“இந்தியா ஒன்றென்னும் இயற்கைக்கே புறம்பான மந்திரத்தை மாய்க்க வந்த தந்தை பெரியார் தமையும் தேசக் கயிற்றினிலே சிக்க வைக்க முடியாமல் பாசக் கயிற்றினிலே பம்பரம் போல் ஆட வைத்தாய்.”

நூறாண்டு கால இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியலை இந்த ஆறே வரிகளுக்குள் புகுத்தியவன் யார்? காற்றோடு கலந்து காலமாக ஆகிவிட்ட கவிஞர் கண்ணதாசன்! இது அரசியல் பாடல் அல்ல; தாலாட்டுப் பாடல். தலைவர் காமராசருக்கு பிள்ளைத் தமிழ் பாணியில் கண்ணதாசன் சொல்லால் எழுப்பிய நினைவுச் சின்னம்!

இந்தப் பாடலுக்கு அற்புதமாக இசை அமைத்து – மாபெரும் கர்நாடக இசை மேதைகள் என்று சொல்லுகிறவர்களிடம் இல்லாத கமகங்கள் – பிருகாக்கள் – மேலிடத்து சஞ்சாரத்திலும் சங்கதிகள் என் பூவாணமாய் – பொங்கும் அருவியாய் – புதுப் புனலாய் நனைய வைத்த கலைஞன், “அவர்களுக்கே” உரியது என்று பெருமை கொண்டாடும் அக்ரகார வாசியின் மகனல்ல.     ஹார்பர் சண்முகம் என்கின்ற பெரியார் தொண்டனின் மகன் இராவணன். ஏராள மான ஆற்றல்களும் எவரிடமும் பணிவாக நடக்கின்ற பண்பும் – தலைவணக்கம் கொண்ட அந்த மகா கலைஞன் – பல கலைஞர்களுக்கே உரிய பலவீனமான மதுவுக்கு அடிமையாகி இளம் வயதிலேயே மரித்துப் போனான். முதலில் அவன் மதுவைக் குடித்தான். பின்னர் மது மதுவைக் குடித்தது. பின்னர் மது மனிதனையே குடித்து விட்டது.

ஹார்மோனியம் என்பது தமிழ்நாட்டு இசைக் கருவி அல்ல. அது வட இந்திய இசைக் கலைஞர்களிடமிருந்து இங்கு வந்தது என்று சொல்கிறார்கள். பழங்காலத்தில் அந்தக் கருவியை அற்புதமாகக் கையாண்டு பெயர் பெற்றவர்கள் தேவுடு அய்யர் – ஜி.ராமநாதன் போன்றவர்கள். தேவுடு அய்யர் நாடக உலகில் பிரபலமாகப் பேசப்படுகின்ற எஸ்.டி.கிட்டப்பாவினுடைய சகோதரர். ஜி.ராமநாதன் திருச்சி மலைக்கோட்டக்காரர். புகழ் பெற்ற திரை இசை அமைப்பாளர், பாடகர். காலத்தால் அழியாத ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ என்ற இன்றும் சிரஞ்சீவியாய் இருக்கின்ற பாடலுக்கு மெட்டு அமைத்தவர் அந்த ராமநாதன் தான்.

தியாகராஜ பாகவதர் திரை நட்சத்திரமாக நடித்ததற்குப் பிறகும் நாடகங்களில் நடித்தார். அப்போதெல்லாம் அவர் நாடகங்களுக்கு ஹார்மோனியம் ராமநாதன் தான். இந்த இணைக்கு அப்போது தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூலும் வரவேற்பும் இருக்குமாம்.

இந்த ஹார்மோனியம் என்ற கருவியை இராவணன் தானே பாடிக் கொண்டு இசைத்ததைப் போல் அற்புதமாக வேறொருவர் செய்து நான் கேட்டதே இல்லை. கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஹார்மோனிய கலைஞர்கள் என்று ஒரு பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்தால் இராவணன் முதல் மூன்று இடத்தில் இருப்பார். பாட்டில் கவனம் செலுத்திக் கொண்டு ஹார்மோனியத்தில் விளையாடும் இந்த விரல்களுக்கு மூளையின் எந்தப் பகுதியில் இருந்து தான் உத்தரவு வருமோ என்று தெரியவில்லை. ஆனால் அதை சாதித்துக் காட்டிய ஒரு பெரும் கலைஞன்.

கலைஞனால் சோறு இல்லாமல் இருக்க முடியும். புகழும் – மக்களும் பாராட்டுமில்லாமல் இருக்க முடியாது. பகுதி நேர விளையாட்டாய் துவங்கிய மதுப் பழக்கம் முழு நேரமாகி மூழ்கி அழிந்து போனான்.

இராவணனுடைய இசை நிகழ்ச்சி என்றால் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் பெரும் கூட்டம் கூடும். ஆனால் இது திராவிட இயக்க நிகழ்ச்சிகளில் இருந்து சற்று வேறுபட்டதாக இருக்கும். வழக்கமாக திராவிடர் கழகத் தோழர்கள் மாத்திரம் தான் இந்த கலை நிகழ்ச்சிக்கு வருவார்கள். ஆனால் இராவணனுடைய நிகழ்ச்சிக்கு பலதரப்பட்டவர்களும் – பல்வேறு காரணங்களுக்காக வருவதை நான் பார்த்திருக்கிறேன்.

வருகிறவர்கள் சிலர் அவருடைய பாடலை ரசிப்பதற்காக மட்டும். வேறு சிலர் கட்டுரையின் துவக்கத்திலே இருப்பது போல் ஆழமான பொருட்செறிவு மிக்க அந்த கவிதைகளை ரசிப்பதற்காக வருவார்கள். காரணம் கண்ணதாசன் கவிதையைப் போலவே வேறு அருமையான கவிதைகளை இராவணன் அற்புதமான மெட்டுகளில் பாடுவார். முறையாக இசை பயின்றவர்களையும் – பாமர மக்களையும் ஒரு சேர ஈர்த்த அந்தக் கவர்ச்சிகரமான மெட்டுக்களை யார் அமைத்தார்கள் என்பது கடைசி வரைக்கும் தெரியவில்லை. ஆனால் எல்லாம் நானே என்று இராவணன் பொய் சொல்லவும் மாட்டான். என் பேரில் மிகுந்த அன்பும் – மரியாதையும் வைத்திருந்த தோழன்.

ஏராளமான கழகத் தோழர்களுக்கு ஒரே நேரத்தில் இராவணன் அறிமுகமானது ஒரு புதுமையான நிகழ்ச்சி. பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்வு ஒன்று. அப்போதெல்லாம் இன்று போல் யாரோ ஏற்பாடு செய்த வேனில் கட்சிக்காரர்கள் இலவசமாக ஏறிக் கொண்டு வருகிற பழக்கம் கிடையாது. அவரவர்களே வசூலித்து பேருந்து அல்லது சீருந்து ஏற்பாடு செய்து கொண்டு வருவார்கள். ஊர்வலத்தின் போது அவற்றின் மேலே உட்கார்ந்து கொண்டு வந்து கழகப் பிரச்சார முழக்கங்களை எழுப்பிக் கொண்டே போவார்கள். சில பேர் வேடமணிந்து வருவார்கள். பெரியாரினுடைய அலங்கார வண்டி தொலைவில் அதற்குப் பின்னால் வரும்.

