எதிர்காலச் சமூகத்தைக் கட்டமைக்கும் மிகப் பெரிய பொறுப்பைக் கொண்ட “குழந்தை வளர்ப்பு’’ கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான மேற்கத்தியத் தாக்கத்திலும், உலகமயத்தின் நுகர்வுப் பண்பாட்டுச் சீரழிவிலும் சிக்கியிருக்கிறது.

இளம் பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையில் அறியாமையின் காரணமாகவும், பொறுமை யின்மை மற்றும் நேரமின்மை உள்ளிட்ட அவசரப் போக்கின் காரணமாகவும் நம் மண்ணுக்குரிய மரபுகளை மறந்து வருகின்றனர். மேற்கத்திய முறையை பின்பற்றுகின்றனர். அதனால் பிறந்த குழந்தைகளுக்கு உளவியலாகவும் உடலியலாகவும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கூட்டுக்குடும்ப அமைப்பு முறை சிதறிப் போனபிறகு வீட்டில் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இல்லாமல் போனதால் மிகப் பெரிய அளவில் ஏற்பட்ட பாதிப்பு பச்சிளம் குழந்தை வளர்ப்பில் தான். (“பெரியவர்கள்’’ என்று இங்கே குறிப்பிடுவது இன்றைய இளம் பெற்றோர்களின் தாத்தா- பாட்டிகளை- பிறந்த குழந்தைகளின் தாத்தா- பாட்டிகளை அல்ல)

தாய்மொழித் தமிழைவிட ஆங்கிலத்தை உயர்வாகக் கருதும் போன தலைமுறை பெற்றோர்களின் வளர்ப்பில் வளர்ந்த இன்றைய இளம் பெற்றோர்கள் வளர்க்கும் குழந்தைகள் “பிராய்லர் கோழிகளைப்’’ போல வளர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட மாதத்திலும் ஒரு குறிப்பிட்ட எடைக்குக் குழந்தைகள் வளர்க்கப்படவேண்டும் என்பதே இன்றைய பெரும் பாலான இளம் பெற்றோர்களின் குறிக்கோள் மற்றும் சவால்.

குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், ஒரு நாளைக்கு எத்தனை முறை - எவ்வளவு நேரம் பால் குடிக்க வேண்டும், எத்தனை முறை சிறுநீர் - மலம் கழிக்கவேண்டும், சிறுநீரும் - மலமும் என்ன நிறத்தில் தன்மையில் இருக்க வேண்டும், எத்தனை முறை எவ்வளவு நேரம் அழவேண்டும் என்பது வரை குழந்தையின் அசைவுகள் அனைத்தையும் பட்டியல் போட்டுக் கொடுக்கிறது ஆங்கில மருத்துவம். இதில் சிறு பிசகு ஏற்பட்டாலும் பெற்ற மனது பதறித்துடித்து உடனடியாக மருத்துவரை நாடுகிறது.

“அழ அழத்தான் பிள்ளை ஊறும்’’ என்பதும் “அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்’’ என்பதும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்து இப்போது மறந்து போன நம்மூர் பழமொழிகள். இப்போது, குழந்தை தூங்கிக் கொண்டிருந் தாலும் இரண்டுமணி நேரத்துக் கொருமுறை அதை எழுப்பி கட்டாயமாகப் பால் கொடுத்து, இப்படிப் பசியில்லாமல் கொடுத்த பால் செரிப்பதற்காக என்று சொல்லி “கிரைப் வாட்டர்’’ கொடுப்பதும் வாடிக்கையாகிப் போய்விட்டது.

இன்னொருபுறம் ஒரு முறையில் 20 நிமிடங்கள் வரைதான் பால் கொடுக்கலாம் என்பதும் மருத்துவ அறிவுரையாக இருப்பதால் கூடுதல் பசியில் குழந்தை அழும்போது வலுக்கட்டாயமாகப் பால் மறுக்கப் பட்டு குழந்தையின் வாய் ரப்பர் வைத்து அடைக்கப்படுவதும் சத்தமில்லாமல் நடந்து கொண்டு தான் உள்ளது.

பசியில்லாமல் பால் திணிக்கப்படும் போது செரிமானப் பிரச்சினையும், வயிற்றுக்கோளாறுகளும், கக்கலும், வயிற்றுப்போக்கும் ஏற்படுவது தவிர்க்கமுடியாத தாகிறது.

