந்நாவலில் எடுத்துரைத்துள்ளார் .

                ‘ ஒரு குடும்பத்தின் கதை ’ - இந்நாவல் உலகத்தில் சராசரியாக ஆண்கள் எட்டு மணி நேரம் உழைக்கும் போது பெண்கள் பதினைந்து மணி நேரம் உழைக்க நேரிடுகிறது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.  மேலும், அனைத்து மதங்களும் பெண்களின் விடுதலைக்கும், சம உரிமைக்கும் தடையாக உள்ளன.  கூலி தரப்படாத விரக்தியான வேலைகளில் பெண்கள் ஈடுபடுத்தப்படுவதால், சமூகத்தின் உயர்வான நிலையை மறந்து தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதை விவரிக்கிறது.

                ‘ ஈனத்தொழில் ’ இந்நாவல் சார்ந்த சில குறிப்புகளில் செ.கணேசலிங்கன் கீழ்க்கண்ட கருத்தை பதிவு செய்துள்ளார். “ இன்று ஆளும் வர்க்கத்தின் வன்முறை வடிவமான அரசுகள் கூலிப்படைகளை வைத்து மனித இனத்தை அச்சுறுத்துவதோடு கொலையும் செய்யும் ஈனத் தொழிலைச் செய்வதைக் காண்கிறோம். இராணுவம் என்ற கூலிப்படையைத் திரட்டி, நவீன ஆயுதங்கள் கொடுத்து, மனித இனத்தின் ஒரு பகுதியினரைக் கொல்லும் ஈனத் தொழிலில் அரசுகள் ஈடுபட்டுள்ளன. மிக ஈனத்தனமாக மனிதர்களைக் கொலை செய்வதற்கு சட்ட ரீதியாக அனுமதி அளித்துவிட்டு இராணுவப் படையினரிடம் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது வியப்பானதே ”

                ‘ நீ ஒரு பெண் ’ இந்நாவலில், “ பொருளாதார, அரசியல், சட்டம் சார்ந்த சமத்துவம் வேண்டுவது மட்டுமல்ல, பெண்ணினத்திடையே ஒரு கலாச்சாரப் புரட்சியும் ஏற்பட வேண்டும் . ‘நீ ஒரு பெண் ’ என இனங்காட்ட இயலாதபடியாக ஆண்கள் போன்று புறநிலை அணிப்படுத்தல்மட்டுமல்ல, தமது உடல் தமது சொத்து பிறருடையது அல்ல என்ற அகநிலை விழிப்புணர்வும் ஏற்படுதல் வேண்டும்.  பெண்ணினத்திடையே அடிமை நிலையைவிட்டு சமத்துவ நிலையைக் காண விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என் முக்கிய நோக்கமாகும். ” என இந்நாவல் சார்ந்த குறிப்புகளில் தமது நோக்கத்தை அறிவித்துள்ளார்.

                ‘ அடைப்புகள்’ இந்நாவலை தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறார் உழைப்புச் சுரண்டலை முன் வைத்து படைத்து உள்ளார்.  இந்நாவலில் சில குறிப்புகள் என்ற பகுதியில், “ சிறார் உழைப்பு என்பது வயது வந்தவரின் வாழ்க்கையை உரிய காலத்தின் முன்னர் சிறார் கடைபிடிப்பது.  இந்நிலை உடல் நலனையும், மூளை வளர்ச்சியையும் பாதிப்பது ; சில வேலை குடும்பத்திலிருந்தும் பிரிப்பது. நல்ல எதிர்காலம் கிட்டாது, கல்வி, தொழில் நுட்பப் பயிற்சிக்கும் வாய்ப்பில்லாது போய்விடுகிறது. ” என உலகத் தொழிலாளர் கழகத்தின் அறிக்கை கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அவை பின்பற்றப்படுவதில்லை.

