அண்மைப் படைப்புகள்

கீற்றில் தேட

சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலம் அது. ஒருமுறை மதுரையில் உள்ள இளம் தேசபக்தர்கள் ஒன்றுகூடி மதுரை நகரில் விடுதலை நாளை வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள கோபுரங்களின் உச்சியில் சுதேசிக் கொடியை பறக்கவிடத் திட்டமிட்டனர், அப்பொதெல்லாம் அவ்வாறு கொடியைக் கட்டினால் கட்டுபவர்களின் எலும்புகள் எண்ணப்படும்.

Madhurai Templeமதுரையின் துடிப்புமிக்க வீர இளைஞர்கள் அன்று இரவு விடுதலை நாளைக் கொண்டாடப்படும் பொருட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தில் சுதேசிக்கொடி கட்டப்படும் என்ற செய்தியைத் துணிச்சலுடன் அறிவித்தனர். அச்செய்தி காற்றில் கலந்து காவல் துறையின் காதுகளையும் எட்டியது. எட்ட வெண்டுமென்று திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்தி தானே அது!

நூற்றுக்கணக்கான இரும்புத் தொப்பிப் போலீசார் ஒரு கையில் லத்தியுடனும், இன்னொரு கையில் மூங்கில் கேடயத்துடனும் குவிந்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவாயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீதமுள்ள மூன்று கோபுரங்களில் கொஞ்சம் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டனர். சூரியன் மறைத்து இருள் சூழ்ந்தவுடன் காவல் துறையினரின் படபடப்பு அதிகரித்தது! கண் துஞ்சாமல் கோயிலின் வாயிலில் விழிப்புடன் காத்திருந்தனர்!

அச்சமில்லாமல் “கோயிலின் உச்சியிலுள்ள கலசத்தில் கொடி எற்றுவோம்” என்று அறிவித்த விடுதலை வீரர்கள், தங்களை ஏமாற்றி கோபுரத்தின் மீது கொடியேற்றிவிட்டால், தங்களுக்குப் பெருத்த அவமானம் என்று கருதிய காவல் துறையினர், தங்களது உயர்மட்ட அதிகாரிகளால் மிகவும் உஷார்படுத்தப்பட்டனர்.

இறுக்கமும் இருட்டும் இரண்டறக் கலந்து விட்ட இச்சுழலில் நிசப்தம் நிலவியது. கோயில் மதிற்சுவருக்கு கொஞ்சம் தள்ளி ஓர் ஒற்றைத் தென்னை மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்து கம்பீரமாகக் காட்சியளித்தது அந்தத் தென்னை மரத்தில் ஓர் இளைஞன் மேற்சட்டையோ, வேட்டியோ இல்லாமல் வெறும் டவுசர் மட்டும் அணிந்தவாறு கிடுகிடுவென ஏறினான்.

ரோந்து செல்லும் போலிசார் கண்கணாமல் மறைந்து வேறு திசை நோக்கித் திரும்பிய பிறகு, தென்னைமரத்தின் உச்சிக்குச் சென்று அங்குள்ள குருத்தோலையை இறுக்கிப்பிடித்து நேராக நிமிர்ந்து நின்றான். அப்படியே தென்னை மரத்தை ஆட்டி ஆட்டி வளைத்தான், மீண்டும் மீண்டும் வளைத்தான். இதற்குமேல் வளைத்தால் தென்னைமரமே ஒடிந்து விடும் என்கிற அளவுக்கு நன்றாக வளைத்தான்.

இறுதியாக தென்னை மரத்திலிருந்து கோயில் மதிற் சுவரின் மீது எட்டி குதித்தான். மதிற் சுவர் அகலமானதாக இருந்தது. சுவரின் மீது எட்டிக்குதித்த பிறகு அப்படியே நேராக நின்றால் தூரத்திலிருந்த போலீசார் பார்த்துவிடக்கூடும். பார்த்துவிட்டால் அங்கிருந்தே சிட்டுக்குருவியைப் போன்று சுட்டுக் கொன்றுவிடக் கூடும். ஆகவே, இராணுவத்திலும் என்.சி.சி யிலும் முழங்கை முட்டியைத் தேய்த்து ஊர்ந்து செல்வார்களே அப்படி கோபுரத்தின் அடிவாரம் வரை குப்புறப்படுத்து ஊர்ந்து சென்றான். இவ்வாறு ஐந்து ஆறு பேர் நான்கு கோபுரங்களின் அடிப்பகுதியில் நின்றனர்.

நுழைவாயிலுள்ள கோபுரத்தின் அடிவாரத்திலிருந்து கீழே பார்த்தால் நூற்றுக்கணக்கான போலீசார் நிற்கின்றனர். மேலே பார்த்தால் கோபுரத்தின் உச்சி தெரியாத அளவுக்கு உயரம். கும்மிருட்டில் சாமி சிலைகளைப் பிடித்து கிடுகிடுவென கோபுரத்தின் மீது ஏறினர். கோபுரத்தின் உச்சியை அடைந்தனர்.

டவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த சுதேசி கதர்க்கொடியை கலசத்தில் கட்டினர். ஏறிய வண்ணமே இறங்கினர். மதிற்சுவரில் மீண்டும் குப்புறப்படுத்து ஊர்ந்து சென்று, பின் பகுதிக்குச் சென்று பின்னர் கீழே குதித்துத் தப்பினர். நடந்தது எதுவுமே தெரியாத போலீசார் இரவு முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்விழித்து நின்று கொண்டிருந்தனர்...!

காலை எழுந்தவுடன் மீனாட்சியம்மன் கோயிலின் நான்கு மாடவீதிகளிலும் நின்றவர்கள் கோபுரத்தின் உச்சியில் சுதேசிக் கொடி பறப்பதைப் பார்த்து பரவசமடைந்தனர். முந்தைய நாள் இரவு கோபுரத்தில் தேசபக்த இளைஞர்கள் கொடியேற்றப் போகிற செய்தி முன்கூட்டியே நகரம் முழுக்க பரவியிருந்த காரணத்தால், என்ன ஆகுமோ?’ என்று நெஞ்சில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்த தாய்மார்களுக்கு, பட்டொளி வீசிப் பறந்த கொடியைப் பார்த்தவுடன், காவல் துறையின் காட்டுத் தர்பாருக்கு நாட்டுப்பற்று மிக்க இளைஞர்கள் அகப்படவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தனர்.

இந்தச் செய்தியைக் கள ஆய்வின்போது தெரிவித்த மதுரை தியாகி ஐ.மாயாண்டி பாரதியிடம், “கோபுரத்தில் ஏறியபோது கீழே நின்று கொண்டிருந்த போலிசார் பார்த்திருந்தால் ...?” என்று கேட்டோம். “பார்த்தால் ஈவு இரக்கமின்றி கடுங்கோபத்துடன் சுட்டுத் தள்ளுவார்கள் என்று அனைவருக்கும் தெரியும். கோபுரத்தின் மீது கொடியை ஏற்றுவோம்; இல்லையெனில் கொடியேற்ற முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டு செத்து மடிவோம் என்ற முடிவோடுதான் இச்செயலில் அனைவரும் ஈடுபட்டனர்” என்றார் உணர்ச்சிகரமாக.

- (ஸ்டாலின் குணசேகரன் எழுதிய ‘வரலாற்றுப் பாதையில்’ நூலிலிருந்து)

Pin It

சிறு வயதிலேயே சிறப்பாகப் பாடும் திறன் இயல்பாகவே அமையப் பெற்றவர்தான் பிற்காலத்தில் தமிழ்நாட்டின் இசை உலகில் புகழின் உச்சிக்கு உயர்ந்த கே.பி.சுந்தராம்பாள். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ‘கொடுமுடி’ என்கிற ஊரில் பிறந்தார். பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிராத ஏழ்மையான குடும்பம்.

சிறுமி சுந்தராம்பாளை பெரியவர்கள் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்ததுடன் பூஜை நடைபெறும் நேரங்களில் கோயிலில் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் கோயிலில் பாட, படிப்படியாக கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. இவ்வாறு சுந்தரம்பாள் ஒரு பாடுகிற பெண் என்று கொடுமுடிப் பகுதியில் பலருக்குத் தெரிந்தது.

கொடுமுடி சுந்தராம்பாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர். கரூர் இவரது தாயாரைத் திருமணம் செய்து கொடுத்த ஊர். சுந்தராம்பாள் கொடுமுடியில்தான் பிறந்தார், வளர்ந்தார். கொடுமுடிக்கும் கரூருக்கும் அதிகத் தூரமில்லை. இருப்பினும் கொடுமுடி ரயிலடியிலேயே சுந்தராம்பாளின் வீடு இருந்ததால் ரயிலில்தான் கரூருக்குப் பயணம் செய்வது வழக்கம்.

ஒருமுறை சுந்தரம்பாள் கொடுமுடியிலிருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். சக பயணிகளாக அந்த ரயிலில் வந்த கொடுமுடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுந்தராம்பாளைப் பார்த்ததும் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் பாடத் தொடங்கியதும் அந்தக் குடும்பத்தினருடன் சேர்ந்து, அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் ஆர்வமாகக் கேட்டு மகிழ்ந்தனர்.

இந்த ரயில் பெட்டியில் வேலு நாயர் என்பவரும் இருந்தார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், கும்பகோணத்தில் நாடகக் கம்பெனி நடத்திவந்தார். தான் இயக்குகிற நாடகங்களில் குழந்தை வேடங்களில் நடிப்பதற்குப் பொருத்தமான, திறன் வாய்ந்த சிறுவர் சிறுமியரைத் தேடிக் கொண்டிருந்த வேலு நாயருக்கு சுந்தராம்பாளின் பாடும் திறனைத் தெரிந்து கொண்டவுடன், இவரே பொருத்தமாக இருப்பார் என்பதை உணர்ந்தார்.

தனது தாய்மாமா மலைக்கொழுந்துவுடன் ரயிலில் சென்று கொண்டிருந்த சுந்தராம்பாளையும் அவரது மாமாவையும் அணுகி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று, அவர்களை நேராக கும்பகோணம் அழைத்துச் சென்றார் வேலு நாயர்.

