மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் 11-01-2015 ஞாயிறு அன்று சென்னை, மேற்கு மாம்பலம், சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “இந்தி ஆட்சிமொழி எதிர்ப்பு - தேசிய இன உரிமை மீட்பு” மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1

இந்திய அரசமைப்புச் சட்டம், விடுதலை பெற்ற இந்தியாவில், வயதுவந்த எல்லோருக்கும் வாக்குக் கொடுத்து, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அவையினால் செய்யப்பட்டதல்ல என்பது ஒரு மாபெரும் உண்மை. அதன் காரணமாகவே, பல மதத்தினரையும், நூற்றுக் கணக்கான வெவ்வேறு மொழிகளையும், பண்பாடுகளையும் கொண்ட வெகு மக்களுக்கு அவரவரின் தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள ஏற்ற உரிமையை அளிப்பதாக இச்சட்டம் அமைந்திருக்கவில்லை என இம்மாநாடு திடமாகக் கருதுகிறது. எனவே வெகுமக்களுக்கு அவரவர் உரிமைகளை அளிக்கமுடியாத இவ் அரசமைப்பை அடியோடு மாற்றிட இந்திய அரசு முன்வர வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்திக் கோருகின்றது. இக் கோரிக்கையின் உண்மையை உணர்ந்து எல்லாப் பெருமக்களும் இது பற்றித் தீவிரமாகச் சிந்தித்து, இந்நிலையை உருவாக்கிட அணியமாக வேண்டும் என இம் மாநாடு கோருகிறது.

தீர்மானம் 2

இந்திய அரசமைப்பின் 17ஆவது பகுதியின் தலைப்பு “அலுவல் மொழி” என்று மட்டும் குறிக்கப் பட்டுள்ளது. அது, இந்தியா முழுவதிலும் உள்ள நூற்றுக் கணக்கான மற்ற மொழிகளைப் பேசும் கோடிக்கணக்கான மக்களின் பேரில் இந்தி பேசும் குடிமக்களின் மொழியைத் திணிக்கிறது. மற்ற மொழிகளைப் பேசும் மக்களின்பேரில் ஒரு வேற்று மொழியைத் திணிப்பது, “ஒரு மொழி ஆதிக்க வன் கொடு மையாகும்”. எனவே இந்திய அரசமைப்பு விதி 343(1)இல் உள்ள, “தேவநாகரி எழுத்து வடிவில் உள்ள இந்தி மொழி, (இந்திய) ஒன்றியத்தின் அலுவல் மொழியாக விளங்கும்” என்பது, இந்தி மொழி மக்களின் வல்லாதிக்கத்தை, இந்தி பேசாத பெரும்பான்மை மக்களின்பேரில் திணிப்பதாக உள்ளது என்பதை, இம் மாநாடு மறுபடியும் இந்திய அரசினர்க்கும், இந்தியப் பெருமக்களுக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இந்தியைவிட காலத்தால் மூத்த மொழிகள் -மற்றும் பண்பட்ட மொழிகள் பல உள்ளன. அவற்றுள் 22 மொழிகள் மட்டும் அரசமைப்பின் விதிகள் 344(1), 351இன்படி -அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில், வெறும் “மொழிகள்” என்ற தலைப்பின்கீழ் வைக்கப்பட்டுள்ளன.

இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி என்பதை நீக்கிவிட்டு, இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் கண்டுள்ள 22 மொழிகளையும் ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக ஆக்கிடவும், விதிகள் 343(1), 344, 345, 346, 347 ஆகியவற்றை அடியோடு நீக்கிடவும், அதற்கு ஏற்ற அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை இந்திய அரசு முன்மொழிந்து நிறைவேற்றிடவும் வேண்டும் என்றும் இந்திய அரசினரை இம்மாநாடு வலியுறுத்தி வேண்டிக் கொள்கிறது.

