22 இந்திய மொழிகளையும் இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சிமொழிகளாக ஆக்கிட, இந்தியா முழுவதும் சென்று சாதிப்போம்! வாரீர்!

மேலே கண்ட கோரிக்கையை மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, 1991 அக்டோபர் 19 அன்று புதுதில்லியில் நடத்திய மாநாட்டில் முதன் முதலாக வரித்துக் கொண்டது. அது முதல் 10 ஆண்டுக்காலம் பலரிடமும் அதுபற்றி விவாதித்தது.

2001 அக்டோபர் 24இல் புதுதில்லியில் வே. ஆனைமுத்து, பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜித் சிங் பெயின்ஸ், ஈரோடு பேராசிரியர் மு.க.சுப்பிரமணியம், அலிகர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் து. மூர்த்தி, தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜி. அலோஷியஸ், மயிலாடுதுறை பகுத்தறிவாளர் நாக. இரகுபதி ஆகியோர் கூடி, “உண்மையான கூட்டாட்சிக்கான விவாதக் குழு” ஒன்றை உருவாக்கினோம்.

அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகப் பணி யாற்றிய மு.க. சுப்பிரமணியம் எழுதிய, “இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி வேண்டும். ஏன்?” என்ற நூலை, 2003 சனவரியில் வெளியிட்டோம். அதுவே இந்தியக் கூட்டாட்சி பற்றிய முதலாவது தமிழ் நூல்.

பின்னர் 2012 சனவரியில் பல்லாவரத்திலும், 2013 சனவரியில் வேலூரிலும், 2014 சனவரியில் செயங்கொண்டத்திலும் இந்தியக் கூட்டாட்சி பற்றிய மாநாடுகளை நடத்தி விளக்கம் அளித்தோம்.

2015 சனவரி 11இல் சென்னையில் மேற்கு மாம்பலத்தில், இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை நீக்கிடவும், 22 இந்திய மொழிகளையும் இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சி மொழிகளாக ஆக்கிடக் கோரியும் நடந்த மாநாட்டில்,  

1. “இந்தியக் கூட்டாட்சிக் கொள்கைக்குப் பேரிடை யூறுகள் - Federalism in India in Peril” என்ற ஆங்கில நூலை வெளியிட்டோம்.

2. இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என்பதைக் கண்டனம் செய்தும், இடைக்காலமாக இந்தி பேசாத மக்கள் இந்தியை ஏற்கிற வரையில் இந்திய அரசின் இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்பதைக் கண்டித்தும், 22 இந்திய மொழி களையும் இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சி மொழிகளாக ஆக்கிடக் கோரியும் 4 விரிவான தீர்மானங்களை, 11-1-2015 மாநாட்டில் நிறைவேற்றினோம்.  

இந்தியக் கூட்டாட்சியில் தன்னுரிமை பெற்ற தமிழ்நாட்டு அரசின் இலக்கணம் என்ன என்பதை, 5ஆவது தீர்மானத்தில் தெளிவுபட விளக்கியுள்ளோம்.

மேலே சொல்லப்பட்டவையெல்லாம் - மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் குறிக்கோள் -உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கான விவாதக் குழுவினரின் கருத்து என்கின்ற நிலை மாற்றப்பட்டு, தமிழகத்தில் இயங்கும் (1) தனித் தமிழ்நாடு கோரும் அமைப்புகள்; (2) தன்னுரிமைத் தமிழகம் கோரும் அமைப்புகள் ஆகியோரின் நேர் மையான ஆய்வுக்கு உரியவையாக உள்ளன என் பதையும்; (3) இந்தி பேசாத மற்ற மொழி மாநில மக்களுக்கு விளக்கிச் சொல்லப்பட வேண்டியவை என்பதையும் வலியுறுத்தவே இக்கட்டுரை.

‘சிந்தனையாளன்’ 2015 பிப்பிரவரி இதழைப் படிப்போர் ஒவ்வொருவரும், அன்புகூர்ந்து, 11-1-2015 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத் தையும் முதலில் (இவ்விதழில்) படித்துவிட வேண்டு கிறோம்.

“இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்கிற சட்ட ஏற்பை நீக்கிவிடு” என்றால், எல்லோருக்கும் எளிதில் புரிகிறது.

அதே மூச்சில் “22 இந்திய மொழி களையும் இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சி மொழிகளாக ஆக்கிச் சட்டம் இயற்றிடு” என்றால் -அதன் பொருள் என்ன என்பது எல்லோருக்கும் புரிய வேண்டும்.

அது பற்றி இனி விளக்குவோம்.

