இந்தித் திணிப்பை முறியடித்திடவும் நம் தாய்மொழியைக் காத்திடவும் களம் கண்டு 1938 முதல் 1965வரை இன்னுயிர் ஈந்த தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்திட சனவரி 25-ஆம் நாளை மொழிப்போர் நாளாகக் கடைப்பிடிக்கிறோம். இவ்வாண்டும் அவ்வாறே கடைபிடித்தோம்.

ஆனால் கழகங்களின் ஆட்சியில் தமிழக அரசு சார்பில் மொழிப் போர் ஈகியர்க்கு வீரவணக்கம் செலுத்தப்படவில்லை.

உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் தமிழ்நாட்டளவுக்குத் தாய்மொழிக் காக்க்க உயிரீகம் செய்தோர் பட்டியல் இல்லை. 1965-இல் முந்நூறு பேர்க்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சற்றொப்ப பத்துப்பேர் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தார்கள். ஆட்சியில் உள்ளோரின் அயல்மொழித் திணிப்பைத் தடுக்க, தாய்டிமொழியைக் காக்க இவ்வளவு பெரிய ஈகம் உலகில் வேறெங்கும் நடைபெறவில்லை. அந்த ஈகியர்க்கு வீரவணக்கம் செலுத்துவது தமிழக அரசின் கடமை அல்லவா? தில்லி ஏகாதிபத்தியம் அதை விரும்பாது என்பதால் தமிழக அரசு விரும்பவில்லையா?

தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் கட்சி அளவில் தனித்தனியே வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்துகின்றன. அக்கூட்டங்களில் மொழிப்போர் வரலாற்றைப் பேசுவதைவிட, ஒரு கழகம் இன்னொரு கழகத்தைத் தாக்கிப் பேசுவதே அதிகம்.

மொழிப்போர் வீரவணக்கநாளை தமிழ்மொழிக் காப்பு நாளாக அறிவித்துகத் தமிழக அரசு கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசு இந்திரா காந்தி, இராசீவ்காந்தி நினைவு நாள்களைக் கடைபிடித்து அரசு அலுவலகங்களில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் போது, தமிழ் மொழி காக்கத் தன்னுயிர் ஈந்தோர் நினைவு நாளைக் கடைபிடித்து தாய்மொழி காக்க உறுதிமொழி எடுத்துக் கொள்வது குற்றமா?

மொழிப் போர் ஈகியர்க்கு அங்கங்கே சிலகளும், மணிமண்டபங்களும் எழுப்பியிருக்க வேண்டும். மொழிப் போரில் பிணமானோரின் உடல்களைப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தி 1967-இல் அரியணை ஏறிய தி.மு.க., அவ்வீர்ர்கள் புதைக்கப்பட்ட இடங்களில், சுட்டுக் கொல்லப்பட்ட இடங்களில் எந்த நினைவுச் சின்னத்தையும் எழுப்பவில்லை.

மூலக்கொத்தளம் இடுகாட்டில் நடராசன், தாளமுத்து கல்லறை இன்றும் மலம் கழிக்கும் இடமாக உள்ளது. அவ்விடத்தில் ஒரு நினைவு மண்டபம் எழுப்பிப் பராமரிக்கக் கூடாதா? திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றுக் கரையில் சின்னச்சாமி, சண்முகத் கல்லறைகளும் திறந்தவெளிக் கழிப்பிடங்களாக இருக்கின்றன.

சுட்டுக் கொல்லப்பட்ட பிணங்களைக் குவியல் குவியலாக, ஊர்தியில் ஏற்றிச் சென்றனர் திருப்பூரில், பொள்ளாச்சியில், குமாரபாளையத்தில்‘ அங்கெல்லாம் நினைவு மண்டபங்கள் எழுப்பப்படவில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இராசேந்திரனுக்கு எழுப்பப்பட்ட சிலை பழைய மாணவர்களின் முன்முயற்சியில் நடந்தது. தி.மு.க. கட்சியோ, தமிழக அரசோ அச்சிலையை எழுப்பவில்லை.