இந்தியா முழுவதிலுமுள்ள 58 விழுக்காட்டினரான இந்தி பேசாத பெருமக்கள், இந்தியுடன் தத்தம் மொழி மட்டும் இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று கோராமல் -அரசமைப்பில் கண்டுள்ள 22 மொழிகளும் இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக ஆக்கப்பட வேண்டும் - அதற்காக இந்தி பேசாத மொழி மாநில மக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாகப் போராட முன்வர வேண்டும் என்று இம் மாநாடு தொடர்புடைய எல்லா மக்களையும் அன்புடன் வேண்டிக் கொள்ளுகிறது.

இத் திசையை, 1991 அக்டோபரில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, புது தில்லியில் மவுலங்கர் மன்றத்தில் நடத்திய இந்தியக் கூட்டாட்சி மாநாட்டில் முதன்முதலாகச் சுட்டிக் காட்டியது என்பதைப் பெருமிதத்துடன் அனைவர்க்கும் நினைவுபடுத்த விரும்புகிறது.

தீர்மானம் 3

இந்திய அரசமைப்பின் விதி 343(2)இன்படி, 1950 முதல் 15 ஆண்டுகளுக்கு, ஒன்றிய அரசின் அன்றாட அலுவல்களைச் செய்திட ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்று கண்டுள்ளது. அதாவது, விடுதலை பெற்ற இந்தியாவில் இந்தி அலுவல் மொழியாகப் பயன்பட ஏற்ற சொல் வளத்தையும் மற்ற எந்தத் தகுதியையும் பெற்றிருக்கவில்லை என்பதால்தான், அந்தத் “தகுதியின்மை”யை மறைக்க வேண்டி, ஓர் அயல்மொழியை அலுவல்மொழி என அரசமைப்பே ஏற்றுக்கொண்டது அவமானம் ஆகும். மேலும், அந்தப் பதினைந்து ஆண்டு, 1965இல் முடிந்தது. அதற்குள் எட்டாம் அட்டவணையில் கண்டுள்ள எல்லா மொழிகளையும் இந்திய அரசின் அலுவல் மொழிகளாக ஆக்குவதை விட்டுவிட்டு, ஆங்கிலம் தொடர்ந்து அலுவல் மொழியாக இருக்க, தனியாக ஒரு அலுவல் மொழிச் சட்டத்தை நிறைவேற்றி வைத்துக்கொண்டு, அதே சமயத்தில் நடுவணரசின் அனைத்து அலுவலர்களுக்கும் அரசின் பணி நேரத்தில், அரசுச் செலவில் இந்தியைக் கற்றுக் கொடுப்பதிலேயே முழு நாட்டத்தையும் இந்திய அரசு செலுத்தியது. இது இந்திய மொழிகளின் வளர்ச்சியைத் தடுத்துவிட்டதுடன், ஆங்கிலம் பயன்படுத்தி அலுவல்களைச் செய்திட்ட எல்லோரும் இந்தியை மட்டுமே கற்றுத்தீர வேண்டிய கட்டாயத்தை இந்தி பேசாத மக்கள் பேரில் திணிக்க அரசு கையாண்ட சூழ்ச்சியாகவும் ஆகிவிட்டது.

இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத - இந்தி பேசாத எல்லா மொழி மக்களுக்கும் அது அந்நிய மொழி. அதேபோன்று இந்தியாவிலுள்ள எல்லா மொழி மக்களுக்கும் ஆங்கிலம் அந்நிய மொழி. 2015இலும் அந்நிய மொழி அலுவல் மொழியாக இருப்பது மிகமிக இழிவானது. இதனை எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும், சட்டவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும், ஊடகவியலாளர் களும், பொதுமக்களும் சீர்தூக்கிப் பார்த்து - இன்றைய அரசமைப்பில் கண்டுள்ள 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவல் மொழிகளாக உடனே ஆக்கிட வேண்டுமென்று கோரிக்கை வைத்துப் போராட அனைத்துமொழி மக்களும் முன்வரவேண்டும் என இம் மாநாடு அன்புடன் வேண்டுகிறது.

