தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் சிவந்தி ஆதித்தன். தாயார் கனகம் அம்மையார். ‘ஆதித்தனார்’ என்பது அவரது குடும்பப் பெயர். ஆதித்தனாரின் இயற்பெயர் ‘ சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் '.

    Si Pa Adithanarதந்தையார் வழக்கறிஞர். சி.பா. ஆதித்தனார் தமது பள்ளிப் படிப்பை திருவைகுண்டத்தில் பயின்றார். திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்ட மேல் படிப்பை முடித்தார்.

    கல்லூரியில் படிக்கும்போதே ‘ தொழில் வெளியீட்டகம்’ என்னும் பதிப்பகத்தை தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி ? தீப்பெட்டி தயார் செய்வது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி ? சோப்பு தயார் செய்வது எப்படி? பேனா மை தயாரிப்பது எப்படி ? என்பன போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார். இதற்காக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் சுய தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வம் வெளிப்படுவதுடன், தமிழக இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நல்ல சிந்தனையையும் அறிய முடிகிறது.

    சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டன் மாநகரத்திற்குச் சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். லண்டனில் படிக்கும் போதே நிருபராக பணியாற்றி படிப்புச் செலவிற்கு பணம் சம்பாதித்தார். சுதேசமித்திரன் இதழ், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் லண்டனிலிருந்து வெளி வந்த ஸ்பெக்டேட்டர் வார இதழ் முதலிய இதழ்களுக்கு செய்திக் கட்டுரைகள் எழுதி அனுப்பினார். இந்திய இதழ்களுக்கு லண்டனில் செய்தியாளராக இருந்த முதல் தமிழர் இவரே. லண்டனில் படிக்கும்போதே இதழ்கள் நடத்திட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்தை உள்ளத்தில் ஏற்றார்.

    லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பியவுடன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். சிங்கப்பூர் நாட்டில் பெரும் தொழில் அதிபராக விளங்கிய ஓ. ராமசாமி நாடார் என்பவரின் மகள் ஆச்சியம்மாள் என்ற கோவிந்தம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

    சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த பொழுது, நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால், சி. பா. ஆதித்தனாரின் சிந்தனையெல்லாம் இதழ் நடத்த வேண்டும் என்பதையே சுற்றிச் சுற்றி வந்தது. அவரது மாமனாரோ அதிக வருமானம் வரும் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு இதழ் நடத்தினால் பணம் சம்பாதிக்க முடியாது என்றார்.  “ அரிசி விற்றால் சாக்காவது மிச்சப்படும், பருப்பு உடைத்தால் உமி, குருணையாவது மிச்சப்படும், இதழ் நடத்தினால் என்ன மிஞ்சும் ? இருப்பதும் போய்விடும் ” எனக் கூறி இதழ் நடத்துவதை தடுத்தார். ஆனாலும், இதழ் நடத்தியே தீருவது என்பதில் ஆதித்தனார் உறுதியாக இருந்தார். வேறு வழியில்லாமல் அவரது மாமனாரும் ஒத்துக் கொண்டார்.

    முதன் முதலில் 'மதுரை முரசு' என்னும் வாரம் இருமுறை வெளிவரும் இதழைத் தொடங்கினார். பின்பு, 'தமிழன்' என்னும் வார இதழைத் தொடங்கினார். தமிழன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது தமிழின் மீது அவர் கொண்ட காதல் தான்
.
    மதுரையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் , கலவரம் ஏற்பட்டு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள் ஆனால், ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட வேண்டும் என்று காவல்துறையினர் கட்டளையிட்டார்கள். ஆதித்தனார் "மதுரையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு! மூன்று பேர் சாவு!" என முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டார்.

    அதைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரிகள் போர்க்கால அதிகாரத்தைப் பயன்படுத்தி 'மதுரை முரசு' இதழைத் தடை செய்தனர். அதிகாரிகள் ஆணை பிறப்பித்தாலும் உண்மைச் செய்தியை வெளியிட ஆதித்தனார் தயங்கியது இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

    1942 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி 'தினத்தந்தி' நாளிதழை வெளியிட்டார். தலையங்கத்தில் நாட்டின் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மக்களுக்குப் புரியும் விதத்தில் எளிய தமிழ் நடையில் விளக்கினார். "ஒரு படம் ஆயிரம் சொல்லுக்குச் சமம்" என்னும் சீன பழமொழிக்கேற்ப, தமது தினத்தந்தி நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியிட்டார்.

    பாமர மக்களும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ச்சி மிகுந்த தலைப்புகள், கருத்துப் படங்கள் இவற்றைக் கையாண்டார். அரசியல் , பொருளாதாரம், வர்த்தகம், திரைப்படம், விளையாட்டுச் செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டு தமிழக மக்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும் உதவினார்.

     தமிழகத்தில் இன்று 'தினத்தந்தி' நாளிதழ் 12 நகரங்களிலிருந்தும், புதுச்சேரி, மும்பை , பெங்களுர் முதலிய பெருநகரங்களிலிருந்தும் வெளி வருகிறது. பட்டித்தொட்டியெங்கும், ஊர்தோறும் தினத்தந்தி நாளிதழ் பரவி பல லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. மேலும், தினத்தந்தி குழுமத்திலிருந்து தினத்தந்தி, மாலை முரசு, ராணி, ராணி முத்து, ராணி காமிக்ஸ் போன்ற வார, மாத இதழ்களும் வெளியிடப்படுகிறது.

    சி.பா. ஆதித்தனார் 1942 முதல் 1953 வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகச் செயல்பட்டார். 'தமிழ்ப்பேரரசு' என்னும் நூல் மூலம் தமிழின முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டியவைகளை வலியுறுத்தினார்.

    1942 ஆம் ஆண்டு 'தமிழரசுக் கட்சி'யைத் தொடங்கி நடத்தினார். பின்பு. 1958 ஆம் ஆண்டு 'நாம் தமிழர்' இயக்கத்தையும் தொடங்கி செயல்படுத்தினார்.

    1960 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு சிறை சென்றார். அதே போன்று 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பேரறிஞர் அண்ணா அழைத்ததால் தி. மு. க.வில் இணைந்தார். 1957 முதல் 1962 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அவர் சபாநாயகராகப் பொறுப்பேற்றது முதல் சட்ட மன்றத்தில் சபை ஆரம்பிக்கும் முன்பு தினம் ஒரு திருக்குறள் கூறி அவையைத் தொடங்கினார். தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாய அமைச்சராக பணியாற்றினார்.

    திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி ஏற்படுத்தப்பட்டு அக்கல்லூரியில் இதழியல் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. சி.பா. ஆதித்தனார் 'இதழாளர் கையேடு' என்னும் நூலை வெளியிட்டார். அந்த நூல் இதழாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக இன்றும் விளங்குகிறது.

    'உடல் மண்ணுக்கு , உயிர் தமிழுக்கு' என்னும் முழக்கத்தின் மூலம் தமிழர்களை தட்டியெழுப்பினார். தமிழர்கள் தங்கள் கையொப்பத்தின் தலைப்பெழுத்தையும், கையெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

    தாய் நாட்டுப் பற்றும், தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்தார். பாமரனையும் படிக்க வைக்க வேண்டும், தமிழ் மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தமது உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்தார் சி.பா. ஆதித்தனார்! 1981 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் காலமானர். அவரது புகழ் இதழியல் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

Pin It

"நாட்டில் நிலவும் அரசியல் கொந்தளிப்பிலோ, சீர்திருத்த வேகத்திலோ ஈடுபடாமல், அமைதியாக ஒரு மூலையிலிருந்து, மக்களின் வாழ்க்கையைக் கண்டுணர்ந்து, சொல் ஓவியமாக ஆக்கித் தரும் கலை உள்ளம் சிலருக்கு இயல்பாகவே அமைகிறது. த.நா. குமாரசுவாமியின் கதைகளும் அப்படிப்பட்டவைகளே"- எனத் தமிழ் இலக்கிய ஆய்வாளர் டாக்டர் மு.வ. தமது, ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலில் த.நா.குமாரசுவாமியின் எழுத்தாற்றலை புகழ்ந்துரைத்துள்ளார்.

