modi 450இந்திய அரசு முன்வைத்துள்ள நிலம் கையகப் படுத்தல் சட்ட வரைவு 2014 நரேந்திர மோடி எதிர் பார்த்ததைவிட கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பா.ச.க.வின் குடும்ப அமைப்புகள் கூட இச்சட்டத்தை நியாயப்படுத்த முடியாமல் திணறுகின்றன.

இந்நிலையில் மக்களில் கணிசமான பகுதியினரை ஏற்கச்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளுமாறு ஆர்.எஸ்.எஸ். தலைமை பா.ச.க.வைப் பணித்தது.

இச்சூழலில்தான் “மனதில் உள்ளதைப் பேசுகிறேன்” (மன் கி பாத்) என்ற பெயரில் வானொலி மூலம் மாதந் தோறும் ஏதாவது ஒரு பொருள் பற்றி பேசிவரும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 22. 03. 2015 அன்று நிலம் கையகப்படுத்தல் சட்டம் குறித்து உரையாற்றி னார்.

நெஞ்சம் முழுதும் நிறைத்து வைத்திருந்த பொய் களை மோடி அப்போது மக்களிடம் வாரி இறைத்தார். நிலம் கையகப்படுத்தல் சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் பொய்ப் பரப்புரை செய்வதாகக் கூறிய மோடி அதற்கு விளக்கம் அளிப்பதாக சொல்லிக் கொண்டு எந்தத் தயக்கமுமின்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் பிறப்பிக் கப்பட்ட 2013 நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைத் தாங்களும் ஆதரித்திருந்தாலும், அது செயல்படுத்தப் பட்ட கடந்த ஓராண்டில் இச்சட்டம் உழவர்களுக்கு நன்மை பயக்கவில்லை என்று பட்டறிவின் மூலம் உணர்ந்து கொண்டதால்தான் உழவர்களுக்கு நன்மை செய்யும் நோக்கிலேயே திருத்தச் சட்டம் கொண்டு வந்ததாக அப்பட்டமாக பொய் கூறினார்.

ஆனால், இந்த கெட்டிக்காரனின் புளுகு எட்டு நிமிடம் கூட நீடிக்கவில்லை. அந்த உரையில் அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னை அறியாமல் தனது உண்மை நோக்கத்தை சொல்லி சிக்கிக் கொண்டார்.

மராட்டியம், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் 2013-ஆம் ஆண்டு சட்டப்படி தொழிலகத் தேவைகளுக்காக நிலம் கையகப்படுத்துவது கடினமாகிவிட்டதாலும், ஒரு துண்டு நிலத்தைக் கையகப்படுத்துவதற்குக் கூட பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் குறைகூறின. தொழில்துறைத் தேவைக்காக நிலம் எடுப்பதை எளிதாக்குவதற்காகத் தான் இத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்று தன்னை அறியாமல் உண்மையை உளறிவிட்டார். உழவர்களின் நன்மைக்காக இச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாக முதலில் தான் கூறியப் பொய்யை தானே போட்டுடைத் தார்.

எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு திருத்தங்களை திறந்த மனத்தோடு விவாதித்து அவற்றுள் ஒன்பது திருத்தங்களை ஏற்றுக் கொண்ட பிறகே திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்ற மக்கள வையில் நிறைவேற்றியதாக சனநா யக வேடம் போடுகிறார் நரேந்திர மோடி.

2013-ஆம் ஆண்டு சட்டத்தில் நிலம் கையகப்படுத்தலுக்குத் தகுதி யுடையவையாக இந்திய நிறுவனச் சட்டத்தில் (கம்பெனி சட்டத்தில்) பதிவு பெற்ற தனியார் நிறுவனங் களே அனுமதிக்கப்பட்டன.

ஆனால், மோடி அரசு பிறப் பித்த அவசரச் சட்டத்தில் எந்தத் தனியார் அமைப்பும் நிலம் கையகப் படுத்த தகுதியுடையது என மாற்றப் பட்டது. இதற்கு ஏற்ப 2013-ஆம் ஆண்டு சட்டத்தில், அதாவது முதன்மைச் சட்டத்தில், எங்கெல் லாம் “தனியார் நிறுவனம்” என்று வருகிறதோ அங்கெல்லாம் “தனியார் அமைப்பு” என்று மாற்றிக் கொள்க என ஒரு திருத்தத்தை இரண்டாவது கூறாக முன் வைத்தது.