தீர்மானம் 4

“இந்தியா” என்கிற பெயரில் இன்றுள்ள நிலவியல் அமைப்பு முழுவதுமோ அல்லது 1947 வரை இருந்த பரப்பிலுமோ -1801 வரையில், ஒரே ஆட்சி, ஒரே நாடாளு மன்றம், ஒரே நிருவாகம், ஒரே படை, ஒரே பணம், ஒரே உச்சநீதிமன்றம் என்று எப்பகுதியிலும் இருந்ததில்லை. இந்த மாபெரும் வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு, “பாரதம்”, “இந்தியா”, “இந்து இராச்சியம்” என்கிற பழைய இதிகாசக் கருத்துகளை இந்திய அரசின்பேரில் ஏற்றி, 300 வளர்ந்த -பண்பட்ட மொழிகளைப் பேசும் 126 கோடி மக்களையும் ஓருறுப்பு ஆட்சி என்கிற “இந்திய ஒற்றை ஆட்சி”யின் கீழ், ஆளும் வகுப்பினரும், பிறவியால் மேல்சாதிக்காரர்களும், பெருநிலவுடமையாளர்களும், பெரு முதலாளிகளும் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பது -பரந்துபட்ட பகுதியில் வெகுமக்களைச் சுரண்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை இம்மாநாடு அனைவர்க்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே, இந்தியாவில் இன்று அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மொழி மாநிலமும், ஒவ்வொரு ஒன்றியப் பகுதியும் தத்தம் மொழிப் பாதுகாப்பு -பண்பாட்டுப் பாதுகாப்புக் கருதி, அரசின் எல்லாத் துறைகளிலும் தன்னுரிமை பெற்ற நாடுகளாக உருவாக்கப்படவும்; பாதுகாப்பு, பண அச்சடிப்பு, செய்தித் தொடர்பு ஆகிய மூன்று துறை அதிகாரங்களை மட்டும் இந்தியக் கூட்டாட்சிக்கு, தன்னுரிமை பெற்ற மாநிலங்கள் தாங்களாகவே விரும்பி அளித்திட முன்வரவும் ஆவன செய்ய வேண்டும் என இம் மாநாடு அனைவரையும் வேண்டிக்கொள்கிறது.

தீர்மானம் 5

தன்னுரிமை பெற்ற தமிழ்நாட்டு அரசு சமதரும மதச் சார்பற்ற அரசாக விளங்கும். தமிழ்நாட்டு அரசுக்கெனத் தனி அரசமைப்புச் சட்டம், தனித் தேசியக்கொடி, தனிக் குடிஉரிமை, தற்காப்புப்படை ஆகியவை இருக்கும். இத் தன்மையிலேயே இந்தியக் கூட்டாட்சி அமைப்பில் உறுப்பாகவுள்ள ஒவ்வொரு மொழிவழித் தன்னுரிமைபெற்ற நாடும் இலங்கும். தமிழ்ப் பெருமக்களும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினரும், தமிழ்நாடு விடுதலை கோரும் அமைப்பினரும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி முன்மொழியும் இவ் அரசியல் அமைப்புக் கோரிக்கையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

தீர்மானம் 6

புத்தரும், வள்ளுவரும், மகாத்மா புலேவும், அயோத்தி தாசரும், தந்தை பெரியாரும், மேதை அம்பேத்கரும், பாவேந்தரும் கோரிய வண்ணம் மனுதருமம், பராசர ஸ்மிருதி, யக்ஞவல்க்ய ஸ்மிருதி, இராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை முதலான பிராமணிய நூல்களை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று அனைத்துத் தமிழ் மக்களையும், பார்ப்பனரல்லாத எல்லா இந்திய மக்களையும் இம்மாநாடு வேண்டிக் கொள்ளுகிறது. மானுட ஒப்புரவுக்கு எதிரான இந்நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று இந்திய அரசினரை வலியுறுத்துவதுடன், தமிழர்கள் இக்கோரிக்கையை வென்றெடுக்கப் போராட முன்வர வேண்டும் எனவும் இம் மாநாடு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 7

