மதிவண்ணன் நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசிய பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன், பெரியார் மீது ம.பொ.சி. யின் பேத்தி பரமேசுவரி என்பவர், இணையதளத்தில் அவதூறுகள் எழுதி வருவதை சுட்டிக்காட்டி பேசினார். அவரது உரையையும், அவதூறுக்கு மறுப்பாக‘குடிஅரசு’ பதிவுகளையும் (4 ஆம் பக்கம்) வெளியிடுகிறோம்.

ராவ் சாகிப் எல். சி. குருசாமி சட்டமேலவை உரைகள் மற்றும் மதிவண்ணன் எழுதிய, ‘உள்ஒதுக்கீடு’; ‘தொடரும் விவாதம்’; ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’, ‘ஏதிலியைத் தொடர்ந்துவரும் நிலா’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 15.3.2014 அன்று சென்னை அய்கப் அரங்கில் நடைபெற்றது. ‘கருப்புப் பிரதிகள்’ இந்த நூல்களை வெளியிட்டுள்ளது. நூல்களை ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் வெளியிட, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். வ. கீதா, புனித பாண்டியன் மற்றும் தோழர்கள் உரையாற்றினர். நீலகண்டன் தொகுத்து வழங்கினார். ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’நூலை அறிமுகம் செய்து பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த உரையில் ஒரு பகுதி:

இந்த தொகுப்பின் கட்டுரைகளை இலக்கியம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் இரண்டாகப் பிரிக்கலாம். ஆனால் இரண்டையும் தலித்திய பார்வையில் அலசுகிற இதன் ஆய்வு நோக்கில் ஓர் ஓர்மை இருப்பதை அவதானிக்க முடிகிறது. உதிரிகள் என்று சொல்லிக் கொள்கிற இலக்கியவாதிகள் பதிகிற செய்திகளை/படைப்புகளைத் தான் சில அல்லது பல ஆண்டுகள் கழித்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கையாள்கிறார்கள். உதாரணமாக நிறைய சொல்லலாம். ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம். பெங்களூர் குணா பேசுகிற தூயதமிழ்க் குருதி தேசியம் பல ஆண்டுகளாக உதிரி பிரதியாக யாரும் அதை பெரிதாக பொருட்படுத்தாத நிலையில் கிடந்தது. கோ.கேசவன், அ. மார்க்ஸ் போன்றோர் அவ்வப்போது அதற்கு எதிர்வினை புரிந்து வந்தனர். ஆனால், இப்போது முளைத்திருக்கும் சில தமிழ்த் தேசிய இயக்கங்கள், கட்சிகள் அவரின் கொள்கையை வெளிப்படையாக தங்கள் இயக்கக்கட்சி செயல் திட்டங்களாக முன் வைக்கின்றன. தங்கள் இதழ்களில் அவரது கட்டுரைகளுக்கு முன்னுரிமை தந்து வெளியிடுகின்றன. எனவே உதிரிகளின் பிரதி ஒருவகையில் இங்கு ஆவணமாக பதிவாகி வருகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தத் தொகுப்பின் தொடக்கமாக இருக்கும் “இலக்கியமும் இலக்கியம் சார்ந்தும்” எனும் கட்டுரையே இந்தத் தொகுப்பின் கட்டுரையை நாம் வாசிக்க வேண்டிய மனநிலையை தெளிவாக வரையறுத்து விடுகிறது.

சுந்தர ராமசாமியின் நாவல்கள் குறித்த கட்டுரை மிக முக்கியமானது. தமிழ் இலக்கியவெளியில் சுந்தர ராமசாமி ஒரு பிதாமகனாக உருவமைக்கப்படுகிற நிலையை நாம் காணமுடிகிறது. பாரதியார், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி என்று வரிசையை கட்டமைக்கிற வகையில் விழாக்கள் கொண்டாடப்படும் சூழலில் சுந்தர ராமசாமியின் நாவல்களை ஊடறுத்து அதில் மையமாக இருக்கும் இந்துத்துவா மனநிலையை வெளிப்படையாக உடைத்துப் போடுகிறது இக்கட்டுரை. புளிய மரத்தின் கதை, ‘ஜெ. ஜெ’ சில குறிப்புகள் நாவல்களை தலித்திய நோக்கில் ஆராய்ந்திருக்கிற இக்கட்டுரை, சு.ரா.வின் மொழி நடையில் மயங்கி அந்த நாவல்களை தமிழில் சிறந்த இலக்கியமாக கட்டமைக்க முயல்கிற முயற்சிக்கு பெரும் கலகக் குரலாக முன் நிற்கிறது. பிரேமிள். ராஜன் குறை-உள்ளிட்ட பலரும் சுந்தர ராமசாமியின் நாவல்களின் படைப்பு ரீதியிலான பலவீனங்களை விரிவாக எழுதியிருக்கின்றனர்.

