வரும் மக்களவைத் தேர்தலில், தமிழினப் பகை ஆற்றலான காங்கிரசை வீழ்த்திட, பாரதிய சனதாக் கட்சியை ஆதரித்தால் தவறென்ன இருக்கிறது. என்று தமிழின உணர்வாளர் களில் சிலர் கருதுகின்றனர்.

பாசக இந்திய ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கும், தமிழ் ஈழத்திற்கும் ஆதரவாக என்ன செய்தது?

2000 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்களப் படையிடமிருந்து ஆனையிறவு முகாமை மீட்டனர். சிங்களப் படையின் நெஞ்சாங்குலை நொறுங்கியது போல் ஆனது. அடுத்து, யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகள் மீட்டு விடுவார்கள் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டது. அதே அச்சம் வாஜ்பாயி அரசுக்கும் ஏற்பட்டது.

அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஓர் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டார். விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்கக் கூடாது. அவ்வாறு படை யெடுத்தால் அங்குள்ள சிங்களப் படையினர்க்கும் புலிகளுக்கும் நடக்கும் போரில் இரத்த ஆறு ஓடும் உயிர்ப்பலி ஏராளமாக ஏற்படும்” என்றார்.

சிங்களப் படை தோற்றுவிடும்; சிங்களப் படையாட்கள் ஏராளமாகக் கொல்லப்படுவர் என்ற பதற்றத்தில் அவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டார். அத்தோடு நில்லாமல், சிங்களப் படைக்கு ஒரு போர்க்கப்பலையும் வாஜ்பாயி அரசு வழங்கியது. யாரைக் கொல்லுவதற்காக அந்தப் போர்க்கப்பல் வழங்கப்பட்டது? தமிழர்களைக் கொல்வ தற்குத் தான்!

2008 – 2009 இல் இராசபட்சே அரசு, தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் வீசி ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாக் கொன்றது. போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதியினரும் போராடினோம். போர் நிறுத்தம் கோரி முத்துக் குமார் தொடங்கி தமிழர்கள் அடுத்தடுத்து தீக் குள்ளித்து மடிந்தனர். அப்போது பாசக தலைமை போர் நிறுத்தம் கோராதது ஏன்?

அப்போது சிங்களப் படைக்கு மன்மோகன் அரசு ஆயுதம் கொடுத்தது. அவ்வாறு ஆயுதம் கொடுக்கக் கூடாது என்று அவரிடம் மனுக்கொடுத்த வைகோ அவர்களுக்கு, எழுத்து வடிவில் அளித்த விடையில், “இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கா விட்டால் சீனா கொடுக்கும்” என்று ஞாயப்படுத்தினர் மன்மோகன்தலைமை மன்மோகன் அரசு சிங்களப் படைக்கு ஆயுதம் கொடுக்கக் கூடாது என்று பா.ச.க. கூறிய துண்டா? இல்லை!

எல்லாம் முடிந்து, தமிழினம் அழிக்கப்பட்டபின், இலங்கை அரசு நடத்தியது இன அழிப்புக் குற்றம் (Genocide) என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 2013 மார்ச்சில் தி.மு.க. கோரியது. (தனது இனத்துரோகத்தை மறைக்க அது அவ்வாறு செய்தது என்பது வேறு செய்தி) அவ்வாற்று தீர்மானம் நிறை வேற்றுவது பற்றிக் கருத்தறிய மக்களவைத் தலைவர் மீராகுமார் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திய போது அந்த முன்மொழிவை முதலில் எதிர்த்தவர் பாசக.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுஷ்மா சுவராஜ்!

இலண்டன் சேனல் 4 தொலைக்காட்சியும் நியுயார்க் மனித உரிமைக் கண்காணிப்ப கமும் இராசபட்சே அரசின் இனப்படுகொலைக் குற்றத்தை அக்கு அக்காக அம்பலப் படுத்தின. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த தாருஸ்மான் தலைமை யிலான மூவர் குழுவும் 2008 -2009 இல் இலங்கைப் படை செய்தது மனித குலத்திற் கெதிரான குற்றம் என்றது.

இவ்வளவுக்குப் பின்னும் இன அழிப்புக் குற்றவாளி இராசபட்சேயை பாசக. ஆளும் மத்தியப் பிரதேச அரசு சிறப்பு விருந்தாளியாக அழைத்து பாராட்டியது. அந்த விழா வும் சுஷ்மா சுவராஜின் சாஞ்சி தொகுதியில் நடந்தது. இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவிற்குத் தலைமை தாங்கிய சுஷ்மா சுவராஜ் இராசபட்சேக்குப் பாராட்டுத் தெரிவித்தார். மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடக்கின்றன. என்று சான்றுரை பகன்றார். இந்திக் காரர்களுக்கு ஏதோ ஒரு நாட்டில் இப்படி இன அழிப்பு நேர்ந்திருந்தால் அநாட்டுத் தலைவருடன் – பா.ச.க. தலைமை கூடிக்குலாவுமா?

