மொழியும் நாடும் இருகண்கள் என்பர் ஆன்றோர். இங்கு மொழி என்பது, அந்நாட்டின் தேசிய இனத்தின் தாய்மொழியைக் குறிப்பதாகும். ஒரு நாட்டை அடக்கி ஆள வேண்டுமாயின், அந்நாட்டின் தாய்மொழியை அழிக்க வேண்டும் என்பது வரலாறு நெடுகிலும் ஆதிக் கச் சக்திகள் கையாண்டுவரும் நடைமுறையாகும்.

மத்திய காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்குமேலாக, மதத்துக்குரிய ‘புனிதமொழி’ என்பது மத ஆதிக்கத் துக்கு மட்டுமின்றி, ஆட்சியில் இருந்த ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துக்கும் ஓர் ஒடுக்குமுறை ஆயுதமாகப் பயன்பட்டது. இது நிலப்பிரபுத்துவத்தை நிலைக்க வைப்பதற்கும் ஊன்றுகோலாக உதவியது. கிறித்துவ மதத்தின் புனிதமொழியாக இலத்தீன் மொழி திகழ்ந் தது. ஆனால் அய்ரோப்பிய நாடுகளில் 16-17ஆம் நூற்றாண்டுகளில் முதலாளியம் தன் வளர்ச்சியின் தேவையின் பொருட்டு தேச அரசுகளை அமைக்க முனைந்தது. அதற்காகத் தேசிய மொழிகளை ஊக்குவித்தது. அதன் விளைவாக, கிறித்துவ தேவாலயங்களில் இலத்தீன் மொழியில் மட்டுமே படிக்கப்பட்ட விவிலிய நூல், அந்தந்த நாடுகளின் தேசிய மொழிகளில் படிக்கப்படும் நிலை உருவானது. மேலும் அய்ரோப்பிய நாடுகளில், உயர்கல்வி வரையில் தேசிய மொழி வாயிலாகவே பயிலும் நிலை இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது.

ஆனால் பல்வேறு தேசிய இன மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் இந்தியாவில் இந்து மதத்தின் புனிதமொழியான - ‘தேவபாஷையான’ சமற்கிருதமே கோயில்களில் வழிபாட்டு மொழியாக - இல்லங்களில் புரோகிதச் சடங்கு மொழியாக இன்றுவரை - இரண்டா யிரமாண்டுகளாக நீடிக்கிறது. 1200களில் தில்லி சுல்தான்கள் ஆட்சி முதல் அவுரங்கசீப் காலம் வரை பாரசீக மொழியே ஆட்சி மொழியாக இருந்தது. அதன்பின் பிரித்தானிய ஆட்சியில் இந்தியா முழு வதும் ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழி யாகவும் இருந்தது. 1937 தேர்தலுக்குப்பின் இந்திய மாகாணங்களில் காங்கிரசுக் கட்சியின் ஆட்சி அமைந்த போதுதான், உயர்நிலைப் பள்ளிவரையில் பயிற்று மொழியாக அந்தந்த தேசிய இன மக்களின் தாய் மொழிகள் ஆக்கப்பட்டன.

1950 சனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில், இந்தி மட்டுமே இந்திய அரசின் அலுவல் மொழியாக (Official Language) இருக்கும்; 15 ஆண்டுகள் வரை (1965 வரை) ஆங் கிலமும் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. தமிழகத்தில் 1960களில் பேரெழுச்சி யுடன் மூண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று நடுவண் அரசு அறிவித்தது.

1967இல் அறிஞர் அண்ணாதுரை தலைமையில் அமைந்த தமிழக அரசு, பள்ளிகளில் இந்திக்கு இடமில்லை என்ற நிலையை உண்டாக்கியது. தமிழ் உணர்வை மூல தனமாகக் கொண்டு ஆட்சியில் அமர்ந்த தி.மு.க.வோ, அதன்பின் மாறிமாறி அமைந்த அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளோ தமிழை உயர்கல்வி மொழியாக்கிட உருப் படியாக எதையும் செய்யவில்லை. மாறாக 1980 முதல் பள்ளிக் கல்வியில் ஆங்கிலம் பயிற்றுமொழி யாவதைப் போட்டி போட்டுக் கொண்டு ஊக்குவித்தன. அதனால் ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்ட தனியார் பதின்நிலைப் (மெட்ரிக்) பள்ளிகள் பெருகின.