கும்பகோணத்தில் நாடகத்தில் பங்கேற்றுப் பாடி ரசிகர்களின் பலத்த ஆதரவை குறுகிய காலத்திலேயே பெற்றார் சுந்தராம்பாள். பாட்டு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என்று இரண்டிலும் ஒன்றைவிட ஒன்று சிறப்பு என்று பார்த்தோரும், கேட்டோரும் பரவசப்படும் அளவுக்கு திறன்களை முழுமையாக வெளிப்படுத்தினார். காலப்போக்கில் கே.பி.சுந்தராம்பாளுக்காகவே நாடகம் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதியது. பேசும் சினிமாப் படம் வராத காலமென்பதால் நாடகங்கள் கொடிகட்டிப் பறந்த காலம் அது.

கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் இணைந்து நாடகங்களில் நடித்துப் பாடியது ரசிகர்களுக்கு இன்னும் ஊக்கமளித்தது. கும்பகோணத்தில் மட்டுமல்லாது தமிழகத்தின் முக்கியமான பல ஊர ்களில் இந்நாடகங்கள் அரங்கேறின. சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் ஒருவரையொருவர் காதலித்து 1924இல் திருமணம் செய்து கொண்டனர்.

கே.பி.சுந்தராம்பாளும் கிட்டாப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், ஆங்கிலேயர்களின் அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். வெள்ளையர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.

நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர். சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார்.

1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும்தான் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். ‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

அதே போன்று கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்.

திருமணமான ஒன்பதாம் வருடத்தில் இருபத்தெட்டு வயது இளைஞராக இருந்தபோது கிட்டப்பா மரணமடைந்தார். அப்போது சுந்தராம்பாளுக்கு இருபத்து நான்கு வயது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாடிக்கொண்டிருந்தபோதுதான் கணவர் கிட்டப்பா இறந்த செய்தி சுந்தராம்பாளுக்குக் கிடைத்தது. பாடுவதை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு விரைந்த சுந்தராம்பாள் மீண்டும் பாடுவதற்கோ, நடிப்பதற்கோ வீட்டைவிட்டு வெளியில் வரவேயில்லை.

காந்தியடிகளின் தமிழகச் சுற்றுப் பயணத்தின் போது இந்தச் செய்தியை காந்தியடிகளிடத்தில் சிலர் சொல்ல, காந்தியடிகள் நேராக கே,பி.சுந்தராம்பாளை கொடுமுடி சென்று சந்தித்து, ஆறுதல் கூறிவிட்டு எஞ்சியுள்ள வாழ்வை நாட்டு விடுதலைக்குக் குரல் கொடுப்பதில் கழிக்க வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து மீண்டும் மேடைகளில் தோன்றி தனது தேசபக்தக் கடமையை முன்னைப் போலவே செவ்வனேயாற்றியவர் சுந்தராம்பாள். திரைப்படத்திற்குச் சென்ற சுந்தராம்பாள் அதில் உச்சியை அடைந்தார். உலகம் போற்றும் வித்தியாசமான நடிகையாக உயர்ந்தார்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக விளங்கினார்.

அகில இந்தியாவின் சிறந்த பாடகி என்ற அங்கீகாரம் பெற்ற அவர், இசை உலகில் பெறாத விருதுகளேயில்லை. ‘கொடுமுடி கோகிலம்’ என்று அண்ணா இவரைப் புகழ்ந்து எழுதினார். எழுபத்து இரண்டு அர்த்தமுள்ள ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார் கே.பி.சுந்தராம்பாள்.

-கே.பி.சுந்தரம்பாள்

Pin It

1932 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி காந்தியடிகள் தனது இரண்டாவது சட்டமறுப்பு இயக்கத்தினைத் துவக்கினார். மறுநாள் ஆங்கிலேய அரசு காந்தியடிகளைக் கைது செய்து எரவாடா சிறைக்கு அனுப்பியது. காந்தியடிகளின் திடீர் கைது நாடெங்கிலும் கொந்தளிப்பை உருவாக்கியது.

கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை அகற்ற பாளையக்காரர்கள் ஒன்றுபட்டு ஏற்படுத்தியிருந்த தீபகற்பக் கூட்டிணைவில் தெற்கே மருதுபாண்டியர், திண்டுக்கல்லில் கோபாலநாயக்கர் எனக் கூட்டிணைவை வழிநடத்தி வந்தனர். இதில் மலபாரையும், தமிழகத்தையும் தென்னிந்தியப் புரட்சிக் கண்ணியில் இணைப்பதற்கான இடமாக விளங்கியது கொங்கு மண்டலம். அதில் ஆங்கிலேயர்களுக்கு அடங்க மறுத்த பாளையக்காரர்களில் ஒருவர் சின்னமலை.