                சிறார் உழைப்பு நிலவுவதற்கு முக்கிய காரணங்கள், கிராமங்களில் நிலவும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்விக்கு வாய்ப்பின்மை, அறியாமை, விழிப்புணர்வின்மை ஆகியவைகள் முதன்மையாக விளங்குகின்றன என்பதை எடுத்தியம்பி உள்ளார்.

                தீப்பெட்டி மருந்துகளால் ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள், காற்றோட்டமில்லாத தொழிற்சாலைகள், மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் மயக்கம், வாந்தி, மூச்சுத் திணறல், சுவாசக்கோளாறு, நுரையீரல் பாதிப்பு முதலிய நோய்கள் ஏற்படுகிறது. விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுதல், காயங்கள் ஏற்பட்டு ஊனமடைதல், தொடர்ந்து குனிந்து கொண்டே வேலை செய்வதால் முதுகுவலி உண்டாகுதல், பாதுகாப்பில்லாத குடிநீர், நல்ல சத்துணவு இன்மை, குடிசை வீடுகள், தரமான கழிப்பாறைகள் இல்லாதது, நோய் எதிர்ப்புச் சக்தியின்மை, நல்ல மருத்துவ வசதியின்மை ஆகியவற்றால் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் சிறார்கள் மிகவும் பாதிக்கப்படுவதையும், மிகக் குறைந்த கூலிக்கு உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதையும் இந்நாவலில்  விரிவாக விவரித்துள்ளார் . மேலும் சமூகத்தில் வறுமை நிலையை ஒழிக்காமல் சிறார் தொழிலாளர் என்ற பிரச்சனையைத் தீர்க்க முடியாது, அனைத்துச் சிறார்களுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

                ‘ தாய் வீடு ’ நாவலில் பெண்ணியம் குறித்து பேசப்படுகிறது பெண்கள் மீது மூன்று சுமைகள் ஏற்றப்படுகின்றன. அதாவது உழைப்பு, வீட்டு மனைவி, தாய் ஆகியச் சுமைகளாகும்.  நில உற்பத்தி வளர்ச்சியடைந்து தனிச் சொத்துடைமை ஏற்பட்டதும் ஆணினம் தனிச் சொத்தாக வீட்டுக்குள் பெண்ணையும் கொண்டனர். குடும்பம் என்ற நிறுவனம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது. எழுத்திலுள்ள சட்டங்களைக் காட்டிலும், எழுதாச் சட்டங்கள் பலம் வாய்ந்தவையாக உள்ளன.  மனித இனம் பெண்ணடிமைத் தனத்துடன் தோன்றவில்லை. அதன் வரலாறு அடிமைத்தளையுடன் முடியப் போவதுமில்லை என்ற பெண்விடுதலை கருத்துக்களை இந்நாவல் முன்வைக்கிறது.

 ‘நான்கு சுவர்களுக்குள்’ இந்நாவல் குடும்பத்தில் நடைபெறும் வன்முறையை உலகளவில் பொதுமைப் படுத்திய போதும், இந்தியப் பெண்கள் மீதான வன்முறையையே சுட்டிக் காட்டுகிறது. முக்கியமாக நான்கு சுவர்களுக்குள் ஒடுக்கப்பட்ட குடும்ப அமைப்பு ; அது உலக நாகரிகம் சின்னமாக, புனிதமாக இன்றும் பேணப்படுகிறது. மதம், பரம்பரையான பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள், இவற்றைப் பேணிக்காப்பாற்றும் அரசுகள் உள்ளன. கலாச்சாரம் சார்ந்த சட்டங்கள் அரசால் இயற்றப்படும் சட்ட விதிகளைக் காட்டிலும் பலம் வாய்ந்தவைகளாக உள்ளன என்பதை நாவலாசிரியர் விவரித்துள்ளார்.

