இடிந்தகரைப் போராளிகளே!

இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கோடி மூலையில் இருந்து கொண்டு, இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக துணிச்ச லோடும், வீரியத்தோடும் சமரசமின்றி போராடி, இந்திய வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ள உங்களை நினைக்கும் போது உள்ளபடியே பெருமையாக இருக்கிறது. உங்களை வாழ்த்தவும், போற்றவும் தமிழக மக்கள் கடமைப்பட்டுள்ளனர்.

தமிழர் நலன், மக்கள் பிரச்சினைகள் என்று அங் கொன்றும் இங்கொன்றுமாக அரசியல், பண்பாட்டுத் தளங்களில் ஒரு சில முன்னெடுப்புகளை மேற்கொள் ளும் எங்களைப் போன்றோருக்கு உங்களது அளப்பரிய தியாகமும், வீரம் செறிந்த போராட்டமும் பல வேளைகளில் பிரமிப்பாகவும், ஊக்கமாகவும் அமை கிறது. உங்களது அர்ப்பணிப்பு. கொள்கை உறுதிப்பாடு, எழுச்சி மிக்க விதவிதமான போராட்ட வடிவங்கள், மத்திய மாநில அரசுகளின் அடக்கு முறைகள் அனைத்தையும் எதிர்கொள்ளும் மன உறுதி, இவற்றை யெல்லாம் எண்ணு கையில், கடந்த 50 ஆண்டு கால இந்திய வரலாற்றில் இதுபோன்ற எழுச்சி மிக்க நீண்ட நெடிய போராட்டம் எதுவும் நடந்திருக்குமா என்ற கேள்வி எங்களுக்குள் எழுகிறது!

எத்தனை பெரிய வழக்குகள் உங்கள் மீது பதிவு செய்யப்பட்டாலும், எவ்வளவு இழப்புகளைச் சந்தித்தாலும், போராட்டத்தைக் கை விடாது முன்னெடுத்துச் செல்லும் பாங்கு எங்களை உண்மையிலே மலைக்க வைக்கிறது; உங்களது துணிவும், மனத்திடமும், கொள்கை உறுதியும் இன்றைய தமிழ் இளைஞர் களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமைகிறது! உங்கள் போராட்டங்களி லிருந்து நாங்கள் கற்றுக் கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் ஏராளமானவை இருக்கின்றன.

இடிந்தகரை என்ற கிராமம் வடஇந்தியாவின் ஒரு பகுதியிலோ புதுதில்லிக்கு அருகிலோ அமைந்திருந்தால் - போராட்டக்குழுத் தலைவர்களில் இரண்டொரு வர் பார்ப்பனராகப் பிறந்திருந்தால் அல்லது வட இந்தியராக இருந்திருந்தால் எழுச்சிமிக்க இந்தப் போராட்டம் அகில இந்திய ஆங்கில ஊடகங்களின் பார்வை யிலே அன்றாடம் பளபளத்திருக்கும்! ஆங்கிலக் காட்சி ஊடகங்கள் உங்களை உச்சி முகர்ந்து, உங்களது போராட்டத்தை ஆகா, ஓகோ வென்று புகழ்ந்து தள்ளி உங்களைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றிருப்பர். உங்களது அணு உலைப் போராட்டம் தொடங்கப்பட்ட அதே கால கட்டத்தில் புதுதில்லியில் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே என்பவரால் ஆரம்பிக்கப் பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை 24 மணிநேரமும் அந்த ஆங்கில ஊடகங்கள் இடைவிடாது காட்டியதை மறக்க முடியு மா?