தனியார் அமைப்பு என்றால் என்ன என்பதை வரையறுப்பதற்கு முதன்மைச் சட்டத்தின் பிரிவு 3-இல் (yy) என்ற புதியப் பிரிவு சேர்க் கப்பட்டது. “அரசாங்க அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் தவிர பிற எல்லாமே தனியார் அமைப்பு என்ற வரையறுப்பில் வரும்”என்று இப்புதியப் பிரிவு கூறுகிறது.

மேற்கண்ட இரண்டு பிரிவுக ளையும் நீக்குமாறு எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நீக்கி, ஏற்கெனவே முதன் மைச் சட்டத்தில் உள்ளவாறு விட்டுவிட்டதைத்தான் பெரிய சனநாயக நடவடிக்கை போல் மோடி கூறுகிறார்.

அதேபோல் முதன்மைச் சட்டத்தில் பிரிவு 2 (1) (b) நிலம் கையகப்படுத்தலுக்கு தகுதியுடைய வையான தனியார் நிறுவனங்கள் என்ற வரிசையில் தனியார் மருத்துவமனைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும் வராது என விலக்களித்திருந்தது. மோடி அரசு முன்வைத்த வரைவில் இந்த விலக்கு நீக்கப்பட்டிருந்தது.

தனியார் மருத்துவ மனைகளுக் கும், தனியார் கல்வி நிறுவனங்களுக் கும் நிலம் கையகப்படுத்தல் உரிமை யிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மீண்டும் கொண்டு வருமாறு அ.இ. அ.தி.மு.க. உள்ளிட்ட சில எதிர்க் கட்சிகள் முன்வைத்த திருத்தத்தை அரசு ஏற்றுக் கொண்டது.

புதிதாக எந்தக் கட்டுத் திட்டமும் கொண்டு வரப்பட வில்லை. முதன்மைச் சட்டத்தில் இருந்தது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை ஏதோ பெரிய சனநாயக நடவடிக்கைப் போல மோடி படம் காட்டுகிறார்.

2013 முதன்மைச் சட்டத்தில் இருந்தவாறே மீண்டும் கொண்டு வந்ததைத்தான் தனது சாதனையா கக் கூறி மோடி அரசின் நிலப் பறிப்புச் சட்டத்திற்கு தனது கட்சி அளித்த ஆதரவை நியாயப் படுத்தி நீண்ட அறிக்கை விட்டார் செய லலிதா.

மோடியும், செயலலிதாவும் ஏற் கெனவே பேசி வைத்துக் கொண்டு அற்பமான ஒன்றை ஆகப் பெரிய தாகக் காட்டி சனநாயக நாடகமாடு கின்றார்கள்.

மோடியின் வானொலி உரை யின் உச்சக்கட்ட பொய் ஒன்று உண்டு. இந்தப் பொய்யைத்தான் மிகப்பெரிய துருப்புச் சீட்டுப்போல மோடி பயன்படுத்தினார். மோடி கூறியது வருமாறு;

“2013ஆம் ஆண்டு இயற்றப் பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் மிகப்பெரிய குறை எது என்று சொல்கிறேன். அரசின் இரயில்வே, தேசிய நெடுஞ் சாலைகள், சுரங்கம் போன்ற அதிக அளவில் நிலம் தேவைப்படுகிற 13 துறைகளின் செயல்பாட்டுக் கூறுகள் அந்த சட்டவரம்பின் கீழ் கொண்டுவரப் படவில்லை. அதாவது, அந்தத் துறைகளுக்காக நிலம் கையகப்படுத்துகிற போது அதற்கான இழப்பீடு 120 ஆண்டு கள் பழமையான சட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்படும் என்பதுதான் இதன் பொருள். இப்போது சொல்லுங்கள் இது பெரிய குறை இல்லையா? தவறு இல்லையா? நாங்கள் புதிய சட்ட மசோதாவில் இதைச் சரி செய் திருக்கிறோம். இந்தத் துறைகளின் நடவடிக்கைகளை சட்ட வரம்புக் குள் கொண்டு வந்திருக்கிறோம். இதன் விளைவாக நிலங்களுக்கு நான்கு மடங்கு இழப்பீடு வழங்கப் படும்”என்றார் மோடி.