1991 முதல் தாராளமயம், தனியார் மயம், உலக மயம் என்பது நடுவண் அரசின், மாநில அரசுகளின் கொள்கையாக வரித்துக் கொள்ளப்பட்டதால், ஆங்கில வழியிலான தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் புற்றீசல் போல் தோன்றின. கல்வி வணிகச்சரக்கானது. கொழுத்த இலாபம் குவிக்கும் தொழிலாக வளர்ந்தது. கருப்புப் பண முதலைகளெல்லாம் கல்வி வள்ளல்களா யினர்.

திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில், ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகப் படிப்பது என்பது மூன்றாம் வகுப்பிலிருந்து என்று மாற்றப்பட்டது. அதன்பின் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக படிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது. 2013-14ஆம் கல்வி ஆண்டு முதல், முதல் வகுப்பிலிருந்தே அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழிப் பிரிவு தொடங்கிடத் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் உலகை ஆண்டதுபோல், ஆங்கில வழியில் படித்தால் உலகை வெல்லலாம்; பணத்தைக் குவிக்கலாம் என்கிற மாயையை, ஆளும் வர்க்கங்களும் பன்னாட்டு நிறுவனங்களும், கடந்த இருபது ஆண்டு களில் ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் ஊட்டி வளர்த்து நிலைபெறச் செய்துள்ளன. வெற்றிடத்தில் காற்று விசை யுடன் புகும் என்பதுபோல, உலகமயக் கொள்கையின் படி, அரசுகள் மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பி லிருந்து விலகவிலக, ஆங்கில வழியிலான தனியார் கல்வி வணிகப் பள்ளிகள் அதிகமாகிக் கொண்டே வரு கின்றன. தமிழ்நாட்டில் தற்போது முதல் வகுப்பி லிருந்து பனிரெண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர் களில் 60 விழுக்காட்டினர் மட்டுமே தமிழ்வழியில் பயில்கின்றனர். 40 விழுக்காட்டினர் ஆங்கில வழியில் படிக்கின்றனர். 2020ஆம் ஆண்டில் தமிழ் வழியில் படிப்போர் 40 விழுக்காடாகக் குறைந்துவிடுவர் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஆகவேதான் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் கல்வி, அறிவியல் மற்றும் பண் பாட்டுக்கான அமைப்பு (யுனெ°கோ) வெளியிட்டுள்ள வேகமாக அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழ்மொழியும் இடம்பெற்றுள்ளது.

1996 சட்டமன்றத் தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. அப்போது தமிழ் உணர்வாளர்கள் நூறு பேர், அய்ந்தாம் வகுப்பு வரை தமிழே பயிற்று மொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்பதை வலி யுறுத்திச் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, தமிழ் அல்லது தாய்மொழி அய்ந்தாம் வகுப்பு வரை பயிற்று மொழியாக இருக்கும் என்று அரசாணை பிறப்பித்தார். இதை எதிர்த்துத் தனியார் கல்விக் கொள்ளையர்களும், தமிழினத் துரோகிகளும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த னர். சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றாமல், அரசின் ஆணையாக அறிவிக்கப்பட்டதால் உயர்நீதி மன்றம் இந்த ஆணைக்குத் தடைவிதித்தது. தமிழ் நாட்டு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ‘சட்டி சுட்டதடா, கைவிட்டதடா’ என்பதுபோல் தி.மு.க. ஆட்சியும் அ.தி.மு.க. ஆட்சியும் அய்ந்தாம் வகுப்பு வரை தமிழே பயிற்று மொழி என்பதை மேற் கொண்டு முன்னெடுக்காமல் கைவிட்டுவிட்டன.