பகவத் கீதையின் காலம் 5151 ஆண்டு பழமையுடையது -ஆதி சங்கரர் கி.மு. 488 - 477 காலத்தில் வாழ்ந்தவர் என்னும் அதீதமான கற்பனைகளை வரலாறு எனக் கற்பித்து, இன்றைய பாரதிய சனதாக் கட்சி அரசின் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முதலானவர்கள் பேசுவதும்; பகவத் கீதையைப் பள்ளிக் கல்வியில் பாடங்களாக வைத்துக் கற்பிக்க இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறையினர் முயலுவதும்; அரியானா மாநில அரசினர் அத்தகைய முயற்சியினை மேற்கொள்ள ஆயத்தமாவதையும் இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 8

“மோடி அரசு ஒரு மோசடி அரசு” என்று சொல்லத்தக்க வண்ணம், தலைமை அமைச்சர், ஒளிரும் இந்தியாவை உருவாக்கிட, அயல்நாட்டு வங்கிகளில் முதலாளிகள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை 100 நாள்களில் மீட்டு வருவேன் என்று தேர்தலின்போது மக்களுக்குத் தந்த வாக்குறுதி பொய்த்துவிட்டது.

விடுதலைபெற்ற 67 ஆண்டுகளுக்குப் பிறகும் -நாட்டுப் பாதுகாப்புக்கு வேண்டிய ஆயுதங்கள், மக்கள் நலம் காக்கும் மருந்துகள், நாட்டின் வேளாண்மை, தொழில் வளப் பெருக்கத்துக்கு இன்றியமையாது வேண்டப்படும் மின்சாரம் -பாசன நீர் வசதி; தரமான கல்வி இவற்றுள் எதையும் தரமுடியாமல் போனதற்குக் காரணம் -1947 முதல் முதலாளித்துவப் பொருளாதாரத் திட்டத்தையே முன்வைத்து 50 ஆண்டுகள் காங்கிரசாரும், 10 ஆண்டுகள் பாரதிய சனதாவினரும், 7 ஆண்டுகள் இவர்களின் தொங்குசதைக் கட்சியினரும் இந்தியாவை ஆண்டதுதான் என்பதை தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வசதியாக மறந்து விட்டார். இன்று உலகின் ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடத்திலிருக்கிறது. அந்நிய - உள்நாட்டுக் கடனில் இந்தியா மூழ்கியிருக்கிறது.

இந்த இழிந்த நிலையில், இரு கை நீட்டி, தொலைதூர அயல்நாடுகளையும், குறிப்பாக அய்ரோப்பிய நாடுகளையும், அயலகத்தில் உள்ள இந்திய வம்சாவளி முதலாளிகளையும் “இந்தியாவில் நீங்கள் உற்பத்தி செய்யுங்கள்” என்று வருந்தி வருந்தி அழைப்பது கண்டனத்துக்கு உரியது. இது, நரேந்திர மோடி, தன் கட்சிப் பதவிச் சுகத்துக்காகவும், இந்துத்துவக் கொள்கையை இந்திய மக்கள் அனைவர் பேரிலும் கெட்டியாகத் திணித்துவிடவும் வேண்டி இந்தியாவையும், இந்தியாவின் இயற்கை வளங்களையும், மக்களின் சுதந்தரத்தையும் விற்பதே ஆகும். எனவே, இந்த மாபெரும் கேட்டினைச் செய்யும் இன்றைய இந்திய ஆட்சியினரை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 9

அன்மையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துமுடிந்த உடன்காலில், இந்திய அரசு அவசரச் சட்டங்கள் மூலம் இரண்டு திருத்தங்களை நிறைவேற்றியது. இது கடுங் கண்டனத்துக் குரியது. ‘பொது நோக்கத்துக்காக’ என்கிற போர்வையில் பெரிய பெரிய பரப்புள்ள வேளாண் நிலங்களை அரசு கையகப்படுத்த – நிலம் வைத்திருப்பவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை என்றும், அப்படி நிலத்தைக் கையகப்படுத்துவதால் ஏற்படும் எந்தக் கெடுதல்களைப் பற்றியும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும் இந்த அசவரச் சட்டம் கூறுகிறது. மேலும், நிலக்கரி முதலான கனிம வளங்கள் மிகுந்த நிலங்களையும் இப்படிக்கைப்பற்றி வேதாந்தம், அதானி முதலான பெரு முதலாளிகளுக்கு விற்றுவிட வழிவகை செய்யவே இச் சட்டம் அவசரக்கோலத்தில் இயற்றப்பட்டுள்ளது. இதனால் நில உரிமையாளர்களுக்கும், சமூகத்துக்கும் ஏற்படும் கேடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்த அவசரச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என இந்திய அரசினரை இம் மாநாடு கோருகிறது.

