தமிழக மக்களின் விழிப்புணர்வு அரசுக்கு பெரும் நெருக்கடியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு உரிமை, காவிரி உரிமை மீட்பு, மூன்று தமிழர் தூக்கு, மேற்கு மாவட்டங்களில் கெயில் (எரிவாயு குழாய் பதிப்பு) பிரச்சினை, காவிரிப் படுகையில் மீத்தேன் பிரச்சனை.

கூடங்குளம் அணு உலை பிரச்சினை தமிழீழத்திற்கான மாணவர் போராட்டம் என அனைத்து சிக்கல்களுக்கு மக்கள் தெருவில் இறங்கி; போராடுகிறார்கள். அடையாளப் போராட்டங்கள் என இல்லாமல் இடையறாது தொடர்ந்து போராடுகிறார்கள்.

தமிழக அரசோ மக்களின் கோரிக்கையை, மக்களின் போராட்டத்தை முறியடிக்க முயற்சித்து பார்த்தும் முடியாததால், வேறுவழியின்றி மக்களுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக் கொள்ள சட்டமன்றத் தீர் மானங்கள், ஆய்வுக் குழு அமைப்பது வல்லுநர் குழு அமைப்பது போன்ற வழிமுறைகளை மேற்கொள் கிறது.

கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த உ.சகாயம் அவர்கள் மேலூர் வட்டத்திலுள்ள கீழ வளவு, கீழையூர், இ.மலம்பட்டி, மற்றும் செம்மினிப்பட்டி ஆகிய கிராமங்களில் அரசுக்கு ரூ. 16,338/- கோடி ரூபாய் முறை கேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என அறிக்கை அளித்தார். அறிக்கை அளித்த ஆட்சித் தலைவர் சகாயம் 100 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டார்.

புதிய ஆட்சித்தலைவர் அன்சூல் மிஸ்ரா வந்த பின்பு 75 நாட்கள் வரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகஸ்ட் 1 ஆம் நாள் உ. சகாயம் அவர்களின் அறிக்கைகையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்று அதை ஊழலை எதிர்க்கும் அமைப்பினர் வெளியிட்டனர். புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் கிரானைட் ஊழலை படம் பிடித்து வெளியிட்டன. அதன் பின்பு பல்வேறு பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் இச்செய்தியை விரிவாக வெளியிட்டனர். கிரானைட் முறைகேடு முழுக்க முழுக்க அம் பலமான பின் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தமிழக அரசு கிரானைட் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைத்து உள்ளதாக அறிவித்தது.

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தாது மணல் கொள்ளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரின் நடவடிக்கையால் அம்பலமாகியது. தாது மணல் கொள்ளையில் நடவடிக்கை எடுத்த ஆட்சித் தலைவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். அரசு வேறு வழியின்றி தூத்துக்குடி மாவட்ட தாதுமணல் கொள்ளை பற்றி ஆய்வு செய்ய சிறப்புக்குழு ஒன்றை அமைத்தது.

தூத்துக்குடியில் சிறப்புக்குழு

தூத்துக்குடி மாவட்டம் வந்த சிறப்புக்குழு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தாதுமணல் குவாரிகளை ஆய்வு செய்வதுடன் பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் குவாரி தரப்பினருடன் கருத்துக்களை கேட்போம் ஒரு மாத்தில் அறிக்கை அளிப்போம் என அறிவித்தது.

முதலில் 3 நாட்களும் பின்பு 2 நாட்களும் தாது மணல் குவாரிகளிலும், பின்பு 2 நாட்கள் தாது மணல் பிரித்தெடுக்கப்பட்ட கிட்டங்கி (குடோன்களில்) களிலும் ஆய்வு செய்தனர். அனுமதி பெற்ற இடங்களில் முறைகேடாக தாது மணல் அள்ளப்பட்டதை மக்கள் நேரிடியாக காட்டியதுடன், அனுமதி பெறாத இடங்களில் சட்ட விரோதமாக அள்ளப்பட்டு இருப்பதையும் சிறப்புக்குழுத் தலைவரிடமும், குழுவினரிடமும் நேரில் அழைத்து சென்று காட்டினர்.

