தண்ணீருக்குள் கிடந்தாலும் பாஸ்பரஸ் அணைந்து விடாமல் தணலாக இருப்பது போல் பணயக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருந்தாலும் தமிழ் ஈழமக்கள் இராசபட்சே கும்பலுக்கு வாக்குச் சீட்டால் பதிலடி கொடுத்துள்ளார்கள்.

பளபளக்கும் புதிய சாலைகளோ பாய்ந்து செல்லும் புதிய தொடர்வண்டிகளோ பளிச்சிடும் புதிய மாளிகைகளோ எங்களின் தாயக வேட்கையைத் தணித்து விடா என்பதைத் தமிழீழ மக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். ஈழத் தமிழ் மக்களுக்கு எம் வாழ்த்துகள்!

வடக்கு மாநில அவைக்கு (மாகாணசபைக்கு) நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதுவும் பெரும் வாக்கு வேறுபாட்டில்!

இராசபட்சே – டக்ளஸ் தேவானந்தா கூட்டணி ஏழு இடங்களைப் பெற்றுள்ளது. இலங்கை முஸ்லிம் காங்கிரசு ஓர் இடம் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டணி 80 விழுக்காடு வாக்குகளையும் இராசபட்சே கூட்டணி 18.38 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளன.

வடக்கு மாநிலம் முழுதிலும் படை அணிகளை நிறுத்திவைத்துக் கொண்டு, வேட்பாளர்களையும், வாக்காளர்களையும் அச்சுறுத்தி இராசபட்சே ஆட்சி அட்டூழியம் புரிந்தது. சுதந்திரமாக வாக்களிக்கும் சூழ்நிலை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டணி யின் பெண் வேட்பாளர் ஆனந்தி எழிலன் வீடு குண்டர்களால் தாக்கப்படது. அவரும் அவர் பிள்ளைகளும் உயிர்பிழைத்தது பெரும்பாடு! இருப்பினும் பன்னாட்டுத் தேர்தல் பார்வையாளர்கள் அங்கிருந்தது ஆறுதலாக இருந்தது. இராசபட்சேயால் முற்றிலும் மோசடித் தேர்தல் நடத்த முடியவில்லை.

ஈழத் தமிழர்களை யாரும் ஏமாற்ற முடியாது. சம்பந்தன் – விக்னேசுவரன் – சுமந்திரன் அடங்கிய மூவர் குழு மீது நம்பிக்கை வைத்து, தமிழர்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வில்லை. சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கும் போருக்குப்பின் பணயக் கைதிகள்போல் தமிழர்களை வைத்திருக்கும் பாசிசத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்ப்பு வாக்களித் துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு நேர்வகை ஆதரவாக தமிழ் மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்று கருத முடியாது.

கட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பாக இருந்தாலும் அதைப் பயன் படுத்தி பன்னாட்டு சமூகத்திற்குத் தங்கள் மன உணர்வையும், தேவையையும் சனநாயக வழியில் தெளிவாக வெளிப்படுத்தி விட்டார்கள் தமிழ்மக்கள்.

விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு; அது ஆயுதப் போராளிகளைக் கொண்டு தமிழ்மக்களை அச்சுறுத்தி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்கக் கட்டாயப் படுத்திவிட்டது; தமிழ்மக்கள் சிங்களர்களோடு சேர்ந்து அமைதியாக வாழவே விரும்புகிறார்கள் என்று கோயபல்ஸ் போல் திரும்பத் திரும்ப சிலர் புளுகி வந்தனர். அனைத்திந்திய ஆரியச் சார்பு ஊடகங்கள், காங்கிரசுக் கட்சியினர், சுப்பிரமணியசாமி, சோ. இராமசாமி போன்ற பன்னாட்டு உள்நாட்டு பார்ப்பனத் தரகர்கள், பார்ப்பன- வங்காளி- மலையாளி கூட்டுத் தலைமையில் இயங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போன்றோர் ஈழத் தமிழர்கள் தனிநாடு கேட்கவில்லை, தமிழ்நாட்டில் உள்ள சிலர்தான் கேட்கின்றனர் என்று கூறி வந்தனர்.

ஈழம் இலங்கையில் சேர்ந்திருப்பதா அல்லது பிரிந்து தனி நாடாவதா என்று கேள்வி கேட்டுக் கருத்து வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இதைவிடக் கூடுதல் பெரும்பான்மை யில் தமிழ்மக்கள் தனிநாட்டிற்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள்.

