சுப்பிரமணியசாமியின் ஒவ்வொரு அசைவுக்கும் அழுத்தமான உள்நோக்கம் இருக்கவே செய்யும். மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத மதுரை சோழவந்தான், பார்ப்பனரான இவர், இப்போது ரிசர்வ் வங்கி ஆளுனராக இருக்கும் ரகுராம்ராஜன் மீது குறி வைத்து தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறார். ரகுராம் ராஜனும், குடந்தையைச் சார்ந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்தான்.

“ரகுராம் ராஜன், அமெரிக்க குடிமகனாகவும் இருக்கிறார். அவர் மனதளவில் இந்தியராக செயல்படவில்லை. இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார். அவரை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என்று சுப்ரமணியசாமி மோடிக்கு கடிதம் எழுதுகிறார். இதே சுப்பிரமணியசாமியும், அமெரிக்க விசுவாசிதான்.

2012ஆம் ஆண்டு ‘கேரவான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நான் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படவில்லை; அமெரிக்காவுக்காகவே செயல்படுகிறேன்; நான் ஒரு அமெரிக்கன்” என்று பேட்டியளித்தவர்தான்.

பார்ப்பனர்களின் தேசபக்தி எப்போதுமே பார்ப்பன மேலாண்மைக்கான நோக்கத்தோடு கட்டமைக்கப்பட்டதுதான். இந்தியாவின் தேச பக்தர்கள் என்பதற்கான அடையாளத்துக்கு இந்து மதத்தையே அளவுகோலாக நிர்ணயிக்கும் கூட்டம் இது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் இவர்கள் அமெரிக்க டாலர்களையே அளவுகோலாகக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க டாலர்களின் அடிப்படையில் நாட்டின் பொருளாதார ‘வளர்ச்சி’யை மதிப்பிட்டு அதில் ‘முன்னேற்றம்’ ஏற்பட்டிருப்பதாக அறிவிப்பார்கள். அதுதான் இந்தியாவின் வளர்ச்சி; அதுதான் ‘தேசபக்தி’ என்று பெயர் சூட்டிக் கொள்வார்கள். இப்போது ரகுராம் ராஜன் மீது சுப்ரமணியசாமி இவ்வளவு ஆத்திரமடைவதற்கு என்ன காரணம்? இது குறித்து ‘தமிழ் இந்து’ நாளேட்டின் ‘வணிக இணைப்பி’ல் (மே 23, 2016) வெளி வந்துள்ள ஒரு கட்டுரை அம்பலப்படுத்தியிருக்கிறது.

“பெரும் நிறுவனங்கள் வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடிந்தும் நீண்ட நாள் செலுத்தாமல் உள்ள நிறுவனங்களை பட்டியலிட முயற்சி செய்து வருகிறோம் என்று ராஜன் சமீபத்தில் தெரிவித்தார். மேலும் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் பெயரை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி நெருக்குதல் கொடுத்துள்ளது. அதனால் பெரிய நிறுவனங்கள் ரகுராம் ராஜன் மீது அதிருப்தி அடைந்தன.

நேரடியாக வங்கிகளிடம் மோத முடியாமல் ரகுராம் ராஜனை பதவியிலிருந்து அகற்றிவிட்டால் இந்தச் சிக்கலை தவிர்க்கலாம் என்று பெரும் முதலாளிகள் சுவாமியை பின்னால் இருந்து இயக்குகிறார்கள்.” இப்போது உண்மை புரிகிறதா?

சுப்ரமணியசாமியின் குரல், பார்ப்பனர்களின் மேலாதிக்கத்துக்கு ஒலிக்கும்; இல்லையேல் பெரும் தொழிலதிபர்களுக்காக ஒலிக்கும்.

Pin It