சுந்தர ராமசாமி ஏன் இவ்வளவு தூரம் விமர்சிக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரை ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்திற்கு குலசாமியாக மாற்ற முயலும் அவரின் வாரிசுகளின் பேராசையை வெளிச்சமிட்டு காட்ட மட்டுமல்ல. . . பெரியாரை தமிழருக்கும் தலித்துக்கும் விரோதியாக்க முயல்கிற முயற்சிகளில் சுந்தர ராமசாமி ஆரம்பித்த ‘காலச் சுவடு’பத்திரிகைக்கும் முக்கிய இடமுண்டு. அந்த மாதிரியான முயற்சிகளுக்கு பெரியாரியவாதிகள் தக்க பதில் தந்து அடக்கி வைக்கும்போதெல்லாம், அந்தப் பத்திரிகை தூபம் போட்டு கிளப்பிவிடும். பெரியார் 125 சிறப்பிதழ் வெளியிட்டு, பெரியார் மீதான அவதூறை பொழிந்தது. தொடர்ந்த எதிர்வினையின் போது ரவிக்குமார் காலச்சுவட்டின் குரலாய் ஒரு இடத்தில் பதிகிறார். இவை எல்லாம் பெரியார் பற்றிய மீள் உரையாடலுக்குப் பயன்பட்டது என்று பெரியார் மீது பூசப்படுகிற அவதூறுக்கு முலாம் பூசினார்கள்.

பெரியார் பற்றி அவதூறை பொழிபவர்களுக்கு காலச்சுவட்டின் இதழிலும் மேடைகளிலும் பிரதான இடம் கிடைக்கிறது. ஸ்டாலின் ராஜாங்கம் தனது சமீபத்திய பேட்டியில் இன்றைய ஊடகங்கள் பற்றி கேட்கும்போது அவர் பாராட்டும் ஒரே பத்திரிகை காலச்சுவடுதான். தலித் பிரச்சினைகள் குறித்து தலித்துகளாலே நடத்தப்படும் இதழ்கள்கூட அவருக்கு நினைவில் இல்லை. மேலும் காலச்சுவட்டில் தான் எழுதுவது தலித்துகள் கருத்தியல் தளத்தில் நடத்திய போராட்டத்தின் வெற்றி என்றும், காலச்சுவட்டில் தான் எழுதும் கருத்துகளை வேறெந்த இதழிலும் எழுத முடியாது என்றும் கூறுகிறார். இது மட்டுமல்லாது “தமிழகத்தில் மனுதர்மவிதி செயற்பட்டதா என்பதும் எவ்விடத்தில் என்பதும் தெரியவில்லை” என்கிறார். இப்படி பெரியார் எதிர்ப்பாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நன்றாக ‘இந்துத்துவா’அறிந்து வைத்திருக்கிறது.

ம.பொ.சி.யின் பேத்தி

ம.பொ.சி.யின் பேத்தியான பரமேஸ்வரி ஒரு கட்டுரையில், ‘பெண் ஏன் அடிமையானாள்’என்ற நூல் பெரியாரால் எழுதப்படவில்லை என்று நிறுவ முயல்கிறார். பெண்கள் மாநாடுகூட்டி, ‘பெரியார்’ என்று பட்டம் கொடுத்ததுகூட ஏதோ செவிவழி கதைதானாம்.
“ஈ. வெ. ரா. பெரியாருக்குப் ‘பெரியார்’ என்ற பட்டத்தைப் பெண்களே செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் தந்ததாக செவி வழி கதை உண்டு. தலித் ஆதரவாளரான மீனாம்பாள் கொடுத்தது என்றும், தர்மாம்பாள் கொடுத்த பட்டம் என்றும்கூடப் பாட பேதங்கள் இதில் உண்டு. ஒருநூற்றாண்டுகூட ஆகாத ஒரு செய்தியை நம்மால் உறுதி செய்து கொள்ள முடியவில்லை” என்கிறார். ஆனால், “சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் 1938இல் தீர்மானமாக இயற்றப்பட்ட செய்தி ‘குடிஅரசு’ இதழில் வெளி வந்திருப்பதை இணையத்தில் தேடினால் அரை நிமிடத்தில் காண முடியும். இந்த அரை நிமிடத் தேடலைக்கூட செய்யாமல் செவிவழிக் கதை என்கிறர் ம.பொ.சி. பேத்தியான பரமேஸ்வரி.