                ‘ சிறையும் குடிசையும் ’ இந்நாவல் பெருநகரங்களில் அமைந்துள்ள சேரிப்பகுதிகள், நாகரிக நகரங்களை ஒட்டியுள்ள சிறைகள் எனச் சித்தரிக்கிறது. ஆரம்பத்தில் மேல்நாடுகளில் குற்றம் செய்தவரைத் திருத்தும்  நோக்குடன் ‘ திருத்தல்  வீடுகள் ’ அமைக்கப்பட்டன.

                கைதிகளைத் தனிக் கொட்டடியில் அடைப்பது உடலை மட்டுமல்லாமல் மூளையையும், உளவியல் ரீதியாகப் பாதிப்படையச் செய்வது பற்றி முதலாளித்துவ அரசுகள் கவலைப்படுவதில்லை. குற்றங்களுக்கு தண்டனையல்லாது மனிதருக்கு உடலுக்கும், மூளைக்கும் தண்டனை தருவதாகும். ‘கம்பி எண்ணுவது ’ என்ற மரபுச் சொல்லும் அதன் பின்னரே ஏற்பட்டது.

                ஒரு நாட்டில் லட்சம் மக்களுக்கு எத்தனை பேர் சிறையில் உள்ளனர் என்பதை வைத்து அந்நாட்டின் பண்பாடு, நாரிகத்தை கணிக்க முடியும் என்பது சமூக ஆய்வாளர்களின் கூற்று.

 வேலையற்றவரை வெளியேயும் உள்ளேயும் வைப்பதன் மூலம் நாட்டின் சமூகத்து உழைப்பாளரைச் சமநிலைப்படுத்தவும் முடிகிறது. சிறைப்பட்டவரின் உழைப்புக்குக் குறைந்த கூலியே வழங்கப்படுகிறது.  அவர்கள் சிறையில் தொழிற்சங்கம் அமைத்துப் போராட முடியாது.  சிறகொடிந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும், சிறையில் உள்ளவர்கள் வாக்குரிமையையும் இழந்து விடுகின்றனர். சிறைச் சாலையில் உள்ள நடைமுறைகள், கொடுமைகள், வன்முறைகள் மற்றும் மதத்திற்கும், சட்டங்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பை வரலாற்று ரீதியாக இந்நாவல் எடுத்துரைக்கிறது.

‘ வன்முறை வடுக்கள் ’ இந்நாவல், வதை என்பது உடலால் மட்டும் ஏற்படுவதல்ல, மூளையிலும் ஏற்படுகிறது.  உடல் துன்பமும் மூளையையே பாதிக்கிறது.  அவ்வேளை பிற சிந்தனைகள் ஏற்பட மறுக்கின்றன. சத்துணவில்லாத குழந்தைகளும், தக்க மருத்துவ வசதியின்றி ஏழைகளும் இயற்கையாக மரணமடைவதில்லை ; வன்முறையால் கொல்லப்படுகிறார்கள் என்பதே உண்மை. மனிதனைக் கொல்வதற்காகத் துப்பாக்கிகளுக்கும், குண்டுகளுக்கும் அரசு செலவழிக்கும் பணம் குழந்தைகளின் சத்துணவிற்கும், ஏழைகளின் உணவுக்கும், மருத்துவத்துக்கும்  செலவழிக்கப்படுவதில்லை. இதனால் குழந்தைகளும், ஏழைகளும் மறைமுகமான வன்முறையால் கொல்லப்படுகின்றனர் . இந்த சமூகப் பிரச்சினையை முன்வைக்கிறது இந்நாவல்.

‘விலங்கில்லா அடிமைகள் ’ இந்நாவல் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையால் இலங்கைத் தமிழரின் குடும்ப அமைப்பில் சமூக அமைப்பில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, நாகரிக, நவீன உலகில் வாழ்கிறோம் என நம்பிக் கொண்டிருப்பவர்களும் அறிந்து உணராத அளவில் பல்வேறு வடிவங்களில் வியாபித்திருக்கும் அடிமை நிலையை விரிவாக அலசுகிறது.