“மீனவர்கள் முரடர்கள், வன்முறையில் இறங்குபவர்கள், அவர் களது அமைதிவழியிலான அறப் போராட்டம் ஆறு நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்காது’’ என்றெல்லாம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடங் கும் போது ஆருடம் சொன்ன அனைவரும் பின்னர் காணாமல் போய் விட் டனர். “கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பை உயிர் மூச்சாகக் கொண் டுள்ள நீங்கள் வன்முறைகளில் இறங்க மாட்டீர்களா?’’ என்று அரசு இயந்திரங்களும் பல மாதங்களாக எதிர்பார்த்துத்தானே கிடந் தன. உங்களை உசுப்பேற்றி விட்டு, வன்முறையில் ஈடுபட வைத்து, அதைக் காரணம் காட்டி இடிந்தகரை ஊருக்குள் அத்து மீறி நுழைந்து, உங்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டு, உங்களை வன்முறையாளர்களாகச் சித்தரித்து, இப்போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்றெல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் மனப்பால் குடித் ததுண்டு. அவற்றையெல்லாம் நீங் கள் திடமாகவும் தீர்க்கமாகவும் எதிர்கொண்டு, தமிழக காவல் துறையின் தூண்டுதலுக்கு இரையா காமல், மத்திய உளவுத் துறையின் சதி வலைகளில் வீழ்ந்து விடாது, கொள்கையில் உறுதியாக நின்று, எழுச்சிமிக்க போராட்டத்தை தொடர்ச்சியாக கொண்டு சென்ற பாங்கு இந்தியத் துணைக் கண்டத் தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இப்போராட்டத்தை தார்மீகரீதியிலும், சட்டரீதியாகவும், விஞ் ஞானப்பூர்வமாகவும் எதிர் கொள் ளத் திராணியில்லாத மத்திய அரசு, போராடும் உங்கள் மீதும், போராட்டக் குழுவினர் மீதும் நூற்றுக் கணக் கான அவ தூறுகளை அள்ளி வீசிய தையும் இந்த நாடு பார்த்தது. மதச் சிறு பான்மையினரான கிறித்தவர்கள் சிலர் நடத்தும் போராட்டம் என்றும், மீனவர்கள் மட்டுமே பங்கெடுக்கும் போராட்டம் என்றும், வெளிநாட்டில் பணத்தைப் பெற்றுக்கொண்டு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தூண்டி விடும் போராட்டம் என்றும் கூறி, உங்களது போராட்ட உணர்வுக ளையும், தியாகத்தையும் கொச்சைப் படுத்த மத்திய அரசு துளியும் தயங்க வில்லை. இவற்றையெல்லாம் எந்த விமர்சனமும் செய்யாது, அப்படியே வாந்தி எடுத்து பக்கம் பக்கமாக எழுதிய பத்திரிக்கைகளும் இந்த நாட்டில் உண்டு.

நேருக்கு நேர் நேர்மையாக உங்களை எதிர் கொள்ளத் திராணி யற்றுப் போன மத்திய அரசும், இந்திய அணுசக்திக் கழகமும் மறை முகமான, மலிவான திரை மறைவு வேலைகளைச் செய்ய தனது அமைப்புகளை ஏவி விட்டதை தமிழகம் கண்டது. மிகப் பெரிய சனநாயக நாடு என்று பிதற்றிக் கொள்ளும் இந்தியா இவ்வளவு கேவலமான, கீழ்த்தரமான, நேர்மை யற்ற செயல்களை தனது மக்களுக்கு எதிராகவே செய்ய முடியுமா என்ற கேள்வி எங்களுக்குள் எழும்பியது.

மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதிலும், இந்த நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதிலும், சூறையாடுவதிலும், ஏழை எளியவர்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான போராட்டங்களை கொடூரமாக நசுக்குவதிலும், ஆளுகின்ற காங்கிரசுக்கும், ஆளத் துடிக்கும் பாரதிய சனதா கட்சிக் கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை என்பதை உங்கள் போராட்டம் எங்களுக்குத் தெளிவாகப் புரிய வைத்தது. சாமா னிய மக்களின் நலன்களுக்கு கதர்ச் சட்டைகளும், காவிக் கொடிகளும் என்றுமே எதிராக நிற்கின்றன என்பதை இன்றைய நிலையில் எங்களுக்கு உணர்த்திய உங்களுக்கு எம் நன்றிகள். அதே போல தமிழர் களை ஒழித்துக் கட்டு வதிலும், தமிழர் நலன்களை காவு கொடுப்ப திலும் ஆளும் கட்சியான அதிமுக வும், தமிழகத்தை ஆண்ட திமுகவும் ஒரே நேர்கோட்டில் தான் நிற்கின் றன என்பதை எங்களுக்கு உங்களது போராட்டம் தான் நன்கு வெளிச்ச மிட்டுக் காட்டியது.