கர்நாடக மாநில அரசு, 1994ஆம் ஆண்டே நான் காம் வகுப்புவரை அரசுப் பள்ளிகள், அரசின் நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளிலும் கன்னட மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது; அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் மத்திய இடைநிலைக் கல்விப் பாடத்திட்டத்தைப் (சி.பி.எ°.சி.) பின்பற்றும் தனியார் பள்ளிகளிலும் நான்காம் வகுப்பு வரை ஒரு மொழிப் பாடமாகக் கன்னடத்தைக் கட் டாயம் கற்கும் நிலை ஏற்பட்டது. அரசின் ஆணை யைப் பின்பற்றாத சில பள்ளிகளை அரசு மூடியது.

ஆயினும் சில ஆண்டுகளுக்குப்பின் தனியார் கல்வி முதலாளிகள், நான்காம் வகுப்பு வரையில் கன் னடமே பயிற்று மொழி என்னும் அரசின் கொள்கை யை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் தனர். உயர்நீதிமன்ற முழுஅமர்வு (Full Bench) அரசின் ஆணை சரி என்று தீர்ப்பளித்தது. ஆயினும் அரசின் நிதி உதவி பெறாத - தனியார் பள்ளிகளுக்கு அரசின் இந்த ஆணை பொருந்தாது என்று கூறி விட்டது. ஆயினும் தனியார் கல்வி முதலாளிகள், மதச் சிறுபான்மையினரையும், மொழிச் சிறுபான்மையி னரையும் துணையாகச் சேர்த்துக் கொண்டு நான்காம் வகுப்பு வரை கன்னடமே பயிற்று மொழி என்ற அரசின் கொள்கையை ஒழித்திட உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கள் பி. சதாசிவம், ரஞ்சன்கோகி இருவரும் 2013 சூலை மாதம் அளித்த தீர்ப்பில், “எதிர்கால இளைஞர்களாக உரு வாகும் சிறுவர்களின் தொடக்கக் கல்வி என்பது மிக முதன்மையானதோர் கட்டமாகும். எனவே அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு (Constitutional Bench) இதை விசாரிப்பதே பொருத்தம்” என்று கூறியுள்ள னர். மேலும் இவ்விரு நீதிபதிகள், “எந்த மொழியில் படிப்பது மாணவனுக்கு இயல்பானதாக இருக்கும்? இந்த மொழியைத் தீர்மானிப்பது மாணவனா? அவனு டைய பெற்றோரா? தொடக்கக் கல்வியில் பயிற்று மொழியைத் தேர்வு செய்யும் உரிமை ஒரு குடி மகனுக்கு இருக்கிறதா? தாய்மொழியைத் திணிப்பது என்பது அரசமைப்புச் சட்ட விதிகள் 14, 19, 29 மற்றும் 30 ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை களைப் பாதிப்பதாகுமா? அரசு ஏற்பிசைவு அளிக்கும் பள்ளிகள் என்ற வரையறையில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளும், நிதிஉதவி பெறாத தனியார் பள்ளிகளும் அடங்குமா? அரசமைப்புச் சட்ட விதி 350-ஹ-ன்படி, மொழிச் சிறுபான்மையினர் அவர்களுடைய தாய்மொழியில்தான் தொடக்கக் கல்வியைப் பயில வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? என்பன போன்ற வினாக்களுக்கு அரச மைப்புச் சட்ட அமர்வு தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள், தங்களுடைய மொழி, இன நலன்கள் குறித்த முடிவு களைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் உரிமை - தன்னுரிமைத் தேசமாக வேண்டும் என்ற எழுச்சி, ஆகியவற்றை இந்தியத் தேசியம் - இந்துத் தேசியம் - உலகமயம் என்ற பெயர்களால் பல்வேறு தேசிய இனங் களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டிக் கொண்டிருக்கின்ற ஆளும்வர்க்கம் மொழித் தேசிய இனங்கள் தலைதூக்க விடாமல் ஒடுக்கும் செயல் களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆளும்வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளாக காங்கிரசுக் கட்சியும், பாரதிய சனதாக் கட்சியும் திகழ்கின்றன. பார்ப்பன-பனியா முதலாளிய-வணிகக் கும்பல்தான் இதன் அச்சாணியாகும்.