மோடியின் நுணுக்கமான மோசடிப் பேச்சு இது.

அரசோ அல்லது தனியாரோ தொழிலகம் நிறுவுவதற்காக அல்லது கட்டமைப்புத் திட்டங் களை நிறைவேற்றுவதற்காக நிலம் கையகப்படுத்தினால் நிலத்தை இழக்கும் உரிமையாளர்களுக்கு சந்தை விலையைப்போல் கிராமப் புறங்களில் 4 மடங்கும், நகர்ப் புறங்களில் 2 மடங்கும் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று முதன்மைச் சட்டம் கூறியது.

இதில் மோடி வழங்கியது புதிதாக எதுவும் இல்லை.

ஆனால் முதன்மைச் சட்டத் தில் பிரிவு 105 (3) கீழ்வருமாறு கூறுகிறது.

“இந்தச் சட்டம் செயலுக்கு வந்த ஓராண்டுக்குள் நடுவண் அர சானது முதல் அட்டவணையின் படியான இழப்பீடும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அட்டவணை யின் படியான மறு குடியமர்த்தல் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கை களும், நான்காவது அட்டவணை யில் உள்ள சட்டங்களுக்கும் பொருந்துமாறு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது இச்சட்டத்தின்படி வழங்கப்பட்ட இழப்பீடோ மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் செயல்பாடோ நீர்த்துப் போகாதவாறும் எந்த வகையிலும் குறைந்துவிடாதவாறும் செயல்படுத்த வேண்டும்”என்று கூறுகிறது.

அதாவது, 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டம் செயலுக்கு வந்த ஓராண்டுக்குள் இச் சட்டத்தின் நான்காவது அட்ட வணையில் கூறப்பட்டுள்ள சட்டங் களின்படி கையகப்படுத்தப்பட் டுள்ள நிலங்களுக்கும், 4 மடங்கு இழப்பீடு, வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அது மட்டுமின்றி இச்சட்டத்தில் கூறியவாறு நான்காவது அட்ட வணையில் உள்ள சட்டங்களின்படி கையகப்படுத்தப்படும் நிலங் களுக்கும் 80 விழுக்காடு உரிமை யாளர்களின் ஒப்புதல் என்ற நிபந்த னையும், சமூகத் தாக்க மதிப்பீடு என்ற நிபந்தனையும் பொருந்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

அதாவது, 31.12.2014-இன் முடிவில் நான்காவது அட்டவணை யில் உள்ள சட்டங்களையும், 2013ஆம் ஆண்டு நிலம் கையகப் படுத்துதல் சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறது.

இந்ந நான்காவது அட்டவ ணைச் சட்டங்கள் தான் மோடி கூறும் 13 சட்டங்கள்.

அவையாவன :

1. பழைமையான நினைவகங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் சட்டம், 1958.

2. அணு ஆற்றல் சட்டம், 1962

3. தாமோதர் பள்ளத்தாக்கு வாரியச் சட்டம், 1948.

4. இந்திய டிராம்வே சட்டம், 1886.

5. சுரங்கங்களுக்கான நிலம் கையகப்படுத்தல் சட்டம், 1885.

6. மெட்ரோ இரயில்வே கட்டுமானச் சட்டம், 1968.

7. தேசிய நெடுஞ்சாலைச் சட்டம், 1956.

8. பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் குழாய் அமைப்பு நிலம் எடுப்புச் சட்டம், 1962.

9. அசையாச் சொத்துகள் மீட்பு மற்றும் கையகப்படுத்தல் சட்டம், 1952.

10. நிலம் கையகப்படுத்தலின் போதுவெளியேற்றப்படும் மக்களை மீள் குடியமர்த்தும் சட்டம், 1948.

11. நிலக்கரி வளமுள்ள நிலப் பரப்புகளைக் கையகப்படுத்தல் சட்டம், 1957.

