மோசமானதொரு மன்னர் ஆட்சியை விடவும் கெடுபிடியான எதேச்சாதிகார ஆட்சியை ‘சனநாயக அரசி’ செயலலிதா நடத்திக் கொண்டிருக்கிறார்.

மன்னர் ஆட்சிக் காலத்தில் கூட மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக மன்னரிடம் கூற அரசவைக்குச் செல்ல முடியும். ஆளும் அரசரிடம் அல்லது அரசியிடம் குறைகளை நேரில் முறையிட்டு விவாதிக்க முடியும்.

தமிழக முதலமைச்சர் செயலலிதா ஆட்சியில் அதெற்கெல்லாம் வாய்ப்பில்லை. செயலலிதா காட்டிய வழியில் அவரது அதிகாரப் பரிவாரங்களும் காட்சிக்கு அரியோராய் ஆட்சி புரிவதே தங்களது வழியாகக் கொண்டுள்ளனர்.

கடந்த 800 நாட்களுக்கும் மேலாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் கடலோர மக்கள் வரலாறு காணாத அமைதி வழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். முனைவர் சுப. உதயகுமார் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் மீதும் போராடும் மக்கள் மீதும் 2000 க்கும் மேற்பட்ட வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் இந்திய அரசை எதிர்த்தே நடைபெறுகிறது. தேவையே இல்லாமல் தமிழகக் காவல்துறை அடிப்படையற்ற பொய் வழக்குகளை அடுக்கடுக்காக தொடுத்து வருவதை தடுத்து நிறுத்த, வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்த பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய அனைத்து அமைப்பினர் முயன்றனர்.

இக் கோரிக்கைகளை மனுவாக அளித்து நேரில் பேச தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேரம் ஒதுக்கித் தருமாறு மனித நேய மக்கள் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் தி.வேல்முருகன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கோரினர்.

அவ்வாறு நேரில் சந்திக்க நேரம் தருவதற்கு தலைமைச் செயலாளர் மறுத்துவிட்டார். அவரைப் போலவே காவல்துறைத் தலைவரும் மறுத்துவிட்டார். வேறு வழியின்றி கடந்த 17.09.2013 அன்று தமிழக உள்துறை செயலாளரை மட்டும் சந்தித்து இத் தலைவர்கள் கோரிக்கை விண்ணப்பம் அளித்துவிட்டு வந்தனர்.

அதிகாரிகளின் இம் முடிவு செயலலிதாவின் ஆட்சிமுறைக்கு ஒரு சான்று. அவரது கருத்து அறிந்துதான் இந்த அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அலுவலகங்கள் நிறுவு வதற்காக அப்பல்கலைக் கழக நிலம் பறிக்கப்படுவதைக் கண்டித்து த.தே.பொ.க ஒருங்கிணைப்பில் பல்வேறு தமிழறிஞர்களும் பல்வேறு தமிழின உணர்வாளர்களும் போராடி வருகின்றனர்.

இச்சிக்கல் தொடர்பாக விண்ணப்ப மனு அளித்து பேச நேரம் ஒதுக்கித் தருமாறு கோரி சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பினார். கடிதம் அனுப்பி ஆறுமாதத்திற்கு மேல் ஆகியும் இன்றுவரை விடை இல்லை.

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டு யாரும் எளிதில் சந்திக்க முடியாதபடி இரும்புத் திரை அமைத்துக் கொண்டு தந்தப் பல்லக்கில் உலாவருகிறார் செயலலிதா.

அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கையில் பூங்கொத்தோடு தர்ம தரிசனத்திற்காக வரிசைக் கட்டிக் காத்து நிற்பது கோட்டையில் அன்றாடக் காட்சியாகிவிட்டது.

பொறுப்பான மக்கள் பேராளர்களை, அறிஞர்களை, சான்றோர்களைச் சந்திக்கவே மறுக்கும் ஆட்சியாளர்கள் அருவருப்பான எதேச்சாதிகாரர்களாகத்தான் இருக்க முடியும். தமிழ்நாட்டில் மக்களாட்சியின் பெயராலேயே இது நடக்கிறது.

இன்னொருபுறம் அரசுக்கு எதிராக நடத்தப்படும் அமைதிவழிப் போராட்டங்கள் பல நேரங்களில் செயலலிதா ஆட்சியின் அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படம் வைத்தால் அக்கூட்டத்திற்குத் தடை, கோரிக்கைகளுக்காகப் போராடிய பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள், மற்றும் திருநங்கைகளுக்கு எதிரான ஈவு இரக்கமற்ற காவல்துறை தாக்குதல், ஆகியவை இதற்குச் சில சான்றுகள்.

 “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்பது போல் தனக்கு எதிராக கருத்துக்கூறுவோர் மீது அரசு செலவில் அவதூறு வழக்கு போடுவதில் செயலலிதா ‘கின்னஸ்’ சாதனையே படைத்து வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கருணாநிதி, மு.க ஸ்டாலின், விஜயகாந்த் அவர் மனைவி பிரேமலதா, இராமதாசு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதும் சன், கேப்டன் உள்ளிட்ட தொலைக் காட்சிகள் மீதும், ஜூனியர் விகடன், நக்கீரன், தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, முரசொலி உள்ளிட்ட ஏடுகள் மீதும் சற்றொப்ப 130 அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்டுள்ளன.