‘போட்டிச் சந்தையில் ’ இந்நாவல் உலகமயக் கொள்கைகளால் எவ்வாறு பெண்கள் சுரண்டப் படுகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது.  பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் பண்ட விற்பனையில் பெண்களை ஈடுபடுத்தி போட்டிச் சந்தையின் கால்நடைப் பிராணியாக்குகிறது. பெண்கள் அடிமை நிலைக்கும், பாலியல் சுரண்டலுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை சித்தரிக்கிறது.

‘ கவர்ச்சிக் கலையின் மறுபக்கம் ’ நாவலில் சினிமா என்ற கவர்ச்சிக் கலையின் மறுபக்கத்தில், திரைமறைவில் நடைபெறும் ‘ நாடகங்களை ’ ஓரளவு சுட்டிக்காட்டுகிறார். மேலும், திரைப்படங்களில் மக்களின் சமூகப் பிரச்சனைகள், சமூக வளர்ச்சியை ஒட்டிய போராட்டங்களைப் பிரதிபலிக்காமல் பார்வையாளரின் விழிப்புணர்வை மழுங்கடிக்கவே பாலியலும், வன்முறையும் முதன்மைப்படுத்தப்படுகிறது.  பாலியலும், வன்முறையும் பாசிச அரசியலுக்கு வாய்ப்பான கோட்பாடாகும் என்பதையும் எடுத்துரைத்துள்ளார். அதனால் தான் தமிழக மக்கள் தங்கள் முதல்வரை திரையரங்குகளில் தேடும் நிலை இன்றும் தொடர்கிறது.

‘ஒர் அரசியலின் கதை ’ இந்நாவல் தமிழக அரசியலில் மலிந்து காணப்படும் ஊழல்கள், சீர்கேடுகள், மற்றும் போலி வாக்குறுதிகளை நம்பி அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படும் அப்பாவி மக்கள் குறித்து ஆழமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமகால அரசியலை முன்வைத்து இந்நாவலை படைத்துள்ளார்.

‘சிவமலரின் சமயம் ’ இந்நாவலில் சமயம், சாதி, நிற இன வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம், பால்நிலை, மொழிவெறி ஆகியன சுயசிந்தனை ஆற்றலைத் தடுக்கும் தூசுப்படலங்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

செ. கணேசலிங்கனின் பல நாவல்களில் பெண்விடுதலை மற்றும் பெண்ணியச் சிந்தனைகளை மிக ஆழமாகவும் தெளிவாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஓரு பெண்ணின் கதை, ஒரு குடும்பத்தின் கதை, இரண்டாவது சாதி, நீ ஓரு பெண், கவர்ச்சிக் கலையின் மறுபக்கம், குடும்பச் சிறையில், நான்கு சுவர்களுக்குள், புதிய சந்தையில், நரகமும் சொர்க்கமும் ஆகிய நாவல்களில் பெண்கள் எதிர் கொள்ளும் பன்முகப்பட்ட அழுத்தங்கள், பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்துள்ளார் .

தேசிய இனப்பிரச்சனைய மையமாக வைத்து, இளமையின் கீதம், பொய்மையின் நிழலில், விலங்கில்லா அடிமைகள், ஒரு மண்ணின் கதை, வதையின் கதை, அந்நிய மனிதர்கள், வன்முறை வடுக்கள், அயலவர்கள், ஈனத் தொழில், இலட்சியக் கனவுகள் முதலிய நாவல்களை எழுதி அளித்துள்ளார்.