அப்படி மேற்சொன்ன நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு சம்மந்தமில்லா வேறொரு மாவட்டக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் ஹார்மோனியத்துடன் இராவணன் அவருடைய தபேலாக்காரர் இருவர் மட்டுமே வந்தார்கள். அந்த கம்பீரமான குரல் – பாடல் வரிகள் எல்லோரையும் நின்ற இடத்திலேயே நிலைகொள்ள வைத்தன.....

“பெரியார் வரார் பெரியார் வரார் பெரும் படையோடு

எத்தர்களே – பித்தர்களே விலகி ஓடுங்கடா.....”

பெரியார் அலங்கார ஊர்தியில் பின்னே வர – ஆர்ப்பரிக்கும் கூட்டம் அவர் முன்னே வர அதற்கு கட்டியம் கூறுவதைப் போல் அமைந்த இந்த பாடல் எல்லோரையும் எழுச்சி கொள்ள வைத்தது. அதன் பின்னர் நாடெங்கும் இராவணனுடைய இசை நிகழ்ச்சிகள். திராவிடர் கழகம் அப்போது காமராசரை ஆதரித்துக் கொண்டிருந்த காலம். கவிஞர் கண்ணதாசன் மேலே சொன்ன புகழ் பெற்ற தன்னுடைய காமராசர் தாலாட்டை ஏடு ஒன்றில் எழுதியிருந்தார்.

தங்க மணி மாளிகையில் தனி வயிர பந்தலிட்டு

திங்களென்றும் – தென்றலென்றும்

சீராட்டிப் பேருரைத்து...........

என்று துவங்கும் இந்தப் பாடலுக்கு இராவணன் என்றும் இளமையான இசையை அமைத்துப் பாடினார். பெரியாரின் ஆணைப்படி காமராசரைப் போற்றித் திராவிடர் கழகத் தொண்டர்கள் இந்த பாடலைப் பாடச் சொல்லி வேண்டுகோள் கடிதத்தோடு ரூபாய் நோட்டுக்களை இணைத்து அனுப்புவார்கள். அப்போதும் காங்கிரஸ்காரர்கள் இது போன்ற நல்ல காரியங்களில் கலந்து கொண்டதை நான் பார்த்ததில்லை.

இராவணனுடைய இசை நிகழ்ச்சி என்.ஜி.ராஜன், பொன்னம்மாள் சேதுராமன் – அணைக்கரை டேப் தங்கராசு போன்றவர்களினுடைய நிகழ்ச்சியைப் போல் பேச்சு – உரையாடல் அதிகம் இருக்காது. இடையே சில சில நிமிடங்கள் பத்திரிகை செய்திகளைச் சொல்வார். உடனே சிறிது நேரம் ஹார்மோனியம் இசைப்பு – பாட்டு துவங்கி விடும். அவருடைய பாடலின் ஒவ்வொரு வரியும் ஆழமான கொள்கை நயமும் – வலிவும் உடையதாக இருக்கும். அவற்றிலும் ஒன்று – இரண்டினைத் தவிர மற்ற பலவற்றை எழுதியவர்கள் யார் என்று நாங்களும் தெரிந்து கொள்ள முயன்றதில்லை. அவரும் சொன்னதில்லை.

இராவணனுடைய நிகழ்ச்சிக்கு வந்த பெரும் கூட்டமும் கூட்டங்களில் அவருக்கு கிடைத்த அன்பளிப்புகளுமே அவருக்கு எதிராகி விட்டன. காலஞ்சென்ற அவருடைய தந்தை சென்னை ஆர்பர் சண்முகம், எம்.கே.டி.சுப்ரமணியம் – மயிலை லோகநாதன் போன்ற திராவிடர் கழகப் பரப்புரையாளர்கள் – களப் பணியாளர்களுக்கு நெருக்கமாக இருந்தவர். ஆனால் எம்.கே.டி.சுப்ரமணியமும் – லோகநாதனும் பெரியாருக்கு எதிரானவராக அடையாளம் காட்டப்பட்ட குத்தூசி குருசாமிக்கு நெருக்கமானவர்கள். இந்த பின்னணியும் இராவணனுக்கு எதிராக அமைய அவர் குழு சாயம் பூசப்பட்டு முடிந்து போனார்.

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை

Pin It

நீராடல்

உடல் தூய்மைக்கு உதவும் இன்றியமையாத நற்பழக்கம் ‘நீராடல்’. ‘கூழானாலும் குளித்துக் குடி’ எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை வலியுறுத்தும். அதிலும் ஆறு, கடல் அருவிகளில் நீராடல் என்பது இயற்கையோடு ஒன்றிய நீராடல் எனலாம். மேனாடுகளில் வெப்பக் குளியல் (Sun Bath). ஆவிக்குளியல் (Steam Bath), மூலிகைக் குளியல் (Herbal Bath) என்று பல்வேறு வகைக் குளியல்கள் நலவாழ்வு நோக்கில் உருவானவை. எண்ணெய் நீராடல், அருவி நீராடல், கடல் நீராடல் ஆகியவை இரத்த ஓட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன என்னும் உண்மையை அறிவியலார் இன்று உணர்ந்து வருகின்றனர். இந்த நற்பழக்கம் பழந்தமிழர் வாழ்வில் இயல்பாகவே இணைந்திருப்பதைப் பின்வரும் சங்க இலக்கியச் சான்றுகள் புலப்படுத்தும்.

நதி நீராடல்

வைகை நதியில் புதுப்புனல் ஆடிய மகளிர் கூந்தலுக்கு அகில் புகையூட்டி ஈரம் புலர்த்தினர். பல்வகைப் பொருட்களைக் கொண்டு நீராடிய மகளிர் உடலில் வீசிய மணம் நாற்காத தூரம் வீசியதாம் ‘எருமண்’ கொண்டு கூந்தலின் அழுக்கைப் போக்கினர். நதி நீராடல் பற்றிய பல்வகைக் குறிப்புகளைப் பரிபாடல் அழகுற விளக்குகின்றது.

எண்ணெய் நீராடல்

எண்ணெய் நீராடல் சங்க காலம் முதலே நிலவி வருவதை நற்றிணைச் செய்தி உறுதிப்படுத்தும். மகப்பேறுற்ற மகளிர் வெண்கடுகை அப்பி எண்ணெய் தேய்த்து நீராடுவர் என்பதை நற்றிணை குறிப்பிடுகின்றது. அக்கால மகளிர் நிறைய எண்ணெயினைத் தலையில் பெய்து, குளிர்ந்த மணமுள்ள சந்தனத்தைப் பூசி முழுகுவர். பின் ஈரம் புலர, வயிரம் பாய்ந்த அகிலின் புகையை ஊட்டி, விரலால் குழலை அளைந்து சிக்கு விடுவித்தனர். வேறு சில மகளிர் எண்ணெய் முழுக்கின்போது அரப்புப் பொடியிட்டுத் தேய்த்துக் குளிப்பர். பல்வேறு மணப்பொருட்களை நீராடும்போது பயன்படுத்தினர். இதுவே பிற்காலத்து ‘வாசனைத் தைலங்கள்’ சேர்ந்த ‘தைல முழுக்கிற்குத்’ தூண்டுதலாக அமைந்தது.