1. “இந்தியா” என்பது ஒரே நாடாக இப்போது இருக்கிறது. அந்த ஒரே நாடு என்கிற அமைப்பை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது -மாற்றிட யாரும் முயலக்கூடாது -அதை மனமார இந்தியாவி லுள்ள எல்லா மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் -அதை மனமார ஏற்றுக்கொண்ட கட்சிகள் மட்டுமே மக்களவைத் தேர்தல், மாநிலச் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இவற்றில் போட்டியிட முடியும் என்பதுதான் இப்போதைய அரசமைப்பில் எழுதப்பட்டுள்ள விதிகள்.

முதலில், இந்த ஏற்பாட்டை அடியோடு மாற்றக் கோருகிறோம், நாம். ஏன்?

இது உண்மைக்கு - இருப்பு நிலைக்கு முற்றிலும் மாறானது; எதிரானது; பொய்யானது.

இந்திய அரசு, 13 இலக்கம் பேருள்ள படை வலிi மயைக் கொண்டும், காவல் துறை அடக்குமுறையைக் கொண்டும், ஒற்றையான அனைத்திந்திய நிருவாக அதிகார வர்க்கத்தைக் கொண்டும், ஒற்றையான உச்சநீதிமன்றத்தைக் கொண்டும், வெள்ளையர் காலத் தில் இயற்றப்பட்ட, ‘தேசத்துக்கு எதிரான குற்றத் தண்ட னைச் சட்டங்களை’ப் பயன்படுத்திக் கொண்டும்-

“இந்தியா” என்ற ஒற்றை ஆட்சியை -வலிமை யான அடக்குமுறைக் கருவியைக் கொண்டு காப் பாற்றிக் கொண்டிருக்கிறது.

இதை நாம் எல்லா மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

அதாவது இவ்வளவு அதிகாரங்களும் ஒரே இடத்தில் -இந்திய ஆட்சி என்கிற ஒரே மய்யத்தில் தேங்கிக் கிடப்பது உண்மையான சுதந்தரத்தை -உண்மை யான விடுதலை பெற்ற நாட்டில் பெறவேண்டிய உரிமைகளை - தமிழர், கேரளர், தெலுங்கர், கன்னடர், மராட்டியர், பஞ்சாபியர், வங்களாத்தார், அசாமியர் முதலானோர் என்றென்றைக்கும் பெறவும் அனுபவிக் கவும் முடியாது என்பதை-இந்தி பேசாத மாநில இவ்வளவு மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

இப்படிப்பட்ட உணர்ச்சி உள்ளவர்கள் பஞ்சாபில், அசாமில், மீசோரம்மில், நாகாலந்தில் இருக்கிறார்கள். அவர்கள் படித்தவர்களாகவும், ‘இந்தியல் வேறு’ - ‘நாம் வேறு’ என்ற உணர்வு உள்ளவர்களாகவும் கூட இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு மொழி மாநிலத் தாரும் தனித்தனியாகத் தங்கள் தங்கள் நாட்டை -தங்கள் தங்கள் பண்பாட்டை -தங்கள் தங்கள் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

1967க்குப் பிறகு ஆயுதம் தாங்கிப் போராடும் குழுக்கள் - மக்களை அரசியல் படுத்தாமல் - மக்களிட மிருந்து தனியே ஒதுங்கியிருந்து, தலைமறைவாக இருந்து, ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டு உள்ளூர் காவல்துறையினரையும், சில சமயங்களில் இந்தியப் படையையும் எதிர்த்துக் கொண்டு, 50 ஆண்டுகளுக்கு மேல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திட வேண்டி பணம் படைத்தவர்களிடம் மிரட்டல் மூல மும், அவர்களின் நடப்பில் தலையிடாமல் இருப்பதற் காக அவ்வப்போது ஒரு வரி போல் பணம் பெற்றுக் கொண்டும் துன்பத்துடனேயே ஆயுதந் தாங்கிப் போராடுகிறார்கள்.

இது, ஆளும் அதிகார வர்க்கத்தினரால் அவ்வப் போது தாக்கப்படவும் நசுக்கப்படவும்; மீண்டும் தலை யெடுத்துப் போராடிப் போராடி அசந்து போய்விடவும் வழிவகுத்துவிட்டது.

