பொழுதெலாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ! நாங்கள் சாகவோ! என்று வேதனையோடு பாடினான் பாரதி. பிரித்தானிய அரசு இந்தியாவிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றதைக் கண்டு அன்று வெந்து துடித்தான்.

வெள்ளையர்கள் வெளியேறிய பின்பும் கூட புது டெல்லியிலுள்ள ஏகாதிபத்தியவாதிகள் தமிழகத்தின் இயற்கைச் செல்வங்களையெல்லாம் கொள்ளை கொண்டு போவது மட்டும் நிற்கவில்லை. கொள்ளை தொடர்கிறது. கனியும் கிழங்கும் நித்தம் நித்தம் கணக் கின்றித் தரும் நாடு, யானை கட்டி போராடித்த நாடு ஏழ்மையில் ஏன் கிடக்க வேண்டும்?

போதுமான நிலம் நம்மிடம் உள்ளது. ஆனால் 53% மக்கள் அன்றாட தேவைகளை நிறைவு செய்ய முடியாத தினக்கூலியாக உள்ளனர். எதிர்காலச் செலவுகளை எண்ணி அஞ்சி பெண் குழந்தைகளுக்குகள்ளிப் பால் கொடுத்து பெற்றோர்கள் குழந்தைகளைக் கொல்லும் கொடுமை தமிழகத்தில் நடக்கத்தான் செய்கிறது!

தேவைக்குப் போதுமான நீர் இருந்தும் குறைந்த நிலப்பகுதியில் மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது. ஏனென்றால் வேளாண்மை இலாபம் தரும் தொழிலாக இல்லை. 2011 இல் வேளாண்மை ஆணையம் நடத்திய கணக்கெடுப்பின்படி நாள் தோறும் 2000 பேர் விவசாயம் செய்வதை விட்டு விட்டு நகர்ப்புறக் கூலிகளாக மாறி வருகிறார்கள்.

கொள்ளை போகும் வளங்கள்:

நெய்வேலியில் ஆண்டுக்கு 3730 மெகாவாட் அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் அனைத்தையும் தமிழகம் பயன்படுத்த முடியாது. இந்திய வல்லாதிக்க அரசின் கைகளில் நெய்வேலி மின்சாரம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கிறது. காவிரி உரிமையை மறுக்கும் கர்நாடகாவிற்குத் தமிழ்நாட்டிலிருந்து நாள் தோறும் மின்சாரம் செல்கிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடையாது. இது “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இருக்கிறது’’. ஆரிய இந்திய அரசின் செயல் தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் நமக்கு உரிமையில்லை. நெய்வேலி மின்சாரத்தை எடுக்காதே! என்கிற முழக்கம் பெரியளவில் உருவாக வேண்டும்.

சேலத்தில் உலகத்தரம் வாய்ந்த தேனிரும்பு கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 42,800 டன் இரும்பு எடுக்கப்படுகிறது. சேலத்தில், மண்ணுக்கு அடியில் 61 கோடிடன் இரும்பு இருக்கிறது சேலம் மண்ணில் எடுக்கப்படுகிற இரும்பின் மீதும் தமிழனுக்கு உரிமையில்லை. ஆரியபார்ப்பனிய பனியா அரசுக்குத் தான் அந்த அதிகாரம் உள்ளது.

தமிழகத்தில் எண்ணெய்வயல்கள் கடலோரப் பகுதிகளில் 2500 ச.கி.மீ உள்ளது. கடலுக்குள் 4800 ச.கி.மீ வரை உள்ளது. நரிமணத்தில் கிடைக்கும் பெட்ரோலில் கந்தகம் (சல்பர்) இல்லாததால் உலகில் முதல் தர பெட்ரோலைவிட சிறந்ததாக உள்ளது. இதுவும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குகிறது. பெட்ரோலுடன் சேர்ந்து கணிசமான அளவு எரிவாயும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிடைக்கிறது. இவற்றின் மீதும் தமிழகத்திற்கு உரிமை கிடையாது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் 3850 கி.மீட்டர் குழாய் மூலம் எரிவாயும் எடுத்துச் செல்கிறது. நரி மணத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 720 டன் உற்பத்தி செய்யும் நான்கு எண்ணெய் கிணறுகளிலும் 7,5000 க. செ.மீட்டர் எரிவாயுவும் கிடைக்கிறது.

இதுவல்லாமல் புவனகிரியில் 5200 க.செ.மீ எரிவாயுவும் 206 பீப்பாய் பெட்ரோலும் கிடைக்கிறது. பரங்கிப்பேட்டையில் 4330 பீப்பாய் பெட்ரோல் கிடைக்கிறது. கமலாபுரத்தில் 3640 மீட்டர் ஆழத்தில் ஒரு நாளைக்கு 150 பீப்பாய் பெட்ரோல் கிடைக்கிறது. இங்கு 2933. க.செமீ எரிவாயுவும் கிடைக்கிறது.

தமிழகத்திலிருந்து பெட்ரோல் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் அதை நம்மிடமே சர்வதேச சந்தை விலைக்கு விற்கப்படுகிறது! இது பகல் கொள்ளையா இல்லையா? தமிழன் ஏமாந்த சோணகிரி அவன் தலையில் எவ்வளவு வேண்டுமானலும் மிளகாய் அரைக்கலாம் என எண்ணுகிறது இந்திய அரசு!

