தேய்ந்துவரும் ரூபாய் மதிப்பு, உ­­யர்ந்துவரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, தேங்கி நிற்கும் உற்பத்தித் துறை, அதிகரித்துவரும் விலைவாசி ஆகியவற்றால் நிலைதடுமாறும் இந்தியப் பொருளியலைத் தூக்கி நிறுத்தவந்த கடவுள் போல இந்திய சேமநல வங்கியின் (ரிசர்வு வங்கியின்) ஆளுநர் இரகுராம் ராஜன் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார்.

பன்னாட்டு நிதியத்தின் முன்னாள் அதிகாரியான அந்த இரகுராம் ராஜன் சேம வங்கியின் காலாண்டுக் கொள்கை அறிவிப்பை கடந்த 20.09.2013 அன்று வெளியிட்டார். மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி பரபரப்பாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின் முடிவுகள் உடனடியாக செயலாகத்தொடங்கினாலும் இந்தியப் பொருளியல் நிமிர்வதாகத் தெரியவில்லை.

ஒட்டுமொத்தப் பொருளியலைப் பணப்புழக்கம் குறித்தக் கொள்கை முடிவுகள் மட்டும் நிலை நிறுத்திவிட முடியாது என்ற போதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு வழிகோலுவது ஆகியவற்றில் ரிசர்வு வங்கியின் பணி முகாமையானது. இந்த வகையில் இரகுராம் ராஜனின் முடிவுகள் எதிர்பார்த்தப் பலன்களை உருவாக்கவில்லை, மாறாக பணவீக்கம் உயர்ந்து சில்லரை விற்பனை விலை உயர்ந்து மக்களைத் தாக்குவது அதிகரித்துள்ளது.

வணிக வங்கிகளுக்கு சேம வங்கி அளிக்கும் நிதிக்கான அடிப்படை வட்டியை 7.25 விழுக்காட்டிலிருந்து 7. 50 விழுக்காடாக உயர்த்தி இரகுராம் ராஜன் அறிவித்தார். இதன் விளைவாக அனைத்து வங்கிகளின் வட்டி விகிதங்களும் அதிகரித்தன. அதாவது சேமிப்புக்கான வட்டி விகிதமும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் 0.25 விழுக்காடு உயர்ந்தன.

“பணவீக்கம் இரட்டை இலக்க அளவில் இருக்கும்போது வட்டி விகிதம் குறைவாக இருப்பதால் வங்கிகளில் சேமிப்பதன் மூலம் கிடைக்கும் வட்டி உண்மைஅளவில் தேய்ந்துவிட்டதால், மக்கள் வங்கிகளில் சேமிப்பதை விரும்பவில்லை எனவே பணப்புழக்கம் அதிகரித்து பணவீக்கம் உருவாகிறது, விலை உயர்வு தொடர்கிறது, எனவே தான் இந்த வட்டி விகித உயர்வு தொடர்கிறது ” என தனது கொள்கை முடிவுக்கு நியாயம் கூறினார் இரகுராம் ராஜன். ஆனால் அவர் கூறியதுபோல் வங்கிகளின் சேமிப்பும் அதிகரிக்கவில்லை. பண வீக்கமும் குறையவில்லை.

மாறாக வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துவிட்டதால் உற்பத்தித் தொழில் துறை மேலும் பாதிப்படைந்துள்ளது. மாத சம்பளக்காரர்களின் வீட்டுக்கடனுக்கான தவணைத் தொகை அதிகரித்து ஏற்கெனவே சுறுசுறுப்பாக இருந்து பாதிப்படைந்த கட்டுமானத் தொழில்களை மேலும் சுணக்கம் அடையச் செய்துவிட்டது.

குறிப்பாக சிறு, நடுத்தரத் தொழில்கள் தங்கள் மூலதனத்திற்குப் பெரிதும் வங்கிக் கடன்களையே சார்ந்துள்ளன. மின்சாரப்பற்றாக்குறை, ஆள்பற்றாக்குறை, சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்ற பலவற்றாலும் பாதிப்படைந்து சிறு தொழில்கள் ஏற்கெனவே பெருமளவு நலிந்துவருகின்றன.