    தண்டலம் நாராயண சாஸ்திரி குமாரசுவாமி 1907 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். தந்தையார் தண்டலம் சங்கர நாராயண சாஸ்திரி, தாயார் ராஜம்மாள். சென்னை முத்தியால் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளியில் பயிலும்போதே சமஸ்கிருதம், தெலுங்கு முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.

    கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு படித்தார். கல்லூரியில் தத்துவம், உளஇயல் முதலிய பாடங்களைப் படித்து 1928 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

    வங்கத்திற்கு 1930 ஆம் ஆண்டு சென்று, மகாகவி இரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்து, அவரது வாழ்த்தைப் பெற்று, அவருடைய நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்திட உந்துதல் பெற்றார். இந்தச் சந்திப்பு வங்கத்துக்கும் தமிழுக்கும் இடையே ஏற்பட்ட இலக்கியப் பாலத்தின் அடித்தளம் ஆகும்.

    இந்திய சுதந்திரப் போரில் 1930களில் ஈடுபட்டு, சென்னையில் ஆந்திர பிரகாசம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். அவருடைய பாடி இல்லத்தில் காங்கிரஸின் மூவர்ணக் கொடி பறந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட ஆங்கிலேய காவல் துறையினர், காங்கிரஸின் மூவர்ணக் கொடியை அகற்றி, கொளுத்தினர். இந்த நிகழ்ச்சி அவரது உள்ளத்தில் தேசப்பற்றை மேலும் வளர்த்தது.

    நாட்டுப்பற்றின் காரணமாக, நேதாஜி எழுதிய ‘இளைஞன் கனவு’, ‘புதுவழி’ முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார். நேதாஜி சென்னைக்கு வருகை புரிந்தபோது, அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடு 1959 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு வங்க மொழி எழுத்தாளர் ஸ்ரீதாராசங்கர் தலைமை தாங்கினார். அம்மாநாட்டில் த.நா. குமாரசுவாமி கலந்து கொண்டார்.

    த.நா. குமாரசுவாமி எழுதிய முதல் சிறுகதை ‘கன்யாகுமரி ’ 1934 ஆம் ஆண்டு தினமணி இதழில் வெளியானது. அதைத் தொடர்ந்து, அவரது சிறுகதைகள் ‘சுதேசமித்திரன்’, ‘கல்கி’, ‘அமுதசுரபி’, ‘ஆனந்த விகடன்’, ‘கலைமகள் ’ முதலிய இதழ்களிலும் வெளியானது.

    த.நா. குமாரசுவாமி 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ருக்மணியை திருமணம் செய்து கொண்டார்.

    ஏ.கே. செட்டியார் காந்தி பற்றி தயாரித்த ஆவணப்படத்துக்கு விளக்கவுரை எழுதி அளித்தார்.

    சாகித்திய அக்காதெமி சார்பில், 1960-61 – களில் மகாகவி இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவையொட்டி, அவரது நூல்கள் சிலவற்றை தமிழில் மொழி ஆக்கம் செய்தார். 1962 ஆம் ஆண்டு எழுத்தாளர் பரிவர்த்தனத் திட்டப்படி தமிழ் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் என்ற தகுதியில், வங்க மொழி எழுத்தாளர் நிகார் ரஞ்சன் ரே, அஸ்ஸாமிய எழுத்தாளர் ஹேம் காந்த் பரூவா ஆகியோருடன் இரண்டு மாதம் சோவியத் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு லியோ டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி, அன்டன் செக்கவ் முதலிய எழுத்தாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

    வங்க அரசின் ஆதரவில் தமிழ், வங்க மொழி முதலியவற்றிற்கு த.நா. குமாரசுவாமி செய்த தொண்டினைப் பாராட்டிப் போற்றி ‘நேதாஜி புரஸ்கார்’ (நேதாஜி இலக்கிய விருது) விருது அளிக்கப்பட்டது.

    கன்யாகுமரி, சந்திரகிரகணம், நீலாம்பரி, இக்கரையும் அக்கரையும், கற்பவல்லி முதலிய சிறுகதை தொகுப்புகளை எழுதி வெளியிட்டு உள்ளார். இதழ்களில் வெளிவந்து நூல் வடிவில் வெளிவராத இவரது சிறுகதைகள் நூற்றுக்கு மேல் உள்ளது.

    இவரது சிறுகதைகள் மனித மன உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, உள இயல் தளத்தில் அமைந்தவை. மேலும், முதியவர்களின் மனப்போக்கு, கணவன்- மனைவி உறவு, கணவனை இழந்த பெண்களின் மனக்குமுறல்கள், குழந்தைப் பருவம் முடிந்து இளமைப் பருவம் தொடங்கும் காலத்தில் ஏற்படும் உள்ளக் கிளர்ச்சிகள், குழந்தை மனம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்தவைகளாகும்.

    சிறுகதை எனும் சிறிய சாளரத்தின் மூலம் பரந்த உலகையும், அதில் உலவும் பல்வேறு வகையான குண இயல்புகள் கொண்ட மனிதர்களையும், அவர்களுடைய விசித்திர வெளிப்பாடுகளையும், நுண்ணிய இயல்புகளையும், உணர்வு நிலைகளையும், நம் கண் முன் முழுமையுடனும், நிறைவுடனும் அவருக்கே உரிய தனிச்சிறப்பான நடையில் எழுதி அளித்துள்ளார்.

விடுதலை, ஒட்டுச்செடி, குறுக்குச் சுவர், வீட்டுப்புறா, அன்பின் எல்லை, கானல் நீர் முதலிய நாவல்களையும் படைத்துள்ளார். ‘ஒட்டுச் செடி’ நாவல் ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளி வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.

    மேலும், “ஒட்டுச் செடி நாவல், பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது தங்களது வீடுகளை இழந்து - கிராமத்தை விட்டுவிட்டு வெளியே வரும்-ஏழை விவசாயிகளின் அளவறியா சோகத்தை, பிரச்சாரமின்றி மிகவும் செட்டான சம்பவங்களாலும், சொற்களாலும் நாவலாகப் படைத்துள்ளார். சொல்லப்பட்டதற்கு மேலே சொல்லப்படாத வாழ்க்கையும் சோகமும் நாவலின் அடித்தளமாக உள்ளது” - என எழுத்தாளர் சா.கந்தசாமி கருத்துரைத்துள்ளார்.

    த.நா. குமாரசுவாமியின் இலக்கியப் பணிகளில் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பது அவருடைய மொழிப்பெயர்ப்பு பணியாகும். 1930களில் தொடங்கிய அவரது மொழிபெயர்ப்புப் பணி 1980 வரை 50 ஆண்டு காலம் தொடர்ந்தது.

    அக்காலத்தில் வங்க இலக்கியத்தில் முன்னோடிகளாக விளங்கிய பங்கிம் சந்திரர். சரத் சந்திரர், இரவீந்திரநாத் தாகூர், தாராசங்கர் முதலியவர்களின் நாவல்களையும், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

    இரவீந்திர நாத் தாகூரின் புயல், சதுரங்கம், ராஜகுமாரி விபா, ராஜரிஷி, கோரா, பூந்தோட்டம், இரு சகோதரிகள், லாவண்யா, சிதைந்த கூடு, மூவர், விநோதினி முதலிய புதினங்களையும், காரும் கதிரும், கல்லின் வேட்கை, மானபங்கம், போஸ்ட் மாஸ்டர், பத்தினிப் பெண், நெற்றிப் பொட்டு, வெற்றி முதலிய சிறுகதைகளையும், முகுடம், புலைச்சி முதலிய நாடகங்களையும், தாகூர் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளையும், தாகூர் கவிதைகளையும், பயணக் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து தமிழுக்கு அளித்துள்ளார்.