சமற்கிருதம் ஈன்ற குட்டியான இந்தியே இந்தியா வின் தேசிய மொழி என்ற பொய்யான போர்வையில் இந்தியையும், வேலைவாய்ப்புக்கான வாழ்வாதாரம் தருவது ஆங்கிலமே என்ற மாயையின் பேரில் ஆங்கிலத்தையும், இந்தி மொழி பேசாத பிற தேசிய இனமக்கள் மீது திணிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, ‘ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா’ என்ற பெயரில் 2500 மாதிரிப் பள்ளிகளை நடுவண் அரசு தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் 356 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன என்ற செய்தி கடந்த நவம்பர் மாதம் வெளியானது. வழக்கம்போல் ஆளும் கட்சியாக வுள்ள அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இப்பிரச்சினையைத் திசைத்திருப்பும் தன்மையில், ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி அறிக்கைப் போர் நடத்தித் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

‘ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா’ எனப்படும் மாதிரிப் பள்ளிகள் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான கல்வி தருவதே நோக்கமாகும் என்று நடுவண் அரசு சொல்கிறது. 2010 ஏப்பிரல் முதல் செயல்படுத்தப்படும் கல்விபெறும் உரிமைச் சட்டத்தின்படி, கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளி களில் 25 விழுக்காடு இடங்கள் நலிந்த பிரிவு மாணவர் களுக்கு ஒதுக்கிடு செய்யப்பபட வேண்டும். இவர்களுக் கான கல்விக் கட்டணத் தொகையை அரசு மானியமாக வழங்கும் என்று கூறப்பட்டது. இத்திட்டம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும் நிலையில், புதிய தாகத் தொடங்கப்படும் மாதிரிப் பள்ளிகளில் 40 விழுக் காடு மாணவர்கள் அரசின் மூலம் - இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட் டுள்ளது. ஆனால் இது நடைமுறையில் பித்தலாட்ட மாகவே முடியும்!

மேலும் இப்புதிய மாதிரிப் பள்ளிகள், அரசு-தனி யார் கூட்டுப் பங்கேற்புடன் அமைக்கப்படும். 60 விழுக்காடு மாணவர்களைத் தனியார் கல்வி நிறுவன மே தேர்வு செய்து கொள்ளலாம். தனியார் நிறுவனம், பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு ஏந்துகளுக்காகச் செலவிடும் தொகையில் 25 விழுக்காடு தொகையை அரசு வழங்கும். அரசின் மூலம் சேர்க்கப்படும் 40 விழுக்காடு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நடுவண் அரசு பத்து ஆண்டுகள் வழங்கும். அதன் பிறகு அம்மானியத் தொகையை மாநில அரசுகள் அளிக்க வேண்டுமாம்.

மேலும் அரசின் மூலம் சேர்க்கப்படும் 40 விழுக் காடு மாணவர்களுக்கு அவர்கள் எட்டாம் வகுப்புப் படிக்கும் வரைதான் அரசு கல்விக் கட்டணம் செலுத் தும் பொறுப்பை ஏற்கும். ஒன்பதாம் வகுப்பு முதல் கல்விக் கட்டணத்தை அம்மாணவர்களே செலுத்த வேண்டும். ஏனெனில் அரசமைப்புச் சட்டத்தில் 14 அகவைக்கு உட்பட்ட (எட்டாம் வகுப்பு வரை)வர்களுக்கு இலவயக் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டி யது அரசின் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளதாம். அதை அப்படியே பின்பற்றுவதற்காக, ஒன்பதாம் வகுப்பி லிருந்து இலவயக் கல்வி அளிக்க முடியாதாம். நலிந்த பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை கள் ஒன்பதாம் வ்குப்புக்கு வருவதற்குள் கல்விக் கட்டணம் செலுத்துமளவுக்குப் பணக்காரர்களாகிவிடு வார்களா? அல்லது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எட்டாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறி அவரவர் சாதி, குலத்தொழிலைச் செய்ய வேண்டுமா?