இராசபட்சே கும்பலை விசாரிக்கப் பன்னாட்டு புலாய்வு மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் முக்கியக் கட்சிகள் அனைத்தும் கோருகின்றன. அக்கோரிக் கையை இன்று வரை பா.ச.க. தலைமை ஆதரிக்க வில்லையே ஏன்? காங்கிரசுக்கும் பாசகவுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் அதன் தமிழினப் பகைச் செயல்கள் தெரிந்து விடுகின்றன. பாசகவின் மவுனம், அதன் வஞ்சகத்தை மூடி மறைக்கிறது.

பதினைந்தாம் நூற்றாண்டில் அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து அந்த இடத்தில் மசூதி கட்டினார் பாபர் என்று கூறி அந்த மசூதியை அத்வானி தலைமையில் இடித்தனர். ஈழத்தில் நூற்றுக்கணக்கான தமிழர் கோயில்களை புத்தமதச் சிங்கள வெறியர்களும் சிங்களப் படையாட்களும் இடித்தார்கள். இன்றும் இடிக்கிறார்கள். தமிழர் கோயில்களைப் புத்தவிகாரைகளாக மாற்றுகிறார்கள். இந்த அநீதியை பா.ச.க. கண்டிக்காதது மட்டுமல்ல, அதைச் செய்யும் இராசபட்சேக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது!

தமிழர்கள் வழிபடும் சிவன் கோயில், பிள்ளையார் கோயில், பெருமாள் கோயில், சிங்களப் புத்தமத வெளியர்களால் இடிக்கப்பட்டால் அதைப் பற்றி பா.ச.கவுக்குக் இல்லை! கடவுள் வழிப்பட்டிலும் இனப்பாகுபாடு! ஐ.கே. குஜரால் பிரதமராக இருந்தபோது, காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்த சரியான திட்டம் வகுக்கப்பட்டது. அதிகாரிகளைக் கொண்ட ஆணையம் அமைப்பது என்றும் அந்த ஆணையத்தின் பொறுப்பில் கர்நாடக, தமிழக அணைகளின் நீர் நிர்வாகத்தை ஒப்படைப்பது என்றும் அத்திட்டம் கூறியது. ஐ.கே. குஜரால் ஆட்சி கவிழ்ந்து விட்டது. அதற்குபின் ஆட்சிக்கு வந்த வாஜ்பேயி அரசு அத்திட்டத்தை மறுத்து விட்டது. அதிகாரமில்லாத ஓர் ஆணையத்தை உருவாக்கி ஏமாற்றியது. இனத்துரோகத்திற்குப் பெயர் போன கருணாநிதியை அதற்குப் பயன்படுத்திக்கொண்டது வாஜ்பாயி அரசு.

பாசக ஆட்சியின் போதும் தமிழக மீனவர்களைத் தாக்கியது சிங்களப்படை! கச்சத் தீவைத் தமிழ்நாட்டிற்கு மீட்க பாசக. ஆட்சி எதுவும் செய்யவில்லை. பாசகவிற்கும் காங்கிரசுகும் என்ன வேறுபாடு இருக்கிறது?

பாரதிய சனதாவிற்கென்று ஓர் இன அரசியல் இருக்கிறது; ஒரு மத அரசியல் இருக்கிறது. ஆரிய இனச்சார்பும் பார்ப்பனிய மதச்சார்பும்தான் அது கூறும் இந்துத் துவா! “இந்தியரும் ஆரியர், சிங்களரும் ஆரியர், இருநாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று அண்மையில் அத்வானி கூறினார்.

இந்தியாவின் இனப் பன்மை, பண்பாட்டுப் பன்மை, மொழிப் பன்மை, மதப் பன்மை ஆகிய அனைத்தையும் ஒழித்து, ஒற்றை அடையாளமாக “இந்தியன் - இந்துத்துவா” என்பதை நிலைநாட்ட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். பாசக ஆகியவற்றின் திட்டம்.

இந்தச் சதியை மூடி மறைத்து, அனைத்து மக்களின் வாக்குகளை வாங்கி இந்தியாவின் ஆட்சியைத் தனிப்பெரும்பான்மையுடன் அமைத்துவிட்டால் தனது ஆரியத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று ஆர். எஸ். எஸ். உத்தி வகுத்துள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் முகமூடி அணிந்து தமிழர்களை ஈர்க்க வேண்டும் என்பது அவர்களின் உத்தி! அதனால்தான் திருச்சியில் 26.9.2013 அன்று பேசும் போது, மோடி “செந்தமிழ்நாடு என்னும் போது காதில் தேன் வந்து பாயுது” என்றும் “தமிழன் என்றோர் இன முண்டு தனியே அவற்கோர் குணமுண்டு” என்றும் தமிழ் மொழியிலேயே கூறினார். இலட்சக் கணக்கில் ஈழத் தமிழர்கள் இனக்கொலை செய்யப்பட்ட போது இரங்கல் தெரிவிக்க ஒரு சொல் மோடிக்குக் கிடைக்கவில்லை.