கடல் நீராடல்

கடல் நீராடல் என்பது ஒரு விளையாட்டாகவே அக்காலத்தில் நிலவியது. கடல் நீராடும் பரதவ மகளிர் பனை நுங்கின் நீரையும், கருப்பஞ்சாற்றையும் கலந்து பருகிக் கடலில் பாய்ந்து நீராடுவாராம். விளையாட்டுக் காலங்களில் உடல் சோர்வடையாமல் இருக்க இக்காலத்தும் விளையாட்டு வீரர்கள் தேன் குளுகோஸ் அருந்துவதைக் காணலாம். இப்பழக்கத்தினை நினைவூட்டுவது போல் அக்காலப் பரதவ மகளிர் கடல் நீராடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

காதல் நோய் தீர கான்யாறு நீராடல்

மரம் செடி கொடிகள் நிரம்பிய காட்டின்கண் மழை பெய்தமையால் பெருகிவரும் கான்யாற்று நீரில் குளித்தால் அது பல்வேறு மருந்துச் செடிகளின் சேர்க்கை உடையதாதலால் அது பிணி போக்கும் தன்மை உடையது என்பதை அக்கால மக்கள் நம்பினர். தலைமகன் ஒருவன் தலைவியைப் பிரிந்து செல்ல அதன் காரணமாகத் தலைவி வாடி நடுக்கமுற்றிருந்தாள். இதனைக் கண்ட நற்றாய் தோழியிடம் “ஆகாயத்தில் மிக உயர்ந்த பெரிய மலைப் பக்கத்தில் மிக்க இடியோசையுடைய மேகம் பெய்யத் தொடங்கி நள்ளிரவில் மிக்க மழை பொழிந்ததினாலே கற்கள் நிரம்பிய காட்டின்கண் ஓடும்யாற்றிலே மரங்கள் காய்ந்த சருகுகளோடு கழித்தனவாகிய முகிழ்ந்த பூங்கொத்துக்களையும் அடித்துக் கொண்டு வருகின்ற புதிய இனிய நீரானது இவளுக்குற்ற நோயைத் தீர்க்கும் அருமருந்தாகும். அதனைக் குளிர்ச்சி பெறப் பருகி அங்குள்ள காட்சிகளைக் கண்ணால் நோக்கி ஆடப்பெற்றால் இவள் மெய்யின் நடுக்கம் தீரும்” என்கிறாள்.

இதிலிருந்து பலவகை நோய்க்குக் குறிப்பாக, ‘மெய்யின் நடுக்கம்’ போன்றவற்றுக்குக் ‘கான்யாற்று நீராடல்’, அக்காலத்து அருமருந்தாக அமைந்திருந்ததை அறியலாம். இன்றும் நரம்புத் தொடர்பான நோய்களுக்குக் குற்றாலம் போன்ற கான்யாற்று அருவிகளில் குளிக்கும் பழக்கம் அருமருந்தாகக் கருதப்படுவது ஈண்டு ஒப்பு குறிப்பிடும் “நீராடும் மருத்துவ நெறி”க்கு ஏற்ப அமையும் சங்க காலக் ‘கான்யாற்று நீராடல்’ பழக்கம் அரிய மருத்துவப் பயனுடையது.

கூந்தலின் மணப் பொருட்களைப் பூசுதல்

பழந்தமிழ் மகளிர் கூந்தலைப் போற்றிய திறம் பெரிதும் வியப்புக்குரியதாகும். ‘கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா? என்பது பற்றிய அரிய விவாதம் இலக்கியத்தில் உண்டு. மகளிர் கூந்தல் மணம் செயற்கையே என்பது சங்கப் பாடல்கள் தரும் கருத்தாகும். சங்க இலக்கியப் பாடல்கள் பல கூந்தல் பாதுகாப்புப் பற்றிய பல குறிப்புகளைத் தருகின்றன. இடைப்பெண்டிர், பாலையும் வெண்ணையையும் தலையில் தடவிக் கொண்டனர். அகிலின் நெய்யைக் கலந்து பல காலம் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருமை நிறம் கொண்டதாக விளங்கும். எண்ணெய் தடவி வருவதால் நீண்ட முடி, சுருள் முடியாக மாறும். விறலியரின் கூந்தல் பாதிரி மணம் கமழும். மகளிர் மங்கள நீராடிய பின் புகையூட்டி உலர்த்தி, மயிர்ச் சந்தனம் பூசி மணம் கமழும் கூந்தலுடன் விளங்கிய காட்சியை அகநானூறு விளக்கும்.

கூந்தலுக்கென மதுரை நகர மகளிர் பயன்படுத்திய மணப்பொருட்களைப் பரிபாடல் குறிப்பிடுகின்றது. வையை நதியில் நீராடிய மகளிர் குங்குமச் சேறு, அகிற் சாந்து, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சாத்தம்மியிலிட்டுத் தீ நிறம் பெற அரைத்துக் கூந்தலுக்குப் பூசி நீராடினர். நீல நிறக் கூந்தலில் பத்து வகையான துவர்களைத் தேய்த்து நீராடினர். நீராடிய பின் வெட்டி வேராலும், விலாமிச்சை வேராலும் தொடுத்த பன்மலர் இலையை அணிவர். ‘நாறிருங் கூந்தல்’, அம்மென் கூந்தல்’, ‘அறல் போற் கூந்தல்’ எனப் பலவகையாகக் கூந்தலைப் போற்றும் புலவர்களின் உட்கருத்து, அக்கால மகளிர் கூந்தலைப் பாதுகாத்த முறைகளை எதிரொலிப்பதாகும்.

விளையாட்டுகள்

கட்டுடல், திண்தோள் போன்ற உடல் அழகைக் குறிக்கும் சொற்கள் சத்துணவால் மட்டும் அமைவதில்லை. உடம்பின் சதை, எலும்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தி அழகூட்டும் விளையாட்டுகளாலும் அமைகின்றன. விளையாட்டுகள் என்பவை பொழுது போக்கிற்காக மட்டுமல்ல; உடல் பயிற்சிக்காகவும். ஏற்படுத்தப்பட்டவை ஆகும். பழந்தமிழர் வாழ்வில் விளையாட்டு என்பது அன்றாட வாழ்வோடு பிணைந்து விட்ட பழக்கமாக விளங்கி வந்துள்ளது. மகளிரும், ஆடவரும் அவரவர் உடல் அமைப்புக்கேற்றவாறு விளையாட்டுக்களை மேற்கொண்டு பொழுதை இனிமையாகக் கழித்ததுடன் உடம்பையும் ஒழுங்கு முறையாக வளர்த்துக் கொண்டனர்.

மகளிர் விளையாட்டு

‘ஓர் ஆயம்’ எனப்படும் விளையாட்டைச் சிறுமியர் ஆடினர். பூந்தாதுக்களைக் கொண்டு பாளை செய்து ஆடுதலே ‘ஓர் ஆயம்’ எனப்பட்டது. நெய்தல் நில மகளிர் உப்பங்கழிக்கு அருகில் மலர்களைப் பறித்து விளையாடினர். கடல் அலையின்கண் நீராடி மகிழ்ந்தனர். பனை நாரினாலே திரித்த கயிற்றை மரக்கிளையில் பிணித்துத் தொங்கிவிட்டு ஊஞ்சலில் ஆடினர். கைப்பந்தும் கால்பந்தும் ஆடினர். வரிப்பந்து ஆடினர். நூலால் வரிந்து பனையப்பட்ட பந்தை எறிந்தும் அடித்தும் விளையாடினர். குறிஞ்சி நில மகளிர் சுனையில் நீராடினர். மலை அருவிகளில் விளையாடினர்.