சிறப்புக்குழுத் தலைவரிடம் மீனவ மக்களும், பொதுமக்களும், மற்றும் குவாரி தரப்பினரும் நேரில் சந்தித்து பேசவும், புகார் மனுவை தந்து பேசவும் அனுமதிக்கப்பட்டனர். நெல்லை, குமரிமாவட்ட மீனவ கிராம மக்களும் சிறப்புக்குழு தலைவரைச் சந்தித்து “அதிகமாக தாது மணல் குவாரி முறைகேடுகள் எங்கள் மாவட்டத்தில்தான் நடை பெற்றுள்ளது. இங்கு வந்து நேரில் ஆய்வு செய்யுங்கள்’’ என புகார் மனுக்களை பல்வேறு ஆதாரங்களுடன் அளித்தனர். அரசுக்கும் மனுக்கள் அனுப்பினர்.

திருச்சி மாவட்ட விவசாயிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள 8 தாதுமணல் குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என போராடியதுடன் சிறப்புக்குழுத் தலைவருக்கு மனுக்களை அனுப்பி வைத்தனர்.

ஒரு மாதம் கழித்து அரசுக்கு சிறப்புக்குழுத் தலைவர் அறிக்கை அளித்தார். ஆனால் அவர் அளித்த அறிக்கை தமிழக அரசால் தற்போதுவரை வெளியிடப்பட வில்லை. உயர்நீதிமன்றம் சீலிட்ட உறையில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்ட பிறகும் கூட, உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கையை அளிக்காமல் பல் வேறு காரணங்களைக் கூறி வருகிறது.

நெல்லை வந்த சிறப்புக்குழு

நெல்லை மாவட்டத்திற்கு வந்த ஆய்வுக்குழுத் தலைவர் 52 தாது மணல் குவாரிகளிலும் 3 நாட்களில் ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த ஆய்வுக்குழுவின் செயல்பாடுகள் ஒப்பீட்டளவிலாவது வெளிப்படையாக இருந்தது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை. ஒவ்வொரு நாளும் எந்தெந்த குவாரிகளில் ஆய்வு நடத்தப்படும் என்பதை பத்திரிக்கையாளரிடம் கூட தெரிவிக்க மறுத்து விட்டனர்.

முதன்முதலில் தாதுமணல் முறைகேடாக கொள்ளையடித்தது கண்டறியப்பட்ட செய்தி, ஆகத்து 6ஆம் நாள் வெளியானது. ஆகத்து 12ஆம் நாள்தமிழக அரசு நியமித்த முதல் சிறப்புக்குழு நேரடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்தது. தூத்துக்குடியில் இடைப் பட்ட ஒரு வாரத்திற்குள்ளே தாது மணல் கொள்ளையர்கள் பல்வேறு முறைகேடுகளை மறைத்தனர். ஆய்வு செய்ய சென்ற சிறப்புக் குழுவுடன் மீனவ மக்களும் உடன் சென்றதால் முறைகேடுகளை மறைத்தததை காட்டிக் கொடுத்து, பத்திரிக்கைகள் மூலம் இவை அம்பலமாகியது.

தூத்துக்குடி தாது மணல் கொள்ளை அம்பலமான பிறகு, நெல்லை மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு முறைக்குக் கேடான தடயங்களை எல்லாம் மூடி மறைத்தனர் தாது மணல் கொள்ளையர்கள்.

தாதுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவான ஆட்களால், ஒவ்வொரு மீனவ கிராம மக்களையும் பிளவுபடுத்த எண்ணற்ற சதி வேலைகள் காவல்துறையினர் துணையோடு மேற்கொள்ளப் பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் அனைவரும் அறிவிக்கப்படாத தாதுமணல் நிறுவன ஊழியர் போல் செயல்பட்டு வருகின்றனர்.

