‘பன்னாட்டு விசாரணை’ குறித்த பல்வேறு தகவல்களை எளிமையாக விளக்குகிறது, இக்கட்டுரை.

ஒரு நாடு தனது நாட்டில் நடக்கும் பரவலான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க முடியாத நிலை ஏற்படும்போது, அங்கு பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடும் கடமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு. எனவே நியூயார்க்கில் உள்ள அய்.நா. பாதுகாப்புச் சபை, ஜெனீவாவில் அய்.நா. மனித உரிமைப் பேரவை ஆகிய அமைப்புகள் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றன.

இவையன்றி அய்.நா. பொதுச் செயலர் /அய்.நா. மனித உரிமை ஆணையர், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்ற சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றனர். பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளே அதிக அதிகாரமிக்கதாகக் கருதப்படுகின்றன.

 பன்னாட்டு விசாரணை எவ்வாறு நடக்கும்?

அய்.நா.வின் சார்பில் நடத்தப்படும் பன்னாட்டு விசாரணைக்கு என குறிப்பிட்ட ஒரு வடிவம் ஏதும் இல்லை. ஒரு நாட்டில் நடந்து முடிந்த ஒரு நிகழ்வு அல்லது தற்போதும் தொடரும் நிகழ்வுகள் குறித்த உண்மை நிலையை அறியும் நோக்கிலேயே பன்னாட்டு விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன.

பன்னாட்டு சட்டங்களை மனித உரிமைச் சட்டங்கள் என்றும் பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்கள் என்றும் பிரிக்கின்றனர். இவற்றில் ஏதேனும் ஒன்று மீறப்பட்டது குறித்தோ, இரண்டும் மீறப்பட்டது குறித்தோ சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு விசாரணை ஆணையம் அமைப்பதற்கான தீர்மானங்களிலேயே அவற்றின் நோக்கமும் வரையறுக்கப்படுகிறது. பொதுவாக,

• உண்மையிலேயே சர்வதேச சட்டம் மீறப் பட்டதா?

• திட்டமிட்டும் பரவலாகவும் மனித மீறல்கள் நடத்தப்பட்டனவா?

• குற்ற நிகழ்வுகளில் அரசாங்கத்தின் பங்களிப்பு என்ன?

• குற்ற நிகழ்வுகளின் பின்னணி என்ன? சூழல் என்ன?

என பலவிதமான குற்றப் பின்னணிகளையும் கண்டு பிடிக்கும் நோக்கில் சர்வதேச விசாரணை நடத்தப்படு கிறது. குறிப்பாக பொறுப்புடைமையை நிலை நாட்டுதல். அதாவது குற்றச் செயல்களைக் கண் டறிந்து அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படு வதை உறுதி செய்வதே சர்வதேச விசாரணை ஆணையத்தின் முதன்மை நோக்கமாகும்.

மொத்தத்தில் பெரிய அளவில் நடைபெற்ற குற்றச் செயல்கள் குறித்து ‘நடந்தது நடந்தபடி’ அதிகாரப் பூர்வமாக ஆவணப்படுத்துவதுதான் சர்வதேச விசாரணையில் கிடைக்கும் முதன்மை பலன் ஆகும்.

குற்றம் இழைக்கப்பட்ட நாடுகளில் ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் சர்வதேச விசாரணையை குற்றமிழைத்த நாடுகளின் அரசுகள் அனுமதிக்கப் படுகின்றன. மாறாக, குற்றத்தில் ஈடுபட்டவர்களே ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்திருந்தால் அவை சர்வதேச விசாரணையை ஏற்படுத்துவதில்லை. அத்தகைய விசாரணை ஆணையத்தை நாட்டுக்குள் அனுமதிப்பதும் இல்லை.

ஆனாலும், நாட்டுக்குள் நுழைய முடியாது என்பதே விசாரணை நடத்த தடையாக இருப்ப தில்லை. ஒரு நாட்டில் நடக்கும் குற்றத்தை பார்த்த சாட்சிகளும், ஆதாரங்களும் வெளிநாடுகளில் பரவிக் கிடப்பதாலும், அறிவியல் நுட்பங்களாலும் எந்த ஒரு நாட்டிற்கு உள்ளேயும் நுழையாமல் அந்த நாட்டில் நடந்தக் குற்றங்களை மதிப்பிட முடியும். சிரியா, வடகொரியா போன்ற நாடுகளுக்காக அமைக்கப் பட்ட விசாரணை ஆணையங்கள் அந்த நாடுகளுக் குள் நுழையாமலேயே விசாரணை நடத்தியுள்ளன.

சர்வதேச விசாரணையின் பலன் என்ன?