chinnamalai_கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தைக் கருவறுக்க ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, திருநெல்வேலி எனப் பரந்து விரிந்த கூட்டிணைவை உருவாக்க மராட்டியப் போராளி "துந்தாஜிவாக்'கைச் சந்திக்கச் சென்ற மூன்று தூதுக்குழுவில் சின்னமலையின் பெருந்துறைப்பாளையமும் பங்கேற்றது. கொங்குப் பகுதி மைசூர் ஆட்சியின் கீழ் வரிவசூல் பகுதியாக இருந்தாலும் பொதுஎதிரியான கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை வீழ்த்த நாம் ஒன்றுபட வேண்டும் என்ற திப்புவின் வேண்டுகோளை ஏற்று ஆங்கிலேயப் படைகளை திப்புவுடன் சேர்ந்து எதிர்த்துப் போராட 10,000 படை வீரர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார் சின்னமலை. அங்கே ஜாக்கோபின் என்ற பிரெஞ்சு புரட்சி வீரர்களால் சின்னமலை படைக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, சீரங்கப்பட்டினப் போரில் சிறப்பாக மாலவல்லி எனுமிடத்தில் ஆங்கிலேயப் படைக்குப் பெருத்த சேதத்தையும் விளைவிக்கிறது கொங்குப்படை.

மேலும் நெப்போலியனுக்கு திப்புவின் கோரிக்கையோடு பிரான்சுக்குத் தூதுசெல்லும் வேலையை தீரன் சின்னமலையின் வீரர் கருப்பச்சேர்வை செய்கிறார். திப்புவின் முடிவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தைத் தவிர பிற பகுதிகள் கும்பினிப் படை வசமாகின்றன. அடங்க மறுக்கும் சின்னமலைக்கு ஆங்கிலேயப் படை குறி வைக்கிறது.

அறச்சலூர்ப் போரில் ஆங்கிலப்படையைத் துரத்தி அடிக்கிறார் சின்னமலை. காவிரிக்கரைப் போரில் 1801ல் கர்னல் மாக்ஸ்வெல் படையைத் துரத்துகிறார். அதே மாக்ஸ்வெல்லின் தலையை 1802இல் ஓடாநிலைப் போரில் வெட்டி வீசினார் சின்னமலை. வெறியோடு 1803இல் குதிரைப்படையுடன் சின்னமலையைக் கைது செய்ய வந்த ஜெனரல் ஹாரிஸின் படைகள்மீது எறிகுண்டை வீசித் துரத்தியடிக்கிறார் சின்னமலை. மீண ்டும் பெரும்படையுடன் ஜெனரல் ஹாரிஸ் வருவதை அறிந்த சின்னமலை ஓடாநிலைக் கோட்டை வாசலில் பீரங்கியால் தாக்குவது போல வெறும் பீரங்கியை வைத்துவிட்டு கோட்டையிலிருந்து தலைமறைவாகி, காங்கேயம் சென்று அங்கிருந்து வாழை வியாபாரி போன்ற வேடத்தில் பழனி சென்று பிற பாளையக்காரர்களுடன் கும்பினிப் படையைத் தாக்கத் திட்டமிடுகிறார். எட்டப்பனைப் போல இங்கும் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக் கொடுக்க தீரன் சின்னமலை கும்பனிப் படையால் கைது செய்யப்படுகிறார்.

கும்பினி ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டால் விட்டுவிடுவதாக ஹாரிஸ் பேரம்பேசியும், சோரம் போகாத தீரனும் அவனது சகோதரர்கள் பெரியதம்பி, கிலேதர் ஆகியோருடன் மூவரையும் சங்ககிரி மலைக்கோட்டையில் ஆலமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றது கும்பினி ஆட்சி. கல்லாய்ச் சமைந்த துயரம் என 1500 அடி உயர சங்ககிரி மலை நம் கண்முன்னே தீரன் சின்னமலையின் நாட்டுப்பற்றை உயர்த்திக் காட்டி நிற்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு இந்த மண் அடிபணியாது என்று கல்லும் மண்ணும் நம்மைப் பார்த்து நம்பிக் கொண்டிருக்கிறது. மறந்து விடவேண்டாம்! 

- ராஜகிரி கஸ்ஸாலி

Pin It

25.10.1801ஆம் நாளன்று புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாதத் தொண்டைமான் கம்பெனியின் சென்னை நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம்..
திப்பு சுல்தான் மற்றும் மருதுவின் வீரமும், நாட்டுப்பற்றும், தியாகமும் தொண்டைமானுக்கு விளங்காததில் வியப்பில்லை. வீரத்தைப் போலவே வரலாறு நெடுகிலும் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் துரோகம் எப்போதும் தன்னை உயர்வாகவே கருதிக் கொள்கிறது. கருங்காலித்தனம், காரியவாதம், சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் ஆகியவற்றையே புத்திசாலித்தனம் என்று கருதி தன்னை மெச்சிக்கொள்ளும் துரோகம், தான் பிழைத்திருப்பதையே புகழுக்குரியது என்பதற்கான ஆதாரமாய்க் காட்டுகிறது. ஆயினும் வரலாறு எதிர்காலத்தில் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது.