தாதுமணல் கொள்ளையை எதிர்த்து கடந்த ஆறு மாதமாக இடையறாது போராடி வந்த கூத்தென்குழி கிராமத்தில், சூன் 14ஆம் நாள் தாதுமணல் கொள்ளையர்களின் அடியாட்கள் காவல் துறை துணையுடன் ஊருக்குள் புகுந்து வெடிகுண்டு வீசி ஊரையே நிலை குலைய வைத்தனர்.

தாதுமணல் கொள்ளையை எதிர்த்தவர்களின் வீடுகள், உடைமைகள் சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. 2000க்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறி அகதிகள் போல் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். ஊரில் தாதுமணல் கொள்ளையை எதிர்த்து நின்ற 100க்கும் மேற்பட்டவர்கள் மீது வெடிகுண்டு வீசியது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சதி வழக்குகள் போடப்பட்டுள்ளது. மக்கள் கொடுத்த புகார் மனுக்கள் அனைத்தும் காவல்துறை மற்றும் வருவாய்துறையால் குப்பையில் வீசி எறியப்பட்டது.

கூட்டப்புலி, உவரி, கூடுதாழை, கூட்டப்பனை,பெருமணல் போன்ற மீனவ கிராமங்களில், வேலைக்கு வராமலேயே ஒவ்வொருவொருக்கும் மாதம் ரூ. 10,000 முதல் 20,000 வரை சம்பளம் தருகிறோம் எனக் கூறி ஊருக்கு நூறு பேர் வரை ஆள் சேர்க்க முயன்றனர் தாது மணல் கொள்ளையர்கள்.

சாம, பேத, தான, தண்டம் என்ற அனைத்து வழிமுறைகளிலும் கிராமங்களையும் விலைபேச, அச்ச மூட்ட முயன்றனர் தாது மணல் கொள்ளையர்கள். ஆனாலும், இதற்கெல்லாம் பயப்படாமல் தாது மணல்கொள்ளையர்களை எதிர்த்து நின்றனர் மீனவ மக்கள். ஆய்வு செய்ய வரும் சிறப்புக் குழுவை எதிர்நோக்கி நின்றனர்.

இந்நிலையில், அக்டோபர் 17, 18, 19 நாட்களில் ஆய்வு செய்ய சிறப்புக் குழு நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளுக்கு சென்றது. ஆய்வுக்குழு எந்த குவாரிகளுக்கு வருகின்றனர் என வெளிப்படையாக அறிவிப்பு செய்யாததால் மீனவ கிராம மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்தனர். ஆய்வுக் குழு செல்லும் இடம் பத்திரிக்கையாளர்களுக்கு கூட தெரிவிக்கப் படவில்லை. எனவே, பத்திரிக்கையாளர்கள் சிறப்புக்குழுத் தலைவருடன் மட்டும் சென்றனர். ஆய்வுக்குழு செல்லும் அனைத்து இடங்களுக்கும் பத்திரிக்கையாளர் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டனர்.

சிறப்புக்குழுத் தலைவருடன் வேறு ஒரு வாகனத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சென்றார். தாது மணல் கொள்ளையர்களின் அடியாட்களால் அவரது ஆய்வு செய்யும் வாகனம் தாதுமணல் குவாரிக்குள் செல்ல விடாமல் தடுக்கப் பட்டது. ஆட்சித் தலைவர் எதுவும் கூறாமல் வண்டியை விட்டு இறங்கி தாதுமணல் குவாரிக்கு நடந்து சென்றார்.

தாதுமணல் கொள்ளையை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த புதிய தலைமுறை, சன் தொலைக் காட்சி ஊடக செய்தியாளர்கள், ஆட்சித்தலைவர் உடன் வந்திருந்த போதிலும், தாதுமணல் கொள்ளையர்களின் அடியாட்களால் சிறை பிடிக்கப்பட்டனர். உடன் வந்த பத்திரிக்கையாளர்கள், சிறைபிடிக் கப்பட்ட செய்தியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிட்டு விடுவிக்காவிட்டால் மறியல் செய்வோம் எனப் போராடிய பிறகே, ஆட்சித்தலைவர் தாது மணல் கொள்ளையர்களிடம் பேசி விடுவிக்க செய்தார். ஊடக செய்தியாளர்களை தாதுமணல் கொள்ளையர்களின் அடியாட்கள் பிடித்து வைத்த போது, வள்ளியூர் காவல் துறைகண்காணிப்பாளர் ஸ்டான்லி ஜோன்ஸ் அந்த இடத்திலேயே இருந்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தாதுமணல் கொள்ளையர்களுக்குத் துணை நின்றார்.