ஆடவர் விளையாட்டு

பாலை நிலச் சிறுவர் நெல்லிக்காய்களை வட்டாகக் கொண்டு பாண்டில் ஆடினர். தேர் உருட்டி விளையாடினர். செல்வச் சிறுவர் பெரிய மணிகள் பதித்த சிறிய தேரில் இருக்க, சேடியர் அத்தேரை இழுத்துச் சென்றனர். ஏழைச் சிறுவர் பனங்குரும்பையை கொடியாற்கட்டி இழுத்து விளையாடினர். மதுரை மாநகரில் ஞாயிறு மறைந்த பின்பு முதல் சாமத்தில் வீரர் சிலர் போர்ப் பயிற்சி கொண்ட யானையைத் தம்மைத் தொடர்ந்து வந்து பிடிக்கும் படி ஏவி அது தொடர்ந்த போது, அதன் போக்கைத் தடுக்கத் தம் மடியிலிருந்த கப்பணங்களைத் தரையில் சிதறி விட்டனர். பரதவர் முழுமதி நாளில் மகளிருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

(நன்றி: மூலிகை மணி)

Pin It

பழந்தமிழ் மக்களிடையே மது, கள் அருந்தும் பழக்கம் தனிச் சிறப்புடன் விளங்கியது. அரசன் முதல் புலவர்கள், சான்றோர்கள். குடிமக்கள் வரை ஆண், பெண் அனைவரும் களிப்புடன் கள்ளைப் பருகி மகிழ்ந்த செய்திகளைப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் காணலாம். போதைக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் உடல் வெம்மைக்காகவும் பழந்தமிழர் பயன்படுத்திய ‘மது’, ‘கள்’ ஆகியன பற்றிய குறிப்புகளை இந்நூல்கள் விரிவாகக் குறிக்கின்றன. உள்நாட்டு மது வகைகளுடன் அயலக மது வகைகளும் பயன்படுத்தப்பட்டன. ‘யவன மது’வை மிக விருப்புடன் மகளிர் அருந்திய செய்தியைப் புறநானூறு குறிப்பிடுகின்றது. மட்டு, மது, நறவு, தேறல், கள் எனப் பல்வகைப் பெயர் பெற்று விளங்கும் குடிவகைகள் தேன், நெல்லரிசி, பழங்கள், பூவகைகள், தென்னை. பனை போன்ற மரங்களிலிருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டன.

--------------------

தேக்கள் தேறல்

தேனை மூங்கில் குழாய்களில் பெய்து அதனை முதிர்விப்பார்கள். நாட்பட நாட்பட இத்தேனின் சுவை அதிகமாகும். இவ்வாறு பதனப்படுத்திச் சுவையேற்றிய மதுவே தேக்கள் தேறல் எனப்படும். குறவர்கள் இத்தகு ‘தேக்கள் தேறலை’ப் பருகிக் குறிஞ்சிக் கடவுளான முருகனைப் பாடி ஆடுவார்களாம். தேனினை மூங்கில் குழாயில் ஊறல் முறைப்படி முற்ற வைக்கும் இத்’தேக்கள் தேறலை’ப் பற்றிய குறிப்புகள் திருமுருகாற்றுப் படை, மலைபடுகடாம், அகநானூறு ஆகிய நூல்களில் காணப் பெறுகின்றன.

------------------

தோப்பிகள்

வீடுகளிலேயே தயாரிக்கப்பட்ட கள்ளிற்குத் ‘தோப்பிகள்’ என்று பெயர்.

இல்லடு கள்ளின் தோப்பி பருகி

தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்

‘தோப்பின நெல்’ என்றொரு நெல் வகையுண்டு. தற்காலத்தும் மதுரை மாவட்டத்தில் ‘தொப்பி’ என்று இது அழைக்கப்படுகின்றது. இந்தத் தொப்பி என்ற அரிசியைக் கொண்டு வீடுகளில் தயாரிக்கப்பட்டகள், ‘தோப்பிகள்’ எனப் பெயர் பெற்றிருக்க கூடும் என்று கருதுவார் டாக்டர் மா.இராசமாணிக்கனார். பன முதலிய மரங்களிலிருந்து மாறுபட்டது இந்தத் தோப்பிகள் என்பதை ‘இல்லடுகள்’ என்ற தொடர் புலப்படுத்துகிறது.

------------------

நறும்பிழி (நெல்லரிசிகள்)

தொண்டை நாட்டில் வாழ்ந்த ‘வலையர்’ என்பார் தயாரிக்கும் கள் ‘நறும்பிழி’ எனப்பட்டது. குற்றாத கொழியில் அரிசியைக் களி போல் துழாவிக் கூழாக்குவார்கள். பின் அதனை ஆறச் செய்ய, வாயகன்ற தாம்பாளம் போன்ற தட்டுப் பிழாவில் ஊற்றி ஆற்றுவர். நெல் முனையை இடித்து அக்கூழிற் கலப்பர்; கலந்த இக்கூழினை இரண்டு நாட்கள் சாடியில் ஊற்றி வைப்பர். நன்கு ஊறிய பின்பு விரலாலே அரிப்பர். இவ்வாறு அரிக்கப்படும் கள் மிகுந்த சுவையினை உடையதாக இருக்கும். நறும்பிழி எனப்படும் இக்கள்ளினை வலையர்கள் உண்டு மகிழ்ந்தனர் என்னும் செய்தியினைப் பெரும்பாணாற்றுப் படையில் காணலாம்.

----------------

பெண்ணைப் பிழி (பனங்கள்)

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த பரதவர்கள் பனங்கள்ளைப் பருகிய செய்தி பட்டினப்பாலையில் குறிக்கப்பட்டுள்ளது.

--------------------

நறவு

நன்னனது மலைநாட்டில் வாழும் மக்கள் நடத்தும் விருந்தில் தேக்கள் தேறலையும், நறவு எனப்படும் கள்ளினையும் பரிமாறி உண்டதாகத் தெரிகிறது. ‘நறவு’ என்பது நெல்லரிசி கொண்டு அமைக்கப்பட்ட ‘கள்’ ஆகும்.

------------------------

பூக்கமழ் தேறல்

செல்வந்தர்களின் மாளிகைகளிலும் அரண்மனைகளிலும் இவ்வகை மது பருகப்பட்டது. பொற்கலசங்களில், தேக்கள் தேறல் போன்றவற்றில் இஞ்சி, குங்குமப்பூ போன்ற மணங்கமழும் பூக்களை இட்டுத் தயாரிக்கப்படுவதே ‘பூக்கமழ் தேறல்’ ஆகும். அரசர்கள் இத்தகு தேறலை உண்டு வாழ்ந்த வரலாற்றை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் குறிப்பிடுகிறார்.

