மிகை எண்ணிக்கையிலான வெளி இனத்தார் ஒரு தேசிய இனத் தாயகத்தில், நுழைவதென்பது அத்தேசிய இனத்தை ஆக்கிரமிப்புச் செய்வதில்தான் முடியும் என்பதை வரலாறு பலமுறை கண்டிருக்கிறது. பாலத்தீனத்திலும், தமிழர் தீவான இலங்கையிலும் இதுதான் நடைபெற்றது. எனவே தான், ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் எவ்வளவு வெளியார் இருக்கலாம், இருக்கக்கூடாது என்பதை தீர்மானிக்கும் உரிமை, அவ்வினத்திற்கென அமைக்கப்பட்டுள்ள நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டதாக உலகெங்கும் நடைமுறையில் இருக்கிறது. தமக்கென தனித்த அரசுகளைக் கொண்ட நாடுகள், தமது தாயகங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தமக்கென குடியேற்ற சட்டங்களை இயற்றி இதனை கட்டுப்படுத்தி வருகின்றன.

இவ்வகையான அரசுரிமை இல்லாததாலேயே, தமிழ்நாட்டுத் தாயகத்தை அயல் இனத்தாரின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாமல் நாம் திணறி வருகிறோம். தமிழினத்தின் அரசுரிமையை மறுக்கின்ற இந்திய அரசு, வெளியார் ஆக்கிரமிப்பை ஊக்கு வித்து வளர்த்து, தமிழர் தாயகத்தை சிதைக்க முனைகின்றது.

தமிழகத்தில் ஏற்கெனவே அதிகளவில் நடைபெற்றுக் கொண்டுள்ள குற்றச் செயல்களின் எண்ணிக்கை, தமிழகத்தில் குடியேறியுள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் மேலும் உயர்ந்து வருவதை நாம் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறோம்.
 
வேறோரு இனத்திலிருந்து, வேறுபட்ட சமூகத்திலிருந்து தமிழகத்தில் நுழைகின்ற வெளிஇனத்தார், தங்களுடைய பண்பாட்டையும், தாங்கள் சார்ந்துள்ள சமூகத்தின் சீர்கேடுகளையும் தமிழகச் சூழலில் வளர்த்து விடுகின்றனர்.

தமிழ்ச் சமூகம் உள்ளிட்டு எல்லா சமூகங்களிலும் வாய்ப்புகள் அனுமதிக்கும் அளவுக்கு குற்றச்செயல்கள் நடக்கவே செய்கின்றன. எல்லா சமூகங்களிலும் குற்றம் செய்வோர் உண்டு.

தமது குடும்பத்தினர், நட்பு வட்டாராம், சுற்றத்தினர் என தம்மை கண்காணிப்பதற்கு பலரும் இருக்கின்ற மொழிவழிச் சமூகத்தின் அங்கமாக வாழ்கின்ற மனிதர்களில் பெரும்பாலானவர்கள், தாம் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் வருகின்ற போதும், தம்மை சூழ்ந்துள்ள சமூகத்தின் மீது ஏற்படும் அறத் தின்பாற்பட்ட அச்சவுணர்வு, அவமானம் போன்றவற்றின் காரணமாகவே குற்றங்களைச் செய்யத் தயங்குகின்றனர். இதனையும் மீறுபவர்களே குற்றவாளிகளாக சமூகத்தின் முன் நிற்கின்றனர்.

தாம் பேசுகின்ற மொழி என்ன வென்றே புரியாத மக்கள் வாழுகின்ற சமூகத்தில் குடியேறி வாழத் தொடங்குகின்ற அயல் இனத்தார் பலருக்கும், அறத்தின் பாற்பட்ட இவ்வகை அச்சவுணர்வு குறைவாகவே எழும்புகிறது. எனினும், பிழைப்புக்காகவேறோரு சமூகத்தில் வந்து தங்குகின்ற அயல் இனத்தாரில் பலரும், தங்களுடைய சொந்த தேசத்திற்கு திரும்ப வேண்டுமென்ற ஆர்வமும், ஆசையும் கொண்டவர்களாக இருப்பதால் குற்றச் செயல்களில் ஈடுபடு வதைத் தவிர்க்கின்றனர்.

ஆனாலும், தாம் யாரென அறிந்து கொள்ளப்படாத, கண்காணிப்புகள் ஏதுமற்ற வேறொரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்ற மனநிலை, அவர்களுக்கு குற்றச் செயல்களில் ஈடுபடு வதற்கான ‘சுதந்திர’த்தை கூடுதலாக வழங்குகிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் அயலார் பலர், தாம் குடியேறிய சமூகத்தில் குற்றங்களை இழைத்து அச்சமூகத்திற்கு அச்சத்தையே பரிசாக வழங்குகின்றனர்.