பாட்டாளி வர்க்க சர்வாதி காரம், வர்க்க முரண்பாடு, ஏகாதி பத்திய எதிர்ப்பு என்றெல்லாம் வாய்கிழியப் புரட்சி பேசினாலும், தமிழர் நலன்களை பலி கொடுப்ப திலும், இதுபோன்ற துரோகங்களை தமிழினத்திற்குச் செய்வதிலும் திமுக, அதிமுகவுக்கு இணையாக மார்க்சிஸ்டு கட்சியும் நிற்கிறது என்ற செய்தியை உங்கள் போராட்டம் தான் எங்களுக்கு சந்தேகத் திற்கு இடமின்றி தெளிவுபடுத்தி யது.

சாதாரண சாமானிய மக்களின் எழுச்சிமிக்க ஒரு போராட்டம் அரசுகளுக்கு எதிராக எப்படி நடத்தப்பட வேண்டும் என்று இந்திய துணைக்கண்டத்தில் செயல் படும் அனைத்து சமூக - அரசியல் இயக்கங் களுக்கும் உங்கள் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் அரசியல் பாடமாக இனி அமையும். தேர்தல் களத்தில் வாக்குகளை மட்டுமே எதிர் பார்த்து நாடகமாடும் எந்த ஒரு அரசியல் கட்சியையும் நம்பியோ, பணத்தை வைத்தோ உங்கள் போராட்டத்தை நகர்த்தாமல், போராடும் மக்களின் மனஉறுதி, கொள்கைப் பிடிப்பு, அர்ப்பணம், தியாகம் ஆகியவற்றை மட்டுமே மூலதனமாக்கி போராட்டக்களத்தில் சமரசமின்றி நிற்க முடியும் என்பதை நிரூபித்தது உங்கள் ஈராண்டு காலப் போராட்டம். உங்கள் போராட்டத் தலைமையின் எளிமையும், கொள்கைப் பிடிப்பும், அறிவாற்றலும், தெளிவும், தியாகமும், தீரமும் ஆளும் அரசுகளை இன்றும் மிரட்டுகின்றது.

கட்சிக்கூட்டங்களுக்கு பணத்தை வாரி இறைத்து, குவாட்டர் பாட்டிலும், பிரியாணிப் பொட் டலங்களும் வாங்கி கொடுத்து, ஆடு மாடுகள் போல அடிமைக் கூட்டத்தைச் சேர்க்கும் இன்றைய அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், ஆயிரக் கணக்கான அடித்தட்டு மக்களை அர்ப்பண உணர்வோடு அரசியல் ரீதியாக அணிதிரட்டியதும், எழுச்சி யோடு அணுஉலைப் போராட்டங் களில் தொடர்ச்சியாகப் பங்கு பெற வைத்து, இந்தியாவையே உலுக்கிய தும் உங்களது போராட்டம் தானே!

சகுனிகளையும், சந்தர்ப் பவாதி களையும்,சண்டியர்களையும் மட்டுமே அரசியல் சாணக்கியர்களாக இந்திய / தமிழக அரசியல் தளங்களில் பார்த்துப் பழகிவிட்ட நம் மக்களுக்கு உங்களது போராட்டத் தலைமையின் சமரசமற்ற போக்கும், நேர்கொண்ட பார்வையும், அடக்குமுறைகளுக்கு அஞ்சா மல் அரசுகளை எதிர்த்து நிற்கும் அறச்சீற்றமும், பெரும்பாலான தமிழக மக்களுக்குள் உருவாக்கிய பிரமிப்பை யார் மறுக்க முடியும்?’’

கூடங்குளம் அணுஉலைகள் உலகத்திலே பாதுகாப்பானவை” என்று “அணு குண்டு விஞ்ஞானி” அப்துல்கலாம் அள்ளிவிட்டுப் போய் ஆண்டுகள் இரண்டு ஆன பின்னரும், முதல் அணு உலை யையே ஓட்ட முடியாமல் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்; வால்வு பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு திருதிருவென விழித்துக் கொண்டிருக்கின்றனர், கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகள். அரசவைக் கோமா ளியும் ஆளும் வர்க்க அண்டப் புளுகருமான அப்துல் கலாமின் வாதங்கள் எவ்வளவு அபத்தமானவை; அயோக்கியத் தனமானவை; முரண் பாடுகளைக் கொண்டவை என் பதை எங்களுக்குப் புரிய வைத்தது உங்கள் போராட்டம். அதோடு இந்த அப்துல் கலாம் யார்? அவர் எந்த வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறார் என்பதையும் சாமானியருக்கும் சிரமமின்றி விளங்க வைத்தது உங்கள் போராட்டமே!