மொழிப் போர் ஈகியர் சிலர் பெயரை சில பாலங்களுக்குச் சூட்டியதோடு நிறைவடைந்துவிட்டார் கலைஞர் கருணாநிதி.

சொந்த வரலாற்றை மதிக்காத இனம், தன் இன ஈகிகளைப் போற்றாத இனம் ஒரு போதும் புதிய வரலாற்றைப் படைக்க முடியாது. அதற்கான மனஎழுச்சியும் ஊக்கமும் அந்த இனத்திலும் இருக்காது. அப்படி ஒரு மன எழுச்சித் தமிழர்களிடம் உருவாகிடக்கூடாது என்று இந்திய ஏகாதிபத்தியம் கருதுவது புரிகிறது. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளும் அப்படிக் கருதுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

மொழிப்போர் வரலாற்றை உரியவாறு நினைவுபடுத்த தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் அஞ்சுகின்றன. மீண்டும் இன எழுச்சி ஏற்பட்டால் அது தங்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சாவுமணி அடித்துவிடும் என்று அஞ்சுகின்றன.

தி.மு.க.வுக்கும், அ.இ.அ.தி.மு.க.வுக்கும் அதேபோல் தி.க.வுக்கும் சரியான மொழிக் கொள்கை கிடையாது. அக்கழகங்கள் ஆங்கில ஆதிக்கத்திற்கு சிவப்புக் கம்பளம் அல்லது கருப்புக் கம்பளம் விரிப்பவை! இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை சுமக்க முன்வந்தவை அவை. இணைப்பு மொழியாக ஏற்க – இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்க இருமொழிக் கொள்கைவகுத்தவை திராவிடக் கட்சிகள்.

திராவிட இயக்கங்களுக்கு அசலான சொந்தமான இனக்கொள்கை கிடையாது. ஆரியன் அடையாளப்படுத்திய திராவிட இனத்தைத் தூக்கிச் சுமக்கின்றன. அதே போல் ஆரிய இந்திய அரசு ஒருவகையில் ஏற்றுக் கொண்ட ஆங்கில ஆட்சி மொழிக் கொள்கையைத் திராவிடம் தழுவிக் கொண்டது.

உலகெங்கும் அந்தந்த நாடுகளில் தாய்மொழியே கல்வி மொழியாக, ஆட்சி மொழியாக உள்ளது. அந்நாடுகளிலும் ஆங்கிலம் உள்ளிட்ட அயல்மொழிகளைக் கற்கின்றனர். பயிற்று மொழியாக அன்று; ஒரு அயல் மொழிப் பாடமாகக் கற்கின்றனர்.

தமிழ்நாட்டில் திராவிடக் கொள்கை ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகவும் பயிற்று மொழியாகவும் வைத்துக் கொண்டது. தமிழ் சனியனை விட்டொழித்துவிட்டு, வீட்டுமொழியாகவும் ஆங்கிலத்தை வைத்துக் கொள்ள வேண்டும், வேலைக் காரியிடமும் ஆஞ்கிலத்தில் பேச வேண்டும் என்றார் திராவிடப் பிதாமகர் பெரியார்.

இந்தி மொழி எதிர்ப்பிலாவது திராவிடத்திற்கு நிரந்தரக் கொள்கை உண்டா? இல்லை. தி.மு.க. நடுவண் கூட்டணி அரசில் பா.ச.க. தலைமையிலும் உறுப்பு வகித்தது; காங்கிரசுத் தலைமையிலும் உறுப்பு வகிக்கிறது. தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது, தமிழக நால்வழிச் சாலைகளில் இந்தியில் பெயர்ப்பலகை எழுதச் செய்தார். இப்பொழுதும் தமிழக நால்வழிச் சாலைகளில் இந்தி கோலோச்சுகிறது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இப்போது நடக்கிறது. மதுரை மாநகராட்சி அ.இ.அ.தி.மு.க. நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது. மதுரை சுற்றுலாத்தலம் என்பதால், முகாமையான வீதமிகளில் இந்தியில் பெயர்ப்பலகை வைத்துள்ளதாக அ.இ.அ.தி.மு.க. நிர்வாகம் கூறுகிறது. அன்றாடம் காசிக்குத் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் செல்கிறார்கள். அவர்கள் புரிந்து கொள்வதற்காக்க் காசியில் தமிழில் வீதியின் பெயர்களை எழுதுவார்களா? அன்னறாடம் ஆயிரக்கணக்கானோர் தில்லி செல்கிறார்கள். அவர்கள் படிப்பதற்கு வசதியாக அங்கு தெருப் பெயர்களைத் தமிழிலும் எழுதி வைப்பார்களா?