மோடி பார்ப்பனரல்லாத வைசியர். உ.பி., பீகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களை ஈர்க்க மோடியை பயன்படுத்தலாம் என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. பார்ப்பனரல்லாதவராக இருந்தாலும் ஆரியத்தின் ஆர்.எஸ்.எஸ். சின் தீவிரச் செயல்பாட்டாளர் மோடி!

குசராத்தில் 2002 இல் மோடி ஆட்சியின் துணையோடுதான் இரண்டாயிரம் அப்பாவி இஸ்லாமியர்களை ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிசத்; பாசக. குண்டர்கள் படுகொலை செய்தனர்” காரில் போகும் போது குறுக்கே ஓடிவரும் நாய்க்குட்டி அடிபட்டு செத்துப் போனால் ஏற்படும் வருத்தம்தான் 2002 நிகழ்வுகள் பற்றி எனக்கு ஏற்பட்டது” என்று அண்மையில்தான் அயல்நாட்டுச் செய்தி ஊடகத்திடம் கூறினார் மோடி. இப்படிப்பட்ட ஆரிய இந்துத்துவா வெறியன் இந்தியாவின் பிரதமர் ஆகிவிட்டால் ஆரியத்தின் பெயரால் இட்லர் செய்ததையெல்லாம் இந்தியாவிலும் செய்யலாம் என்பது ஆர். எஸ்.எஸ். திட்டம்.

மோடி பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாவலர் பன்னாட்டு முதலாளிகளின் நாடுகள் மோடியை ஆதரிக்கின்றன.

அண்மைக் காலமாக மோடி பேசும் கூட்டங்களில் இந்திய இராணுவத்தின் பெருமை களை திறமைகளை ஈகங்களை வானளாவ புகழ்கிறார். முன்னாள் இராணுவத் தளபதி வி.கே.சிங். மோடியுடன் சேர்ந்துள்ளார்.

மோடியின் பேச்சைக் கவனித்தால் 1930களின் தொடக்கத்தில் செர்மனியின் தேர்தல் கூட்டங்களில் இட்லர் பேசியது நினைவுக்கு வருகிறது. முதல் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் செர்மனி நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகள் செர்மனி இராணுவத் திற்கேற்பட்ட சிறுமைகள் இவற்றை மிகைபடப் பேசி செர்மானிய இனவெறியைத் தூண்டினார் இட்லர்.

தனிப் பெரும்பான்மையுடன் நரேந்திரமோடி தலைமையில் பாசக ஆட்சி அமைத்து விட்டால், இந்தியாவில் உள்நாட்டுப் போர்நடக்கும் அல்லது மற்றவர்கள் அனைவரும் ஆரியத்திற்கு அடிமை என்பதை அமைதியாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

அரசுக் கட்டிலில் அமர்ந்துவிட்டால் ஆரியம் முதலில் பாய்வது தமிழ்மொழி மீதும் தமிழ் இனத்தின் மீதுமாகத்தான் இருக்கும். மூவாயிரம் ஆண்டுகளாக ஆரிய ஆதிக் கத்தை, வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்துச் சமர் புரிந்து வருவது தமிழ் இனமும் தமிழ்மொழியும்தான்!

மொழிவழி மாநிலங்கள் நிர்வாக மாநிலங்களாகப் பிரிக்கப்படும். பிரதமர் ஆட்சி முறையைக் குடியரசுத் தலைவர் ஆட்சி முறையாக மாற்றுவார்கள், ஒரே இடத்தில் அதிகாரங்களைக் குவித்துக் கொள்வார்கள். இட ஒதுக்கீட்டை சிதைத்துச் சின்னா பின்னமாக்குவார்கள்! எதிர்ப்புக் கிளம்பினால் இராணுவத்தை அனுப்புவார்கள்!

திருச்சியில் தமிழ்ப் பெருமை தமிழ்நாட்டுப் பெருமை பற்றியெல்லாம் மோடி பேசிய அதே பேச்சின் பிற்பகுதியில் காங்கிரசு ஆட்சி மொழி வழி மாநிலங்களை அமைத்து இந்தியாவைப் பிளவுப் படுத்திவிட்டது என்றார்.

காங்கிரசு ஆட்சி மொழிவழி மாநிலம் அமைக்க மறுத்தது. போராட்டங்கள் வெடித்தன. வேறு வழியில்லாமல் மொழிவழி மாநிலம் அமைத்தது.

காங்கிரசும் பாசகவும் – ஆரியத்தின் – தமிழினப் பகையின் இரட்டை முகங்கள்! இவ் விரண்டும் தமிழ்நாட்டில் வேர் பிடிக்க விட்டால் தமிழினம் தனக்கான சவக் குழியைத் தானே தோண்டிக் கொள்கிறது என்று பொருள்! எச்சரிக்கை