மக்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் மட்டும்தான் ஆய்வுக்குழு எங்கெங்கு செல்கிறது எனத் தெரிய வில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் ஆய்வுக்குழு செல்லுமிடத்திலும் தாது மணல் கொள்ளையர் களால் கூட்டி வரப்பட்டோர் நூற்றுக்கணக் கானோர் இருந்தனர். எந்த ஆய்வு நடக்கும் இடத்திற்கும் மீனவ மக்களும், பொதுமக்களும் வராமல் தடுக்கப்பட்டனர். ஆனால், ஆய்வுக் குழு வருகின்ற இடங்கள் அனைத்தும் தாதுமணல் கொள் ளையர்களுக்கு தெளிவாக தெரிந்தே இருந்தது.

இரண்டாவது நாள் பத்திரிக்கையாளர்களை அழைத்த மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பாளர் (பி.ஆர்.ஓ.) உங்களுக்கு பாதுகாப்பு எங்களால் கொடுக்க முடியாது எனத் தெரிவித்து, உங்களை நாங்கள் அழைத்து செல்ல மாட்டோம் என அறிவித்தார். கூடன்குளம், உவரி, பழவூர், திசையன்விளை காவல் நிலைய ஆய்வாளர்கள் தாதுமணல் கொள்ளையை எதிர்க்கும் தலைவர்கள் சிலரை அலை பேசியில் அழைத்து யாரும் ஆய்வு நடக்கும் இடத்திற்கு செல்லக் கூடாது, சென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளனர்.

மீனவ மக்கள் சிறப்புக்குழுத் தலைவரிடம் நேரில் பேசி சந்திக்க வேண்டும் என கோரி போராடி அனுமதி வாங்கினர். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அவரை அனைத்து கிராம மீனவ மக்களும் சந்தித்தனர். ஆய்வு வெளிப்படையாக செய்ய வேண்டும், அனுமதி பெறாமல் தாதுமணல் அள்ளப்பட்ட குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும், மீனவ கிராம மக்களை ஆய்வுக்குழு அவர்களது கிராமத்தில் நேரில் சந்தித்து தாதுமணல் முறைகேடுகளை பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மூன்று நாட்களில் 52 தாது மணல் குவாரிகளை ஆய்வு செய்து முடித்து விட்டோம் என தற்போது அறிவித் துள்ளது சிறப்புக்குழு. 6 குவாரிகளை மட்டும் கொண்ட தூத்துக் குடியில் ஐந்து நாட்களை எடுத்த ஆய்வுக்குழு இங்கு 3 நாட்களில் ஆய்வு அனைத்தும் முடித்து விட்டோம் என்பது வேடிக்கையாக உள்ளது. மக்களின் கோரிக்கைக்கு பின்பு மீண்டும் 2 நாட்கள் ஆய்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது சிறப்புக்குழு.

உண்மையை கண்டறிய செய்ய வேண்டியவை

நெல்லை மாவட்ட 52 குவாரி களும் கடலோர கிராமத்தின் அருகே அமைந்து உள்ளதால், கடலோர கிராம மீனவ மக்களை அவர்களது ஊரில் நேரில் சந்தித்தும், ஆய்வு - நடக்கும் இடத்திற்கும் வரவழைத்து அனுமதி பெற்ற, அனுமதி பெறாத தாதுமணல் கொள்ளையர் பற்றி அச்சமின்றி கருத்துத் தெரிவிக்க வாய்ப்புத்தர வேண்டும்.

குவாரிகளை ஆய்வு செய்யும் குழுவில், கடலோரம் முழுக்க வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதால், அவர்களையும் கட்டாயம் இணைக்க வேண்டும்.