    பங்கிம் சந்திரரின் விஷ விருட்சம், ஆனந்தமடம், கிருஷ்ண காந்தன் உயில், மாதங்கினி, கபால குண்டலா முதலிய நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்கு அளித்துள்ளார்.

    மேலும், சரத் சந்திரரின் பைரவி, அமூல்யன், சௌதாமினி, மருமகள் முதலிய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

    ‘கிழக்கோடும் நதி’ எனும் சீன நாவலை ஆங்கிலத்திலிருந்தும், ‘துர்லக்’ எனும் செக்கோஸ்லோவாகிய மொழிக் கதையை ஆங்கிலத்திலிருந்தும், ‘காதலர்’ எனும் பர்மிய மொழிக் கதையையும் மொழிபெயர்த்து தமிழில் அளித்துள்ளார்.

    த.நா. குமாரசுவாமி வங்கமொழி நாவல்களை மொழியாக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல், மூல ஆசிரியர் பற்றிய விளக்கமான குறிப்புகளையும் இணைத்து அளித்துள்ளது சிறப்புக்குரியதாகும்.

    “ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு மிகவும் தேவை பிறமொழி – தன்மொழி இவற்றில் சிறந்த பயிற்சி, இரு மொழியின் நுணுக்கங்கள், மொழி சார்ந்த மக்களின் பண்பாடு இவற்றில் ஆழ்ந்த அறிவு அவசியம்.”

    “மூல ஆசிரியரின் எழுத்தில், நடையில், உள்ளத்தில் நுழைந்து வரக்கூடிய திறமை நிரம்ப இருந்தால் தான் மொழிபெயர்ப்பில் ஒரளவு வெற்றி அடைய இயலும், வெறும் அகராதி, இலக்கணம் இவற்றின் துணை கொண்டு மொழிபெயர்ப்பு செய்துவிட முடியாது” – என மொழி பெயர்ப்பு குறித்து அறிஞர்கள் வரையறை செய்துள்ளனர். அந்த அடிப்படையில் த.நா. குமாரசுவாமியின் மொழிபெயர்ப்புகள் அமைந்துள்ளன‌.

    நாட்டுப்பற்றுடன், சமுதாயத்தின் மீதும் த.நா. குமாரசுவாமி மனமிரங்கினார். பாடி கிராமத்தில் நலிந்தவர்கள் மீது அனுதாபம் கொண்டு, தமக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை சாதி கலவரத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த ஆதிதிராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கினார். மேலும், அவர்களுக்கு காந்தியடிகளின் கொள்கைகளை விளக்கி அகிம்சை முறையில், தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டத் தூண்டினார். ஊர் மக்கள் த.நா. குமாரசுவாமியை ‘காந்தி ஐயர்’ என்று போற்றிப் புகழ்ந்தனர்.

    “இவரது பன்மொழிப் புலமை இவருடைய எழுத்துக்கு அழகையும், உரத்தையும் ஊட்டியது. இவருக்கு அமைந்த நடை தனிச்சிறப்புடையது. வேறு யாருடைய நடையிலும் இந்தப் பாணியைக் காண இயலாது. இயற்கையின் எழிலை ஒவியமாகக் காட்டுவதில் இவர் வல்லவர்” - என இவரைப் பாராட்டியுள்ளார் கி.வா. ஜகந்நாதன்.

    தமிழ்மொழி பெயர்ப்பு உலகில் சிறந்து விளங்கி, தமிழுக்குத் தொண்டு செய்த த.நா. குமாரசுவாமி 17-09-1982 அன்று, தமது 75 ஆவது வயதில் காலமானார்.

Pin It

இசுலாமியர்களிடம் மண்டிக்கிடந்த மூடக் கொள்கைகளையும், கண்மூடிப்பழக்க வழக்கங்களையும் களைந்தெறியத் தமது வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர், புதுமைச் சிந்தனையாளர், சமுதாயச் சீர்திருத்தவாதி, அஞ்சாநெஞ்சம் படைத்தவர். அடிப்படையில் தந்தை பெரியாருக்கு ஈடாக, ‘இசுலாமியப் பெரியார்’ எனப் போற்றப்படுபவர். "இசுலாம் எங்கள் வழி! இன்பத் தமிழ் எங்கள் மொழி!!” என, இன்றைக்கும் இசுலாமிய பெருமக்கள் முழக்கமிடுவதற்கு விதை ஊன்றிய வித்தகர். அவர் தான், தஞ்சை அறிஞர் தாவூத் ஷா!.

dawood shaதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாத்தூரில், 1885 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 29ஆம் நாள், பாப்பு இராவுத்தர் குல்சூம் பீவி இணையருக்குத் தனயனாகப் பிறந்தார் தாவூத் ஷா.

நாச்சியார்கோயில் திண்ணைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். பின்னர், கும்பகோணம் `நேடிவ்’ உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் தான் உலகப் புகழ் பெற்ற கணித மேதை இராமானுஜமும் படித்துக்கொண்டிருந்தார். தாவூத் ஷாவும், இராமானுஜமும் நெருங்கிய நண்பர்களாக விளங்கினார்கள். அப்பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த இராமானுச ஆச்சாரியார் என்ற தமிழாசிரியர் தாவூத் ஷாவுக்கு தமிழார்வத்தை ஊட்டினார். மேலும், அவருக்குத் தனியே தமிழ் இலக்கண இலக்கிய வகுப்புகளையும் நடத்தினார். கம்ப இராமாயணமும் கற்பித்தார். கம்ப இராமாயணத்தின் கவிச்சுவை கண்ட தாவூத் ஷா, கம்பனின் பாடல்கள் பலவற்றை மனனம் செய்தார். பின்னாளில் கம்ப இராமாயணக் கதாகாலட்சேபம் செய்யும் அளவுக்கு, தாவூத் ஷாவுக்கு தைரியம் வந்தது. `கம்ப இராமாயண சாயபு’ என்னும் சிறப்புப் பட்டம் பெறவும் இது உறுதுணையாக அமைந்தது.

பள்ளியிறுதித் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து அனைவரது பாராட்டையும் பெற்றார். தாவூத் ஷா கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டும் என்னும் விருப்பம் கொண்டார். அப்போது, அவரது தந்தை பாப்பு இராவுத்தர் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இயற்கை எய்திவிட்டார். குடும்பம், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அச்சூழலில், சென்னையில் வாழ்ந்து வந்த இசுலாமிய செல்வந்தர் ஒருவர், இவர் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு உதவிட முன்வந்தார். அதுவும் ஒரு நிபந்தனையோடு ஆம்!. அவரது மகளை மணந்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து கல்லூரியில் படிக்கலாம் என்பதே அந்நிபந்தனை.

"சீனாவுக்குச் சென்றாவது கற்றுக்கொள்" என்பது நபிகள் நாயகத்தின் அறிவுரை. "பிச்சை புகினும் கற்கைநன்றே" என்பது அவ்வைத் தமிழின் அமுதமொழி. இவர், கல்வியின் மீது கொண்டிருந்த தீவிரக் காதலால், அச்செல்வந்தரின் நிபந்தனையை ஏற்றார். அந்த இசுலாமிய செல்வந்தரின் மகள் சபூரா பீவியை 1909 ஆம் ஆண்டு மணம்புரிந்து கொண்டார்.

சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் தாவூத் ஷா சேர்ந்து படித்தார். கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி முதலியவற்றில் கலந்து கொண்டு பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றார். கல்லூரியில் படித்துக்கொண்டே, மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வு எழுதினார். உயர் மதிப்பெண்கள் பெற்றமைக்காக தமிழ்ச்சங்கம், அவருக்கு வெள்ளிப்பதக்கத்தை அள்ளித்தந்தது.