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டணியை இந்தியாதான் இயக்குகிறது. இந்தியா ஏற்பிசைவு அளித்த முதலமைச்சர் வேட்பாளர்தாம் விக்னேசு வரன்! ஆனால், ஈழத் தமிழர்கள் இந்த அளவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வாக்களித்தைக் கண்டு இந்தியாவே மிரண்டு போயிருக்கிறது.

இன அழிப்புக் குற்றவாளி இராசபட்சே ஆட்சியை நாங்கள் ஏற்கவில்லை என்று பன் னாட்டு சமூகத்தின் முன்பாக ஈழத் தமிழர்கள் தெளிவுபடக் கூறிவிட்டார்கள்.

வட அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் நடுநிலை வகிப்பது போல் தோற்றம் கொடுத்துக் கொண்டு, ஈழ விடுதலைப் போரைக் குருதி வெள்ளத்தில் மூழகடிக்க இராசபட்சே கும்பலுக்குத் துணை போயின. இந்தியா, சீனா, ரசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒளிவுமறைவின்றி இராசபட்சே நடத்திய தமிழின அழிப்புப் போரில், பல்வேறு வடிவங்களில் பங்கெடுத்தன. சிங்கள இனவெறி அரசைத் தூக்கி நிறுத்தின; பன்னாட்டு அரங்கில் பல்வேறு உத்திகளைக் கையாண்டு இன அழிப்புக்குற்றவாளிகளான இராசபட்சே கும்பலைப் பாதுகாத்தன.

“ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவமான, கெளரவமான வாழ்க்கை தமிழர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கை” என்ற பசப்பு மொழியைப் பயன்படுத்திக் கொண்டுதான் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடங்கி சி.பி.எம். கட்சி வரை உள்ளவர்கள் சிங்கள இனவெறி அரசுக்குத் தங்கள் ஆதரவை நல்கி வருகின்றனர். இராசபட்சேக் கும்பலின் இன அழிப்புக் குற்றங்களை மூடி மறைப்பதற் கான மூடுதிரையாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் “இலங்கையில் நடந்த மனித உரிமைச் சிக்கல்களை விசாரிக்க இலங்கை அரசே குழு அமைக்கட்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்தது. இந்தியா அத்தீர்மானத்தை ஆதரித்தது.

இப்பொழுது இந்தியா 13 ஆவது திருத்ததின் படி வடக்கு மாநில அவை அதிகாரம் பெற்று நல்லாட்சி நடத்தட்டும் என்கிறது. காளை மாட்டில் பால் கறந்து காய்ச்சிக் குடி என்பது போல், கழுதைமேல் ஏறி குதிரை வேகத்திற்குப் பயணம் செய் என்பது போல் அதிகாரம் வழங்காத அலங்காரத் திருத்தமான 13 ஆவது திருத்ததின் மகத்து வம் பற்றி இந்தியா பேசுகிறது.

இனத்துரோகி ப. சிதம்பரம், சம்பந்தன் குழுவுக்கு வாழ்த்துச் சொல்லும் சாக்கில் “இனிமேல் நீங்கள்தான் சமர்த்தாக எல்லா அதிகாரங்களையும் பெற்றுக் கொள்ளவேண்டும்” என்கிறார். “தமிழ்த் தேசியக் கூட்டணி, சமத்துவமான அதிகாரங்களைப் பெறவேண்டும்’’ என்கிறார்! ஆனால் ப. சிதம்பரம் இராசபட்சே ஆட்சிக்கு எந்த வேண்டுகோளும் வைக்கவில்லை. இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் செய்யபட்ட 13 ஆவது திருத்தம், நிலம், காவல்துறை, நீதிமன்றம், போன்றவற்றில் எந்த அதிகாரமும் மாநில அவைக்கு வழங்கவில்லை.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கையில் மொழிவழி மாநில அமைப்பு கிடையாது. சிங்களர்களுக்கு ஏழு மாநிலங்கள்; தமிழர்களுக்கு இரண்டு மாநிலங்கள் என வெள்ளையர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் போன்ற அமைப்புகள்தாம் இந்த ஒன்பது மாநிலங்களும். இம் மாநிலங்களை வெள்ளையர் ஆட்சிகாலத்திலிருந்து அதிகாரிகளே நிர்வாகித்து வந்தனர்.