மேலும், மரணத்தின் நிழலில், ஒரு அபலையின் கதை, சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை, அயலவர்கள், செல்வி, தேன் பறிப்போர், கடவுளும் மனிதனும், இரு நண்பர்கள், ஒரு விதவையின் கதை, தாயின் குரல், இருட்டறையில் உலகம், இன்பத்தின் எல்லையில், முகுந்தன் கதை, தீவரவாதி, மனமும் விதியும், சூறாவளிக்கு என்ன பெயர் ? எதிர் மறைகளின் ஒற்றுமை, ஒரு களவுக் காதல் கதை, கிழக்கும் மேற்கும், சிவமலரின் சமயம், இருமுகம், தந்தையின் கதை, பறிப்போரும் பண்பாடும், வாழ்வும் கடனும், இரத்த வடுக்கள், இயற்கையும் கடவுளும், மகளிர் மூவர், காதலும் வேட்கையும், சுசிலாவின் உயிரச்சம், மகளிர் இருவர், தோழியர் இருவர், மணேன்மணி காட்டும் ஊழிக்காலம், விமலா கூறும் செவிச் செல்வம், கறுப்பும் வெள்ளையும் உட்பட அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட நாவல்களை படைத்தளித்துள்ளார்.

                செ. கணேசலிங்கன் எழுதிய ‘ தேன் பறிப்போர் ’ நாவல் ஆங்கிலத்தில் க்ஷவைவநச ழடிநேல என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

                இவரது நாவல்கள் தமிழகத்திலும், இலங்கையிலும் இருபதுக்கும் மேலான மாணவர்கள் எம் பில் ஆய்வுக்கும், முனைவர் பட்ட ஆய்வுக்கும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                இவரது  ‘மரணத்தின் நிழலில் ’ என்னும் நாவலுக்கு 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பரிசு வழங்கிச் சிறப்பித்தது.  மலேசிய பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பிற்கு ஒரு பாடநூலாக ‘சடங்கு ’ நாவல் வைக்கப்பட்டுள்ளது. ‘அயலவர்கள் ’ நாவல் சென்னைப் பல்கலைக் கழக முதுகலைப்பட்டப் படிப்பிற்கு பாடநூலாக வைக்கப்பட்டு உள்ளது.

 “ சிறுவர்க்கான கதைகள் பகுத்தறிவை ஊட்டக்கூடியதாக, சிந்தனையை வளர்க்கக் கூடியதாக, சிந்திக்கும் ஆற்றலை வளர்ப்பதாக, அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவதாக அமைய வேண்டும் ” என சிறுவர்க்கான கதைகள் குறித்த சிந்தனையை அடிப்படையாக அறிவித்தார்.

உலக அதிசியங்கள், உலகச் சமயங்கள், உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள், உலக மகாகாவியங்கள் கூறும் கதைகள், புதிய ஈசாப் கதைகள், சிறுவர்க்கான சிந்தனைக் கதைகள் முதலிய நூல்களை சிறுவர்களுக்காக படைத்து அளித்து உள்ளார் .

ஈழத்துச் சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் செ. கணேசலிங்கனுக்கு முக்கிய இடமுண்டு என்பது இலக்கிய ஆய்வாளர்களின் கருத்தாகும்.

செ.கணேசலிங்கன் 1960 ஆம் ஆண்டு மீனாம்பாள் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். குந்தவி, குமரன், மான்விழி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

செ.கணேசலிங்கன் 1980 களின் பிற்பகுதியிலிருந்து தமிழகத்தில் சென்னை நகரில் வசித்து வருகிறார்.

இவரது கட்டுரைத் தொகுதிகள் மார்க்சிய பார்வையினை அடிப்படையாகக் கொண்டவை.  கலை, இலக்கியம், பெண் விடுதலை, பெண்ணியச் சிந்தனை, பழந்தமிழ் இலக்கியம், சமயம், உளவியல், பயண அனுபவங்கள் எனப் பல்வேறு பிரச்சனைகளை மார்க்சிய பார்வையில் ஆராய்கின்றன.