Vellore portஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக எழுந்த ஹைதர் அலி தனக்கு உதவுமாறு தொண்டை மானைக் கேட்கிறார். அவன் துரோகிக்கே உரிய ராஜ விசுவாசத்துடன் மறுக்கிறான். சினம் கொண்ட ஹைதர் அலி தஞ்சாவூரைக் கைப்பற்றிய பிறகு புதுக்கோட்டையின் மீதும் படையெடுக்கிறார். அப்போதும் ஆங்கிலேய விசுவாசத்தில் தொண்டைமான் உறுதியாக இருக்கிறான். நாயினும் மேலான இந்த நன்றிப் பெருக்கைக் கண்டு வெள்ளையர்களே சிலிர்த்திருக்கக் கூடும். இச்சமயத்தில்தான் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க' விஜய ரகுநாதத் தொண்டைமான் 1789ல் பட்டத்திற்கு வருகிறான். திப்பு கொலை செய்யப்பட்ட நான்காவது மைசூர் போரில் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் படையனுப்பி உதவவும் செய்கிறான்.

ஹைதர் அலி, திப்பு சுல்தானை வெல்வதற்கு பூனாவை ஆண்டுவந்த மராத்திய பேஷ்வாக்களின் ஆதரவு கம்பெனிக்குத் தேவைப்பட்டதுதான் வெள்ளையர்களின் இந்த நியாய உணர்ச்சிக்குக் காரணம். இதனால் கைதி துளஜாஜி மீண்டும் மன்னனானான். கம்பெனிக்கு ஆண்டு தோறும் 12 லட்சம் ரூபாய் பாதுகாப்புக் கட்டணம் தருவதாகவும், தேவைப்படும் போது கோட்டை கொத்தளங்களைக் கம்பெனிக்கு அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டான். இப்படி கம்பெனி போட்ட பிச்சையில் உயிர் பிழைத்தது தஞ்சை மராத்திய வம்சம்.

வேலூர்க் கோட்டையில் 1800 சிப்பாய்களும் 400 வெள்ளையர்களும் இருந்தனர். வேலூரில் இருந்த 23ஆவது ரெஜிமண்ட்டின் 2ஆவது பட்டாலியன் முழுவதிலும், முதல் பட்டாலியனின் 6 கம்பெனிகளிலும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து 1801ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட வீரர்கள் நிறைய இருந்தனர். மற்ற பிரிவுகளில், தமது மன்னனின் தியாகத்தை இன்னமும் மறக்க இயலாத திப்புவின் இராணுவத்தைச் சேர்ந்த வீர ர்களும் விரவியிருந்தனர். திப்புவின் ஆறு மகன்களையும், எட்டு மகள்களையும் நூற்றுக்கணக்கான அவரது உறவினர்களையும் வேலூர்க் கோட்டையின் அரண்மனைகளில் சிறை வைத்திருந்தது கம்பெனி அரசு. சிறைப்பட்டிருந்த போதிலும் அரண்மனை வாழ்வு அவர்களைச் சுகபோகிகளாகவும், மந்தபுத்தி உடையவர்களாகவும் மாற்றி விடும் என்று எதிர்பார்த்தார்கள் வெள்ளையர்கள்.

ஆனால், திப்புவின் மூத்தமகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் சிறையிலிருந்தபடியே சிப்பாய்களின் ஆங்கிலேய எதிர்ப்புணர்ச்சியை அரசியல் ரீதியாகப் பட்டை தீட்டிக்கொண்டிருந்தனர். சிறை வைக்கப்பட்ட நாளிலிருந்தே தூந்தாஜி வாக்குடனும், மைசூரில் கிருஷ்ணப்பா நாயக் தலைமையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பாளையக்காரர்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களது போராட்டத்தை ஊக்கப்படுத்தி வந்தார் ஃபத்தே ஹைதர்.

இதுபோக மைசூர்ப் பகுதியில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய 3000 மக்கள் வேலூர்க் கோட்டையின் சுற்றுவட்டாரத்தில் குடியேறியிருந்தார்கள். திப்புவின் மைசூரைச் சேர்ந்த ஃபக்கீர்கள் எனப்படும் ஏழை இசுலாமியச் சாமியார்கள் வேலூர் வட்டாரங்களில் வெள்ளையர்களை எதிர்த்து "மீண்டும் திப்புவின் அரசை நிறுவுவோம்' என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும், பாடியும், பொம்மலாட்டம் நடத்தியும் வந்தனர். வேலூர்க் கோட்டை கிளர்ச்சியின் கொதிகலனாக மாறிக் கொண்டிருந்தது. இந்நிலையில்தான் ஆங்கிலேயத் தளபதிகள் கிராடோக், அக்னியூ முதலியோர் ‘தலைப்பாகை, மீசை' குறித்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகின்றனர். இவை தம்மை ஐரோப்பிய அடிமைகளாக்கும் சதித்திட்டம் என சிப்பாய்கள் குமுறுகின்றனர்.