உள்ளது உள்ளபடி உண்மைகளை ஆவணப் படுத்தி வெளியுலகிற்கு சொல்வதுதான் சர்வதேச விசாரணை ஆணையத்தின் பணியாகும். அந்த உண்மையின் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அய்.நா. அவை மற்றும் உலக நாடுகள் முடிவு செய்ய வேண்டும்.

உண்மை இரண்டு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக நீதி, அடுத்தது நல்லிணக்கம், குற்றங்கள் கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக் கப்படுவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை ஈடு செய்யப்படுவதும், குற்றமிழைத்தோர் அதனை உணர்ந்து வருந்துவதும் நீதியின் வடிவங்களாகும்.

குற்றத்தால் பாதிப்படைந்தோர் குற்றம் இழைத்தவர்களை மன்னிக்க முன்வருவதும், குற்றம் இழைத்தோர் தமது தவறுகளை ஒப்புக் கொண்டு வருந்துவதும் அதன் தொடர்ச்சியாக இரு தரப்புக்கும் பலனளிக்கும் எதிர்காலத்தைக் கட்டமைப்பதும் நல்லிணக்கத்தின் அடையாளமாகும்.

இந்த வழி முறைகளில் ‘நீதி’ மிக முதன்மையானது. நீதியை விட்டுவிட்டு நல்லிணக்கத்தை மட்டும் பேசுவது, நடந்த தவறுகளை மூடி மறைத்துவிட்டு எதிர்காலத்தை மட்டும் பேசுவோம் என்கிற ஆபத்தான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.

எனவே, ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத வார்த்தைகளாக ‘உண்மை, நீதி, நல்லிணக்கம்’ என்கிற பட்டியலில் உண்மையே முதலில் வருகிறது. அந்த உண்மையைக் கண்டறிவதே சர்வதேச விசாரணை யின் பலனாகும். நீதி மற்றும் நல்லிணக்கம் நோக்கியப் பாதையில் இதுவே முதல்படி.

விசாரணை ஆணையம்-தீர்ப்பாயம்

விசாரணை ஆணையமும் தீர்ப்பாயமும் ஒன்றா? இல்லை. ‘பன்னாட்டு விசாரணை ஆணையம்’ என்பது இலங்கையில் 2008-2009 ஆம் ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அதிகாரப்பூர்வமாக வெளிக் கொண்டு வரும் முயற்சி. இதற்கு மாறாக ‘பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்’ என்பது அந்தக் குற்றங்களை விசாரித்து குற்றவாளி குற்றவாளி களுக்குத் தீர்ப்பளிக்கும் நடைமுறை. இவை இரண்டும் ஒன்றல்ல.

பன்னாட்டு விசாரணை ஆணையம் தனி மனித குற்றங்களை நிரூபிக்க முயற்சிக்காது. மாறாக, அரசின் குற்றங்களை விசாரிக்கும். நடந்தது என்ன, அரசாங்கம் செய்த குற்றம் என்ன, அரசாங்கம் எவ்வாறு கடமை தவறியது என பரந்துபட்ட அளவில் விசாரணை நடத்தும். குற்றமிழைத்த தனிமனிதர்களின் தோராயமான பட்டியலையும் கண்டறிய முடியும். இந்த விசாரணை சில மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும். பன்னாட்டு விசாரணை ஆணைய விசாரணையின் போது குற்றங்கள் மற்றும் விதிமீறல்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் நம்பத் தகுந்த அளவில் இருந்தாலே போதும். விசாரணையின் முடிவில் யாருக்கும் தண்டனை வழங்கப்படாது. மாறாக, பரிந்துரைகள் அளிக்கப்படும்.

ஆனால், பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் என்பது அரசின் குற்றங்களை விசாரிக்காது. மாறாக, தனிமனித குற்றங்களை விசாரிக்கும். இந்த விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகும். பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாய விசாரணையின்போது குற்றங்களை நிரூபிப் பதற்கான ஆதாரங்கள் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டதாக இருக்க வேண்டும். விசாரணையின் முடிவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.

ஜெனீவாவில் முன் வைக்கப்படுவது ஆணையமா? தீர்ப்பாயமா? இலங்கை அரசின் குற்றங்களை முதன்மையாக விசாரிக்கும் வகையிலான ஒரு பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையே ஜெனீவாவில் முன் வைக்கப்படுகிறது. ‘பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்’ என்கிற கோரிக்கை அங்கு எழுப்பப்பட வில்லை. அப்படி ஒரு தீர்ப்பாயத்தை அமைக்கும் அதிகாரம் ஆய்நா. மனித உரிமை பேரவைக்கு இருப்பதாகவும் தெரியவில்லை.

