தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரைப்பட நூற்றாண்டு விழாவை தமிழக அரசுடன் சேர்ந்து இந்தியத் திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி முடித்திருக்கிறது.

இதுவரை இந்தியாவில் எங்கும் நடைபெறாத வகையில் மாநில அரசுடன் சேர்ந்து தென்னிந்திய வர்த்தக சபை ஒரு விழாவை நடத்தியிருக்கிறது. இந்த விழாவுக்காக தமிழக அரசு பத்து கோடி ரூபாய் வழங்கியிருப்பதால் அதை வெறும் திரைப்பட விழா என்று ஒதுக்கிவிட முடியாது. அடிப்படை சுகாதாரமும், கல்வியும், மருத்துவமும் மறுப்பட்டு வரும் நம் மாநில மக்களின் வரிப் பணம் பத்து கோடி இதில் செலவிடப்பட்டிருக்கிறது.

இந்தியத் திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவில் தமிழ்த் திரைப்படத் துறை சாதனையாளர்கள் முறையாக கௌரவிக்கப்பட்டார்களா என்றால், அது தான் இல்லை.

அதிலும் தமிழக அரசு இணைந்து நடத்திய இந்த விழாவில் தெலுங்கு, கன்னடம் மற்றும் கேரளத் திரைப்படங்களுக்காக தனித் தனியாக விழா எடுக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் கௌரவிக்கப்படவே இல்லை.

தமிழ் நாட்டில் இயங்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கான வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்கிற பெயரோடு இயங்குகிறது. இந்த வர்த்தக சபை நடத்துகிற இந்தியத் திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவில் தமிழ்த் திரைப்படத்துக்கென தனியாக விழா நடத்தப்படவில்லை என்றால் இதை எப்படி பொறுத்துக் கொள்வது?

ரஜினிக்கும் கமலுக்கும் விருது வழங்கினால் போதும் என்று நினைத்து விட்டார்கள் போலும். அறியாமையால் நிகழ்ந்திருக்கலாம் என்று சிலர் சப்பைக் கட்டு கட்டலாம். ஆனால் இந்திய அரசே சில மாதங்களுக்கு முன்பு நடத்திய இந்தியத் திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவில் ஒரு தமிழ்த் திரைப்படம் கூட திரையிடப்படவில்லை. இது எதிர்த்து தமிழ்த் திரைப்படத்துறை ஆளுமைகளிடம் ஒரு சிறு சலனம் கூட இல்லை. ஆக, இந்தியா என்றால் மட்டுமல்ல, தென்னிந்தியா என்றாலும் தமிழும், தமிழர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதுதானே உண்மை.

நூற்றாண்டு விழாவின் மூன்றாம் நாள் நடந்த கேரளத் திரைப்பட விழாவில் பேசிய இயக்குநர் பாலசந்தர், “நான் மலையாளியாகப் பிறந்திருந்தால் இன்னும் அதிகமாக சாதித்திருப்பேன்” என்று பேசினார். இது அவருடையக் கருத்து. அதைச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது.

ஆனால், அவருக்கு இன்று வரையிலும் வாழ்வளித்துக் கொண்டிருக்கிற தமிழ்த் திரைப்படத் துறைக்கு விழா எடுக்காததை பற்றி எந்தக் குற்ற உணர்வும் இன்றி பேசுகிறாரே! நன்றி மறப்பது நன்றன்று அல்லவா? தமிழ்த் திரைப்படங்களுக்கென விழா நடந்திருக்கும் பட்சத்தில், தமிழ்த் திரைப்பட ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டிருப்பார்களே? அதில் இயக்குநர் பாலசந்தரும் சிறப்பிக்கப்பட வேண்டியவர்தானே!

தமிழ்த் திரைப்படங்களுக்கு விழா நடந்திருந்தால், அமெரிக்காவில் இருந்து திரைப்பட ஒளிப்படக் கருவி (கேமரா) பாகங்களை விற்க வந்து தமிழ்த் திரைப்படங்களுக்குப் புதிய பரிணாமத்தை வழங்கிய எல்லீஸ் ஆர் டங்கன், தமிழ்த் திரைப்படத் துறையின் முதல் சூப்பர் ஸ்டார்கள் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கே.பி. சுந்தராம்பாள், பாடல்களே இல்லாமல் முதல் முதலாக படம் (அந்த நாள்) எடுத்த வீணை எஸ்.பாலசந்தர் போன்றவர்கள் நினைவு கூறப்பட்டிருப்பார்களே?

1914ம் ஆண்டு தமிழ் நாட்டின் இரண்டாவது திரையரங்கான வெரைட்டி ஹால் (1914) கோவையில் கட்டப்பட்டது. அதைக் கட்டியவர் சாமிக்கண்ணு வின்சென்ட். இந்தியாவின் முதல் திரைப்படத்தை (ராஜா ஹரிசந்திரா) 1913ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே இயக்கி வெளியிட்ட மறு ஆண்டே வின்சென்ட் சொந்த வாழ்க்கையை சோதனைக்கு உள்ளாக்கி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். ஆனால் இந்தத் திரைப்பட விழாவில் வின்சென்ட் கௌரவிக்கப்படவில்லை.

தமிழகத்தின் முதல் திரைப்படத்தை (கீசகவதம்) இயக்கிய நடராஜ முதலியார் (1916) இந்த நூற்றாண்டு விழாவில் நினைவு கூறப்படவே இல்லை.

இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழாவில் தமிழ்த் திரைப்பட முன்னோடிகள் மறக்கப்பட்டதையும் மறைக்கப்பட்டதையும் இடித்துக் கூற வேண்டிய தமிழ் நாட்டு நடிகர்கள் சங்கமும், இயக்குநர்கள் சங்கமும் என்ன செய்து கொண்டிருந்தன?

இங்கே மட்டும்தான், நடிகர்கள் சங்கம் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்கிற பெயரில் இயங்கிக் கொணடிருக்கிறது. ஆந்திரத் திரைப்பட நடிகர்கள் ஆந்திரத் திரைப்பட நடிகர்கள் சங்கம் என்ற பெயரில்தான் சங்கம் அமைத்திருக்கிறார்கள். இதே நடைமுறைதான் கேரளத்திலும், கன்னடத்திலும் ஆனால் தமிழன் மட்டும் திராவிடத்தால் வீழ்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா?

இது ஒருபுறம் இருக்க, எல்லீஸ் டங்கன் இயக்கிய மந்திரகுமாரி, தமிழக அரசியலில் மட்டுமல்ல தமிழ்த் திரைபடங்களுக்குப் புதுபாதை அமைத்துக் கொடுத்த பராசக்தி, தமிழ் மொழி பிரயோகத்தால் இன்றும் திரை ரசிகர்களின் மனதில் நீங்காத மனோகரா, மற்றும் கண்ணகி படங்கள் இவ்விழாவில் புறக்கணிக்கப்பட்டது, அவற்றில் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு இருக்கிறது என்பதால் தானே?

இது குறித்து கேள்வி எழுப்ப தமிழ்த் திரையுலகில் (படத் தொகுப்பாளர் லெனின் உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர) யாருக்கும் துணிச்சல் இல்லாமல் போனது வெட்கரமானது.