12. மின்சாரச் சட்டம், 2003.

13. இரயில்வேச் சட்டம், 1989.

மேற்கண்ட 13 சட்டங்களின்படி நிலம் இழப்போர் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டம் வழங்கிய வாய்ப்பைப் பெறாமல் இருந்தார்கள். எனவே இவ்வகை நிலம் இழப்போரையும், 2013 சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வந்து பாதுகாத்திட வேண்டும் என்பதுதான் இச்சட்டத்தின் விதி 105 (3) கூறும் கட்டளையாகும்.

இதனை 31.12.2014 -இன் முடிவில் செய்து முடிக்க வேண்டும் என்றும், இந்த விதி 105 (3) கூறுகிறது.

இதன்படியே மோடி அரசின் திருத்தச் சட்டம் மேற்சொன்ன 13 சட்டங்களையும் 1.1.2015 முதல் நிலம் கையகப்படுத்தல் சட்டவரம்புக்குள் கொண்டு வந்துள்ளது.

முதன்மைச் சட்டத்தில் கூறப் பட்டுள்ளவாறு மேற்கண்ட 13 சட்டங்களின்படி நிலம் இழப் போருக்கு 4 மடங்கு இழப்பீட்டை வழங்குவதைத் தவிர மோடியின் திருத்தச் சட்டம் புதிதாக எந்தச் சலுகையையும் வழங்கவில்லை. மோடி சொல்வது போல் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் குறையாக இதை கூற முடியாது.

மாறாக முதன்மைச் சட்டம் வழங்கிய மிக முக்கிய பாதுகாப்பை இந்த 13 சட்டங்களைப் பொருத்தும் மோடி அரசு நீக்கிவிட்டது. நில இழப்புக்கு உள்ளாகும் நில உரிமை யாளர்களில் 80 விழுக்காடு நிலத் தின் உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும், நிலம் கையகப் படுத்துதலால் ஏற்படும் பிற இழப்பு களை ஈடு செய்வதற்கான சமூக தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண் டும் என்ற முதன்மைச் சட்டத்தின் மிகப்பெரிய பாதுகாப்பு விதிகள் நீக்கப்பட்டப் பிறகே மேற்கண்ட 13 சட்டங்கள் முதன்மைச் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட் டுள்ளன. இது 2013ஆம் ஆண்டு முதன்மைச் சட்டத்தின் பிரிவு 105 (3)க்கு எதிரானது.

ஆனால், இதையே உழவர் களைப் பாதுகாக்க தனது அரசு மேற்கொண்ட மிகப்பெரிய புதிய நடவடிக்கை என்பது போல மோடி மோசடியாகப் பேசுகிறார்.

கால்வாய்கள் வெட்டுதல், புதிய நீர்நிலைகள் வெட்டுதல் போன்ற வேளாண்மை மேம்பாட்டுத் திட் டங்களுக்காக நிலம் கையகப்படுத்து வது குறித்து 2013-ஆம் ஆண்டு முதன்மைச் சட்டத்தில் கூறப்பட் டுள்ளதைத் தாண்டி புதிதாக எதையும் மோடி அரசின் திருத்தச் சட்டம் சேர்த்துவிடவில்லை.

உண்மை நிலை இவ்வாறு இருக்க வேளாண்மைக்கான நீர் மேம்பாட்டுத் திட்டங்களுக் காகவேதான் திருத்தச் சட்டம் கொண்டு வருவதாக வானொலி உரையில் மோடி கூறுவது அப் பட்டமான பொய்யாகும்.

இதுவரையிலும் இருந்த எந்தப் பிரதமரும் சொல்ல முன்வராத, ஏன், இட்லர் கூட, கோயபல்ஸ் கூட கூறத் தயங்கிய பொய்களை எந்தக் கூச்சநாச்சமுமின்றி பா.ச.க. பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில் அவிழ்த்து விட்டுள்ளார்.