“கூடங்குளத்தில் அணு உலைகளை நிறுவுவதற்குச் செல வளித்த தாகச் சொல்லப்படும் கோடிக் கணக்கான ரூபாய்க்கு அணுசக்தித் துறை வெளிப்படையாகக் கணக்கைக் காட்ட வேண்டும்” என்று உதயகுமாரும், புஷ்ராயனும், மை.பா.வும், முகிலனும் தொடர்ச்சியாக எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லத் துப்பில்லாத அணு சக்தித்துறை ஓடி ஒளிந்ததை தமிழக மக்கள் கண்களால் கண்டார்களே! “அணு உலையிலிருந்து வெளிவரும் அணுசக்திக் கழிவுகளை எங்கு கொட்டப் போகிறீர்கள்? அதை எவ்வாறு கையாளப் போகிறீர்கள்? அதற்கான திட்டம் என்ன”, என்பன போன்ற கேள்விகளுக்கு அணுசக்தித் துறை அதிகாரிகளும், அப்துல்கலாம் போன்ற அணு குண்டு விஞ்ஞானி களும், எம்.ஆர். சீனிவாசன் போன்ற ஆளும் வர்க்க அதிமே தாவிகளும், நாராயணசாமி போன்ற உளறுவாயர்களும் ஆளுக்கு ஒன்றாக முரண்பட்டுப் பேசி அவமானப்பட்ட நிகழ்வு களைத்தான் தமிழக மக்கள் எளி தில் மறக்கமுடியுமா?

“அசைக்கவே முடியாது” என்று இறுமாந்திருந்த அணுசக்தித்துறை உங்களது அடுக்கடுக்கான கேள்விக் கணைகளால் அதிகமாகவே ஆடிப் போனது; தங்களைத் தட்டிக் கேட்கவே இயலாது என்று எண்ணியிருந்த இந்திய அணுசக்திக் கழகம், நீங்கள் எழுப்பிய கேள்வி களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி திக்குமுக்காடி, கேவலப் பட்டதை இந்தியக் துணைக் கண்டமே கண்டு களித்தது! எதற் குமே வாய்திறக்காத இந்திய மவு னப் பிரதமர் மன்மோகன் சிங் கூட கூடங்குளம் அணுமின் நிலை யம் தொடர்பாகவும், உங்கள் போராட்டங்கள் தொடர்பாகவும் திருவாய் மலர்ந்து ஏதோதோ உளறி, அவரும் அகில உலக அரங்கங்களில் அவ மானப்பட்டுப் போனதை உலகமே பார்த்தது!

இயற்கை வளங்களைச் சூறை யாடும் கிரானைட் கொள்ளையர் களையோ, இலட்சம் கோடிகளில் தாதுமணல் மற்றும் ஆற்றுமணல் கொள்ளையில் ஈடுபடும் மணற் கொள்ளையர்களையோ குண்டர் தடுப்புச்சட்டத்தில் அல்லது தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலோ அடைக்க மத்திய, மாநில அரசு களுக்குத் திராணியில்லை. இலட்சம் கோடிகளில் கொள்ளையடித்த இவர்களது நிழலைக் கூட நெருங்க முடியாமல் திணறுகிறது, உளவுத் துறையும், காவல்துறையும், வருமான வரித்துறையும், பிற துறைகளும். இந்த கொள்ளையர்கள் பொது வளங்களைச் சுரண்டுவதற்கும், சூறையாடுவதற்கும், கொள்ளைய டிப்பதற்கும், கொழுத்துக் கொண்டாட்டம் போடுவதற்கும் மாநில, மத்திய அரசுகளும், அதன் துறைகளும் துணை நிற்கின்றன. ஆனால் வாழ்வாதார உரிமைகளுக்கு, தங்களது எதிர்கால சந்ததியினரின் வாழ் வுரிமைகளுக்காகப் போராடும் உங்களை தேச விரோதிகளாக, வன் முறையாளர்களாக சித்தரிப்பது எவ்வளவு பெரிய கொடுமை!.