இம்மாதிரிப் பள்ளிகளில் ஆங்கிலம் அல்லது இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும்; சி.பி.எ°.சி. பாடத் திட்டம் மட்டுமே பின்பற்றப்படும். கடந்த ஆண்டு உயர்நீதித்துறையும் மறுத்துவிட்டதால் வேறுவழியின்றி கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை செயலலிதா தலைமையிலான அரசு நடை முறைப்படுத்தியது. ‘உயர்ந்த சாதி’ என்பதுபோல் ‘உயர்ந்த கல்வி’ தருவது மெட்ரிக் பள்ளிகள் என்ற போர்வையில் கல்விக் கொள்ளை நடந்து வந்தது. கடந்த ஆண்டு சமச்சீர் கல்வியை ஆங்கில வழிக் கல்வியிலும் பின் பற்ற நேரிட்டதால், பல பள்ளிகள் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத் துக்கு மாறிக் கொண்டிருக்கின்றன. சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தைப் பின்பற்ற, பள்ளிகள் மாநில அரசின் ஒப்பு தலைப் பெறவேண்டும் என்ற விதியை சி.பி.எஸ்.சி. தலைமையகம் சில மாதங்களுக்குமுன் நீக்கிவிட்டது.

கல்விக் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்கும் அளவுக்கு வருவாய் உள்ள குடும்பங்கள் வாழும் நகர்ப் புறப் பகுதிகளில்தான் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. ஏனெனில் சிற்றூர்களில் எழுத்தறிவில்லாத, நாள்தோறும் கூலி வேலை செய்தாலும் அடிப்படை வசதிகளையும் பெற முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களின் குழந்தைகளே அரசுப் பள்ளிகளில் தாய்மொழியில் படிக்கின்றனர். மாதிரிப் பள்ளிகளைத் தனியார் புதியதாகவும் தொடங்கலாம்; தற்போதுள்ள பள்ளிகளையே மாதிரிப் பள்ளிகளாக மாற்றிக் கொள்ள லாம். அரசுப் பேருந்தோ, சிற்றுந்தோ செல்லாத சிற்றூர் களுக்கெல்லாம் தனியார் பள்ளி ஊர்திகள் சென்று பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்விக் கொள்ளைக்காக அழைத்து வருகின்றன.

தனியார் தம் விருப்பம் போல் பள்ளியின் பெயரை வைத்துக் கொள்ளலாம். ஆனால் ‘ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா’ என்ற ‘வால்’ ஒட்டு அப்பெயரில் இருக்க வேண்டும். பள்ளிசாராப் பணிகளுக்கும் பள்ளியைப் பயன்படுத்தலாம். அதாவது மாலை நேரங்களில்-விடு முறை நாட்களில் திருமணம்உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக் குப் பள்ளிக் கட்டடத்தையும் வளாகத்தையும் வாட கைக்கு விட்டுப் பணம் ஈட்டலாம். கல்வி வணிகக் கொள்ளைக்கான வழிகளை அரசே வகுத்துத் தருகிறது.

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, இம் மாதிரிப் பள்ளிகள் தமிழர் நலனுக்கு எதிரானவை; ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே அப்பள்ளிகளில் கற்பிக் கப்படும்; அதனால் தமிழக அரசு இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அதற்கு முதலமைச்சர் செயலலிதா, “2008 நவம்பர் மாதம் நடுவண் அரசு, நாடு முழுவதும் 6000 மாதிரிப் பள்ளி களைத் தொடங்கும் திட்டத்தை அறிவித்தது. அப்போது இருந்த கருணாநிதி ஆட்சி 2009 சூலை 22 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் 20 மாதிரிப் பள்ளிகள் தொடங்க ஒப்புதல் அளித்தது” என்று எடுத்துக்காட்டி, கருணாநிதியைக் குற்றஞ்சாட்டினார்.

அதற்கு, கலைஞர் கருணாநிதி “நான் அனுமதி அளித்த மாதிரிப் பள்ளித் திட்டத்தின் பெயர் “ராஷ்ட்ரிய மத்யாமிக் சிக்ஷா அபியான்” என்பதாகும். அது அரசின் நிதியால் நடத்தப்படுவதாகும். ஆனால் அதில் தனி யாருக்கு இடமில்லை. மேலும் மாநில மொழியிலேயே கல்வி கற்பிக்கப்படும் என்று குறிப்பிட்டுத்தான் அது தொடங்கப்பட்டது” என்று பதில் அறிக்கை வெளியிட் டார். சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் தமிழ் பயிற்று மொழியாக இருக்க முடியுமா? என்பது கலைஞருக்குத் தெரியாததா?