பிரிட்டிஷ்காரன் இந்தியன் என்பவனின் எந்தக் கோரிக்கையையும் உடனே ஏற்காமல் -கோரிக்கை கோரிக்கையாகவே இருந்து, போராடிப் போராடி அசந்து போன பிறகு, கோரிக்கையின் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக்கொண்டும், அந்த ஒரு கோரிக்கையைச் சுற்றிச் சுற்றியே மக்கள் போராடிப் போராடி ஓய்ந்து போகவும் ஆன தந்திரத்தைக் கையாண்டுதான் -200 ஆண்டுக்காலம் 35 கோடி இந்திய மக்களை அடக்கி ஆண்டான்.

ஆங்கிலத்தைப் படிப்பு மொழியாக -ஆட்சி மொழியாக - நீதிமன்ற மொழியாக ஆக்கி இந்தியரின் -இந்திய மொழிகளின் வளர்ச்சியைப் பாழ்படுத்தினான்.

வெள்ளை ஆளும் வர்க்கத்தார், “Give the people long rope and then sack them” - “மக்களை நீண்ட காலம் போராடிப் போராடி அசந்து போகவிடு; அப்புறம் அவர்களை அடக்குவது எளிது; அடக்கிவிடு” என்கிற போர்த்தந்திரம் ஆகும், இது. உலகம் முழுவதிலும் ஆளும் சிறு பான்மைக் கும்பல்கள், அந்த ஆதிக்கத் தைக் காப்பாற்றும் முறையைக் கையாண்டு தான் ஆங்காங்கே, பெரிய எண்ணிக்கை யுள்ள மக்களைப் பிரித்து வைத்து ஆளு கிறார்கள்.

இந்தியா ஒரு விநோதமான -காட்டுமிராண்டிக் கால சமுதாய அமைப்பைக் கொண்டது. இந்துக்கள் என்போர் எப்போதும் 80 விழுக்காட்டினராக இருக்கிறார்கள்.

இன்று 126 கோடிப் பேரில் 100 கோடிப் பேர் இந்துக்கள். இவர்கள் படுக்கை வாட்டில் நான்கு உயர்வு-தாழ்வு உள்ள வருணசாதிப் பிரிவினராகவும்; குத்துவாட்டில் 6,700 உள்சாதிப் பிரிவினராகவும் வாழ்க்கை நடப்பில் பிரிந்து கிடக்கிறார்கள். இவர்கள் மொழியாலும், பண்பாட்டாலும் நேற்றும் இன்றும் ஒன்றுசேர முடியவில்லை. மொழித் தேசியம், இந்துத் தேசியம் பேசுகிறவர்கள் இதுபற்றி இணக்கமான எந்தச் செயலையும் செய்யவில்லை; செய்யமாட் டார்கள். ஏன் எனில் இது எதிர்நீச்சல் அடிக்கிற மூச்சுத்திணறும் பணி.

வேதம் பற்றி அதிகமான இந்துக்களுக் குத் தெரியாது. ஆனால் மேலான இதிகாசங்களாகப் போற்றப்படும் இராமாயணம், மகா பாரதம் பற்றி இந்துக்கள் எல்லோருக்கும் தெரியும்; இங்குள்ள மற்ற மதத்தினருக் கும் தெரியும். இவை இந்து -இந்துத்துவம் -இந்திய தேசம் என்கிற உணர்வுகளை நாடிநரம்புகளில் பாய்ச்சியுள்ளது.

“இராமாயணம், மனுநீதி இரண்டும் சாதியைக் காப்பாற்றுகின்றன” என 1922இல், திருப்பூரில் காங்கிரசுப் பொதுக்கூட்டத்தில், பெரியார் பேசினார்; இரண்டையும் எரிக்கச் சொன்னார். மேதை அம்பேத் கர் 1927இல் மனுநீதியை எரித்தார்.

தாம் சாகும் வரையில், பெரிய சங்கராச்சாரியார், இராச கோபாலாச்சாரியார், காந்தியார் ஆகியோர் இராமாயணம், பாரதம் இவற்றைப் பரப்பினர்; பாதுகாத்தனர். இந்த இருதரப்பு நிலைபாடுகளைப் பற்றி நாம் ஆழமாக உணர வேண்டும்.

இவ்வளவு இருப்பு நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் -இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என்பதை நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும்.

இந்தி, அரசமைப்புச் சட்டப்படி இன்றும் ஆட்சி மொழி.

“1967 அலுவல் மொழிச் சட்டப்படி” ஆங்கிலம், இன்றும் இணை ஆட்சி மொழி.