“குறைந்தது ஆறுமாதம் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் உணவாக கொடுக்கப் படவேண்டும். தண்ணீர் கூட கொடுக்கத் தேவையில்லை என்கிற அளவுக்குத் தாய்ப்பாலில் அத்தனை சத்துகளும் மிகுதியாக உள்ளன,’’ என்று சொல்லிக் கொண்டே மருந்துச் சீட்டில், “காலையில் 3 சொட்டு மல்டி வைட்டமின் டிராப்ஸ் - மதியம் 3 சொட்டு கால்சியம் டிராப்ஸ் - இரவில் 3 சொட்டு அயர்ன் டிராப்ஸ்’’ என்று எழுதுகிறார் மருத்துவர். “இந்தச் சத்துகள் எனது தாய்ப்பாலில் இல்லையா?’’ என்று எதிர்க்கேள்வி கேட்காமல் மருத்துவர் சொல்லை வேதமெனக் கடைப்பிடிக்கிறார்கள் இன்றைய இளம் தாய்மார்கள்.

தாய் உண்ணும் உணவின் தன்மை அவரது தாய்ப்பாலில் இருக்கு மென்பதால்தான் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலம்வரை தாயின் உணவில் பத்தியம் காக்கப்பட்டது நம் மரபில். குறைந்தது ஒரு மாத காலம் வரை தண்ணீர் கூட தாய்க்கு அளந்து அளந்துதான் கொடுப்பார்கள் அந்தக் காலத்தில். எடுத்துக்காட்டாக பூண்டு, இஞ்சி போன்றவை தாயின் உணவில் அதிகம் சேர்க்கப்படும்.

ஆனால் இப்போது குழந்தை பிறந்த அடுத்த நொடியே ஹார்லிக்ஸ் தொடங்கி பீட்ஸா வரை (மருத்துவரின் அனுமதியின் அடிப்படையில்) அனைத்தும் தாய்மார்களின் உணவாகிப் போகிறது. அதிகம் பால் சுரப்பதற்காக சுறாப் புட்டும், நாட்டுக்கோழி சூப்பும், பூண்டுக் குழம்பும் தாய்க்கு உணவாகக் கொடுத்த காலம் மாறி, “கேலக்ட்’’ (galact) போன்ற பவுடர் களைப் பாலில் கலந்து குடித்தும் ”டொமிரிடோன்’’ (domperidone) போன்ற மாத்திரைகளை உட் கொண்டும் பால்சுரப்பு செயற்கையாகத் தூண்டப்படுகிறது.

குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதும், ஈரம்பட்டவுடன் தூக்கம் கலைந்து எழுந்திருப்பதும் இன்று நேற்றல்ல காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் பழக்கம். ஒருவேளை தூக்க அசதியில் குழந்தை ஈரத்தில் தூங்கினாலும் கூட ஈரத்தை அப்புறப்படுத்தி படுக்கைச் சூழலை மாற்ற வேண்டியது தாயின் பொறுப்பாக இருந்த காலம் மாறிவிட்டது “டயாபர்’’ என்கிற பெருவரத்தினால். இரு பத்து நான்கு மணி நேரமும் டயாபர் போட்ட குழந்தைகளை இன்று அதிகம் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து டயாபர் அணிவித்து விடும்போது ஆசனவாய்ப் பகுதி மற்றும் அரையிடுக்குகளில் காற்றோட்டம் தடைபடுகிறது. இதனால் தோல்வறட்சி, தோலில் அரிப்பு, புண் போன்றவை ஏற்படும் என்பது பெரும்பாலும் எல்லோரும் அறிந்த பொதுவான பிரச்சினைகள். இதைவிடக் கொடுமையாக டயாபர் தயாரிப்பில் சேர்க்கப்படும் TBT என்ற வேதிப் பொருள் குழந்தை களின் பாலுணர்வு சுரப்பிகளில் (Sex harmones) பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்ற உண்மை எத்தனை அம்மாக்களுக்குத் தெரியும்.

குழந்தைக்கு ஐந்து மாதங்களானதுமே தினமும் காலையில் கால் இடுக்கில் குழந்தையை உட்காரவைத்து மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய காலத்தை நவீன டயாபர்களில் வேகமாகத் தொலைத்து வருகிறோம்.