-----------------

கட்சுவையும் – பழச்சுவையும்

படைவீரர்கள் கள்ளை விரும்பிக் குடிப்பதால் நாவில் ஏற்படும் புளிப்பு வேட்கைக்குக் களாப்பழமும், துடரிப்பழமும் உண்டனர். அப்படியும் நீர் வேட்கை தணியாமையால், கருநாவல் பழத்தைப் பறித்து உண்டனர். கள் உண்டதால் ஏற்பட்ட நீர் வேட்கையைக் களாப்பழமும், துடரிப்பழமும். கருநாவற் பழமும் தணிவித்ததுடன் உடலுக்கு உரமாகவும் இவை விளங்கின. படை வீரர்கட்கு அளப்பரிய வலிமையையும் இவை அளித்தன. களாப்பழம் உடம்பு வலியைப் போக்குவதுடன் மலையைப் போன்று உடலுக்கு வன்மையை அளிக்கும் குணம் உடையது. கருநாவற்பழம் கள் அருந்துதலால் ஏற்படும் உடல் வறட்சியைப் போக்கி உடலுக்கு உரமளிக்கும் தன்மையுடையது என்பதை மூலிகைக் குணபாடம் வழி அறியலாம். எனவே, கள்ளைப் பருகினாலும், அதன் தீமைகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும் வகையில் பழ வகைகளையும் அக்காலத்தில் உண்டனர். அதனால் கள் உடலுக்குத் தீமையை உண்டாக்கவில்லை.

--------------------

கண் சிவக்கும் கள்

வையை ஆற்றில் நீராடிய தலைவி உடலின் ஈரம் புலர வெப்பத்தைத் தரும் கள்ளைப் பருகினாள். கள் பருகுவதற்கு முன் நெய்தற் பூவைப் போன்ற கருமையாக இருந்த கண்கள் கள்ளைப் பருகியபின், நறவம் பூவைப் போல சிவந்தனவாம். அவ்வளவு வெப்பத்தினை அளிக்க வல்ல கள்ளைப் பருகி, நீராடிய களைப்பைப் போக்கி மகிழ்ந்தனர் அக்கால மகளிர் என்பதைப் பரிபாடல் உணர்த்தும்.

குளிரைப் போக்கும் கள்

தானைத் தலைவன் ஒருவன் போருக்குச் செல்லத் தயாராகின்றான். அப்போது நடுக்கத்தைத் தரும் குளிரிலிருந்து உடம்பைப் பாதுகாக்க நாறால் வடிக்கப்பட்ட ‘நறவு’ என்னும் கள்ளைப் பருகிச் செல்கின்றான். உண்டார்க்கு வெம்மையை அளிக்கும் குணம் நறவு கள்ளுக்குண்டு என்பதைப் புறுநானூற்றுப் பாடல் கருத்து குறிப்பிடுகிறது.

------------------

வழி நடை வலியைப் போக்கிய கள்

பரிசில் பெற வழிநடை சென்ற பாணர்களுக்கு ஏவல் மகளிர் பொன்னாற் செய்த வட்டில் நிறையக் கள்ளினை அளித்தனர். அக் கள்ளினைப் பாணர்கள் பருகி வழிநடையால் ஏற்பட்ட உடல் வலியைப் போக்கிக் கொண்டனர். போதைக்கு மட்டுமின்றி உடல் வலியைப் போக்குவதற்கும் அக்கால மக்கள் கள் பருகியமையை இச்செய்தி உணர்த்தும்.

இவ்வாறு பழந்தமிழர் பழக்கத்தில் நிலவிய பலவகை மதுவும், கள்ளும் போதைக்காகவும் உடல் நலத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டதை அறியலாம். இக்காலத்து, தென்னை, பனை, ஈந்து, அரிசி போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் மது, வயிறு, நுரையீரல் போன்ற உள் உறுப்புகளின் நோய்களுக்கு மருந்தாவதை நோக்கும்போது சங்க காலத்துத் தயாரிக்கப்பட்ட இவ்வகை மதுவும், கள்ளும், உடல்நலத்தைக் கெடுக்கவில்லை என்பதையும், மாறாக இவை குளிர்காலங்களில் உடலுக்கு வெம்மையைத் தந்து, வழிநடையின் பொது வலியைப் போக்கிக் களைப்பையும், நீர் வேட்கையையும் தணித்து உடலுக்கு உரம் அளித்த திறத்தினையும் அறியலாம்.

மதுவையும் கள்ளையும் பயன்படுத்திய பழந்தமிழர் இவற்றுடன் களா, துடரி, கருநாவல், இஞ்சி, குங்கும்பூ, இலுப்பைப்பூ போன்ற மருத்துவக் குணமுடைய துணைப் பொருட்களையும் கலந்து உண்ட தால் உடல் வலிமை பெற்றனரேயன்றித், தீமை ஏதும் பெறவில்லை என்பதை அறியலாம். பழந்தமிழர் மதுப்பழக்கம் இக்கால மதுவினின்று முற்றிலும் வேறுபட்டது. இயற்கைப் பொருட்களி லிருந்து அவை தயாரிக்கப்பட்டதால் உடலுக்கு நன்மை அளித்தன. அதனால் தான் ஔவை போன்ற பெண்பாற் சான்றோர்களும் அதனைப் பருகி மகிழ்ந்து போற்றினர். அவ்வகையில் பழந் தமிழரின் நலவாழ்வுக்கு உறுதுணையாகும் வகையில் அமைந்த நலம் தரும் பழக்கங்களில் தலைசிறந்த பழக்கமாக ‘மதுப் பழக்கம்’ இருந்தது. பிற்காலத்தில் சித்தர்கள் பட்டைச் சாராயம் என்னும் பெயரில் தயாரித்த மதுவுக்கும் சங்க கால ‘மது’, ‘கள்’ ஆகியவற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சங்க கால மதுவின் விரிவான வளர்ச்சியைச் சித்தர்களின் பட்டைச் சாராயத் தயாரிப்பில் காணலாம். அறிவியல் அடிப்படையில் இதனை ஆராய்ந்தால், சங்ககால மக்கள் பருகிய ‘நலம் தரும் நன் மது’வாகப் புதியதொரு மதுவை உருவாக்கலாம். அதன் மூலம் இக்கால ‘தீமை தரும் மது’வை ஒழிக்கலாம்.

---------------------

கருப்பஞ்சாறு

இக்காலத் தமிழக நகர்ப்புற வீதிகள் தோறும் கருப்பஞ்சாறு விற்பதையும் மக்கள் அதனை விரும்பி உண்பதையும் காண்கிறோம். சங்ககாலத்தும் இப்பழக்கம் இருந்ததைக் ‘கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின’ எனும் பெரும்பாணாற்றுப்படைக் குறிப்பின் வழி அறியலாம்.

---------------

பல்வகைப் பழங்கள் உண்ணும் பழக்கம்

இயற்கை அளித்த இனிய மருந்து ‘பழங்கள்’ என்றால் மிகையன்று. பழங்கள், உடல் வலிமைக்கும், அழகைப் பராமரிக்க உதவும் இயற்கை மருந்தாகும். பருவ நிலைகளுக்கேற்ப தோன்றும் பல்வகைப் பழங்கள் உண்பதால் இயற்கைச் சக்தி உடலில் குன்றாது காக்கப் பெறுவதுடன் பருவ நிலைக்கும் ஏற்ற உடல்நிலையைப் பெற்று நோயணுகாது வாழலாம். அறுசுவையளிக்கும் பழங்கள் இனிய உணவாகவும் இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. பழங்களை உண்ணும் பழக்கம் நல வாழ்வுக்குதவும் நற்பழக்கமாகும். சங்க கால மக்கள் மருத்துவக் குணமுடைய பல்வகைப் பழங்களை உண்ணும் பழக்கத்தினர். மா, பலா, வாழை, முந்திரி, நாரத்தை, நாவல், களா, துடரி போன்ற பழங்களை உண்டனர். தேமாங்கனி எனும் மாம்பழத்தை உண்பதால் பெருங்குடல் புற்று நோய், குடல் இறக்கம், குடல்வாய் அழற்சி போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுவதாக அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன.