வேலூரிலும், வாலாஜாவிலும் இருந்த சிப்பாய்கள் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய தலைப்பாகைகளை அணிய மறுத்துக் கலகம் செய்கின்றனர். இதைத் தூண்டிவிட்ட சுபேதார் வேங்கடநாயர் (ஏற்கெனவே திப்புவிடம் பணிபுரிந்தவர்) கைது செய்யப்படுகிறார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இரண்டு ஹவில்தார்களுக்கு 900 கசையடிகள் தரப்படுகின்றன. ஒரு தலைப்பாகை பற்றிய பிரச்சினைக்கு வெள்ளையர்கள் அளித்த இந்தக் கொடூர தண்டனைகள் சிப்பாய்களின் தன்மான உணர்ச்சியை மேலும் தூண்டி விடுகின்றன.

அந்தத் தன்மான உணர்ச்சி அரசியல் போராட்டமாக மாறுகிறது. ‘இனி, மீசையும் தலைப்பாகையும் பிரச்சினையல்ல, கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான் பிரச்சினை' என்று மாறுகிறது சிப்பாய்களின் போராட்டம். "வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றி எட்டு நாட்கள் வைத்திருந்தால் போதும், மீண்டும் திப்புவின் ஆட்சியை நிலைநாட்டலாம்'' என்று சிப்பாய்களும், திப்புவின் வாரிசுகளும் முடிவெடுக்கின்றனர். அதன் பின் சிப்பாய்களின் இரகசியக் கூட்டங்கள் நடக்கின்றன. சிப்பாய்கள் வாள் மற்றும் குர்ஆன் மீது சத்தியம் எடுத்துக்கொண்டு சபதத்தை நிறைவேற்றுவதாய் உறுதி எடுக்கின்றனர். இந்தச் செய்தி வேலூரில் மட்டுமல்ல, வாலாஜா, ஆற்காடு, சென்னை, ஜதராபாத் முதலிய இராணுவ முகாம்களில் இருக்கும் வீரர்களுக்கும் ரகசியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏனைய முகாம்களில் இருக்கும் வீரர்கள் வேலூர்க்கோட்டையின் வெற்றியைத் தெரிந்து கொண்டதும் கிளர்ச்சி செய்ய வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது.

சுபேதார் ஷேக் ஆதமும், ஜமேதார் ஷேக் ஹுசைனும் சிப்பாய்களின் தலைவர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 1806 ஜூன் 17 அன்று எழுச்சியைத் தொடங்க வேண்டும் என நாள் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டம் முஸ்தபா எனும் துரோகிச் சிப்பாயின் மூலம் வெள்ளையர்களுக்குக் கசிந்து விடுகிறது. வெள்ளையர்கள் அதை நம்பவில்லை. என்றாலும் பாதுகாப்பு கருதி கிளர்ச்சிச் தலைவர்கள் திட்டத்தை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறார்கள். இந்தத் தள்ளி வைப்பு ஏனைய முகாம்களிலிருந்த வீரர்களுக்குத் தெரியாததால் ஜூன் 17 அன்று திட்டமிட்டபடி எழுச்சி தொடங்காதது அவர்களிடம் விரக்தி யையும் ஏற்படுத்தியிருந்தது.

இருப்பினும், ஜூலை 10 ஆம் தேதி கிளர்ச்சி வெடித்தது. 9ஆம் தேதி இரவு அமைதியாக இருந்ததால் படை முகாமைச் சுற்றிப்பார்க்கும் பொறுப்பை வெள்ளைத் தளபதிகள் இந்திய அதிகாரிகளிடமே ஒப்படைத்தனர். வேலூர்க் கிளர்ச்சியில் சிப்பாய்கள் மட்டுமல்ல, கம்பெனிப் படையின் இந்திய அதிகாரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதக் கிடங்கைக் காவல் காத்துநின்ற வெள்ளைக்கார வீரர்களைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றி அதிகாலை 2 மணிக்கு கிளர்ச்சியைத் தொடங்குகின்றனர் சிப்பாய்கள். பின்னர் வெள்ளையர்களின் குடியிருப்புக்களை நோக்கிச் சுடத் தொடங்குகின்றனர். அத்தகைய சூழ்நிலையிலும் பெண்கள், குழந்தைகளின் மீது சிப்பாய்களின் விரல் கூடப்படவில்லை. 14 அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்ட வெள்ளையர்கள் இந்தியச் சிப்பாய்களால் கொல்லப்பட்டனர். அவர்களில் வேலூர்க் கோட்டையின் ஆணை அதிகாரி கர்னல் பான்கோர்ட்டும், லெப்டினண்ட் கர்னல் கெராஸ்ஸூம் முக்கியமானவர்கள். மீதமிருந்த வெள்ளையர்களில் பலர் படுகாயமடைந்தனர். சிலர் கோட்டையின் தடுப்புச் சுவரருகே பதுங்கிக் கொண்டனர்.