ஆங்கிலம், 2015-2016இலேயே, நீக்கப்படும் சூழலை, இன்றைய நரேந்திர மோடி அரசு உருவாக்கி வருகிறது. ஆங்கிலம் நீக்கப்பட்ட இடத்தில், அரச மைப்பு விதி 343(1)இன்படி, இந்தி மட்டுமே ஆட்சி மொழி ஆகிவிடும்; இந்தி உச்சநீதிமன்ற மொழி ஆகிவிடும்; நாடாளுமன்ற நடப்புக்கான மொழி ஆகி விடும்; உயர்கல்விக்கான மொழி ஆகிவிடும்; உரிமை இயல் சட்டங்கள், குற்றவியல் சட்டங்கள், குற்றத்தண்ட னைச் சட்டங்கள் எல்லாம் இந்தி மொழியில் வெளி யிடப்படும்.

இது தமிழருக்கு -கேரளருக்கு -ஆந்திரருக்கு -கன்னடருக்கு -மராட்டியருக்கு -பஞ்சாபியருக்கு -வங்காளியருக்கு -அசாமியருக்கு என்று, இந்திய அரசமைப்பில் இடம்பெற்றுள்ள 22 மொழி மக்களுக் கும் எதிரானது; மற்ற இந்தி பேசாத பலமொழி மக்களுக்கும் எதிரானது. இவர்களின் மொழிகளின் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் அடியோடு தடுப்பது.

பயன்பாட்டில் இல்லாத மொழி, எவ்வளவு செழிப் பானதாக இருந்தாலும், ஒரு தலைமுறைக் காலத்தில் அழிந்தேவிடும். சமற்கிருதம் அழிந்தது அப்படித்தான்.

இந்தக் கெடுதி விரைவில் கெட்டியாக வரப்போவ திலிருந்து எல்லா மொழிகளையும் காப்பாற்றிட, முதலாவது தேவை-எல்லா மொழி மாநிலங்களையும் தன்னுரிமை பெற்ற நாடுகளாக -மொழிவழித் தேசங்களாக அமைப்பதுதான். இதைத் தமிழர் ஒவ்வொருவரும் ஆய்வு செய்திட முன்வர வேண்டும் எனக் கோருகிறோம்.

நம்மால் முன்மொழியப்பட்டுள்ள இந்தியக் கூட் டாட்சி என்பதன் வடிவம் என்ன?

“இந்தியாவில் இன்று அமைக்கப்பட்டுள்ள ஒவ் வொரு மொழி மாநிலமும், ஒவ்வொரு ஒன்றியப் பகுதி யும் தத்தம் மொழிப் பாதுகாப்பு -பண்பாட்டுப் பாது காப்புக்கருதி, அரசின் எல்லாத் துறைகளிலும் - தன்னுரிமை பெற்ற (Full Autonomy) நாடுகளாக உருவாக்கப்படவும்; பாதுகாப்பு, பண அச்சடிப்பு, செய்தித் தொடர்பு ஆகிய மூன்று துறை அதிகாரங்கள் மட்டும் இந்தியக் கூட்டாசிக்கு, தன்னுரிமை பெற்ற மாநிலங்கள் தாங்களே விரும்பி அளித்திட்ட அதிகாரங்களைப் பெற்றிருக்கும்.”

அதேபோல், தன்னுரிமை பெற்ற தமிழ்நாடு எப்படிப்பட்ட அதிகாரங்கள் உடையதாக இருக்கும் என்பதும் எல்லோரும் அறியத்தக்கது.

“தன்னுரிமை பெற்ற தமிழ்நாட்டு அரசு சமதரும, மதச்சார்பற்ற அரசாக விளங்கும். தமிழ்நாட்டு அரசுக் கெனத் தனி அரசமைப்புச் சட்டம், தனித் தேசியக் கொடி, தனிக் குடி உரிமை, தற்காப்புப் படை ஆகிய வை இருக்கும்.”

இந்தியா முழுவதிலும் உள்ள இந்தி பேசுகிற -இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலமும், தன்னுரி மை பெற்ற தமிழ்நாட்டைப் போலவே, தன்னுரி மை பெற்ற தனித்தனி நாடாக இலங்கும். அந் தந்த மாநிலத்தில் அவரவர் தாய்மொழி மட்டுமே எல்லாப் பயன்பாட்டுக்கும் இருக்கும். 22 மொழி களும் கூட்டாட்சியிடம் மட்டும் இருக்கும்.

இந்தியக் கூட்டாட்சி முழுத் தன்னுரிமை (Sovereignty)) பெற்றதாக இராது; இருக்கக் கூடாது.

தன்னுரிமை பெற்ற ஒவ்வொரு மொழி மாநிலமும் முழுத் தன்னுரிமை பெற்றதாக இராது.

இந்தியக் கூட்டாட்சி மூன்று அதிகாரங்களை மட்டுமே பெற்றிருக்கும்.