உடலுக்குக் காரச் சக்தியைத் தருவதில் வாழை நிகரற்றது. நீண்ட வாழ்நாளைத் தரும் தனிச் சிறப்புடையது நெல்லிக்கனி. நீர் வேட்கையைத் தீர்ப்பது நாவல். வயிற்றுக் கோளாறுகளை வராமல் தடுப்பது நாரத்தை. நரம்புகளுக்கு வலிமை தருவது முந்திரி, முக்கனிகளில் தனிச்சுவையுடைய பலாப் பழம் உடலுக்கு உரமளிக்கும் தன்மை கொண்ட தாகும். கள்ளின் மயக்கத்தைப் போக்க சங்கத் தமிழர் பலாப்பழத்தின் விதையை உண்டனர். உடலின் வலிமைக்கு மட்டுமின்றி ‘காப்பு மருந்தாகவும்’ விளாம்பழத்தை அக்காலத்தில் பயன்படுத்தினர். தயிர் கெடாமல் இருக்கவும் புளித்த நாற்றம் வீசாமல் இருக்கவும் தயிர்த் தாழியில் விளாம்பழத்தைப் போட்டனர். இவ்வாறு பழந்தமிழர் அன்றாட வாழ்வில் பழங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பராமரித்தனர். 

Pin It

ஹார்மோனியம் – புல்புல்தாரா – பேங்கோஸ் – தபேலா – டோலக் போன்ற துணைக்கருவிகள் கூட்டம் இல்லாமல் சேதுராமன் கையில் ஒரு பெரிய டேப் – பொன்னம்மாள் கையில் எப்போதாவது பயன்படுத்தும் சிப்லா கட்டை. இவற்றோடு கருத்துப் புரட்சியை மட்டுமல்ல, கலைப் புரட்சியையும் செய்தவர்கள் மதுரை சேதுராமன் பொன்னம்மாள். மேற்சொன்ன கலைநிகழ்ச்சி குழுவின் இருவரும் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். பொன்னம்மாள் தலித் பிரிவை சேர்ந்தவர்.

கையில் பெரிய பயணப்பெட்டி – ஆடம்பரங்கள் இல்லாமல் ஒரு பெரிய சாக்கு பையில் டேப்பும் – சேதுராமன் அணிந்து கொள்ளும் கசங்கிய கறுப்பு ஜிப்பாவும் – வேட்டியும் இருக்கும். பொன்னம்மாள் கையில் மட்டும் கொஞ்சம் நாகரீகமான பிளாஸ்டிக் சூட்கேஸ். பம்பாய் நிகழ்ச்சிகளுக்கு போயிருந்தபோது பம்பாய் தோழர்கள் அவர்களுக்கு அன்பளிப்பாய் கொடுத்ததாம் அது.

கடந்த 1960-களில் பொன்னம்மாள் சேதுராமன் கலைநிகழ்ச்சி நடைபெறாத பெருநகரங்கள் இல்லை; குக்கிராமங்கள் இல்லை. இவர்களது பிரச்சாரப் புயல் மராட்டிய மாநிலத்தின் பம்பாய் – கர்நாடக மாநிலத்தினுடைய பெங்களூர், தங்கவயல் போன்ற இடங்களிளெல்லாம் திராவிடர் கழக மேடைகளில் சுழன்று வீசியது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் கோயில் இருக்கும் என்று பக்தர்கள் சொல்லிக் கொள்வதைப் போலவே பெரியாரின் கருஞ்சட்டைப் படை இருந்த இடமெல்லாம் பொன்னம்மாள் சேதுராமனின் கருத்தும் – புரட்சியும் இருந்தது. இவர்கள் பாடிய பாடல்களை தாங்களே பயின்று கூட்டங்களில் பாடிய தோழர்கள் ஏராளம்.

இந்த இணையர் மிக எளிமையானவர்கள். கழகத் தோழர்கள் வீடுகளிலேயே சாப்பிட்டுக் கொள்வார்கள். உணவு விடுதிகளுக்குப் போக வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். தெருவோரத்து இட்லிக் கடைகளில் காலை இரவு சிற்றுண்டி. பல நேரங்களில் நிகழ்ச்சி முடிந்தவுடன் சேதுராமன் கழகத் தோழர்களோடு மேடையிலேயோ அல்லது வீட்டுத் திண்ணையிலேயோ படுத்துக் கொள்வார். பொன்னம்மாள் மாத்திரம் அந்த சிறிய வீடுகளில் பெண்களோடு தங்கிக் கொள்வார்.

சேதுராமனின் தோற்றத்திற்கும் – ஆற்றலுக்கும் தொடர்பு இல்லை. அவர்களுடைய பிரச்சாரம் பெரியார் வரலாறு – காமராசர் சாதனை – கடவுள் – மூடநம்பிக்கை – சடங்குகள் இவற்றைப் பற்றி பொன்னம்மாள் ஓர் அப்பாவியை போல் கேள்விகள் கேட்க சேதுராமன் அவைகளுக்கு பதில் சொல்லுகின்றன மாதிரி நீண்ட விளக்கங்களைச் சொல்வார். பேச்சின் நெடுக சேதுராமனின் நக்கலும் – கிண்டலும் கூட்டத்தை பெரும் கலகலப்பில் ஆழ்த்தும். இடையிடையே டேப் இசையோடு இருவரும் சேர்ந்து பாடும் பாடல்கள். நிகழ்ச்சி பல சமயம் நள்ளிரவு தாண்டியும் நடக்கும். அது கூட்டத்தையும் – கூட்டத்தில் இருக்கிறவர்கள் கொடுக்கும் உற்சாகத்தையும் பொறுத்தது.

சேதுராமன் சற்று முன்கோபக்காரர். சில நேரங்களில் கழகத் தோழர்களுடனே உரசல் வந்து விடும். பொன்னம்மாள் தான் குறுக்கே வந்து ‘அண்ணே... அண்ணே’ என்று குடைந்து பேசி பிரச்சனைகளின் வேகத்தைக் குறைப்பார். பெரிய கல்வி அறிவில்லாத அந்த எளிய பெண்மணியின் பணிவும் – தன்மையான பேச்சும் எல்லாவற்றிற்கும் மேல் அவருடைய அற்புதமான குரல் வளமும் யாவரையும் ஈர்த்து விடும்.

அந்த காலத்தில் புகழ் பெற்ற நடிகையாகவும் – தமிழிசைக் கலைஞராகவும் இருந்தவர் கொடுமுடி கோகிலம் – ஏழிசை வல்லபி கே.பி.சுந்தராம்பாள் அம்மையார் ஆவார். இவர் அவ்வையார் – பூம்புகார் போன்ற திரைப்படங்களில் அற்புதமாகப் பாடி நடித்தவர். அவருடைய “ஒருவனுக்கு ஒருத்தி என்ற”, “தப்பித்து வந்தானம்மா” போன்ற பாடல்கள் இன்னமும் காற்றோடு கலந்து காலத்தை வென்று நிற்கின்றன. அவருக்கு மிகவும் புகழ் சேர்த்த பாடல் ஒரு பக்தை முருகனைப் பார்த்து அவனுடைய உடல்அலங்காரங்களை எல்லாம் ஏன்? ஏன்? என்று கேள்வி கேட்டு பாடும் சங்கரதாஸ் சுவாமிகளுடைய பாடலாகும்.