அனுமதி பெற்ற, பெறாத குவாரிகளில் நடைபெற்றுள்ள அனைத்து முறைகேடுகளும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் அனைவருக்கும் நன்கு தெரியும். காரணம் முறைகேடு எவ்வளவு நடைபெறுகிறதோ அவ்வளவு கையூட்டு அவர்களுக்கு செல்லும். எனவே இவர்களிடம் தனித்தனியாக ஆய்வுக்குழு அவர்களது எல்லைக்குள் எவ்வளவு முறைகேடு நடைபெற்று உள்ளது என அறிக்கை பெற வேண்டும். ஆய்வில் அவர்கள் கூறாதது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை என அறிவிக்க வேண்டும்.

சிறப்புக்குழுத் தலைவர் மக்களை சந்திப்பது நெல்லையில் உள்ள ஆட்சித்தலைவர் அலுவலகத்திலோ, இராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலோ இல்லாமல் ஒவ்வொரு கடலோர கிராமத்திலும் மக்களை நேரில் சந்திக்க வேண்டும். அப்போதுதான் தாதுமணல் முறை கேடுகள் முழுமையாக வெளிவரும்.

தாதுமணல் முறைகேடுகளை ஆய்வு செய்வதோடு, கடலோர கிராமங்களிலும், கடலில் இருந்து 5 கி.மீ. தூரம் வரை உள்ள கிராமங்களில் தாதுமணல் அள்ளியதால் ஏற்பட்டுள்ள நோயை அறிய மருத்துவக் குழுவை அமைத்து உடல்நல ஆய்வு அறிக்கை (Health Impact Study), மற்றும் உடல்நல சீர் கேட்டால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை அறிய மேற்கொள்ள வேண்டும்.

இதே எல்லைப் பகுதியில் குடிநீர் ஆதாரம் அழிக்கப்பட்டு உள்ளதால், கடந்த 15 ஆண்டு காலமாக மக்களுக்கு குடிநீர் விலைக்கு வாங்கிய வகையில் ஏற்பட்ட இழப்புகளை கணக்கீடு செய்ய வேண்டும்.

கடலோரம் முழுக்க முறை கேடாக தாதுமணல் அள்ளப்பட்டதால் அனைத்து மீனவ கிராமங்களிலும் கடல் அரிப்பைதடுக்க பல கோடி ரூபாயில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

கடலோரம் உள்ள கிராமங் களில் வீடுகள் கடலில் மூழ்கும் நிலை தாதுமணல் கொள்ளையால் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.

கடலோரப் பகுதியில் கிடைத்து வந்த 30 வகையான மீன்கள் தாது மணல் கொள்ளையால் ஆழ்கட லுக்குள் சென்றுவிட்டது. மீன் வளமே அழிந்து வருகிறது. இதையும் ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய வேண்டும்.

கடலோரங்களில் உயிர்ம பன்மையச் சூழல் அழிக்கப்பட்டது பற்றியும், மற்ற சுற்றுச்சூழல் பாதிப்புகளை பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறான முறையில், ஆய்வு செய்யப்படும் போது மட்டுமே தாது மணல் முறைகேடுகளும், அதன் பாதிப்பும் முழுமையாக வெளிக் கொணரப்பட்டதாக இருக்கும்.

தமிழகத்தின் இயற்கை வளங்கள் தாதுமணல், ஆற்றுமணல், கிரானைட் போன்ற அனைத்தையும் பாதுகாக்க, பரகாசுர கொள்ளையர்களால் சூறையாடப்படுவதைத் தடுத்து நிறுத்த மாபெரும் மக்கள் திரள் போராட்டங்ளை தமிழக மெங்கும் முன்னெடுப்போம். ஏதோ தமிழகத்தின் ஒரு பகுதி மக்களின் பிரச்சினை எனப் பார்க்காமல் தமிழகத்தின் வாழ்வாதார, உயிர் நாடியான பிரச்சினை இது என்பதை உணர வைப்போம். இயற்கை சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம்.

Pin It