தன்னுரிமை பெற்ற ஒவ்வொரு மொழி மாநிலமும் மூன்று துறை அதிகாரங்கள் தவித்த -மற்ற எல்லா அதிகாரங்களையும், மற்றும் எஞ்சிய அதிகாரங்களை யும் (Residuary Powers) பெற்றிருக்கும்.

அதாவது கூட்டாட்சியிடமும், தன்னுரிமை மாநிலத்திடமும் பகிர்வு செய்யப்பட்ட உரிமைகள் (Divided Sovereignty) மட்டுமே இருக்கும்.

தமிழ்ப் பெருமக்களும் தமிழ்த் தேசிய அமைப் பினரும் இத்தகைய அரசியல் தீர்வு பற்றி - அரசமைப் புப் பற்றிக் கவலையோடு சிந்திக்க வேண்டுகிறோம்.

நம் முதலாவது தப்படி -முதலாவது அடி இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை ஒழிப்பதாக இருக்க வேண்டும்.

எல்லா இந்தி பேசாத மாநிலங்களுக்கும் மிக மிக விரைந்து நாம்தான் இக்கோரிக்கையைச் சுமந்து செல்ல வேண்டும்.

வரும் 2015 மார்ச்சு 1 முதல் பஞ்சாப் மாநிலத்தில் மா.பெ.பொ.க. சார்பில் நான் செயல்படுவேன். தோழமை அமைப்பினர் ஆர்வத்துடன் வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்.

தமிழர்க்கும், மற்றோர்க்கும் எல்லாத் தீமைகளும் இந்தி ஆட்சி மொழியாவதன் வழியாக உடனடியாக வரப்போகின்றன.

அயலுறவு அமைச்சகம் மூலம் இந்தி ஆட்சி மொழியாகத் தகுதி பெற்றிட உரிய பெரிய பெரிய ஏற்பாடுகளை மோடி அரசு முனைப்புடன் செய்கிறது.

பாரத அரசு மொழி - Bharat Sarkar’s Basha - என்ற பெரியட்டு, அயல்நாட்டுடன் ஆன உறவுக்குத் தனக்கு, எல்லாத் துறைச் செய்திகளையும் இந்தியில் தரவேண்டும் என மோடி அரசு முனைந்துவிட்டது. அதற்காக உள்துறை அமைச்சகத்தில்  துணைச் செயலாளர் பதவி வகிக்கும் அலுவலர் ஒருவரை மொழிச் சட்டப் பிரிவுக்கு (MEA), மாற்றச் செய்து, இந்தி மொழி ஆட்சி மொழியாக விரைவில் வளர்த்தெடுக்கப்படுவதற்கு எல்லா ஏற்பாடு களும் அவர்மூலம் செய்யப்பட்டுவிட்டன. இந்தப் பிரிவுக்கு மீனா மல்ஹோத்ரா என்கிற இ.ஆ.ப. பெண் அதிகாரி, துணைச் செயலாளர் ஆக அமர்த்தப்பட் டுள்ளார். அவர் இணைச் செயலாளர் எனப் பதவி உயர்வு தரப்பட்டுள்ளார். எல்லா ஆவணங்களையும் இந்தியில் மொழிபெயர்க்கவும், உள்நாட்டில் தொடர்புக் கான எல்லா வரைவுகளும் சுற்றறிக்கைகளும் இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளைக் கொண்டதாக அனுப்பப்படவும் எல்லா ஏற்பாடுகளையும் போர்க்கால விசையில் செய்திட மோடி அவர்களால் முடுக்கிவிடப் பட்டுள்ளன (The New Indian Express, Chennai, 19-1-2015).

இந்து தேசம் -இந்தி தேசம் -இந்துத்துவக் கொள்கையை ஊட்டும் கல்வி என, 2015-2019 ஆகிய 5 ஆண்டுக்காலத்தில் -எல்லா மொழி மக் களும், எல்லா இன மக்களும், எல்லா மத மக்களும் இந்துத்துவ -பார்ப்பனியக் கொள்கைகளில் அமிழ்த்தப்படுவார்கள்.

இந்தியா முழுவதிலும் பயணிப்போம் வாருங்கள்! இந்தியா முழுவதிலும் உள்ள பார்ப்பனரல்லாத இந்துக் களிடம் - இந்து மதத்துக்கு வெளியே உள்ளவர்களிடம் இந்துத்துவ எதிர்ப்பை விதைப்போம் -வளர்ப்போம், வாருங்கள்! வாருங்கள்!

-    வே.ஆனைமுத்து

Pin It