“வெண்ணீறணிந்தது என்ன... என்ன...
வேலை பிடித்தது என்ன... என்ன...
கண்மூடி நின்றது என்ன... என்ன...
காவி உடுத்தது என்ன... என்ன...”
என்பது தான் அந்த பாடல்.

இதே பாடலின் மெட்டில் பெரியாரைப் பார்த்து ஒருவர் கேள்வி கேட்பதாக சேதுராமன் எழுதிய ஒரு பாடல் இவர்களுடைய கலைநிகழ்ச்சிகளில் முத்தாய்ப்பானது.

“கருஞ்சட்டை அணிந்தது என்ன... என்ன...
கையில் தடியோடு நின்றது என்ன.. என்ன..”

என்ற ஏராளமான கேள்விகளைக் கொண்ட பாடல் அது. பொன்னம்மாளினுடைய குரல் ஒரு அசப்பில் கே.பி. சுந்தராம்பாளினுடையது போலவே இருக்கும். தமிழிசை உலக பரிபாஷையில் அவருடை உச்சஸ்தாயி சஞ்சாரங்கள் எல்லாம் (குரலை மேலே உயர்த்திப் பாடுவது) பிசிறில்லாமல் ஒரு தேர்ந்த இசை கலைஞனுடையதை போல் “கிண்” என்று நிற்கும். அந்த பாடலை பாடச் சொல்லி இசை நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்து சீட்டுகள் வர துவங்கும். சிலர் பத்து ரூபாய் – இருபது ரூபாய் – ஐம்பது ரூபாய் அன்பளிப்புகளோடு.

ஆனால் அவர்கள் அந்த பாடலை கடைசியில் தான் பாடி அதற்குப் பிறகு சில நிமிடங்களில் நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள். 

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை 

Pin It

அடர்ந்த  கருமையான சுருள் முடி. ஓங்கி அடித்தால் முறிந்து விடுமோ என்று அஞ்ச வேண்டிய ஒல்லியான உருவம். சற்று குட்டை. அடர்த்தியான நெஞ்சு வரைக்கும் இருக்கின்ற தாடி, அதில் ஓரிரு வெள்ளிக் கம்பிகள். கை – நெஞ்செல்லாம் தலையில் இருப்பதைப் போல அடர்தியான கருமையான முடி. ஆனால் அதற்குள்ளே இருப்பதோ எதற்கும் அஞ்சாத வைரம் பாய்ந்த இதயம். கண்ணாடி போடாமலே படிக்கக் கூடிய ஆற்றல். அப்போது அவருக்கு வயது 70. இவர் தான் திராவிடர் கழகத்தின் கடைசிக்கால திராவிடர் விவசாய சங்கச் செயலாளர்  குடந்தை ஏ.எம்.ஜோசப்.

துவக்கத்தில் சில காலம் தான் செல்லும் வெளியூர் கூட்டங்களுக்கெல்லாம் என்னையும் (செல்வேந்திரன்) பேச ஏற்பாடு செய்து அழைத்துப் போவார். இந்த வகையில் அவர் தான் என் துவக்க கால வழிகாட்டி. நான் முன்னால் அரை மணி நேரம் கூட்டங்களில் பேச குடந்தை ஜோசப் தான் சிறப்புப் பேச்சாளராக முழு நேரம் உரையாற்றுவார். தந்தை பெரியாரோடு தமிழ்நாடு பூராவும் இதுபோலவே பெரியாருக்கு முன்னால் பேசுகிற துணை பேச்சாளராக இருந்து பின்னர் முழு நேர பேச்சாளராக ஆனேன். பிற்காலத்தில் குடந்தை ஜோசப் எனக்கு முன்னாலேயே பேசி விட நான் முழு நேர பேச்சாளராக அவருக்குப் பின்னால் பேசிய காலங்கள் வந்தன. அவருடைய பாணி வேறு. என்னுடையது வேறு.

கள்ளக்குறிச்சி வாசுதேவன் - இவர் தான் தென்னாற்காடு மாவட்ட கள்ளக்குறிச்சியில் திராவிடர் கழகத்தை இயக்கிய பேராற்றலான கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சொந்த நில புலங்கள் உள்ள நடுத்தர விவசாயி. அவருடைய அரசியல் ஆசானும் – ஆஸ்தான பேச்சாளரும் குடந்தை ஜோசப் தான். வாசு மென்மையாகப் பேசுவார். குரல் மேலெழும்பாமல் மெதுவாக இருக்கும். ஆனால் அந்தப் பகுதி அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளுக்கு வாசு என்றால் சிம்மசொப்பனம்தான். அப்போதெல்லாம் பேச்சாளர்கள் தங்கும் விடுதிகளில் தங்கும் பழக்கங்கள் கிடையாது.

வாசுவின் தோட்டத்தில் கூரையும் ஓட்டு வில்லையும் இணைந்த ஒரு சின்ன வீடு இருக்கும். அதை ஒட்டியே கிணறும் – பம்பு செட்டும். காலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு பம்பு செட்டு போட்டவுடன் எல்லோரும் அங்கே குளியல். காலைக் கடன்கள் எல்லாம் கிராமத்து பாணியில் தோட்டத்தை ஒட்டிய ஒரு காட்டாற்றின் கரையில் திறந்தவெளியில் தான்! சாப்பாடு – காலையில் – வாசுவின் கைத்தடியான கழகச் செயலாளர் நாராயணனின் டீக்கடையில். மதியம் வாசுவின் வீட்டில் இருந்து புளிக்குழம்பு – கருவாட்டுக் குழம்பு என காரசாரமான சாப்பாடு. இரவு கூட்டம் – நடக்கிற ஊரில் கழகத் தோழர்கள் வீட்டில் அல்லது தெருவோரக் கடைகளில்.......

ஜோசப் அந்த இடங்களில் தங்கி மனநிறைவோடு இருப்பார். சாப்பிடுவார். என்னையும் அப்படி பழக்குவார். எனக்கு இந்த அனுபவம் புதிது. ஏழ்மை – எளிமை ஆனால் வலிமை வாய்ந்த உறுதி நிறைந்த தொண்டர்கள்.

குடந்தை ஜோசப் திராவிடர் கழகக் கோட்டையான குடந்தையில் பிறந்தவர். ஆனால் சுயமரியாதை குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. கொடிக்கால் வெள்ளாள சாதியினராய் இருந்து – ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் இவருடைய முன்னோர்கள். இவருடைய தந்தையார் ஒரு சின்ன பங்கு சாமியார். மதப் பிரசங்கி. துவக்க காலத்தில் கையில் பைபிள் – கழுத்தில் சொரூபம் என்று அலைந்து கொண்டிருந்தவன் தான் நானும் என்று தன்னுடைய பேச்சின் இடையிலேயே குறிப்பிடுவாராம். மதப்பிரச்சனைகள் என்று வருகிறபோது கிறிஸ்தவ மதத்தையும் – பாதிரிகளையும் – பைபிளையும்  கண்டமேனிக்கு கடுமையாக விமர்சனம் செய்வார். இப்போதுள்ள சிலரைப் போல் மேலுக்கு நாத்தீகம் – உள்ளுக்குள்ளே மதப்பற்று என்று போலித்தனமாக நடக்க மாட்டார்.