சேலம் மாவட்டத்தில் மாக்னசைட் பெருமளவில் கிடைக்கிறது. கஞ்சமலை, கொல்லிமலை பகுதியிலும் திருவண்ணாமலையிலுள்ள கௌத்திமலை, வேதியப்பன் மலை குன்றுகளிலும் தர்மபுரி மாவட்டம் தீர்த்த மலையிலும் மாக்னசைட் கிடைக்கிறது. இவற்றை எடுத்து பயன்படுத்தும் அதிகாரம் தமிழக அரசிடம் இல்லை. இந்திய அரசிடம்தான் அதிகாரம் உள்ளது.

சுண்ணாம்புச் சுரங்கங்களில் சுண்ணாம்புக்கல் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 350 மில்லியன்டன்கள் இருக்கிறது. சுண்ணாம்புக்கல் சிமிண்டு தயாரிக்கப் பயன்படுகிறது.

இந்தியாவில் கிடைக்கும் மொத்த சிப்சத்தில் 55% தமிழ் நாட்டில் கிடைக்கிறது. 1,80,00 டன் பல்வேறு மாவட்டங்களில் இருப்பில் உள்ளது. இதுவும் சிமிண்டு தயாரிக்கப் பயன்படுகிறது. அரியலூர், செந்துரை, செயங்கொண்டம் பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஏராளமான தனியார் மற்றும் அரசு சிமிண்டு தொழிற்சாலைகள் உள்ளன. ஆசியாவிலே இரண்டாவது பெரிய சிமிண்டு தொழிற்சாலை அரியலூரில் உள்ளது.

கிராபைட் சிவகங்கை பகுதியில் 5 கி.மீட்டர் சுற்றளவில் இலட்சம்டன்கள் இருக்கிறது. இவையெல்லாம் இந்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது.

மாமண்டூர் பகுதியில் செம்புகிடைக்கிறது. மதுரை ஆலங்குளம் பகுதியிலும் கிடைக்கிறது. இவற்றின் மொத்த இருப்பு 1.27 மில்லியன்டன்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது.

மாணிக்கக் கற்கள் உலகப் புகழ் வாய்ந்த பச்சைக் கற்கள் காங்கேயம் பகுதியில் கிடைக்கின்றன. திருச்சி மாவட்டத்தில் 0.46 மில்லியன்டன்களும் சேலம் மாவட்டத்தில் 0.15 மில்லியன் டன்களும் இருப்பில் உள்ளது. இவற்றின் மீது இந்திய அரசுதான் ஆதிக்கம் செலுத்துகிறது.

தோல் பொருட்கள் உற்பத்தியில் நம் தமிழகம்தான் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. தீக்குச்சிகள் 90% இங்குதான் தயாராகிறது. தாது மணல்வளம் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. பல இலட்சம் கோடி ரூபாய் தாது மணல் கொள்ளை நடந்துள்ளது.

இயற்கை வளங்கள் அது கிடைக்கும் பகுதியைச் சார்ந்து வாழும் மக்களின் கட்டுப் பாட்டுக்குள் இல்லை. மாறாக அனைத்து முடிவுகளும், அதிகாரங்களும் இந்திய அரசின்கையில் இருப்பதால் இந்தத் தாழ்வு நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இதுவல்லாமல் கம்பெனிவரி, வருமானவரி, கலால்வரி, ஏற்றுமதிவரி, இறக்குமதிவரி, என்று நாள் தோறும் தமிழகத்திலிருந்து கோடி கோடியாகக் கொண்டு செல்கிறது இந்திய அரசு. அதில் ஒரு சிறு பகுதியைத் தான் தமிழகத்திற்கு பிச்சையாகப் போடுகிறது.

இவ்வளவு வளங்களையும் கொள்ளை அடித்துச் செல்லும் இந்திய அரசு தமிழகத்திற்கு இழைத்து வரும் துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமுல்படுத்த இந்திய அரசு மறுக்கிறது. உச்சநீதி மன்ற உத்தரவின்படி முல்லைப் பெரியாறு உரிமையை அமுல்படுத்த மறுக்கிறது இந்திய அரசு தன்னுடைய அரசியல் சட்டக் கடமைகளை நிறைவேற்றிட மறுக்கிறது.

இந்தக் கொள்ளைக் கொள்கையில் காங்கிரசுக்கும், பா.ச.க.வுக்கும் பிற வட இந்தியக் கட்சிகளுக்கும் வேறுபாடு ஏதுமில்லை. ஆரிய பார்ப்பன - பனியா இந்தியக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதில் இக்கட்சிகள் ஒரே நிலையில் இருப்பவை தாம். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் “அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவன் வாயில் மண்ணு’’ என்பார்கள். இக்கட்சிகளுக்கும் இது பொருந்தும்.

பின் குறிப்பு : (இக்கட்டுரையில் உள்ள பெரும்பாலான புள்ளி விவரங்களுக்கு ஆதாரமான நூல் - வளமிகு தமிழ்நாடும், வறுமைமிகு தமிழக மக்களும்- பீட்டர், ரோஜ் - ரியல் தொண்டு நிறுவன வெளியீடு, திண்டுக்கல், 1986)