இந்திய அரசின் புள்ளியியல் துறை கடந்த ஆகஸ்டு 30 ல் வெளியிட்ட 2013 ஏப்ரல்- சூன் காலாண்டுக்கான விவரக்குறிப்பு உற்பத்தித்துறை (-) 1.2 விழுக்காடு ‘ வளர்ச்சி’ அடைவதாக அதாவது தொழில் முடக்கம் ஏற்பட்டு வருவதாக கூறுகிறது. உற்பத்தித் துறையில் சிறு நடுத்தரத் தொழில்களின் பாதிப்பு அதிகமானது. குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் 40 விழுக்காடு நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இது தவிர ஏறத்தாழ 20 விழுகாட்டு நிறுவனங்கள் மின்சார வெட்டுக் காரணமாக வேறு மாநிலங்களுக்கு மாறிவிட்டன.

இந் நிலையில் வங்கிகளின் கடன் வட்டி அதிகரிப்பது சிறு, நடுத்தர தொழில்களை மூலதன நெருக்கடியில் சிக்கவைக்கிறது.

இந்தியாவிலேயே சிறு தொழில் சார்ந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதல் வரிசையில் உள்ளது. எனவே , இந்த பாதிப்பும் தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் நேருகிறது.

இரகுராம் ராஜனின் அறிவிப்பு சிறு தொழில்களுக்குத் தான் பாதிப்பாக அமைந்துள்ளதே தவிர பெருமுதலாளிகளுக்கு ஆதரவான அறிவிப்பே வெளியிடப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்கள் நடப்பு மூலதனத்திற்காக வங்கிகளின் வாங்கும் பலகோடி ரூபாய் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.75 வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெருமுதலாளி நிறுவனங்கள் வாங்கும் கடன்கள் கூடுதல் வட்டி பெரும் வாய்ப்புள்ள வழியிலேயே மறுக்கடன் சுழற்சியில் இறக்கிவிடப்படுகின்றன. உற்பத்தித்துறையில் பெருமளவு ஈடுபடுத்தப்படுவதில்லை என்பது ஏற்கெனவே மெய்பிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு பெறப்படும் கடன் நிதியை பல்வேறு நிறுவனங்கள் மனைத்தொழிலில் ஈடுபடுத்தி செயற்கையாக ஊதிப்பெருக்க வைத்தனர். மனைகளின் மதிப்பு செயற்கையாக பெரிதுப்படுத்திக் காட்டப்பட்டன. ஊதிப் பெருக்கவைக்கப்பட்ட இந்த பலூன் 2008 ல் அமெரிக்காவில் நடந்தது போல் எந்நேரமும் வெடிக்கும் ஆபத்துள்ளது. செயற்கையாக ஊதிக்காட்டபட்டுள்ள மனை விலைகளைக் குறைக்காவிட்டால் இந்த ஆபத்து மிக விரைவில் நடந்தேறிவிடும்.

வீடுகட்டும் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்திருப்பது சம்பளக்காரர்களையும், நடுத்தர வருமானம் உள்ளவர்களையும் தான் பாதிக்குமே தவிர மனை வணிகத்தில் கோலோச்சும் கருப்புப் பண திமிங்கலங்களை ஒன்றும் செய்துவிடாது. மனைவணிகத்தில் சுணக்கம் ஏற்பட்டால் கருப்புப் பணத்தை வேறு வகையில் இச் சமூக விரோதப் புள்ளிகள் திருப்பி விடுவார்கள்.