பணி நிமித்தமாக ஒரு நாட்டிற்குள் நுழையும் ஒருவர் தாம் எதற்காக வருகிறோம், எங்கிருந்து வருகிறோம், எவ்வளவு காலம் அங்கு பணி செய்யப் போகிறோம் என்பன உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்து கொள்கின்ற கடவுச்சீட்டு - விசா நடை முறைகள் முறையாகப் பின்பற்றப்படும் பல முன்னேறிய நாடுகளில் கூட, வெளி இனத்தார் குற்றச் செயல்களில் ஈடுபடுவது காணப்படுகின்றது.

அதே நேரத்தில், அரசின் விசா நடைமுறைகளில் மோசடித்தனம் செய்து சட்ட விரோதமாக ஒரு நாட்டில் குடியேறுகின்ற வெளி நாட்டவர்களில் கணிசமானவர்கள், தாம் யாரென அறிந்து கொள்ள முடியாத ஒரு புதிய சமூகத்தில் வாழத் தொடங்கும் போது, குற்றச் செயல்களில் ஈடுபடுவற்கான ‘சுதந்திர’மான மன நிலையை கூடுதல் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுக் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களில், சொந்த நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக பிற நாடுகளுக்கு குடிபெயரும் குற்றவாளிகளும் உண்டு.

கடந்த 2000ஆம் ஆண்டு குற்றப் பின்னணி கொண்ட 1,16,782 வெளி நாட்டவரை அமெரிக்கா, அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பியது. இதுவே, பின்னர் 2011ஆம் ஆண்டு, பல மடங்கு அதிகரித்து சற்றொப்ப 3 இலட்சத்து 96,906 வெளி நாட் டவர்களை அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் அளவிற்கு உயர்ந்ததாக வட அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவிக்கிறது.

இவ்வாறு, குற்றம் புரிவதற்கான ‘சுதந்திர’ மனநிலையைப் பெறுகின்ற வெளி இனத்தார், தாம் புதிதாக குடியேறியுள்ள சமூகத்திலும் குற்றச் செயல்களில் சரளமாக ஈடுபடுவது உலகளாவியப் போக்காக வளர்ந்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல முன்னேறிய நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வேலைக்காக சென்று குடியமர்ந்து வருகின்றனர். கடவுச் சீட்டு -விசா நடைமுறைகள் கொண்ட இந்நாடுகளில், அளவுக்கு அதிகமாக வெளியார் குடிபெயர்வதற்கு அவ்வப்போது கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

தங்களுக்குரிய உள்நாட்டு வேலை வாய்ப்புகளை வெளியார் பறித்துக் கொள்கிறார்கள் என்பதும், அதிகளவில் குடியேறுகின்ற வெளியாரால் தம் இன, பண்பாட்டு அடையாளங்களுக்கு சிதைவு ஏற்படும் எனக் கருதுவதுமே இவ் எதிர்ப்பிற்கான முக்கியக் காரணிகளாகும். மேலும், வெளியாரால் நிகழ்த்தப்படும் குற்றச்செயல்கள் தம் மண்ணில் ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் குற்றங்களை மேலும் அதிகரித்துவிடும் என அந்தந்த நாடுகளின் அரசுகள் அச்சப்படுவதும் முக்கியமானது.

இவ்வாறான போக்கில், உலகளவில், மிகை எண்ணிக்கையிலான வெளியார் நுழைந்துள்ள நாடுகளில் அதிகளவிலான குற்றங்கள் நிகழ்வதும், அதனை எதிர்த்து மக்கள் போராடுவதும் உலகின் பல பகுதிகளிலும் இன்றைக்கும் நடை பெற்றுக் கொண்டுள்ளது.

வட அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஸ்பெய்ன், சுவீடன், ஆஸ்த்திரேலியா, நியூஸ்லாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் வெளியார் மிகை குடியேற்றத்திற்கும், குற்றங்கள் அதிகரித் திருப்பதற்கும் தொடர்புள்ளதை அந்நாடுகளின் உளவுத் துறைகள் கண்டறிந் துள்ளனர்.

இரசியாவில் வெளி இனத்தவரால் குற்றசெயல் அதிகரித்து அதன் காரணமாக வெளியாரை வெளியேற்றும் கிளர்ச்சி நடந்ததை தமிழ்த் தேசியத் தமிழர் கண் ணோட்டம் 2013 நவம்பர் 1-15 இதழில் குறிப்பிட்டு இருந்தோம்.