திருச்சியில் ஒரு கிறிஸ்தவர்கள் கல்லறை இருக்கிறது. அங்கே மேல்சாதியினருக்கு என்று ஒரு பகுதியும் – தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்று ஒரு பகுதியும் இருக்கிறது. இடையிலே ஒரு தடுப்புச் சுவர். இதை எதிர்த்து தலித் கிறிஸ்தவர்களால் ஒரு ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. குடந்தை ஜோசப் இந்தக் கூட்டத்தில் கிறிஸ்தவப் பாதிரியார்களையும் – கிறிஸ்தவ மதத்தைப் பற்றியும் மிகக் கடுமையாகப் பேசினார். மதத்தலைவர்கள் மூலம் ஜோசப்பை மத நீக்கம் செய்வோம் என்றும் அவர் இறந்தால் அவர் உடலை கிறிஸ்தவக் கல்லறையில் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் மிரட்டினர். காரணம், அப்போதெல்லாம் பொது இடுகாடுகளிலோ – சுடுகாடுகளிலோ – கிறிஸ்தவ – முஸ்லீம்கள் உடல்களைப் புதைக்க அனுமதிப்பதில்லை. இதற்கு அஞ்சியே பல கிறிஸ்தவர்கள் பாதிரியார்களுக்கு அடங்கிப் போய்விடுவார்கள்.

ஆனால் ஜோசப் இன்னும் வேகமானார். “என்னை கத்தோலிக்க மதத் தலைமை குருவான போப்பாண்டவர் நினைத்தாலும் நீக்க முடியாது. என்றைக்கு நான் கருப்புச் சட்டை போட்டு பெரியார் தொண்டன் ஆனேனோ அன்றைக்கே உங்கள் கட்டுப்பாட்டைத் தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்து விட்டேன். நான் இறந்து போனால் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்க எழுதி வைத்து விடுவேன். அந்த கவலையே இல்லையென்று” கர்ஜித்த மாவீரன் அவர்.

மிகக் காலதாமதமாக – நாற்பது வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டார். அவருடைய துணைவியார் அரசு மருத்துவமனையில் செவிலியராய் இருந்தார். திருமணமாவதற்கு முன்னால் பலநாட்கள் என்னுடைய (செல்வேந்திரன்) தோட்டத்துக் கொட்டகையில் வந்து தங்கி விடுவார். காலை சிற்றுண்டி -  பக்கத்தில் இருக்கின்ற ஒரு இட்லி வியாபாரம் செய்யும் அம்மாவிடம் இருந்து ஆப்பம் – புட்டு என்று ரகவாரியாகப் போய்விடும். அப்போதெல்லாம் இரவில் சிற்றுண்டி சாப்பிடுகின்ற பழக்கம் கிடையாது. மதியம் இரவு என் வீட்டில் இருந்து சாப்பாடு. நான் ஊரில் இல்லாவிட்டாலும் “தாடிக்காரர் வந்திருக்கிறார்” என்று சொன்னால் அவருக்கு எல்லா உபசாரமும் நடக்கும். இதுபோல ஜோசப்புக்கு தமிழ்நாடு பூராவும் காட்டுசாகை குப்புசாமி – வாசு போன்ற நிறைய கழக நண்பர்கள் இருந்தார்கள்.

ஜோசப்பினுடைய ஆவேசமான பேச்சுக்குப் பிறகு அப்போது நகர திராவிடர் கழகத் தலைவராய் இருந்த என்னுடைய தலைமையில் மேற்சொன்ன சுடுக்காட்டு சாதிச் சுவர் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. ஆனால் அது பொது இடம் அல்ல. தனியார் ஒருவரின் சொத்து. ஆகவே நான், ஜோசப் எல்லோரும் காவல்துறையால் தளைப்படுத்தப்பட்டோம். பெரியார் எங்களைக் கடுமையாக கடிந்து கொண்டார். அப்போதைய நகர் மன்றத் தலைவரான லூர்து சாமி பிள்ளையினுடைய தலையீட்டால் நாங்கள் வழக்கின்றி தப்பினோம்.

இப்படி ஜோசப்பின் வழிகாட்டுதலோடு ஒரு குடும்பமாய் நடந்த எங்களுக்குள் பெரியார் – மணியம்மை மறைவிற்குப் பிறகு சற்று இடைவேளை வந்துவிட்டது. ‘நல்ல வீட்டில் நச்சரவம்’ புகுந்ததை போல் நல்லதே செய்து பழக்கப்படாத சிலர் எங்களுக்குள் புகுந்து விளையாடினார்கள். வழக்கம்போல் வானூயர்ந்த வாக்குறுதிகள் அவருக்கு வழங்கப்பட்டன!

சில மாதங்களிலேயே ஜோசப் நோய்வாய்ப்பட்டார். அமெரிக்காவில் போய் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுகிற அளவிற்கு அவருக்கு வசதி இல்லை. உதவவும் யாரும் முன் வரவில்லை. அரசு மருத்துவமனையிலேயே அவருடைய வாழ்வு முடிந்து போனது.

கிராமப்புற விவசாயிகளினுடைய பிரச்சனைகளை – அவருடைய கம்யூனிஸ்டுகளின் அராஜக எதிர்ப்புப் பிரச்சாரத்தை இன்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். கொச்சையான தமிழில் தான் பேசுவார். சொல் அலங்காரம் இருக்காது. ஒலிபெருக்கி குழாய்களில் தன்னுடைய அழுத்தமான உச்சரிப்பையும் – கணீரென்ற குரலையும் கேட்டவர்கள் அவரை நேரில் பார்த்தால் அப்படி பேசியவர் இவரா என்று எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.

பட்டுக்கோட்டை அழகிரிக்கென்று “ரத-கஜ-துரக–பதாதிகள்” – “அண்டபிண்ட சராசரங்கள்” என்ற புராண கால சொல்லடுக்குகள் பேச்சிலே வந்து விழுவதை போல் ஜோசப்பின் பேச்சிலேயும் பலரை கவர்ந்த எளிய சொலவடைகள் உண்டு.

“உங்கள் தொப்புளை அறுத்த கத்தி எங்கள் மடியில் இருக்கிறது.”
“உங்கள் அங்கத்திற்கு தண்ணீர் விட்டு அலசி எடுப்போம்”
“உன் குலம் கோத்திரமெல்லாம் நாங்கள் ஆத்திரப்பட்டால் எரிந்து போகும்”

இவைகளெல்லாம் குடந்தை ஜோசப்பினுடைய பேச்சின் நெடுகிலேயும் வந்துவிழும் சொற்கள்.

ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாக ஜோசப் விவசாய போராட்டக் களங்களில்     நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். தஞ்சை மாவட்டத்தில் மணலி கந்தசாமி போன்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்த கம்யூனிஸ்டு தலைவர்களை ஜோசப் – கீவளுர் பாவா நவநீத கிருஷ்ணன் – நாகை அவுரி திடல் கணேசன் – அண்மையில் மறைந்து போன நாகை எஸ்..எஸ்.பாட்ஷா போன்றவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் தமிழகத்தில ஒவ்வொருவரும் நுணுகி ஆராய வேண்டிய சம்பவங்களின் களஞ்சியமாகும்.

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை 

Pin It