கல்லூரியில் பயிலும்போது இவருக்குத் தமிழ்ப் பேராசிரியராகத் `தமிழ்த் தாத்தா உ.வே.சா’ இருந்து வழிநடத்தினார். தத்துவத்துறைப் பேராசிரியராக, இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவர், `தத்துவ மேதை’ எனப் போற்றப்படும் டாக்டர் ச.இராதாகிருஷ்ணன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாவூத் ஷா 1912 ஆம் ஆண்டு பி.ஏ.பட்டம் பெற்றார்.

அப்போது, தாவூத் ஷாவின் வாழ்வில் துயரம் துளிர்விட்டது. அவரது அன்பு மனைவி சபூரா பீவி நோய்வாய்ப்பட்டுக் காலமாகிவிட்டார். பின்னர் பெற்றோர்கள் மற்றும் உற்றோர்கள் வேண்டுகோளை ஏற்று, மைமூன்பீ என்பவரை இரண்டாவது மனைவியாக ஏற்றார்.

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பணிபுரிந்து கொண்டே துறைத் தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெற்றார். சட்டம் படித்து 1917 ஆம் ஆண்டு கீழமை நீதிமன்ற நடுவராக பண்ருட்டி நீதிமன்றத்தில் பதவி ஏற்றார். தமது பணியில் நீதி தவறாது, நேர்மையுடன் செயல்பட்டு மக்களின் பாராட்டைப் பெற்றார். நீதித்துறையில் பணிபுரிந்தாலும் தூக்குத் தண்டனை அளிப்பதை எதிர்த்தார். அதாவது, "அல்லா கொடுத்த உயிரைப் பாதிவழியில் பறிக்க நாம் யார்?" என வினா எழுப்பினார்.

இந்திய விடுதலைப்போர் உச்சகட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. தாவூத் ஷாவின் உள்ளத்திலும் விடுதலை உணர்வு பொங்கி எழுந்தது. விடுதலை வேள்வியில் தன்னையும் இணைத்துக் கொள்ள அவர் உள்ளம் துடித்தது. அப்பொழுது, மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். `அன்னியப் பொருட்களை புறக்கணியுங்கள்!’ `மாணவர்கள் கல்லூரிகளிலிருந்தும், அரசுப் பணிபுரிவோர் அலுவலகங்களிலிருந்தும் வெளியேறுங்கள்!’ ‘செய் அல்லது செத்து மடி!!’ என்று அனைவரையும் முழங்கச்செய்தார். மகாத்மா காந்தியடிகளின் அறைகூவலை ஏற்ற தாவூத் ஷா, தமது கீழமை நீதிமன்ற நடுவர் பதவியை உதறித் தள்ளினார்.

தாவூத் ஷா பதவியைத் தூக்கி எறிந்தவுடன், தமது சொந்த ஊரான நாச்சியார்கோயிலுக்கு வந்து சேர்ந்தார். இந்திய விடுதலைப் போரில் குதித்தார். அரசியல் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார். கிராமங்கள் தோறும் சென்று தீவிரமான பரப்புரை செய்தார். மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டினார். பட்டி தொட்டியெல்லாம் சென்று மகாத்மா காந்தியடிகளின் அரசியல் கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைத்தார். கதர்த் துணிகளைக் கை வண்டியில் ஏற்றிக் கொண்டு தானே வண்டியை இழுத்துச் சென்று தெருத்தெருவாக விற்பனை செய்தார்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராகச் செயல்பட்டார். சென்னை மாநகரத் தந்தையாக (ஆல்டர்மேன்) தாவூத் ஷா நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்காக `தேசகேசவன்’ என்ற வார இதழை நடத்தினார்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையை முகமது அலி ஜின்னா முன்வைத்தார். ஜின்னாவின் வழியைப் பின்பற்றி 1940 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய‌ தாவூத் ஷா, முசுலிம் லீக் கட்சியில் சேர்ந்தார். தமிழ் நாட்டில் முசுலிம் லீக் கட்சியின் முதன்மையான பரப்புரையாளராக விளங்கினார்.

இடி முழக்கம் போன்ற இவரது சொல்லாற்றலும், இளைஞர்கள் நெஞ்சத்தில் வெடி முழக்கம் ஏற்படுத்திய இவரது எழுத்தாற்றலும், நொடிப் பொழுதும் ஓய்வு அறியாத உழைப்பும், `தமிழ்நாட்டின் ஜின்னா’ என்ற சிறப்புப் பட்டத்தை தாவூத் ஷாவுக்கு பெற்றுத் தந்தது.

சென்னையில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்ற முசுலிம் லீக் கட்சியின் மாநாட்டில் முகமதுஅலி ஜின்னா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையை தாவூத் ஷா அழகு தமிழில் மொழிபெயர்த்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இசுலாமிய மக்களிடையே சமுதாயச் சீர்திருத்தத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு, தாவூத் ஷாவினுடைய எழுத்தும், பேச்சும் அமைந்திருந்தன. நாச்சியார்கோயிலில் 1941 ஆம் ஆண்டு `அறிவானந்த சபை’ என்ற பெயரில் நூலகமும், உடற்பயிற்சி நிலையமும் ஏற்படுத்தினார். அச்சபையின் தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்டார். பின்னர், அந்தச் சபையை `முசுலிம் சங்கம்’ என்று மாற்றினார். "தென்னாட்டு முசுலிம்களிடம் காணப்படும் மூடக்கொள்கைகளை எல்லாம் களைந்து, அவர்களுடைய மார்க்க ஞானத்தையும் கல்வியறிவையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் 1921 ஆம் ஆண்டு முதல் `தத்துவ இஸ்லாம்’ என்னும் மாத இதழை, தமது பிரச்சாரத்துக்காகக் கொண்டு வந்தார் தாவூத் ஷா!

தர்காக்களில் வழிபாடு கூடாது; நேர்ந்து கொள்ளுதல் கூடாது; வேப்பிலை அடிக்கக்கூடாது; கறுப்புக் கயிறு கட்டக்கூடாது; மந்திரித்தல் கூடாது; நாள், நட்சத்திரம் பார்க்கக்கூடாது; சகுனம் பார்ப்பது கூடாது; குறி சொல்லுதல், ஆருடம் பார்த்தல் முதலியவை அறவே கூடாது. இவைகள் அனைத்தும் இசுலாம் மார்க்கத்தில் விலக்கப்பட்டவை என்று பாமர மக்களிடம் பலபட எடுத்து விளக்கினார். "சோதிடனிடம் செல்லும் முசுலிம், குரானைவிட்டு விலகிச் சென்றவன் ஆவான்" என்று நபிகள் நாயகம் கூறியதை நயம்பட எடுத்துரைத்தார்.

"பள்ளிவாசல்களில் "குத்பா” (வெள்ளிமேடை) சொற்பொழிவு தமிழில் நடத்தப்பட வேண்டும். தமிழக முசுலிம்கள் பலருக்கும் விளங்காததும் புரியாததும் தெரியாததுமான அரபு மொழியில் `குத்பா’ சொற்பொழிவு செய்தால், தமிழ் நாட்டு முசுலிம்கள் அஞ்ஞானத்தில் உறங்கிவிழாமல் வேறு என்ன செய்வார்கள்?" என்று வினா எழுப்பியதுடன், பள்ளிவாசல்களில் தமிழில் "குத்பா” சொற்பொழிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதற்கு ஆதாரமாக, "ஒவ்வொரு தூதரும் தம் மக்களுக்கு மார்க்கக் கருத்துக்களை தெளிவாக விவரித்துக் கூறும்போது, அவர்களின் தாய் (மக்களின்) மொழியைக் கொண்டே விவரித்துக் கூறவேண்டும் என்பதற்காக நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்." எனும் திருக்குரான் கருத்துக்களை முன் வைத்து எதிர்ப்பு தெரிவித்த உலமாக்களுக்குப் பதிலடி கொடுத்தார்.