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த பன்னாட்டு சட்ட விதி மீறல்கள் குறித்து இலங்கை அரசு ஒரு நியாயமான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்தி, குற்றமிழைத்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை தண்டிக்க வேண்டும் என்பதே பன்னாட்டு சமூகத்தின் கோரிக்கை. ஆனால், அத்தகைய ஒரு நியாயமான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என்பதை சர்வதேச சமூகம் உணரத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு நடந்த அப்பட்டமான விதிமீறல்களை அடையாளம் காண்பதற்கான முன் முயற்சியாகவே மனித உரிமைப் பேரவையில் ‘பன்னாட்டு விசாரணை’ என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

உண்மையை அறியும் முயற்சி

எனவே ‘பன்னாட்டு விசாரணை ஆணையம்’ என்கிற கோரிக்கை உண்மையை அறிவதற்கான முயற்சி ஆகும். இது குற்றம் செய்தவர்களை உடனடியாகத் தண்டிப்பதற்கான முயற்சி அல்ல. பன்னாட்டு விசாரணை ஆணையத்தின் மூலம் இலங்கையில் பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதன் தொடர்ச்சியாக பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்கப்படும் வாய்ப்பு உண்டு.

பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை யார் அமைப்பார்கள்? முதலில் இலங்கையில் பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டதை அய்.நா. மனித உரிமைப் பேரவையால் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு அடுத்ததாக அந்த சட்ட மீறல்களில் ஈடுபட்டோரைக் கண்டறிந்து, தண்டிக்கும் கடமையை இலங்கை அரசு மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என்று உலகம் நம்ப வேண்டும். அப்படிப்பட்ட சூழலில், குற்றவாளி களைக் கண்டறிந்து தண்டிக்கும் கடமை சர்வதேச சமூகத்துக்கு வரும்.

இவ்வாறு, ‘இலங்கையில் கொடும் குற்றங்கள் நடந்தன’ என்றும், அந்தக் குற்றங்களுக்கு ‘இலங்கை அரசின் மூலம் நீதி கிடைக்காது’ என்றும் தெளிவான முடிவுக்கு சர்வதேச சமூகம் வரும் நிலையில் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை அய்.நா. பாதுகாப்பு அவை அமைக்கும்.

எனவே, பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் இடம் ஜெனீவா அல்ல. நியூயார்க்கில் அமைந்துள்ள அய்.நா. பாதுகாப்பு அவைதான் அதனை அமைக்கலாம். அல்லது, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கும் இதற்கான விசாரணை நடத்த அய்.நா. பாதுகாப்பு அவை பரிந்துரைக்கலாம்.

நேரடியாக இப்போதே குற்றவியல் தீர்ப்பா யத்துக்கு பரிந்துரைக்கக் கூடாதா என்ற கேள்வி எழலாம். குற்றவியல் தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என இப்போதைய நிலையிலேயே அய்.நா. மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்யுமானால் அதனை அய்.நா. பாதுகாப்பு அவை ஏற்காது. ஏனெனில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுளின் ஆதரவு இல்லாமல் அய்.நா. பாதுகாப்பு அவையில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது. அந்த நாடுகள் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளன. இலங்கை மீது பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்கும் தீர்மானத்தை மிக எளிதாக தோற்கடித்து விடுவார்கள்.

பன்னாட்டு விசாரணை ஆணையத்தால் என்ன பலன்?

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, பன்னாட்டு விசாரணை ஆணையத்தின் மூலம் இலங்கையில் பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதன் தொடர்ச்சியாக பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்கப்படும் வாய்ப்பு உண்டு. ஏனெனில், சர்வதேச சமூகத்தால் உண்மை ஏற்கப்பட்ட பின்னர், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தொடர்ந்து இலங்கையைக் காப்பாற்ற முடியாது.

அதுமட்டுமல்லாமல், பன்னாட்டு விசாரணை ஆணையம் குற்றத்தை உறுதி செய்தாலே, இலங்கை யின் தலைவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களாக ஆகி விடுவார்கள். அவர்கள் உலகின் பிற நாடுகளுக்கு பயணம் செல்வதற்கான தடையும், பொருளாதாரத் தடையும் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டதற்கான குற்றச்சாட்டுகளை பன்னாட்டு விசாரணை ஆணையம் உறுதி செய்தால் குற்றவாளிகளை உலகின் எந்த ஒரு நாட்டின் நீதிமன்றமும் விசாரிக்க முடியும். எனவே, ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் உலகின் எந்த பகுதி நீதிமன்றத்தாலும் குற்றவாளி களாக தேடப்படும் வாய்ப்பு ஏற்படும்.

எனவே, அய்.நா. மனித உரிமைப் பேரவையால் ஒரு ‘பன்னாட்டு விசாரணை ஆணையம்’ அமைக்கப் பட்டால் அது ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான முதல்படியாக அமையும்.

Pin It