எத்தனை முறை மலம் கழித்தாலும் சுத்தமான வெது வெதுப்பான நீர் கொண்டு கழுவி விடுவதையே ஆரோக்கியம் என்று சொல்கிறது நமது மரபு. ஆனால் இன்றோ நீர் கொண்டு கழுவத் தேவையில்லை என்ற நிலைக்கு மாறிவிட்டோம். “பேபி வைப்ஸ்” என்று மிதமான ஈரத்துடன் இலேசான மணத்துடன் பயன்படுத்தித் தூக்கியெறியும் மென்மையான காகிதத் துடைப்பான்களைத் தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இதற்காக மட்டுமல்ல தும்மும் போதோ, கக்கலெடுக்கும் போதோ, சாதாரணமாக முகம் துடைக்கவோ, உடல் துடைக்கவோ, வியர்த்தால் துடைக்கவோ கூட இந்தத் துடைப் பான்கள் தான் பயன்படுத்தப் படுகின்றன.

பாட்டிமார் குழந்தையைக் குளிப்பாட்டுவதே ஒரு தனிக் கலை - அழகு, மிகவும் நளினமான செயல். காலை எழுந்ததுமே உச்சிமுதல் பாதம் வரை எண்ணையால் வருடி விட்டு இளவெயிலில் கொஞ்ச நேரம் கிடத்தி, பின் இளஞ்சூடான தண்ணீர் கொண்டு கை கால்களை நன்றாக நீவிவிட்டு தன் கால்களில் குழந்தையைக் கிடத்திக் குளிப்பாட்டியபின் சாம்பிராணிப் புகை போடுவது நமது மரபில் உண்டு.

எத்தனை விலைஉயர்ந்த “அறை வாசனையூட்டிகளாலும்’’ (room freshners) உருவாக்கிட முடியாத இனிமையான, மனதுக்கு அமைதியான, சூழலைக் குழந்தைக்கு சாம்பிராணிப் புகை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இன்று இத்தனையையும் செய்ய ஆங்கில மருத்துவர்கள் தடைவிதித் திருக்கிறார்கள். குளிப்பதற்கென்றே விற்கப்படும் “டப்பு’’களில் (TUB) வைத்து குழந்தையைக் குளிப்பாட்டுவது போன்று ஏதோ ஒன்று செய்யப்படுகிறது.

குழந்தை வளர்ப்பில் அதிகம் படித்தவர், சராசரியாகப் படித்தவர் என்று பராபட்சம் இல்லாமல் கண்மூடித்தனமாக எல்லோரும் பின்பற்றும் இன்னுமொன்று மிகப் பெரிய அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான”ஜான்சன் & ஜான்சன்’’ தயாரிப்பில் சோப், எண்ணெய், ஷாம்பு, க்ரீம் என்று சகலத்தையும் குழந்தைக்குப் பயன்படும். பிறந்த குழந்தையைப் பார்க்க வருபவர்களில் மிகப் பெரும்பாலா னவர்கள் “ஜான்சன் & ஜான்சன்’’ பொருள்களையே குழந்தைகளுக்குப் பரிசுப்பொருளாக வாங்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எதிலீன் ஆக்சைட், ஜான்சன் அன்ட் ஜான்சன் பொருட்களில் இருப்பதாக 2007ல் வழக்கு தொடரப்பட்டு அது நிருபிக்கப் பட்டு கடந்த ஜூன் 24ம் தேதி முதல் மும்பை முலுந்தில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆலையின் அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நிறுத்தி (சஸ்பெண்ட்) வைத்துள்ளது.

காலங்காலமாகக் குளியலுக்குப் பயன்படுத்திய கடலைமாவு இன்று வெறும் பஜ்ஜிக்கு மட்டுமே என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கடலைமாவுடன் பயத்தமாவும் கஸ்தூரி மஞ்சளும் சேர்த்துக் குளிப்பாட்டித்தான் நம் அம்மாக்களை நம் பாட்டிகள் வளர்த்தார்கள் என்பது இன்றைய இளம் தாய்மார்களில் எத்தனை பேருக்குத் தெரியும். சுத்தமான தேங்காய் எண்ணெயை பசும்பால் சீரகம் சேர்த்துக் காய்ச்சி உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்துப் பாதுகாத்த பாரம்பரிய பழக்கத்தை இன்று ஜான்சன் அன்ட் ஜான்சன் பொருட்கள் மோடிவித்தை செய்து மறைந்து போகச் செய்துவிட்டன.