முசுலிம் பெண்களை வீட்டில் பூட்டி வைக்காமல் படிக்க வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி பசீர் அகமது சென்னையில் பெண்களுக்கென்றே தனியாக ஒரு கல்லூரியை நிறுவினார். அப்போது, பழமைவாதச் சிந்தனை கொண்ட முசுலிம் உலமாக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முசுலிம் பெண்களுக்குக் கல்லூரி அமைக்கக்கூடாது எனவும் கல்லூரி ஆரம்பிப்பது இசுலாம் மார்க்கத்திற்கு விரோதமானது எனவும் கண்டனக் குரல் எழுப்பினர். அப்போது, நீதிபதி பசீர் அகமதுவுக்குப் பெரும்துணையாக இருந்து, கல்லூரி திறந்திட முழு ஆதரவு அளித்தவர் தாவூத்ஷா. இப்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எம்.ஐ.இ.டி பெண்கள் கல்லூரிதான் அது என்பது குறிப்பிடத்தக்கது.

சமய, சமுதாயச் சீர்திருத்தத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட தாவூத் ஷாவை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி முதலிய தலைவர்கள் பாராட்டினார்கள். தமிழக முஸ்லிம் மக்களும், ‘இசுலாமியப் பெரியார் தாவூத் ஷா’ எனப் போற்றினார்கள்.

‘தாருல் இஸ்லாம்’ என்ற இதழைத் தொடங்கி வார இதழாகவும், வாரமிருமுறை இதழாகவும், சிலகாலம் நாளிதழாகவும் நடத்தினார் தாவூத் ஷா. ‘தாருல் இஸ்லாம்’ புரட்சி இதழாக இருந்ததால், அந்த இதழை யாரும் வாங்கவோ, படிக்கவோ கூடாது என்று உலமாக்கள் தடைவிதித்தார்கள். ஆனாலும், முசுலிம் இளைஞர்கள் இதழை வாங்கிப் படித்தார்கள். இதழில் வெளியான ஆசிரியர் தலையங்கங்களும் சிறப்புக் கட்டுரைகளும் பலரின் சிந்தனையைக் கிளறின. ‘தாருல் இஸ்லாம்’ இதழ் கடல் கடந்து பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலிய நாடுகளிலும் விற்பனையானது.

“இசுலாமிய இதழ்கள் மத்தியில், கொடி கட்டிப் பறந்த இதழ், ‘தாருல் இஸ்லாம்’. முசுலிம்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இதழின், தெளிந்த இனிய தமிழ் நடைதான் அதற்கு காரணம். பிற சமயத்தவர்களும்கூட இவ்விதழை வாங்கிப் படித்தார்கள்” என்று இதழாளர் அ.மா.சாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பத்திரிகை பிரசுரத் துறையில் தாவூத் ஷா, ஒரு பல்கலைக் கழகம், தமது பத்திரிகைகள் மூலம் பெரும் இலக்கிய அணியை உருவாக்கிய பெருமைக்குரியவர்” என்று ஜே.எம்.சாலி கருத்துரைத்துள்ளார்.

“'தாருல் இஸ்லாம்’ என்ற வாரப் பத்திரிகையையும், அதன் ஆசிரியர் தாவூத் ஷாவையும் நினைக்கும்தோறும் களிபேருவகை அடைகிறோம். ‘தாருல் இஸ்லாம்’ பத்திரிகையும், அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்” என்று ‘விடுதலை’ இதழில் தந்தை பெரியார் பாராட்டி எழுதினார்.

“இவரை முசுலிம்களின் தமிழ் மறுமலர்ச்சித் தந்தை” என்று கூறலாம். இவர் தமிழ் இலக்கிய உலகில் தோன்றி, வழுவற்ற தூய தமிழில் பேசவும், எழுதவும் செய்த பின்னர்தான் இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது என்பதை எவராலும் மறுக்க இயலாது” என ‘இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்’ கூறுகிறது.

“அரசியல் சீர்திருத்தங்கள்” என்ற தொகுப்பு நூலை 1934 ஆம் ஆண்டு தாவூத்ஷா வெளியிட்டார்.

‘எல்லைப்புறக் காந்தி அல்லது கான் அப்துல் கபார் கான்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலை 1937 ஆம் ஆண்டு வெளியிட்டார். தமது உரைகளை மக்கள் கேட்டு பயன் அடைந்ததைப்போல், படித்தும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ‘முசுலிம் சங்கக் கமலம்’ என்ற பெயரில் வரிசையாக நூல்களை வெளியிட்டார்.

முசுலிம்களின் கல்வி அறிவு, ஒழுக்கம், மார்க்க உணர்வு முதலியவற்றை மேம்படுத்த, செந்தமிழில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டார். ‘இஸ்லாத்தின் இணையில்லா அற்புதம்’, ‘இஸ்லாத்தின் இனிவரும் உன்னதம்’, ‘இஸ்லாமும் இதர மதங்களும்’ ‘எமது கொள்கை’ உட்பட பல தலைப்புகளில் கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டார்.

இசுலாமிய இலக்கியங்கள் தமிழில் வெளிவர வேண்டும் என்பது தாவூத் ஷாவின் கொள்கை. தமிழில் வெளிவந்தால்தான், தமிழ் முசுலிம்கள் அனைவரும் படிக்க முடியும்; இசுலாத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும் என்பதில் உறுதியாக நின்று, அதன் வழி செயல்பட்டார். ‘இஸ்லாம் வரலாறு’, ‘நபிகள் வரலாறு’ முதலிய நூல்களை வெளியிட்டார். மேலும் ‘அபூ பக்கர் சித்திக் (ராலி)’ என்று சொல்லப்படும் முதல் கலிபாவின் வரலாற்றையும் எழுதினார்.

‘ஈமான்’, ‘நாயக வாக்கியம்’, ‘நபிகள் நாயக மான்மியம்’ ‘இஸ்லாம் எப்படிச் சிறந்தது’ ‘நபிகள் நாயகமும் நான்கு தோழர்களும்’, ‘இஸ்லாமிய ஞானபேதம்’ ‘முஸ்லிம் முன்னேற்றம்’ ‘குத்பாப் பிரசங்கம்’ முதலிய நூல்களை தமிழில் கொண்டுவந்து எழுத்துத் தொண்டாற்றினார்.

குர்ஆனை தமிழில் மொழி பெயர்க்கக் கூடாது என்று உலமாக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘தமிழ் காஃபீர் (நாத்திக) மொழி’ என்று கூறினார்கள். இந்த எதிர்ப்புகளையும் மீறி குர்ஆனை தமிழில் மொழிபெயர்த்து ஆறு தொகுதிகளாக வெளியிட்டார் தாவூத் ஷா.

‘கள்ள மார்க்கெட்டு மோகினி’ ‘காதலர் பாதையில்’ ‘ரஸ்புதீன்’ ‘ஜீபைதா’, ‘கப்பல் கொள்ளைக்காரி’ ‘காபூர் கன்னியர்’ ‘கரனபுரி இரகசியம்’ ‘காதல் பொறாமையா? ‘மலை விழுங்கி மகாதேவன்’ ‘ஹத்திம் தாய்’ முதலிய புதினங்களையும், ‘சுவாசமே உயிர்’, ‘ஜீவ வசிய பரம இரகசியம்’ ‘மெஸ்மரிசம்’ ‘மண வாழ்க்கையின் மர்மங்கள்’ முதலிய உடல்நல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘மும்தாஜ்’, ‘நூர்ஜகான்’ முதலியோர்களின் வரலாற்று நூல்களையும், ‘சிம்சனா? சிம்மாசனமா? ‘என்ற காதல் காவியத்தையும் தமிழில் படைத்தார்.