மேலும் அவரது கட்டுரையில், “திராவிடர் தலைவர்களுக்குத் தங்களுக்குத் தாங்களே இப்படி பட்டங்களைச் சூட்டிக்கொள்ளும் ஒரு மரபு உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் சம்பத் இப்படி... இதன் முன்னோட்டம் ஈ. வெ. ரா. பெரியாரிலிருந்து தொடங்குகிறது போலும். . . ” என்று கூறி திராவிடம் மீதுள்ள தன் வெறுப்பை நீட்டி முழக்குகிறார். ம.பொ.சி.யின் துரோகப் பணி தொடர்கிறது என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?

ஸ்டாலின் ராஜாங்கத்தை பேட்டி எடுத்ததும் பரமேஸ்வரியே. அதில் திரும்ப திரும்ப பெரியார் பற்றியும் திராவிட இயக்கங்கள் பற்றியுமே கேள்விகளாக கேட்கப்படுகின்றன. தனக்கு தேவையான பதிலுக்கான கேள்விகளாகவே அவை அமைந்திருக்கின்றன. ம.பொ.சி.யின் இந்துத்துவா பற்றை தனியே சொல்ல வேண்டுமா என்ன?

பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒருவரல்ல. ஆனால், பெரியார் மீதான விமர்சனங்களைத் தலித்துகள் சார்பாக முன் வைக்கப்பட்டாலும் அதனைக் கொண்டாடி மகிழ்வது யார்? என்பதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த இடத்தில் மதிவண்ணன் இந்த நூலை சமர்ப்பித்திருக்கிற பகுதியை நினைவுக் கூர்வது முக்கியமானது.

“ஊர்மேயப் பிறந்தவர்களின் / அவிசாரிப் பட்டத்திற்கு அஞ்சாது / தன் வாழ்நாளை / ஒருவேலைத் திட்டமாக நிறைவேற்றிய துறவியும் / தேவதையுமான / மணியம்மைக்கு. . . ” என்று கூறி நூலை சமர்ப்பித்துள்ளார். இதில் துறவி, தேவதை என்கிற சொற்களுக்கான பொருளை அப்படியே பொருத்திக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

தி.பரமேஸ்வரியின் முகநூல் பகிர்வொன்றை இங்கு சுட்டுவது பொருத்தமாக இருக்கும். “கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதளவாவது அறிவு மனித உணர்ச்சி -தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா?” என்று கம்பீரமாகக் கேள்வி போடுகிறார் ஈ.வெ.ரா. உணர்ச்சிக்காக அல்லாமல் உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள்தான். ஊரார் பழிக்கும் நிலையிலும் உணர்ச்சியற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானமற்றவள்தான்! இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈ.வெ.ரா. எப்போதோ எங்கேயோ சந்தித்து விட்டார் போலும்! அவளை நினைவில் வைத்துக் கொண்டு கண்ணகியைச் சாடுகிறார். (ம. பொ. சிவஞானம் எழுதிய ‘இலக்கியத்தின் எதிரிகள்’ நூல்)

காசுக்காக பெரியாரை மணியம்மை திருமணம் செய்து கொண்டார் எனும் தொனியை இலக்கிய ரசம் சொட்ட ம.பொ.சி. எழுதியிருக்கும் இந்தக் குறிப்பை தன் முகநூலில் பதிகிற கட்டுரையாளர்தான் மணியம்மைக்கு 27 வயதில் 70 வயது பெரியாருடன் திருமணம் நடந்தது பற்றி கவலைப்படுகிறார். இதில் பொருந்தா திருமணம் குறித்த அக்கறையோ, பெண்ணியம் சார்ந்த நோக்கமோ அவர் எழுதுவதில் இல்லை. பெரியார் மீதான எதிர்ப்பு, திராவிட இயக்க ஒவ்வாமையோடுதான் எழுதுவதாக நாம் புரிந்து கொள்ள முடியும். என்ன நோக்கத்திற்காக எழுதப்படுகிறது என்பதை முதன்மையாக்கி பார்ப்பதுதான் பெரியார் நமக்கு கற்றுக்கொடுத்த பாடமாக நான் கருதுகிறேன்.

Pin It