தமிழ் ஈழ விடுதலைப் போர் முன்னேறிய போது நெல்லியடி இராணுவ முகாமைக் கரும்புலி மில்லர் தாக்கித் தகர்த்தபிறகு, அன்றைய இலங்கைக் குடியரசுத் தலைவர் செயவர்த்தனா, இந்தியப் பிரதமர் இராசீவ்காந்தியிடம் “எப்படியாவது புலிகளின் முன்னேற்றத்தைத் தடுக்க வேண்டும் இல்லையேல் தனி ஈழ நாடு உருவாகிவிடும்” என்றார். அதற்காக இந்தியா தலையிட்டு இலங்கையுடன் தன் முனைப்பாக ஒப்பந்தம் செய்துகொண்டு அதை ஈழத் தமிழர்கள் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் திணித்தது. அப்பொழுது கண் துடைப்பாக உருவாக்கப்பட்டதுதான் 13 ஆவது திருத்தம்.

வெள்ளைக்காரன் காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வந்த மாநிலங்களுக்கு ஒரு நிர்வாக அவை அமைப்பது (provincial council); அந்த அவைக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது; தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் முதலமைச் சராகவும் சிலர் அமைச்சர்களாகவும் இருப்பது என்று 13ஆவது திருத்தம் கூறுகிறது.
ஆனால் இந்த மாநில அவை (provincial council) ஓர் அரசு அல்ல. மேற்கு வங்கத்தில் உள்ள கூர்க்கலாந்து நிர்வாக அவையை விடவும் குறைவான அதிகாரங்களைக் கொண்டது இலங்கையின் மாநில அவை.

மொழிவழி – இனவழி – மாநிலம் கிடையாது; அரசமைப்புச் சட்டப்படி அதிகாரங்கள் நடுவண் அரசுக்கும் மாநில அவைக்கும் பிரிக்கப்படவில்லை. நிலம் காவல் துறை, நீதி, சட்டம் ஒழுங்கு, நிதி அதிகாரங்கள் இலங்கையின் மாநில அவைக்குக் கிடையாது. இது மாநில அவைதானே(provincial council) தவிர, மாநில சட்டப் பேரவை (legislative Assembly) அல்ல. இலங்கை நாடாளுமன்றம் ஒற்றை அவை கொண்டது. அங்கு மாநிலங்கள் அவை கிடையாது. இலங்கை ஒற்றை அரசைக் (unitary state) கொண்டிருக்கிறது. அங்கு கூட்டரசு(federal state) கிடையாது. இந்தக் காளை மாட்டில் பால் கறக்கும் வித்தை காங்கிரசுக்காரர்களுக்கும் சி.பி.எம். கட்சியினர்க்கும்தான் தெரியும்! சாதாரண மனிதர்களுக்குத் தெரியாது!

1987 இல் வடக்கு – கிழக்கு மாநிலங்கள் இணைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது. விடுதலைப் புலிகள் அதில் பங்கெடுக்கவில்லை. ஈ.பி. ஆர். எல் எப் தேர்தலில் பங்கெடுத்தது. அவ்வமைப்பின் வரதராசபெருமாள் முதலமைச்சர் ஆனார். கடைசியில் இந்தியாவின் கைப்பிள்ளையான வரதராசப்பெருமாள் 1889 இல் என்ன சொன்னார்? “ பெயருக்குத்தான் நான் முதலமைச்சர், ஒரு அதிகாரமும் இல்லை. என் அலுவலகத் திற்கு ஒரு நாற்காலி வாங்க வேண்டுமென்றாலும் கொழும்பில் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதிகாரமில்லாத இந்தக் கவுன்சிலை கலைத்துவிட்டேன். இனி, தனி ஈழம் தான் ஒரே தீர்வு. ஈழத்தைத் தனிநாடாக நான் பிரகடனம் செய்கிறேன்” என்று கூறிவிட்டு இந்திய இராணுவ ஊர்தியில் ஏறி இந்தியா வந்துவிட்டார்.

பின்னர் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாநில அவையின் முதலமைச் சராக கருணா குழுவைச் சேர்ந்த பிள்ளையான் தேர்ந்தெடுக்கப்பாட்டார். அவரும் கடைசியில் “எந்த அதிகாரமும் மாநில அவைக்குக் கொழும்பு வழங்க வில்லை” என்று ஊரறிய ஓலமிட்டார்.

வரதராசப் பெருமாளும் பிள்ளையானும் சாதிக்காததைச் சாதிக்க சம்பந்தனும் விக்னேசுவரனும் புறப்பட்டுள்ளார்கள். அவர்கள் தேர்தலில் போட்டியிட்டதை நாம் குறை சொல்லவில்லை. போலி நம்பிக்கைகளை விதைக்கிறார்கள்; அதைத்தான் திறனாய்வு செய்கிறோம். புதிய சகாப்தம் பிறந்துள்ளதாகவும், இனி தனிநாடு என்ற கோரிக்கை இல்லை என்றும் கூறுகிறார்கள்.