‘அரபுக் கதைகளை’ அரபு மொழியில் இருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தார். மேலும், பெண் விடுதலை குறித்து ‘நம் சகோதரிகள்’ என்ற நூலையும், ‘என் மலாய் நாட்டு அனுபவம்’ என்னும் பயண இலக்கிய நூலையும் படைத்துள்ளார்.

முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளராகக் கருதப்படும், நாகூர் சித்தி ஜீனைதா பேகம் எழுதிய சிறுகதையை தமது ‘தாருல் இஸ்லாம்’ இதழில் முதன்முதலாக வெளியிட்டவர் தாவூத் ஷா.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முசுலிம் மத பிரச்சாரகர் காஜா கமாலுதீன் என்பவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவர் தாவூத் ஷாவினுடைய ஆங்கில மொழிப் புலமையையும், உரையாற்றும் திறனையும் கண்டு அவரை, தம்முடன் லண்டனுக்கு அழைத்துச் சென்றார். 1922 பிப்ரவரி மாதம் லண்டன் சென்று ஓராண்டுக் காலம் அங்கு தங்கி இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தார். ‘இஸ்லாமிக் ரீவியூ’ என்னும் ஆங்கில இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார்.

இசுலாமிய சமய, சமுதாய சீர்திருத்தங்களுக்காகவும், முசுலிம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் பெண் கல்விக்காகவும், தமது எழுத்தாற்றலையும், நாவன்மையையும் கொண்டு பாடுபட்டவர் தாம் இசுலாமியர் கண்ட ‘பெரியார்’ தஞ்சை தாவூத் ஷா. அவர் 1969 பிப்ரவரி மாதம் 24 ஆம் நாள் சென்னையில் காலமானார்.

Pin It

சென்னை எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் பேட்ஸ் என்ற தமிழறிந்த ஆங்கிலேயர் தலைமையாசிரியராக இருந்தார். அப்பள்ளியில் தமிழாசிரியராக கா.நமச்சிவ முதலியார் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நாள் தலைமையாசிரியரைச் சந்தித்து, “தமிழ் கற்கும் மாணவர்களுக்கு முறையான பாட நூல்கள் வெளிவரவில்லை. இல்லையெனக் கூறிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. எனவே, பாடநூல்களை நாமே உருவாக்கினால் என்னவென மனத்துள் எழுந்தது ஓர் எண்ணம். ஆசிரியப்பணி புரிவோர் பாட நூல்கள் எழுதக்கூடாது எனத் தடையொன்று உள்ளது. எனவே, ஆசிரியப் பணியை விட்டு விடலாமா? பாட நூல்கள் எழுதிடலாமா? என எனது மனம் குழப்பத்தில் உள்ளது” எனத் தமிழாசிரியர் நமச்சிவாய முதலியார் தெரிவித்தார்.

“நீங்கள் ஆசிரியப் பணியிலும் இருக்கலாம், பாட நூல்களும் எழுதலாம், நிர்வாகத்திடம் உங்களுக்காக சிறப்பு அனுமதி பெற்றுத் தருகிறேன்” என்று தலைமையாசிரியர் பேட்ஸ் கூறினார். தாம் கூறியது போல் நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று பாடநூல்கள் எழுத நமச்சிவாய முதலியாரை ஊக்கப்படுத்தினார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில், தமிழ் கற்பிக்க கீழ் வகுப்பு முதல் மேல் வகுப்பு வரை படிமுறையாகப் பாட நூல்களை எழுதி வெளியிட்டார். அவரது பாட நூல்கள் ஒப்பற்றவை எனப் பாராட்டைப் பெற்றன. உயர்நிலைப் பாட நூல்கள் வரை எழுதியளித்தார்.

உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி, சென்னை ‘சிங்கிலர்’ கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர், ராணி மேரிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 1917 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்க் குழுவில் தலைமைத் தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 1920 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டுவரை மாநிலக் கல்விக் கழகத்தின் தலைவராகச் செயல்பட்டார். அப்போது, ‘தமிழ் வித்துவான்’ தேர்வை முதன் முதலாக ஏற்படுத்தி, தமிழ் கற்றோர் பல்கலைக் கழகப் பட்டம் பெறுகிற வாய்ப்பை ஏற்படுத்தினார். அதற்கு முன், வடமொழி பயில்வோருக்கு மட்டுமே பல்கலைக் கழகத் தேர்வு இருந்தது. மதுரைத் தமிழ்ச் சங்கமும், திருவையாற்றுக் கல்லூரியும் தமிழ்த் தேர்வுகளை நடத்தினாலும், தமிழ் கற்றுத் தேர்வெழுதிப் பல்கலைக் கழகப் பட்டம் பெற வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. அந்த அவல நிலையை மாற்றியமைத்து, தமிழ் கற்றுத் தேர்வெழுதியவர்களும் ‘வித்துவான்’ பட்டம் பெறவும், பல்கலைக் கழகப் பட்டம் பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தினார். மேலும், பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் பெறவும், ஊதிய உயர்வு வழங்கிடவும் பாடுபட்டார் நமச்சிவாய முதலியார்.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் இராமசாமி முதலியார் அகிலாண்டவல்லி வாழ்விணையருக்கு 1876 ஆம் ஆண்டு பிறந்தார்.

தமது தந்தையாரிடம் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர் பள்ளிக் கல்வியை முடித்து, சென்னை சென்று, கிறித்துவ தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தமிழ்க் கல்வியில் நாட்டம் கொண்டு, அப்போது சென்னையில் தமிழ்ப் பெரும் புலவராக விளங்கிய சண்முகம்பிள்ளையிடம் தமிழ்ப் பாடம் கற்றுத் தேர்ந்தார். மாணவர்கள் தமிழ் இலக்கணத்தை விரும்பி கற்கும் வகையில் ‘தமிழ்ச் சிற்றிலக்கணம்’ எனும் அரிய நூலை எழுதி வெளியிட்டார்.

‘ஆத்திசூடி’ ‘நல்வழி’, ‘வாக்குண்டாம்’ முதலாகப் பல நூல்களுக்கு உரையெழுதி வெளியிட்டார். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தையும், சொல்லதிகாரத்தையும் இளம்பூரணர் உரையுடன் பதிப்பித்தார். ‘தணிகைப் புராணம்’ ‘தஞ்சை வாணன் கோவை’, ‘இறையனார் களவியல்’ முதலிய நூல்களைத் திருத்தப் பதிப்பாக வெளியிட்டார்.

‘ஜனகன்’, ‘தேசிங்குராசன்’ என்னும் உரைநடை நூல்களையும், ‘கீசகன்’, ‘பிருதிவிராசன்’ முதலிய நாடகங்களையும் இயற்றித் தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கென ‘நல்லாசிரியன்’ என்னும் திங்கள் இதழைத் தொடங்கி பதினைந்து ஆண்டுகள் பயனுற நடத்தினார்.

“பொங்குக பொங்கல் பொங்குக எங்கணும்!
பொங்குக பொங்கல்! இன்பமே எய்துக!”

எனக் கவிதை பாடி, பொங்கல் விழாவின் சிறப்பை கீழ்க்கண்டவாறு எடுத்தியம்புகிறார்.

“தமிழ் மக்களிடையே பல்வேறு விழாக்கள் சமயச் சார்பானவை, வடமொழி வழி எழுந்த நம்பிக்கைகளையும் வழக்குகளையும் ஒட்டியே நடைபெற்று வந்தன. தமிழர் மரபோடும், இயற்கை நெறியோடும், உழவுத் தொழிலோடும், வேளாண்மைப் பண்போடும் விழாக்கள் நடத்தப்பெறவில்லை. வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் தாய் மொழிப் பற்றும் தமிழ்மொழித் தெளிவும் கொள்ளுதற்கு ‘பொங்கல் விழா’ ஏற்ற விழா” என்றார்.