கடவுச்சீட்டு - விசா நடைமுறைகள் கொண்ட பல்வேறு உலக நாடுகளிலே கூட வெளியார் குடியேற்றங்கள் சிக்கலாக விளங்கும் நிலையில், இவை ஏதுமின்றி திறந்துவிடப் பட்ட பல தேசிய இனத் தாயகங்கள் நிறைந்த இந்தியாவில், குடியேற்ற சிக்கல் பூதாகரமாக வளர்ந்துள்ளது. இந்தியத் தலைநகரான புதுதில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கூட, இந்தி பேசும் வட நாட்டவர்கள் அதிகளவில் நுழைந்து ஆக்கிரமிப்புச் செய்வதும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் கடும் எதிர்ப்பலைகளை எழுப் பியுள்ளது.

புதுதில்லி

இந்தியத் தலைநகர் புது தில்லியில் கடந்த 2010ஆம் ஆண்டு திசம்பர் மாதம், 18 அகவை பெண் ஒருவர் வெளி மாநிலத்தவர்களால் கடத்தப் பட்டு, கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டார். இந் நிகழ்வைக் கண்டித்த, இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கற்பழிப்பு உள்ளிட்ட கடும்குற்றங்கள் புதுதில்லியில் அதிகளவில் நடப்பதற்கு, அதிகளவில் இங்கும் நுழையும் வெளியாரே காரணம் எனவும், அவர்களை எளிதில் பிடிக்க முடியவில்லை எனவும் பேசினார். அதற்கு, பா.ச.க. உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவிக்கவே, அக்கருத்தை அவர் திரும்பப் பெற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

நடுவண் அமைச்சர் ஒருவரின் கருத்தாக இது இருந்தாலும், புது தில்லியின் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தும் இக்கருத்தை ஆதரித்து அவ்வப்போது பேசினார்.

கடந்த 2006ஆம் ஆண்டு திசம்பர் 9 அன்று, புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், பீகார், உத்திரப்பிர தேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அதிகளவிலான வெளிமாநிலத்தவர்கள் புதுதில்லிக்குள் நுழைவதால், தில்லியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது எனத்தெரிவித்தார்.

2009 - திசம்பர் 25 அன்று தில்லியில் தேசியத் தலைநகர் பகுதி (Nati onal Capital Region - NCR) திட்ட வாரியக் கூட்டத்தில் பேசிய, ஷீலா தீட்சித், தில்லியில் அதிகளவில் வெளியார் நுழைவதைத் தடுப்பதற்காக தில்லிக்கு வெளியே புதிய துணை நகரங்களை அமைக்க இந்திய அரசு உதவ வேண்டுமென வெளிப்படையாகக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை, 23.05.2011 அன்று தில்லியில் இந்தியத் திட்டக் குழுவால் நடத்தப்பட்ட 12ஆவது ஐந்தாண்டுத் திட்டக் (2012--1017) கூட்டத்திலும் பங்கேற்று அவர் முன் வைத்தார்.

2012 சனவரி மாதம், இந்தியத் தலைநகர் புதுதில்லியில், 20 அகவை மணிப்பூர் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டபோது, புதுதில்லியில் அதிகளவில் நுழைந்துள்ள வெளியாரே இதற்குக் காரணம் என்றும், குற்றவாளிகள் எளிதில் தப்பித்து பிற மாநிலங்களுக்கு ஓடி விடுவதாகவும் அம்மாநில முதலமைச்சர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

பஞ்சாப்

புதுதில்லியில் மட்டுமின்றி, பஞ்சாபிலும் இந்திக்காரர்கள் குடியேற்றங்களுக்கும், குற்றச்செயல்களுக்கும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த இந்திக்காரர்கள் பஞ்சாபின் பல பகுதிகளிலும் பணி நிமித்தமாகக் குடியேறியுள்ளனர். குடியேறியதோடு, அங்கு குற்றச் செயல்களிலும் அவ்வப்போது அவர்கள் ஈடுபடுவது பஞ்சாபில் எதிர்ப்பலைகளை எழுப்பியுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம், பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தின் ராயாநகரின் அருகிலுள்ள பெருமன் (Pheru man) என்ற கிராமத்தில், அனோக் சிங் என்ற கல்லூரிப் பேராசிரியரின் வீட்டில் நடைபெற்றக் கொள்ளைச் சம்பவத்தில், பேராசிரியரும் அவரது மகளும், அதே வீட்டில் கட்டு மானத் தொழில் புரிந்த பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். அவரது மனைவி தாக்கப்பட்டு சுய நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