வாழ்நாள் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு ஏற்கெனவே இருந்த வரம்பான 26 விழுக்காடு என்பதை 49 விழுக்காடாக உயர்த்தி இன்னொரு அவசரச் சட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றியுள்ளதை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

வாழ்நாள் காப்பீட்டுப் பணம் பொதுமக்களுடையது. அதன் கணிசமான பகுதி அரசின் திட்டங்களுக்குக் கடனாகத் தரப்படுகிறது. இதில் அந்நிய முதலீட்டை அதிகப்படுத்துவதால், காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயமாக விரைவில் மாற்றப்படவே வழிவகுக்கும்.

எனவே, இந்த இரண்டு அவசரச் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று இந்திய அரசினரை இம் மாநாடு கோருகிறது.

 தீர்மானம் 10

2015ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள்நல (சுகாதார) வரைவுக்கொள்கையில், நாட்டின் மொத்தவருமானத்தில் வெறும் 2.5 விழுக்காடு மட்டுமே இந்திய அரசினரால் ஒதுக்கப்பட்டுள்ளது என்கிற அறிவிப்பை மக்களின் பார்வைக்கு அரசு வெளியிட்டுள்ளது. இது, கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பாதையினையே பாரதிய சனதாக் கட்சி பின்பற்றுகிற - மிகக் குறைவான திட்ட ஒதுக்கீடாகும்.

வரும்2015 -2016ஆம் நிதிஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில், மக்கள் நலக் காப்புத் துறைக்கு, மிகக் குறைந்தது 5 விழுக்காடேனும் ஒதுக்கப்பட வேண்டுமென்று இந்திய அரசினரை இம் மாநாடு கோருகிறது.

தீர்மானம் 11

இந்திய அரசினர் 1990இல் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டனர். அப்போது முதல் அரசுத் திட்டங்களை நிறைவேற்றிடப் பணம் வேண்டும்போதெல்லாம் -மக்கள் மற்றும் அரசு முதலீட்டில் நடைபெறும் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றே முதலீடு திரட்டுகிறது. இது பொதுத்துறை நிறுவனங்களை மூடிவிடவே வழிவகுக்கும்.

அரசு தேசிய வங்கிகள் அளித்தவாராக்கடன்கள் என்பவை, ஆளும் கட்சியினரின் தலையீட்டாலும், வங்கி அதிகாரிகளுக்குக் கைக்கூலி தந்தும் முதலாளிகளால் பெறப்பட்டவை.

அப்படிக் கடன் பெற்ற பெரும் பணக்காரர்களில் 50 கடன்காரர்கள் செலுத்தவேண்டிய நிலுவை மட்டும் ரூபா 40,528 கோடியாகும். 2013 மார்ச்சு கணக்குப்படி 400 நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய பணம் ரூபா 70,300 கோடி. 2014 மார்ச்சு கணக்குப்படி அத் தொகை 85,000 கோடியாகிவிட்டது.

எனவே, வாராக்கடன்களைத் தண்டுவது, வரிகளைக் கறாராக வசூல் செய்வது என்கிற வருவாய் வழிகளை முடுக்கிவிடாமல், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை மேலும் மேலும் அரசு விற்றுவருவது வெகு மக்களுக்கு எதிரானதும், பிற்பட்ட - தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் வேலை வாய்ப்புப் பெற முடியாமல் தடுப்பதும் ஆகும். இப் போக்கினை இம் மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன், எல்லாத் தரப்பு மக்களும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அரசு விற்பதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யவேண்டும் என வேண்டிக்கொள்கிறது.