மேலும், “பொங்கல் விழாவில் தமிழரின் பெருவாழ்வை, சங்கத் தமிழ் இலக்கிய மாட்சியை, தமிழர்களிடையே வழிவழி வந்த தமிழிசையை, தமிழர்கள் பயின்ற கூத்தை விளக்கியுரைத்தும், பாடிக்கேட்டும், ஆடிக் கண்டும் மக்கள் அறிந்து மகிழ வேண்டும்” என வலியுறுத்தினார்.

அவரது முயற்சியால், பழந்தமிழ்ப் பொங்கல் விழா, உழவரும் பிறரும் மகிழ்ந்திடும் கொண்டாட்டமாக, முத்தமிழ் முழங்கும் தமிழர் விழாவாக வண்ணங்கொண்டது. நமச்சிவாய முதலியார் துவக்கி வைத்த தமிழர் திருநாளே, தமிழர் எழுச்சிக்கு உரமூட்டும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

‘தமிழ்ப் புலவர் சங்கம்’ என்ற அமைப்பை தோற்றுவித்து அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தார். அதனால், ‘தமிழ்ப் பேராசான்’ எனத் தமிழகம் போற்றிப் பாராட்டியது. நமச்சிவாய முதலியார் தமது அறுபத்தொன்றாம் வயதில் 1937 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது தமிழ்ப் பணி தமிழர்களின் நெஞ்சத்தில் நிலைத்து நிற்கும்.

Pin It

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரிட்டிஷ் நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார். ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் கைக்குலுக்கினர். இரட்டைமலை சீனிவாசன் மட்டும் கைகலக்காமல் தன் கையை இழுத்துக் கொண்டு விட்டார். திகைத்து நின்ற மன்னர், ‘ஏன்’?- என்று காரணம் கேட்டார். அப்போது “நான், எங்கள் நாட்டில் ஒரு தீண்டத்தகாதவன்; என்னை நீங்கள் தீண்டக்கூடாது; நான் பறையன்; இந்தியாவில் தீண்டப்படாத சமுதாயத்திலிருந்து வந்தவன்” – என்று கூறினார். தாம் அணிந்திருந்த கோட்டில், ‘இராவ் சாகிப் இரட்டை மலை சீனிவாசன், பறையன்; தீண்டப்படாதவன்’ என்று எழுதி மாட்டிக் கொண்டிருந்தார். மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் கை குலுக்க முனைந்தபோது, சீனிவாசன் மறுத்து, தன்னைத் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை உள்ளதை உணர்த்தினார். ஆனால், மன்னரோ அவரை அருகே அழைத்து, கை குலுக்கினார்.

rettaimalai seenivasanஅப்போது மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் “உங்கள் நாட்டில் இப்படிப்பட்டவர்கள் யாராவது கீழே விழுந்துவிட்டால் கூடத் தூக்கிவிட மாட்டார்களா? அவர்கள் சாதியின் பெயரால் அப்படியே கிடக்கத்தான் வேண்டுமா?”-என்று விழி பிதுங்க வினாத் தொடுத்தார். “ஆமாம்; உங்கள் ஆட்சியிலே, இந்தியாவிலே இது தான் நடைபெறுகிறது” என்று பதில் மொழி பகன்றார். மேலும், இந்த வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் பேசுகிறபோது, “தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் தீண்டாமைக் கொடுமை ஒழியும். சட்டமன்றத்திலும், ஆதிதிராவிடர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் அவர்கள் முன்னேற்றம் அடைய முடியும்” -என்று வலியுறுத்தினார்.

செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்னும் சிற்றூரில் 07.07.1859 ஆம் நாள், இரட்டைமலை-ஆதிஅம்மையார் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ‘இரட்டைமலை சீனிவாசன்’!

அவரது குடும்பம் செங்கற்பட்டு மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பல துன்பங்கள் அடைந்தது. அதனால், தஞ்சை மாவட்டத்திற்கு பிழைக்கச் சென்றது. அங்கேயும் தாழ்த்தப்பட்டவர்கள் வயலில் அடிமை வேலை செய்ய வேண்டும் - முழங்காலுக்கு கீழே வேட்டி உடுத்தக் கூடாது-செருப்புப் போடக் கூடாது-சட்டை அணியக் கூடாது-உயர்ந்த வகை உணவு உண்ணக் கூடாது-என்று மிருகத்தை விடக் கேவலமாக நடத்தப்பட்டனர்; ஒடுக்கப்பட்டனர்; மேலாதிக்கத்தினரால் மிதிக்கப்பட்டனர்.

திண்ணைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பட்டினியும், பசியும், வறுமையும் கூடவே விரட்டியது. ஆனாலும், பெற்றோருடைய விடா முயற்சியாலும், கல்வி மீது கொண்டிருந்த பேரார்வத்தாலும் தஞ்சையில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். குடும்பத்தின் வறுமையினையும் தாங்கிக் கொண்டு கோயம்புத்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். தமிழகத்திலேயே தாழ்த்தப்பட்டோரின் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.

நீலகிரியில் கிழக்கிந்தியக் கம்பெனியில் 1882 ஆம் ஆண்டு எழுத்தர் பணியில் சேர்ந்தார். ரெங்கநாயகி என்பவரை 1888 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஒரு மனிதன் சமுதாயச் சிந்தனையாளராக-சீர்திருத்தவாதியாக-போராட்டக்காரராக-உருவாக அந்த மனிதன் இளமையில் பட்டத் துன்பங்களும், அடைந்த அவமானங்களும், அனுபவித்தக் கொடுமைகளும் காரணமாக அமைகின்றன. இரட்டைமலை சீனிவாசன் தான் பள்ளி, கல்லூரி வாழ்க்கையின்போது அடைந்த துன்பங்களும், சாதிக் கொடுமைகளும் நாளடைவில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் விடுதலைக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டின.

இரட்டைமலை சீனிவாசன் 1891 ஆம் ஆண்டு ‘பறையன் மகாஜன சபை’ எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். அந்த அமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்டோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வைசிராயிடமும், ஆளுநரிடமும் முறையீடு செய்தார்.

இரட்டைமலை சீனிவாசன் 1904 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார். அங்கு நேட்டால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது காந்தியடிகள் அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். காந்தியடிகள் ‘மோ.க.காந்தி’ என்று தமிழில் கையெழுத்து இடக்காரணமாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் என்பது வரலாற்றுப் பதிவு! தென்னாப்பிரிக்காவல் 1920 ஆம் ஆண்டுவரை பணி புரிந்தார்.

இரட்டைமலை சீனிவாசன் 1923 முதல் 1938 வரை சட்டமன்ற நியமன உறுப்பினராகச் செயல்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றவர்களுக்குச் சமமாகப் பொதுச் சாலைகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், பொது இடங்களிலும், கட்டிடங்களிலும் நுழையவும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் கூடிய சட்ட நிர்ணய சபையில் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தார்.

தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்க ‘தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகம்’ எனும் அமைப்பை உருவாக்கினார். சென்னை மாகாணம் தழுவிய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்க அதிகமான விடுதிகளும், கல்வி உதவிப் பணமும், மற்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆரம்பக் கல்வி, இலவசமாகவும் கட்டாயமாகவும் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டுமெனில், தனிப் பள்ளிகள் திறக்கப்பட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை முன்வைத்து முனைப்போடு செயல்பட்டார்.

இரட்டைமலை சீனிவாசன் 1893 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ‘பறையன்’ என்ற தமிழ் மாத இதழை வெளியிட்டார். அவ்விதழ் பின்னர் வார இதழாக வெளிவந்தது.