இந்நிகழ்வில் கொலையுண்டவர் பேராசிரியர் என்பதால் ஆசிரியர் சங்கங்கள் பெரும் போராட்டங்களை நடத்தின. சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி சனநாயக வழியில் செயல்படும் ‘தல் கல்சா’ என்ற சீக்கியர் அமைப்பு, பீகார் உள்ளிட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களால் பஞ்சாபில் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டமைக்கு இந் நிகழ்வு எடுத்துக்காட்டாக விளங்குகிறது எனக் குறிப்பிட்டு, 12.04.2012 அன்று பீகாரிகளை பஞ்சாபை விட்டு வெளியேற்ற வேண்டுமென அம் மாநில அரசு இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தது.

கடந்த செப்டம்பர் 14 அன்று, சண்டிகரில் வசிக்கும் இந்தித் தொழிலாளர்களுக்காக புதிதாகக் கட்டப்பட்ட 8,400 குடியிருப்புகளை இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங் திறந்து வைத்ததற்கு, தல் கல்சா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. சீக்கியர்கள் வாழும் சண்டிகர் நகரை, இந்திக் காரர்களின் நகரமாக மாற்றுவதற்கான முயற்சியையே இந்திய அரசு மேற்கொள்கிறது என அவர்கள் குறிப்பிட்டனர்.

புதுதில்லி, பஞ்சாப் மட்டு மின்றி காசுமீர், அசாம், மகாராட்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், வட இந்தியர்களின் குடியேற்றத்திற்கும், குற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக அவ்வப் போது மக்கள் போராட்டங்கள் நடை பெற்றுக்கொண்டுள்ளன.

தமிழ்நாடு

ஆனால், இவ்வகையில் தமிழகத்தில், அயல் இனத்தார் நடத்தும் ஆக்கிரமிப்புகளும், குற்றச்செயல்களும் எவ்விதக் கேள்விமுறையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

சென்னையைச் சுற்றியமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வடஇந்திய மாணவர்கள் துப்பாக்கிகளைக் கொண்டு நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொண்டது, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நகைக் கொள்ளை நிகழ்வுகளிலும், பல இடங்களில் ஏ.டி.எம். மற்றும் வங்கிக் கொள்ளை நிகழ்வுகளிலும் வடஇந்தியர்கள் ஈடுபட்டது, கூலிப்படையாக தமிழகம் வந்து கொலைகளை நிகழ்த்திய வட இந்தியர்கள் விமானம் ஏறி தங்கள் மாநிலங்களுக்குச் சென்றது, கோவை உள்ளிட்ட பல இடங்களில் குடி போதையில் பெண்கள், குழந்தைகளிடம் தவறான முறையில் வட இந்தியர்கள் நடந்து கொண்டது என தொடர்ந்து இதுவரை பல் வேறு குற்றங்கள் வடமாநிலத்தவர்களால் தமிழகத்தில் நிகழ்த்தப் பட்டுள்ளன.

இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது மட்டும், வெளிமாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழகக் காவல் துறையினர், இவர்களை முறையாகக் கண்காணிப்பதற்கான நிரந்தரப் பொறியமைவு எதனையும் இதுவரை ஏற்படுத்த வில்லை.

தேசிய இன அடையாளங்களை சிதைத்தழிக்க வேண்டுமென செயல்படும் உலகமயம் நகரமயமாக் கலை ஊக்குவிக்கிறது. நகரமய மாக்கல் வெளியார் மயத்தை ஊக்கு விக்கிறது. அவ்வகையில், நகரமய மாக்கலும், வெளியார்மய மாக்கலும் இணைந்து நடைபெறுகின்றன. அதைப் போலவே, வெளியார் மயமாக்கலும் குற்ற மயமாக்கலும் இணைந்து நடைபெறுகின்றது.

எனவே, வெளியாரை வெளி யேற்றுவதென்பது வெறும், தமிழர்களின் வேலை - வாழ்வுரிமை சார்ந்த சிக்கல் மட்டுமல்ல, அது தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை, உலகமயமா தலையும் - நகர்மயமாதலையும் சமூகம் குற்றமயமாதலையும் ஒருங்கே எதிர்க்கும் நடவடிக்கை என்பதை நம் நெஞ்சங்களில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்! அதற்கேற்ப செயலாற்ற வேண்டும்!