நெற்றிப்பொட்டின் மையத்தில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியைத் திறம்பட இயங்கச் செய்வதற்காக அந்த இடத்தைத் தொட்டு இலேசாக அழுத்தம் கொடுத்து வட்ட இயக்கத்தில் கடிகாரச் சுற்றிலும் எதிர்க்கடிகாரச் சுற்றிலும் சுற்றி வைக்கப்பட்ட பொட்டு இன்று வெறும் அழகுக்காகவும், திருஷ்டிக் கழிப்புக்காகவும் என்று வைக்கப்படுவது வருத்தத்திற்குரியது.

அரிசியை பொன்னிறமாக வறுத்து கருப்பட்டி சேர்த்துக் காய்ச்சி இறுகவிட்டு எடுத்து வைத்து தேவைப்படும் போதெல்லாம் ஒரு துளி நீர்விட்டு கரைத்து அதை நெற்றிப்பொட்டாக பௌர்ணமி நாளின் வட்ட நிலா போல் வைத்த நம் பாரம்பரியப் பழக்கம் “அய்டெக்ஸ்’’ கண்மைகளில் காணாமல் போனது. யானைமுடி வளையலும், வசம்பு கட்டிய பாசியும் குழந்தையின் அழகைக் கெடுப்பதாக இளம் பெற்றோர்கள் எண்ணுகிறார்கள்.

குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டும் கிலுகிலுப்பையில் தொடங்கி குரங்கு பொம்பை, கரடி பொம்மை, என்ற அனைத்துமே இன்று பிளாஸ்டிக்கால் செய்யப் பட்டவையாகவே மிகப் பெரும் பாலும் உள்ளன. “3 வயதுக்குட் பட்ட குழந்தைகள் கையில் கொடுக்க வேண்டாம்’’ என்று அட்டையில் (மிகமிகச் சிறிய அளவில்) அச்சிடப்பட்டு விற்கப் படுபவை அவற்றில் அதிகம் (சிகரெட் உடல் நலத்துக்குக் கேடு என்று எழுதி விற்கப்படுவது போல்) வாங்கும் நுகர்வோருக்கும் அதில் பெரிய கவனம் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய செய்தி.

கையில் சிக்கும் எல்லா பொருட்களையும் உடனடியாக வாயில் வைப்பது ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளின் இயல்பு. அவர்கள் கையில் எதைத் தரலாம் எதைத் தரக்கூடாது என்பதைப் பெற்றோர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாகப் பல் முளைக்கும் நாள்களில் வாயில் வைத்துக் கடிப்பதற்கு வசதியாக நம் மூரில் தயாரிக்கப் பட்ட மரப்பாச்சி பொம்மைகள், தலையாட்டி பொம்மைகள், மரச்செப்பு சாமான்கள், பனைஓலைப் பொருட்கள் எல்லாம் பளபளக்கும் பிளாஸ்டிக் பொம்மை களிடத்தில் தோற்றுப்போய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பார்பி டாலும், டெடி பியரும், நம் மண்ணை விட்டுக் குழந்தைகளை வெகுதூரம் கடத்திச் செல்கின்றன.

பெரும்பாலான இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தை எப்போது மூன்று மாதத்தைக் கடக்கும் என்று மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படிநிலை வாரியாகக் கடைகளில் கிடைக்கும் செரிலாக் 1,2,3.. அல்லது ஃபெரக்ஸ் 1,2,3.. (ஆப்பிள், வெண்ணிலா, ஸ்ட்ரா பெரி, சாக் லேட் என்று இதில் பல சுவைகள் வேறு) போன்ற அரைதிட  உணவுகளைக் கொடுக்கத் தொடங் குவதற்குத்தான் அந்த ஆர்வம்.

போன தலைமுறை வரை வீட்டி லேயே தயாரித்துக் கொடுத்த பொறிஅரிசிக் கூழ், ராகிக் கூழ், சத்துமாவு கூழ், ஓமம் சேர்த்த அரிசிக்கூழ் போன்றவற்றைவிடவும் அட்டைபெட்டிகளில் அடைத்து விற்கப்படும் செரிலாக் ஃபெரக்ஸ் தான் சிறந்தது தரமானது ஆரோக் கியமானது உயர்வானது என்று எண்ணுகிறது இன்றைய இளம் தலைமுறை. ஐந்து மாதங்களான குழந்தைக்குத் தினமும் இரண்டு பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் பிஸ்கட் பாலில் நனைத்துக் கொடுக் கப்படவேண்டும் என்பது எழுதப் படாத விதியாகிப் போனது.