‘பறையன்’ வார இதழ் ஒன்றை திறனாய்விற்காக ‘சுதேசமித்திரன்’ இதழுக்கு அனுப்பி வைத்தார். அப்போது, சுதேசமித்திரனின் ஆசிரியராக இருந்த சி.ஆர். நரசிம்மன் (பார்ப்பனர்), ‘பறையன்’ இதழைக் கையில் தொடவும் கூசினார். மை, தொட்டு எழுதும் கட்டைப் பேனாவைக் கையில் பிடித்துக் கொண்டு குச்சியால் அவ்விதழைப் புரட்டுவதுபோல் புரட்டிப் பார்த்தாராம்! அச்செய்தி, ஓர் உண்மையைத் தாங்கி நிற்கிறது. ஆம், ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ – என்போர் மட்டும் தீண்டத்தகாதவர்கள் அல்ல; அவர்கள் நடத்தும் ‘செய்தி இதழும்’ கூட தீண்டத் தகாதது’ – என்ற பாதகமான நிலை படித்தோர் மத்தியிலும், அன்று இருந்தது என்பதை அறிய முடிகிறது. இதன்மூலம், உயர் சாதியினரின் தீண்டாமைத் தீயை ‘சுதேசமித்திரன்’ கூட, ஊதிப் பெருக்கியிருக்கிறதே தவிர, ஒடுக்கப்பட்டவர்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை அணைக்க முன்வரவில்லை என்றே கருத முடிகிறது.

பறையன் இதழ் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை முழக்கமாக விளங்கியுள்ளது. பார்ப்பனியத்தை எதிர்த்தும், அம்பலப்படுத்தியும், ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்துள்ளது.

சென்னை விக்டோரியா மண்டபத்தில் 07-10-1895- ஆம் நாள் ஓர் மாநாட்டைக் கூட்டினார். அம்மாநாட்டின் மூலம், அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும் அம்மாநாட்டில், “நாங்கள் கணக்கிட முடியாத ஆண்டுகளாக கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானது. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாக வாழ சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் இனிமேலும் குறுக்கிட்டால் நாங்கள் இனிமேலும் சகித்துக் கொள்ளமாட்டோம். நாங்கள் எந்த விதமான கொடுமைகளையும் ஏற்க மாட்டோம்”-என்ற சூளுரையை நாடு அதிரும்படி வெளியிட்டார் இரட்டைமலை சீனிவாசன்!

rettaimalai seenivasanமேலும், அரசியல் உரிமைகளை அனுபவிக்கவும், சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் பெற்றிடவும், அரசாங்க அலுவலகங்களில் இடம் பெறவும், விமானம், கடற்படை, இராணுவம், காவல்துறை, நீதிமன்றம் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றிடவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வேண்டும் என முழக்கமிட்டார்.

சென்னை மைலாப்பூர் நீதிபதி வசிக்கும் வீட்டிற்கு அருகில் “பிராமணர் தெரு, பறையர் உள்ளே வரக்கூடாது”- என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதை உடனடியாக அகற்றவும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்க்கப்படாத கொடுமையை கண்டித்தும் இரட்டைமலை சீனிவாசன் பிரிட்டிஷ் ஆளுனரிடம் கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். பிறகு அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்! இவை, அன்று பரபரப்பு ஊட்டிய வரலாற்று நிகழ்ச்சிகள்.

கிருஷ்ணா மாவட்டத்தில் 28.04.1894 ஆம் நாள், தமது தலைமையில் நிலப் போராட்டத்தை இரட்டை மலை சீனிவாசன் துவக்கினார். இப்போராட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேய அரசு நிலம் அளித்தது. இந்நிலத்திற்கு ‘பஞ்சமி’ நிலம் என்ற பெயரும் வைத்தது!

‘தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி பயில அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும் வயதை ஏனைய, வேறு சாதியினர் வயதுடன் ஒப்பிடக்கூடாது; வறுமை, ஏழ்மை ஆகிய காரணங்களால் ஒடுக்கப்பட்ட மாணவர்கள், குறிப்பிட்ட வயதில் பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத காரணத்தால், வயது வரம்பை தளர்த்திட வேண்டும்’– என்றெல்லாம் இரட்டைமலை சீனிவாசன் அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

தீண்டாமையை அடியோடு ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தார். தீண்டாமைக் கொடுமை புரிபவர் எவராக இருந்தாலும் அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, தண்டனை அளித்து அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று கடுமையாக சட்டமன்றத்தில் பேசினார்.

சிறையாலும் சாதிப் பாகுபாடு நிலவியதை கண்டித்ததுடன், குற்றவாளிகளில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார்.

தமிழக சட்டமன்ற மேலவையில், “பல ஏழை மக்களின் உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும்” – என்ற தீர்மானத்தை இரட்டைமலை சீனிவாசன் கொண்டுவந்தார். மேலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், விழா நாள்களிலும், அரசு விடுமுறையின் போதும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றச் செய்தார். ஏழை எளிய மக்கள் மதுவுக்கு அடிமையாகி, தங்களுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனரே என மனம் வருந்தினார். இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட அரும்பாடுபட்டார்.

ஆதிதிராவிடர் கோயில்களில் ஏனைய சாதியைச் சேர்ந்தவர்கள் உள்ளே செல்லலாம். ஆனால், சாதி இந்துக்களின் கோயில்களில் ஆதிதிராவிடரை அனுமதிக்காமல் இருப்பது அநீதி அல்லவா? மண் சுமந்து கோயிலைக் கட்டும் சாதி மக்கள் கோயிலுக்குள் செல்ல தடைவிதிப்பது கொடுமையல்லவா? பார்ப்பனர்கள், வருமானம் பெற அனைத்துக் கோயில்களையும் கைப்பற்றிக் கொண்டது கண்டனத்துக்குரியதல்லவா? என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசன்! மற்ற சாதி மக்கள் எப்படி சுதந்திரமாகக் கோயிலுக்குள் செல்கின்றார்களோ, அதைப் போல் ஒடுக்கப்பட்ட மக்களும் செல்ல உரிமை வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுத்தார்.

இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், டாக்டர் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கொண்டு வந்த தனித் தொகுதி முறையை காந்தியடிகள் கடுமையாக எதிர்த்தார். எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.

“தனித்தொகுதி என்பது தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் அளிக்கப்படவில்லை. இந்தியக் கிருத்தவர், அய்ரோப்பியர், முஸ்லீம்கள், சீக்கியர் ஆகியோர் அனைவருக்கும் அளித்துள்ளனர். ஏன் காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களை மட்டும் பிரித்து இந்த நிலையை எடுத்துள்ளார் என்பது விசித்திரமாக இருக்கிறது”- என்றார் டாக்டர் அப்பேக்கர். இறுதியில் காந்தியடிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டி, காந்தியடிகள் விருப்பத்துக்கு விட்டுவிட்டார் அப்பேத்கர். அது பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு ‘இராவ்சாகிப்’, ‘திவான் பதூர்’, ‘இராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது.

இரட்டை மலை சீனிவாசனின் பணியைப் பாராட்டி திரு.வி.க. அவர்கள், ‘திராவிடமணி’ எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

கொத்தடிமைகளாக வாழ்ந்த மக்களை சுதந்திர மக்களாக்கியவர்!-மூடப் பழக்கங்களில் மூழ்கிப் போனவர்களை சிந்திக்கும் மனிதர்களாகச் செதுக்கியவர்! – இருண்ட உலகில் பயணம் செய்தவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்! ஊமைச் சமுதாய மக்களைப் பேச வைத்தவர்! – உரிமைகளைப் பெற வைத்தவர்!- ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், தத்தளித்துக் கிடந்த மக்களின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர்! தான் உறங்காமல், உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பி உசிப்பியவர்! தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடிய ‘உத்தமர் தாத்தா’! அப்பெரியவர் இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 ஆம் நாள் தனது எண்பத்தி ஆறாம் வயதில் இயற்கை எய்தினார்.

இந்திய நடுவண் அரசு, 15.08.2000 இல் இரட்டைமலை சீனிவாசனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தது.

Pin It