பொதுவுடைமைச் சித்தாந்தத்தைத் தெளிவாகவும், எளிமையாகவும்,விளக்கும் விதத்தில், சாதாரணமானவர்களும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் மான்விழிக்கு கடிதங்கள், குமரனுக்கு கடிதங்கள், குந்தவிக்கு கடிதங்கள், அறிவுக் கடிதங்கள் எனும் தொகுதிகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

‘குமரன்’ இதழ் 1979 ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது. குமரன் இதழ் மூலம்  ஈழத்து இதழியல் வளர்ச்சியில் செ.கணேசலிங்கனுக்கு முக்கிய இடமுண்டு. ‘குமரன் ’ இதழ் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார, பன்னாட்டு இதழாக வெளிவந்தது. ‘குமரன் ’ இதழின் ஆசிரியராக செ. கணேசலிங்கன் விளங்கினார். கலை இலக்கிய குறிப்புகள், கேள்வி பதில்கள், கவிதைகள், துணுக்குகள், கட்டுரைகள், சிறுகதைகள், இலக்கிய உலகில் – எனப் பல பகுதிகள் இதழில் இடம் பெற்றிருந்தன.  மேலும், உலகப் புகழ் பெற்ற பிறமொழிக் கதைகள், மார்க்சிய கட்டுரைகள், மார்க்சிய நோக்கிலான இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், கலை இலக்கியம் குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டது.

குமரன் பதிப்பகம் மூலம் நூற்றுக்கணக்கான நூல்களை தமிழ்நாட்டிலும், கொழும்பிலும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

செ. கணேசலிங்கன் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த பின்னர் கூhந ழiனேர ஆங்கில நாளிதழில் புத்தக மதிப்புரைகள் எழுதியுள்ளார்.

பெண்ணடிமை தீர, கலையும் சமுதாயமும், அழகியலும் அறமும், பல்சுவைக் கட்டுரைகள் முதலிய கட்டுரை நூல்களையும் எழுதி வழங்கியுள்ளார்.

மு. வ. நினைவுகள், கைலாசபதி நினைவுகள், பாலுமகேந்திரா நினைவுகள் முதலிய நூல்களை படைத்துள்ளார்.

நவீனத்தமும் தமிழகமும், பகவத் கீதையும், திருக்குறளும், கனவுகளின் விளக்கம், குறள் கூறும் பாலியல் கோட்பாடு, மாக்கியவல்லியும் வள்ளுவரும், பெண்ணியப் பார்வையில் திருக்குறள், சித்தர் சித்தாந்தமும் சூபிசமும், அர்த்த சாஸ்திரமும் திருக்குறளும்- முதலிய ஆய்வு நூல்களையும்  தமிழுலகிற்கு படைத்தளித்துள்ளார்.

‘திரும்பிப் பார்க்கிறேன் ’ என்ற சுயசரிதை நூலையும், சில பயணக் குறிப்புகள் –அமெரிக்கா, இங்கிலாந்து என்ற பயண நூலையும் எழுதி அளித்துள்ளார்.

அபலையின் கடிதம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.

“மார்க்சியத் தளம் சார்ந்த படைப்பாளியாக அறிமுகமாகி, சமுதாய விமர்சனப் பாங்கான நாவலிலக்கிய முயற்சிகளுக்கு ஒரு திடப்பாங்கான வடிவமைப்பைத் தரும் வகையில் தொடர்ந்து செயற்பட்டவர் என்பதே செ. கணேசலிங்கன் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் ஆகும். ” எனப் பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் புகழ்ந்துரைத்துள்ளார்.

“ மனிதன், மனிதனால் உருவாக்கப்பட்ட சமூகத்தின் தீய, கொடூரமான சக்திகளுக்குப் பலிக்கடாவாகியுள்ளான். மனிதன் சமூகத்தின் தீய சக்திகளால், சுரண்டும் வர்க்கத்தினால் அடக்கி ஒடுக்கப்பட்டு, சுரண்டிச் சூறையாடப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு அவலமான துன்ப துயரங்கள் நிறைந்த சோகமயமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான். மனிதனை இந்தத் தீயசக்திகளைக் கொண்ட சுரண்டும் வர்க்கத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுத்து அவனை மேம்படுத்த வேண்டும். இதுதான் உன்னதமான மானிட நேயம் ” – இந்த உன்னத மானிடத்துவத்தை செ.கணேசலிங்கன் படைப்புகளில் நாம் காண்கிறோம் என ஈழத்துக் கவிஞர் நீர்வைப் பொன்னையன் புகழ்ந்துரைத்துள்ளார்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் கங்கத்தை உருவாக்கி கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றியவர்.