கோட்டைக்குச் செல்லாமல் மாதக்கணக்கில் கொடநாட்டில் முதலைமைச்சர் செயலலிதா தங்கி இருந்ததைக் குறிப்பிட்டு தி.மு.க தலைவர் கருணாநிதியும், பா.ம.க தலைவர் இராமதாசும் திறனாய்வு செய்து பேசியதற்காக அவர்கள் மீது அவதூறு வழக்கு.

தமிழகத்தில் காலரா பரவியிருக்கிறது என்று சொன்ன மு.க ஸ்டாலின் மீதும், அச்செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு மீதும் அவதூறு வழக்கு. பெண் ஆளும் மாநிலத்தில் பெண்களுக் கெதிரானவன் முறை அதிகம் நடந்துவருவதற்கு காரணம் டாஸ்மாக் மதுக்கடைதான் என்று பேசியதற்காக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீதும், அதை ஒளிபரப்பிய கேப்டன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீதும் அவதூறு வழக்கு. தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மீது அவதூறு வழக்குப் போட்ட சாதனையாளர் செயலலிதா தான்!

முதலமைச்சர் செயலலிதா பங்கேற்ற விழாவில் தூங்கி வழியும் அமைச்சர்கள் படத்தை வெளியிட்டதற்காக தினமலர் நாளேட்டின் மீது அவதூறு வழக்கு, அந்நாளேட்டுக்கு வழங்கப்பட்ட அரசு விளம்பரம் நிறுத்தம், இது குறித்து கருணாநிதியின் கருத்தை வெளியிட்டதற்காக முரசொலி ஏட்டின் மீது அவதூறு வழக்கு. நெடுஞ்சாலையில் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை என்ற செய்தி வெளியிட்டதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா மீது அவதூறு வழக்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து எடுக்கப்பட்ட “அங்குசம்” என்ற திரைப்படத்திற்கு வரி விலக்குத் தர அமைச்சர் கையூட்டு கேட்டதைக் கண்டித்து கருத்துக் கூறிய இயக்குனர் மனு கண்ணன் மீதும் அதை வெளியிட்ட நக்கீரன் இதழ் மீதும் அவதூறு வழக்கு என வாரம் தவறாமல் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.

அப்பல்லோ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் அவர்களைப் பார்க்கப்போன செயலலிதா, செருப்புடன் உள்ளே சென்றார். தீவிர சிகிச்சை அறைக்குள்  செல்வோர் செருப்பை வெளியில் விட்டுச் செல்வது மருத்துவத் தேவையாகும். செருப்பைக் கழற்றிவிட்டு வருமாறு செயலலிதாவைக் கேட்டுக் கொண்டார் அங்கிருந்த மருத்துவ வல்லுநர் கருணாநிதி. மறுநாள் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்; அரசு அதிகாரிகளைக் கடமையாற்ற விடாமல் தடுத்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு!

செயலலிதா ஆட்சிக்கெதிராக கூர்மையான திறனாய்வு வெளியிடும் சுவரொட்டிகளை அச்சிடக் கூடாது என அச்சகங்களுக்கு காவல்துறையின் வாய்மொழி ஆணை வழங்கப்பட்டுள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் காவல்துறை தலையீடு கூடிவருகிறது.

நடைமுறையில் ஒரு அவசர நிலை ஆட்சி செயலலிதா தலைமையில் நடந்து வருகிறது. ஒரு வாய்க்கால் மதகு திறப்பதாக இருந்தாலும், ஒரு பொதுக் கழிப்பிடம் திறப்பதாக இருந்தாலும் அ.இ.அ.தி.முக வினர் இரண்டு பானையில் குடிதண்ணீர் வைப்பதாக இருந்தாலும் அவை “அம்மா ஆணைக்கு இணங்க” நடைபெறுவதாக அறிவிக்கப்படும் அருவருக்கத் தகுந்த இழிநிலை ஓர் ஆட்சி முறையாகவே நிலைப்பெற்றுவிட்டது.

தமிழ்நாட்டு இளையோர் மற்றும் சனநாயக சக்திகள் இதனை நாள்தோறும் பார்த்து நகைத்து நகர்ந்து விடுவதும், அதுவே நாளடைவில் பழகி மரத்துப் போவதும் தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. இதுதான் ஆளும் தலைவர் களுக்கு இயல்பு என்று சகித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டால் அடுத்துவரும் ஆட்சியாளர்கள் இதைவிடக் கேவல மான நடைமுறைகளை மக்கள் ஆட்சியின் பெயராலேயே உருவாக்கி விடுவார்கள்.

இத்தகைய ஆட்சி முறையையும் அரசியல் பண்பாட்டையும் எதிர்த்து சனநாயக நெறியையும், பண்பாட்டையும் நிலை நிறுத்த பொதுக் கருத்து உருவாவதும், போராட்டங்கள் வெடிப்பதும் தமிழ்நாட்டின் இன்றைய தேவை ஆகும்.