தீர்மானம் 12

இந்திய அறிவியல் பேரவை 1913இல் நிறுவப்பட்டது. பல துறைகளைச் சார்ந்த அறிவியல் வல்லுநர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஓரிடத்தில் கூடி அறிவியலின் ஒவ்வொரு துறையையும் நவீனமான நிலைக்கு உயர்த்துவது பற்றியும், மூடநம்பிக்கை, அறியாமை இவற்றை நீக்க என்னென்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் மட்டுமே விவாதிப்பார்கள்.

ஆனால், 3-1-2015, 4-1-2015இல் மும்பையில் நடைபெற்ற இந்திய அறிவியல் பேரவை மாநாட்டில், கி.மு. 7000இல் ரிக்

வேதத்திலும், பின்னர் பௌதாயனரின் சுல்ப சூத்திரத்திலும் -வானூர்திகள், வேதக் கணக்குச் சூத்திரங்கள் ஆழமாகச் சொல்லப்பட்டிருப்பதாகச் சிலர் பறைசாற்ற இடம் அளித்திருக்கிறார்கள்.

பாரதிய சனதா அரசினரும், இந்திய அரசின் கல்வித் துறையினரும் இத்தகைய மூடத் தனங்களை “வேதத்தின் அறிவியல்” என்கிறபெயரால் வளர்த்திடஊக்கம் அளிப்பதைஇம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 13

தமிழ்நாட்டை 1967 முதல் 48 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்தன; இப்போதும் ஆட்சி செய்கிறது.

6-3-1967 முதல் 3-2-1969 முடிய அறிஞர் சி.என். அண்ணாதுரை முதல்வராகஇருந்தார்.மும் மொழிக் கொள்கை என்கிற பேரால் இந்தி விருப்பப்பாடமாக இருந்ததை ஒழித்து ஒரு நன்மையைச் செய்தார். தேர்தல் காலத்தில் மலிவு விலையில் அரிசி என்கிற முடியாத திட்டத்தை அறிவித்தார். அவர் இரண்டு ஆண்டுகளில் மறைவுற்றார். அவருக்குப் பின்னர் மூன்று பேர்களே 45ஆண்டுக்காலம் முதலமைச்சர்களாகஇருந்தார்கள். இவர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழையும் தமிழர் நலனையும் தன்மானத்தையும் கெடுக்கும் நான்கு தீய திட்டங்களை நிறைவேற்றினார்கள்.

தி.மு.க. முதல்வர் சாராயக் கடைகளைத் திறந்தார். அ.இ.அ.தி.மு.க. முதலமைச்சர்கள் இருவரும் கிஞ்சிற்றும் சிந்திக்காமல் சாராயக் கடைகளை வளர்த்தார்கள். ஆளும் திராவிடக் கட்சிக்காரர்களும், திராவிட எதிர்க் கட்சிக்காரர்களுமே சாராயத் தொழிற்சாலைகளை நிறுவினார்கள். தனியாரிடம் கடைகள் இருந்தபோதும், அரசுக் கடைகளாக மாறிய பிறகும் அவர்களே சாராய உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள். இது தமிழினத்தைச் சீரழித்த மாபெரும் தீய செயலாகும்.

இரண்டு திராவிடக் கட்சிக்காரர்களும் போட்டி போட்டுக்கொண்டு, ஆங்கில வழியில் தனியார் கல்விச் சாலைகளை நிறுவச் செய்தார்கள். இவர்களில் பலரும் கள்ளப்பணம் கொழுக்கிற ஆங்கில வழிப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவினார்கள். தமிழ்வழிக் கல்வி வரவே முடியாமல் -தமிழ்வழிக் கல்வியைத் தராமல் மாபெருங் கேட்டைச் செய்தார்கள்.