தமிழறிஞர் மு. வ., முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதன், பயண எழுத்தாளர் சோமலே ஆகிய தமிழறிஞர்களுடனும், திரைப்பட இயக்குநர் பாலமகேந்திராவுடனும் நெருங்கிய  நட்பு கொண்டிருந்தார்.

“ செ. கணேசலிங்கன் கதைகளில் இடம் பெறும் அதிகமான பாத்திரங்கள் அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும், சுரண்டலுக்கும் எதிராகப் போராடும் போர்க்குணம் மிக்கவையாக விளங்குகின்றன. ” எனப் பேராசிரியர் க. அருணாசலம் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

“ முற்போக்குச் சிந்தனையுடன் மனிதாபிமானமிக்க படைப்புகளை தந்த செ.கணேசலிங்கன் எழுதுவதைப் போல வாழ்ந்து காட்டியவர்.  எழுத்தும் வாழ்வும் ஒன்றாகவே உள்ளது. ” என ஈழத்து எழுத்தாளர் அந்தனி ஜீவா பதிவு செய்துள்ளார்.

“ கருத்தை இலக்கியத்தோடு மட்டும் வைத்துக் கொண்டு முற்போக்கு- பிற்போக்கு பேதமற்ற நட்புறவை சகல எழுத்தாளரோடும் கொண்டுள்ள ஒரு – சிலவேளை ஒரே-ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கன் ” என்று இலக்கு இதழ் (1996 மே) பாராட்டியுள்ளது.

பல்துறைப் புலமை பெற்ற எழுத்துப் போராளி, தமது எழுத்தில் நேர்மையையும், உண்மையையும் வெளிப்படுத்தியவர். ஈழத்து முதுபெரும் அறிஞர். இலக்கிய படைப்பாளிகளுக்கு ஊக்கமளித்து ஆதரிப்பவர், ஆக்க இலக்கியப் படைப்பாளி எனப் பன்முக ஆற்றல் படைத்தவர் செ. கணேசலிங்கன்.

“ கலை, இலக்கியங்கள் மயக்க மூட்டும் மதுவாகக்கப்படக் கூடாது. கலை, இலக்கியங்கள் மூலம் நல்ல உயர்ந்த கருத்துகளை மனதில் பதிய வைக்கலாம். புறநிலைப் பண்ட உற்பத்திகள் எவ்வாறு விஞ்ஞான ரீதியாக வளர்க்கப்படுகிறதோ, அதே போல அகநிலை உற்பத்தியான கலை, இலக்கியங்களும் விஞ்ஞான ரீதியாக, மனித சமுதாயத்தை மாற்றி அமைக்கக் கூடிய உந்து சக்தியாக வளர்க்கப்பட வேண்டும்.” என கலை இலக்கிய வளர்ச்சி குறித்து செ. கணேசலிங்கன் தமது சிந்தனையை பதிவு செய்துள்ளார்.

“ படைப்பாளிகள் சமூகத்தின் ஒரு பகுதிதான். சுமூகத்தில் தான் வாழ்கிறான். சமூக நிகழ்வுகளின் பாதிப்புகள் இவர்களது படைப்புகளில் வெளிப்படுகின்றன. கலை, இலக்கியப் படைப்புகள் மக்களின் மனத்தை உழுது, பண்படுத்தி வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் கடமையைச் செய்ய வேண்டும்.” என்று படைப்பாளிக்கு அறைகூவல் விடுக்கும் செ.கணேசலிங்கன் 90 வயதைக் கடந்த பின்னும் தமது எழுத்துப் பணியை சமூகத்துக்கு செய்து கொண்டிருக்கிறார்.

- பி.தயாளன்

Pin It