வாக்குப் பதிவின் முதல் கட்டம் முடிந்த பிறகு, தேர்தல் அறிக்கையை ஒரு வழியாகவெளியிட்டு விட்டது பா. ஜ. க, . அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் இராமன்கோயில் கட்டப் போவதாகவும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைச் சட்டமான370 ஆவது பிரிவை நீக்கப் போவதாகவும், சிறுபான்மையினரின் மதச் சட்டங்களை நீக்கி, ஒரே சிவில் சட்டம் கொண்டு வரவிருப்பதாகவும் கூறும் தேர்தல்- இட ஒதுக்கீடுகொள்கையிலும் கைவைத்து விட்டது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதியடிப்படையிலான இடஒதுக்கீடு முறைக்கு ‘சமாதி’ கட்டிவிட்டு அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கக்கூடிய ஒரு முறையைக் கொண்டு வரப் போவதாக கூறுகிறது. இது குறித்து பா.ஜ.க. வின் பேச்சாளர் நிர்மலா சீத்தாராமன், இடஒதுக்கீடு முறைகளை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மிகவும் பின்தங்கியுள்ள 100 மாவட்டங்களை அடையாளம் கண்டு ஏனைய மாவட்டங்களோடு தரம் உயர்த்தும் முறையைக் கொண்டுவருவதாக இடஒதுக்கீட்டு முறை இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். இடஒதுக்கீட்டுக்கான சமூகக் காரணிகளை முற்றிலும் புறந்தள்ளி விட்டதாகவே தெரிகிறது.

2009 ஆம் ஆண்டு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு தொடரும்; அதேநேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி யோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அதற்கு நேர்மாறாக - ‘பார்ப்பனர் குரலை’ முன்வைத்திருக் கிறது. அயோத்தியில் ராமன் கோயில் கட்டும் பிரச்சினை நீதிமன்றத்தில்இருக்கும்போது, கோயிலைக் கட்டும் மதவெறி செயல்திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது, அந்த பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, மக்கள் கருத்தை அறிந்த பிறகே இந்தியாவுடன் இணைப்பது குறித்து இறுதிமுடிவெடுக்கப்படும் என்று இந்திய அரசு உறுதி தந்தது. 370ஆவது சிறப்பு உரிமைச் சட்டப்பிரிவு, அவர்களின் ‘தனித்துவம்’ கருதியே அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இப்போது அந்த உரிமையையும் பறிக்கப் போவதாக தேர்தல் அறிக்கை கூறுகிறது. பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்துவிடுமேயானால், நாட்டில் கலவரங்களும் குழப்பங்களும் தலைதூக்கிநிற்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே இந்த தேர்தல் அறிக்கை வெளிவந்திருக்கிறது.

மோடியை பிரதமராக்க - பா.ஜ.க. வுடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகள், இந்த பார்ப்பன இந்துத்துவா செயல் திட்டங்கள் குறித்தும் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பான கொள்கைகள் குறித்தும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். பா.ஜ.க. வின் தேர்தல் அறிக்கை எப்போதுமே ஆர். எஸ். எஸ். மதவாத கருத்துகளையே பிரதிபலித்து வருகிறது. 1998 ஆம்ஆண்டு அதன் தேர்தல் அறிக்கை “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத் தத்துவம் ;அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தில் சில பிரிவினரை திருப்திப்படுத்தவும், அவர்களை வாக்கு வங்கிகளாக மாற்றி திருப்திப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்” என்று கூறியதோடு இந்தியாவில் பன்முகத்தன்மை ஏதும் கிடையாது. “ஒரே நாடு; ஒரே மக்கள்; ஒரே தேசம்” என்று முழங்கியது.

‘இந்துத்துவ பார்ப்பன’ கொள்கைகளை இப்படி வெளிப்படையாக அறிவிக்காமல், ரகசியமாகவே செயல்படுத்தலாம் என்று பா.ஜ.க. வில் ஒரு அணி கூறுகிறது. முரளிமனோகர் ஜோஷி போன்ற கடும் போக்குக் கொண்ட பார்ப்பன தீவிரவாதிகள், வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு காரணமே கட்சிக்குள் நடந்த இந்தப் போராட்டம்தான். நம்மைப் பொறுத்த வரையில் வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளும் பிரிவையே வரவேற்கப்படக் கூடியவர்களாக கருதுகிறோம்.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது; அபாயச் சங்கு ஊதப்பட்டுவிட்டது; தமிழ்நாட்டில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு தமிழர்கள் வந்தாக வேண்டும்!

Pin It