உங்கள் கடலோரப் பகுதியில் பாசி பொறுக்கி தனது வயிற்றைக் கழுவும் உங்கள் ஊரைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெரியவர் லூர்து சாமியும், அப்பாவி நசரேனும் இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்கத் துணிந்தவர்களாம்! தேசத்துரோகிகளாம்! கப்பற்கடை, விமானப்படை, இராணுவம் ஆகிய முப்படைகளையும் தன்னகத்தே கொண்டு பக்கத்து நாடுகளை யெல்லாம் மிரட்டிக் கொண்டு இருக்கும் இந்திய வல்லாதிக்த்தை எதிர்த்து, கோவணம் மட்டுமே கட்டி கடலோரமாக தனது வயிற் றுப் பிழைப்புக்கு பாசிபொறுக் கும் இந்த எழுபது வயது முதியவர் லூர்துசாமி ஏவுகணை வீசத் துணிந்தார் என்ற குற்றச்சாட்டை வாசிக்கும் போது, இந்திய அரசு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை நமக்கு நிரூபிக்கிறது. குண்டர் தடுப்புச் சட்டத்தை இந்த அப்பாவிகள் மீது பாய்ச்சிய காவல் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும், மணற் கொள்ளையர் மீதும், நாட்டைச் சுரண்டுவோர் மீதும் பாய்ச்சத் துணிவார்களா?

 இயற்கையின் மீதும், இயற்கை வளங்கள் மீதும், கடல் தாயின் மீதும் உங்களுக்கு இருக்கும் பற்றும் பாசமும் இந்த ஆட்சியாளர்களுக்கு துளியளவும் உண்டா? எல்லாவற் றையும் கடைச் சரக்காகவும் விற் பனைக்கான சந்தைப் பொருளா கவுமே பார்த்துப் பழகிவிட்ட கார்ப்பரேட்டுகளுக்கும், அவர்களுக் காக எதையும் செய்யத் துடிக்கும் ஆட்சியாளர்களுக்கும் இயற்கை, கனிம வளங்கள், கடல், மணல், தண்ணீர் இவை அனைத்தும் பணத்தைக் கொட்டும் இயந்திரங் களே! மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல், நம் சந்ததியினரின் எதிர்காலம் இவை அனைத்தும் அவர்களைப் பொறுத்தவரை கெட்ட வார்த்தைகளே!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீங்கள் கடல்வழியாக அணுஉலையை முற்றுகையிடத் துணிந்த போது, மாநில அரசு உங்கள் பகுதியிலே 144 தடை உத்தரவு போட்டு, துப்பாக்கிகள் ஏந்திய ஆயிரக்கணக்கான போலீ சார் உங்கள் ஊரைச் சுற்றிநிறுத்தி, கடலோரக் காவல்படை, உங்களது கடல் பரப்பில் நின்று உங்களைக் கண்காணிக்க, வான் பரப்பில் சிறியரகப் போர் விமானங்கள் சுழன்று சுழன்று உங்கள் ஊரைச் சுற்றிப் பறக்க, மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கி, சுதந்திர இந்தியாவில் சொந்த மக்களையே முப்படை களையும் கொண்டு தாக்கி, வெறித்த னமாக கடித்துக் குதறத் தயாரான சூழல் இடிந்தகரையில் தானே நடந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்த பின், உங்கள் ஊருக்கு மின்சாரத்தைத் துண் டித்து, அங்கு செல்லும் பேரூந்து களை மாதக்கணக்கில் நிறுத்தச் செய்து, அத்தியாவசியப் பொருட் களைக் கூட உங்கள் ஊருக்குள் அனுமதிக்காமல் அங்கு ஒரு நெருக்கடி நிலையைப் பிரகடனப் படுத்தி முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு சூழலை இந்திய, தமிழக அரசுகள் உருவாக்கியதை தமிழக மக்கள் மறக்க நெடுநாட்களாகும்! அவற்றையெல்லாம் நீங்கள் வீறு கொண்டு எதிர்த்து நின்ற பாங்கு எங்கள் நெஞ்சங்களைவிட்டு எளி தில் மறையாது.