கிளர்ச்சி திட்டமிட்டபடி தொடங்கியவுடனே, வெள்ளையர்களின் கொடி இறக்கப்பட்டு திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்படுகிறது. வீரர்கள் திப்புவின் மகனை "வாருங்கள் நவாப்! வாருங்கள், அச்சமின்றி அரியணை ஏறுங்கள்'' என்று அறைகூவினர். ஆனாலும் இந்தச் சுதந்திரப் பிரகடனம் நெடுநேரம் நீடிக்கவில்லை. அதிகாலை ஆறு மணிக்கே வேலூர் கிளர்ச்சி குறித்த செய்தி அருகில் 14 மைல் தொலைவில் இருந்த ஆற்காட்டை எட்டிவிட்டது. அங்கு ஆணை அதிகாரியாக இருந்த கர்னல் கில்லெஸ்பி பெரும் படையுடன் காலை எட்டு மணிக்கு வேலூர்க் கோட்டைக்குள் நுழைந்துவிட்டான். எதிர்த்தாக்குதல் இவ்வளவு சீக்கிரம் இருக்கும் என்பதைச் சிப்பாய்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அணிதிரண்டு தயாராவதற்குள் கில்லெஸ்பியின் படைகள் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டன.

வேலூர்க் கோட்டையைப் பிடித்து எட்டு நாட்கள் வைத்திருக்கத் திட்டமிட்டிருந்த சிப்பாய்கள், அதனை எட்டு மணிநேரம் கைப்பற்றி வைத்திருப்பதற்கே தங்கள் இன்னுயிரைத் தரவேண்டியிருந்தது. சில சிப்பாய்கள் தங்கள் முதன்மை நோக்கத்தை மறந்து சூறையாடலில் ஈடுபட்ட போதும், சில சிப்பாய்கள் கோட்டையை விட்டு வெளியேறிய போதும், பல சிப்பாய்கள் சுதந்திர ஆவேசத்துடன் சாகும் வரையிலும் போரிட்டனர். அவர்களைச் சுட்டுக்கொன்றும், தூக்கிலேற்றியும், பீரங்கி வாயில் வைத்துச் சிதறடித்தும் மகிழ்ந்தன வெள்ளைப் படைகள்.

நன்றி : ராஜகிரி கஸ்ஸாலி

Pin It

1932 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி காந்தியடிகள் தனது இரண்டாவது சட்டமறுப்பு இயக்கத்தினைத் துவக்கினார். மறுநாள் ஆங்கிலேய அரசு காந்தியடிகளைக் கைது செய்து எரவாடா சிறைக்கு அனுப்பியது. காந்தியடிகளின் திடீர் கைது நாடெங்கிலும் கொந்தளிப்பை உருவாக்கியது.

கைதுக்கு அடுத்த நாள் 5 ஆம்தேதி ராஜபாளையம் நகரம் முன்னெப் போதைக் காட்டிலும் பரப்பரப்புடன் காணப்பட்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டுக் கிளர்ந்தெழுந்த தேசபக்தர்கள், 6 ஆம் தேதி ராஜபாளையம் நகரம் முழுக்க ‘கதவடைப்பு’ நடத்த முடிவு செய்தனர்.

போராட்ட அறிவிப்பையடுத்த 5ஆம்தேதி நள்ளிரவு முதல் ராஜபாளையம் நகரில், ஒருமாத காலத்திற்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 6ஆம் தேதி காலையில் ராஜபாளையத்தில் ஒரு கடைகூட திறக்கப்படவில்லை. கதவடைப்பு பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் வெற்றி பெற்றது.

ராஜபாளையம் தாலுகாவின் அன்றைய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் கைது செய்யப்பட்டனர்.

ராஜபாளையம் நகர காங்கிரஸ் கட்சி ஆங்கிலேய அரசால் தடைசெய்யப்பட்டது.

8ஆம் தேதி மீண்டும் கதவடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அரசின் ஒவ்வொர் அடக்குமுறை அரிவிப்பும் அச்சமூட்டுவதற்குப் பதிலாக எழுச்சியை உண்டாக்கியது.

பிப்ரவரி 13 ஆம் தேதி மீண்டும் ராஜபாளையம் நகரில் ஊர்வலம் நடந்தது. மாலை 4 மணியளவில் ஜவகர் மைதானத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.ஒந்த ஊர்வலத்திற்கு பிள்ளையார்சாமித் தேவர் தலைமையேற்றார்.

ஊர்வலத்தில் வருவோர் நகர காவல் நிலையத்தைக் கடக்கும்போது, சிவகாசி சப்கலெக்டர் தலைமையில் காவலர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஊர்வலத்தினரை வழிமறித்தனர். தொண்டர்கள் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பலர் நினைவிழந்து சுருண்டு விழுந்தனர். ரத்தம் சிந்தி கொண்டிருந்த இந்தச் சுழலிலும் அடுத்தகட்ட ஊர்வலம் புறப்பட ஆயத்தமானது.

4.30 மணிக்கு, அடுத்தச் ஊர்வலம் அதே ஜவகர் மைதானத்திலிருந்து புறப்பட்டது. இந்த சித்தியாக்கிரகப் படைக்கு அரங்கசாமி ராஜா தலைமையேற்றார். இந்த ஊர்வலம் அதே காவல் நிலையத்தைக் கடக்கும் வேளையில், ஆத்திரத்தின் உச்சகட்டத்திலிருந்த காவல்துறை இளம் ஆய்வாளர் முத்தையா பிள்ளை, ‘லத்தி சார்ஜ்’ என்று காவலர்களை நோக்கி ஆவேசமாகக் கத்தினான்.