“மக்கள் இப்பொழுது கொடுத்திருக்கும் கட்டளை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் களுக்குரிய அதிகாரம் பெறுவதுதான்” என்கிறார் சம்பந்தர். 1977 இல் வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு அதாவது தனித் தமிழ் ஈழத்திற்கு அப்போது மக்கள் கொடுத்த கட்டளையை விட இப்போது கொடுத்திருக்கும் கட்டளை பெரிது; அப்போது விகிதாச்சாரத் தேர்தல் முறை இல்லை. இப்போது அது இருக்கிறது என்கிறார். தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவதற்கான (கு)தர்க்கம் இது!

தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்வோரை விக்னேசுவரன் கடுமையாகக் குறை கூறினார்.

“இது கணவன் – மனைவி சண்டை. அடுத்த வீட்டுக்காரர் இதில் புகுந்து, மணமுறிவு தான் தீர்வு என்று எப்படிச் சொல்லலாம்? அதுபோல் தமிழ்நாட்டிலிருப்பவர்கள் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லக் கூடாது” என்றார். இந்து நாளேட்டில் முதல் பக்கத்தில் வந்தது. இக்கூற்றுக்கு வலுவான எதிர்ப்புகள் வந்தபின், திருத்தம் சொன்னார்; வருத்தம் சொன்னார்.

வட மாநில அவை நிர்வாகத்தைக் கைப்பற்றியதன் மூலம் படிப்படியாகக் கூடுதல் அதிகாரம் பெறலாம் என்று சம்பந்தர் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் சிலரும் நினைக் கிறார்கள்.

 பல ஆண்டுகளுக்கு முன் கிழக்கு மாநிலத்தில் தேர்தல் நடந்தது பிள்ளையான் முதலமைச்சர் ஆனார். கருணாவும் பிள்ளையானும் மாநில நிர்வாகத்திற்குப் படிப்படியாகக் கூடுதல் அதிகாரம் வாங்கினார்களா? இல்லை.

தேசிய இனவிடுதலை இயக்கத்தைக் கவிழ்த்து விடுவது, பகைவனுக்குக் கீழே, சில்லறை அதிகாரங்களைப் பெறும் மாநில ஆட்சியில் அமர்த்துவதுதான்.

சம்மு காசுமீரின் இறையாண்மையை இலக்காகக் கொண்டு இயங்கிய சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் சேக் அப்துல்லா அவர்களைப் பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ், பாதுகாப்புக் கைதியாகக் கொடைக்கானலில் வைத்தார். அன்றைய பிரதமர் இந்திராகாந்தி. பின்னர் அவரை சம்முகாசுமீர் முதல் அமைச்சர் பதவியை ஏற்கச் செய்து படிப்படியாக காசுமீருக்குக் கூடுதல் அதிகாரம் தருவதாக ஒப்பந்தம் போட்டு விடுதலை செய்தார். சேக் அப்துல்லாவும் ஒப்புக் கொண்டு சம்மு காசுமீர் முதல்வர் ஆனார். காசுமீருக்குக் கொஞ்சநஞ்சம் கூடுதலாக இருந்த அதிகாரத்தையும் பறித்தார்கள்.

சனநாயக வழிப்பட்ட பெருந்திரள் மக்கள் இயக்கத்தை நடத்திய சேக் அப்துல்லாவும் தேசிய மாநாட்டுக் கட்சியும் காசுமீர் விடுதலைக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து விட்டதாக அடுத்த தலைமுறை இளைஞர்கள் கருதினார்கள். அவர்கள் ஆயுத மெடுத்தார்கள். இந்திய இராணுவம், அவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. ஆயுதப் போர் அங்கு தொடர்கிறது. அந்த இளைஞர்களை கைது செய்வது, சுடுவது ஆகிய மாநில அரசு வேலைகளை சேக் அப்துல்லாவின் மகன் பரூக் அப்துல்லா முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு செய்தார். இப்போது பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு அதே வேலையைச் செய்கிறார். இதுதான் படிப்படியாக அதிகாரம் பெற முதலமைச்சர் பதவிக்குப் போனவர்களின் எதிர் பரிணாம வளர்ச்சி!