அணு உலை மூலம் மின்சாரம் தேவை என்று தமிழகத்தில் பெரும் பாலானோர் எண்ணியிருந்த நிலையை மாற்றி, உங்களது அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு 46 விழுக்காடு தமிழக மக்கள் ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்ததே! அது வும் அணு உலைக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் தமிழர் விரோத “இந்து’’ நாளேட்டில் வெளி வந்தது உங்கள் போராட்டத் திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா?

அணு உலை சார்ந்த விவாதங் களை மட்டும் உங்கள் போராட் டம் எழுப்பவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலைப் பேசியிருக் கிறது; தமிழத் தேசிய அரசியலை முன்னுக்கு நகர்த்தியுள்ளது; சுற்றுச் சூழல் தளங்களில் வளங்கு ன்றா வளர்ச்சி, நீடித்த நிலைத்த வளர்ச்சி குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங் களை மேலுக்குக் கொண்டு வந்துள் ளது. மனித உரிமைத் தளங்களில் சாதாரண சாமானியர்க்கான வாழ் வுரிமை, வாழ்வாதார உரிமை போன்ற பொருள்களில் உரிமை சார் கண்ணோட்டத்தை மக்கள் முன் வைத்துள்ளது. மீனவர்களின் எதிர்காலம், கடலோரச் சமூகங் களின் வாழ்வாதாரம் போன்ற ஒடுக்கப்படும் சமூகங்களின் உரிமை மீட்டெடுப்பு குறித்த அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது. அறவழிப் போராட்டத்தின் அற்புதமான அம்சங்களை / புதிய புதிய பரிமா ணங்களை இந்தியத் துணைக் கண்டத்திற்கு உங்கள் போராட்டம் வழங்கியுள்ளது. மாற்று அரசியல், பங்கேற்பு சனநாயகம், மக்களுக்கான அறிவியல் போன்றவை ஏட்டுச் சுரைக்காயாக அமையாமல், குறிப்பிட்ட காலச்சூழலில் இக்கருத்துக்களுக்கு உயிர் வடிவம் கொடுத்தது உங்கள் போராட்டம்.

உங்கள் தொடர்ச்சியான போராட்டத்திற்கு நீங்கள் எதிர் பார்த்த உடனடி வெற்றி கிட்டா மல் போயிருக்கலாம். ஆனால் நீங்கள் தொடங்கி வைத்துள்ள இந்த வெகுசனப் போராட்ட வடிவம் ஆளும் வர்க்கத்திற்கு / பார்ப்பன - பனியா கும்பலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்துள்ளது. இனி இது போன்ற மக்கள் விரோத பிரம் மாண்டத் திட்டங் களை உருவாக்க முனையும் போது எவ்வளவு கொள் ளையடிக்கலாம் என்பது மட்டுமே அவர்களது நினைவுக்கு வராது; மக்களுடைய எதிர்ப்பையும் போராட்டத்தையும் எப்படி எதிர் கொள்வது என்ற அச்சமும் அவர் களுக்குள் மேலோங்கி நிற்கும்.

ஒவ்வொருமுறையும் இடிந்த கரைக்கு வந்து செல்லும் இயக்க வாதிகளும், சமூக ஆர்வலர்களும், தமிழ் உணர்வாளர்களும் உங்க ளிடமிருந்து புத்தெழுச்சியையும், புதுத்தெம்பையும், புதிய ஆற்றலை யும் பெற்றுச் செல்கிறார்கள். பிறர் நலன் கருதி உழைக்க முன்வரும் இளைஞர், இளம்பெண்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், அள்ள அள்ளக் குறையாத உற்சாகத் தையும், ஊக்கத்தையும் வழங்கும் வற்றாத ஊற்றாக இருக்கிறது, இடிந்தகரை. கடந்த ஈராண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற பிற எழுச்சிகரமான போராட்டங்க ளுக்கு உணர்வையும், உந்து தலை யும் வழங்கக் கூடிய மணற்கேணி யாக இடிந்தகரை அமைந்துள்ளது.

Pin It