குழந்தையை ஆராரோ தாலாட் டுப் பாடி தூங்கவைக்கும் வேலை யை இன்று பல வீடுகளில் சன் மியூசிக், ஜெயா மியூசிக், மெகா மியூசிக், போன்ற தொலைக் காட்சி கள்தான் செய்கின்றன.

குழந்தை தும்மினாலும், செருமி னாலும், இருமினாலும், கூடுதலாக ஒரு முறை மலம் கழித்து விட் டாலும் அவ்வளவு ஏன் பத்துநிமி டம் தொடர்ந்து வீரிட்டு அழுது விட்டாலும் கூட உடனடியாக மருத்துவமனைக்கு விரையும் போக்கை இளம் பெற்றோர்களி டத்தில் பார்க்க முடிகிறது. இது மட்டுமல்லாமல் மாதம் ஒரு முறை குழந்தையைக் கட்டாயம் மருத்துவ மனைக்குக் கொண்டுபோய் எடை போட்டு பார்த்து எந்த விதத்திலும் ஆரோக்கியக் குறைவு இல்லை என்று மருத்துவரே சொன்னாலும் கூட ஊட்டத்துக்கு ஏதாவது பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குவதைப் பல இளம் பெற் றோர்கள் வழக்கமாகக் கொண்டி ருக்கிறார்கள். தங்களது குடும்ப மாத வரவு செலவு கணக்கில் மளிகைக்கு ஒதுக்குவது போல் மாதாமாதம் ஒரு தொகையைக் குழந்தையின் மருத்துவத்துக்கு ஒதுக்குகிறார்கள்.

கருவுற்ற நாளில் தொடங்கி ஆங்கில மருத்துவத்தின் பரிந்துரைப்படியும் வழிகாட்டுதல்படியும் மட்டுமே தாய்மையை அனுபவிக்கப் பழகிக் கொள்ளும் இளம் தாய் மார்கள் ஆங்கில மருத்துவம் கொடுக்கும் சாவிக்கு ஆடும் பொம்மைகள் போல் மாறிவிடுகிறார்கள். தன் குழந்தைக்குரிய உணவு, மருந்து, போன்றவற்றைத் தனது மரபிலிருந்து, பெறுவதை விடுத்து மருத்துவர் எழுதும் மருந்துச் சீட்டின் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புப் பொருட்களைச் சார்ந்தே குழந்தைகளை வளர்க்கிறார்கள்.

டயாபர், பேபி வைப்ஸ் மற்றும் மேலே குறிப்பிட்ட க்ரீம் எல்லாமே பனி அடர்ந்த குளிர் நாடுகளில் நீரின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நோக்கில் கண்டுபிடிக்கப் பட்டவை. ஆனால் அக்டோபர் மாதத்திலும் அக்னி நட்சத்திரம் அளவுக்கு வெயில் வாட்டி எடுக்கும் தமிழ்நாட்டிலும் அதே பொருட்களைப் பயன்படுத்து பவர்களைப் படித்த மற்றும் பணம்படைத்த முட்டாள்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தன் வாயில் அம்மா கொடுப்பதை மறுக்கும் உரிமை கூட இல்லாத பச்சிளம் குழந்தைக்கு எதைக் கொடுக்கலாம் எதைக் கொடுக்கக் கூடாது என்பதைத் தீர ஆராய்ந்து கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தாயின் தலையாய கடமை.

முதலில் நம் குழந்தைக்காக வீட்டில் நாமே தயாரிக்கும் உணவுகளை விட கடையில் வாங்கும் உணவுகள் சத்துமிகுந்தவை, சுத்த மானவை, தரமானவை, உயர்வானவை என்ற எண்ணத்தை இளம் தாய்மார்கள் கைவிடவேண்டும். உணவின் சுவையும், சத்தும், தன்மையும் அதைத் தயாரிப்பவரின் மன நிலையைப் பெருமளவில் பொறுத்தே அமையும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். குழந்தையின் உடல், அறிவு மற்றும் மன வளர்ச்சியைத் தொடக்கம் முதலே நம் மரபு வழிப்பட்டதாக அமைக்கவேண்டுமே தவிர, அதில் கண்மூடித்தனமாக மேற்கத்திய முறையைப் பின்பற்றக் கூடாது.

Pin It