மோடி அரசு கணித்ததைவிட வும், மிகக் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும் பெரு முதலாளி நிறுவனங்களுக்கு ஆதரவான தனது அரசின் நிலம் கையகப்படுத்தும் திருத்தச் சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்பதி லேயே இவ்வரசு குறியாக இருக் கிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவை யில் இத்திருத்தச் சட்டம் நிறை வேறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக பா.ச.க. தலைமை மதிப்பிட்டுள்ளது. ஆயி னும், எப்பாடு பட்டாவது இச் சட்டத்தை நிறைவேற்றிவிட வேண் டும் என்பதிலும் கவனமாக இருக் கிறது.

மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகளுக்கு இருக்கிற பெரும்பான் மையைப் பயன்படுத்தி இத்திருத்தச் சட்டவரைவை பொறுப்புக் குழு வின் ஆய்வுக்கு விட்டுவிட்டால் தனது நோக்கம் நிறைவேறாதே என்று மோடி அஞ்சுகிறார்.

எனவே, அவைத் தலைவர்கள் வழியாக நாடாளுமன்ற கூட்டத் தொடரை இடை நிறுத்தம் செய்து விட்டு, அந்த இடைவேளையில் வரும் ஏப்ரல் 6ஆம் நாளுக்குள் மீண்டும் புதிய அவசரச் சட்டமாக பிறப்பிக்கலாமா என்று மோடி அரசு சிந்திக்கிறது.

இந்தச் சதித் திட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஒப்புதல் அளித்து கையெழுத்திட மறுத்து அந்த அவசரச் சட்டத்தை திருப்பி அனுப் பிவிட்டால் என்ன செய்வது என்ற சிக்கல் மோடி அரசுக்கு உள்ளது.

அவ்வாறு குடியரசுத் தலைவர் கையப்பமிட மறுத்தால் 2ஆவது முறையும் மோடி அமைச்சரவை அந்த அவசரச் சட்டத்தை கையெ ழுத்துக்கு அனுப்பினால் கையெ ழுத்து இடுவதைத் தவிர குடியரசுத் தலைவருக்கு வேறு சட்டவாய்ப்பு இல்லை. ஆயினும், அரசியல் வகை யில் பெரிய அவப்பெயராக அது மாறும் என்ற அச்சம் மோடி அரசுக்கு உண்டு.

மாநிலங்களவையில் பொறுப் புக்குக் குழுவிற்கு விடப்படாமல் தோற்கடிக்கப் படுவதையே குறைந்த தீமையாக மோடி அரசு கருதுகிறது. ஏனெனில் அவ்வாறான சூழலில் அரிதாக நிகழும் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டித் தனக்குள்ள மொத்தப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிலப்பறிப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிடலாம் என்று மோடி அரசு கணக்குப் போடு கிறது.

ஆயினும், இவ்வாறான கூட்டுக் கூட்டத்தை குடியரசுத் தலைவர் தாம் கூட்ட முடியும். இதற்கு குடி யரசுத் தலைவர் ஒப்புதல் தருவாரா என்ற ஐயத்திலும் மோடி அரசு உள்ளது.

இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கும், வாய்ப்பில்லை யென்றால் 31.12.2014-இல் தான் பிறப்பித்த அவசரச்சட்டம் 2015 ஏப்ரல் 6-இல் காலாவதியாகுமாறு விட்டுவிட்டு நாடாளுமன்ற பட் ஜெட் கூட்டத் தொடர் மே மாதம் முடிந்த பிறகு மீண்டும் அவசரச் சட்டமாக பிறப்பிக்கலாம் என்ற நினைப்பிலும் மோடி அரசு உள்ள தாக ஏடுகள் கூறுகின்றன.

எப்படி இருப்பினும் நிலப்பறிப் புச் சட்டம் தொடர்பாக நரேந்திர மோடி அரசு ஓர் இக்கட்டில் இருக் கிறது. இதிலிருந்து மீள்வதற்கே மக்களைக் குழப்பும் நோக்கத்தோடு வானொலி மூலமாக வரலாறு காணாத பொய்யுரையை மோடி நிகழ்த்தினார்.

மோடியின் இந்த மோசடித் திட்டத்தை முறியடித்து நிலப் பறிப்புச் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்க மக்கள் இயக்கங்கள் ஆர்ப்பரித்து எழவேண்டும்.