மிஜோரம் விடுதலைக்கு ஆயுதப் போர் நடத்தினார் லால்டெங்கா. இந்திராகாந்தி மகன் இராசீவ்காந்தி பிரதமராக இருந்த போது லால்டெங்காவுடன் ஒப்பந்தம் போட்டு அவரை முதலமைச்சர் ஆக்கினார். அடுத்த தேர்தலில் லால்டெங்காவைத் தோற் கடித்தார்கள். பின்னர் ஒரு சமயம் புது தில்லியில் ஐயா பழ. நெடுமாறன் அவர்களைப் பார்த்த லால்டெங்கா பிரபாகரனைப் பாராட்டிப் பேசினாராம். “நான் ஏமாந்துவிட்டேன்; இந்த இளம் வயதில் பிரபாகரன் ஏமாறவில்லை, மாகாணசபை ஆட்சியை ஏற்க மறுத்து விடுதலையில் உறுதியாக இருக்கிறார். அவரைப் பார்த்துப் பாராட்ட வேண்டும்” என்றாராம்.

முதலமைச்சர் பதவி ஏற்கச் சொல்லி இருவாய்ப்புகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்திய அரசு வற்புறுத்தியது. பிரபாகரன் மறுத்துவிட்டார்.

அப்போது முதல்வர் பதவி ஏற்றிருந்தால் இன்றைக்கு அவர்க்கிருக்கும் புகழ் – சிறப்பு அனைத்தும் அப்போது மறைந்து போயிருக்கும். அது மட்டுமல்ல, தமிழீழ விடுதலை இலட்சியத்தை மாற்ற முடியாத ஒன்றாக மக்கள் மனதில் விதைத்திருக்கவும் முடியாது.

அங்கே இங்கே என்று வெளி மாநில அனுபவங்களைத் தேடுவதைவிடத் தமிழக அனுபவத்தையே ஆய்வு செய்யலாமே! “அடைந்தால் திராவிடநாடு – இல்லையேல் சுடுகாடு” என்று ஆர்ப்பரித்த தி.மு.க. சட்டமன்றத்தைக் கைப்பற்றி, தனிநாட்டு இலட்சியத்தை அடையப் போவதாகச் சொன்னது. அதன் பிறகு மாநிலத் தன்னாட்சி பெறப்போவதாகச் சொன்னது. ஆனால் சேக் அப்துல்லா மகனும் பேரனும் செய்கின்ற அதே காரியத்தை அது செய்கிறது.

இந்திய ஏகாதிப்பத்தியத்திகுக் கங்காணி வேலை, பார்த்து, தமிழின உணர்வாளர்களை ஒடுக்கும் வேலையைத் தி.மு.க. அரசும் செய்கிறது; அதன் உடன் பிறப்பான அ.இ.அ.தி.மு.க அரசும் செய்கிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் திணிக்கப்பட்ட போது பிரபாகரன் அவர்கள் 4.8.1987 அன்று சுதுமலையில் இலட்சக்கணக்கான மக்கள் முன் பேசியதை இப்போது நினைவில் கொள்ள வேண்டும். “ இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் சிங்கள இனவாத பூதம் விழுங்கிவிடும்’’ என்றார். அப்போது அதுதான் நடந்தது; இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது.

தமிழ் ஈழத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி சிங்களப் பேரினவாத அரசுக்குக் கங்காணி வேலைப் பார்க்கத் தொடங்கினால் மறுபடியும்; அங்கு விடுதலைக்காக ஆயுதப் போராளிகள் உருவாகக் கூடும். படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு பக்கத் துணை களை உருவாக்கிக் கொண்டு வெல்லற்கரிய அமைப்பாய் வரலாம்! பொதுவாக சனநாயக வாய்ப்புகள் மறுக்கப்படும் போது ஆயுதத்தை நாடும் நிலை உருவாகிறது.

உரிமை இழந்தோர் அதைப் பெற ஆயுதப் போராட்டம் நடத்துவதைத் தங்களுக்குரிய வசதியாகத் தேர்தல் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் உழைக்கும் மக்களின் பிள்ளைகள்தான் பெரிதும் இராணுவத்தில் சேர்ந்து உயிரை விடுகின்றனர். ஆயுதப் போராட்டத்தைக் காரணம் காட்டி சனநாயக உரிமைகளை மற்றவர்களுக்கும் மறுத்து எதேச்சதிகார ஆட்சி நடத்தக் கூடிய பொன்னான வாய்ப்பு அரசியல் தலைவர்களுக்குக் கிடைக்கிறது.

பன்னாட்டுச் சமூகம், வடக்கு மாநிலத் தேர்தல் முடிவுகள், இராசபட்சே கும்பலின் பாசிசத்திற்கு எதிரானது என்பதை உணர வேண்டும். பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைத்து இராசபட்சே கும்பலை பன்னாட்டுக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும். இந்தத் தேர்தல் வெற்றி பன்னாட்டுச் சமூகத்தின் கண்ணைத் திறந்தால் அது பெரிய நன்மையாக அமையும்.

Pin It