இன்னொரு சிக்கலும் இருக்கிறது. தேர்தல் நெருங்குவதால் மனை வணிகத்தில் செயல்படும் கருப்புப் பணம் தற்காலிகமாகக் குறையும் வாய்ப்புள்ளது. ‘ உலக வளர்ச்சி குறித்த ஆய்வு மையம்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒவ்வொரு தேர்தலின் போதும் மனை மற்றும் கட்டுமானத்தொழிலில் ஈடுபடுத்தப்படும் கருப்புப் பணம் குறைவதை புள்ளி விவர அடிப்படையில் மெய்ப்பித்துள்ளது. மனைத்தொழிலின் கருப்புப் பணம் தேர்தல் சூதாட்டத்தில் திருப்பி விடப்படுகிறது. அரசியல் புள்ளிகளுக்கும் மனை வணிகத்திற்கும் நிலவும் நெருக்கமான உறவுக்கு இது மேலும் ஒரு சான்று.

இன்னொருபுறம் இரகுராம் ராஜனின் அறிவிப்பு வங்கிகளின் சேமிப்பை உயர்த்திவிடவும் இல்லை. எனவே, பங்குச் சந்தையில் ஸ்டேட் வங்கி , பஞ்சாப் நேசனல் வங்கி, கனரா வங்கி போன்ற வங்கிகளின் பங்கு மதிப்பு சடசடவென வீழ்ந்துவருகின்றது.

உற்பத்தித்துறையின் வீழ்ச்சியும் அரசு வங்கிகளின் சந்தை மதிப்பு வீழ்ச்சியும் சேர்ந்து அரசுத்துறைப் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் இந்திய அரசின் திட்டத்திற்கும் முட்டுக்கட்டையை ஏற்படுத்திவிட்டது. இதனால் இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த முக்கியமான வருவாய் வழியும் அடைக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறை முடங்கியுள்ளதால் அரசின் வரி வருவாய் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்த அளவை விட குறைந்துவருகிறது. 2013- 2014 ஆம் நிதியாண்டில் மறைமுக வரி வாயிலாக 5.65 இலட்சம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டது. ஆனால் ஏப்ரல் தொடங்கி ஆகஸ்டு முடிய உள்ள முதல் ஐந்து மாதங்களில் 30 விழுக்காடு மட்டுமே உற்பத்தி வரி, சேவை வரி போன்ற மறைமுக வரி வசூலாகியுள்ளது. அதேபோல் நேரடி வரி மூலம் 6.68 இலட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட இந்திய அரசு திட்டமிட்டது. அதிலும் இந்த ஐந்து மாதக் காலங்களில் 21 விழுக்காடு மட்டுமே வசூலாகியுள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக இந்த நிதியாண்டில் வரி வசூல் பாதியாகக் குறையும் ஆபத்துள்ளது.

இந்நிலையில் மிகப்பெரும் நிதி நெருக்கடியை நோக்கி இந்திய அரசு சென்றுகொண்டிருக்கிறது.

இதனை எதிர்கொள்ள சிக்கன நடவடிக்கை, செலவினக் குறைப்பு என்ற பெயரால் மக்கள் நலத்திட்டங்களுக்கும் , மாநிலங்களுக்கும் அளிக்கும் நிதியை பெருமளவு வெட்டிக்குறைக்க இந்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.

தற்சார்பான, தொழில் துறை சார்ந்த வளர்ச்சிக்கு மாறாக ஏற்றுமதி சார்ந்த , நிதி மூலதனத்தை மையப்படுத்திய தவறான பொருளியல் கொள்கையால் நேர்ந்த விளைவு இது. தொழில் முடக்கமும், பண வீக்கமும் ஒன்றிணைந்த “தேக்க வீக்கம்” (stagflation) என்ற நோய் இந்தியப் பொருளியலை தாக்கிவருகின்றது.

இந்திய சேம நல வங்கி ஆளுநர் இரகுராம் ராஜனின் கொள்கை அறிவிப்பு இந்நோயிலிருந்து இந்தியப் பொருளியலை மீட்க உதவாது. மாறாக இந்நோயை தீவிரப்படுத்தவே செய்யும்.

இந்தியா என்ற பொருளியல் கட்டமைப்பே நோய் பரப்பும் சாக்கடையாகும்.

Pin It