களம் இறங்கிய காவலர்கள் முதலில் அரங்கசாமி ராஜாவின் கையிலிருந்த மூவர்ணக் கர்தர்க்கொடியைப் பிடுங்கினர். கொடியை இறுகப் பற்றிக்கொண்டு, “வந்தே மாதரம்” , “வந்தே மாதரம்” என்று வீரமுழக்கமிட்ட அரங்கசாமி ராஜாவை நையப் புடைத்தனர். மற்ற தொண்டர்களையும் அடித்து நொறுக்கினர்.

“சப் இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு போலீசார் அரங்கசாமி ராஜாவைத் துவம்சம் செய்தனர். அரைமணி நேரத்திற்கும் மேலாக அடிபட்டுக் கொண்டிருந்தவர்களின் கதர்ச் சட்டைகள் அனைத்தும் இரத்தக் கறைபட்டு வண்ணம் மாறிக் கொண்டிருந்தது.

அரங்கசாமி ராஜாவின் கையை போலீசார் பூட்ஸ் கால்களால் மிதித்துக் கொண்டே அவர் கையிலிருந்த கொடியை பறித்துக் கிழித்தனர். அதை அவர் எதிர்க்க முயன்றபோது பூட்ஸ்கால்களால் அவரது வாயிலும் தலையிலும் மிதித்து அவர் சுயநினைவிழக்கின்ற அளவிற்கு அடித்தனர்” என்று ராஜபாளையம் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள பேராசிரியர் வி.வென்ங்கட்ராமன் குறிப்பிடுகிறார்.

தொண்டர்கள் ஆறு பேருக்கு அரசு மருத்துவமணையில் சிகிச்சை அளித்தனர். நல்ல நினைவு வந்த பிறகு தொண்டர்களைப் போலீஸ் ஜீப்பில் ஏற்றி , நகரைத் தாண்டி 4 கிலோ மீட்டருக்கு அப்பால் காட்டுப் பகுதியில் தூக்கிப் போட்டுவிட்டு வந்தனர்.

மீண்டும் அரங்கசாமி ராஜா தலைமையில் காட்டிலிருந்து தட்டுத் தடுமாறி, கைகால்களில் பலத்த அடி விழுந்த காரணத்தினால் நொண்டி நொண்டி நகரத்திற்குள் வந்தனர். இந்தக் கோலத்தில் இவர்களைப் பார்த்தவுடன் நகரமக்கள் ஆத்திரமடைந்தனர்.

மீண்டும் அதே காவல் நிலையத்தின் வழியே, கொதித்துப் போயிருந்த மக்கள் சூழ, அரங்கசாமி ராஜா தலைமையில் ஊர்வலம் பொனது. அரங்கசாமி ராஜாவின் மீது காவல்துறையின் கவனம் முழுக்கக் குவிந்தது.

இளம் ஆயவாளர் முத்தையா பிள்ளை அரங்கசாமி ராஜாவின் கால்களை கயிற்றால் கட்டினான். கயிற்றின் மறுமுனையை போலீஸ் ஜீப்பின் பின்பகுதியில் இறுக்கிக் கட்டினான். ஜீப்பின்மீது ஏறி ஜீப்பை எடுத்து ஆத்திரத்தில் வேகமாக ஓffஇனான். கயிற்றில் கட்டப்பட்ட அரங்கசாமி ராஜா ‘தரதர’ வென ரோட்டில் உரசிக் கொண்டே இழுத்து வரப் பட்டார்.

காவல் நிலையத்திற்கு வந்தவுடன் மயங்கிக் கிடந்த அரங்கசாமி ராஜாவின் உடல் மீது தண்ணீர் ஊற்றி, ஒரு நாற்காலிமீது சிரமப்பட்டு அமர வைத்தனர். உடல் பூராவும் ரத்தக் காயம். நெஞ்சில் ஈரமில்லாத காவலர்கள் வெளியிலிருந்து பொடிமணலை எடுத்து வந்து, அரங்கசாமி ராஜாவின் உடல் மீது தூவி, அவரை நாற்காலியில் கயிற்றால் இறுக்கிக் கட்டினர். அப்பொதும் ஆத்திரமடங்காத அவர்கள் அரங்கசாமி ராஜாவை காவல் நிலையத்திலிருந்த பரண்மீது தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு மகிழ்ந்தனர்.

உயிர் போய்விடும் என்ற கடைசிக் கட்டத்தில் அரசு மருத்துவமனையில் அரங்கசாமி ராஜா சேர்க்கப்பட்டார். மயிரிழையில் உயிர் பிழைத்தார்!

பெரிய தலைவர்கள் மட்டுமல்ல, பெயர் தெரியாத எத்தனையாயிரம் பேர் இந்தியச் சுதந்திரத்திற்குத் தமது உயிரைக் கொடுத்து உரமேற்றியுள்ளனர். ராஜபாளையம் அத்தகு தியாகத்திற்கு கண்முன் தெரிகிற சாட்சியாகும்.

நன்றி:

Pin It