மலிவு விலையில் அரிசி; கிலோ 2 ரூபாவுக்கும், பின்னர் 1 ரூபாவுக்கும் அரிசி; இப்போது பலருக்கும் இலவச அரிசி என்று படிஅளந்து தமிழரின் தன்மானத்தை மழுங்கடித்தார்கள்; தமிழர்களை இலவசங்களுக்கு அடிமைகளாக ஆக்கினார்கள்.

இரண்டு திராவிடக் கட்சிகளும் எல்லாச் சிக்கல்களிலும் எதிரும் புதிருமாக நின்று தில்லிக்காரனிடம் மட்டு மரியாதையை இழந்தார்கள்; தமிழரிடமிருந்து பறித்துக் கொண்ட கல்வி உரிமை, காடு மேலாண்மை உரிமை முதலானவற்றைக் காக்கத் தவறினார்கள்.

இவ் இரண்டு திராவிடக் கட்சியினருமே,

சாராயத்தை ஒழிக்க

தமிழ்வழிக் கல்வியை வளர்க்க

இலவசங்களைப் பெரிய அளவில் ஒழிக்க

தில்லிக்காரனிடம் இழந்துவிட்ட அரசியல் உரிமைகளை மீட்க முதன்மையாகப் போராட வேண்டியவர்கள் ஆவர்.

இவர்கள் போராட முன்வராவிட்டால், இவ் இரண்டு திராவிடக் கட்சிகளையும், பாரதிய சனதா உள்ளிட்ட எல்லா அனைத்திந்தியத் தேசியக் கட்சிகளையும் நிலைகுலையச் செய்ய எல்லாம் செய்ய வேண்டும் என்று மான உணர்வும் பொறுப்பும் உள்ள தமிழ்ப்பெருமக்களுக்கும், தமிழின -திராவிடரியக்க இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி அன்பான அறைகூவல் விடுத்து வேண்டி அழைக்கிறது.

மேலும் தற்போதைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியினர் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைப் புகுத்தி தமிழ்வழிக் கல்விக்குச் சவக்குழி தோண்டிவிட்டனர். இதனை இம் மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழ்நாட்டில் தொடக்ககல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை எல்லா நிலைக் கல்வியும் தாய்மொழிவழியிலும் இலவயமாகவும் வழங்கிட வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசினரைக் கோருகிறது.

தீர்மானம் 14

தமிழ்நாட்டில் சிறிய -பெரிய ஏரிகள் 39,000-க்கு மேல் உள்ளன. இவ் ஏரிகள் தூர் வாரப்படாததாலும், நீர்வரத்து வாய்க்கால்கள் -போக்கு வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புக்காரர்களால் தூர்க்கப்பட்டுவிட்டதாலும் வடகிழக்குப் பருவ மழைக் காலத்திலும், தென்மேற்குப் பருவமழைக் காலத்திலும் வட தமிழ்நாட்டு ஏரிகளில் பெரும்பாலானவற்றில் நீர் தேக்கப்பட முடியவில்லை. தென் தமிழ்நாட்டு ஏரிகளிலும் தூர் மண்டியிருப்பதால் முழுக்கொள்ளவுக்கு நீர் தேக்கப்பட முடியவில்லை.

நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு புட்டிகளில் குடிநீரை அடைத்து விற்கும் தொழில், கண்மண் தெரியாமல் வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டது.

எனவே, மிஞ்சியிருக்கிற வேளாண் நிலங்களில் ஒரு பருவத்திற்குக்கூடப் பயிர் செய்யத் தண்ணீர் போதாமல் சிறு, குறு, நடுத்தர வேளாண் குடிகள் அழிவை நோக்கி, கதியற்று நிற்கின்றனர்.

தமிழக அரசினர் வாக்கு வாங்கும் நோக்குடன் ஊதாரித்தனமாக இலவசங்களை வாரித் தருவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், ஏரி - குளங்களைப் போர்க்கால வேகத்தில் இயந்திரங்களை வைத்துத் தூர் வார வேண்டும் என்றும் தமிழ்நாட்டு அரசினரை இம்மாநாடு வலியுறுத்தி வேண்டிக்கொள்ளுகிறது.