முதலமைச்சர் செயலலிதாவும் “தமிழர் நலன் காக்கப்படும்; அடுத்த கல்வியாண்டில் மாதிரிப் பள்ளி கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படமாட்டா” என்று மட்டுமே அறிவித்துள்ளார். ஏனெனில் அடுத்த கல்வியாண்டில் மாதிரிப் பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் 11-11-2013க்குள் அளிக்கப்பட வேண்டும். யாரும் விண் ணப்பிக்கவில்லை என்பதால், அடுத்த கல்வியாண்டில் மாதிரிப் பள்ளி தொடங்கப்படாது என்று முதலமைச்சர் கூறுகிறார். மேலும் “2014 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும். “அதன்பிறகு இச்சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்”. நடுவண் அரசில் எந்த ஆட்சி யிருந்தாலும் ஆங்கிலத்தையோ இந்தியையோ பயிற்று மொழியாகக் கொண்ட மாதிரிப் பள்ளிகளை அனு மதிக்கமாட்டேன்” என்று கூறவேயில்லை.

தொடக்கக் கல்வியில் கூடத் தாய்மொழியை - தமிழைப் பயிற்று மொழியாக நிலைக்க வைக்க முடியாத கேடான நிலைக்கு மூலகாரணம் 1976இல் மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை, இந்திரா காந்தி நெருக்கடி நிலை ஆட்சியில் நடுவண் அரசின் பொது அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதேயாகும். எனவே கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலின் கீழ்க் கொண்டுவர, இந்தி பேசாத மற்ற தேசிய இன மக்களையும் ஒன்றிணைத் துப் போராட வேண்டும்.

முதற்கட்டமாகத் தொடக்கக் கல்வியில் பயிற்று மொழியாக மாநிலத்தின் தேசிய மொழியே இருக்க வேண்டும். மொழிச் சிறுபான்மையினர் அவர்களது மொழியைத் தொடக்கக் கல்வியில் ஒரு மொழிப் பாடமாகப் பயில்வதற்கான வாய்ப்பை அமைத்துத் தரவேண்டும். உலக அளவில் உள்ள மொழியியல் அறிஞர்கள் கூறுவதுபோல், ஆறாம் வகுப்பிலிருந்து தான் தாய்மொழி அல்லாத வேறொரு மொழியைப் பயில வேண்டும். எனவே ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலமோ மற்ற அந்நிய மொழியோ படிக்கலாம்.

கல்வியில் தனியார் மயம் என்பதை அடியோடு ஒழிக்க வேண்டும். தொழில் வளர்ச்சி பெற்ற எல்லா நாடுகளிலும் பள்ளிக்கல்வி முற்றிலுமாகத் தாய்மொழி வழியில் அரசே அளிக்கிறது. எனவே நடுவண் அரசின் மாதிரிப் பள்ளிகள் தமிழகத்தில் கால்வைக்க விடாமல் தடுப்போம். இந்தியத் தேசியம், இந்துத் தேசியம் என்ற முகமூடிகளைக் கிழித்தெறியாமல் தமிழ்த் தேசி யத்தை மீட்டெடுக்க முடியாது. சமற்கிருத ஆதிக்கம், ஆங்கில ஆதிக்கம், இந்தி ஆதிக்கம் ஆகியவற்றை ஒழிக் காமல், தமிழ்மொழியைக் காப்பதோ, வளர்த்தெடுப் பதோ இயலாது. இம்மூன்று மொழிகளின் ஆதிக்கத்தின் பின்னணியில் உள்ள அரசியல், பொருளியல், சமூக, மத, பண்பாட்டு, முதலாளிய ஆதிக்க உள்ளடக்கங்களைப் புரிந்து கொண்டு, தமிழர்கள் ஒன்றுதிரண்டு போராடி இவற்றைத் தகர்ப்பதன் மூலமே தமிழ்மொழியை - இனத்தைக் காக்க முடியும்.

Pin It