“தமிழர்களே நீங்கள் இந்திக்காரர்களுக்கு அடிமைகள்; உங்களை அடிமை கொண்டவர்கள் மொழியை நீஞ்கள் எழுதி வைக்க வேண்டும்” என்பதை ஒவ்வொரு நொடியும் நினைவூட்டத்தான் இந்தியில் எழுதிவைக்கிறார்கள்.

1938லும், 1965லும் நடந்த மொழிப் போரில் ஈகங்கள் நடந்தன. ஆனால் இவ்விரு காலத்திலும் சரியான மொழிக் கொள்கை திராவிடத்தால் முன்வைக்கப்படவில்லை. இப்பொழுது தமிழ்த்தேசியம் சரியான மொழிக்கொள்கையை முன்வைக்கிறது.

இந்தி, ஆங்கிலம், வட்டார மொழி என மூன்று மொழி படிக்க வேண்டும் என்ற மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை.

ஆங்கிலம், வட்டார மொழி என இரண்டு மொழி படிக்க வேண்டும் என்ற இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை.

தமிழே கல்வி மொழி, தமிழே ஆட்சி மொழி, தமிழே இணைப்பு மொழி, ஒரு மொழிப்பாடமாக மட்டும் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்ற ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை.

இப்பொழுது தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி கட்டாயப் படாமாக உள்ளது. இந்திப் படித்தால் இந்தி மாநிலங்களில் வேலை கிடைக்கும் என்பது மாயை. இந்திக்கார்ர்கள் தமிழ்நாட்டு வேலைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். தமிழகத்தில் இந்தி எல்லோரும் கற்கும் நிலை வந்தால், இன்னும் அதிகமாக வேலைக்கு வருவார்கள். தமிழக அரசுத் தேர்வை இந்தியில் எழுதும் நிலையும் வரும்.

மொழிக்கொள்கை எப்போதும் தாயக்க் கொள்கையுடன் இணைந்தது. இந்திய தேசியம் இந்தியாவைத் தாயகம் என்று கூறித் தமிழர் தாயகத்தை வட்டாரம் என்று குறுக்கிக் கொச்சைப்படுத்தியது. திராவிடம் திராவிடநாட்டைத் தாயகம் என்று கூறித் தமிழர் தாயகத்தை “மாநிலம்” என்று குழப்பிக் குறுக்குச்சால் ஓட்டியது. தமிழர் தாயகம் தமிழ்த்தேசம் என்று சமூக அறிவியல் பார்வை கொண்டது தமிழ்த்தேசியம் மட்டுமே!

தமிழ் – தமிழர் – தமிழ்நாடு மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இந்தியர் – திராவிடர் என்பவை நம் இனமல்ல. தமிழர்களின் தாயகம் தமிழ்நாடு! இந்தத் தமிழ்த் தேசத்தில் ஒருமொழிக் கொள்கையே செயல்பட வேண்டும்! அதற்குத் தமிழ்த் தேசத்திற்கு இறையாண்மை தேவை. தாயக விடுதலையுடன் இணைந்ததுதான் தாய்மொழி விடுதலை! இந்த இலட்சியத்தை அடைய மொழிப்போர் ஈகியர் பெயரில் உறுதி ஏற்போம்!